வெள்ளி, 24 மே, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : பிற்போக்கும் பாசிசமும் ஒன்றா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : வலியறிதல் – தொடர்ச்சி)

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்” என்ற தலைப்பில் செந்தழல் வலைப்பக்கத்தில் அன்பர் குமணன் எழுதியிருப்பதை தாழி மடல் 452இல் பகிர்ந்திருந்தேன். அதற்கான என் மறுமொழி:–
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உருநிலைச் சிக்கல்களுக்கு உருநிலைத் தீர்வுகள் (concrete solutions for concrete issues) என்பதுதான் என் அணுகுமுறை. இங்கே சிக்கல்: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் செய்ய வேண்டியது என்ன? இதற்கு நான் முன்வைக்கும் உரு நிலைத் தீர்வு: பாசக கூட்டணியைத் தோற்கடிக்க வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். அதாவது பாசக கூட்டணியைத் தோற்கடிக்கும் வலிமையுள்ள கட்சி அல்லது அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே.

அன்பர் குமணன் 2024 பொதுத் தேர்தல் என்ற உருநிலைச் சிக்கலை அவ்வாறு அணுகவே இல்லை. எனவே அதற்கொரு உருநிலைத் தீர்வை முன்வைக்கவே இல்லை. அவரது கட்டுரை முழுக்க அருநிலைக் கோட்பாடுகளே (abstract theories) நிறைந்துள்ளன. 2024 பொதுத் தேர்தல் குறித்து அவர் சொல்வது என்ன?

”இந்திய ஆளும் வருக்கத்தின் சார்பாளராக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல்” என்கிறார். குறிப்பான ஒரு தேர்தல் பற்றிய இந்தப் பொத்தம் பொதுவான கூற்று பாசக மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வர முயல்வதால் எழும் தனித் தன்மைகளைக் கண்டு கொள்ளவில்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்தத் தேர்தல் போராட்டத்தில் எங்கு நிற்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? மக்கள் தமது வாக்குரிமையை எவ்வாறு பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்? அல்லது இந்தத் தேர்தல் போராட்டத்தை அலட்சியம் செய்து விட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு அன்பர் குமணனிடம் விடையே இல்லை. அருநிலைக் கோட்பாடுகளை அள்ளித் தெளிப்பதோடு அவர் நிறைவடைந்து கொள்கிறார்.

இந்திய முதலியத்தின் (முதலாளித்துவத்தின்) வளர்ச்சியில் காங்கிரசு ஆட்சியின் வகிபாகம் குறித்து அவர் சொல்வதை நான் மறுக்கவில்லை. மொத்தத்தில் அது சரியானதே. அதே போது இந்திய முதலியத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் – தொழில் முதல், நிதி முதல், புதுத் தாராளியம், ஒட்டுமுதல் (crony capital), வல்லரசியம் – என்பன குறித்தும் ஆளும் வகுப்பிலும் அரசிலும் இவற்றின் தாக்கம் குறித்தும் – எவ்விதமான உருநிலைப் பகுத்தாய்வும் இல்லாமல் பாசிசத்தின் வளர்ச்சியையும், பாசக ஆட்சியையும், அது தொடர்வதால் வரும் கேட்டையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாது. முதலாளித்துவம் என்ற ஒரு சொல்லுக்குள் இவை அனைத்தையும் அடக்கி நிறைவு கொள்ள முடியாது.

பாசக எவ்வகையில் காங்கிரசு முதலான பிற ஆளும் வகுப்புக் கட்சிகளிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டு நிற்கிறது? என்ற முகன்மையான வினாவிற்கு விடை காணாமல், பாசக பாசிசக் கேட்டினை நம்மால் துல்லியமாக இனங்காண முடியாது. பாசக, காங்கிரசு இரண்டின் பொருளியல் கொள்கைகளும் ஒன்றுதான் என்பது இந்த வினாவிற்கு நேர் விடை ஆகாது.

குமணன் சொல்கிறார்:
ஆட்சியைக் கைப்பற்றிய பாசக கட்சி தொடர்ந்து ஆட்சிக் கட்டிலைத் தக்க வைத்துக் கொள்ள இந்து மதவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை இந்து மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.”

அவ்வளவுதான், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள இந்து மதவாதம் ஓர் ஆய்தம்! பெரும்பான்மை இந்து மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்ள பாசக பாடுபடுகிறதாம். இஃது உண்மைதான், ஆனால் அரை உண்மை. ஒரு புலப்பாடு! முழு உண்மை என்ன? இந்தப் புலப்பாட்டின் சாறம் என்ன? ஆர்எசுஎசு, அதன் இந்துத்துவம், பார்ப்பனியம் எதுவுமே உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? எல்லாம் வெறும் தேர்தல் உத்திதான் என்று பார்ப்பது பாசிசத்தையும், அதன் இன்றைய இந்திய (ஓ, பாரத) அவதாரத்தையும் கண்டுகொள்ளாமல் விடுவதும், அவை குறித்து உழைக்கும் மக்களையும் குடியாட்சிய ஆற்றல்களையும் எச்சரிக்கத் தவறுவதும் ஆகும். பாசகவின் இந்து மதவாதம் வெறும் மதவாதமாக மட்டுமே உங்களுக்குத் தெரிகிறது.

இந்து-இந்தி-இந்தியா என்ற ஆர்எசுஎசு கொள்கைதான் இந்துத்துவம்! இதற்குச் செயல்வடிவம் தரும் அரசியல் கட்சியே பாசக! இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் பாசகவை ஆட்சியிலிருந்து விரட்டுவது உடனடித் தேவை ஆகிறது.

எல்லா மதவாதங்களும் பிற்போக்கானவைதாம். ஆனால் இந்தியச் சூழலில் இந்து மதவாதத்துக்கு மட்டுமே பாசிசமாக உருப்பெற வாய்ப்புண்டு. பாசிசம் அனைத்தும் பிற்போக்கே! ஆனால் பிற்போக்கு அனைத்தும் பாசிசமாகாது! என்ற தெளிவு வேண்டும்.

பெரும்பான்மை மத ஆதிக்கத்திலிருந்து சிறுபான்மை மதத்தினரைக் காப்பது என்றால், அவர்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்ள நாம் உதவுவதென்றால், உடனே நாம் செய்ய வேண்டியது என்ன? வரும் தேர்தலில் பாசகவுக்குப் பெருந்தோல்வியைப் பரிசளிப்பதுதான்! அது மட்டும் போதும் என்று சொல்லவில்லை. அஃது அவர்களின் போராட்டத்துக்குப் பேரூக்கமாக அமையும் என்பதே. “சோசலிசம் வரட்டும், அது உங்களைக் காக்கும்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்ல முடியுமா?

