சனி, 28 டிசம்பர், 2019

வெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!

அகரமுதல


வெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!
அன்புசால் தமிழார்வலர்களே!
வணக்கம்.
வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான்  ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன்.
உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது.
மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக இது திகழும் என நம்புகிறேன்.
ஈராயிரத்திற்கும் மேற்பட்ட வெருளிச்சொற்கள் விளக்கங்களுக்கான கலைச்சொற்கள் அட்டவணைகள் தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ் என இரு வகைகளிலும் அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள அன்றாடக் கலைச்சொற்களுக்கான அட்டவணைகளும், ஒலி பெயர்ப்புச் சொற்களுக்கான அட்டவணைகளும் தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் – தமிழ் என இரு வகைகளிலும் அளிக்கப்பட்டுள்ளன.  எனவே, அறிவியல் ஆர்வலர்கள், சொல்லாக்க ஆர்வலர்கள் மகிழும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது எனலாம். சொல் தொடர்பான சொல்லாய்வு, சொல், சொற்களம் முதலான பல்வேறு குழு உறுப்பினர்களும் தமிழ் ஆர்வலர்கள் நிறைந்துள்ள வல்லமை, தமிழ் மன்றம், தமிழமுதம், தமிழ்ச்சிறகுகள், புதுவை வலைப்பூவினர், தமிழ் உலகம், தமிழர் பறை, தெய்வத்தமிழ், மின்தமிழ், தோழமை முதலான பல்வேறு மடலாடல் குழுக்களினரும், ஊடகத்தினரும் இதனை வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.
இதன் விலை உரூ 1500/- என்பது உழைப்பு நோக்கில் மிகவும் குறைவே! அ 4 பக்க அளவில் கணியச்சிட ஒரு பக்கத்திற்குக் குறைந்தது உரூ.40 அளிக்க வேண்டியுள்ளது. 2000இற்கு மேற்பட்ட படங்கள் பதிப்பிட மேலும் தனிக்கட்டணம். கணிணி பயன்பாட்டு நேரம் அடிப்படையில் இன்னும் கட்டணம் மிகுதி.  பல ஆண்டுகள் உழைப்பில் உருவான இந்நூலின் குறைந்த அளவு விலைதான் இது. கல்வி நிறுவனங்களும் தமிழ் அமைப்பினரும் அறிவியல் அமைப்பினரும் இதை வாஙகுவது எளிதே! பல வெளிநாட்டுப் பண மதிப்பில் இத் தொகை மிகவும் குறைவே. எனவே கணிணியில் அமேசான் பக்கம் அல்லது அலைபேசியில் கிண்டில் செயலிக்குச் சென்று இலக்குவனார் திருவள்ளுவன் என்றோ வெருளி அறிவியல்’ (Science of Phobia) என்றோ தேடி இந்நூலைப் பதிவிறக்கம் செய்து ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.
விலைக்கு வாங்க வாய்ப்பு இல்லாமல் ஆனால், படிக்க வேண்டும் என விழையும் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
இந்திய நேரப்படி வரும் மார்கழி 13, 2050 / ஞாயிற்றுக்கிழமை /29.12.2019 அன்று நண்பகல் 1.30 மணி முதல் மார்கழி 15, 2050 / செவ்வாய்க்கிழமை / 31.12.2019 நண்பகல் 1.29 முடிய இதனை விலை கொடுக்காமல் கிண்டில் குறுஞ்செயலியில் (Kindle app) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்படி இலவயக் காலம் முடிந்த பின்னரும் கிண்டில் வரையிலி (Kindle Unlimited) திட்டத்தின் கீழ்த் தொடர்ந்து நூலை நீங்கள் இலவயமாகப் படிக்கலாம். கணினி உலவி (browser) வழியே வாங்க https://amzn.to/2PYD4T2 எனும் இணைப்புக்குச் செல்லலாம். நூலை வாங்குதல் குறித்த மேலும் விவரங்களை இந்த இணைப்பில் காணலாம் . < இணைப்பு >


