ஆள்வோர் பொறுப்பு மிகப் பெரிது!
தம் கட்சிக்குள்ளேயும் தம்மை
வீழ்த்தும் பகைவர் நண்பர்போல் நடித்துக்கொண்டிருப்பர். அவர்களையும் அறிந்து
களைதல் வேண்டும். உண்மை நண்பர்களை அறிந்து அவர்களிடம் பொறுப்புகளை
ஒப்புவித்தல் வேண்டும். பதவியை அடைய நண்பர்போல் வருவர்; பதவியில்லையேல் பகைவராய் மாறுவர்.
ஆதலின், பதவி பெறினும் பெறாவிடினும் தம்மைச் சார்ந்து நிற்போரை அறிந்து
அவர் உவப்பன செய்தல் வேண்டும். பகைவரையும் நண்பராக்கும் பண்பும் பெறுதல்
வேண்டும். நண்பரைப் பகைவராக்கும் செயல்களில் நாட்டம் கொள்ளுதல் கூடாது.
நாட்டை அடிமைப்படுத்த முயலும் பிற நாட்டாரை வெல்லும் வகையோ, நட்பாக்கிப்
பகைமையொழித்து ஒத்து வாழும் வகையோ நன்கு அறிந்திடல் வேண்டும். ஆதலின்
மன்பதை காக்கும் மாண்புறு கடமையை ஏற்போர் பொறுப்பு மிகப் பெரிது.
பேராசிரியர் சி.இலக்குவனார்:
இலக்குவம் : வள்ளுவர் வகுத்த அரசியல்: பக்கம் 748