செவ்வாய், 14 ஜூலை, 2009

டெய்லி ரெலிகிராஃப்பில் வெளியான
நீதி வழங்கும் நேரம் வந்துவிட்டது
பிரசுரித்த திகதி : 14 Jul 2009

டெய்லி ரெலிகிராஃப் வலைத்தளத்தில் வலைப்பதிவு எழுத்தாளரான ரிச்சார்ட் டிக்சன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை அதிர்வு வாசகர்களுக்காக மொழிபெயர்த்து சுருக்கி தருகிறோம்....

இலங்கையின் யுத்த குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச சட்ட முறைமை தவறிவிட்டது. எனவே முகாமில் உள்ள ஒரு கடைசி தமிழன் வரை அவர்கள் ராணுவத்தினரின் சித்திரவதைகள், கடத்தல், கற்பழிப்பு, கொலைகளுக்கு உட்படாமல் மற்றைய இலங்கை குடிமக்கள் போல கௌரவமாக சகல உரிமைகளுடனும் வாழும்வரை அரசின் செயலைக் கண்டிக்கும் ஒவ்வொருவரும் இலங்கையின் எந்தவொரு உற்பத்திப் பொருட்களைப் பயனபடுத்தவோ, ஆதரவளிக்கவோ, இலங்கைக்கு செல்வதற்கோ 'முடியாது' என்று கூறுவதற்குரிய காலம் இதுவாகும். இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் இலங்கைத் தமிழர்களை அழிக்கவே பயன்படுத்தப்படுகிறது என்பதால் யுத்த குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச சமூகத்தின் அழைப்புகள் இருக்கின்றபோதும் அதைப் பொருட்படுத்தாது இலங்கைக்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதே சிறந்தது.

இலங்கைத் தீவில் இடம்பெறும் மரணங்களும் அழிவுகளும்,முழு உலகுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கிட்டத்தட்ட 50,000 தமிழ் அப்பாவி பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டார்கள். இப்போது மூன்று லட்சம் மக்கள் இலங்கை அரசின் சாவு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். ஆண்கள் சித்திரவதைக்கு உட்படுகிறார்கள்; பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுகிறார்கள்; சிறுவர்கள் மனரீதியாக பாதிப்புக்கு உட்படுகிறார்கள்; வெளிநாட்டு ஊடகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; உதவி பணியாளர்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள்; உணவு, மருந்து, தண்ணீர் இல்லாமல் மக்கள் ஈ போல செத்துக் கொண்டிருக்கிறார்கள்: இளைஞர்களும் சரி முதியவர்களும் சரி உணவுக்காக சுடும் வெயிலில் காத்திருக்க இறந்தவர்கள் உடல்களோ வெளியில் போடப்பட்டு அழுகவிடப்பட்டுள்ளன.


முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 1400 பேர் இறப்பதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வீதத்தில் இறப்பு நடைபெறுமாயின் கிட்டத்தட்ட மூன்று வருட காலத்தில் முகாம்களில் மக்களே இல்லாத நிலை தோன்றும். அங்குள்ள மக்களில் அநேகருக்கு பல வழிகளிலும் உதவி செய்யக்கூடிய உறவினர்கள் நாட்டின் பிற பாகங்களில் உள்ளனர். ஆனால் அரசு தானும் உதவி செய்யாமல் பிறரையும் உதவி செய்ய விடாமல் தனது கடும் பிடிவாதமான போக்கில் உள்ளது. அதாவது அரசின் நோக்கம் முடிந்தவரையான இறப்பை ஏற்படுத்தி தமிழினத்தை அழிப்பதாகும்.

இலங்கையில் இடம்பெறும் கொடூரங்கள் உலகை உலுக்கியுள்ளன சித்திரவதைகள், கொலைகள், கற்பழிப்புகள், பட்டினி மற்றும் இலங்கையின் பிற வகையான மனித உரிமை மீறல் சம்பவங்கள் உலகு முழுதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளன. மேற்கத்தைய செய்தி சேகரிப்பவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகளை நாடு கடத்தியமை, தடுப்பு முகாம்களுக்குள் உதவி நிறுவனங்களை அனுமதியாமை போன்ற இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு சவால் விடும் செயலாக உள்ளன.