மேலும், கிண்டில் வெளியீட்டகத்தின் பதிப்பிற்கான படைப்பு 2019 (Pen to Publish 2019) என்னும் திட்டத்தில் எனக்குப் பரிசு கிடைக்க வேண்டும் எனில் வரும் திசம்பர் 31, 2019 அன்றைக்குள் மிகுதியானவர்கள் நூலை விலை கொடுத்தோ இலவயமாகவோ வாங்கிப் படித்துக் கருத்துரைத்திருக்க வேண்டும். பக்கத்திற்குச் சில வரிகளை அச்சிடும் கவிதை நூலிற்குக் கிடைக்கும் வரவேற்பு இதுபோன்ற நூலுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, வாங்கும் வாய்ப்புள்ளவர்கள்  வாங்கி ஊக்கப்படுத்துமாறும் பிறர் இலவயப் பதிப்பைப் பதிவிறக்கம் செய்தோ இலவயத் திட்டமான கிண்டில் வரையிலியின் (Kindle Unlimited) கீழோ படித்துத் தத்தம் கருத்துகளைப் பதியுமாறும் வேண்டுகிறேன்.
நிறைகளைத் தளத்தில் பதியுங்கள்!
நிறைகாண வேண்டிய குறிப்புகளை என்னிடம் தெரிவியுங்கள்!
நனி நன்றி
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



கிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி?- இ.பு.ஞானப்பிரகாசன்


கிண்டில் தளத்தில்  ‘வெருளி அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி?
நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் நூலை இலவயமாகவே படிக்கலாம். உங்கள் கிண்டில் குறுஞ்செயலியைத் (Kindle app) திறந்து அதில் இலக்குவனார் திருவள்ளுவன் என்றோவெருளி அறிவியல் Science of Phobia) என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும். அந்தப் பக்கத்தில் உள்ள இலவயமாகப் படித்திட   /  Read for Free பொத்தானை அழுத்தி நீங்கள் இலவயமாகவே நூலைப் படிக்க முடியும்.
கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கிண்டில் வழியாகப் படிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ன :

1) இதோ இந்த இணைப்பைத் தொடுங்கள் – https://amzn.to/2PYD4T2.

2) இப்பொழுது வரும் பக்கத்தில் உள்ள  ஒரு சொடுக்கில் இப்பொழுது வாங்குக / Buy Now with 1-Click எனும் பொத்தானை அழுத்துங்கள்.
3) உள்நுழையும் வாய்ப்பு. (Log in செய்ய) வரும். உங்கள் அமேசான் கணக்கில் நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கிறீர்களோ அந்த மின்னஞ்சல் முகவரி அல்லது எந்தக் கைப்பேசி எண்ணைக் கொடுத்திருக்கிறீர்களோ அந்த எண் – இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்துக் , கடவுச்சொல்லையும் (password) கொடுத்தால் உள்நுழைந்து விடலாம்.
4) அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பற்று அட்டை (Credit Card), பண அட்டை (Debit Card), இணைய வங்கிச் சேவை (Net Banking), அமேசான் இருப்புத் தொகை (Amazon Pay Balance) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நூலை வாங்கிக் கொள்ளலாம்.

5) இப்பொழுது கூகுள் செயல்புரி மண்டிக்குள்(Play Store) சென்று கிண்டில் குறுஞ்செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவி, மேலே சொன்னபடி உங்கள் அமேசான் கணக்கு விவரங்களைக் கொடுத்து உள்நுழைந்து விட்டால் அதில் உள்ள நூலகம்(Library) எனும் பிரிவுக்குள் சென்று நூலைப் படிக்கலாம்.

கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால் கூட இலவயமாக இந்த நூலைப் படிக்க முடியும். அதற்கு நீங்கள் இதுவரை அந்தத் திட்டத்தில் ஒருமுறை கூட இணையாதவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பின்வரும் வழிமுறைகளில் நீங்கள் பார்க்கலாம்.
1) கிண்டில் வரையிலி(unlimited)   உறுப்பினர்களுக்காக மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளில் 3ஆவது படிநிலைக்கு வந்ததும் விலைதராமல் படித்திட  / Read for Free பொத்தானை அழுத்த வேண்டும்.

2)  இப்பொழுது கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் இணைவதற்கான பக்கம் வரும். அதில் உள்ள கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் சேருக  / Join Kindle Unlimited எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.
  3) உள்நுழைய (Log in செய்ய) கேட்கும். மேலே கூறியபடி உங்கள் அமேசான் கணக்கின் விவரங்களைக் கொடுத்து உள்நுழைய வேண்டும்.
4) இப்பொழுது வரும் பக்கத்தில் உங்கள் பற்று அட்டையையோ (Credit Card) ICICI, சிட்டி வங்கி, கோடக்கு ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றின் பண அட்டையையோ (Debit Card) பயன்படுத்தி உரூ.2/- செலுத்தினால் அடுத்த ஒரு மாதத்துக்கு நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் உள்ள நூல்களை இலவயமாகப் படிக்கலாம். அந்த வகையில் இந்த நூலையும் படிக்கலாம்.
5) முதன்மைக் குறிப்பு! இதைச் செய்து முடித்தவுடன் பணம் செலுத்தப் பயன்படுத்திய அட்டையைக் கணக்கிலிருந்து நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால் மாதந்தோறும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து  ரூ.169/- தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். அட்டையை நீக்குவது எப்படி என்பதை அறிய இந்தக் காணொலி உதவும்
நண்பர்களே! இந்தப் போட்டியைப் பொறுத்த வரை எந்தெந்த நூல்கள் மிகுதியாக விற்பனையாகி, நிறைய கருத்துரைகளையும் நல்ல தரக்குறியீடுகளையும் (Ratings) பெறுகின்றனவோ அந்தச் சில நூல்கள் மட்டும்தான் நடுவர்களால் பரிசீலிக்கப்படும். எனவே போட்டியின் கடைசி நாளான 31.12.2019-க்குள் படித்து விட்டு உங்கள் கருத்துகளையும் தரக்குறியீடுகளையும் மறவாமல் அளிக்க வேண்டுகிறேன்!
கருத்தும் தரக்குறியீடும் அளிப்பது எப்படி?

மேலே உள்ள https://amzn.to/2PYD4T2 இணைப்பு வழியாகப் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் பதிப்புரை மதிப்புரை எழுதுக  / Write a product review என ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்கு நூலைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்தலாம். சில நொடிகள் காத்திருந்தால் அளிக்கப்பட்டது  / Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி முடிவில் உள்ள அளி/ Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துகளும் பதிவாகி விடும்.

சில நேரங்களில், கருத்துகளை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய இயல்கிறது.  ஆங்கிலத்தில் பதிய விரும்பாதவர்கள்வெறும் தரக்குறியீடு மட்டும் அளித்து உதவலாம்.

அன்பர்களே! பல ஆண்டுகள் உழைப்பில் மலர்ந்த நூல் இது! தமிழ் அறிவியல் துறைக்கு இன்னோர் அணி சேர்க்கும் இந்த முயற்சியைத் தமிழ் மக்கள் கட்டாயம் கைவிட மாட்டீர்கள் எனும் நம்பிக்கையுடன் வெளியிடப்பட்டுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!
நிறைகளைத் தளத்தில் பதியுங்கள்!
நிறைகாண வேண்டிய குறிப்புகளை ஆசிரியரிடம் தெரிவியுங்கள்!

மறந்து விடாதீர்கள்! போட்டியின் கடைசி நாள்: திசம்பர் 31, 2019. அதற்கு முன் படித்துக் கருத்தளித்து விட வேண்டுகிறோம்.

