வியாழன், 6 அக்டோபர், 2022
தமிழ்க்காப்புக்கழகம்:ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௧ – 441)
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம்
நிகழ்ச்சி நாள்: புரட்டாசி 22, 2053 ஞாயிறு 09.10.2022 காலை 10.00
“தமிழும் நானும்”
உரையாளர்கள்:
மழலையர் நரம்பியல் மருத்துவ வல்லுநர்
மரு.முனைவர் ஒளவை மெய்கண்டான்
குத்தூசி மருத்துவ வல்லுநர் பேரா.முத்துக்குமார்
சித்த மருத்துவ வல்லுநர் மரு.அசித்தர்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: மாணவர் வ.சுதாமணி
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்புரை: தோழர் தியாகு
நன்றியுரை: மாணவர் ந.காருண்யா
புதன், 5 அக்டோபர், 2022
பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா – விவேகானந்தன் ஆர்.
தான் வந்த வழியை நினைத்துப் பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா
முகநூலில் பகிரப்பட்ட நரிக்குறவர் சமூத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை கோரா நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன்.
மூல எழுத்தர் திரு. அ.சேக்காதர் இப்ராகீம் அவர்களுக்கு நன்றி.
பதிவு பெரிது, அதைவிடப் பயணமும் பெரிது, தான் பிறந்த சமூகத்திற்கு முன்மாதிரியான நிகழ்வு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இனத்தோடு ஊர்விட்டு ஊர் நகர்ந்து கொண்டே இருப்பவர்கள்தான் நரிக்குறவர்கள். இவர்களில் சுவேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
ஆனால், இது மட்டும் அல்ல அவரது பெருமை. பொறியியல் படித்து வளாக நேர்முகத்தேர்வில் கை நிறையச் சம்பளத்துடன் கிடைத்த வேலையை, தன் சமூக மக்களின் நலனுக்கு உழைப்பதற்கு உதறித் தள்ளி, இப்போது மூன்று பள்ளிகளை நடத்திவருகிறார்
திருச்சி – தஞ்சாவூர் சாலையில் உள்ள தேவராயநேரி நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர்தான் சுவேதா.
“முதல் நாள் கல்லூரி வாசலில் போய் இறங்கியதை என்னால் மறக்கவே முடியாது. அம்மா, அப்பா, தாத்தானு குடும்பத்தோடு போனோம். எங்க தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். தோளில் துப்பாக்கியைத் தொங்கவிட்டுக்கிட்டு, தலையில் முண்டாசு கட்டிய தாத்தா என்னை ஆசீர்வாதம் பண்ணினார்.
“எல்லாரும் வைத்த கண் வாங்காமல் வேடிக்கை பார்த்தார்கள். அவர்களுக்கு எல்லாம் அது நகைச்சுவை. ஆனால், எனக்கு வாழ்க்கை” – அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் சுவேதா.
“அப்பா மகேந்திரன், ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியால் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர். அம்மா சீதாவுக்குப் பதினைந்து வயது இருக்கும் போதே திருமணம் பண்ணி வைத்து விட்டனர். அப்பாதான் அம்மாவை 10-ஆம் வகுப்பு வரை படிக்க வைத்திருக்கார். படிக்கும் போதே அம்மா கருப்பமாகிவிட்டார்கள்.
“நான் பிறந்தபிறகு அம்மாவால் பள்ளிக்குப் போய் படிப்பைத் தொடர முடியவில்லை. அவர்களோட இந்தத் தோல்விதான் எப்பாடுபட்டாவது தன் மகளை ப் படிக்க வைத்துப் பெரிய ஆளாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை அவர் மனத்தில் தோன்ற வைத்திருக்கிறது.
“அப்போதெல்லாம் எங்கள் சமூகத்தில் யாரும் பள்ளிக்குப் போனதில்லை. அப்படியே போனாலும் தொடர்ந்து போக மாட்டார்கள். இதைக் காரணம் காட்டி நான் படிக்கச் சென்ற பள்ளித் தலைமை ஆசிரியர் எனக்குப் பள்ளியில் இடம் கொடுக்க மறுத்தார்.
