தமிழ்நாடு என்று இதுகாறும் பேசியும் எழுதியும் வருவதெல்லாம் தமிழ்நாடு என்பதற்குத் திராவிட நாடு என்ற பொருளோடே யல்லாமல், தமிழ்மொழிப் பிரிவினையையே உடைய கருத்தில் அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில், தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு. என்றும் நாம் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும், “திராவிடமே தமிழ் என்று மாறிற்று” என்றும், “தமிழே . திராவிடம் என்று மாறிற்று” என்றும் சரித்திராசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன. பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன.

எடுத்துக்காட்டாக 1926-இல் டி.எ. சுவாமிநாதய்யரால் வெளியிடப் பட்ட செம்(gem) அகராதியில் 440ஆம் பக்க 5ஆவது வரியில் (dravida) “திராவிட”– என்பதற்குத் “தமிழ்நாடு” என்று ஆராய்ச்சி நூல்களும், தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம் – திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை. இதில் தமிழ்நாடு என்பதும் தமிழர் என்பதும் காங்கிரசுகாரர்கள் புரிந்திருப்பதுபோல் ஒரு தனி இடத்தையும் ஒரு தனிமொழியையும்தான் குறிக்கின்றது என்று யாராவது கருதுவார்களேயானால், அல்லது அந்தப்படிதான் கருத நேரிடும் என்று சொல்லப் படுமேயானாலும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு மாற்றாகத் திராவிட நாடு திராவிடர்களுக்கே என்று இலட்சியக் குறிக்கோள் வைத்துக் கொள்வதில் எதிர்க்கருத்து இல்லை என்பதையும் தெரிவித்துக் -கொள்ளுவதோடு, இனி. அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சேம்பர்சு 20ஆவது நூற்றாண்டு அகராதியில் 282ஆவது  பக்கம் 2-ஆவது பத்தி 5ஆவது சொல், “திராவிடன்  என்கின்ற பதத்திற்கு ஆரியர்கள் அல்லாதாராகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் தென் இந்திய மக்கள்? என்றும், “திராவிடம் என்பதற்குத் தென்னிந்தியாவிலுள்ள ஒரு பழமையான மாகாணம்” என்றும் பொருள் சொல்லப்பட்டிருக்கிரது.

1904இல் இலண்டனில் பெயர்போன . ஓர் ஆசிரியரால் வெளியிடப்பட்ட அகராதியாகிய Dictionary of English Language” என்ற பெரிய அகராதி, அஃதவாது இப்போது உலகிலுள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் வழங்கும்படியான பெரிய புத்தகத்தின் 257ஆவது பக்கம முதல் பத்தி  ஆவது சொல்லாக  இருக்கும் திராவிடன் என்கின்ற சொல்லுக்குப் பொருள் எழுதும்போது, “திராவிடம் – ஆரியரல்லாத மக்களைக் கொண்ட ஓரு பழமையான மாகாணம். என்றும் தமிழன் – (தமிழகம்) -. ஆரியருக்கு முன்பிருந்த மக்கள், ஆரிய மொழி அல்லாததைப் பேசுபவர்கள்” என்றும் எழுதியிருப்ப தோடல்லாமல், இலங்கையும் திராவிடம் என்று எழுதி இருக்கிறது.

விலகட்டும்! இன்றேல் வாதம் புரியட்டும்!

ஆந்திர நாட்டில் சில சமீன்தாரர்கள் தங்களைத் திராவிடர் என்று ஒப்புக்கொள்ள, சம்மதிக்கவில்லை என்றும், ஆனால் தன்னைப் பொறுத்தவரை திராவிடனே என்றும் ஓர் ஆந்திரப் பெரியார் தெரிவித்திருக்கிறார். இதில் நமக்கு அதிசயம் தோன்றவில்லை. ஏனெனில், இங்குத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலரே சதா சருவகாலம் தமிழன் ஆரியன் என்ற விவகாரம் பேசித் தமிழ் மக்களுக்குள் விளம்பரம் பெற்றுக் கொண்டவர்களே ஆரிய புராணங்களை ஆரியக் கடவுள்களின் புராணக்கதைகளை, அதிலும் இழிவும், அவமானமும், ஆன ஆபாசக் கதையைப் பற்றி, ஏதாவது கூறினால் கடவுளுக்குப் பெண்டுபிள்ளை, தாசி, வேசி ஏதய்யா என்றுகேட்டால் கோபித்துக் கொண்டு ஆரியக் கதைகளுக்கும் கூத்துகளுக்கும் தத்துவார்த்தம் பேசவரும் போது இவற்றை அறியாத ஒரு மனிதன் தன்னைத் திராவிடன் அல்ல என்று சொல்லுவதில் அதிசயமிருக்கக் காரணம் இல்லை.