இடதுசாரி அமைப்புகள் வலு குன்றி உள்ளன என்று காரணங்காட்டி… பாசிச பாசகவுக்கும் குடியாட்சிய ஆற்றல்களுக்குமான இந்தத் தேர்தல் போராட்டத்திலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்ப்பதற்குச் சாக்குச் சொல்வதை ஏற்பதற்கில்லை. தமக்கிருக்கும் ஆற்றல் முழுவதையும் திரட்டி பாசகவுக்கு எதிராகக் குடியாட்சியத்தின் பக்கம் நிற்பதன் ஊடாகவே இடதுசாரி ஆற்றல்கள் அரசியலில் வலுப்பெறவும் வலுக்கூடவும் வாய்ப்புண்டு.

”சாகவின் பாசிசத் தன்மைக்குக் காரணமாக இருப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் நெருக்கடிதான்” என்றும், மதவாதம் அதன் வெளிப்பாடுதான் என்றும் சொல்வது கொச்சைப் பொருண்மியம் (vulgar materialism) சார்ந்த வகுப்புக் குறுக்கியம் (class reductionism) ஆகும். யார் ஆட்சிக்கு வந்தாலும் பாசிசமாகத்தான் இருக்கும் என்பது பாசிசப் போக்குகளைத் தடுத்து நிறுத்தவும் எதிர்த்து முறியடிக்கவும் குடியாட்சிய ஆற்றல்களை எச்சரித்து விழிப்பூட்டும் கடமையைத் தட்டிக்கழித்து விட்டு ஊழ்வினைக் கொள்கையில் வீழ்வதாகும்.

1975-77 நெருக்கடி நிலைக் காலத்தில் என்ன நடந்தது என்பதையும், 1977 பொதுத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திராவின் பாசிசக் கொடுங்கோன்மைக்கு மக்கள் எப்படி முடிவு கட்டினார்கள் என்பதையும் பாடமாகக் கொள்ள வேண்டும். அப்போதும் எதிர்க்கட்சிகளில் சனசங்கம், பழைய காங்கிரசுமுதலான முதலியக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய சனதா தளமும், தேர்தல் அறிவிக்கப்படும் வரை இந்திரா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செகசூவன் ராம் தலைமையிலான சனநாயகக் காங்கிரசும் (உ)லோக் நாயக் செயபிரகாசு நாராயணன் தலைமையில் ஒன்றுபட்டு நின்று இந்திராவை விரட்டியடித்தன. அப்போது அந்தத் தேர்தலில் இந்திராவை எதிர்த்து செயபிரகாசு நாராயணன் தலைமையிலான அணிக்கு ஆதரவளிப்பதுதான் குடியாட்சிய ஆற்றல்களின் கடமை ஆயிற்று.

இன்று ஒற்றுமை (ஐக்கிய) முன்னணியை முன்னின்று அமைக்கும் வலிமை இடதுசாரிகளிடம் இல்லை என்பதைக் குமணன் ஏற்றுக் கொள்கிறார். பாசிசத்துக்கு எதிராக ஒற்றுமை முன்னணி உத்தியைக் கடைப்பிடிப்பது என்றால் பாசிசத்தை எதிர்த்து அனைத்துச் சமூக ஆற்றல்களையும், அனைத்து அரசியல் ஆற்றல்களையும் ஒன்றுபடுத்திக் களம் காண்பதாகும். இந்த முன்னணியைக் கட்டுதல் ஓர் இயங்கியல் செயல்வழியே தவிர ஏற்கெனவே இருக்கிற ஆற்றல்களை எந்திரத்தனமாகக் கூட்டிச் சேர்ப்பதன்று. இங்கே அரசியல் ஆற்றல்களின் ஒற்றுமை என்பது வடிவம்தான், இந்த அரசியல் ஆற்றல்கள் குறித்திடும் பலவாறான மக்களின் ஒற்றுமை என்பதுதான் உள்ளடக்கம்.

உள்ளடக்கத்திலும் உருவத்திலும் ஒற்றுமை முன்னணி என்பது போராட்டத்தின் மூலவுத்திவகை, தந்திரவுத்திவகைக் கட்டங்களைப் பொறுத்தது. ஒற்றுமை முன்னணி என்றாலே குமுகிய (சோசலிச) ஒற்றுமை முன்னணி மட்டும்தான் என்று அன்பர் குமணனைப் போன்றவர்கள் கருதுவது போல் தெரிகிறது. குடியாட்சிய (சனநாயக) ஒற்றுமை முன்னணி என்ற பார்வையே அவர்களுக்கு உவப்பானதாகத் தெரியவில்லை என்னும் போது, பாசிச எதிர்ப்பு அனைத்தளாவிய ஒற்றுமை முன்னணி (All-in United Front Against Fascism) என்பதை அவர்களால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தத் தோழர்களுக்குக் குமுகியம் (சோசலிசம்) ஒரு பெருங்கனவாக இருக்கலாம். எனக்கும்தான்! ஆனால் அந்தக் கனவை நனவாக்கும் நீள்பெரும் பயணத்துக்கு அவர்கள் அணியமாய் இல்லை. ஒரே பாய்ச்சலில் எல்லாக் கட்டங்களையும் தாண்டிக் குதித்துக் குமுகியம் அடைவது என்ற கருத்தியத் திட்டம் மெய்ப்பட வாய்ப்பில்லை.

பாசகவுக்கு எதிரான கட்சிகளைக் குற்றாய்வு செய்யும் உரிமையை யாம் தூக்கியெறிந்து விடவும் இல்லை. அவர்களுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. பாசிச பாசகவை எதிர்த்து அணிவகுப்பது பாசிசத்துக்கு எதிரான போரட்டம் மட்டுமன்று, உண்மையாகவும் முரணற்ற வகையிலும் பாசிசத்தை எதிர்ப்பது யார் எனக் காட்டும் போராட்டமும் ஆகும். பாசக கூட்டணிக்கு எதிராக வெல்லத்தக்க கட்சி அல்லது கூட்டணியை ஆதரிப்பதற்கு நேரான கட்டுக்கூறு (நிபந்தனை) விதிப்பதும் ஆதரிக்க மறுப்பதும் ஒன்றுதான். அதே போது நம் ஆதரவு குற்றாய்வு இல்லாத ஒன்றன்று. மக்கள் நலன் காக்கும் கோரிக்கைகள் நாம் சுற்றடியாக முன்வைக்கும் கட்டுக்கூறுகளே ஆகும். புறஞ்சார் பொருளியல் விதிகள் அங்காடியில் இயங்குவது போல் நம் கட்டுக்கூறுகளும் வாக்குக் களத்தில் உணர்த்தப்படும்.

