சனி, 18 மே, 2019

உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம் – இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


உலக வரலாற்றில் நீங்காக் கறை படிந்த வாரம்! இனப்படுகொலைகளில் இறந்தவர்களுக்கான 

நினைவேந்தல்!


மே 18 ஆம் நாளும் இவ்வாரமும் மனித நேயர்களால் மறக்க முடியாத துயர நாள்!
தாய் மண்ணில் உரிமையுடன் வாழ எண்ணியவர்களுக்கு ஆளும் கொடுங்கோல் அரசும் அதற்குத் துணை நின்ற பன்னாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களும் கொடுமையான முறையில் மரணத்தைப் பரிசாகத் தந்த வாரம்!
1,70,000 ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு, பல்லாயிரவர்கள் உடலுறுப்பு இழப்பு, உடைமைகள் இழப்பு, இருக்க இடமோ உண்ண உணவோ இன்றித் துன்பக்கடலில் மூழ்கடிப்பு!
இக்கொடுமைகள் அந்த வாரத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து சிறை முகாம்களில் அடைப்பு!
காணாமல் ஆக்கடிக்கப்படுவோர் தொடரும் இன்னல்!
தமிழர்களிடையேயும் சுற்றியும் சிங்களர்களைக் குடியமர்த்தித் தமிழ்த்தேசியம் சிதைப்பு!
அண்மையில் தமிழ் நிலத்தின் கிறித்துவ ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு நேரங்களில் தொடர் குண்டு வெடிப்பு மூலம் இன அழிப்பு அரங்கேறியது போல் தொடரும் இனஅழிப்புகள்!
கட்டாயக் கருத்தடை மூலம் இன அழிப்புகள்!
என அடுக்கிக் கொண்டே போகும் வண்ணம் இன அழிப்புத் துயரம் தொடர்கிறது.
இதற்குக் காரணம் இன அழிப்புக் கொலையாளிகளும் கூட்டாளிகளும் தண்டிக்கப்படாமைதான்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். இல்லையேல் இன அழிப்பு தொடரும் என்பதே நிலைமை
இன்றைய நாள் என்பதில் பார்த்த இணையத் தளங்களில் மே 18 (2009)என்பது இலங்கை உள்ளாட்டுப் போர் முடிவிற்கு வந்ததாகவும் விடுதலைப்புலிகள் இலங்கை அரசால் தோற்கடிக்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது. சிலவற்றில் தமிழர் படுகொலை எனக் குறிக்கப்படவில்லை. குறைவான(40,000) எண்ணிக்கையில் தமிழர்கள் போரில் இறந்தனர் என்ற குறிப்பு உள்ளது.  இனப்படுகொலைத் துயர நாள் என்பது நாம் வாழும் பொழுதே வரலாற்றில் இடம் பெறவில்லை எனில் பின்னவர் எங்ஙனம் அறிவர்? இன்றைய தலைமுறையினர் துயர் துடைக்க எங்ஙனம் எழுவர்? முயல்வர்? வெல்வர்?
 எனவே, தமிழ் மக்களே!
மனித நேயர்களே!
நினைவேந்தல் கடைப்பிடியுங்கள்! அத்துடன் உண்மை வரலாற்றை முடிந்த இடங்களில் பதியுங்கள்!
தமிழர் உரிமைகளும் உயிர்களும் பறிக்கப்படும் வரலாற்றுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதுங்கள்!
இதுவே களத்திலும் நிலத்திலும் மடிந்தவர்களுக்காக நாம் செய்யும் நினைவேந்தல் ஆகும்.
பல்வேறு காலக்கட்டங்களிலும் கூட்டு இனப்படுகொலை வாரத்திலும் உயிர் பறிக்கப்பட்ட ஈகையர்களே!
அவர்களுக்காக உயிர்க்கொடை அளித்த ஈகியர்களே!
உங்கள் உணர்வு எங்களை வழி நடத்தும்!
காலம் கனியும்!
தமிழ் ஈழம் மலரும்!
வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல



மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி

அகரமுதல


புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019

பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்:

இயக்குநர்ஆசியவியல் நிறுவனம் 
 [ Dr.G.John Samuel,
Founder Director and Secretary
INSTITUTE OF ASIAN STUDIES]
சோழிங்கநல்லூர் (அஞ்சல்), செம்மஞ்சேரிசென்னை  600 119
மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com
தொலைபேசி:   24500831, 24501851 , பேசி:           9840526834
இணையத்தளம்:  www.instituteofasianstudies.com

 பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்
தலைவர், பன்னாட்டுத் திருக்குறள் நிறுவம்,
மொரிசியசு

முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப.
தலைவர்,
பன்னாட்டு அமைதிக்கான திருக்குறள் நிறுவம்
சென்னை

‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் திறனாய்வு – பேரா.சுப.வீ.

அகரமுதல


அன்புடையீர்,                                                                     
வணக்கம்.  எங்கள் பேரவையின் சார்பில், வரும் 
வைகாசி 05, 2050 ஞாயிற்றுக் கிழமை (19.05.2019) மாலை 6.30 மணிக்குச்,
சென்னை, இராயப்பேட்டை, லாயிட்சு சாலை,  இந்திய அலுவலர் சங்கம் (Indian Officers’Association)கலையரங்கில், பேரறிஞர் அண்ணா பற்றிய மாபெரும் தமிழ்க்  கனவு’  என்னும் நூல்  திறனாய்வு அரங்கம்  நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தலைமையில், பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் 
நூலைத் திறனாய்வு செய்கின்றார்.
அன்புடன், 
துரை.செ.கண்ணன்
ஊடகத்துறைப் பொறுப்பாளர்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை


வியாழன், 16 மே, 2019

அளவளாவல் : உமா இராசு

அகரமுதல

வைகாசி 05, 2050 / 19.05.2019

மாலை 5.300

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

அளவளாவல்: திருமதி உமா இராசு

முள்ளிவாய்க்கால் துயர 10 ஆம் ஆண்டு நினைவு நாள் – அரசவைத் தொடக்க 3 ஆம் ஆண்டு

வைகாசி 03, 2050 / மே 17, 2019

முற்பகல் 9.00 – நண்பகல் 12.00

பிலடெல்பியா


ஞாயிறு, 12 மே, 2019

பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது – இலக்குவனார் திருவள்ளுவன், மாலைமுரசு

அகரமுதல

பள்ளிக் கல்வித் துறை
தவணை முறையில் தமிழை அழிக்கிறது
தமிழ் அறிஞர்கள் கண்டனம்
சென்னை, மே 11
பள்ளிக் கல்வித் துறை தவணை முறையில் தமிழை அழிக்கிறது என்று தமிழ் அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்க்காப்புக் கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாணாக்கர்களுக்குத் தரமான தமிழறிவை ஊட்டித் தமிழ்ப்பற்றை வளர்க்க வேண்டியது கல்வித்துறையின் கடமை. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள கல்வித்துறையோ தமிழைத் தவணை முறையில் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மேனிலைப்பள்ளிகளில் – 11, 12 ஆம் வகுப்புகளில் – இதுவரை தமிழுக்கு இருந்த இரு தாள் தேர்வு முறையை நீக்கி ஒற்றைத் தாளாக்கியது. இந்த ஆண்டு இதே முறையை 9, 10 ஆம் வகுப்பு மாணகா்கர்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறதாம்.
அதுமட்டுமல்ல! தமிழில் ஒரு தாளாவது இருந்ததையும் தந்திரமாக நீக்கக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இனி, பகுதி ஒன்றில் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் ஏதேனும் ஒரு மொழிப்பாடத்தை மட்டும் படித்துத் தேர்வு எழுதினால் போதுமாம். இதனால் ஆங்கில மோகம் உள்ள மக்களும் பிற மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்ட மக்களும் தங்கள் பிள்ளைகள் தமிழை விலக்கி விட்டு ஆங்கிலம் அல்லது தத்தம் தாய் மொழியைப்படிக்கவே விரும்புவர். பெயரளவிற்குத் தமிழும் பாடமுறையில் இருந்தாலும் விருப்பத் தெரிவு என்ற முறையில் அதனை நீக்கப் பள்ளிக் கல்வித்துறையினர் சதி செய்கின்றனர்.
தமிழன்பர்கள்
முதல் பிரிவில் ஆங்கிலத்தைத் தெரிவு செய்து விட்டு நான்காம் பிரிவில் பிற மொழியினர் தங்கள் தாய்மொழிப்பாடத்தைத் தெரிவு செய்யலாம். எனவே, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழைத் தவிரப் பிற மொழிகளைப் படிக்கலாம் எனக் கல்வித்துறை வழி வகுக்கிறது.
இவ்வாறு ஒரு மொழிப்பாடத்தை அகற்றுவதன் மூலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவதாகவும் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் உட்பட தேர்வுத்தாள் குறைவதால் தேர்வு வினாத்தாள் அச்சடிப்புச் செலவு, விடைத்தாள் செலவு, தேர்வுத்தாள் திருத்துவதற்கான ஊதியம் முதலான பல நூறாயிரம் உரூபாய் மிச்சம் ஆவதாகவும் கல்வித்துறை தெரிவிக்கிறது. அப்படியானால் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வு முறையை எடுத்து விட்டால் இன்னும் செலவு குறையுமே. பள்ளிகளையே இழுத்து மூடிவிட்டால், சிறுவர் சிறுமியருக்கு மன அழுத்தம் என்பதே இல்லாமல் போகுமே.  மன அழுத்தம் ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பதாகக் கூறித் தமிழ்த்தாளுக்கு வேட்டு வைக்கும் கல்வித்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி முறையை மாற்ற வேண்டும் என இல.கணேசன் பேசியுள்ளார். இந்தியா முழுவதும் இத்தகைய ஒரே கல்விமுறையை வலியுறுத்தி முன்னரே பாசக அறிவித்துள்ளது. அப்படியானால் தமிழ் ஒழிப்புப் பின்னணியில் பா.ச.க. இருக்கிறதோ என்ற ஐயப்பாடு வருகிறது. அதற்குத் தமிழக அரசும் இணங்கி இவ்வாறு செயல்படத் திட்டம் தீட்டுகிறதோ என்று எண்ண வேண்டி உள்ளது.
தேர்தல் காலத்தில் பெரும்பான்மை வலியமையுடைய அரசும் இடைக்கால அரசுதான். ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என விரும்புபவர்களும் அண்மைத் தேர்தல் முடிவிற்குப் பின்னர் ஆட்சி, கலையலாம் என எண்ணுகின்றனர்.
இத்தகைய நிலையற்ற அரசு முடிவெடுக்கும் வகையில் கல்வித்துறைபரிந்துரைகளை அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. முதல்வரும் கல்வி யமைச்சரும் தலையிட்டு உடனடியாக இத்தகைய முயற்சிகளுக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.
 தமிழைத் தவணை முறையில் ஒழிக்கும் கல்வித்துறைக்கு எதிராகக் கல்வியாளர்களும் தமிழறிஞர்களும் தமிழன்பர்களும் பெற்றோர்களும் ஒன்று திரண்டு தமிழைக் காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டு கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் எழுச்சிப் பேரவைத் தலைவர் இறையரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ் நாட்டின் கல்வியிலே தமிழே இல்லை என்று அழிவு செய்து வருகிறார்கள்.
மழலைக் கல்வியில் தமிழக அரசே அங்கன்வாடி முதலே ஆங்கிலத்தைக் கொண்டு வருகிறது.
பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பிற்கு மொழிப்பாடமே ஒன்று மட்டும்தான்.ஆங்கலம் அ்லது தமிழ் தேர்வு செய்தால் போதும். பள்ளிச்சான்றிதழ்களில் முதல் மொழி தமிழ் என்றில்லாமல் வெறுமையாக மொழி – ஆங்கிலத்தில் லாங்குவேசு – என்று மட்டுமே குறிப்பிட்டுப் பள்ளிச்சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் வழங்கியுள்ளார்கள்.
ஆகவே, ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்கப்படும். அது கட்டாயம் என்பதான நிலையில் உள்ளது. முதலில் குறிப்பிடப்பட்ட மொழி என்பது கட்டாயமில்லை. அதனைத் தாய்மொழி என்று சொல்லி வந்தார்கள். ஆனால், பிறகு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று என்பதாகச் சொல்லி விட்டார்கள். ஏறத்தாழ ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதிலிருந்து இதே நிலைமைதான் உள்ளது.
பள்ளிப் படிப்பிலிருந்து பல்கலைக்கழகப் படிப்பு வரை இரண்டாம் மொழி ஆங்கிலம் கட்டாயம். ஆனால், முதல் மொழி முதலில் குறிப்பிடப்படுகிற  மொழி; அது இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று. தமிழ் கட்டாயம் இல்லை என்ற நிலையைத் தமிழக அவைத்தலைவராக இருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யிடம் 1972இல் நான் கூறினேன். “அப்படியா எனக்குத் தெரியாதே பல்கலைக்கழக ஆளவையில் நான் சொல்கிறேன்” என்றார் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.  அந்நிலை இன்று வரை மாறவில்லை.
பல்கலைக்கழகங்களில்கூடச் சான்றிதழில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்படுகின்றன. ஆனால் பள்ளிக் கல்வித் துறையில் இப்பொழுது மதிப்பெண் சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வருகின்றன.
விரைவில் தமிழ்ப்பாடங்கள் அறவே தேவையில்லை என்பர்.
ஆங்கிலத்தை எதரிப்பவர்களில் பலர் தமிழ் ஆதரவாளர்கள் இல்லை. இந்தி, சமற்கிருத ஆதரவாளர்கள். திராவிட எதிர்ப்பாளர்களில் பலர் தமிழின ஆதரவாளர்கள் இல்லை.ஆரிய ஆதரவாளர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைரமுத்து அறிக்கை
தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திரவீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று கவிஞர் வைரமுத்து கூறினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தெரிவு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக்கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு கண்டிக்கிறேன்.
தொழிற் கல்வியிலேயே தமிழுக்கு இடம் வேண்டும் என்று போராடுகிற நாம் பள்ளிக் கலவியிலும் தமிழை இழந்துவிட வேண்டுமா? இந்தச் செய்தி கேட்ட நேரத்திலிருந்து என் இரத்த அழுத்தம் கூடியிருப்பதாய் என் இதயத் துடிப்பு உணர்த்துகிறது. வேண்டா இந்த நச்சுச்செடி முள்ளாவதற்கு முன்பே முறித்து விடுங்கள்
தமிழ் அறிஞர்
தமிழில் இரண்டாம் தாள் வேண்டா என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு மாணவனின் கற்பனையும் படைப்பாற்றலும் மொழித் திறனும் இரண்டாம்தாளில்தான் வினைப்படுகின்றன.
 கண்களில் ஒன்று போதும் என்று ஒன்றைக்களைந்து விடுவீர்களா? பள்ளிக்கல்வியில் தமிழைத் தழைக்க வைப்பற்கு மாற்றாக அதன்அடிவேரில்  அமிலம் ஊற்றுவதை அனுமதிக்க முடியாது.
தமிழக அரசு இந்தப் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். அதை வற்புறுத்தித் தமிழ் அறிஞர்களையும் ஆர்வலர்களையும் அமைப்புகளையும் திரட்டி முதலமைச்சரை முதன் முதலாய்ச் சந்திக்க விழைகிறேன். தீர்வு கிட்டாவிடில் அக்கினி நட்சத்திர வீதிகளில் நாங்கள் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப் பாடவும் தயங்க மாட்டோம்
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமுரசு, அனைத்துப்பதிப்புகள், 11.05.2019