‘அகரமுதல’ மின்னிதழ் இரண்டாம் ஆண்டில்
மகிழ்ச்சியுடன் அடிஎடுத்து வைக்கின்றது. இதன் வளர்ச்சியில் நாட்டம் கொண்ட
படிப்பாளர்கள் படைப்பாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்றியைத்
தெரிவிக்கிறோம்.
‘அகரமுதல’ மின்னிதழ் அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில் உள்ளது. இருப்பினும் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கின்றது.
நற்றமிழில் நடுவுநிலையுடனும் துணிவுடனும்
செய்திகளையும் படைப்புகளையும் தரும் மின்னிதழ் எனப் படிப்போர் பாராட்டுவது
மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ் மொழி, தமிழினம், ஈழத்தமிழர் நலன், கலை,
அறிவியல், தொல்லியல் முதலான பல்துறைச் செய்திகள், கதை, கவிதை, கட்டுரை,
நாடகம் முதலான படைப்புகள், அனைவரையும் கவர்ந்துள்ளன.
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர்
சி.இலக்குவனார் நடத்திய ‘குறள்நெறி’ இதழில் வெளிவந்த படைப்புகள் –
குறிப்பாக இந்தி எதிர்ப்புக் கட்டுரைகள் – அனைவராலும் பாராட்டப்படுகின்றன.
‘அகரமுதல’ மின்னிதழில் நடுகற்கள் குறித்துத் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.
இதன் கட்டுரையாளர் திரு ச.பாலமுருகனுக்குவல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழின்
ஆவணி 23, 2045 / செப்.8,2014 வார வல்லமையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது ‘அகரமுதல’ மின்னிதழுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் சேர்ப்பதாக உள்ளது.இந்த நேரத்தில் வல்லமை குழுவினருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு வைகை அனிசு
தொல்லியல், மரபியல் சார்ந்த செய்திகளைத் தருவது அயலகத்தவராலும்
போற்றப்படுகிறது. இதழில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் அரசு நடவடிக்கை
எடுக்கும் நேர்வுகளும் உள்ளன.
அகரமுதல் இதழ் படைப்புகள்,
வலைத்தளங்களிலும் மடலாடல் குழுக்களிலும் மின்னஞ்சல்களிலும் முகநூலிலும்,
நட்பு வளையத்திலும்(தமிழரின் முகநூல்) பகிர்முகத்திலும்(டுவீட்டர்)
பகிரப்படுகின்றன. இவை மூலமாகத் தவிர நேரடியாகத் தளத்திற்குச் சென்று
‘அகரமுதல’ மின்னிதழ் படிப்போரும் கணிசமான அளவில் உள்ளனர்.
இவ்வாண்டு படைப்புகள் எண்ணிக்கையும் படிப்போர் படைப்பாளர் எண்ணிக்கையும் மேலும் பெருக வேண்டும்.
ஒரே நேரத்தில் பல மின்னிதழ்களுக்கும்
படைப்புகள் அனுப்புவது அல்லது பிற தளத்தில் வெளிவந்த படைப்புகளை அனுப்புவது
என்பதைச் சிலர் கடைப்பிடிக்கின்றனர். அவற்றுள் மிகச்சிலவே
வெளியிடப்படுகின்றன. கடந்த காலப் படைப்புகள் எனில் நாளும் வெளியான இதழின்
பெயரும் குறிப்பிட்டு அனுப்பினால் வெளியிடலாம். ஆனால், நிகழ்காலத்தில்
அவ்வாறு வெளியிடுவது ஏற்றதாக இராது. எனவே, அவர்கள் பொறுத்தருள வேண்டும்.
பலர் “புதுக்கவிதை அனுப்பட்டுமா”
எனக் கேட்கின்றனர். அயற்சொல் கலப்பு இல்லாமல் அனுப்புமாறு வேண்டியதும்
பின்வாங்கி விடுகின்றனர். புதுக்கவிதை என்றாலே இலக்கணத்திற்கு முரணான
தமிழ்த்தூய்மையைச் சிதைக்கின்ற வரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று
எண்ணாமல் நல்ல தமிழ் மரபைப் போற்றும் கவிதைகள் அனுப்புமாறு கவிவாணர்களுக்கு
வேண்டுகிறோம். அறிவியல் கட்டுரை அனுப்ப முன்வருவோரிடம்
தமிழ்க்கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றதும் அவர்களும்
கட்டுரைகளை அளிக்க முன் வருவதில்லை. தமிழ் ஆர்வத்துடன் அறிவியல் கட்டுரைகள்
படைப்போர் தமிழ்க்கலைச்சொற்களையே பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பலர் அனுப்பும் படைப்புகள் சீருருவில் இன்மையால் நேரம் வீணாகின்றது. எனவே, சீருருவில் படைப்புகளை அனுப்புமாறும் வேண்டுகின்றோம்.
பெரும்பான்மையான தமிழ்த்துறையினரும்
தமிழ் அமைப்பினரும் கணிணிப் பயன்பாடு அறியாதவராக அல்லது கணிணியில் தமிழைப்
பயன்படுத்த அறியாதவராக உள்ளனர். இந்த நிலை மாற மாற, அகரமுதல மின்னிதழும்
வளர்ச்சியுறும்.
விழாக்களில் ‘அகரமுதல’ மின்னிதழைக்
குறிப்பிட்டுப் பாராட்டிவரும் விழா அமைப்பாளர்களுக்கும்
படைப்பாளர்களுக்கும் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், சந்திப்புகள்
வாயிலாக அகரமுதல மின்னிதழைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் அன்பர்களுக்கும்
நண்பர்களுக்கும் நன்றி என்றும் உரித்தாகும்!
படைப்புகள் அனுப்பியும் பகிர்ந்தும் மேலும் வளர்ச்சிப்பாதையில் ‘அகரமுதல’ மின்னிதழை நடைபோடச் செய்ய அனைவரையும் வேண்டுகிறோம்!
அன்னைத்தமிழில் அனைத்தையும் அளிப்போம்!
அகரமுதல மின்னிதழை வளர்ப்போம்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழினம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்