இவற்றுக்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் அழுத்தம் கொடுத்து சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ச.நா.நி கடன் 1.9 பில்லியன் டொலர்களைத் தடுத்து வைத்துள்ளன; ஐ.நா மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு அங்கத்துவம் மறுக்கப்பட்டுள்ளது; பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும் இலங்கையை நீக்குவது தொடர்பான பேச்சுக்கள் அடிபடுகின்றன.

சராசரி மனிதன் ஒருவரால் செய்யக்கூடியது என்ன?
சராசரி மனிதன் ஒருவரால் சரியான செய்தியை இலங்கை போன்ற நாடுகளுக்கு வழங்க முடியும். சராசரி மனிதன் ஒரு நீதி நியாயமான பொருள் வாங்குபவராக எந்த வகைப் பொருட்களை, எந்த நாட்டுப் பொருட்களை சேவைகளைப் பயன்படுத்தலாம் என்ற சுதந்திரம் அவருக்கு உள்ளது. அதோடு மின்னஞ்சல், பேஸ்புக், ருவிற்றர், மற்றும் பிற சமூக வலைப்பின்னல்களூடாக மில்லியன் கணக்கானோரைத் தொடர்பு கொண்டு தமது கருத்துகளை உலகம் முழுவதும் பரப்புவதற்கும் வசதிகள் உள்ளன. எனவே இலங்கையின் பொருட்கள் சேவைகளுக்கு எதிரான பிரச்சாரங்களைக் கூட இவற்றின் ஊடாக நடத்தி இலங்கையில் பேரினவாத சிங்கள அரசு இப்பொருட்களை விற்ற பணத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை பலவீனப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றும் நோக்கோடு உள்ளது என்று உலக சந்தையில் உள்ள பல மில்லியன் மக்களின் மனத்தைக் கரைத்து அப்பொருட்களையும் சேவைகளையும் புறக்கணிக்க வைக்கக்கூடிய சக்தி ஒரு சராசரி மனிதனிடம் உள்ளது.

உடைக்க முடியாத மரண பிடிக்குள் இலங்கை
முன்னொரு காலத்தில் சுற்றுலாத் தளங்களின் சொர்க்கமாக விளங்கிய இலங்கையை தற்போதைய அரசு மரண பூமியாக மாற்றியுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும் தமது மக்கள் இலங்கைக்கு செல்வது ஆபத்தென அறிவித்ததைத் தொடந்து மேற்கத்தைய சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதற்கு சாத்தியமில்லை. சனல் 4, பொப் ரே ஆகியோரை நாடுகடத்தியது போன்ற பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இலஙகை கொழும்பில் உள்ள பிரிட்டன், கனடா நாட்டு உயர் தூதரகங்கள் ஒழுங்கு கெட்ட மனிதர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. பாதாளக் கும்பல், மரணப் படை ஆகியவற்றின் உதவியால் ஊடகவியலாளர்கள், தொண்டு பணியாளர்கள், அரசுக்கு ஆபத்தான தனி மனிதர்கள் என தமக்கு சாதகமற்ற அனைவரையும் கொன்று புதைக்கும் மயானமாக இலங்கை தற்போது உள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் உலகிலேயே மிகவும் கீழ்த்தரமான நிலையில் இருக்கும் இலங்கையின் பிரதான இலக்கு தமிழர்கள் எனினும் வெளிநாட்டவர், சிங்களவர்கள், முஸ்லிம்களையும் அது விட்டு வைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 20 பேருக்கு மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பலர் சிறையில் உள்ளனர், பத்திரிகைகள் எரிப்பதும், தொலைக்காட்சி நிலையங்கள் தாக்கப்படுவதும், வலைத்தளங்கள் முடக்கப்படுவதும் சாதாரண விடயமாகி விட்டது. அரசுக்கு சாதகமாக எழுதுபவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி உள்ளது.