மிகுந்த நன்றி.

இலக்கியச் சிந்தனை 593 & குவிகம் இலக்கிய வாசல் 57

மார்கழி 12, 2050 / சனி / 28.12.2019

மாலை 6.00

சீனிவாச காந்தி நிலையம்அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டைசென்னை 600018


எழுத்தும் வாழ்க்கையும் :
பதிப்பாளர் எழுத்தாளர் அகிலன் கண்ணன்
குமுதமும் நானும்:  எழுத்தாளர் பாமா கோபாலன்

புதன், 25 டிசம்பர், 2019

உயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில் தமிழ் நாட்டிற்கு அநீதி! – இலக்குவனார் திருவள்ளுவன்



உயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில்  தமிழ் நாட்டிற்கு அநீதி!


தமிழ்நாட்டிலுள்ள உயர்நீதி மன்றத்திற்குத் தமிழ் நாட்டின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் தமிழக மக்களின் அடிப்படை உணர்விற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் சொல்லும் காரணம்  எளிய மனிதனால்கூட ஏற்கப்பட முடியாதது. அவ்வாறிருக்க அரசியல் தெரிந்தவர்கள், சட்டம் தெரிந்தவர்கள், நீதியை உணர்ந்தவர்கள் எங்ஙனம் ஏற்கமுடியும்?
அனைத்து நீதிபதிகள் குழுக் கூட்டத்தில், “சென்னை உயா்நீதி மன்றத்தின் அதிகார எல்லைக்குள்தான் புதுச்சேரி மாநிலமும் உள்ளது. எனவே, தமிழ்நாடு உயா்நீதிமன்றம் எனப் பெயா் மாற்றம் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளனர். ஒரு பாமரனும் இக்கருத்தைக் கேட்கும் பொழுது சிரிக்கத்தான் செய்வான். இப்பொழுது மதராசு என்று சொல்கிறார்களே, நாம் சென்னை என்று சொல்கிறோமே அதில் என்ன தமிழ்நாடு முழுமையுமா அடங்குகிறது?  தமிழ்நாட்டின் பெயரைத் தமிழ்நாடு என்னும் பழம் பெயருக்கு மாற்றிய பின்னர், சென்னை என்பது தமிழ்நாட்டில் உள்ள  ஒரு நகரம் அல்லது மாவட்டம்தான். வாதத்திற்காகச் சென்னை என்பது தமிழ்நாட்டைக் குறிப்பதாக எடுத்துக் கொள்வோம். இதில் எங்கே புதுச்சேரி வந்தது. மதராசு அல்லது சென்னையில் எப்படி புதுச்சேரி அடங்கும்?  எனவே, எந்தச் சிந்தனையும் செலுத்தாமல் ஏதோ அழுத்தத்தின் பெயரில் தெரிவிக்கப்பட்ட முடிவை அறிவிக்கிறார்களோ என்ற ஐயம்தானே அனைவருக்கும் ஏற்படும்?
சரி. இதற்கு முன்னர் வேறு எதுவும் இவ்வாறு இல்லையா? என்று பார்த்தால் நீதித்துறையினரின் அறியாமை வியப்பைத் தருகிறது. ஏனெனில், பஞ்சாபு அரியாணா ஆகிய இரு மாநிலங்களுக்குமான ஒற்றை உயர்நீதி மன்றம், பஞ்சாபு அரியாணா உயர்நீதி மன்றம் என்ற பெயரில் இயங்குகிறது.  அவ்வாறிருக்கத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம என்று பெயர் சூட்டத் தடை என்ன உள்ளது?
இது குறித்து, ‘மதராசு உயர்நீதிமன்றம்’ என்பதைத் ‘தமிழ்நாடு – புதுவை உயர்நீதி மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். என ஏற்கெனவே தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. தமிழ் ஆர்வலர்களும் பல்வேறு கட்டங்களில் தங்களது கோரிக்கையினை வைத்துள்ளனர்.  இவ்வாறான சிந்தனை கற்றறிந்த மாண்பமை நீதிபதிகளுக்கு இல்லாமல் இருக்காது. அப்படியானால் பொருந்தாக் கருத்தைக் கூற என்ன அழுத்தம் வந்தது  என்று தெரியவில்லை
