இலங்கைப் போர் முடிந்தது.!. தமிழ் பெண்களின் வாழ்க்கைப் போர்?
ஒரு நாள் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவை
திறந்ததும், முன்பின் தெரியாத இரண்டு பேர் நின்றிருந்தார்கள். அவர்கள்
தங்களை எனது கணவரின் நண்பர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். உள்ளே
அழைத்து உட்கார வைத்த போது அவர்களை என்னை பாலியல் வன்கொடுமை செய்ய
முயன்றனர். நான் கத்தியதால் தப்பியோடினர். ஆனால், போவதற்கு முன்பு மீண்டும்
வருவோம் என்று மிரட்டியபடியே சென்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, பயத்துடனும், எந்த ஆதரவும் இல்லாத நிர்கதியான
தமிழ் பெண் என்ன செய்வது என்று தெரியாமல், தனது இரண்டு பிள்ளைகளை கூட்டிக்
கொண்டு, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு போர் நடந்த வடக்குப் பகுதிக்கு
சென்றுவிட்டாள்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிரான போர் வேண்டுமானால்
ஓய்ந்திருக்கலாம். ஆனால், இலங்கை எனும் தீவில் வசித்து வரும் தமிழ்
பெண்களின் வாழ்க்கைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. நிற்கதியாக்கப்பட்ட
அபலைப் பெண்கள் பலரும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுவது அன்றாட
நிகழ்வாகிவிட்டது.
2009ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில், தனது கணவரை இழந்தவர் கௌரி
(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும்
கிழக்கு முகாம்களில் கௌரியோடு சேர்த்து சுமார் 89 ஆயிரம் போரால்
விதவைகளாக்கப்பட்ட பெண்கள் வசித்து வருகின்றனர். இதில் 40 ஆயிரம் பெண்கள்,
தங்களது குடும்பத்துக்காக தாங்களே கூலி வேலை செய்து பிழைத்து வாழ்க்கையை
ஓட்டுகிறார்கள். இவர்களில் பலரும், தங்களது குடும்ப வறுமையையோ, தங்களது
உறவினர்களையோ இழந்த துக்கம் அவர்களது வாட்டுவதற்கு பதிலாக, அவர்களது
பாதுகாப்பற்ற நிலையே அவர்களை வெகுவாக வாட்டி வருகிறது என்கிறது சர்வதேச
சிறுபான்மையினருக்கான உரிமை குழு (எம்.ஆர்.ஜி.)
போருக்குப் பிறகு அரசு முகாம்களில் தங்கியுள்ள பெண்களிடம் எம்.ஆர்.ஜி.
சார்பில் சந்தித்த மிஹ்லர் எடுத்த பேட்டியில், போர் முடிந்த பிறகு, 4
ஆண்டுகளில் இந்த ஆண்டு, பாலியல் தொந்தரவுகள் அதிகரித்திருப்பதாகவும்,
மக்கள் வசிக்கும் பகுதியில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்ட பிறகே இது
அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் நாங்கள் இருப்பதால், நாங்கள்
அவர்களுக்கு சொந்தம் என்று நினைக்கிறார்கள். மேலும், அவர்கள் போரில்
ஜெயித்து விட்டதால், என்னவேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம் என்றும்
கருதுவதாகவும் பெண்கள் கூறுகிறார்கள்.
போர் முடிந்த பிறகு சுமார் 400 பலாத்கார புகார்கள் எழுந்தன. ஆனால், அவை
ஒன்று கூட விசாரணை நடத்தப்படவில்லை என்று உள்ளூர் மனித உரிமை அமைப்பாளர்
தெரிவிக்கிறார். இதனால் பலதும் புகார் கூற வருவதேயில்லை. இங்கு யாருக்கும்
நியாயம் கிடைக்கப்போவதில்லை என்றார் அவர்.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் எந்த நீதி, நியாயமும்
கடைபிடிக்கப்படுவதில்லை. இதுவரை ஒரு இலங்கை ராணுவ வீரர் மீதும் பாலியல்
வன்கொடுமை அல்லது போரில் மனித உரிமை மீறல் வழக்குப் பதிவோ விசாரணையோ
நடத்தப்படவில்லை என்கிறார் மிஹ்லர்.
இதனால், பெண்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அபலைப் பெண்களை காமக் கொடூரர்கள் வட்டமிட்டவண்ணம் உள்ளனர்.
எம்.ஆர்.ஜி.யின் அறிக்கைக்கு இலங்கையின் ராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் பெண்களுக்கு எதிராக நடப்பதாகக் கூறப்படும் அனைத்து
குற்றச்சாட்டுக்களையும் நான் உறுதியாக மறுக்கிறேன். இலங்கை அரசுக்கு எதிராக
தமிழர்கள் பொய்ப் புகார்களை கூறி வருகின்றனர் என்கிறார் அவர்.
ஆனால், 2007 முதல் 2012 வரை வடக்கு இலங்கையில் 17 ராணுவ வீரர்கள்
பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டது பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறது
ராணுவ வட்டாரங்கள்.
தமிழ் மக்களின் தனி ஈழக் கனவு தகர்ந்த போது, அவர்களது வாழ்க்கையும் கனவாகவே தகர்ந்துவிட்டது போல உணர்கிறார்கள் பெண்கள்...