பாசிசத்தை வீழ்த்துவது என்பது ஒரு கட்சியை மட்டும் வீழ்த்துவதோடு தொடர்பு கொண்டதல்ல” என்பது சரிதான். எனவேதான் — இந்தத் தேர்தலில் பாசக தோற்பதோடு பாசிசம் ஒழிந்து விடும் என நாம் கருதவில்லை. ஆனால் பாசகவின் தோல்வி பாசிசத்தின் தோல்வியாக அமைந்து, பாசிச எதிர்ப்புப் போராட்டத்துப் பேரூக்கமாகப் பயன்படும்.
பொறுத்திருந்து பாருங்கள்.

வியாழன், 23 மே, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : வலியறிதல்



(தோழர் தியாகு எழுதுகிறார் : சியான் நிகழ்ச்சி- தொடர்ச்சி)

”வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.”

– திருக்குறள் 471

அன்பர் மருது ”தேர்தல் பாதை திருடர் பாதை” என்று சொல்லவில்லை. தேர்தல் என்கிற குடியாட்சிய வடிவத்தை மறுதலிக்கவில்லை. தேர்தலைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு வலிமையான சக்திகளாகப் புரட்சிகர இடதுசாரிகள் இல்லை என்பதுதான் மருதுவுக்குள்ள கவலை. மெய்ந்நடப்பில் நமது ஆதரவோ எதிர்ப்போ தேர்தல் களத்திலே தீர்மானிக்கும் சக்தியாக இல்லை என்பதுதான் அவருக்குள்ள வருத்தம். இந்தச் சூழலில் ஒற்றுமை (ஐக்கிய) முன்னணித் தந்திரத்தைப் பேசுவதால் இடதுசாரிகளுக்கு என்ன பலன் கிடைத்து விடப் போகிறது? என்று அவர் கேட்கிறார்.

வறட்டுத்தனமான தேர்தல் புறக்கணிப்பை அன்பர் மருது வலியுறுத்தவில்லை என்ற அளவில் நல்லது. பாசிச எதிர்ப்பு முயற்சியில் தேர்தல் போராட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறார் என்று பொருள். ஆனால் அதற்கான வலிமை நமக்கு இல்லையே! என்ன செய்வது? என்று ஐயுறுகின்றார். நியாயம்தானே!

வினைவலி பெரிது! மாற்றான் வலி பெரிது! துணைவலி குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை! தன் வலியோ சிறிதினும் சிறிது! இந்த உண்மையை நாம் தெளிவாக உணர்ந்துள்ளோம்.

நமக்குள்ள வலிமைக் குறைவைக் கணக்கில் கொண்டுதான் நாமே போட்டியிடுவதைத் தவிர்க்கிறோம். இருக்கிற வலிமைக்கு என்ன செய்ய முடியுமோ அதையும் செய்யாமல், வலிமையில்லை என்று ஒதுங்கி நிற்பதால் நம் வலிமை மேலும் குறையுமே தவிர எவ்வகையிலும் கூடி விடாது. தீர்மானிக்கும் சக்தியா இல்லையா என்பதெல்லாம் சார்பியல் நோக்கிலானது. இன்று தீர்மானிக்கும் ஆற்றலாக இல்லை என்றால், பிறகு ஒரு நாள் அத்தகைய ஆற்றலாக வளர முடியாது என்று பொருளில்லை.

ஒற்றுமை முன்னணி உத்தியால் இடதுசாரிகளுக்கு என்ன பலன் கிடைத்து விடப் போகிறது? என்பது குறுங்குழுவியப் பார்வை. குடியாட்சிய இயக்கத்துக்கு என்ன கிடைக்கப் போகிறது? என்பதுதான் முதல் வினாவாக இருக்க வேண்டும். வரலாற்றில் சில தருணங்களில் அரசியல் நலனுக்காக அமைப்பு நலனை விட்டுத்தர வேண்டியிருக்கும்.

தன்வலி, அதாவது நம் வலிமை என்பது பல கூறுகளால் ஆனது. நமக்குப் பொருள் வலிமை மிகமிகச் சிறிது. ஒன்றும் இல்லை என்றே சொல்லி விடலாம். ஆள் வலிமை மிகச் சிறிது. மக்கள் வலிமையும் சிறிதே. ஊடக வலிமையும் சிறிதென்றாலும் அலட்சியம் செய்யக் கூடியதன்று. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் குமுக ஊடகங்களில் நமக்கோர் இடம் இருக்கவே செய்கிறது. நம்மிடம் மிகப் பெரிய வலிமையாக இருப்பது கொள்கை வலிமை! நம் குறிக்கோளை அடைவதற்காக அறிவார்ந்து உழைக்கவும் ஈகம் செய்யவும் நாம் அணியமாய் உள்ளோம். வரலாற்று ஏரணத்தின் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். மக்கள் இன்று நம் பக்கம் இல்லா விட்டாலும் நாம் என்றும் நம் மக்கள் பக்கம் நிற்பதில் உறுதியாக இருக்கிறோம். சுருங்கச் சொன்னால் நம்மிடம் ஈடிணையற்ற அற வலிமை உள்ளது. இந்த அற வலிமையை அரசியல் வலிமையாக்குவதுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பெருமுயற்சியில் ஒற்றுமை முன்னணி உத்தி பயனுள்ளதாக இருக்கும் என்கிறேன். அந்த உத்தியின் முதல் நடைபடிதான் 2024 பொதுத் தேர்தலில் பாசிச பாசக கூட்டணியை வீழ்த்துவதில் உருப்படியான பங்கு வகிப்பது!

ஒற்றுமை முன்னணி என்பது நம் தேர்தல் செயற்பாட்டுக்குப் பின்னாலிருக்கும் கோட்பாட்டு நியாயமே தவிர உடனே பாசிச ஒற்றுமை முன்னணி ஒன்றைக் கட்டுவது நம் நோக்கமில்லை. முன்னணி கட்டுதல் என்பது ஓர் இயங்கியல் செயல்வழியே தவிர ஒரு நாள் குறித்து நடப்பதன்று. அதற்கான தொடக்க முன்னிலைகளில் ஒதுங்கியிருந்து விட்டு வலிமை திரண்ட பின் சேர்ந்து கொள்வது என்பது ஒருபோதும் நடவாது. ஏனென்றால் இந்தச் செயல்வழியில் இப்போதைய வலிமைக்கேற்பப் பங்கு பெறாமல் புதிய வலிமை வரவே வராது.

சென்ற தேர்தலில் திமுகவை ஆதரித்தவர்கள் இந்த மூன்று ஆண்டுகளில் திமுகவின் மக்கள்பகைப் போக்கினைக் கண்டித்து எத்துனைப் போராட்டங்களை முன்னெடுத்தனர்? நல்ல கேள்வி! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பில் இடம்பெற்று, பாசக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அக்கட்சியைத் தோற்கடிக்க வேலை செய்தோம். இது விளைவளவில் திமுக கூட்டணிக்கான ஆதரவாகவே அமைந்தது. ஆனால் தேர்தலுக்குப் பின் நாம் உட்பட மக்கள் இயக்கங்களில் எதுவும் திமுகவின் தொங்குசதையாக மாறி விடவில்லை.

