வெள்ளி, 13 நவம்பர், 2020

குவிகம் அளவளாவல்: அமுதசுரபி விக்கிரமன்

அகரமுதல

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில்   இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
 
நிகழ்வில் இணைய
அணுக்கிக் கூட்ட எண் /Zoom  Meeting ID: 89442961626
கடவுக்குறி / Passcode: 260375

பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/89442961626?pwd=N2FLeWZqNWxoamNHRUtkZnVIcWljQT09
இணைப்பைச் சொடுக்கலாம்  

 

 

உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய்

 அகரமுதல

     13 November 2020      No Comment

உலகத் தமிழர்கள் பங்கேற்கும்

உலக அருவினை(சாதனை) நிகழ்வு, துபாய்

அன்பான உலகத் தமிழ் மக்களுக்கு,

கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளையின் அருவினை(சாதனை) நிகழ்வாக, வருகின்ற 2051 ஐப்பசி 28/2020 நவம்பர் 13 ஆம் நாள் துபாய் நேரம் பகல்  2 மணி, (இந்திய நேரம் பகல் 3.30)  முதல் நவம்பர் 14 ஆம் நாள் பகல் 2 மணி  (இந்திய நேரம் பகல் 3.30)  மகுடை(கொரோனா) விழிப்புணர்வுக்காக உலகத் தமிழர்கள் பங்கேற்கும் உலக அருவினை(சாதனை) நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

தொடர்ச்சியாக 24 மணி நேரம்,24 நாடுகளிலிருந்து 24 தலைமையின் கீழ் மற்றும் பல எண்ணற்ற தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு தொடர் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் பேச்சு, கவிதை,  புதிர்வினா(Quiz),  பாடல்,  சிறப்பு சொற்பொழிவுகள்,  பல்சுவை நிகழ்ச்சிகள், நடைபெறவிருக்கின்றன.

 ஆகையால் இந்த நிகழ்விற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

வாய்ப்பைத் தவற விடாதீர்கள்! வாருங்கள்!
உலக அருவினையில் இடம் பிடிப்போம்!

திங்கள், 9 நவம்பர், 2020

காங்கிரசின் படுகொலைகளை அழகிரி நினைத்துப் பார்க்கட்டும்!

 தாய் மின்னிதழ்

காங்கிரசின் படுகொலைகளை அழகிரி நினைத்துப் பார்க்கட்டும்!

பேராயக் கட்சியின் (காங்.) தமிழகத் தலைவரான கே.எசு.அழகிரி அடிப்படை அறிவற்றவரா எனக் கேட்டால், கட்சியை நடத்துவதற்குரிய, திட்டமிடுவதற்குரிய நல்லறிவு படைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அவருடைய கட்சிக்குரிய இலக்கணத்தின் படி இந்தியத் தலைமைக்கு அடிமையாகக் காட்டிக் கொள்வதற்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவராக உள்ளார். மறந்தும் தமிழ், தமிழர் நலன்களில் அவர் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேலிடத்தில் தெரிவிக்க மாட்டார்.

இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் சட்டமன்றத் தீர்மானம் முதலான பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.

இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவர் வழியில் எழுவர் விடுதலைக்கு முயன்று வருகிறார். ஈராண்டாக விடுதலைக்கான கோப்பினை உறங்க வைத்துக் கொண்டிருக்கும் ஆளுநருக்கு நேரிலும் மடல் வழியிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

எழுவரையும் விடுதலை செய்ய வாய்ப்பு வந்த பொழுது அப்போதைய மத்திய ஆட்சியின் கட்டுப்பாட்டினால் மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அந்த நல்வாய்ப்பைத் தவற விட்டார். அதன் கெடுதிதான் இன்று வரை நீடித்துக் கொண்டுள்ளது.

ஆனால், அவர் தலைவராக இந்த தி.மு.க.வின் இந்நாள் தலைவர் மு.க.தாலின் அன்றைய கருத்தை உடும்புப் பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கவில்லை. எந்தச் சூழலில் அப்படிச் சொன்னார் என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. எதிர்க் கட்சித்லைவரின் கடமையைச் செய்யும் வகையில் எழுவர் விடுதலைக்குக் குரல் கொடுத்து வருகிறார்.

அது மட்டுமல்ல. ஆளுநருக்கு இது குறித்து மடலும் அனுப்பியுள்ளார். அதில், “அரசியல் சட்டப் பதவிகளில் இருப்போர் உரிய கால வரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை.

மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல் – தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது – சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

எனவே தமிழக அமைச்சரவையின் 09.09.2018–ஆம் நாளிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து – உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆளுங்கட்சியின் உண்மைக் குரலுக்குச் சார்பாகவே மாந்த நேய அடிப்படையில் மடல் அனுப்பியுள்ளார். இதுதான் தலைவனுக்குரிய அழகு.

ஆனால் கே.எசு.அழகிரி, தமிழ்நாட்டின் முதன்மைக்கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றாததுடன் அதற்கு எதிராகவும் வேண்டுமென்றே அறிக்கை விட்டுள்ளார். அதில், “7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை உறுப்பினராகவும் இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒருவர் இவ்வாறு கூறுவது வியப்பாக உள்ளது. சட்டம் இயற்றும் பொறுப்பில் இருந்த ஒருவருக்கு அடிப்படைச் சட்ட அறிவு கூட இல்லாமல் இருக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறது. வேண்டுமென்றே தவறான நச்சுக் கருத்துகளை மக்களிடம் திணிக்க முயலுகிறார் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

நீதிமன்றத்திற்குத் தண்டிக்கும் அதிகாரம் மட்டும்தான் உள்ளது. ஒரு வழக்கில், நீதிமன்றம் தண்டித்த பின்னர், மேல் முறையீட்டு நீதிமன்றம் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது மாற்றலாம். ஆனால், தண்டனை வழங்கிய நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது.

ஆனால், தண்டிக்கப்பட்டவர்களை மன்னிக்கும் அதிகாரம் சிறைத் துறைக்கு இருக்கிறது. இந்தியாவில் குற்ற வழக்குமுறைச் சட்டம் 432, 433 ஆகியவற்றின் கீழ் இவை செயல்படுகின்றன.

தண்டனைக் குறைப்புப் பிரிவு (remission section) மூலம் அதற்குரிய விதிகளைப் பின்பற்றி அரசின் ஒப்புதலுடன் அவர்கள் தண்டனைவாசிகளை மன்னித்து விடுதலை செய்யலாம். உலகெங்குமே இதுதான் நடைமுறை. இதனைப் பின்பற்றச் சொன்னால் இல்லாததும் பொல்லாததுமான அறிக்கை விடுகிறார்.

எனினும், மத்திய அரசு சட்டங்களின் கீழ்த் தண்டனை பெற்றவர்களின் தண்டனைக் குறைப்பு விவரத்தை மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால், அப்பொழுதும் மத்திய அரசிற்கு மறுக்கும் உரிமையில்லை. தன் கருத்தினைத் தெரிவிக்கலாம் அவ்வளவுதான். இதை ஏற்பதும் மறுப்பதும் மாநில அரசிற்குரியது. இந்த நடைமுறையைப் பின்பற்றியே மேனாள் முதல்வர் செயலலிதா 2015 இல் செயற்பட்டார்.

எனவேதான், மேனாள் முதல்வர் செயலலிதா,

“மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திர ராசா என்கிற சாந்தன், சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அறிவித்தார்.

பிற நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் இதுவரை தண்டனைக் குறைப்பு முறையில் ஆயிரக்கணக்கான தண்டனைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையான நீதிமுறையும் சட்ட முறையும் இவ்வாறு இருக்க கே.எசு.அழகிரியும் அவர் கட்சியினரும் எதிர்ப்பது அரசின் சட்ட நடைமுறைகளில் குறுக்கிடுவதாகும். எனவே, இவர்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது குற்றவாளிகள் கண்ணோட்டத்தில் மட்டுமல்ல. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்திலும்தான். பாதிக்கப்பட்டடவர்களில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவருக்கு ஒரு நீதி. ஒன்றுமில்லாதவருக்கு வேறொரு நீதி என்பது சட்டமல்ல.

எனவே, கொல்லப்பட்டவர் முன்னாள் தலைமையமைச்சராக இருந்த இராசீவு காந்தி என்பதற்காகத் தண்டனைவாசிகளுக்கு எதிராக நீதியை வளைப்பதும் குற்றமாகும்.

குற்றம் புரிந்தவர்களுக்கே முன்விடுதலை என்பது சட்டப்படியான செயலாக உள்ளபொழுது குற்றவாளிகளாகச் சிக்க வைக்கப்பட்டவர்களிடம் மனிதநேயமும் அறவுணர்வும் கொண்டு செய்பட வேண்டுமல்லவா?

காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறையினருமே இவர்களுக்குப் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சான்றாவணங்களின்படித் தண்டனை வழங்கப்பட்டதாகப் பொதுவெளிகளில் தெரிவித்துள்ளனர். அப்பொழுதே விடுதலை செய்து இழப்பீடு கொடுக்க வேண்டியவர்களை இன்னும் அடைத்து வைத்திருப்பது கொடுமையல்லவா?

