சனி, 7 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 7 : முனைமுகத்தே துவாலு

 அகரமுதல

     07 January 2023      No Comment




(தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு? இன் தொடர்ச்சி)

முனைமுகத்தே துவாலு

காலநிலை மாற்றம் உலகை அச்சுறுத்தும் பெரும் நெருக்கடியாக முற்றி வருகிறது என்று சூழலியலர் எவ்வளவுதான் சொன்னாலும் அப்படியெல்லாம் இருக்காது என்று தன்னாறுதல் கொள்வதுதான் பாமர இயல்பு.

ஆனால் பாமரரும் புறந்தள்ள முடியாத படி துவாலு நாட்டைப் பற்றிய செய்திகளால் காலநிலை மாற்றம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

துவாலு — பசிஃபிக் கடலில் அருகருகே அமைந்த ஒன்பது தீவுகளைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறிய தீவுக் கூட்டம்இவற்றில் இரண்டு தீவுகள் கடல் அலைகளால் விரைவில் விழுங்கப்படும் நிலையில் உள்ளன. கடல் மட்டம் உயர உயர மணலரிப்பும் சேர்ந்து கொண்டு நிலம் சுருங்கிக் கொண்டிருக்கிறது, 

இது பற்றி கார்டியன் ஏடு மூன்றாண்டு முன்பே படங்களுடன் விரிவான செய்திக் கட்டுரை வெளியிட்டது. தங்கள் நாடு மூழ்கிக் கொண்டிருப்பதை துவாலு மக்கள் அறிந்துள்ளார்கள். வெளியிலிருந்து செல்கிறவர்களிடமெல்லாம் துவாலுவைக் கடல் விழுங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லாதவர்களே இல்லை. அது அவர்களின் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது.

கடலில் நீந்தும் போது முன்பெல்லாம் தரை தெரியும், பவழப் பாறைகள் தெரியும், இப்போது தெரிவதில்லை, எந்நேரமும் மேக மூட்டமாக உள்ளது, பவழம் செத்து விட்டது என்று வருந்துகிறார்கள்.

துவாலு  ஒசேனியாவில் இருக்கும் பொலினீசிய நாடு. இந்தப் பகுதியில் நமக்குத் தெரிந்த இரு நாடுகள்: ஆசுதிரேலியா, நியுசிலாந்து. தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாகக் கரும்புத் தோட்டத்தில் பாடுபட்டு, பாரதியால் பாடப்பெற்ற நாடு என்பதால் பிசித் தீவுகள் தெரியும். இப்போது துவாலுவைத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். பசிபிக் பெருங்கடலில் சுதிரேலியாவுக்கும் அவாய்க்கும் நடுவில் துவாலுவும் ஒரு தீவுத் துளி; சரியாகச் சொன்னால் ஒன்பது துளிகள்! மக்கள்தொகை பன்னீராயிரத்துக்குள்! உலகின் மிகச் சிறிய நாடுகளின் வரிசையில் நாலாமிடம். அஃதாவது துவாலுவை விடவும் சிறிய நாடுகள் இன்னும் மூன்று உள்ளன. ஐநா உறுப்பு நாடுகளில் மக்கள்தொகையில் போப்பரசர் ஆளும் வத்திகனுக்கு அடுத்த பெரிய நாடு துவாலு! நிலப்பரப்பு மொத்தம் 26 சதுர அயிரைப் பேரடி (கிலோ மீட்டர்)!

பெரும்பாலான தீவுகள் கடல் மட்டத்திலிருந்து மூன்றே பேரடி( மீட்டர்) உயரத்தில் உள்ளன. ஆகப் பெரிய தீவாகிய ஃபாங்கஃபேல் அதன் மிகக் குறுகலான நீட்சியில் வெறும் 20 பேரடி  அகலம்தான்! கடல் மேல் ஒரு பாலம் போலத்தான்!

புயல் மழையின் போதெல்லாம் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் அலைகள் சீறி வந்து தாக்கும்! கடலரக்கன் நாட்டை விழுங்குவது போல் இருக்கும் என்கிறார்கள் துவாலு மக்கள்.

கடல் மட்டம் உயர உயர நிலத்தடி நீரும் கெட்டுப் போகிறது. குடிநீருக்கு மழையை நம்பிருக்கும் நிலை! அடிக்கடி வறட்சி தாக்குவதால் வீட்டுத் தோட்டம் கூடப் போட வாய்ப்பில்லை. காய் கனிகள், உணவுப்பொருள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. கடல் மீன்களும் நஞ்சாகிப் போகின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பான நோய்கள் பரவி வருகின்றன. இவ்வகை நோய்களுக்கென்று உள்ளூர் மருத்துவமனையில் தனிப் பிரிவு இயங்கி வருகிறது.