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியிலும் பாசக ஆட்சிக்கெதிரான போராட்டங்கள் நடத்திய போது திமுக ஆட்சிக்கு எதிராகவும் போராடினோம். ‘பாப்புலர் பிரண்ட்‘ மீதான தடையை எதிர்த்துப் போராடிய போது திமுக ஆட்சியின் கண்ணியந்தவறிய மோசமான அடக்குமுறையைச் சந்தித்தோம். ’உபா’, ’நியா’ எதிர்ப்பு இயக்கத்தில் இந்திய பாசக அரசை எதிர்த்தது போலவே திமுக அரசையும் கடுமையாகச் சாடினோம். இண்டன்பெர்க்கு அறிக்கையின் அடிப்படையில் அதானி-மோதிக்கு எதிரான போராட்டத்தில் திமுக ஆட்சியின் அதானி கூட்டுக்கு எதிராகவும் கோரிக்கை வைத்தோம், குரல் கொடுத்தோம்.

”காவி பாசக புகுந்துவிடும்; தமிழகத்தில் பாசக கும்பலை விரட்டி அடிப்பதற்கு வேறு வழியே இல்லை. நாம் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று புரட்சிகர இடதுசாரிகள் ஓயாது பல்லவி பாடுகின்றனர்” என்கிறார் மருது.

நாம் இப்படிப் பல்லவியோ சரணமோ பாடவில்லை. நாம் போராட்ட அரசியலையே வளர்க்க விரும்புகிறோம். போராட்ட அரசியலுக்குக் குடியாட்சிய வெளி தேவைப்படுகிறது. பாசகவைத் தேர்தலில் தோற்கடிக்க நமக்கென்று வலிமை இல்லாத போது அதற்கான தந்திரவுத்தியாகத் திமுக கூட்டணிக்கு வாக்குக் கேட்க வேண்டும் என்கிறோம். திமுக ஆட்சி மீதான நம் குற்றாய்வைக் கிஞ்சிற்றும் கைவிடாமலேதான் இதைச் செய்யப் போகிறோம்.

”நடைமுறையில் காவிகளின் பிடிக்குள் ஒட்டுமொத்த இந்தியாவும் வந்து விட்டது. சட்டங்களை இயற்றக்கூடிய வல்லமை படைத்த ஒன்றிய அரசு நினைத்த சட்டங்களை நிறைவேற்றுகின்றது. மாநிலங்களைத் துண்டாடுகின்றது. மக்கள்பகைக் கொள்கையைப் புகுத்துகின்றது. தேசிய இனம் சார்ந்து, மொழி சார்ந்த பண்பாடுகளை சிதைக்கின்றது” என்கிறார் மருது.

சரிதான். இதிலிருந்து நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன? பாசக ஆட்சி நீடிக்க விடக் கூடாது என்பதுதானே?

”அரசமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசுக்குக் கட்டுப்பட்டது தான் மாநில அரசு. ஒன்றிய அரசே பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, மாநில அரசுகள் அதற்குக் கட்டுப்பட்ட அரசாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இந்த அதிகாரம் அற்ற அரசைக் காப்பதற்குத் தான் அணி சேர்க்கின்றனர் நமது புரட்சியாளர்கள்” என்கிறார் மருது.

அதிகாரம் அற்ற மாநில அரசுகள் என்பது வரலாற்று நோக்கில் சரி. ஆனால் அரசியல் நோக்கில் சரியன்று. மாகாண அல்லது மாநில அரசுகள் தன்னாட்சிக்காகப் போராடுவதும், அந்தத் தன்னாட்சியைக் குறுக்கவும் மறுக்கவும் நடுவண் அரசு மீண்டும் மீண்டும் முனைப்புக் காட்டுவதும் குடியேற்ற ஆளுகைக் காலம்தொட்டு குடியாட்சிய வரலாற்றில் தொடர்ந்து வருகின்ற நிகழ்வுதான். சட்டப்படி ஒன்றிய அரசு அப்படித்தான், மாநில அரசு இப்படித்தான், நாம் செய்வதற்கொன்றுமில்லை என்பது செயலின்மைக்கு வழிகோலும் இயக்க மறுப்பியல் பார்வையே ஆகும்.

ஒன்றிய அரசு முன்னெடுக்கும் மக்கள் பகைச் செயல்களை அட்டியின்றி மாநில அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் நாம் அந்த மாநில அரசை அட்டியின்றி எதிர்த்துப் போராட என்ன தடை? உண்மையில் நாம் போராடியிருக்கிறோம், இப்போதும் போராடுகிறோம், இனியும் போராடுவோம். இந்தப் போராட்டங்களுக்கான குடியாட்சிய வெளியைக் காத்துக் கொள்ளவும் விரிவாக்கிக் கொள்ளவும் மக்கள் பகைக் கொள்கைகளின் மூல ஊற்றாக விளங்கும் பாசிச பாசக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்கிறோம். பாசக கூட்டணியைத் தோற்கடிக்க வல்ல கட்சி அல்லது கூட்டணியை ஒரு கருவியாகக் கொண்டு இதைச் செய்ய முடியும் என்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது தேசிய இனங்களின் அடிமை முறியாகத்தான் உள்ளது என்பது சரி. ’’ஒன்றிய அரசின் அனைத்து மக்கள் பகை நடவடிக்கைகளும் அரசமைப்புச் சட்டத்தின் படியே நிகழ்த்தப்படுகின்றன” என்பது ஓரளவுக்கே உண்மை. அரசமைப்புச் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமலும் சிலபல செயல்கள் நடைபெறுகின்றன என்பதுதான் இந்த ஆட்சியின் பாசிசத் தன்மையை உறுதி செய்கிறது. காட்டாக, வேளாண் சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இயற்றப்படவில்லை என்பதே உண்மை. காசுமீர அடாவடியும் (370 நீக்கம்) இந்திய அரசமைப்பை ஏய்த்துச் செய்யப்பட்டதே.

கட்டுத் திட்டம் (நிபந்தனை) என்று வாக்குறுதி பெற்று ஆதரிக்கலாமே? என்று மருது கேட்கிறார். ஏற்கப் பெற வாய்ப்பில்லாத எந்தக் கட்டுத் திட்டம் விதித்தாலும் அது செயலின்மைக்குச் சாக்குத் தேடுவதாகவே முடியும்.

வலிமையான மக்கள் இயக்கங்கள் கட்டுவது பற்றி அன்பர் மருது திரும்பத் திரும்பப் பேசுகிறார். எப்படிக் கட்டுவது? பாட்டாளி வருக்கத்தை ஆளும் நிலைக்கு உயர்த்த முடியும் என்கிறார். எப்படி உயர்த்துவது? ஆளும் வருக்கங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வதல்ல, ஆளும் வருக்கத்தை மாற்றி அமைப்பதுதான் புரட்சி என்கிறார். சரி, நாம் பாசிச எதிர்ப்புக்கு, குறிப்பாகப் பாசிச பாசக ஆட்சியை விரட்டுவதற்கு வழிதேடுகிறோம். இதைப் புரட்சி என்று நாம் சொல்லிக் கொள்ளவில்லை. செய்தால் புரட்சி செய்வோம், வேறேதும் செய்திடோம் என்பது நம் நிலைப்பாடில்லை.

இலெனின் பார்வையில் குடியாட்சியத்தின் நிறைவாக்கமே குமுகியம் என்பதை அன்பர் மருது போன்ற குமுகியர்கள் மறக்க வேண்டாம். குடியாட்சியம் காக்கும் போராட்டத்தில் ஒரு முகன்மையான கட்டம்தான் 2024 பொதுத் தேர்தல். கனவுகள் மெய்ப்படச் செய்வதற்காக அல்ல, கனவு காணும் உரிமையை இழந்து விடக் கூடாது என்பதற்காக என்ன செய்யலாம் என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறேன்.

[அன்பர் மருதுவுக்கான என் மறுமொழி முற்றும்.]

புதன், 22 மே, 2024

தமிழ்க்காப்புக்கழகம் : 26.05.2024 காலை 10.00 : ஆளுமையர் உரை 95 & 96 ; என்னூலரங்கம்

 




தமிழே விழி!                                                                                     தமிழா விழி!

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள், 411)

நிகழ்ச்சி நாள் : வைகாசி 13, 2055  **** 26.05.2024  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; 

கடவுக்குறி / Passcode: 12345

இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய

‘தமிழ்ப்போராளி

பேராசிரியர் சி. இலக்குவனார்’ நூல் குறித்து

தோழர் தியாகு எழுதுகிறார் : சியான் நிகழ்ச்சி

 



(தோழர் தியாகு எழுதுகிறார் : தேரான் தெளிவு- தொடர்ச்சி)

புரட்சியாளர்கள் – பொதுமையரானாலும் மற்றவர் ஆனாலும் – கடைப்பிடிக்கும் ‘ஒற்றுமை முன்னணி’ என்ற உத்தி பகடிக்குரிய ஒன்றன்று. ஒற்றுமை (ஐக்கிய) முன்னணி என்பதெல்லாம் போருக்கு மட்டுந்தான், அது அரசியலுக்குப் பொருந்தாது என்பதும் சரியான பார்வையன்று. அரசியல் என்பது குருதி சிந்தாப் போர்! போர் என்பது குருதி சிந்தும் அரசியல்! அரசியலின் நீட்சியே போர்!

இருப்பினும் ஒற்றுமை முன்னணி (ஐக்கிய முன்னணி) என்ற பேச்சுக்கே உள்நோக்கம் கற்பிக்கிறார் அன்பர் மருது.

தேர்தல் நெருங்கினாலே நமது புரட்சிகர இடதுசாரிகள் ஐக்கிய முன்னணித் தந்திரவுத்தியைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுவார்கள். சுற்றி வளைத்து ஏதாவது ஒரு ஆளும் வருக்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதற்கு அணிதிரட்ட ஆரம்பித்து விடுவார்கள். தமது செயல்களை நியாயப்படுத்த உடனடியாக சப்பானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி என்ற பழைய புளித்துப்போன வாதத்தைப் பேசத் தொடங்குவார்கள்.”

தேர்தல் என்பது ஒரு குடியாட்சிய வடிவம் மட்டுமன்று, அது ஓர் அரசியல் போராட்டம் என்பதையும், மற்றப் போராட்டங்களில் எப்படியோ அதே போல் தேர்தல் போராட்டத்திலும் ஒற்றுமை முன்னணி உத்தியைக் கையாளத்தான் வேண்டும் என்பதையும் அன்பர் மருது கருத்தில் கொள்ளவில்லை. சுற்றி வளைத்து ஏதாவது ஓர் ஆளும் வருக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதுதான் ஒற்றுமை முன்னணி என்று பழிதூற்ற முற்படுகிறார். எந்தச் சூழலிலும் எந்த ஒற்றுமை முன்னணியிலும் ஆளும் வகுப்புக்கு – அதன் ஒரு பகுதிக்கும் கூட – இடம் அளிக்கக் கூடாது, அல்லது எந்நிலையிலும் எவரை எதிர்த்தும் ஓர் ஆளும் வகுப்பை ஆதரிக்கக் கூடாது என்பதுதான் புரட்சிகர இடதுசாரிகளுக்கு அவர் வழங்கும் அறிவுரை போலும்! ஒற்றுமை முன்னணி பற்றிய மார்க்சியக் கோட்பாட்டுக்கும் இந்த மருதுப் பேச்சுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

சப்பானிய வல்லரசிய (ஏகாதிபத்திய) எதிர்ப்பு முன்னணி என்ற வரலாற்று எடுத்துக்காட்டு மருது போன்றவர்களுக்கு வேண்டுமானால் பழைய புளித்துப் போன வாதமாக இருக்கலாம். சீனப் புரட்சியின் சுடர்மிகு படிப்பினைகளை இன்னமும் உயிர்ப்புள்ள வழிகாட்டிகளாகவே நான் மதிக்கிறேன். சப்பானிய வல்லரசிய எதிர்ப்பு முன்னணியைச் சீனப் புரட்சியின் தலைவர் மா சே துங்கு எவ்வளவு பெரிதாக மதித்தார் என்பதை விளங்க வைக்க சீன வரலாற்றில் நிகழ்ந்த கருத்துக்குரிய (கதை போல் சுவைதகு) நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். –

::::::::::::::::

1936 திசம்பர் 12 முதல் 26 வரையிலான காலத்தில் சீனத்தில் ஓர் அரசியல் நெருக்கடி மூண்டது. சியான் (சீன மொழி உச்சரிப்பில் (இ)க்குசியான் அல்லது சியான்) என்பது ஒரு சீன நகரம். அக்காலத்தில் சப்பானிய வல்லரசு சீனத்தின் மீது படையெடுத்து பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றித் தன் ஆளுகையை விரிவாக்கிக் கொண்டும் இருந்தது. சீன தேசிய அரசின் தலைவராக இருந்த சியாங் கே-சேக்கு தமது தலமையிலான தேசியப் படையைப் பார்வையிட சியான் நகரத்துக்குப் போயிருந்த போது அந்தப் படையின் இரு தளபதிகள் – சாங் சூ-லியாங்கு, யாங்கு ஃகூசெங்கு ஆகியோர் – அவரைத் தளைப்படுத்தி வீட்டுச் சிறையில் அடைத்து விட்டனர்.

