தம் 93 ஆம் அகவையில், தை 23, 2050 / பிப்.06,2019 அன்று இயற்கை எய்திய (தன்மானப் போராளி வழக்குரைஞர் சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன்) சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப் பெற்றது.
சென்னையிலிருந்து சிவகங்கைக்கு அரசு மருத்துவக் கல்லூரி வேலை நேரத்திற்குள் செல்ல இயலாது என்பதை உணர்ந்ததால் விண்ணப்பப் படிவம் அளித்தல், ஒப்புகை பெறல் முதலான முன் ஏற்பாடுகளைச் செய்து முடித்தோம். இதற்கு எம்ஞ்சியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மரு.சுதா சேசையன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.வெண்ணிலா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மரு. ஆனந்து, தொழிலதிபர் மனோகரன் ஆகியோர் உதவி செய்தனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் மேனாள் முதல்வர், ஓய்வு பெற்ற இணை இயக்குநர் மரு. மலர்க்கண்ணி இன்பலாதன், வழ.இன்பலாதன், மரு. இ.இராசராசன் ஆகியோர் ஏற்பாட்டால் மின்னஞ்சல்வழி அனுப்பிய படிவங்களை மருத்துவமனையில் பெற்று முன் நடவடிக்கை எடுத்தனர்.
மாலை 4.00 மணிக்குள் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு வர முடியாது என்பதால் உடலை அமரர் அறையில் ஒப்படைக்க இசையுமாறும் மறுநாள் மருத்துவமனையில் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தோம். ஆராய்ந்து பார்த்த பின் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனையக மருத்துவ அலுவலர்(RMO) மரு.மகேந்திரன் இதனை ஒப்புக் கொண்டார். இரத்த வங்கிப் பொறுப்பாளர் திரு பாண்டியன், அமரர் அறைப் பொறுப்பாளர் திரு கோபி, பிற மருத்துவர்கள் ஒத்துழைப்பு நல்கினர்.
மறுநாள் (24.01.2050 / 07.01.2019) காலை எளியோர் துணைவர் இரா.இராசமுத்துராமலிங்கம் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக முறைப்படி வழங்கப் பெற்றது.
அவர் கண் தானத்திற்கு விழைவு தெரிவித்திருந்தாலும் உரிய காலத்திற்குள் கண் வங்கியில் தொலைபேசியை எடுக்காத காரணத்தால் அவர் விருப்பத்தை நிறைவேற்ற இயவில்லை.
உடல்கொடை குறித்த விழிப்புணர்வும் செயலுணர்வும் அரசிற்குத் தேவை என்பதை உணர்ந்தோம். இது குறித்துத் தனியே எழுதுகிறேன்.
உடல் கொடையை ஏற்பதற்கு வெவ்வேறு வகையில் உதவிய மேற் குறித்தோருக்கும் பிறருக்கும் குடும்பத்தினரின் நன்றி.
மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வதில், மகத்தான பங்களிப்பைச் செய்தவை மொழிகள்தாம். நாடோடித் திரிதல், வேட்டையாடுதல், கால்நடை மேய்த்தல், கடல்மேல் சேர்தல், உழவு செய்தல் இந்த ஐந்து படிநிலைகளில் மனித நாகரிகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையத் தொடங்கியது. காட்டுமிராண்டிகளின் கூடாரமாகக் காட்சியளித்த மனித இனம், வேட்டையாடுதலின் மூலம் ஒரு வேட்டைச் சமூகத்தையே தன் இதயத்தில் தாங்கி நகர்ந்தது. அதன் முன்னர் நாடோடியாகத் திரிந்து பல்வேறு கால தட்பவெப்ப நிலைகளில் தன் உடல் தாங்க, மனம் ஏங்கப் புதியவற்றை கற்றுக் கொண்டது.
