வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஏழு தமிழர் விடுதலை : அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை!

அகரமுதல

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் அறிக்கை!
இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக 28 ஆண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து ஏற்க மறுப்பதாகச் செய்திகள் வருகின்றன.
எழுத்து வடிவில் இல்லையென்றாலும், வாய் மொழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் புரோகித்து தன்னுடைய இந்த முடிவைத் தெரிவித்து விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆளுநர் புரோகித்தின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டக்கவிழ்ப்பு மட்டுமின்றி ஆரியத்துவ இந்தியாவில் தமிழர்களுக்குச் சட்டத்தின் ஆட்சி மறுக்கப்படுகிறது என்பதையே காட்டுகிறது.
உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் கடந்த 2015 திசம்பர் 2 அன்று, அளித்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசு தண்டனைக் குறைப்பு குறித்து முடிவு செய்வதற்கும், அதனை ஆளுநர் வழியாக  செயல்படுத்துவதற்கும் எந்தச் சட்டத்தடையும் இல்லை என அறிவித்தது. அதனடிப்படையிலேயே, தமிழ்நாடு அமைச்சரவை ஏழு தமிழருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் முடிவு செய்தது.
அரசமைப்பு சட்ட உறுப்பு 161-இன் கீழ்க் கூறப்படும் தண்டனைக் குறைப்பு அதிகாரம், ஆளுநரின் விருப்பார்ந்த அதிகாரம் அல்ல – மாநில அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம், அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆளுநர்.
அரசமைப்பு உறுப்பு 163 (1) – ஆளுநருக்கு துணை செய்யவும், ஆலோசனை வழங்கவும் மாநிலத்தில் ஓர் அமைச்சரவை இருக்கும் என்று கூறுகிறது. இதன் பொருள் என்ன என்பது குறித்து சிக்கல்கள் எழுந்தபோது, ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடக் கூறியிருக்கிறது.
குறிப்பாக, சாம்சர் சிங்கு – எதிர் – பஞ்சாபு மாநில அரசு (Shamsher Singh vs State Of Punjab) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.என்.இரே தலைமையில் அமைந்த ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம், பல கோணங்களில் ஆய்வு செய்து தெளிவுபடக் கூறியிருக்கிறது (1974 AIR 2192).
அரசமைப்புச் சட்டம் சார்ந்த விவாதங்களில் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டப்படும் இத்தீர்ப்பு, “இந்திய அரசமைப்புச் சட்டமானது மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை யும், இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநரும் இணை அதிகார மையங்களாகச் செயல்பட அனுமதிக்கவில்லை. பிரித்தானிய அரசமைப்பில் மகாராணிக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்புநிலை(கௌரவ)த் தகுநிலைதான் ஒன்றிய அரசைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவருக்கும், மாநில அரசாங்கத்தைப் பொறுத்த அளவில் ஆளுநருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அரசாங்கம் என்பது சாரத்தில் மாநில அமைச்சரவையைத்தான் குறிக்கும். ஆளுநர் என்பவர் அமைச்சரவை யின் சுருக்கெழுத்து வடிவம். மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். குறிப்பாக, நிருவாகம் தொடர்பான செய்திகளில் குடியரசுத் தலைவருக்கோ ஆளுநருக்கோ தனிப்பட்ட விருப்பார்ந்த அதிகாரம் எதுவுமில்லை” என்று உறுதிபடக் கூறுகிறது.
அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) – ஆளுநருக்கு ஆலோசனை வழங்க ஓர் அமைச்சரவை இருக்கும் என்று கூறும்போது, (வரைவு அரசமைப்பில் 143) வரைவுக்குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் இதைத் தெளிவுபடக் கூறுகிறார். “ஆளுநரின் விருப்பார்ந்த அதிகாரம் (Discretionary power) என்பது தனிநபர் என்ற வகையில் ஆளுநரின் அதிகாரத்தைக் குறிப்பதல்ல. மாறாக, மாநில அமைச்சரவையின் முடிவைக் குறிப்பது ஆகும்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
யு.என். இராவு – எதிர் – இந்திரா காந்தி என்ற வழக்கிலும், இந்த நிலை உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 
இதற்கு முன்னால், சஞ்சீவி நாயுடு – எதிர் – சென்னை மாநில அரசு என்ற வழக்கிலும் “ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்” என்ற நிலை உறுதியாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
நளினியின் கருணை மனுவை 1999இல் தமிழ்நாடு ஆளுநராக இருந்த பாத்திமா பீவி, தமிழ்நாடு அமைச்சரவையின் கருத்துக் கேட்காமல் தன்னிச்சையாக மறுத்தபோது நளினி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அவ்வழக்கில் 25.11.1999 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1)-இன்படி மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் படியே செயல்பட வேண்டும். தன்னிச்சையாகச் செயல்படுவதற்கு அவருக்கு அதிகாரமில்லை” என்று தெளிவுற விளக்கமளித்து, “ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்பதிகாரம் ஏதுமில்லை” எனத் தீர்ப்புரைத்தது.
இவ்வாறான சட்ட நிலைமைகள் தெளிவாக இருக்கும்போது, ஆளுநர் புரோகித்து 2018 செப்டம்பர் 9 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அமைச்சரவை முடிவை ஏற்க மறுத்து, ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் ஆணையில் கையொப்பமிட முடியாது என்று கூறுவது பச்சையான சட்டப் படுகொலையாகும்.
காவிரி, முல்லைப்பெரியாறு, மீனவர் வாழ்வுரிமை ஆகிய எந்தச் சிக்கலாக இருந்தாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் செயல்படும் சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் செயல்படுவதில்லை என்ற இன ஒதுக்கலை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஏழு தமிழர் விடுதலை தொடர்பாகவும் தமிழர்களுக்கு எதிரான இந்த இன ஒதுக்கல் செயல்படுகிறது என்பதையே ஆளுநர் புரோகித்தின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்நாடு அரசு ஆளுநரின் இந்த அடாவடிச் செயல், தமிழர்களின் அடிப்படை உரிமைக்கும்- தங்கள் அமைச்சரவையின் தன்மானத்திற்கும் விடப்பட்ட அறைகூவல் என்று புரிந்து கொண்டு, உரிய அரசியல் அழுத்தம் கொடுத்துப் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயசு, செயக்குமார்,அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர் விடுதலையை விரைந்து செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன்.  
கி. வேங்கடராமன்      
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