“அப்போ வசந்தகுமார் என்கிற பிரபல தமிழ் நாளிதழோட செய்தியாளர் எங்கள் அப்பாவுக்குக் கொஞ்சம் பழக்கம் உள்ளவராக இருந்தார். பொது நலன் குறித்தும் சமூக முன்னேற்றம் குறித்தும் அக்கறை உள்ள அவர், அடிக்கடி எங்கள் இடத்துக்கு வந்து எங்கள் மக்களுக்கு உணவு, உடைகள் வாங்கிக் தருவார். தீபாவளி, பொங்கலுக்குக் குழந்தைகளை அழைத்து துணிமணிகள், பட்டாசு, கரும்பு, இனிப்பு, சாப்பாடு என வாங்கித் தருவார். அவருடைய பரிந்துரையால்தான் எனக்குப் பள்ளியில் படிக்க இடம் கிடைத்தது.
“ஆனால் பள்ளியில் நான் சந்திச்ச அவமானங்கள் ஏராளம். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையன், `குறத்தி…குறத்தி’னு கிண்டல் பண்ணினான். அதை வீட்டில் சொல்லாமல், பள்ளிக்கும் போகாமல் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டிலேயே அழுது கொண்டே இருந்தேன்.
“பிற்பாடு விசயம் தெரிஞ்சு எங்கள் அம்மா பள்ளிக்கு அழைத்துக் கொண்டு வந்து ஆசிரியர் கிட்ட பேசி என்னை மறுபடியும் விட்டுவிட்டு வந்தார்கள். இருந்தாலும் அந்தச் சம்பவம் என் மனத்துக்குள்ள ஒரு பயத்தை உருவாக்கியது. பள்ளி வண்டியிலே மற்ற பிள்ளைங்கள்கூடப் பேசவே பயமா இருக்கும். அவர்களும் என்னை நெருங்காமல் தள்ளியே உட்காருவார்கள்.
“நான் படிப்பைப் பாதியில் நிறுத்திடக் கூடாது என்பதில் மட்டும் அம்மா விடாப்பிடியாக இருந்தார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இருந்தே, எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க, ஊர்க்காரர்கள் நெருக்கடி கொடுத்தார்கள்.
“அம்மாவும் அப்பாவும் ஊரில் எங்கள் சமூகத்துல நடக்கிற நிறைய இளம் வயது திருமணங்களை நிறுத்தி, பிள்ளைகளைப் படிக்க வைக்கச் சொல்லி, பல காலமாகப் போராடிக்கிட்டு இருக்கிறவர்கள்.
” அதனால் அதற்குப் பழிவாங்கிறதுக்காக எனக்குத் தாலிகட்டி விட்டுவேன் என்று பல பேர் சுற்றினார்கள். இதற்குப் பயந்து அம்மா, என்னைத் திருச்சி ஃபிலோமினா பெண்கள் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள்.
“நாங்கள் அந்தப் பள்ளிக்குப் போகும்போது, ‘நுழைவுத்தேர்வு வைத்துதான் இடம் கொடுப்போம்.இப்போது தேர்வு முடிந்து விட்டது’ என்று சொன்னா ர்கள். அம்மாவும் விடுவதாக இல்லை. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்று இடம் கேட்டார்கள்.
” சரி, நாங்கள் உன் பெண்ணுக்கு இடம் தருகிறோம். ஆனால் எக்காரணம் முன்னிட்டும் இடையில் நின்று விடக்கூடாது’என்ற நிபந்தனையோடு தமிழ் ஆங்கிலம் கணிதம் முதலிய பாடங்களில் நுழைவுத் தேர்வு வைத்து என்னை சேர்த்துக் கொண்டார்கள்.
“ஊருக்கு வந்து போய்க்கொண்டிருந்தால் திருமணம் சம்பந்தமாக ஊரார் தொல்லை கொடுப்பார்கள் என்று சொல்லி என்னை அந்தப் பள்ளியின் விடுதியில் சேர்த்துவி விட்டார்கள்.. ‘ஊருக்குப் போனால், கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள் ‘ என்று நானும் பயந்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அங்கேயும் என்னை யாரும் நெருங்கவில்லை; தள்ளியே வைத்திருந்தார்கள்.