பின்பு நாகரிகம் வளர்ந்து, ஆடு, மாடுகளை தன்னகத்தே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மேய்ச்சல் சமூகமாக நாகரிகம் விரவியது. பின்னர் விரிந்து பரந்த கடற் பகுதிகளில் மீன் முதலான உயிரினங்களை வேட்டையாடி, அதில் தானும் உண்டு, பிறருக்கும் வழங்கி, அதன் மூலம் ஒரு பண்டமாற்று நாகரிகத்தை நோக்கி நகர்ந்தது. அதன் பின்பு விவசாயம் செய்ய விதைத்தல் மூலமாக, விவசாய நாகரிகத்தைக் கற்றுணர்ந்தான். தனக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும். முதலில் தம் எண்ணங்களை, மெய்ப்பாடுகள், சைகைகள், ஓவியங்கள் போன்றவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர். இவற்றின் மூலம் பருப்பொருள்களை (கண்ணில் காணக்கூடிய, தொட்டு உணரக்கூடிய பொருள்கள்) மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது. நுண் பொருள்களை உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கி பயன்படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமை பெற்று மொழியாக வளர்ந்தது.
மனித இனம் வாழ்ந்த இட அமைப்பும், இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாகின. உலகத்தில் உள்ள மொழிகள் எல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில், மொழிக் குடும்பங்கள் பலவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1,300-க்கும் மேற்பட்டது எனலாம். இவற்றை நான்கு மொழிக் குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை 1.இந்தோ ஆசிய மொழிகள்; 2.திராவிட மொழிகள்; 3.ஆத்திரோ ஆசிய மொழிகள்; 4.சீன திபெத்திய மொழிகள் என்று அழைக்கப்படுகின்றன. பல மொழிகளும் இங்கு பேசப்படுவதால், இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலையாகத் திகழ்கிறது என்று அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். உலகின் குறிப்பிடத்தக்க பழைமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. மொகஞ்சதாரோ, அரப்பா அகழ்வாய்வுக்குப் பின்னர் இஃது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர், குமரிலப்பட்டர். தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் “திராவிடா’ என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஈராசு பாதிரியார் என்பார் இம்மாற்றத்தைத் தமிழ், தமிலா, தமிழா, டிரமிழா, ட்ரமிழா த்ராவிடா, திராவிடா என்று உணர்த்துகின்றார். முதலில் பிரான்சிசு எல்லீசன் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து, இவை தனி ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார். இந்த மொழிகளை ஒரே இனமாகக் கருதி, தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார்.
இதனையொட்டி மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஃகோக்சன் என்பார் இந்த மொழிகள் அனைத்தையும் இணைத்து, “தமிழியன்’ என்று பெயரிட்டதோடு, மற்ற மொழிகளில் இருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்சுமுல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். 1856-இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல், பல்வேறு இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி, திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளையும் எடுத்துரைத்தார். கால்டுவெல்லுக்குப் பின்னர், சுடென்கெனா, கே.வி.சுப்பையா, எல்.வி.இராமசாமி, பரோ, எமினோ, கமில்சுவலபில், ஆந்திரனோவு, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முதலான அறிஞர்கள், மொழி வழியான ஆய்வுகளுக்கு பங்களிப்புச் செய்தனர்.
மொழிகள் பரவிய நில அடிப்படையில், தென் திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக திராவிட மொழிக் குடும்பம் வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொற்றகொரகா, துளுவம், குடியா ஆகியவை தென் திராவிடம் என்றும், தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா, கோலமி, நாய்கி, பெங்கூ, முன்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா ஆகியவை நடு திராவிடம் என்றும், குரூக்கு, மால்தோ, பிராகுய் ஆகியவை வட திராவிடம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது; மேலும் அண்மையில் கண்டறியப்பட்ட எருகளா, தங்கா, குரும்பா, சோளிகா ஆகிய நான்கு மொழிகளையும் சேர்த்து, திராவிட மொழிகள் மொத்தம் 28 என்றும் கூறுவர். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் கொண்டதாகவே காண முடிகிறது. ஏனென்றால், சொற்களின் தவிர்க்க முடியாத பகுதிதான் வேர்ச்சொல் என்பதும், அடிச்சொல் என்பதும் ஆகும். இவற்றில் எடுத்துக்காட்டாக, அடிச்சொல் திராவிட மொழிகள் ஒன்றைச் சான்றாக நாம் காணுகிற போது, தமிழில் கண் என்பது கண்ணு மலையாளத்திலும், கன்னடத்திலும் மருகுகிறது. இது போல் கன்னு, தெலுங்கிலும், குடகிலும் இவ்வாறாகத் தோன்றுகிறது. குரூக்கு மொழியில் ஃகன் என்றும் பர்சி மொழியில் கெண் என்றும், தோடா மொழியில் கொண் என்று தோன்றுகிறது. ஆக, இதன் அடிச்சொல் என்பது தமிழில் இருந்துதான் தோன்றியது என்பதை ஓர் ஆய்வின் தரவுகள் நமக்குச் சொல்லுகின்றன.
மேலும், ஒரு சான்றாக தமிழில் மூன்று என்று எண்ணைக் குறிப்பிடுகிறோம். மலையாளத்தில் மூணு என்றும், தெலுங்கில் மூடு என்றும், கன்னடத்தில் மூரு என்றும், துளுவில் மூசி என்றும் அழைக்கப்படுகிறது. இம்மொழிகளுக்கெல்லாம் மூலம் தமிழ் மொழியில் இருந்துதான் எழுத்துகளாக உருவாகி இருக்கிறது என்பது கண்டறிந்த ஆய்வுகளாகும்.
திராவிட மொழிகளில் உயிரெழுத்தில் இருந்த குறில், நெடில் வேறுபாடுகள், வேறுபடுத்த துணை செய்கின்றன. இவற்றில் பொருள் தன்மையை ஒட்டிப் பால் பாகுபாடு, திராவிட மொழிகளில் அமைந்துள்ளது. ஆனால், வடமொழியில் இவ்வாறு அமையவில்லை. உயிரற்ற பொருள்களும், கண்ணுக்கே புலப்படாத நுண்பொருள்களும் பால்பாகுபாடு படுத்தப்படுகின்றன. இம்மொழிகளில், கைவிரல்கள் பெண் பால் என்றும், கால் விரல்கள் ஆண் பால் என்றும் வேறுபடுத்தப்படுகின்றன. திராவிட மொழிகளில் அவ்வாறாக இல்லை. இவற்றில் ஆண் பால், பெண் பால் என்ற பகுப்பு உயர்திணையில் ஒருமையில்தான் காணப்படுகிறது. பன்மையில் அமையப் பெறவில்லை. அஃறிணைப் பொருள்களைப் பொருத்த மாத்திரத்தில், ஆண், பெண் என்ற பால் அடிப்படையில் பகுத்தாலும், அவற்றுக்கெனப் பால் காட்டும் விகுதியில் அமையப் பெறுவது இல்லை. இவற்றில் கடுவன் – மந்தி, களிறு – பிடி என்பது நாம் எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்.
இவற்றில் ஒரு படி மேலாகப் போய்ப் பார்த்தோமானால், ஆங்கிலம் போன்ற மொழிகளில், வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும். இவற்றுள் தினை, பால் + எண் ஆகியவை வேறுபாட்டைக் காட்டுவதில்லை.
திராவிட மொழிகளின் வினைச்சொற்கள் இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன. வந்தான் என்பது, உயர்திணை ஆண்பால் ஒருமை என்பதைச் சான்றாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மலையாள மொழி இவ்வியல்புகளுக்கு மாறாக அமைந்துள்ளது; திணை, பால், எண் ஆகியவற்றில் பாலறி கிளவிகள் இல்லை. தனிச்சொற்களே ஆண், பெண் பகுப்பை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறாக, திராவிட மொழிகளில் சில பொதுப்பண்புகளும், சிறப்புகளும் பெற்றிருந்தாலும் அவற்றுள் தமிழுக்கு என்று சிறப்பும், தனித்தன்மைகளும் அமைந்திருப்பதே, தமிழுக்குக் கிடைத்த மிகப் பெரும் பேறாகும்.