அயல்நாடுகளிடமிருந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பிடமிருந்தும் பெறப்படும் உதவியையே துவாலு பெரிதும் நம்பியுள்ளது. கல்வியும் வேலைவாய்ப்பும் நாடி இளைஞர்கள் பலரும் ஆசுதிரேலியா, நியுசிலாந்து, பிசி ஆகிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.

வேறு வழியின்றி மக்கள் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டால் அவர்களே உலகின் முதல் காலநிலை மாற்ற ஏதிலியர்களாய் இருப்பார்கள்.

ஆனால் துவாலு அரசோ “நடப்பது நடக்கட்டும்! நாங்கள் வெளியேறப் போவதில்லை” என்று பறைசாற்றியுள்ளது.    

அடுத்த 50 முதல் 100 ஆண்டுக்குள் துவாலு மனித வாழ்வுக்குப் பொருந்தாமற்போய் விடும் என்பது அறிவியலர் கணிப்பு. அவ்வளவு காலம் தாங்காது என்பது உள்ளூர் மக்கள் அச்சம்.    

துவாலுவுக்கு அரசுண்டு, கொடியுண்டு, கொற்றமுண்டு! தலைமையமைச்சர் உண்டு! நாடுகளின் அவையில் இடமுண்டு! ஆனால் உலக நிலவரையிலிருந்து மறைந்து போகும் ஆபத்தை மடியில் கட்டிக் கொண்டு எப்படிப் பெருமை கொண்டாட முடியும்?

[ஒசேனியா, பொலினீசியா… இவற்றின் புவியியலும் அரசியலும் பற்றித் தனியாக எழுத வேண்டும்.]

துவாலுவுக்கு ஒரு புதிய பொறுப்பும் புதிய பெருமையும் வாய்த்திருப்பதாகச் சூழலியலர் நம்புகின்றனர். அது காலநிலை மாற்றத்தின் தீவிளைவுகளுக்கு எதிரான போராட்டத்தின் முனைமுகத்தே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையும் காலமும் இட்டுள்ள கட்டளை இது!

துவாலு அழிந்தால், அது மாந்தக் குல அழிவின் தொடக்கமாக அமையும். இந்த அழிவுக்கு நாமே காரணமாய் இருப்போம். தற்கொலைதான் நம் முடிவா? இல்லை என்றால் என்ன செய்யலாம்?  

தரவு: தியாகுவின் தாழி மடல் 7

வெள்ளி, 6 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு?

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 5 இன் தொடர்ச்சி)

துவாலு தெரியுமா உங்களுக்கு?

துவாலு தெரியுமா உங்களுக்கு? சில நாள் முன்னதாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். இது ஒரு நாட்டின் பெயர்.

நேற்று ஐநா மனிதவுரிமைப் பேரவையில் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) என்ற திட்டத்தில் இந்தியாவின் முறை. அந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலிருந்து நேரலையாகக் காணும் வாய்ப்பை மக்கள் கண்காணிப்பகம் ஏற்படுத்திக் கொடுத்தது. மொழிபெயர்ப்பாளனாக நான் பங்காற்றினேன். அப்போது தூதுவர்களின் இருக்கையில் நாடுகளின் பெயர்களை  எழுதி வைத்திருக்கக் கண்டேன். என் கண்ணில் அந்தப் பெயர் பட்டது. துவாலு!

இந்தியாவின் மனிதவுரிமைச் செயல்பாடு குறித்துப் பேச துவாலு சார்பில் அங்கு யாரும் இருந்தாகத் தெரியவில்லை.

பசிபிக்கு கடலில் அவாய்க்கும்(Hawaii) ஆத்திரேலியாவுக்கும் நடுவில் இருக்கும் இந்தத் தீவு நாட்டின் மக்கள்தொகை 2021 கணக்கெடுப்பின் படி 12,000 தான். இந்த நாட்டிற்கு இப்போது வந்துள்ள ஆபத்து நமக்கும் கவலையளிக்கக் கூடிய, எச்சரிக்கை தரக்கூடிய ஒன்று.

காலநிலை மாற்றமும் கடற்கோளும்:

துவாலு ஒரு சிவப்பு விளக்கு!

அவாசு (avaaz@avaaz.org) என்றொரு உலகளாவிய பரப்பியக்க வலைத்தளம் உள்ளது. கவலைக்குரிய பொதுச் சிக்கல்களில் அனைவரதும் கவனத்தை ஈர்த்து, இணைய வழியிலேயே கோரிக்கை விண்ணப்பங்களில் ஆதரவுக் கையொப்பங்கள் திரட்டும் பணியை அவாசு தொடர்ந்து செய்து வருகிறது.