புதுச்சேரி போன்று ஒன்றியப் பகுதியாக உள்ளவை அந்தமான்-நிக்கோபர் தீவுகள். இதற்கான உயர்நீதி மன்றம், கல்கத்தா உயர்நீதிமன்றம்தான். அப்பொழுது அந்தமான் நிக்கோபார் பெயர் இல்லையே! எவ்வாறு கல்கத்தா உயர்நீதிமன்றப் பணி வரம்பில் வரும் என்று யாரும் கேட்கவில்லையே!  இப்பொழுது மட்டும் ஏன் இந்தச் சிந்தனை?
பம்பாய் உயர்நீதிமன்ற வரம்பில்தான் மகாராட்டிரா மாநிலத்தடன், கோவா, தாத்திரா -நாகர் அவேலி, தமன்-தியூ ஒன்றியப்பகுதிகள் வருகின்றன.
 கெளகாத்தி உயர்நீதி மன்ற வரம்பில்தான் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் மாநிலங்கள் உள்ளன. இதனை முறையற்றது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருதவில்லை.     
கேரளா உயர்நீதி மன்ற வரம்பில்தான் இலட்சதீபம் ஒன்றியப்பகுதி வருகிறது. பஞ்சாபு அரியானா உயர்நீதி மன்றவரம்பில்தான் சண்டிகார் ஒன்றியப் பகுதி வருகிறது.
பிற ஒன்றியப்பகுதிகள் ஏதேனும் அருகிலுள்ள மாநில உயர்நீதி மன்றத்தின் வரம்பில் இருந்தாலும் வராத முறையின்மை, புதுச்சேரி ஒன்றியம் அருகிலுள்ள தமிழ்நாட்டில் சேரந்து இருப்பதால் தமிழ்நாடு என்ற பெயர் எப்படி முறையற்றதாக மாறும்?
‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனத் தமிழகச் சட்டப்பேரவையில் மத்திய அரசை வலியுறுத்தி 31.07.2016 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு என்ன மதிப்பு? அப்போதைய முதல்வர் செயலலிதாதான் இதனை  நிறைவேற்றினார். அவரது ஆட்சியைத் தொடரும் இப்போதைய அதிமுக அரசு அமைதி காக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரைச் சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற   2016 ஆம் ஆண்டு சூலை மாதம் அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியது. இப்போதைய பா.ச.க. அரசுதான் அப்போதும் ஆட்சியில் இருந்தது. “இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இனி ஆங்கிலத்திலும் சென்னை என்றே அழைக்கப்படும்” என்று மத்திய அமைச்சர் சதானந்த (கவுடா) தெரிவித்துள்ளார். ஆனால், முழு மனத்துடன் ஒப்புதல்  வழங்கவில்லை போலும். ஏனெனில், திசம்பர் 2016,இல் சட்டத் துணை யமைச்சர் பி.பி.செளத்திரி, “சென்னை, மும்பை, கொல்கத்தா உயர்நீதி மன்றங்களுக்கான பெயர் மாற்றச்சட்டத் திருத்தம் குறித்து உரிய மாநில அரசுகள், உரிய உயர்நீதிமன்றங்கள் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்கப்படும். ஆனால், இதற்கான காலக் கெடு எதுவும் விதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.  இதிலேயே இது கிடப்பில் போடப்படும் எனச்சொல்லாமல் சொல்லியது மத்திய அரசு.
இருப்பினும் அதே ஆட்சியில், 2016 இல், சட்டம் – நீதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்(காங்கிரசு), அறிக்கை அளித்திருந்தார். அதில் 85 ஆவது பரிந்துரையாக அவர், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யுமாறு  குறிப்பிட்டுள்ளார். பா.ச.க. அரசிற்கு இதில் உடன்பாடு இல்லை என்பதால், இப்பரிந்துரைக்கு எந்தப்பயனும் இல்லை.