நீதிக்குக் குரல் கொடுப்பவரின் கட்சியின் வண்டவாளம் என்ன? கட்சித் தலைவர்களுக்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பதவிகள் வழங்குவதுதானே!

போலநாத்து பாண்டே (Bholanath Pandey), தேவேந்திர பாண்டே (Devendra Pandey) ஆகிய இருவரையும் பேராயக்(காங்.)கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியது. தேவேந்திரர் உத்தரப்பிரதேசக் காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார்.

போலாநாத்து இந்திய இளைஞர் காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலராகவும் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து ஆறுமுறை (1991, 1996, 1999, 2004, 2009, 2014) சலேம்பூர் (Salempur) நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் ஆக்கப்பட்டார். அப்படி என்ன இவர்கள் நாட்டு மக்களுக்காக நாட்டிற்காகப் பாடுபட்டார்கள் என்கிறீர்களா?

நெருக்கடிநிலைத் துன்பங்களை வழங்கியதற்காகக் கைது செய்யப்பட்ட இந்திரா காந்தியை விடுதலை செய்யவும் அவர் மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான அனைத்துக் குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி 126 பயணிகள் இருந்த விமானத்தைக் கடத்தினார்கள். இதற்குத்தான் இந்தப் பரிசுகள்.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்; துன்புறுத்தப்பட்டனர்; அவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

ஆனால் குற்றவாளிகளை ஒன்றும் செய்யவில்லை. பெயரளவிற்குச் சிலர் மீது வழக்குகள் போடப்பட்டன. அவர்களில் ஒருவரான சஞ்சன் குமார் (Sajjan Kumar) என்பவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற ஊரக மேம்பாட்டுக் குழு உறுப்பினர் முதலான பரிசுகள் வழங்கப்பெற்றன. (எனினும் பின்னர் அவர் தண்டனை பெற்றார்.)

மூத்த தலைவர் கமல்நாதனுக்கு (Kamal Nath) 1985, 1989, 1991, 1998, 1999, 2004, 2009 ஆம் ஆண்டகளில் மக்களவை உறுப்பினர், 1991 – 1995 இல் சுற்றுச்சூழல் வனங்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 1995 – 1996 இல் நெசவுத் தொழில்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 2001 – 2004 வரை, காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி; மே 23, 2004 இல் இருந்து வணிகம் & தொழில்துறையின் மத்திய அமைச்சர் பதவி; 2009 இல் சாலைப் போக்குவரத்து – நெடுச்சாலைகள் துறை மத்திய அமைச்சர் பதவி; 2018 இல் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் பதவி எனத் தொடர் பரிசுகள் வழங்கப் பெற்றன.

எதற்காக இத்தனைப் பரிசுகள்? சீக்கியர் படுகொலைகளை விசாரித்த நானாவதி ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இவர் முதன்மையானவர். அந்தத் தகுதிக்காகத்தான் இத்தனைப் பதவிப் பரிசுகள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கொலைகாரர்களுக்கும் கற்பழித்தவர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் பயணிகள் விமானத்தைக் கடத்தியவர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்காகக் குற்றம் இழைத்தவர்கள் என்பதால் குற்ற வழக்கின்றியும் குற்ற வழக்குகளில் சிக்கினாலும் விடுவித்தும் பதவிகள் வழங்கும் கட்சியின் மாநிலத் தலைவர் இப்பொழுது அப்பாவி எழுவர் பற்றித் தவறான கருத்துகள் தெரிவிப்பதற்கு வெட்கப்படவில்லையே!

எனவே, தமிழக அரசு சட்டமுறையான செயலைத் திரித்துக் கூறி அரசுப்பணிக்கு இடையூறாக இருக்கும் கே.எசு.அழகிரி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு உள் ஓதுக்கீடு வழங்கியும் வேறு சில நடவடிக்கைகள் மூலமும் திறம்பட முதல்வர் செயல்படுகிறார். புரட்சித்தலைவி வழிச் செயல்படும் இலட்சியத் தலைவர் எடப்பாடியார் என அன்பர்கள் போற்றும் வண்ணம் திகழ்கிறார். எனவே, உள் ஒதுக்கீட்டு ஆணை போன்று எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை வழங்க வேண்டுகிறோம்.

மனித நேயமற்ற தமிழகம் என்ற பெயர் வராமல் காத்திட விடுதலை ஆணை பிறப்பிப்பார் என எதிர்நோக்குகிறோம்.

-இலக்குவனார் திருவள்ளுவன்

08.11.2020 6:30 P.M