அவாசிடமிருந்து அண்மையில் வந்த ஒரு மின்னஞ்சலில் துவாலு நாட்டின் தலைமையமைச்சர் திரு கௌசியா நதானோ ஓர் அவசரச் செய்தி விடுத்திருந்தார். அதில் “எமது தாயகம் உலக வரைபடத்திலிருந்து மறையப் போகிறது, எங்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்றுங்கள்” என்று அபயக் குரல் கொடுத்திருந்தார்.

ஏன்? எப்படி? காலநிலை மாற்றத்தால் துவாலு நாட்டைக் கடல் விழுங்கப் போகிறது! ஆனாலும் நாங்கள் கைகழுவப் போவதில்லை! தொடர்ந்து போராடுவோம்! என்கிறார். போராடுவோம் என்றால் என்ன போராட்டம்?

புவி வெப்பமாவதால் கடல் மட்டம் உயர்ந்து நிலத்தை விழுங்கி வருகிறது. புவி வெப்பமாவதற்கு என்ன காரணம்? பெற்றோல், எரிவாயு, நிலக்கரி ஆகிய புதைபடிவ எரிபொருள்களை ஆற்றல் மூலங்களாகப் பயன்படுத்துவது மென்மேலும் பெருகிவருவதால் கரியிருவளி(Carbon dioxide) போன்ற பசுங்குடில் வாயுக்கள் உமிழப்பட்டுப் புவி வெப்பமாகிறது. இதனால் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது. இது அளவுமீறிப் போனால் கடல் கரையேறி, நிலத்தை விழுங்கி விடும். 

ஆகவே காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் என்பது புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டுக்கு எதிரான போராட்டம் ஆகிறது.

எகித்தில் காலநிலை உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்கு முன் கௌசியா நதானோ விடுத்ததே மேற்கண்ட அவசரச் செய்தி. இந்த மாநாட்டின் நோக்கம் புதைபடிவ எரிபொருள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதற்குப் புதிய உலக ஒப்பந்தம் வரைவதாகும்.

காலநிலை மாற்றத்தால் பெரும் பேரழிவு ஏற்படும் என்று கிரெடா துன்பெர்க்கு உலகத் தலைவர்களின் முகத்துக்கு நேரே எச்சரித்தது நினைவிருக்கலாம். உண்மையில் அவர்கள் யாருக்கும் அது உரைக்கவே இல்லை.

துவாலுதானே மூழ்கப் போகிறது! ஆத்திரேலியா அல்லவே! அமெரிக்கா அல்லவே! காலநிலை மாற்றச் சீரழிவால் முதலில் தாக்குறும் நலிந்த நாடுகள் பற்றி வல்லரசுகளுக்குக் கவலை இல்லை.

நலிந்த நாடுகளில் ஒன்றாகத்தான் துவாலு குரல் கொடுக்கிறது. காலநிலை மாற்றக் கேட்டினால் அங்குலம் அங்குலமாக மூழ்கிக் கொண்டிருக்கும் பசிபிக்கு தீவுகள் சார்பில் அஃது உலக நாடுகளுக்கு அறைகூவல் விடுகிறது.

அணுவாய்தப் பரவல் தடை ஒப்பந்தம் போல் புதைபடிவ எரிபொருள் பரவல் தடை ஒப்பந்தம் தேவைப்படுகிறது. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து இறுதியில்  இல்லாமற்செய்திட இந்த ஒப்பந்தம் வகை செய்வதாக இருக்க வேண்டும்.

உலகத் தலைவர்கள் ஒத்துழைப்பார்களா? உண்மையாக ஒத்துழைக்க மாட்டார்கள். அந்தந்த நாட்டு மக்களும் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க வேண்டும்.

நூறு நோபல் பரிசாளர்களும், உலகெங்கும் ஆயிரக்கணக்கான அறிவியலர்களும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டுப் பரவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என்பதை கௌசியா நதானோ சுட்டிக் காட்டுகிறார்.

இன்று நான்! நாளை நீ! இதுதான் துவாலு உலகிற்குத் தரும் எச்சரிக்கை! இன்று துவாலுவைக் காப்பதில் நாம் வெற்றி பெற்றால் அது உலகைக் காக்கும் போராட்டத்துக்கு உந்தம் தரும்.

துவாலு ஓர் எச்சரிக்கை விளக்கு! விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்!