சாங்(கு), யாங்(கு) ஆகிய அந்த இரு தளபதிகளும் விரும்பியது என்னவென்றால், சியாங்(கு) கே-சேக்கு தலைமியிலான கோமிண்டாங்(கு) படைக்கும் சீனப் பொதுமைக் கட்சி தலைமையிலான மக்கள் விடுதலைப் படைக்கும் இடையிலான உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்ட வேண்டும். சீன மண்ணில் சப்பானிய வல்லரசின் ஆளுகை விரிவாக்கத்தை எதிர்த்து ஒன்றுபட்டுப் போரிட வேண்டும் என்பதே. மாவோ தலமையிலான சீனப் பொதுமையருக்கும் இதே விருப்பம் இருந்தது. சீனக் குமுகாயத்தின் பல்வேறு பிரிவினரும் இதையே விரும்பினர். கோமிண்டாங்கு படையிலும் பலர் இதை விரும்பினாலும் சியாங் கே-சேக்கு மட்டும் சப்பானியரை எதிர்ப்பதை விடவும் செம்படையை ஒழித்துக் கட்டும் உள்நாட்டுப் போரிலேயே குறியாக இருந்தார். இந்தப் பின்னணியில்தான் தேசியப் படையின் இரு தளபதிகள் அவரை சியான் நகருக்குத் தந்திரமாக வரவழைத்து சிறைப்படுத்தி விட்டனர்.

நீண்ட பயணத்துக்குப் பிறகு ஏனானில் தளம் அமைத்துப் போரிட்டுக் கொண்டிருந்த செம்படையை ஒழித்துக் கட்டும் பொறுப்பை சியாங் கே-சேக்கு வடகிழக்குப் படையிடம் ஒப்படைத்திருந்தார். 1931ஆம் ஆண்டு சப்பான் படையெடுத்து வந்து மஞ்சூரியாவைக் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து வெளியேறிய வீரர்களைக் கொண்டுதான் இந்த வடகிழக்குப் படை அமைக்கப்பட்டிருந்தது. சப்பானிய வன்பறிப்பை எதிர்ப்பதில் சீனப் பொதுமையரின் உறுதியும் நாட்டுப் பற்றும் வடகிழக்குப் படையினரைப் பெரிதும் ஈர்த்தது. அவர்கள் பொதுமையருடன் உறவாடலாயினர். செம்படையும் தேசியப் படையும் ஒற்றுமை முன்னணியாகச் சேர்ந்து சப்பானியப் படையெடுப்பை எதிர்த்துக் களமாட வேண்டும் என்ற கருத்து அவர்களிடம் வலுப்பெற்றது.

வடகிழக்குப் படையின் தளபதிகளாய் இருந்த சாங்கும் யாங்கும் தங்கள் தேசியத் தலைவராய் இருந்த சியாங் கே-சேக்கிடம் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் படி வலியுறுத்தி வேண்டினர். அவர் கேட்பதாய் இல்லை. எனவேதான் அவரைக் கடத்த முடிவெடுத்து, வடகிழக்குப் படையைப் பார்வையிட வருமாறு சியானுக்கு அழைத்தார்கள். செம்படையை எதிர்த்துப் போரிடும் வீரர்களை நீங்கள் நேரில் சந்தித்து ஊக்கமூட்டினால் நன்றாக இருக்கும் என்றார்கள். தளபதி சாங்கின் இந்தத் திட்டத்தை அறிந்து “சிறப்பான முயற்சி” என்று தோழர் மாவோவும் பாராட்டினாராம். அழைப்பை ஏற்று வந்த சியாங் கே-சேக்கைப் பிடித்து அடைத்து வைத்துக் கொண்டு பொதுமைக் கட்சிக்குத் தகவல் கொடுத்தார்கள். தீவிரப் போக்கினரான சில படைத் தளபதிகள் சியாங் கே-சேக்கைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்றார். வடக்கு நோக்கிய படையெடுப்புக் காலத்தில் சியாங் கே-சேக்கு நடத்திய 1927 சாங்காய் படுகொலையை மறவாத செம்படையினர் சிலரும் சியாங் கே-சேக்கைத் தண்டிக்க இந்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்றே நினைத்தனர்.

ஆனால் பொதுமைக் கட்சித் தலைமை வேறுவிதமாகச் சிந்தித்தது. தோழர் மாவோ கோமிண்டாங்கை அனைத்துத் தேசிய ஒற்றுமை முன்னணிக்குள் கொண்டுவர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே நாட்டுக்கு நல்லது எனக் கருதினார். பொதுமைக் கட்சியின் சார்பில் தோழர் சூ என்-லாய் தலைமையிலான தூதுக் குழுவினர் சியானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரு கிழமைக் காலம் அவர்கள் சியாங் கே-சேக்குடன் பேச்சு நடத்தி, பொதுமைக் கட்சிக்கும் கோமிண்டாங்குக்கும் ஒற்றுமை முன்னணி அமைத்து சப்பானியப் படையெடுப்பை எதிர்த்துப் போரிட அவர் ஒப்புக் கொண்ட பின் அவரை விடுதலை செய்யச் சொல்லி விட்டனர்.

இதுதான் சீன வரலாற்றில் திருப்புமுனையான சியான் நிகழ்ச்சி. சியாங் கே-சேக்கு நினைத்தாலும் மீற முடியாத அளவுக்கு இந்த நிகழ்ச்சி சீன மக்களிடையே நாட்டுப்பற்று சார்ந்த பேரெழுச்சியைத் தோற்றுவித்தது. அது சீனத்தின் தேசிய வெற்றிக்கு மட்டுமல்லாமல், உலக அளவில் பாசிசம் வீழ்த்தப்படுவதற்கும் பெருந்துணை ஆயிற்று. குமுகிய சோவியத்து ஒன்றியமும் வல்லரசிய பிரித்தானியா, பிரான்சு, அமெரிக்காவும் ஏற்படுத்திய பன்னாட்டளவிலான பாசிச எதிர்ப்பு முன்னணியில் சீன தேசத்தின் பங்கினையும் உறுதி செய்தது.

சியான் நிகழ்ச்சி தரும் பாடங்கள் என்ன?

1) பொதுப் பகைவனுக்கு எதிராக ஒற்றுமை முன்னணி கட்டும் வாய்ப்பை ஒருபோதும்
தவற விடக் கூடாது.

2) பழைய பகைவர்கள் புதிய கூட்டாளிகள் ஆக வேண்டிய வரலாற்றுத் தேவை எழும் போது, பழிதீர்க்கும் பகையுணர்ச்சி அடிப்படையில் ஒற்றுமை முன்னணியின் தேவையை மறுதலிக்கக் கூடாது.

3) எந்த ஓர் ஒற்றுமை முன்னணியும் குறிப்பான வரலாற்றுக் கட்டத்துக்கு உரியதே. பிறிதொரு கட்டத்தில் ஒற்றுமை குலைவது இயல்பானதே. இதனால் ஒற்றுமை முன்னணிக் கொள்கையே தவறு என்று ஆகி விடாது.

4) புரட்சியாளர்கள் – பொதுமையர் – விடுதலை வீரர்கள் பாசிச எதிர்ப்பு ஒற்றுமை முன்னணியில் உண்மையாகவும் உறுதியாகவும் பங்கேற்பது அவர்களின் ஆதரவு அடித்தளத்தை விரிவாக்கவும் உறுதியாக்கவும் உதவக் கூடியது.

அன்பர் மருதுவுக்கான மறுமொழி பெரும்பாலும் முடிந்தது. எஞ்சியுள்ள சில கூறுகளை அடுத்து எடுத்துக் கொள்கிறேன்.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பன்னாட்டளவில் பாசிச எதிர்ப்பு ஒற்றுமை முன்னணி எவ்வாறு செயற்பட்டது என்பதைப் பற்றிப் பிறிதொரு தருணத்தில் பேசுவோம்.

(தொடரும்)

செவ்வாய், 21 மே, 2024

தோழர் தியாகு எழுதுகிறார் : தேரான் தெளிவு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!- தொடர்ச்சி)

”தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்”        திருக்குறள் 510

நடைபெறும்  2024 பொதுத் தேர்தல் குறித்துத் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களிடையே பெருங்கவலையும் அக்கறையும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் ஊடகங்கள் இவ்வகையில் செய்தியும் கருத்தும் வெளியிட்டு வருகின்றன. சில காட்சி ஊடகங்ளுக்கு நான் செவ்வி கொடுத்துள்ளேன். சில இணைய இதழ்களுக்குக் கட்டுரையும் எழுதிக் கொடுத்துள்ளேன். உலகத் தமிழர்கள் இந்தத் தேர்தலை எப்படிப் பார்க்கின்றார்கள்? அவர்களுக்குரிய முதன்மைக் கவலை என்ன? அவர்கள் விரும்பும் முடிவு என்ன? இவை குறித்தெல்லாம் ஆழ்ந்தகன்று உரையாட வேண்டிய தேவை இருப்பதை உணர்கிறேன். ஒரு தொடக்கமாக சாளரம் இணைய இதழுக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரையை ஈண்டு பகிர்கிறேன் –

000

இந்தியத் தேர்தல் – 2024:

நரேந்திர மோதியின் ஆட்சி தொடருமா? தொடர்ந்தால்…?

இஃது உலகெங்கும் தேர்தல் ஆண்டு எனலாம். இந்த ஆண்டு மார்ச்சு மாதம் உருசிய அதிபருக்கான தேர்தல் முடிந்தது.  நவம்பர் மாதம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல்  நடைபெறவுள்ளது. இவை தவிர பிரித்தானியாவிலும் இந்த ஆண்டு நடுவில் தேர்தல் எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கித்தான், வங்காள தேசம், இந்தொனேசியா, மெக்குசிகோ ஆகிய நாடுகளிலும் புதிய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மொத்தத்தில் உலக வாக்காள மக்கள்தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியினர் இந்தத் தேர்தல்களில் வாக்களிக்கவுள்ளனர்.

இந்த வரிசையில் எதிர்காலம் பற்றிய அச்சத்துடனும் கவலையுடனும் எதிர்நோக்கப்படும் ஒரு தேர்தல் உண்டு என்றால் அஃது இந்தியாவில்  ஏப்பிரல்-மே மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்தல்தான்! விடுமை பெற்ற இந்தியாவில் 1952 தொடங்கி எத்தனையோ தேர்தல்கள் நடந்திருப்பினும் 1977 பொதுத் தேர்தல் முகன்மையானதாகக் கருதப்பட்டது. இந்திரா காந்தி தலைமையிலான நெருக்கடிநிலை வல்லாட்சிக்கு முடிவு கட்டிக் குடியாட்சியத்துக்குப் புத்துயிரளிக்கும் தேர்தலாக அஃது அமைந்தது. அதை விடவும் முகன்மையானதாக  2024 பொதுத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

இந்தியக் குடியாட்சியத்தில் சாதி-மதம்-பணம் செலுத்தும் செல்வாக்கு சொல்லித் தெரிய வேண்டிய செய்தியே இல்லை. ஆனால் வடிவ அளவிலேனும் உலகிலேயே ஆகப் பெரும் குடியாட்சியமாக இந்தியா மதிக்கப்படுகிறது. இந்திய அரசமைப்பானது குடியாட்சியம் (சனநாயகம்), உலகியம் (சமயச்சார்பின்மை), கூட்டாட்சியம் (சமசுட்டி) ஆகியவற்றை அடிக்கற்களாகக் கொண்டதென நீதிமன்றங்கள் விளக்கம் தருகின்றன. இந்த அடிக்கற்கள் – இந்திய மாளிகையைத் தாங்கி நிற்கும் இந்தத் தூண்கள் – ஏற்கெனவே ஆட்டங்கண்டுள்ள இந்த அடிப்படைகள் – இப்போதைய தேர்தலுக்குப் பின் என்னாகும்? இந்தியா தொடர்ந்து சமயச் சார்பற்ற சனநாயகமாக நீடிக்குமா? என்ற கவலை தலைதூக்கியுள்ளது. நாசிகள் ஆண்ட செருமனியைப் போல, சியோனியர்கள் ஆளும் இசுரேலைப் போல் இந்தியா இந்துத்துவப் பார்ப்பனியப் பாசிச வல்லாட்சியாக வீழ்ந்து விடுமோ?  சமயச் சார்பின்மையையும் சமூக நீதியையும் நேசிக்கும் தமிழ் மக்கள், அமைதியை விரும்பும் இந்திய மக்கள் இருளடர்ந்த எதிர்காலம் நெருங்கி விட்டதோ? என்று அச்சப்படுகின்றார்கள்.

நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய சனதா கட்சியும் அதன் தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியும் (NDA) மூன்றாவது முறை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதை இந்திய நாடெங்கும் முற்போக்காளர்கள் தமது உடனடிக் கடமையாக மதிக்கின்றனர். இது கடினமான பணிதான் என்றாலும் முடியாத ஒன்றன்று.

கடைசியாகக் கருநாடக  மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாசக தோற்கடிக்கப்பட்டது. 2014இல் மோதி தலைமையிலான இந்திய அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் செய்துள்ள கேடுகளை வாக்காளர்கள் உணரும்படி செய்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று, அறிவூட்டி உணர்வூட்டி மக்களை அணிதிரட்ட முடிந்தால் மோதியை முறியடிக்க முடியும். 

பாரதிய சனதா கட்சி தலைமையிலான பத்தாண்டு ஆட்சி இந்தியக் கட்டமைப்புக்குப் பலவாறு செய்துள்ள மீளாக் கேடுகள் பற்பல. இந்தியா ஒரு தேசமன்று, அது பல தேசங்களைக் கொண்ட துணைக்கண்டமாகும் என்பதே சமூக அறிவியல் பார்வை. அது பிரித்தானியரின் தகரி(பீரங்கி)களாலும் சட்டங்களாலும் உருவாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பு என்பதே மெய்.