“பள்ளிப் படிப்பு முடிச்சு, திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படிக்க இடம் கிடைத்தது. உள்ளே நுழைத்தது. முதல் நாளிலேயே நான் நரிக்குறவப் பெண் என்கிற செய்தி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரிஞ்து விட்டது..
“ஆனால் அவர்களோட வித்தியாசமான பார்வை, ஒதுங்கிப்போவது, கிண்டல் பண்ணுவது எதையும் நான் கண்டு கொள்ளவே இல்லை. நம் நோக்கம் படிக்கிறது, அதை விட்டுவிடக் கூடாது என்று கவனமாகப் படித்தேன்.
“ஒரு கட்டத்தில் அவர்கள் கொடுத்த தொல்லையால் என்னால் அங்கே படிக்க முடியவில்லை. இரண்டாவது ஆண்டு ‘என்னை எப்படியாவது இங்கே இருந்து கூட்டிட்டுப் போய்விடுங்கள்’ என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டேன். அப்போ அம்மா தான் எனக்கு ஆறுதல் சொல்லித்தேற்றி விட்டார்கள்..
“அதேநேரம் என்னோட கணவர் அப்போது எனக்கு நல்ல நண்பனாக இருந்தார். அவர் என் சொந்த அத்தைப் பையனும் கூட. அவரும் படி படி என்று ஊக்கம் கொடுத்துக் கொண்டே வந்தார். சரி என்று சமாதானமாகி நல்லபடியாகப் பொறியியல் படிப்பை படித்து முடித்தேன்” என்கிறார் சுவேதா.
கடந்த ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த சுவேதாவுக்கு வளாக நேர்காணலில் சண்டிகர் மாநிலத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலைக்குச் செல்வது இல்லை என முடிவு எடுத்துவிட்டார்.
“நான் வேலைக்குப் போனால், என் வாழ்க்கை மட்டும்தான் நன்றாக இருக்கும். ஆனால், எங்கள் சமூக மக்கள் இன்னமும் மோசமான நிலைமையில்தான் இருக்கிறார்கள். பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறதே இல்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் நான் இங்கே இருக்க வேண்டும். என்னை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற பிள்ளைகளும் படிப்பார்கள்” என்கிறார் சுவேதா.
இவரது இந்தத் தெளிவும் சமூக நோக்கும் இவரது பெற்றோர்களிடம் இருந்து வந்தது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்து வந்தவர் சுவேதாவின் அப்பா மகேந்திரன். பெரியார், அம்பேத்துகர், காரல் மார்க்குசு, வழிகாட்டிய முற்போக்கு அரசியல் அறிந்தவர்; அவர்களின் கொள்கைகளைப் படித்தவர்.
இப்போது அவர் இல்லை. சிறுநீரகக் கோளாறால் 2017-இல் இறந்துபோய் விட்டார். இறந்தது கூட அவர் நடத்தி வந்த பள்ளிக்கூடத்தில்தான் நடந்தது.
“எல்லாவற்றையும் படித்து, ‘இந்தச் சமுதாயத்தைத் தலைகீழாக மாற்ற வேண்டும் என்று அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். வீட்டிற்கு வந்தால், கஞ்சிக்குக்கூட வழி இருக்காது. காமராசர் காலத்தில் எங்கள் மக்களுக்குத் திருச்சி பெல் நிறுவனம் பக்கத்தில் இடம் கொடுத்தார்கள்.
” பிறகு அந்த இடத்தில் தொழிற்சாலை வருகிறது என்று சொல்லி, தேவராயநேரிக்கு மாற்றினார்கள்.அப்போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலையப்பன்தான், இடம்கொடுத்து குடியிருப்பு கட்ட வழிசெய்து கொடுத்தார்.”