2016இல் மத்திய அரசு உயர்நீதி மன்றத்தின் கருத்து கேட்கப்படும் எனத் தெரிவித்தது அல்லவா? அந்தக் கருத்தைத்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் இப்போது தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் சட்டமன்றத்தீர்மானம் இருக்கும் பொழுது மீண்டும் தமிழக அரசின் கருத்து தேவையில்லை.  எனினும் அவ்வாறு கேட்டிருந்தாலும் கேட்காவிட்டாலும், தமிழக அரசு முந்தைய தீர்மானத்தை வலியுறுத்தி உடனடியாக மதராசு உயர்நீதி மன்றத்தின் பெரைத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம் என மாற்ற வலியுறுத்திப் பெயர் மாற்ற ஆணையைப் பிறப்பிக்கச் செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் இவ்வாறு மடல் அனுப்பச் செய்ய வேண்டும்.
மிழக மக்கள் அல்லது தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்களும் பன்முறை வலியுறுத்தியுள்ளனர்.
உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம், அது சார்ந்த மண்ணைப் போற்றும் வகையில் மாநிலத்தின் பெயரில் தமிழ்நாடு என்று அழைக்கப்படுவதுதானே பொருத்தமாக இருக்கும்.
அதற்கேற்ப உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் கூடித் தமிழ்நாட்டின்பெயர் அதற்கான உயர்நீதி மன்றத்தில் இருப்பதே நீதியானது என்பதை உணர்த்தும் வகையில் இதனை ஏற்று அறிக்கை அளிக்க வேண்டும்.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், சத்தீசுகர் உயர் நீதிமன்றம், குசராத்து உயர் நீதிமன்றம், சியார்க்கண்டு உயர் நீதிமன்றம், கருநாடகா உயர் நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம், இராசசுதான் உயர் நீதிமன்றம், சிக்கிம் உயர் நீதிமன்றம், உத்தர்காண்டு உயர் நீதிமன்றம் எனப் பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களே உயர்நீதி மன்றப் பெயராக இருக்கும்பொழுது தமிழக மக்களும் இதே நீதியை எதிர் பார்ப்பது தவறா?
வாய்ப்புள்ள நேர்வுகளில் – தமிழ்நாடாக இருந்தாலும் வெளி நாடாக இருந்தாலும் தமிழின் பெருமையைத் தலைமை அமைச்சர்கள் முதலானவர்கள் கூறி வருகின்றனர். அவை உள்ளத்தில் இருந்துதான் வருகின்றன என அறியும் வகையில் இவ்வாண்டு முடிவதற்குள்ளாகவே மதராசு உயர்நீதி மன்றத்தின் பெயரை மாற்றியமைத்துத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம் என அறிவிக்க வேண்டும்.
ஒட்டு மொத்தத் தமிழர்களின் இந்த எதிர்பார்ப்பை அரசுகள் நிறைவேற்றித் தருமா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 25.12.2019

இரு நூல்கள் வெளியீடு


அகரமுதல

மார்கழி 09, 2050 / 25.12.2019

புதன் மாலை 5.00 – 7.30

தேவநேயப் பாவாணர் மத்திய நூலக அரங்கம், சென்னை

தருப்பணச் சுந்தரி (கண்ணாடி ஏந்தி நிற்கும் அழகி) (சிறுகதைத் தொகுப்பு)
  உதிர்ந்தும் உதிராத…..(கட்டுரைத் தொகுப்பு)
நூல்கள் வெளியீடு
எசு வி வேணுகோபாலன், 94452 59691