திங்கள், 13 ஜூலை, 2009

தலைவலி தீரப்போவதில்லை...



அண்மையில் சில அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் கைப்பற்றினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைக்கு போலீஸôர் பரிந்துரை செய்துள்ளனர். பல அரசுப் பள்ளிகளில் நன்கொடை வசூல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால், பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால், கல்வித் துறைக்கு ஓர் "தலைவலி' உருவாகி உள்ளது. பள்ளிகளில் நிர்வாகச் செலவினங்களை மேற்கொள்ள மாணவர்களிடம் சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது 6,7,8-ம் வகுப்புகளில் பயிலும் ஒரு மாணவரிடம் ரூ.32.50-ம், 9,10-ம் வகுப்புகளில் பயிலும் மாணவரிடம் ரூ.47-ம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எனில் அறிவியல் பிரிவு மாணவரிடம் ரூ.93, தொழிற்கல்வி மாணவரிடம் ரூ.83, கலைத் துறை மாணவரிடம் ரூ.73 என வசூலிக்க வேண்டும். இந்தக் கட்டணங்களை மாணவர்களிடம் வசூலிக்க வேண்டாம் என்றும் இவற்றுக்குண்டான தொகையை அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு மொத்தமாக வழங்கும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி ரூ.21.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு வழங்கியது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தின்படி, ஆயிரம் மாணவர்கள் பயிலும் ஓர் அரசுப் பள்ளியில் ஏறக்குறைய ரூ.50 ஆயிரம் கிடைக்கும். இப்பணத்தை வைத்துக் கொண்டுதான் ஓர் அரசுப் பள்ளியின் நிர்வாகத்தையே அந்த ஆண்டில் மேற்கொள்ள வேண்டும். மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்குண்டான வரிகள் போன்றவற்றைச் செலுத்த வேண்டும். குடிநீர் வசதி, கழிவறை பராமரிப்புப் பணிகள், தளவாடப் பொருள்கள் சீரமைத்தல், பள்ளி வளாகத்தைச் செப்பனிடல், வகுப்பறைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வகத்துக்குத் தேவையான பொருள்கள் வாங்குதல், நூலகத்துக்குத் தேவையான புத்தகங்கள் வாங்க வேண்டும். சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, கல்வி வளர்ச்சி நாள் விழா உள்ளிட்ட விழாக்களை நடத்த வேண்டும். இதுமட்டுமன்றி, பள்ளிப் பணிகள் நிமித்தமாகச் செல்லும் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் பயணப் படிகளை வழங்க வேண்டும். விளையாட்டு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம் ஆகியன தொடர்பாக நடைபெறும் போட்டிகள், நிகழ்ச்சிகளில் மாணவர்களை அழைத்துச் செல்லும் பயணச் செலவினங்களை ஏற்க வேண்டும். இந்தச் சிறப்புக் கட்டணத்தின் மூலம் திரட்டப்படும் தொகை மின், தொலைபேசிக் கட்டணங்கள் செலுத்துவதற்கே பணம் சரியாகி விடுகிறது என்கின்றனர் பள்ளித் தலைமை ஆசிரியர்கள். காரணம் பள்ளிகளில் கணினி, ஆய்வகம், அலுவலகம், வகுப்பறைகள் என பலவற்றிக்கும் மின்சாரம் தேவைப்படுவதால் மின்கட்டணமும், இன்டர்நெட் வசதி இருப்பதால் தொலைபேசிக் கட்டணம் அதிகரிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மீதமுள்ள பணத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் திரட்டப்படும் நன்கொடையின் மூலமே செலவினங்களைச் சமாளிப்பதாகவும் கூறுகின்றனர். உதாரணத்துக்கு பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் நாள்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்க ஆண்டுக்கு பல்லாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும். இதுமட்டுமன்றி, பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் பெற்றோர் ஆசிரியர் கழகங்களின் மூலம் ஆள்கள் நியமிக்கப்பட்டு, சம்பளம் வழங்கப்படுகிறது. இந் நிலையில், நன்கொடை வசூல் நிறுத்தப்பட்டுள்ளதால் செலவினங்களைச் சமாளிப்பதில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் திணறும் சூழல் உண்டாகி உள்ளது. அரசு வழங்குவதாக அறிவித்துள்ள சிறப்புக் கட்டணத்தை தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு பல மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் அல்லது பள்ளியை நிர்வகிக்கும் செலவினங்கள் அனைத்தையும் அரசே முழுமையாக ஏற்கும் வகையில் நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கால் நூற்றாண்டுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட இந்தச் சிறப்புக் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க உத்தரவிட வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கோரிக்கை விடப்பட்டும் நடவடிக்கை இல்லை. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் சுமார் 7 ஆயிரம் பள்ளிகளை நிர்வகிக்கவும், பல லட்சம் மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரவும் அரசு செலவழிக்கும் தொகை ரூ.21.40 கோடி. இதில் அரசுப் பள்ளிகளை நிர்வகிக்க ஒதுக்கப்படும் பணம் ஏறக்குறைய அதில் சரிபாதி இருக்கும். அரசின் இலவசத் திட்டங்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடி செலவழிக்கப்படுகிறது. கல்வித் துறைக்கும் அதிக அளவில் ஒதுக்கப்படுவதாகக் கூறினாலும், பள்ளிகளை நிர்வகிக்க அளிக்கப்படும் பணம் குறைவே. கல்வித் துறையின் மீது அரசுக்கு அதிக "அக்கறை' உள்ளதையே இது காட்டுகிறது.
கருத்துக்கள்

பெரும்பாலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெறும் பணக்கொடை பள்ளிக் கட்டமைப்புப் பணிகளுக்கே பயன்படுத்தப்படுகின்றன. இதிலும் ஊழல் செய்வோர் இருக்கத்தான் செய்கினற்னர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால் பலலாயிரக் கணக்கில் கைந்நீட்டம் பெறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசுப் பள்ளிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏன்? நேர்மையான அரசு என்னும் மாயத் தோற்றததை உருவாக்கும் முயற்சியா? மிகச் செல்வந்தர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் கூட மின்விசிறி அமைத்தல், குடிநீர்க் குழாய் அமைத்தல் போன்றவற்றிற்காக ஆண்டுதோறும் நன்கொடை வாங்குகின்றனர். ஆனால் எந்த ஆண்டும் இவ் வசதிகளைச் செய்து தந்ததில்லை. ஒரு வேளை இக் குறைபாடுகள் இருநதால்தான் நன்கொடை பெற இயலும் எனக் கருதுகின்றனவோ! அரசிற்கு நேர்மையும் துணிவும் இருந்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்! கட்டுரையாளர் நந்தகுமார் கூறுவது போல் அரசு பள்ளிகளுக்கும் அரசு நிதியுதவி பள்ளிகளுக்கும் தாராள நிதி ஒதுக்கீட்டை அளிக்கட்டும்!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 4:41:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக