சனி, 30 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை-தொடர்ச்சி)

அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு

2008-09 காலத்தில் ஈழம் தந்த கவலையும் அதிர்ச்சியும் போல் இன்றைய மணிப்பூர் செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்றன.

இலங்கையில் நடந்தது தமிழினவழிப்பு என்றால் மணிப்பூரில் நடப்பது குக்கி இனவழிப்பு. தமிழினவழிப்புக்கு சிங்களப் பேரினவாத மனநிலை துணை நின்றது போல், குக்கி இனவழிப்புக்கு மெய்த்தி பேரினவாத மனநிலை துணை நிற்கிறது.

தமிழினவழிப்பை நிகழ்த்திய முதல் குற்றவாளி சிங்கள அரசே! குக்கி இனவழிப்பை நிகழ்த்தி வரும் முதல் குற்றவாளி இந்திய அரசே!

மணிப்பூர் செய்திகள் பாசக ஊதுகுழல்களால் மறைக்கவும் திரிக்கவும் படுகின்றன. இந்த மறைப்பையும் திரிப்பையும் மீறி, மணிப்பூர் பற்றி உலக அளவிலும், இந்தியத் துணைக்கண்ட அளவிலும், தமிழ்த் தேச அளவிலும் மக்களிடையே பரவியுள்ள நியாயமான கவலையும் அக்கறையும் மணிப்பூருக்கு அமைதியும் நீதியுமான வாழ்வு மீள்வதற்குத் துணை செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, நீதிக்காகவும் விடுமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற அனைவருக்கும் உரிய படிப்பினைகள் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்.

போரில் முதற்பலியாவது உண்மையே என்பர். உண்மையின் உயிரை மீட்டெடுக்க வல்ல தரவுகளை முதலில் தெரிந்து கொள்வோம். காசுமீர்க் கோப்புகள் (KASHMIR FILES) என்று பொய்த் தோரணம் கட்டிய அக்கினிகோத்திரிகள் மணிப்பூர்க் கோப்புகள் என்று படம் எடுப்பார்களா? எடுத்தால் அது மோதியின் ஆசிபெற்ற மணிப்பூர்ப் பொய்களாகத்தான் இருக்கும்.

நாம் இப்போதே மெய்யான மணிப்பூர்க் கோப்புகளை எழுத்தில் தொகுப்போம். இயன்ற வரை மெய்க் கதைகள் துயருற்ற மாந்தரின் வாய்மொழியாகவே வெளிப்படச் செய்வோம்.

நாளை முதல் மணிப்பூர்க் கோப்புகள்

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 257

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 225 : வழக்கறிஞர் மகாதேவன் உரை

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல் – தொடர்ச்சி)

வழக்கறிஞர் மகாதேவன் உரை

இனிய அன்பர்களே!

“வல்லிய(பாசிச)ச் சட்டங்கள் – த.எ.த. (ஊபா), என்ஐஏ” என்ற தலைப்பில் 2023 சூலை 6ஆம் நாள் வல்லிய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணி நடத்திய கருத்தரங்கத்தில் தோழர் சேல் முருகன் தலைமையில், தோழர் அரி பரந்தாமன், ப.பா. மோகன், நெல்லை முபாரக்கு ஆகியோருடன் நானும் பேசினேன். நேரில் வர முடியாத நிலையில் ஐதராபாத்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மகாதேவன் அனுப்பி வைத்த ஆங்கில உரையைத் தோழர் செந்தில் தமிழில் வாசித்தார். அந்த உரையின் தமிழாக்கம் இதோ –

வழக்கறிஞர் மகாதேவன் உரை:

த.எ.த. (ஊபா), என்ஐஏ சட்டங்களைத் திரும்பப் பெறக் கோருவோம்!

என்னுடைய வழக்கறிஞர் தொழிலின் நெருக்கடி காரணமாக இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு, முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சூன் 19 முதல் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் தில்குசு நகர் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கின் இறுதி விசாரணை நடந்துவருவதால், நான் அன்றாடம் பிற்பகல் 2:30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் முன்னிற்க வேண்டியுள்ளது. அதுபோல இன்றும்கூட 2.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

காங்கிரசு ஆட்சியின் கீழ் 1995ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ப.சீ.த. (‘தடா’) சட்டமும் 2005இல் கொண்டுவரப்பட்ட ப.த.(பொடா) சட்டமும், பெரும்பாலும் வரைமுறையற்ற வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக எழுந்த பெரிய அளவிலான விமரிசனங்கள் மற்றும் போராட்டத்தின் விளைவாக அதிக நாட்கள் நீடிக்கப்படாமல் காலாவதி ஆகி விட்டன.

அஃதாவது இந்தச் சட்டங்கள் காலாவதியாகும் காலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படவில்லை. 2005இல் 1967ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) திருத்தப்பட்டுக் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் ப.சீ.த. (‘தடா’) மற்றும் ப.த.(பொடா)வின் கொடூரமான சட்டப் பிரிவுகளை (காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் தரப்படும் வாக்குமூலம் செல்லும் என்ற ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடூரமான ஒரு சட்டப்பிரிவைத் தவிர இதர அனைத்து சட்டப் பிரிவுகளையும்) எடுத்துக் கொண்டு (பயங்கரவாதச் சட்டம் என்பதன் விளக்கம் உட்பட), 2008ஆம் ஆண்டு கூடுதல் திருத்தம் செய்யப்பட்டு முழு வடிவம் தரப்பட்டது.

இந்தச் சட்டம் மாபெரும் காங்கிரசு அரசின் மகத்தான அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தால் கொண்டுவரப்பட்டது. இன்றைய ஒன்றிய ஆளும் கட்சியாலும் மாநில அரசுகளாலும் இப்போதும் தொடரப்படுகிறது. நமது சமூகத்தின் சிறுபான்மை இசுலாமியர்கள், தணிந்த(தலித்து) மக்கள், பழங்குடிகள் மற்றும் விளிம்புநிலைப் பிரிவினர்கள் மீது வேண்டுமென்றே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஏவப்படுவதைத் தேர்தலில் பங்குபெறும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் வெளிப்படையாக எப்போதும் எதிர்ப்பது இல்லை என்பது கெடுவாய்ப்பானது.

எதிர்க்கட்சியாக உள்ள போது, தேர்தல் சமயத்தில் தன்னை மதச்சார்பற்ற கட்சியாகவும், அதேபோல தமது வாழ்வுரிமைக்காகப் போராடும் இசுலாமிய சிறுபான்மையினர், தணிந்த(தலித்து) மக்கள், பழங்குடியினர் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவினர் மீது நடத்தப்படும் கொடுமைகளை எதிர்க்கும் கட்சியாகவும் காட்டிக் கொள்ளும் காங்கிரசு, இதே விசயத்திற்காக பல்வேறு மேடைகளில் கொடுமையான த.எ.த. (ஊபா) (UAPA) சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைக்காகப் போராடுவது இல்லை. மையத்திலும் மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள பாசக அரசானது, 1967இன் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தை பொறுத்த வரை, காங்கிரசுக் கட்சியின் அதே பிரிவுகளைத்தான் தாங்களும் நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவதன் மூலம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் ஆட்சிக்கு வருவதற்கான வாக்கைக் கவர பொதுமக்களை ஏமாற்றுகின்றது.

மையத்திலும் மாநிலத்திலும் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே நிலவும் வட்டார, அரசியல், இன, சாதிய, மதம் சார்ந்த மற்றும் மதவாதப் பண்பாட்டின் தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு மத வேடத்தைப் பூண்டு, பொய் வாக்குறுதிகளைத் தருவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதிலேயே ஆர்வம் கொண்டுள்ளனர்.

இவை தங்களது அரசியல் மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளவும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவும் இதைச் செய்கின்றன. அதேசமயம் நாட்டில் 70% உள்ள சிறுபான்மையினர், தணிந்த(தலித்து) மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒடுக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. வல்லியம்(பாசிசம்) நிலவிக் கொண்டிருக்கும் இந்தப் பின்னணியில் இருந்து மாற்று அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களையும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களையும் தணிந்த(தலித்து) மக்களையும் பழங்குடிகளையும், அத்தோடுகூட ஆளும் வகுப்பு மற்றும் பல்வேறு மத மற்றும் அரசியல் அமைப்புகளின் அரசியல் எதிரிகளையும் (இவர்கள் ஆளும் கட்சியின் ஒடுக்குமுறை அரசாட்சியை எதிர்க்கின்றனர்) ஒடுக்குவதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படும் த.எ.த. (ஊபா)வின் கொடூரச் சட்ட விதிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம்.

அண்மைக் காலமாக ஆளும் கட்சிகள் அரசியல் எதிர்ப்பாளர்களையும், மைய – மாநில ஆளும் கட்சியின் அரசியல் கொள்கைகளையும் எதிர்க்கக் கூடிய அனைத்து ஆட்கள் அல்லது அமைப்புகளையும் நசுக்கவும், உடைத்து எறியவும் நிறைவேற்று(அமலாக்க)த்துறை மற்றும் தேசியப் புலனாய்வு அமைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் மையத்தில் உள்ள ஆளும் கட்சி, மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சியின் மீது பொய்யான சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் த.எ.த. (ஊபா) (UAPA) குற்றச்சாட்டின் கீழ்ப் பொய் வழக்குகளைப் போட்டு ஒடுக்க முயற்சிக்கும் அளவிற்குத் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. மனநிறைவின்மை அடைந்துள்ள கூட்டணிக் கட்சிகளைத் தமது கருத்தியல் மற்றும் அரசியலுக்கு அடிபணியச் செய்வதற்காகத் , தமது குதிரை பேரத்தில் பணத்தையும் அதிகாரத்தையும் பதவிகளையும் முடிந்த அளவுக்குப் பயன்படுத்துகிறது. பின்னர் மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சிகளை உடைப்பதற்கான கருவிகளாக இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் மைய ஆளுங்கட்சி அரசியல் இலாபம் பெறுகிறது. இத்தகைய அழுத்தங்களுக்குப் பணியாதவர்கள் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் த.எ.த. (ஊபா)UAPA வழக்குகள் பொய்யாகப் போடப்படுகின்றன. இதன் மூலம் அரசியல் எதிரிகளும் அரசியல் எதிர்ப்பாளர்களும் கடும் விரக்திக்குள் தள்ளப்படுகின்றனர்.

இல்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில், வன்முறையில் இறங்கிச் சட்டம் ஒழுங்குச் சிக்கலை உருவாக்குகின்றனர். இச்சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறுவதற்காகப், புதிய தேர்தல்களைத் திணிக்கவும், அரசியல்வாதிகளின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் மனநிறைவற்றவர்களைக் குதிரை பேரம் மூலம் வென்றெடுக்கவும் முயல்கின்றனர். இறுதியாக உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில், அரசாங்கத்தின் கருவூலத்திற்குத் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்தும் வகையில், புதிய தேர்தல்களை நடத்துவதன் மூலம் பணவீக்கத்தையும் வறுமையையும் அதிகரிக்கின்றனர்.

தேசியப் புலனாய்வு முகமையின் துவக்கம் கூட காங்கிரசு ஆட்சியில்தான் நடந்தது. தேசியப் புலனாய்வு முகமை, 2008இல் முக்கியமாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 மற்றும் 1908ஆம் ஆண்டின் வெடிகுண்டுப் பொருட்கள் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 121 முதல் 130 வரையிலான தேசத் துரோகச் சட்டங்கள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 25 (1AA)ஆகியவற்றைக் கையாள்வதற்காக முதலில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிராகவுள்ள அரசியல் இயக்கங்கள் மற்றும் மத இயக்கங்கள் போன்றவற்றை ஒடுக்குவதற்காக, முக்கியமாக இசுலாமியச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு அரசியல் இயக்கங்களின் நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடக் கூடிய வழக்கறிஞர்களும் கூட, அவர்களின் மதம், சாதி, கோட்பாட்டு நம்பிக்கைகள் அல்லது பகுதிகளையும் தாண்டி த.எ.த. (ஊபா) சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இச்சட்டத்தின் மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் காரணமாக, அவர்கள் பல ஆண்டுகளாகப் பிணையின்றிச் சிறையில் வைக்கப்படுகின்றனர். இது சனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

இந்த நிலைமை தொடருமானால் அது முழுக்க குழப்பமான நிலைமைகளுக்கும், ஓர் அனாட்சிய (அராசக) அரசுக்குமே இட்டுச் செல்லும். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு மும்பை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள பீமா கோரேகான் வழக்கு ஆகும். இந்த வழக்கில் முக்கிய தணிந்த(தலித்து) வழக்கறிஞரான சுரேந்திர கட்லிங்கு, வழக்கறிஞர் சுதா பாரத்துவாசு, செயற் பாட்டாளர்களான அருண் பெரேரா, வெர்னான் கன்சல்வேசு மற்றும் கபீர் கலா மன்ச்சு என்ற கலை பண்பாட்டு இயக்கத்தைச் சார்ந்த இதர செயல்வீரர்கள் (கபீர் கலா மஞ்ச்சு எந்தச் சட்டத்தின் கீழும் தடை செய்யப்படவில்லை.), நாக்குபூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சோமா சென் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரபலமான புரட்சிகர எழுத்தாளரான 85 அகவை வரவர ராவு (இவர் நான்காண்டுகளுக்குப் பிறகு பிணை பெற்றுள்ளார். மூன்று முறை மகுடையால்(கொரோனாவால்) பாதிக்கப்பட்டுள்ளார்.) மேலும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கும் சார்கண்டின் பழங்குடியினருக்கும் எப்போதும் பணிசெய்து வந்த, 85 அகவை இயேசு சபை அருட்தந்தை இசுடேன் சாமி (இவர் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்தார். அதுவும் மகுடையால்(கொரோனாவால்) பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது) போன்றோரும் இவ்வழக்கில் சிறையிலடைக்கப்பட்டனர்.

மிகவும் கெடுவாய்ப்பான விசயம் என்னவென்றால் சமூகத்தில் முக்கியமாணவரும், மாபெரும் சட்ட மேதை பாபாசாகிப்பு அம்பேத்துகரின் உறவினருமான, ஆனந்த டெல்டும்டே கூட விட்டு வைக்கப்படவில்லை என்பதுதான். அண்மையில் ஓராண்டுக்கு முன் மோதலில் கொல்லப்பட்ட இ.பொ.க.(சிபிஐ) மாவோயினரால் ஒரு தலைமறைவு தலைவராக அவரது சகோதரர் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஆனந் டெல்டும்டே மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இன்றுவரை குற்றப் பத்திரிகை உருவாக்கப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசத்திலும் தெலங்கானாவிலும் வல்லிய(பாசிச) ஆளும் ஆட்சியின் அடக்குமுறை தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. ஆந்திரப் பிரதேச குடிமை(சிவில்) உரிமை மையம், தெலங்கானா குடிமை(சிவில்) உரிமை மையம், மனித உரிமைகள் மேடை, புரட்சிகர எழுத்தாளர் சங்கம், மகிளா சேட்டினா சங்கம் போன்ற அமைப்புகளின் செயற்பாட்டளர்களுக்கு எதிராக 11 வழக்குகள் போடப்பட்டன. நக்குசலைட்டு குழுக்கள் மற்றும் இசுலாமியச் சிறுபான்மையினருக்காக வாதாடும் பல வழக்கறிஞர்கள் மீது த.எ.த. (ஊபா)வின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

அரசின் செயல்பாட்டு முறை மிக எளிமையானது. தன்னிடம் கம்பிக் கட்டுகளை, மாவோயிச அல்லது போராட்டர்(சிகாதி) இலக்கியங்களை வைத்திருக்கும் போது கைது செய்யப்பட்டதாக ஒருவர் காட்டப்படுகிறார். அந்த முதல் தகவல் அறிக்கையிலேயே பல்வேறு வழக்குரைஞர்களினதும் இந்த அமைப்புகளின் செயல்வீரர்களதும் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. த.எ.த. (ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தால் வழக்கு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டுப், பிணையின்றி நீண்ட காலம் சிறையில் வைக்கப்படுகின்றனர். விசாகப்பட்டினத்தில் பெட்டப்பாயிலா காவல் நிலையத்தின் ஒரு வழக்கின் முதல் தகவல் அறிக்கையில்,212 பேர் அரசுக்கு எதிராகப் போர் புரிந்ததாகக் குற்றம் சாட்டுகிறது. இந்த வழக்கில் அனைத்து வழக்குரைஞர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கடந்த 19.08.2022 அன்று தெலங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் தட்டுவாய் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கில், இதே போல 152 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தப் பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மிகப் பிரபலமான சிலரும் அடங்கியுள்ளனர். அவர்களில் 2020இலேயே மகுடையில்(கொரோனாவில்) இறந்து போன முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எச். சுரேசும் ஒருவர் ஆவார். இவர் இந்திய மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதேபோல மனித உரிமை அறிவாளியான பேராசிரியர் அர கோபால், உசுமானியா பல்கலைக்கழகப் பேராசிரியரான பத்மசா சா, கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங்கு, அருண் பெரேரா ஆகியோரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், வழக்குரைஞர் ஆர் மகாதேவன் (உரையாளர்), வி. இரகுநாத்து, சுரேசுகுமார் மற்றும் மனித உரிமை மற்றும் பெண்கள் குழுக்களை சார்ந்த செயல்பாட்டு வீரர்கள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 257

வியாழன், 28 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 224 : வல்லியத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்



(தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் – தொடர்ச்சி)

வல்லியத்தின்(பாசிசத்தின்) பாலியல் வன்கொடுமை அரசியல்

இனிய அன்பர்களே!

மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி இப்போதுதான் குமுக ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளது.
அந்தக் காட்சியைக் காட்ட வேண்டா என்று இந்திய அரசு கேட்டுக்கொண்ட பின் ஊடகங்களில் மறைப்புச் செய்து காட்டப்படுகிறது. இருப்பினும் அயல்நாட்டுக் காட்சி ஊடகங்கள் சிலவற்றில் அது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

மே 3ஆம் நாள் மைதேயி இனத்துக்கும் குக்கி இனத்துக்குமான மோதலாகத் தொடங்கிய வன்முறை, உள்நாட்டுப் போர் என்னுமளவுக்கு முற்றி, இன்று வரை தொடர்கிறது. இரட்டை இழு பொறி (எஞ்சின்) அரசுகள் என்று பாசக பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய நடுவணரசும் மணிப்பூர் மாநில அரசும் சேர்ந்து இந்த இன மோதலை குக்கிகளுக்கு எதிரான இனவழிப்புப் போராகவே மாற்றி விட்டன. குக்கிகளில் பெரும்பாலார் கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட தேவாலயங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன, அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

காணொளியாக வெளிவந்துள்ள பாலியல் வன்கொடுமை மே 4ஆம் நாள் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது. கொடுமைக்கு ஆளான ஒரு பெண் மே 18ஆம் நாள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இத்துணைக் காலமும் இது குறித்துக் காவல்துறையும் மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. இந்த நிகழ்ச்ச்சியை மூடி மறைத்தே வந்துள்ளன.

எதிர்க் கட்சிகள் வன்மையான கண்டனங்கள் தெரிவித்த பின், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அணியமாய் இருப்பதாக அறிவித்த பாசக அரசு உருப்படியான விவாதம் நடந்து தலைமையமைச்சர் மோதி விளக்கமளிக்க வேண்டிய நிலைமையைத் தவிர்க்கவே எல்லாத் தந்திரங்களும் செய்து வருகிறது.

முதலில் குற்றவாளி ஒருவரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்த மாநில அரசு இப்போது நால்வரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இத்துணைக் காலம் இவர்களை ஏன் கைது செய்ய வில்லை? என்ற கேள்விக்கு மாநில அரசு தரும் விடை: இரண்டு திங்களாகக் கிடைக்காத ஆதாரம் இப்போதுதான் கிடைத்ததாம். எது? இந்தக் காணொளிதான் அந்த ஆதாரமா?

இது போன்ற இன்னும் பல காணொளிகள் இருப்பதாக மாநில முதல்வர் பிரேன் சிங்கே சொல்கிறார். அப்படியானால் இன்னும் பல வன்கொடுமைகள் நடந்துள்ளன என்று பொருள். தேசிய மகளிர் ஆணையமும் தங்களுக்குப் பல முறைப்பாடுகள் வந்திருப்பதாகச் சொல்கிறது. இந்த வன்கொடுமைக் குற்றங்களைத் தண்டிக்கவும் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் மாநில அரசு தானாக எதுவும் செய்யாது, காணொளிகள் வெளிவரும் வரை அது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், பிறகு ஒரு சிலரைக் கைது செய்து கணக்குக் காட்டும் என்பதுதான் இதன் பொருள்.

வன்கொடுமையால் பாதிப்புற்ற பெண்களில் ஒருவர் காவல்துறைதான் தங்களை வெறிக் கும்பலிடம் விட்டுப்போனது என்று குற்றஞ்சாட்டுகிறார். வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கணவர் – நடந்ததை நேரில் பார்த்தவர் – இந்தியப் படையில் இருந்தவராம்! கார்கில் போரில் பங்கேற்றவராம்! இலங்கையிலும் இந்தியப் படையில் இருந்தவராம்!
இந்த முன்னாள் இந்தியப் படையாள் இப்போது தொலைக் காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில், என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார்:

“அந்த இரண்டு மூன்று பெண்களில் என் மனைவியும் ஒருத்தி. அந்தக் கும்பலில் இருந்தவர்கள் இந்தப் பெண்களை ஆடை களையும் படிக் கட்டாயப்படுத்தினார்கள். எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் அந்தப் பெண்களைக் காப்பாற்ற முயன்ற போது, ஒரு பெண்ணின் தந்தையை அவர்கள் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்தார்கள். காவல்துறையினர் மைதேயி கும்பலுக்குத் துணை நின்றனர். அவர்கள் இந்தக் கொடுமைகளைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.”

இப்படிப்பட்ட நிலைமையில் குக்கிகளால் மைதேயிகளுடன் சேர்ந்து வாழ முடியுமா? “நாங்கள் தனித் தனியாகத்தான் வாழ முடியும், அதுதான் சரி” என்று குக்கிகள் சொல்கிறார்கள்.

தாழி (228) மடலில் “மோதி வாயில் கொழுக்கட்டை?” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன்:
“நடுவணரசிலும் பாசக, மணிப்பூர் மாநில அரசிலும் பாசக! இதற்குப் பெயர் ‘இரட்டை இழு பொறி (எஞ்சின்) சருக்கார்’! வலுமிக்க ஆட்சியாம்! பாசக ஆட்சியில் வகுப்புவெறி வன்முறைக்கு இடமிருக்காது என்ற பீற்றல் மணிப்பூரில் பிய்ந்து தொங்குகிறது. இது பற்றிய கவலை பிரேன் சிங்குக்கும் இல்லை! அமித்சாவுக்கும் இல்லை! அகன்ற மார்போடு அகிலம் சுற்றும் அசகாய சூரர் நரேந்திர மோதிக்கு இருக்க வேண்டாவா? எவன் செத்தால் எனக்கென்ன? என்று வெள்ளை மாளிகையில் விருந்துண்டு, பிதேன் இணையருக்கு வைரம் பரிசளித்து, கொசுறாக ஆய்தக் கொள்முதல் ஒப்பந்தம் செய்து கொண்டு தேச நலன் காத்து நெஞ்சு நிமிர்த்திக் கொண்டிருக்கிறார். மற்றதெல்லாம் இருக்கட்டும், குசராத்து – 2002, மணிப்பூர் – 2023 இரண்டையுமே மறந்தும் மறைத்தும் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இல்லையோ என்ற சிறு ஐயத்தையே எள்ளி நகையாடுகின்றார்.”

மே 4 வன்கொடுமைக் காணொளி வந்தது, உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது, மோதி வாயிலிருந்த கொழுக்கட்டையும் விழுந்து விட்டது. மணிப்பூர் பற்றி மோதி திருவாய் மலர்ந்தருளியுள்ளார்: “மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது” என்று கூறியிருக்கிறார் அப்படியென்றால், அங்கு குற்றம் இழைத்தவர்கள் மீது இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கு மீது மோதி நடவடிக்கை எடுப்பாரா?!

“மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் மோதி. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிற நாளில் இந்தக் கருத்தை அவர் நாடாளுமன்றத்தில் பேசினாரா, இல்லையே?

காசுமீரில் அசீபா பானுவுக்கும், குசராத்தில் பில்கிசு பானுவுக்கும், உ.பி. அத்துராசில் அந்தத் தணிந்த (தலித்து) பெண்ணுக்கும், இப்படி எத்தனை எத்தனையோ பெண்களுக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகளில் பாசக உறுதியாகக் குற்றவாளிகளின் பக்கம் நின்றதைக் கண்ட யாரும் “மணிப்பூர் மகள்கள்” என்று மோதி பேசுவதில் மயங்க மாட்டார்கள். மணிப்பூர் குற்றவாளிகளை மன்னிக்கவே முடியாது என்கிறார் மோதி. அப்படியானால் மோதி, அமித்துசா, பிரேன் சிங்கு ஆகிய முதல் மூன்று குற்றவாளிகளையும் மன்னிப்பதற்கில்லை.

“உண்மையிலேயே மணிப்பூர் நிலை குறித்துத் தலைமையமைச்சர் மோடிக்குக் கோபம் இருந்தால், முதல்வர் என். பிரேன் சிங்கை முதலில் பதவி நீக்கம் செய்யட்டும் பார்க்கலாம்!” – என்கிறார் காங்கிரசு தலைவர் மல்லிகார்சுன கார்கே.

“மணிப்பூர் தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும, தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிடும்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டு கூறியுள்ளார். அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியத்தில் எப்படி இப்படி நிகழ முடியும்? என்று அதிர்ச்சி தெரிவிக்கிறார். இவ்வாறான கொடுமைகள் திரும்பத் திரும்ப நிகழுமானால், இது அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியம்தானா? அல்லது இந்த அரசமைப்பே குடியாட்சிய அரசமைப்புதானா? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மணிப்பூர் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதும் பேசுபொருளாயிற்று.
இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோதி “மணிப்பூர் மகள்கள்” பற்றிப் பேசுகிறார். இந்த நாடகத்தில் நாட்டு மக்கள் மயங்க மாட்டார்கள். வல்லிய(பாசிச) வெறியர்களுக்குப் படுகொலையும் பாலியல் வன்மொடுமையும் அரசியல் கருவிகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்களின் வல்லிய(பாசிச)அரசியலை முறியடிக்காமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 256

இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா, சென்னை

      28 September 2023      அகரமுதல


சிவகங்கை வழக்குரைஞர் மானமிகு

இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா

புரட்டாசி 12, 2054 — 29.09.2023

வெள்ளி மாலை 6.00

இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007

தலைமை : ஆசிரியர் கி.வீரமணி

சிறப்புரை: தோழர் இரா.நல்லக்கண்ணு

பிறர் : அழைப்பிதழ் காண்க.

இவண்:

பெரியார் தன்மதிப்புப் பரப்புரை (சுயமரியாதைப் பிரச்சார) மையம்





புதன், 27 செப்டம்பர், 2023

தமிழ்க்கூடல், உலத்தமிழ்ச்சங்கம்

 


புரட்டாசி 10, 2054 புதன் 27.09.2023

முற்பகல் 10.00 மணி

தமிழ்க்கூடல்

நூல் அரங்கேற்றம்




தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்-தொடர்ச்சி)

கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள்

இனிய அன்பர்களே!

இளைஞர் அரண் கல்வியுரிமைப் பேரணி – மாநாடு, குடந்தை – 2023
2023 சூலை 16
மாநாட்டுத் தீர்மானங்கள் (வரைவு)


1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக நீதி வழங்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வோராண்டும் சூலை 16ஆம் நாளைத் தமிழக அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் படித் தமிழக மக்களையும் தமிழக அரசையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

2) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020 என்பது குடிமக்களின் கல்வியுரிமைக்குப் புறம்பானதாகவும், வணிக மயத்துக்கும் இந்து மயம் இந்திய நடுவணாதிக்க மயத்துக்கும் வழிவகுப்பதாகவும் இருப்பதால் அக்கொள்கையைத் தமிழக மக்கள் அடியோடு மறுதலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்கும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வரவேற்கிறது.

3) அதே நேரத்தில் தமிழக அரசு அமைத்த குழு செயல்படாமல் முடங்கியிருப்பது குறித்தும், இதற்கிடையில் இந்திய அரசின் பிற்போக்கான கல்விக் கொள்கையின் சில கூறுகள் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல செயலாக்கப்பட்டு வருவது குறித்தும் இம்மாநாடு கவலை தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு மறுதலித்து அதனை எவ்வகையிலும் செயல்படுத்த மறுக்கும்படித் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4) தமிழ்நாட்டுப் பலகலைக்கழகங்களின் தன்னாட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொதுப் பாடத்திட்டம் என்று தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் அறிவித்து இருப்பதைத் திரும்பப் பெறும்படி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கல்விச் செயற்பாட்டளர்கள், மக்கள் கல்வி இயக்கங்கள் நடத்தி வரும் போராட்டங்களோடு இளைஞர் அரண் தோழமை கொள்கிறது. .

6) பொதுநுழைவு(நீட்), பொ.ப.நு.தே.(cuet), தே.த.தே.( NExT) முதலான அனைத்திந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளைக் கைவிடும் படி இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழகச் சட்டப் பேரவை இயற்றிய நீட் விலக்குச் சட்டத்துக்கு இந்திய அரசு உடனே ஒப்புதல் அளிக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வகையில் தமிழக மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரும் படி தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7) தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் தன்னளிப்புடன் உழைத்து வரும் கல்வியாளர் பேராசிரியர் சவகர் நேசன் அவர்களின் சலியா முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுகிறது. கல்விக் கொள்கையின் பரிமாணங்கள் என்ற அவரது ஆய்வறிக்கையைத் தமிழ்ச்சமூகம் ஆழ்ந்த கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கருதி, அவர்தம் முயற்சிகளில் அறிவார்ந்தும் உணர்வார்ந்தும் துணைநிற்க இளைஞர் அரண் உறுதி கொள்கிறது.

8) மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகளும், ஆசிரியர்கள் மீதான சுரண்டல்களும், அடக்குமுறைகளும், தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்களும், பகற் கொள்ளைகளும், கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்கு முறைகளும் இன்றைய சூழலில் மேலோங்கி வருவதாக இம்மாநாடு அஞ்சுகிறது. இந்த நிலையைச் சரிசெய்யத் தமிழக மக்களும் தமிழக அரசும் உடனே உரியவாறு செயல்பட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது,

9) தமிழகத்தின் கல்விச் சூழல் கெட்டுக் கிடப்பதில் தமிழக அரசின் ஆசிரியர் அமர்த்தக் கொள்கைக்கு ஒரு பங்கிருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமை, ஊதிய ஏற்றத்தாழ்வு, ஒப்பந்த ஆசிரியர் முறை, கௌரவ விரிவுரையாளர்களை முறைப்படுத்தாமல் நிரந்தரமாகவே தற்காலிக ஆசிரியர்களாக வைத்துக் கொள்வது, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பின்மை, ஆசிரியர்களை அமர்த்துவதில் இலஞ்ச ஊழல் ஆகிய இவை அனைத்தும் கல்விச் சூழலைச் சீரழித்திருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. இந்நிலைமைகளை உடனே சீர் செய்யத்தவறினால் தமிழ் நாட்டில் கல்வி செத்துப்போகும் ஆபத்து இருப்பதாக இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

10) மாணவர்களை வதைத்து பெற்றோரைச் சுரண்டி அறமும் அறிவும் சார்ந்த கல்வியை நாசமாக்கும் தன்நிதிக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் கல்விக் கூடங்களை அரசுடைமையக்க வேண்டும்; இதற்கிடையில் அவற்றின் மீது அரசு தீவிரமான கட்டுப்பாடுகள் செலுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11) தமிழ்நாட்டில் ஒரு மாற்றுக் கல்வி இயக்கமாக உருப்பெற்றுள்ள தாய்த்தமிழ் பள்ளிகளை அரசு-உதவி பெறும் பள்ளிகளாக மாற்றி அவற்றைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் படி இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல்
 252

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 222 : காமராசர் பிறந்த நாள்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2-தொடர்ச்சி)

காமராசர் பிறந்த நாள்

இனிய அன்பர்களே!

இன்று (சூலை 15ஆம் நாள்) இளைஞர் அரண் – கல்வி உரிமை மாநாட்டுக்காகக் குடந்தையில் இருக்கிறேன். ஐயா சுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் தனியாக உட்கார்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருந்தேன். ஐயாவின் மூத்த மகன் பாபு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து “ஃகாசா” என்று அறிமுகம் செய்து வைத்தார். “உட்காருங்கள், எனக்குப் பேச நேரமில்லை” என்றேன்.

ஃகாசா சொன்னார்: “இன்று காமராசர் பிறந்த நாள். நீங்கள் வந்து காமராசர் சிலைக்கு மாலை போட வேண்டும். அழைத்துப் போக வந்திருக்கிறோம்.”

எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே புறப்பட்டேன். பிறந்த நாள் கொண்டாடுவது, சிலைக்கு மாலை அணிவிப்பது… பொதுவாக இதில் எல்லாம் எனக்குப் பெரிதாக நாட்டமில்லை. என்றாலும் கல்வி உரிமை மாநாடு நடத்தவிருக்கும் நிலையில் காமராசர் பிறந்த நாளில் அவர் சிலைக்கு மாலை அணிவிப்பது பயனுள்ளதாக இருக்கக் கூடும்.

போகிற வழியில்தான் ஃகாசாவிடம் “என்ன அமைப்பு?” என்று கேட்டேன். “முத்தமிழ் மக்கள் பேரவை.”

பாலக்கரையில் அந்தக் காமராசர் சிலைக்கு எதிரில்தான் தீயில் எரிந்த குழந்தைகளுக்கான நினைவுச் சின்னம் உள்ளது. இளைஞர் அரண் கல்வி உரிமை மாநாட்டுப் பணிக்காக வந்துள்ள தோழர்கள் அந்தப் பூங்காவில்தான் இருந்தார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டேன். பிறகு படியேறிச் சென்று காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன்.

அங்கிருந்து “நேட்டிவ்” மேல்நிலைப்பள்ளி திடலில் மாணவர்களுக்குக் குறிப்பேடும் தூவலும் வழங்குவதற்காக அழைத்துச் சென்றார்கள். அங்குப் பள்ளி ஆசிரியர் சௌந்தர்ராசன் காமராசரைப் புகழ்ந்து சொற்பொழிவு ஆற்றினார். நான் காமராசர் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய பின் சுருக்கமாகப் பேசினேன். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் காமராசரின் பங்கு பற்றிக் குறிப்பிட்டு, நாளை நடைபெறும் கல்வி உரிமை மாநாட்டுக்கு அனைவரையும் அழைத்துப் பேசினேன்.

எனக்குப் பிறகு என் அகவையொத்த ஒருவரைப் பேச அழைத்தார்கள். அவர் பெயர் இராசசேகரன், என்னைப் பற்றியும் காமராசரோடு எனக்கிருந்த தொடர்பு பற்றியும் நன்கறிந்து வைத்திருந்தார். என் மாணவப் பருவத்தில் குடந்தையில் நடந்த சில நிகழ்ச்சிகளில் நான் பேசியதைக் கூட நினைவு கூர்ந்து பேசினார்.

நான் ஒரு காலத்தில் காமராசர் புகழ் பாடிக் கொண்டிருந்தவன். பள்ளிப் பருவத்தில் நான் முதன்முதலாகக் கவிதை என்று ஒன்று எழுதியதே காமராசரைப் பற்றித்தான். பல மாநாட்டு மேடைகளில் அவர் முன்னிலையில் பேசியுள்ளேன். பல சருச்சைகளில் அவர் என்னைப் பாதுகாத்ததும் உண்டு.

அவர் ஏழைப் பங்காளர் அல்லர், பண்ணையார்களின் பங்காளர் என்று பிற்காலத்தில் சொல்லியுள்ளேன். இப்போதும் அதில் மாற்றமில்லை. ஆனால் தமிழ்ச் சூழலில் கல்வியைப் பரவலாக்கியதில் அவருக்கிருந்த பங்கினால்தான் தந்தை பெரியாரே அவரைத் தூக்கிச் சுமந்தார் என நினைக்கிறேன்.

அம்பத்தூரில் பெருந்தலைவர் காமராசர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருந்த போது திரு பி.சி. கணேசனை அழைத்து வந்து காமராசர் பிறந்த நாள் விழாவில் பேசச் செய்தேன். அவர் திருவாரூர் பள்ளிக்கூடத்தில் எனக்குத் தலைமையாசிரியராக இருந்து, ஈ.வெ.கி. சம்பத்து தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி அரசியலுக்காகப் பணி துறந்தவர், பிற்காலத்தில் காமராசருக்கு உதவியாளராகப் பணியாற்றியவர்.

காமராசருடனான என் பழக்கம் பற்றிச் சில செவ்விகளில் கூறியுள்ளேன். குறிப்பாக அன்பர் நலங்கிள்ளி எடுத்த விரிவான காணொளிப் பேட்டி ஒன்றுள்ளது. அதனை ஈண்டுப் பகிர்கிறேன் –
https://www.youtube.com/watch?v=S1s3YN3MTrY

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல்
 251

திங்கள், 25 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2 – தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்

அவலமான கல்விச் சூழல் 2/2

வருங்காலங்களில் அரசுக் கல்லூரிகள் புதிய பாடத்திட்டங்களுடன் தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும்.

தனியார் தன்நிதிக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி நிறுத்தப்பட வேண்டும்.

பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் போதிய உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கூடவே உயர் கல்வித்துறையில் நடக்கும் இலஞ்ச–ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, அவற்றைத் தடுத்து நிறுத்தக் கல்வியாளர்கள் தலைமையிலான கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் அரசை வலியுறுத்த வேண்டும்.

NAAC, NBA, NIRF போன்ற தரக் குறியீடுகள் தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. இது தேசியக் கல்விக் கொள்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கமே தனியார் உயர்கல்வி நிறுவனங்களை முன்னிலைப் படுத்துவதும், உயர்கல்வியில் தனியார்மயத்தை உறுதியாக்குவதும் ஆகும். NAAC, NBA, NIRF ல் அதிக மதிப்பெண்களைப் பெறும் கல்லூரிகள், அரசின் நேரடிக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குப் பெறுவதுடன், அவற்றுக்கு நிதி உதவியும் கிடைக்கிறது. இதனால் தனியார் கல்லூரிகள், NAAC, NBA, NIRF தரவரிசை பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. கடந்த எட்டு ஆண்டுத் தரவுகளைத் தொகுத்துப் பார்த்தால் இத்தரக்குறியீடுகளில் தனியார் கல்லூரிகளே முன்னிலையில் உள்ளதோடு பெரும்பான்மையாகவும் இருப்பதை அறிய முடியும். இதற்காகத் தனியார் கல்வி நிறுவனங்கள் பல முறைகேடுகள் செய்வது, தவறான தரவுகளைத் தருவது என்ற போக்கில் செயல்படுகின்றன.

இந்தத் தர வரிசை முறை, கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளையும், கல்வியின் தரத்தையும் பெருமளவில் பாதித்துள்ளது. கற்றல் -கற்பித்தல் செயல்பாடுகளை வெறும் தரவுகள் பதிவேற்றும் வேலையாகவும், தரவுகளை அலங்கரித்து அதிகாரிகளைக் கவரும் வேலையாகவும் மாற்றியுள்ளது. எனவே இது போன்ற தர மதிப்பீட்டு முறைகளின் உள்நோக்கத்தையும் அதில் உள்ள முறைகேடுகளையும் இக்குழு கடுமையாக எதிர்க்கிறது.

Outcome based education (OBE), மாணவர்களை மையப்படுத்திய திறன் மேம்பாட்டுக் கல்வி (Student centric education, Skill development) நான் முதல்வன் போன்றவை கற்றல்-கற்பித்தலில் தற்போது முதன்மைப் பொருளாகியுள்ளது. இத்திட்டங்களின் வாயிலாகக் கல்வியின் உள்ளடக்கத்தினைத் தீர்மானிக்கும் பணி, நேரடியாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

மத்திய-மாநில அரசுகளும், பல்கலைக்கழக நிருவாகமும். இந்நிறுவனங்களும் தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு மாணவர்களுக்கு எது தேவையோ அதையே பாடத்திட்டமாக மாற்ற முயல்கின்றனர். மேலும் Skill development, Naan Mudhalvan போன்ற திட்டங்கள், மாணவர்களைத் தொழிற்சாலை இயந்திரத்தின் துணை உறுப்புகளாக ( நட் & போல்ட் ஆக) மாற்ற முயல்கின்றன. சமுதாய வளர்ச்சிக்குத் தொழிற்கல்வி அவசியமே. ஆனால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முழுமையான கல்வியை ஒதுக்கிவிட்டு ஓர் இயந்திரத்தின் துணை உறுப்புகளாக மாற்றக்கூடியக் கல்வியை ஏற்க முடியாது.

NEET, CUET, NeXT இன்னும் பல போட்டித்தேர்வுகளைத் தடைசெய்ய இக்குழு குரல் கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வியில் NGO, Edutech நிறுவனங்களின் பங்களிப்பைத் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இது பள்ளிக் கல்வியை Edutech மற்றும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கமாகும். மேலும் அரசுப் பள்ளிகளில் அனைவருக்குமான இலவச – தரமான கல்வியை வழங்குவதற்கு மாற்றாகப் படிப்பதற்கும், கூட்டல்-கழித்தல் போடவும், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாரிப்பதற்கும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வி, அறிவியல் பூர்வமான தாய்மொழி வழிக்கல்வி ஆகியவற்றைச் செயல்படுத்தவும், கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வை ஒழிக்கப் பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி முறையைச் செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரையான பள்ளிகள் இணைப்பு (School merger) என்பதை அடியொற்றித் தமிழ்நாட்டிலும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், கள்ளர்-சீர்மரபினர் நலப்பள்ளிகள், பழங்குடியின நலத்துறைப் பள்ளிகள், வனத்துறைப்பள்ளிகள் மற்றும் இந்து அறநிலையத்துறைப் பள்ளிகளை அரசுப் பள்ளிகளோடு இணைப்பதற்கான கொள்கை முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது. இக்கொள்கை முடிவைக் கைவிடுவதற்குத் தமிழக அரசை இக்குழு வலியுறுத்துவதோடு இப்பள்ளிகளின் மேம்பாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 படிப்படியாக ஒன்றிய – மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தச் சொல்லி வாரம் ஒரு சுற்றறிக்கை பல்கலைக்கழக நல்கைக் குழுவிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் மாநில அரசோ இந்தி – சமற்கிருதத்தைத் தாண்டி மற்ற பரிந்துரைகளுக்குப் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டுவதில்லை. மாநிலக் கல்வி அதிகாரிகளோ, பேராசிரியர்களோ, பல்கலைக்கழக நல்கைக் குழு சொல்லுவதைக், குற்றாய்வே(விமரிசனமே) இன்றி, அப்படியே செயல்படுத்துகின்றனர். இதற்கான விவாதங்களும் இல்லை. இந்தக் கூட்டுதான் அரசுப் பள்ளிகள்/கல்லூரிகளின் சீரழிவிற்கான காரணங்களில் ஒன்றாகும். எனவே கல்வியில் பெரும்பான்மை மக்கள் நலன்களைப் பாதிக்கும் ஒன்றிய – மாநில அரசின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பரவலாக அம்பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப் படும்.

மாணவர்கள் உரிமை பாதுகாக்கப்பட மாணவர் பேரவைகள் கல்லூரிகளில் தேர்தல் மூலம் அமைக்கப்பட வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களின் சனநாயக மீறல், செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும். ஏதிலிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், என்று அனைவருக்குமான நலன்களைப் பாதுகாக்கும் கல்விக் கொள்கை தேவை.

மாணவர் அமைப்புகளின் போராட்டங்கள், ஒப்பந்த ஆசிரியர்களின் போராட்டங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டங்கள், தனியார் பள்ளி மற்றும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டங்கள், சனநாயக அமைப்புகளின் போராட்டங்கள் எனத் தனித்தனியே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதரவை நல்கும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 249