“அவர்தான் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் எங்கள் மக்களுக்காக இடம் ஒதுக்கி வாழ வழிசெய்தார். கூடவே, தன் சொந்த முயற்சியில், எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். ஆனால், அதை எல்லாம் பயன்படுத்தும் விழிப்புஉணர்வு இல்லாத எங்கள் மக்கள், அவர் ஏற்படுத்திக்கொடுத்த குடியிருப்புகளை விட்டு அடுத்த நாளே ஓடிவந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.
“அவர் நினைவாகத், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எங்கள் மக்கள் வசிக்கிற பல ஊர்களுக்கு ‘மலையப்பன் நகர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
“எத்தனைத் தடவை பள்ளிக்கு அனுப்பினாலும் மறுபடியும் பாசிமணி விற்க ஓடிவந்திடுவாார்கள். இந்த நிலைமையை மாற்றாமல் எதுவும் பண்ண முடியாது என்று புரிந்தது.”
1980-இல் திருவள்ளுவர் குருகுல ஆரம்பப் பள்ளி என்ற பெயரில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவந்த அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் அப்பாவைக் கூப்பிட்டு, ஒரு விடுதி தொடங்குங்கள், நிறைய மி.பி.வ.நல்கை எல்லாம் இருக்கிறது. அதை வைத்துப் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடலாம் என்று சொன்னார்.
“அப்பா மலையப்பன் பெயரில் ஒரு தங்கும் விடுதியும், நரிக்குறவர் கல்வி நலச் சங்கம் என்று அரசு சாரா அமைப்பும் தொடங்கினார். விடுதி தொடங்கியதால் நிறைய மாவட்டங்களில் இருந்து குழந்தைகள் வந்து தங்கிப் படித்தார்கள்.”
“மாணவர்களோட எண்ணிக்கையும் அதிகமாகியது. விடுதி குறிப்பாக ஆறாவதில் இருந்து எட்டாவது வரை படிக்கிற மாணவர்களுக்காகத் தான்… பதினைந்து வருடத்துக்கு முன்னாடி, அந்தப் பள்ளியை நடத்திக் கொண்டு இருந்தவர்களால் அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதால், பள்ளி நடத்துகிற பொறுப்பும் அப்பா கைகளுக்கு வந்தது.
” ‘திருவள்ளுவர் குருகுலம்‘ என்னும் பெயரில் ஓர் உண்டு உறைவிடப் பள்ளி ஆரம்பித்தார் அப்பா. வெறும் பள்ளி என்றால் யாரும் வர மாட்டார்கள். பாசி, ஊசி விற்க ஊர் ஊராப் போகும்போது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போய்விடுவார்கள். அதனால், `நீங்கள் வியாபாரத்துக்குப் போங்கள், பிள்ளைகளை இங்கே அனுப்பி வையுங்கள்.தங்கவைத்துச், சாப்பாடு போட்டு படிப்பு சொல்லித் தருகிறோம்’ என்று சொல்லி வரச் சொன்னார்.
” ‘இப்படி எல்லாம் துன்பப்பட்டுத்தான் எங்கள் மக்களுக்குக் கல்வியைத் தரவேண்டி இருந்தது’என்று மிகவும் வேதனைப்பட்டார் அப்பா” என்று அப்பாவின் நினைவுகளில் மூழ்கிப் போகிறார் சுவேதா.
அப்பாவின் இறப்புக்குப் பின் அவர் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகிறார் சுவேதா. திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை என்று மூன்று இடங்களில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக இலவசமாக இப்போது பள்ளிகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்.
இப்பள்ளிகள் வளர்ச்சிக்காகச் சென்ற ஆண்டு நடந்த நடிகை இராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிய கோடீசுவரி நிகழ்ச்சியில் சுவேதா பங்குபெற்று 3 இலட்சத்து 20000 உரூபாய் பரிசு பெற்று வந்தார்.
இவர் மட்டுமல்ல. பேராசிரியராக இருக்கிற இவரது கணவர் மகேந்திரன், மாமியார்,அம்மா, சில உறவினர்கள் எல்லாரும் சேர்ந்துதான் இந்தப் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள்!