மலையாளத்தில் 12-ஆம் நூற்றாண்டில் இராமசரிதமும், 15-ஆம் நூற்றாண்டில் இலக்கணநூல் (இ)லீலாதிலகமும் அந்த மொழிக்கான பெருமைகளாகும். தெலுங்கில் 11-ஆம் நூற்றாண்டில் இலக்கியம் பாரதமும், 12-ஆம் நூற்றாண்டில் ஆந்திரா பாசாபூசணமும் அந்த மொழிக்கான மூலமாகும். அதே போன்று, கன்னடத்தில் 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கியம் கவிராசமார்க்கம் ஆகும். இவை இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் உள்ளதற்குச் சான்றாக உள்ளன. தமிழ் மொழியைப் பொருத்தவரை, 2-ஆம் நூற்றாண்டு அளவில் சங்க இலக்கியமும், 3-ஆம் நூற்றாண்டு அளவில் தொல்காப்பியமும் நமது மொழிக்கான பெருமை குறித்த தரவுகளாகும். ஆக, இவற்றிலிருந்துதான் தென்னிந்திய மொழிகள் தோன்றியிருக்கின்றன என்பது பல்வேறு ஆய்வுகளின் சான்றுகளாகும்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிசித் தீவு, தென்னாப்பிரிக்கா, மோரீசசு, பிரிட்டன், தயானா, மடகாசுகர், திரினிடாட்டு, ஆத்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தொன்மையும், இலக்கண இலக்கிய வளமும் உடைய தமிழ் மொழி பேசப்படுகிறது என்பது மொழி குறித்தான பெருமைகளாகும். தனித்த இலக்கண வளமும், பிறமொழித் தாக்கம் குறைந்தும், திராவிட மொழிகளுக்குத் தாய் மொழியாகவும், சொல் வளமும், சொல்லாட்சி உடையதாகவும் தமிழ் உள்ளது. மேலும், இந்திய அளவில் கல்வெட்டுத்துறையின் ஆராய்ச்சியின் பெரும் பகுதி தமிழில் இடம்பெற்றுள்ளதும் தொன்மையான மூத்த மொழி தமிழ் என்பதும் ஆய்வாளர்களின் பார்வையாகும். தனித்தன்மை மாறுபடாமல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குவதால், பல நூற்றாண்டுகள் கடந்தும் தழைத்தோங்கி விளங்குகிறது.
மொரீசியசு இலக்குவனார் தமிழ்ப்பள்ளியில் குறள்மலைக் குழு
குறள் மலைப் பணிகளின் ஓர் அங்கமாக, மொரீசியசு நாட்டில் இலக்குவனார் தமிழ்ப் பள்ளியில் குறள்மலைக் குழு சென்று கலந்துரையாடல் மேற்கொண்டது.
இலக்குவனார் படத்தை திறந்து வைத்துப் பிரான்சு சாம் விசய்உரையாற்றினார்.
மேலும் பேராசிரியர் திருமலை(செட்டி), பேராசிரியர் சொர்ணம், தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா சத்தியவேல்முருகனார், திரு. கந்தசாமி திரு.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
குறள் மலை பணிகளுக்காக மொரீசியசு நாட்டு அதிபர் மேதகு பரமசிவம் வையாபுரி அவர்களை அவர் மாளிகையில் குழுவினர் சந்தித்து உரையாடினர்.
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசு எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்குத், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது.
திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகளைஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் பாரதி தோட்டத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா அரங்கில் செவ்வாய்க்கிழமை (தை 24 / பிப்.07) அன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்குத், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் ஆ.முருகநாதன் தலைமையேற்றார். தமிழ்ச் சங்கச் செயலாளர் தணிக்கையாளர் ஏ.(உ)லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.
2017-ஆம் ஆண்டு வெளியான சிறந்த கதை நூலின் ஆசிரியர் கவிஞர் மு.முருகேசிற்கு உரூ.5000/- விருதுத்தொகையைக் குன்றக்குடி ஆதினம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் வழங்கினார். பாராட்டுச் சான்றிதழை வே.தொ.நு.(விஐடி) பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் வழங்கினார்.
சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாகக் கொன்றழிக்கப் பட்டுக்கொண்டிருந்த போது “அனைத்துத் தேயமே! ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என உரத்துக் குரல் கொடுத்தவாறு தீயிற்கே தன்னை இரையாக்கிய மாவீரன் ஈகைப்பேரொளி முருகதாசனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலண்டனில் வணக்க நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் (Holders Hill Rd, London NW7 1NB எனும் முகவரியில் அமைந்துள்ள) ஈகைப்பேரொளி முருகதாசன் முதலான 21 உயிர் ஈகையர் நினைவுக் கல்லறையில் ‘ஈகைப்பேரொளி’ முருகதாசன் உயிர்க்கொடை யளித்த (தியாகமரணமடைந்த) நாளான 12-02-2019 அன்று காலை 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரை மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.
மொழி மீதும், மண் மீதும், பற்றுக்கொண்டு தன் இனத்தின் விடுதலை வாழ்விற்காகத் தன்னையே ஒப்படைத்த அந்த உன்னதத் தியாகியின் நினைவு நாளில் நடைபெறும் இந் நிகழ்வில் அனைத்து மக்களும் கலந்துசிறப்பிப்பதே சிறந்த மரியாதையும், அஞ்சலியுமாகும்.
உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாகப் புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகை ப்பேரொளி முருகதாசன், சுவிட்சர்லாந்தில், செனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 பிப். 12 அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரித் தீக்குளித்தார்.
“7 பக்கங்களுக்கு உலகச் சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தீயில் வீரகாவியமானவரே ‘ஈகைப்பேரொளி’ எனப் போற்றப்படும் வருணகுலச்சிங்கம் முருகதாசன் அவர்கள் ஆவார்.
நாள்: தை 28, 2050, திங்கள் கிழமை, 11.02.2019 நேரம்: அந்திமாலை 6. 00 மணி – 8. 30 மணி; இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி
அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம்.
தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர்
உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறு கொண்டது.
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை(ரெட்டி)யாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வண்ணப்பாடல்கள் முதலான நம் தமிழ் நூல்களில் இசை,இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள் குறித்து மிகுதியான செய்திகள்இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் இசை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலாநந்த அடிகளார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் முதலான இசை அறிஞர்கள் இசைத்தமிழ் ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துப் பணியாற்றியுள்ளனர். அண்ணாமலை அரசர் தமிழிசை இயக்கம் கண்டு நிலைத்த புகழ்பெற்றார்.பொங்கு தமிழ் மன்றம்,தந்தை பெரியார் தமிழிசை மன்றம், முதலான அமைப்புகளும் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் இசைப்புரட்சிக்கு வித்திட்டன.
’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ அடியவர்களைக் கண்ட இத்தமிழ்நாட்டில் இசைத்தமிழ் ஆவணங்கள் யாவும் முறைப்படித் தொகுத்துவைக்கப்படாத ஒரு நிலை உள்ளது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாறுகொண்ட இசைத்தமிழின் வரலாற்றை விளக்கும் வகையில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் ‘தொல்லிசையும் கல்லிசையும்’ என்ற ஆவணப்படத்தை உருவாக்க உள்ளோம். இந்த ஆவணப்படத்தின்தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை மிகுந்த மகிழ்வுடன் அழைக்கின்றோம்.