யூகி
பதிவு செய்த நாள் : June 15, 2011
சென்னை மையத்தில் உள்ள நாரத கானசபா. தமிழ் உணர்வாளர்களும், பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், வீர.சந்தானம், சத்யராஜ் போன்ற பலரும் திரண்ட நிலையில் நிறைந்திருந்தது அரங்கம்.
வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் வைகோ. அவருடைய தயாரிப்பிலும், ஊக்கத்திலும் உருவாகியிருந்தது ”வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகம்.
கி.பி.1730 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போட்டியிட்ட வேலுநாச்சியார் வரலாற்றின் ஒரு பகுதியைப் பின்னணியாகக் கொண்ட நாடகம். துவங்கியதில் இருந்து பல தகவல்களை விவரித்தபடி ஒரு ”வாய்ஸ் ஓவர்”
”ஆறுமொழிகளை அறிந்த நாச்சியார் தளராத ஊக்கத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்தவர். தமிழ் மண்ணை மீட்டவர். சிவகங்கை பூமிக்குச் செல்வோம்” என்று குரல் ஓய்ந்ததும் துவங்குகிறது நாடகம்.
பிரிட்டிஷாருடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்த சிவகங்கைச் சீமையில் மன்னரான முத்துவடுக நாதரை தந்திரமாக கோவிலில் வைத்துக் கொல்கிறார்கள் ஆங்கிலேயர். அவரது மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறார் மனைவியான வேலுநாச்சியார். அவருக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள் மருது சகோதரர்கள்.
ஆங்கிலேயப்படை விரட்டுகிறது. கண்காணித்துத் துரத்துகிறது. வேலுநாச்சியார் தப்பித்து மக்கள் ஒத்துழைப்புடன் திண்டுக்கல் சென்று திப்புசுல்தானின் உதவியுடன் சிவகங்கையை மறுபடியும் மீட்கிறார். மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். இதைத்தான் நாடகமாக்கியிருந்தார் இயக்குநரான ஸ்ரீராம் சர்மா. எண்பதுக்கும் மேற்பட்ட நடனக் குழுவினரின் நடனங்கள், ரகுநாதனின் இசை, மாறும் காட்சிகள் என்றிருந்தாலும் – காட்சி மாறும்போது இடையில் ஏற்படும் இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.
அத்துடன் வேலுநாச்சியாரை பிரிட்டிஷ்படை தேடும்போது அவருக்கு உதவியதற்காக பலியான உடையாள் என்கிற தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பற்றிய காட்சியில் – அவரை ஆங்கிலேயர் வந்து விசாரிப்பதும், அவள் சொல்ல மறுத்ததும் கொல்லப்படுகிற காட்சியை ஏன் இணைக்காமல் விட்டுவிட்டார்கள்?
வேலுநாச்சியாராக நடித்த மணிமேகலை சர்மாவின் நடிப்பும், விரைவான நடனமும் நாடகத்திற்கு வலுவான அம்சம். இன்னும் ராம்ஜி, பிரியதர்ஷிணி என்று பலருடைய பங்களிப்பு நாடகத்தைக் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றியிருக்கிறது. இஸ்லாமியப் பாடலையும் தகுந்த விதத்தில் பரத நாட்டிய மரபை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தில் இணைத்திருக்கிறார்கள்.
எதை இழந்தாலும் கால இடைவெளியில் தகுந்த துணை, மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதைக் காட்சிமொழியில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனையோ புராணங்களை முன்வைத்து நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் – தமிழகத்தின் வரலாற்றை மட்டுமல்ல ஈழம் சார்ந்த நம்பிக்கையையும் புத்துணர்வோடு சொல்கிறது நாடகம். நாடகத்தின் இறுதியில் வரும் ”ஈழ மின்னல் சூழ மின்னுதே” என்கிற வரிகள் அந்த நம்பிக்கையைத் தான் புலப்படுத்துகின்றன.
எந்த நாட்டிய மரபாக இருந்தாலும் அதை அரசியல் உள்ளடக்கத்திற்கும் பொருத்தமாகப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்த இந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம்.
”வேலுநாச்சியார் ஜான்சிராணிக்கு முன்பே வாழ்ந்து போராடியிருந்தாலும் அவரை சரித்திரப் புத்தகங்களில் காண முடியாதிருப்பது வருத்தமான விஷயம்.
அப்படி இதுவரை காட்டப்படாத சரித்திரத்தை வைகோ மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த நாடகம் ஒவ்வொரு பள்ளியிலும் நடக்க
வேண்டும். பெண்மைக்குப் பெருமை தரக்கூடிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் நடத்த வேண்டும். இந்தக் கதையைப் பார்க்கும் போது நாட்டுக்காக நாம் உயிரையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
இந்த மண்ணில் பிறந்த நடன அசைவுகளை நாம் கண்டோம். நல்ல விஷயங்கள் மக்களிடம் போய்ச்சேர வேண்டும்” என்றார் பத்மா சுப்ரமணியம்.
நிறைவாகப் பேசினார் நாடகத்தைத் தயாரித்த வைகோ. ”இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கலை. இனியொரு வீர சரித்திரத்திற்குத் தயாராக வேண்டும். இளைய தலைமுறைக்கு உணர்த்துவதற்காக இந்த நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஜான்சிராணி வாழ்ந்த 77 ஆண்டுகளுக்கு முன்னால் வாளேந்திப் போராடியவர் வேலுநாச்சியார். இந்த வரலாற்றைச் சொல்லும் நாடகம் என்பதால் இதைத் தயாரிப்பதற்கான
பொருட்செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றேன்.
“வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 19 ஒற்றுமைகள் இருக்கின்றன. இத்தகைய வீரம் பொருந்திய நாடகத்தை உயிரோட்டத்துடன் நடத்தியிருக்கிறார்கள். வீரமும், மானமும் தமிழர் மரபோடு வந்தவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும். ஈழம் அமைய வேண்டும், அமையும் என்பதை இதன் மூலம் உணர்த்தியிருக்கிறோம்.” என்று பேசிய வைகோ இந்த நாடக உருவாக்கத்திற்காகச் செலவழித்த காலம் – நான்கு மாதங்கள்.