வியாழன், 17 அக்டோபர், 2019

இலக்கியத் தேடல், பிரான்சு

ஐப்பசி 03, 2050 ஞாயிறு 20.10.2019
பிற்பகல் 3.00 மணி

இலக்கியத் தேடல் 14 ஆம் கூட்டம்


ஆராய்ச்சி உரைத் தலைப்பு : சொல்லும் பொருளும்
உரையாளர் :

தமிழக அரசு விருதாளர் பெஞ்சமின் இலெபோ


குவிகம் இல்லம் – அளவளாவல் : கல்யாண மாலை நிருவாகிகள்



ஐப்பசி 03, 2050 ஞாயிறு 20.10.2019

மாலை 5.00 மணி

குவிகம் இல்லம்
6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலை,
தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல் : கல்யாண மாலை பொறுப்பாளர்கள்

திரு மோகன்

திருமதி மீரா நாகராசன்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்


ஐப்பசி 02, 2050 சனிக்கிழமை 19.10.2019
சிரீராம் குழும அலுவலகம், மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம், மயிலாப்பூர் சென்னை 600 004 , (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)
சிறப்புரை : வ.உ.சி.யும் நானும்
இரெங்கையா முருகன்
நூலகர் – பண்பாட்டு ஆய்வாளர்
அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205

கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

அகரமுதல

செங்கற்பட்டில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா
   செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் புது நிருமலா விழா அரங்கில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
   இவ்விழாவிற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் சேம்சு தலைமை தாங்கினார். பெருமன்றத்தின் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா.வீரமணி முன்னிலை வகித்தார்.  கவிஞர் சீனி.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். 
   சா.கா.பாரதிராசா எழுதிய ‘சருகின் சத்தம்’ நூலை மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட்டார். பாவரசு பாரதி சுகுமாரன் முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.
  ‘சிறகுகள் வரையும் வானம்’ ஐக்கூ கவிதைத் தொகுப்பு நூலைக் கவிஞரும் இதழாளருமான மு.முருகேசு வெளியிட்டார். பாவையர் மலர் ஆசிரியர் முனைவர் வான்மதி பெற்றுக்கொண்டார்.
  நூல் குறித்துக் கவிஞர் அமுதகீதன், சமூக சேவகி பரஞ்சோதிகவிசேகர், வழக்கறிஞர் அசோக்கு ஆகியோர் உரையாடினர்.
  நிகழ்ச்சியைக் கவிஞர் யாழன் தொகுத்து வழங்கினார். சா.கா.பாரதி ராஜா ஏற்புரையாற்றினார். கவிஞர் ப.குணா நன்றியுரை வழங்கினார்.
  நிகழ்வில் செங்கற்பட்டைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள், தமிழ் ஆர்வலர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொணடனர். நிகழ்வில் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திலுள்ள 15 பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஏடுகளை மின்பொறியாளர் சங்கர் வழங்கினார்.. 

புதன், 16 அக்டோபர், 2019

நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

நவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்!
உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம்!
ஒவ்வோர் ஆண்டும் செப்.14 இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. “இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப். 14 அன்று ஏற்றது. அதற்காக,  இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக இந்நாள்” என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் ஆட்சி மொழித் துறை இவ்விழாவினை நடத்துவதால் இவ்வாறு கூறப்படுகிறது. எனினும் இந்தியில் கலை, இலக்கியம், கவிதை, பேச்சுத்திறன், படைப்புத்திறன் முதலியவற்றை ஊக்கப்படுத்தவே ‘இந்தி நாள்’ நடை பெறுகிறது.. 

இந்தியில் செயல்பாடுகளை மேற்கொள்வோருக்கு ஆண்டுதோறும் இந்தி விருது வழங்கப்படுகிறது. முதன்முதலாக, 1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் நெருக்கடிக்கால ஆட்சியின்பொழுதுதான் இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும் என அரசு அறிவித்தது.  இத்துறையே 1975 சூனில்தான் உள்துறையில் கீழான ஒரு துறையாக உருவாக்கப்பட்டது. அவ்வாறிருக்க அதற்கு முன்னரே இந்தி நாள் குறித்து அரசாணை இருப்பதாகக் கூறுவது தவறாகப் பரப்பப்படும் செய்தியாகும்.
தேசிய மொழி பரப்புரைக்கழகத்தின் (Rashtrabhasha Prachar Samiti) வேண்டுகோளுக்கிணங்கவே செப்.14 இந்தி மொழி நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்தியை மத்திய அரசின் மொழியாகவும் நாட்டின் ஒரே மொழியாகவும் ஆக்க வேண்டும் எனப் பாடுபட்ட பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா (Beohar Rajendra Simha) பிறந்த  நாளைத்தான் இந்தி நாளாகக் கொண்டாடுகின்றனர் என்கின்றனர். அவரின் ஐம்பது ஆவது பிறந்த நாள் இந்தி நாள் ஆக அறிவிக்கப்பட்டதாக இந்தி நாள் குறிப்பு தெரிவிக்கிறது. இவர் பிறந்த நாள் 15.06.1926. எனவே, இது தவறாகும். மேலும் இவரது பிறந்த நாள் இந்தி நாளாக அறிவிக்கப்பட்டதாகப் பரப்பப்பட்டதால் 14/09 இவர் பிறந்த நாள் எனச் சிலர் எழுதி வருகின்றனர். மத்திய ஆளுங்கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த இந்தி வெறியர்கள் என அழைக்கப்பட்ட  பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா, அசாரி பிரசாத்து திவேதி(Hazari Prasad Dwivedi), காகா கலேல்கர்(Kaka Kalelkar), மைதிலி சரண் குப்தா (Maithili Sharan Gupt), சேத்து கோவிந்த தாசு(Seth Govind Das) ஆகியோர் முயற்சியால் இந்தி நாள் அறிவிக்கப்பட்டது. பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா இந்திய அரசியலமைப்பு யாப்பில் விளக்கப்படங்கள் வரைந்த ஓவியக் கலைஞர். எனவே, தங்கள் கோரிக்கைக்கிணங்க இந்தியை அலுவல் மொழியாக அறிவிக்க இருப்பதை அறிந்து அதனை ஏற்று அறிவிக்கும் முன்னரே இந்தி நாளை அறிவித்துத் தேசிய மொழி பரப்புரைக்கழகத்தின் சார்பில் கொண்டாடி உள்ளார் என்பதுதான் உண்மையாக இருக்கும்.
செம்மொழி என்று ஏற்கப்படாமலேயே சமசுகிருதத்தைச் செம்மொழி எனச் சொல்லி நிதியை வாரி வழங்கிய ஏமாற்றுவேலைபோல் இந்தி நாளிலும் குளறுபடி இருப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இந்தியை அலுவல் மொழியாக ஏற்கப்பட்ட செப்.14 இந்தி நாள் என 1949 இல் அறிவிக்கப்பட்டதாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய அரசியல் யாப்பு, அரசியலமைப்பு வரையறை மன்றத்தால் ஏற்கப்பட்டது 1949 நவம்பர் 26இல்தான். நடைமுறைக்கு வந்தது 1959 சனவரி 26தான்.
இந்திய நிலப்பகுதியில் வாழும் இன மக்களின் தாய்மொழிகள் யாவுமே தேசிய மொழிகள்தாம். இந்தி அரசியல் யாப்பின் 8 ஆவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளுமே முதன்மைத் தேசிய மொழிகளாகும். அவ்வாறிருக்க இந்தியை மட்டும் தேசிய மொழி என்று சொல்வது தவறாகும். அவ்வாறு சொல்லிச் சொல்லித்தான் பிற மொழித் தேசிய இனத்தவரை இந்தியை ஏற்கச்செய்கிறது மத்திய அரசு.
இந்தி நாள் தவிர, 2006 முதல் ஒவ்வோர் ஆண்டும் சனவரி 10, உலக இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. உலக இந்தி மொழிக் கருத்தரங்கம் நடைபெற்ற நாளைத்தான் உலக இந்தி மொழி நாள் எனக் கொண்டாடுகின்றனர்.
இந்தி மொழி பேசுவோர் இந்தி நாளைக் கொண்டாடுவதிலும் அதற்காகச் செலவிடுவதிலும் தவறில்லை. ஆனால் பல தேசியமொழிகள் உள்ள நாட்டில் ஒரு மொழிக்கு  மட்டும் மத்திய அரசு செலவிடுவது முறையல்ல. இச் சூழலில் நாம் மத்திய அரசை நடுநிலைமையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்துவதுடன் தமிழ் நாள் அறிவித்துக் கொண்டாடச் செய்ய வேண்டும்.
நாம் தமிழ் நாள், உலகத் தமிழ் நாள் என இரண்டு நாளைக் கொண்டாடாமல் ‘உலகத்தமிழ் மொழி நாள்’ என ஒன்றைக் கொண்டாடினாலே போதுமானது. தாய்மொழி நாளன்று தமிழ்நாளைக் கொண்டாடலாம்.
அவ்வாறாயின் நாம் எந்த நாளை உலகத் தமிழ் நாளாகக் கொண்டாடுவது? இந்தி மொழியினர் இந்திப்பரப்புரைக்காகப் பாடுபட்டவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகக் கூறுகின்றனர் அல்லவா? அதுபோல் நாமும் தமிழுக்காகப் பரப்புரை மேற்கொண்ட தமிழறிஞர் ஒருவர் பிறந்த நாளை உலகத் தமிழ் நாள் என அறிவிக்க வேண்டும்.
நவம்பர் 17 ஐ நாம் உலகத்தமிழ் நாளாகக் கொண்டாட வேண்டும். ஏன் இந்த நாள்?
உலகிலேய மொழிக்காக இரு முறை சிறைசென்ற முதல் தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த நாள் இந்நாள். தமிழ்ப்போராளி இலக்குவனார் உலகில் கிடைத்துள்ள முதல் இலக்கண இலக்கிய நூலான தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்; படிக்கும் காலத்திலிருந்தே விடுமுறை நாள்களில் தமிழ்ப் பரப்புரை மேற்கொண்டவர்; மாலைநேரங்களிலும் விடுமுறை நாள்களிலும், அஞ்சல் வழியிலும் தமிழைக் கற்பித்தவர்; புலவர்கள் இலக்கியங்களாக இருந்த தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலானவற்றை மக்கள் இலக்கியங்களாக மாற்றி மக்களிடையே கொண்டு சேர்த்தவர்; இதழ்கள் மூலமாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் விழாக்கள் நடத்தியும் தமிழ்க்காப்பு உணர்வை மக்களிடையே விதைத்துப் பரப்பியவர்; தமிழ்க்காப்புக்கழகம் முதலான பல்வேறு அமைப்புகள் மூலம் தமிழ் என்றும் திகழப் போராடியவர்; தமிழ்ப் பயிற்றுமொழிக்காகத் தமிழ் உரிமைப் பெருநடைப் பயணம் மேற்கொள்கிறார் எனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டுச் சிறை வாழ்க்கை மேற்கொண்டவர். அறிஞர்கள் பலரும் இலக்குவனாரைத் தமிழ்த்தாயின் மறுவடிவம் என்றும் தமிழ்த்தாய் என்றும் போற்றுகின்றனர். இந்தியைப் பரப்பியவர் பிறந்த நாளில் இந்தி நாள் கொண்டாடும் பொழுது தமிழுக்காக வாழ்ந்து ‘தமிழ்த்தாய்’ எனப் போற்றப்படும் பேராசிரியர் சி.இலக்குவனாரின் பிறந்த நாளை உலகத் தமிழ் நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும்.
மறைமலையடிகள் நகரில் உள்ள திருவள்ளுவர் மன்றம், மதுரை தமிழ்க்காப்புக்கழகம், எழுத்தாளர் கழகம் முதலான தமிழ் அமைப்புகள் பலவும் இலக்குவனார் பிறந்த நாளைத் ‘தமிழ் எழுச்சி நாளாகக்’ கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. தமிழ் எழுச்சிக்காகப் பேராசிரியர் இலக்குவனார் பிறந்த நாளான நவம்பர் 17ஐத் தமிழக அரசு உலகத்தமிழ் நாள் என அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தாலே தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலகத் தமிழ் நாளைக் கொண்டாடுவார்கள்.
தமிழக அரசு மத்திய அரசையும் பிற மாநில அரசுகளையும் வலியுறுத்தி உலகத்தமிழ்நாள் கொண்டாடச் செய்ய வேண்டும். பன்னாட்டு மன்றத்தையும்  இதனை ஏற்று அறிவிக்கச் செய்ய வேண்டும். உலக நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில்  – குறிப்பாகத் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள தூதரகங்களில்- ஆண்டுதோறும் உலகத் தமிழ்நாள் கொண்டாடச் செய்ய வேண்டும். மத்திய அரசு ஏற்குமா என்றால் எதற்கு இருக்கின்றனர் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?
தமிழ் என்பது மொழியை மட்டும் குறிப்பதில்லை. இலக்கியம், பண்பாடு, கலை, நாகரிகம், வீரம் முதலான பலவற்றையும் குறிப்பது. எனவே, உலகத் தமிழ் நாள் மூலம் தமிழர்கள் எழுச்சி பெறவும் தமிழ் அறிவியல் மொழியாகவும்  பயன்பாட்டு மொழியாகும் திகழ்ந்து எல்லா நிலையிலும் தமிழ், தான் இழந்த இடத்தைப் பெறவும் வழி வகுக்கும். இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் உலகத் தொடர்பு மொழியாகவும் தமிழ் திகழும் காலத்தை விரைவில் கொண்டு வரும்.
அரசு அறிவிக்கும் வரை காத்திராமல் உலகெங்கும் உலகத் தமிழ்நாள் கொண்டாட ஏற்பாடு செய்வோம்! உலகத் தமிழ் நாள் கொண்டாடித் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல
பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா
பியோஃகர் இராசேந்திர சிம்ஃகா