காலநிலை மாற்றம் குறித்து அறியவும் உணரவும் வேண்டிய பலவும் உண்டு. அடுத்தடுத்துப் பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 5 & 6

வியாழன், 5 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 5 - பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும்

 அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 4 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 5

பாலியலும் புரட்சிக்கான ஊக்கமும்

பாலியல் சிக்கல்களில் புரட்சிக்குள்ள அக்கறைக்கு என்ன அடிப்படை? கிளாராவிடம் விளக்கிச் சொல்கிறார் மா இலெனின்:

புரட்சிக்குக் கவனக் குவிப்பு தேவை, ஆற்றல் பெருக்கம் தேவை. மக்கள் திரளிடமிருந்தும் தனியாட்களிடமிருந்தும் தேவை. டி’அனுன்சியோவின் சீரழிந்த நாயகர்களுக்கும் நாயகிகளுக்கும் இயல்பானவை என்னும் படியான களியாட்ட நிலைமைகளைப் புரட்சியால் சகித்துக் கொள்ள முடியாது. பாலியல் வாழ்வில் ஒழுங்கீனம் என்பது முதலாண்மைத்துக்குரியது, அது சீரழிவின் வெளிப்பாடு.”

[கேப்ரியல் டி‘அனுன்சியோ இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். பிற்காலத்தில் பாசிச இயக்கத்தின் முன்னோடியாக மாறியவர். அவரது இலக்கியப் படைப்புகளில் காமமும் ஒழுக்கக் கேடுமே நிறைந்திருந்தன. டி‘அனுன்சியோ சொந்த வாழ்க்கையிலும் அவ்வாறே இருந்தார். ஒழுக்கக்கேட்டுக்கு அவரும் அவர் படைத்த நாயக நாயகிகளும் எடுத்துக் காட்டாக விளங்கினர்.]

மா இலெனின் பார்வையில், காமக் களியாட்டங்கள் முதலாண்மைச் சீரழிவின் வெளிப்பாடு! மாறாக,

“பாட்டாளி வகுப்பு எழுந்து வரும் வகுப்பாகும். அதற்கு எந்த விதமான போதை அல்லது ஊக்க மருந்தும் தேவை இல்லை. பாலியல் மிகைப்பாடும் தேவை இல்லை. சாராயக் குடியும் தேவை இல்லை. அது முதலாண்மையின் வெட்கக்கேட்டை, அழுக்கை, காட்டுமிராண்டித் தனத்தை, மறக்கக் கூடாது, மறக்காது. வகுப்புகள் (வருக்கங்கள்) என்ற சூழலிலிருந்து, பொதுமை இலட்சியத்திலிருந்து அது மிக மிக வலுவான போராட்ட ஊக்கம் பெறுகிறது. அதற்குத் தேவை தெளிவு, தெளிவு, மீண்டும் தெளிவு. ஆகவே மீண்டும் சொல்கிறேன்: ஆற்றல்களை நலிவுறச் செய்தல் வேண்டா, வீணடித்தல் வேண்டா, அழித்தல் வேண்டா. தன்னை அடக்கியாளுதல், தற்கட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் ஆகாது, காதலில் கூட அப்படி ஆகாது.”

பெண்கள் சிக்கல் பற்றிய உரையாடல்தான் திசை மாறிப் பாலியல் சிக்கல்கள் பற்றிய பேச்சாயிற்று. இலெனின் தொடர்கிறார்:

“ஆனால் மன்னியுங்கள் கிளாரா, நம் உரையாடலின் தொடக்கப் புள்ளியிலிருந்து விலகிப் போய் விட்டேன். நீங்கள் ஏன் என்னை வழிப்படுத்தவில்லை? வாய் போன போக்கில் போய் விட்டேன். நம் இளைஞர்களின் எதிர்காலம் பற்றி எனக்கு ஆழ்ந்த கவலை. அது புரட்சியின் ஒரு பகுதி. தீங்கான போக்குகள் தலையெடுத்தால்,  விதவிதமான களைகளின் வேர்களைப் போல முதலாண்மைக் குமுகத்திலிருந்து புரட்சி உலகிற்குள் அவை படர்ந்தால், முளையிலேயே அவற்றைக் களைதல் நன்று. இந்த வினாக்களும் பெண்கள் சிக்கலின் பகுதியே.”

கிளாரா எழுதிய இலெனின் நினைவுக் குறிப்புகளில் பாலியல் சிக்கல்கள் தொடர்பான இந்தக் கருத்துகள் காலங்கடந்தும் நிலங்கடந்தும் நமக்குப் பொருத்தப்பாடு கொண்டவை எனக் கருதியதால் தாழி மடலில் அவற்றை எடுத்துக் காட்டினேன். ஈண்டு இது போதும் என அடுத்த செய்திக்கு நகரலாம் என நினைக்கிறேன்.

தரவு – தாழி மடல் 5

புதன், 4 ஜனவரி, 2023

தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்தரங்கம்

 அகரமுதல


உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.   (திருவள்ளுவர்,திருக்குறள் – 1032)

தமிழர் திருநாள்-பொங்கற் புதுநாள்

திருவள்ளுவர் புத்தாண்டு

வாழ்த்தரங்கம்

தமிழே விழி !                                                                                                தமிழா விழி  !