படிகளில் ஏறும் பலர் கீழ்நோக்கிப் பார்ப்பதே இல்லை; சுவேதா போன்ற சிலர் மேல் ஏறினாலும் கீழ்நோக்கிப் பார்த்து அங்கிருப்பவர்களைக் கைகொடுத்து மேலேற்றி வருகிறார்கள்…
விவேகானந்தன் ஆர்.
கோரா, 26.09.2022
இச்செய்தி பிப் 18, 2020 ஆம் நாளிட்ட தினமலரிலும் 5 அட்டோபர், 2020 ஆம் பதிவில் நமது வலைப்பூவிலும் செவ்வியாகவும் செய்திக்கட்டுரையாகவும் இடம் பெற்றுள்ளது.
செவ்வாய், 4 அக்டோபர், 2022
எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு
எழுத்தாளர் மு.முருகேசிற்கு
மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அட்டோபர் 2 அன்று சென்னையில் சிறுவர்களுக்கான ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுத்தாளர் ஆயிசா இரா.நடராசன் தலைமையேற்றார். க.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவில், சிறுவர் இலக்கியப் படைப்பிலக்கியங்களை கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் மு.முருகேசின் பங்களிப்பைப் பாராட்டி, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருட்டிண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார்.
வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி, கலை இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கவிஞர் மு.முருகேசு, இதுவரை 50-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு நூல்களைப்
படைத்துள்ளார். தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். 2021-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின்பால சாகித்திய புரசுகார் விருதினைத் தனது ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலுக்காகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், வங்காளம்,
சப்பானிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன.
இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத்து, மலேசியா ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின் அழைப்பின் பேரில் அங்கு சென்று, உரையாற்றி வந்துள்ளார்.
இவரது படைப்புகளை இதுவரை 8 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும்,
3 மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராசர்பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப்பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் சானகி அம்மாள் கல்லூரிப் பாடத்திட்டத்திலும்இடம் பெற்றுள்ளன.
சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு, 6-ஆம் வகுப்பு பாட நூல்கள்உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல், தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகி, தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.இராமகிருட்டிணன், கவிதா பதிப்பக உரிமையாளர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிறைவாக, க.மாலதி நன்றி கூறினார்.
புதுதில்லியில் தமிழக இளைஞருக்குச் ‘சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர்’ விருது
- - - இலக்குவனார் திருவள்ளுவன் 04 October 2022 No Comment
“ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது
புதுதில்லியில் “உலகளாவிய பேரரசு நிகழ்வுகள்(Global Empire Events)” என்ற அமைப்பின் சார்பில் “ஆசியாவின் சின்னங்கள்(icons of Asia) 2022” விருது வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அசன் முகம்மதுவுக்குச் “சிறந்த (மென்பொருள்) கணியக் கட்டுமானப் பொறியாளர் 2022” விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
இந்தப் பிரிவில் போட்டியிட்ட ஆசியக் கண்டத்திலுள்ள பல்வேறு முன்னணிக் கணிய(மென்பொருள்) நிறுவனங்களைச் சேர்ந்த முப்பத்து எண்மரில் சிறந்த ஒருவராக அசன் முகம்மது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. கல்வி, தொழில், பொதுத் தொண்டில் சிறந்து விளங்குபவர்கள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
இந்த வருடம் தில்லி துவாரகாவில் உள்ள “கதிர்நீல/ரேடிசன் புளூ உறைவகத்தல் (Radisson blue hotel) இந்த விழா சிறந்த முறையில் நடந்தது.
விருது பெற்ற அசன் முகம்மது தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றியை உரித்தாக்கினார். முதன்மையாகத் தனது பொறியியல் கல்லூரிப் படிப்பைச் சிறந்த முறையில் நிறைவு செய்யத் தனது உடல் உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டுக் கல்லூரிக் கட்டணத்தைசங செலுத்த உதவிய அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்தார்.
அவருடைய அருவினை/சாதனை மேன்மேலும் தொடரப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துகள் தெரிவிக்க :
+91 95001 68656
முதுவை இதாயத்து
துபாய், ஐ.அ.நா.
00971 50 51 96 433