ஆனால் குடியேற்ற ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியத் தேசியம் பிறந்தது. அஃது இந்திய மக்களைச் சாதி மத வட்டார வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபடுத்தியது. அது தீண்டாமையை எதிர்த்தது, சமயங்கடந்த ஒற்றுமையை வலியுறுத்தியது. இந்தியத் தேசியத்துக்கு மாற்றாகப் பார்ப்பனிய வல்லாண்மையை வலியுறுத்தியும், இந்துக்களின் முதன்மையை நிலைநிறுத்தியும் இந்துத் தேசியம் பிறந்தது. அஃது இந்து இராட்டிரம், இந்துத் தேசியம் என்ற கொள்கைகளை முன்னிறுத்தியது. இந்தக் கொள்கைகளுக்ககத்தான் 1925ஆம் ஆண்டு ஆர்எசுஎசு (இராசுட்ரிய சுயம்சேவக்கு சங்கு) அமைக்கப்பட்டது.

ஆர்எசுஎசு அமைப்பின் அரசியல் பிரிவுதான் முன்பு சனசங்கம், இப்போது பாரதிய சனதா கட்சி. ஆர்எசுஎசு குறிக்கோள் இந்தியாவை இந்து இராட்டிரம் ஆக்குவதாகும். முசுலிம்களையும் கிறித்துவர்களையும் பொதுவுடைமையர்(கம்யூனிசுட்டு)களையும் இந்து இராட்டிரத்தின் பகைவர்களாக அது கருதுகிறது. இந்து சமயப் பாதுகாப்பு என்ற பெயரில் தீண்டாமையும் சாதியமும் மலிந்த இந்துச் சமூகத்தைக் கட்டிக் காக்கவே அது விரும்புகிறது. அதே போது புதுத் தாராளிய முதலாளியச் சுரண்டலைப் பாதுகாத்து அம்பானி – அதானி போன்ற பெருங்குழுமப் பெருமுதலாளர்களை வளர்த்து விடவும் செய்கிறது.
மோதியின் பாசக அரசு இந்தியாவின் பன்மைத் திறத்தை மறுத்து ஒரே தேசம் ஒரே மதம் ஒரே அங்காடி ஒரே ஒரே தேர்தல் ஒரே கட்சி ஒரே தலைவர் என்ற திசையில் விரைந்து கொண்டிருக்கிறது.
நரேந்திர மோதி ஆட்சியின் கொடிய வன்கொடுமைகளுக்குப் பெரிதும் ஆளாகியிருப்பவர்கள் முசுலிம்கள். மோதி குசராத்து மாநில முதலமைச்சராக இருந்த போது 2002 ஃபிப்பிரவரி கடைசியில் கோத்துரா தொடரிப்(இரயில்) பெட்டி எரிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து முசுலிம்கள் மீதான இனவழிப்புத் தாக்குதல் நடந்து, ஈராயிரத்துக்கு மேற்பட்ட முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பிபிசி வெளியிட்ட ’மோதி வினா’ ஆவணப் படம் இந்த இனவழிப்புக்கான சான்றுகளைக் காட்சிப்படுத்தியது.
2014ஆம் ஆண்டு மோதி தலைமையமைச்சர் ஆன பின் இந்தியாவையே குசராத்து ஆக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். பசுப் பாதுகாப்பின் பேரில் தலித்துகளும் இசுலாமியர்களும் அடித்துக் கொல்லப்பட்டார்கள். முசுலிம்கள் செறிந்து வாழும் தொகுதிகள் தலித்துகளுக்கான தனித் தொகுதிகளாக்கப்பட்டு முசுலிம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாமல் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலிலிருந்து முசுலிம் பெயர்கள் நீக்கப்பட்டன. கருநாடகத்தில் மூடாடை (Hijab) தடையின் ஊடாக முசுலிம் பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டது. முசுலிம் மாணவர்களுக்கான கல்வியுதவித் தொகைகள் நிறுத்தப்பட்டன. பசுப் பாதுகாப்பின் பேரால் இசுலாமியர்களைப் படுகொலை செய்தாலும் கேட்பாரில்லை. மசூதிகளுக்குக் குண்டு வைத்த இந்துச் சதிகாரர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்.

பாபர் மசூதியைப் பட்டப்பகலில் இடித்து அந்த இடிபாடுகளின் மீதே இராமர் கோயிலைக் கட்டி நாட்டின் தலமையமைச்சரே திருக்குடமுழுக்குச் செய்து மகிழ்ந்தது போதாதென்று, காசியிலும் மதுராவிலும் இசுலாமிய வழிபாட்டுத்தலங்களை இடித்து இந்துக் கோயில் கட்ட முனைந்துள்ளார்கள். பல மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் இயற்றியுள்ளனர்.
இந்தியாவிலேயே முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலமான சம்மு காசுமீரில் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் உறுப்பு நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டு, மாநிலத் தகுநிலை நீக்கப்பட்டுள்ளது. முசுலிம்கள் மிகப் பெரும்பான்மையாக உள்ள ஒரே ஒன்றிய ஆட்சிப் புலமாகிய இலட்சத் தீவுகளில் மாட்டிறைச்சியை இடம் விட்டு இடம் கொண்டுசெல்லத் தடை விதித்துள்ளனர்; பள்ளிக் குழந்தைகளுக்கு இறைச்சி உணவு வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. முசுலிம்களின் குடியுரிமைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டதே குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA).
முசுலிம் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் தடை செய்யபப்பட்டு செயற்பாட்டாளர்கள் பலரும் ’உபா’ போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களில் சிறையிலடைக்கபட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் போராடும் முசுலிம்களின் வீடுகள் இடிப்புந்து (bulldozer)களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
மாநில உரிமைகள் பறிப்பு, பண மதிப்பு நீக்கம், சரக்கு சேவை வரி, சூழலியல் மதிப்பாய்வுச் சட்டத் திருத்தம், தொழிற்சங்க உரிமைகளுக்கு எதிரான புதிய சட்டங்கள், பெருங்குழுமங்களுக்கு வரிச் சலுகை, கறுப்புப் பணப் பெருக்கம் என்று பல நூறு வழிகளில் மோதியின் பாசக அரசு மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளது.

மோதி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் எஞ்சியுள்ள சிறு உரிமைகளும் பறிபோகும் ஆபத்துள்ளது. நாசிக்கு(Nazi)களின் செருமனி போல், சியோனிய இசுரேல் போல, சிங்கள பௌத்த சிறிலங்கா போல, இந்தியாவும் இந்துத்துவ பாரதமாக மாறிப் போகலாம். இதைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்பாக 2024 தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)