இணைய உரையரங்கம்:

மார்கழி 24, 2053 ஞாயிறு 08.01.2023

காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: தமிழாசிரியர் ()ரூபி

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

முனைவர் தாமரை

முனைவர் இராச.கலைவாணி

உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

நிறைவுரை: தோழர் தியாகு

நன்றியுரை : திருவாட்டி புனிதா சிவக்குமார்

 அன்புடன்

தமிழ்க்காப்புக்கழகம்  &  இலக்குவனார் இலக்கிய இணையம்



தோழர் தியாகு எழுதுகிறார் 4 - இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?

 அகரமுதல







(தோழர் தியாகு எழுதுகிறார் 3 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 4

இளமையின் தேவை: துறவா? துய்ப்பு வெறியா?  

இளையோரிடம் வளர்ந்து வரும் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடும்,  பாலியல் விடுமை ஆர்வமும் குறித்து கிளாரா செட்கினுடன் உரையாடும் மா இலெனின் இந்தப் போக்குகளை மார்க்குசிய நோக்கில் குற்றாய்வு செய்யக் கண்டோம்.

‘இலெனினுக்கு வயதாகி விட்டது, அதனால்தான் இப்படிச் சிந்திக்கிறார்’ என்று கிளாரா எண்ணி விட மாட்டார் என்பதை இலெனின் அறிந்தவரே என்றாலும் “நான் வாழ்க்கையை வெறுத்து விட்ட துறவி அல்ல” என்று அறிவித்துக் கொள்கிறார். இளம் வயதினரின் நலனிலும் குமுக நலனிலும் புரட்சியின் நலனிலும் அக்கறை கொண்டு விளக்குகிறார்:

“தோழரே, கேளுங்கள்! குறிப்பாகச் சொன்னால் இளம் வயதினருக்கு வாழ்க்கையின் மகிழ்ச்சியும், ஆற்றலும் தேவை. நலம்பயக்கும் விளையாட்டு, நீச்சல், ஓட்டம், நடை… ஒவ்வொரு வகை உடற்பயிற்சியும் தேவை. பன்முக அறிவுத் துடிப்பு தேவை, கற்றல், படித்தல், ஆராய்தல், இயன்ற வரை பொதுவாக இருக்க வேண்டும். அது பாலியல் சிக்கல்கள் குறித்தும், “முழு அளவுக்கு வாழ்ந்து பார்ப்பது” என்பார்களே அது குறித்தும் நிலைபேறுடைய கோட்பாடுகளையும் உரையாடல்களையும் இளையோர்க்கு வழங்கும். நலமிகு உடல்கள்! நலமிகு உள்ளங்கள்! பிக்குவாகவும் இருக்கத் தேவையில்லை இயான் துவானாகவும்(John Duane) இருக்கத் தேவையில்லை. இரண்டுக்கும் இடையில் செருமானிய பிலித்தியன்களின் போக்கும் தேவையில்லை.” 

பிக்கு என்றால் புரிகிறது. துறவியாக இருக்க வேண்டியதில்லை என்கிறார். தான் இயூவான்(Don Juan) என்பது பெண் வேட்டைக்கான இசுபானியத் தொன்மம். தீராத விளையாட்டுப் பிள்ளை! ‘பிளேபாய்’! [பிலித்தியர்கள் என்ற சொல்லை இலெனின் எதிர்மறைக் குறிப்பாக ஆள்வது இங்கே மட்டுமன்று. விவிலியத்தில் பாலத்தீனர்களை இப்படிக் குறிப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஒருபுறம் இன்ப நாட்டம் கொண்டவர்களாகவும் மறுபுறம் அறிவுக்கூர்மை அற்றவர்களாகவும் இருந்ததாக ஒரு கருத்து நிலவிற்று. இனக் காழ்ப்பிப்னால் எழுந்த தப்பெண்ணமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களைக் குறிக்கும் சொல்லாக இது ஐரோப்பிய மொழிகளில் நுழைந்து விட்டது. இக்காலத்தில் இந்தச் சொல்லை யாரும் இவ்வாறு ஆள்வதில்லை. ஆனால் பழைய இலக்கியத்தில் இச்சொல் வரும் போதெல்லாம் மொழி பெயர்ப்பாளர்களுக்குத் தலைவலிதான்! ஒருசிலர் பிலித்தியர்கள் என்பதை அற்பவாதிகள் என்று தமிழாக்கம் செய்வதுண்டு. மரமண்டைகள் என்றும் சொல்லலாம். நான் பிலித்தியர்கள் என்றே சொல்லி விடுகிறேன். இப்போது வழக்கொழிந்து விட்டது என்பதால் பாலத்தீனர்கள் யாரும் இந்தச் சொல்லாட்சிக்கு மறுப்புச் சொல்லவில்லை எனத் தோன்றுகிறது.] 

கிளாராவிடம் எதிர்மறை எடுத்துக்காட்டாக இளம் தோழர் ஒருவரை (பெயர் குறிப்பிடாமல்) இலெனின் சுட்டுகின்றார்:

“அந்த இளம் தோழனை ____ உங்களுக்குத் தெரியும் அல்லவா? அருமையான இளைஞன்! படுசுட்டியான திறமைசாலி! ஆனால் அவனால் நன்மை ஏதும் விளையப் போவதில்லை என்பது என் அச்சம். இன்று ஒரு காதல், நாளை ஒரு காதல் என்று மாற்றிக் கொண்டே செல்கிறான். இஃது அரசியல் போராட்டத்துக்கு சரிவராது. புரட்சிக்குச் சரிவராது.”

பெண்களைப் பற்றியும் பேசுகிறார்:

“சொந்த முறையிலான காதல் நாட்டங்களை அரசியலோடு குழப்பிக் கொள்ளும் பெண்களை நம்பி நிற்க முடியுமா? போராட்டத்தில் உறுதியாகத் தாக்குப் பிடிப்பார்களா? என்னால் உறுதியளிக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணையும் துரத்திக் கொண்டும், ஒவ்வொரு  பெண்ணிடமும் சிக்கிக் கொண்டும் தத்தளிக்கும் ஆண்களும் கூட இப்படித்தான்! இல்லை, இல்லை, புரட்சிக்கு இந்தப் போக்கு ஒத்துவராது.”

இதைச் சொல்லி விட்டு இலெனின் துள்ளி எழுந்தார், மேசையை ஓங்கித் தட்டினார், சிறிது நேரம் அறையை அளப்பது போல் நடந்தார். புரட்சிக்கு என்ன தேவை? யார் தேவை? என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லத் தொடங்கினார். கிளாரா அந்தக் காட்சியையும் சொற்களையும் நினைவுக் குறிப்புகளாகப் பதிகிறார்.

(நாளை பார்ப்போம்)

தரவு: தியாகுவின் தாழி மடல் 4

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 3-காமத்தின் உடலியலும் காதலின் குமுகியலும்

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 2 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 3

காமத்தின் உடலியலும் காதலின் குமுகியலும்

சில ஆண்டுகள் முன்னதாகச் சூனியர் விகடனில் ‘காதல் படிக்கட்டுகள்’ என்ற கட்டுரைத் தொடர் வெளிவந்தது. காதலைச் சிறப்பித்தும் அவரவர் காதல் பட்டறிவைச் சொல்லியும் எழுத்தாளர்கள் / கலைஞர்கள் / பாவலர்கள் / அரசியல் தலைவர்கள் எழுதினார்கள். குமுக நோக்கில் காதல் என்பதை மனத்திற்கொண்டு நானும் எழுதியிருந்தேன். இது காதல் பற்றிய நல்லதொரு தொகுப்பு. இது பல்வேறு காதல் பார்வைகளின் பூங்கொத்து.

இந்தப் பார்வைகளில் ஒன்று: காதல் என்பதெல்லாம் வெறும் சுரப்பு நீர்களின் ஆட்டமே தவிர வேறில்லை என்பதாக இருந்தது. இதுதான் காதல் பற்றிய ‘பகுத்தறிவுக் கொள்கை’ என்ற கருத்து சிலருக்குண்டு. இதன் பொருள்: காதல் வேட்கை என்பது வெறும் காம வேட்கையே தவிர வேறல்லவாம்! இந்த நோக்கில் காதல் விடுமையும் பாலியல் விடுமையும் ஒன்றுதானாம்!  

பாலியல் விடுமையும் காதல் விடுமையும் ஒன்றல்ல; காதல் விடுமை குமுக நலனுக்குகந்தது என்று மார்க்குசியம் போற்றுகிறது. காதலினால் இன்பம் உண்டு, காதலிப்போர்க்கு மட்டுமல்ல, அவர்கள் வாழும் குமுகத்துக்கே இன்பமும் நன்மையும் உண்டு. நம் காலத்தில் சாதியொழிப்பில் காதலுக்குள்ள பங்கினைப் போற்றுகின்றோம்.

அதே போது பாலியல் விடுமையைக் குமுகத்துக்குப் பகை (சமூக விரோதம்) என்று மா இலெனின் சாடக் கண்டோம்.

