புதன், 15 ஜூலை, 2009

'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 45:
திட்டமிட்டு நிறைவேற்றிய சதி!



ராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன. படுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர். படுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார். 27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர். வெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமான ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்? தாக்குதல் தொடங்கியவுடன் சிறை அதிகாரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன்? 23-ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27-ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள். ""இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை. வெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை'' என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372). வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் ""தீவ்யன'' போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது. வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல், குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன், தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம், அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன், ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா, தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார், மயில்வாகனம் சின்னையா, சித்திரவேல் சிவானந்தராஜா, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், தம்பு கந்தையா, சின்னப்பு உதயசீலன், கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன், கிருஷ்ணபிள்ளை நாகராஜா, கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம், அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன், பசுபதி மகேந்திரன், கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன், குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம், மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார், ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார், ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம், கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன், அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம், அந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன், வேலுப்பிள்ளை சந்திரகுமார், சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர். இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு: 1. தெய்வநாயகம் பாஸ்கரன் 2. பொன்னம்பலம் தேவகுமார் 3. பொன்னையா துரைராசா 4. குத்துக்குமார் ஸ்ரீகுமார் 5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் 6. செல்லச்சாமி குமார் 7. கந்தசாமி சர்வேஸ்வரன் 8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9. சிவபாலம் நீதிராஜா 10. ஞானமுத்து நவரத்தின சிங்கம் 11. கந்தையா ராஜேந்திரம் 12. டாக்டர் ராஜசுந்தரம் 13. சோமசுந்தரம் மனோரஞ்சன் 14. ஆறுமுகம் சேயோன் 15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன் 16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம் 17. செல்லப்பா இராஜரட்னம் 18. குமாரசாமி கணேசலிங்கன். நாளை : ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்கள்!
கருத்துக்கள்

Did Karunanedhi knows all these details, he is claiming that he knows Eelam tamils sufferings in the past 50 years. Tamil traitor supported Sonia and Rajapakshe to kill tamil people. Many tamils really fought to save our Eelam tamils life but traitor Karunanedhi allowed to kill our tamil people. Sonia, Karunanedhi, Jayalaitha, Cho, Ram are man eating animals.

By yogaraja
7/15/2009 12:32:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக