சனி, 23 ஜூலை, 2016

இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு யூலை நினைவு நாள்




இலண்டனில் 33ஆம் ஆண்டு கருப்பு யூலை நினைவு நாள்

அழை-கருப்புயூலை : karuppu yulai, brittan
  பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் எதிர்வரும் 
ஆடி 10. 2047 / சூலை மாதம் 25  ஆம்  நாள்
அன்று இலண்டனில் 33ஆம் ஆண்டு
கருப்பு  யூலை நினைவு  நாள் கூட்டம்
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
  இலங்கையில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்பில் எதுவித  நிலையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது   பன்னாட்டுக் குமுகாயம் தொடர்ச்சியாகப் பல தவறுகளை மேற்கொண்டு வருகின்றது.  குறிப்பாக, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1956, 1958, 1977, 1983ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படட இன அழிப்பு தொடர்பில்  பன்னாட்டுக் குமுகாயத்தின் பாராமுகமே 2009ஆம் ஆண்டின் மிகப்பெரிய இன அழிப்புக்குத் தூண்டு கோலாக அமைந்திருந்தது. தமிழருக்கான சரியான பாதுகாப்பு பொறிமுறைகள், அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் பன்னாட்டுக் குமுகாயம் சரியான அணுகுமுறைகளைக் கையாண்டு இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்து இருக்கலாம்.
  எனினும் பன்னாட்டுக் குமுகாயம் இன்றுவரை இலங்கை தொடர்பிலும் அங்கு நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்பிலும் தனது அணுகு முறை தொடர்பில்  தொடர்ச்சியாகத் தவறு இழைக்கின்றது. இது தொடர்பான கருப்பொருளை வலியுறித்தி இந்த நினைவு நாள் கூட்டம் பிரித்தானியத் தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்





தேவகோட்டை-கல்விவளர்ச்சிவிழா01 : kamarasarvizhaa01

மாணிக்கவாசகர் நடுநிலைப்பள்ளியில்

காமராசர் நினைவு கல்வி வளர்ச்சி நாள் விழா: 

நகர்மன்ற தலைவர்  பங்கேற்பு


தேவகோட்டை : தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.
 விழாவில் ஆசிரியை வாசுகி வரவேற்றார். விழாவின் தொடக்கமாக அபிராமி அந்தாதி, திருக்குறள் நடனம் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் சுமித்ரா இரவிக்குமார் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசுகையில், காமராசர் எத்தனையோ தலைமுறை தாண்டியும் அனைவர் மனத்திலும் வாழ்ந்து கொண்டு உள்ளார். கல்விக்கு அதிக  முதன்மை கொடுத்தவர்; அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்; புகழ்ச்சியை விரும்பாதவர்; நுணுக்கமாய்ப் பேசுபவர்; பணிவு மிகுந்தவர்; இரத்தினச் சுருக்கமாகப் பேசுபவர்; விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர். அவர் ஏற்படுத்திக் கொடுத்த கல்விக் கூடங்கள்   அனைவருக்கும்  பயனாக உள்ளன.  இவ்வாறு பேசினார்.
 காமராசர் கல்வி வளர்ச்சி நாள் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவியர் முத்தையன், அனுசயா, திவ்யசிரீ, வெங்கட்ராமன், மகாலெட்சுமி, ஐயப்பன், கார்த்திகேயன், இராசி, இரஞ்சித்து, பரத்குமார், தனலெட்சுமி ஆகியோருக்குத் தேவகோட்டை நகர்மன்றத் தலைவர் சுமித்ரா இரவிக்குமார் பரிசுகளை வழங்கினார்.
விழா நிறைவாக ஆசிரியர் சிரீதர் நன்றி கூறினார்.

[படங்களை அழுத்திப் பெரிய அளவில் காண்க.]

வெள்ளி, 22 ஜூலை, 2016

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2 – ஈழத்து நிலவன்




தலைப்பு-விடுதலைவீரர்தேவை- ஈழத்துநிலவன்03 : thalaippu_viduthai_veerargale_thevai_eezhathunilavan

கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவை 2/2


 தனது நாட்டில் சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவும் எனச் சிலர் இன்னும் கூறி வருகிறார்கள். இந்தியாவில் தேசிய இனங்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசு, இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது! மாயமானைக் காட்டி, ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தைத் திசை திருப்புவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்! உலக நாடுகளைச் சுற்றிச் சுற்றி மிக வேகமான பரப்புரை, வேலைத்திட்டம். மறுபுறம், உள்ளேயே சிதைக்கும் நிகழ்ச்சிகள்.
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைப் பாராளுமன்றத்தின் மடியில் எதிர்க்கட்சிப் பதவியையும் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சிங்கள அரசிடம் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தமது வயிறு வளர்ப்பதிலேயே அக்கறையாக உள்ளார்கள்.
  தமிழனைக் காட்டிக் கொடுத்தால் சலுகை, தமிழர் நிலங்களைத் தாரை வார்த்துக் கொடுத்தால் சலுகை, தமிழனின் தலைமைப் பதவிகளை விட்டுக் கொடுத்தால் பின் கதவால் பெரும் சலுகை, இப்படிப் பற்பல சலுகைகளைப் பெற்றுக் கொஞ்சங்கூட இவர்கள் மனதில் எம் தமிழ் உறவுகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்காது இருந்து கொண்டு திரும்பத் திரும்ப அரைத்த மாவை அரைப்பதுபோல் பொய்யான போலிச் சொற்களுடன் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.
  “எங்களிடம் திறப்பு இல்லை. 2016-க்குள் தீர்வு கண்டு வெற்றி வாகை சூடுவதற்காகத்தான் நாங்கள் இப்பொழுது இதயங்களால் இணைந்து இருக்கிறோம். ஆட்சி மாற்றம் வந்து நல்லிணக்கம் ஏற்பட்டு, கலப்பு நீதிமன்ற உசாவல்(விசாரணை), பன்னாட்டு உசாவல்களை எல்லாம் வெற்றிகரமாக வெட்டியோடி, இனப்படுகொலைக்கான சான்றுகளையும் திரட்டி, அரசியல் கைதிகள் என்று எவருமில்லை எனக் குடியரசரைக் கூற வைத்து, தமிழிலே நாட்டுப் பண் பாடி, நாங்கள் கண்ணீர் மல்கி, சுகாத்துலாந்துக்குப் (Scotland) போய் ஆட்சி முறைமை தொடர்பாக எங்கள் அறிவைப் பெருக்கியிருக்கிறோம்” என்றவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் அழிவு வழியை நோக்கி நகர்கிறது.
  இலங்கை அரசுக்குப் பக்க இசை இசைக்கும் சம்பந்தன், சுமந்திரன் கும்பல்கள் வடக்கு – கிழக்கு மக்களுக்கு அரசுத் தொடர்பில் ஒரு கருத்தும், அதே அரசுத் தொடர்பில் பன்னாட்டுக் குமுகத்திடம் (சமூகத்திடம்) இன்னுமொரு கருத்தும் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றன. மணலாறு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலைப்பகுதி எங்கும் நடக்கும் சிங்களக் குடியேற்றங்கள். இவற்றைத் தடுத்து நிறுத்தத் திராணியற்ற பிண்டங்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், குறைந்தது, சம்பந்தனின் ஊரில் நடக்கும் கிண்ணியா, கோணேசுவரம், திரியாய்ப் பகுதிச் சிக்கல்கள்பற்றிக் கூடச் சிந்திக்க முடியாமல் இருப்பது ஏன்? எத்தனை முள்ளிவாய்க்கால் அழிவு வந்தென்ன? காலத்திற்குக் காலம் துரையப்பாக்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
  தமிழ் மக்களை எப்படி ஏமாற்றித் தங்கள் அரசியல் நோக்கை எட்டிக் கொள்ளலாம் எனும் நோக்கில் செயல்படும் சிங்கள அரசியலாளர்களுக்குத் தமிழ் மக்களைக் கையாள்வது எப்படி என்கிற வழிமுறைகளைச் சுமந்திரன் கொடுக்கும் அதே வேளை, தமிழ் மக்களுக்கு உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்திரமாகத் திரித்துக் கூறி ஏமாற்ற முயல்கிறார். இவ்விரண்டுமே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலானவை.
தமிழ் மக்களின் மரபார்ந்த(பாரம்பரிய) தமிழ்ப்  பண்பாட்டுப் பூமியில் அதற்கு மாறான இன, சமய அடையாளங்களை நிறுவுவதும் ஒரு வகையில் மரபை, பண்பாட்டை அழிக்கும் செயலாகும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொக்கிளாயில் தற்பொழுது நிறுவப்படும் புத்த விகாரையைக் குறிப்பிடலாம். ஆக அறிவழிப்பு, வரலாற்று அழிப்பு, பண்பாட்டு அழிப்பு வெவ்வேறு வடிவங்களில் இன்னும் தொடர்கிறது என்பதே மிகவும் திகைப்பூட்டும் கொடுமை. இதுவே, இருபதாம் நூற்றாண்டின் மிகக் கொடிய இன்னும் புரிந்து கொள்ளப்படாத இன வன்முறை!
  தமிழ் மக்களின் அடிப்படைக் கல்விச் சிக்கல்கள் இனவெறி அரசின் கொடும்பிடியில் இன்றளவும் அப்படியே… மாற்றப்படாமலே…
  தரப்படுத்தல், இணை உரிமை, இணை வாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, பாகுபாடு அற்ற வேலைவாய்ப்புபோன்ற பல கல்வி சார் சிக்கல்கள் தமிழர்க்குத் தீர்க்கப்படாமல் வெறுமனே கல்வியைக் கற்கச் சொல்லி அறிவுறுத்துவதில் பலனேதும் இல்லை. கல்விமான்களை விடப் போராளிகளே எம் மண்ணுக்கு இன்றைய தேவை! அமைதி கலைத்து மீண்டும் கருத்தரிக்கும் ஈழ விடுதலைப் பயணம்!
  விடுதலையை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும். அஞ்சி அஞ்சிப் பதற்றத்துடன் வாழ வேண்டும். படிப்படியாக அழிந்து போக வேண்டும். ஆகவே, விடுதலைக்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
தமிழீழத் தேசியத்தலைவர்
  அடிமைத் தேசத்தில் கல்விமான்களை விட விடுதலை வீரர்களே தேவையானவர்கள். நீதிக்கான போராட்டம் கால வரையற்றது. நாம் அனைவரும் தொடர்ந்தும் போராடுவோம். கற்றவர்களால்தாம் விடுதலை கிடைக்கும் என்றால் இந்த உலகில் உள்ள நாடுகள் எல்லாமே அடிமைத் தேசங்களாகவே இருந்திருக்க வேண்டும். ஏட்டுக் கல்வி கற்றவர்கள் ஆற்றியதை விடப் புரட்சியாளர்கள் ஆற்றிய மாற்றங்களே மக்களுக்கு விடுதலையை வென்றெடுத்துக் கொடுத்திருக்கின்றன.
  ஒரே குறிக்கோளில், ஒன்றுபட்ட மக்கள் ஆற்றலாக, எமக்கு முன் தடைக்கல்லாக உருவாகியிருக்கும் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து, நெஞ்சுறுதி கொண்ட வேங்கைகளாக மூச்சோடும் வீச்சோடும் விடுதலையை வென்றெடுக்கும் வரை நாம் ஒருபோதும் ஓயோம்! இலக்குப் பயணத்திலிருந்து தடம் புரளாது தொடர்ந்தும் தாயக விடுதலைக்காகப் போராடுவோம்!
  அன்று சிங்கள தேசத்திற்குத் தமிழரால் ஒரு செய்தி சொல்லப்பட்டது! “எந்த ஒரு காலத்திலும் எங்கள் மேல் விதைத்த துன்பத்தை, உங்கள் மேல் ஒருநாள் நாமும் விதைப்போம்” என்பதே சிங்களத்திற்கான தமிழரின் செய்தியாகும்! இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.
  சிங்கள – புத்தப் பேரினவெறி அரசின் ஆயுத வன்கொடுமையில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்பதற்காக வரலாற்றுத் தன்னியல்பில் எமது கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக அணைக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் தாங்கள் அனைவரும் படையினரின் முற்றுகைக்குள் இருப்பதாகத் தமிழ் மக்கள் உணரத் தொடங்குவர். அப்பொழுது படையினரின் முற்றுகையை உடைத்துக் கொண்டு ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும்! தலைமுறைகள் மீண்டும் தலையெடுக்கும்! நான் முன்னேறிச் சென்றால் என்னைப் பின் தொடர்ந்து வா! நான் சரணடந்தால் என்னைச் சுட்டு வீழ்த்து! நான் இறந்து போனால் என்னை விட்டுவிட்டுச் செல்! நாம் பிரிந்து நிற்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒற்றுமையாக இருக்க எம் நீதியான போராட்டம் ஒன்று போதும்! பொது எதிரிக்கு எதிராக அனைத்துப் போராட்ட ஆற்றல்களும் நான் பெரிது நீ பெரிது என்கிற வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து வலிய போராட்ட ஆற்றலாக உருமாற வேண்டும். இலக்குகளும் குறிக்கோள்களும் உறுதியாக இருந்தால் மட்டுமே எத்தனை தடவை விழுந்தாலும், எத்தனை தடவை தோற்றாலும் திரும்பவும் எழுந்து பயணிக்க முடியும்.
ஈழத்து நிலவன்
தலைப்பு-விடுதலைவீரர்தேவை- ஈழத்துநிலவன்04 :eezhathu nilavan02
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்