பாலியல் விருப்பமும் வேட்கையும் இயற்கை சார்ந்தவை. குமுக அமைப்புகளைப் பொறுத்தவை அல்ல. ஆனால் இயற்கையிலிருந்து எழும் பாலியல் வேட்கை குமுகத் தன்மையால் செம்மையுறும் போதுதான் காதல் என்ற உயர்நிலை அடைகிறது. இதைத்தான் கிளரா செட்கினிடம் மா இலெனின் எடுத்துரைக்கிறார்.

இரண்டாவதாகப், பண்பாட்டு வாழ்வில் காதலுக்குரிய தனியிடத்தை மறுத்து அதனைப் பொருளியல் நலன்களின் வெளிப்பாடாகக் கருதும் கொச்சையான வகுப்புப் பார்வையும் (வருக்கப் பார்வை) மார்க்குசியத்தின் பெயரால் கூத்தடிக்கிறது.

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை, வருக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்று தோழர் மாவோ கூறியதாகத் திருமண அழைப்பிதழிலேயே அச்சிட்டுத் தங்கள் மனத்தில் பட்டதையெல்லாம் மாவோ தலையில் கட்டும் போக்கும் உள்ளது. அவர் எங்கே எப்போது சொன்னார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. முதலாண்மை அமைப்பில் எல்லா உறவுகளும் காசுபண உறவுகளாகச் சீரழிந்திருப்பது மெய். ஆனால் அதை மறுத்து வெல்வதுதான் காதல்நெறி. சாதிய அமைப்பில் சாதியை மறுக்கும் காதல் திருமணங்கள் போல், முதலாண்மை அமைப்பிலும் முதலாண்மை அமைப்பை மறுக்கும் காதல் திருமணங்களுக்கு உறுதியான இடமுண்டு.

சாதியமைப்பில் சாதித் திருமணங்களும் முதலாண்மை அமைப்பில் முதலாண்மைத் திருமணங்களும் தவிர்க்கவியலாதவை என்று சொல்வதற்கு மார்க்குசியம், பகுத்தறிவு, முற்போக்கு எல்லாம் எதற்கு?

தாகம் தணிக்கத் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். பாலியல் வேட்கையும் தணிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் இதற்குக் குமுக வரையறைகள் உண்டு, கடைப்பிடிக்க வேண்டிய விழுமியங்கள் உண்டு. நீர் அருந்துவதையே எடுத்துக் கொள்வோம். இயல்பான சூழலில் இயல்பான மாந்தர் எவரும் சாக்கடையில் படுத்துக் கொண்டு குட்டையில் தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரை அள்ளிப் பருகுவதுண்டா? (நம் கழக(டாசுமாக்) குடிமக்களை மறந்து விடுங்கள்.) அல்லது பலரும் கவ்விக் குடித்து எச்சில் பட்டுப் பிசுபிசுக்கும் கோப்பையில் தண்ணீர் குடிப்பதுண்டா? இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு உவமைக்குள் அடைபடாமல் இலெனின் சொல்கிறார்:

“குமுகக் கூறுதான் அனைத்திலும் முதன்மையானது. நீர் பருகுதல் அவரவர்க்கே உரியது. ஆனால் காதல் ஈருயிர்கள் தொடர்பான ஒன்று; இதிலிருந்து ஒரு மூன்றாவது உயிரும் பிறக்கிறது. இவ்வாறு குமுக அக்கறைக்குரியதாகிறது. குமுகாயத்தின் பால் ஒரு கடமையும் பிறக்கிறது.”

இல்வாழ்க்கை பண்பும் பயனும் உடைத்தாவது இணையரின் நலனுக்கும் குமுக நலனுக்கும் தேவை. குமுகக் கடமையும் குமுகப் பொறுப்பும் இல்லாமல் எப்படியும் யாரோடும் காமப்பசியைத் தணித்துக் கொள்வதற்கான பாலியல் விடுமையைக் காதல் விடுமையாக மார்க்குசியர் ஒப்பார். மா இலெனின் இந்தச் செய்தியை கிளாரா செட்கினிடம் சாற்றக் கேளுங்கள்:

“ஒரு பொதுமையனாக (கம்யூனிசுட்டாக) எனக்கு இந்தக் கோப்பைத் தண்ணீர்க் கோட்பாட்டிடம் எள்முனையளவும் பரிவு கிடையாது. ‘காதலில் மனநிறைவு’ என்ற நளினமான பெயர் சூடி வந்தாலும் அதனை ஏற்பதற்கில்லை. எப்படிப் பார்த்தாலும், இந்தக் காதல் விடுதலை புதியதும் அன்று, பொதுமையும் அன்று. உங்களுக்கு நினைவிருக்கும், மீப்புனைவு இலக்கியத்தில் இது ‘இதயத்தின் விடுதலை’ என்று போதனை செய்யப்பட்டது. முதலாண்மை நடைமுறையில் தோல் விடுதலை ஆகி விட்டது. இன்றைக் காட்டிலும் அந்தக் காலத்தில் அது கூடுதல் திறமையுடன் போதனை செய்யப்பட்டது. நடைமுறை எப்படி என்று என்னால் கணிக்க இயலாது. நான் எனது குற்றாய்வின் வழி துறவு போதனை செய்ய நினைக்கவில்லை. இல்லவே இல்லை. பொதுமை என்பது துறவைக் கூட்டி வராது. அது வாழ்க்கையின் மகிழ்வை, வாழ்க்கையின் வலுவைக் கூட்டி வரும். மனநிறைவான காதல் வாழ்வு அதற்குத் துணை செய்யும். ஆனால் பாலியல் செய்திகளில் இப்போது பரவலாகக் காணப்படும் மீத்துடிப்பானது வாழ்க்கைக்கு மகிழ்வும் வலிவும் தராமல், அவற்றைப் பறித்துக் கொள்ளவே செய்யும் என்பதே என் கருத்து. புரட்சிக் காலத்தில் இது மோசம், படுமோசம்.”

காதலைப் போற்றுவதில் தடையில்லை! காதலில் காமத்துக்குரிய இடத்தை அறிந்தேற்பதிலும் தடையில்லை. அதனைக் குமுகியலற்ற வெறும் உடலியல் தேவையாகக் கருதுவதுதான் கேடு! இளைஞர்களின் வாழ்க்கையில் எல்லா வகையிலும் மகிழ்வு நிறைந்திருக்க வேண்டும், பாலியல் வகையிலும் கூட! இலெனின் சொல்லி விட்டாரே, நாம் வாழ்க்கையை வெறுத்த துறவிகள் அல்லோம். ஆனால்…. நாளை பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 3

திங்கள், 2 ஜனவரி, 2023

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா, எழும்பூர், சென்னை

 அகரமுதல


நாள் :

மார்கழி 21, 2053 / 05-01-2023, வியாழக்கிழமை

மாலை 5:00 மணி முதல் 9;00 மணி வரை

இடம் :

இரமதா ஓட்டல்,

எண் : 2அ, பொன்னியம்மன் கோயில் தெரு,

எழும்பூர், சென்னை – 600008

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா

இருபத்தோராம் நூற்றாண்டில் 21 படலங்களுடன் வெளியாகும் இணையில்லாப் புராணம்

இசுலாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப் புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் இரலி புராணம்

முதலாவது உதய காண்டம்

முத்தமிழ் ஞானி, அல் ஆரிஃபு பில்லாஃகு சங்கைக்குரிய சமாலிய்யா அசய்யித்து கலீல் அவ்ன் அல் அசனிய்யுல் ஃகாசுமிய் மௌலானா  (சே.எசு.கே.ஏ.ஏ.எச்சு. மௌலானா) அவர்களின்  கைவண்ணத்தில் 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற இசுலாமியத் தமிழ்க் காவியம்.

அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர், இசுலாமியப் பேரரசின்  இரண்டாவது கலீபா உமர் இபுனு கத்தாப்பு இரலியல்லாஃகு அன்கு அவர்களின் அற்புத வரலாற்றின் முதற் பாகம் செந்தமிழ்ப் புராணமாக மலர்ந்திருக்கிறது.

மூன்று பெரிய காண்டங்களாக அமையப் பெற்றுள்ள இப்புராணத்தின் முதலாவது உதய காண்டம் தற்போது உலகத் தமிழ் இலக்கிய வானில் மங்காச் சுடர்விட்டு ஒளிவிடத் துவங்கியுள்ளது ,  எல்லாப் புகழும் ஏக இறைக்கே உரித்தாகட்டும்.

முதலாவது உதய காண்டம்  21 படலங்களையும் 682 பாடல்களையும் (செய்யுள்களையும்) உள்ளடக்கியது,  அனைத்துச் செய்யுள்களுக்கும்  கொண்டுகூட்டு,  பொருள்,  குறிப்பு என பூரணமான விளக்கத்துடன் வெளியாகியுள்ளது.

தலைமை

கலைமாமணி, முனைவர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மசுதான் அவர்கள்

சிறுபான்மையினர் நலன் – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.

உயர்திரு சா.பீட்டர் அல்போன்சு

தலைவர், தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையம்.

முனீருல் மில்லத்து பேராசிரியர் காதர் முகைதீன்

தேசியத் தலைவர், இந்திய யூனியன் முசுலிம் லீக்கு

குறிப்பு: நூல்  வெளியீட்டு விழா அழைப்பிதழ்  நூலாசிரியர் விவரங்கள் இத்துடன் தரப்பட்டுள்ளன.