போர் நடைபெற்ற பகுதியில் ஓய்வில்லாமல் உழைத்து பல்லாயிரம் மக்களைக் காத்த 5 மருத்துவர்களும் இப்போது அரச சிறைகளில். முன்னர் அவர்கள் கூறிய புள்ளிவிவரங்கள் பொய்யானவை எனக் கூறுமாறு அரசு அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதைச் செய்யவும் வைத்துள்ளது.

மக்கள் அவர்களது வீடுகள், பாடசாலைகள், அலுவலகங்கல், மருத்துவ மனைகள் என்பவற்றில் இருந்து திடீரெனக் காணாமல் போவதும், தமக்கு பிடிக்காதவர்களை இலக்கத் தகடுகள் அற்ற வெள்ளை வானில் கடத்தி கொலை செய்வதும் இலங்கை அரச கருமங்கங்களில் ஒன்றாகிவிட்டது. பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் பாதி எரிந்த நிலையில் வீதிகளில் சடலங்கள் கிடக்கும் ஒரே நாடு இலங்கைதான்.

தமது நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் மீதும் பாடசாலைகளின் மீதும் குண்டு போடுவதற்குரிய உரிமை தமக்கு உள்ளது என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கர்ச்சித்த இலங்கை பாதுகாப்புச் செயலாளரே அங்கு நடைபெற்ற ஆயிரக்கணக்கான கொலைகளுக்கும் முழுப் பொறுப்பாகும்.

என்றுமே உண்மை பேசாத இலங்கை கனரக ஆயுதங்களை தாம் போரில் பயன்படுத்தவில்லை என்பதும் அதே போல தான். இங்குள்ள படையினரின் எண்ணிக்கை அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவற்றில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. தெற்காசிய நாடுகளிலேயே படையினருக்காக அதிகமாக செலவழிக்கும் நாடும் இலங்கை தான் என்பதும் நோக்கத்தக்கது.

தற்போது அணு ஆயுதம் மீது பிரியம் கொண்டுள்ள இலங்கை அணு ஆயுதங்களை வழங்கக்கூடிய நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, மியன்மார் ஆகிய நாடுகளுடன் தனது உறவுகளை வளர்த்து மேலும் நாட்டுக்கு அபாயத்தைத் தேடிக்கொள்கிறது. இலங்கை ஒரு குடியரசு நாடு எனக் கூறப்படுகின்ற போதும் பெரும்பான்மை சிங்களவர்கள் இனவாத அரசியல் வாதிகளையும், ராணுவத் தலைவர்களையுமே ஆதரிக்கின்றனர். கௌரவமாக வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்களில் 3 லட்சம் பேர் தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ளனர். மிகுதி தமிழர்கள் ராணுவத்தின் கண்காணிப்பின்கீழ் உள்ளனர். மொத்தத்தில் தமிழர்களை சிங்கள அரசு தெரு நாய்கள் போல நடத்தும் நிலமை வந்துள்ளது.

பேரினவாதப் பயங்கரவாதத்துக்கு எதிராக தமிழ் போராளிகள்
தமிழ் மக்களின் உரிமைகளைத் தரும்படி முறையாகக் கேட்ட தமிழர்களை நாட்டை விட்டே துரத்தும் எண்ணத்துடன் பேரினவாத சிங்களம் முயன்றதால் ஆயுதமேந்திப் போராடும் நிலைக்கு வந்தனர் தமிழர்கள். ஆரம்பத்தில் கெரில்லா படையாக இருந்த போராளிகள் 2000 ஆம் ஆண்டுகளில் சட்ட விதிகளை மிகவும் மதித்து பின்பற்றும் வான்படை, கடற்படை கொண்ட பாரம்பரிய படையணிகளாக மாறின.

பாரம்பரியப் போரில் பின்னடைவு கண்ட இலங்கை 2002 இல் சமரசமாகி இரு தரப்பினரும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். ஐந்து ஆண்டுகள் கடைப்பிடிக்கப்பட்ட யுத்த நிறுத்தம் திடீரென இலங்கை அரசால் மீறப்பட்டு இந்தியாவின் உதவியுடனும் சீனா, பாகிஸ்தான் ஆகியவை வழங்கிய ஆயுதங்களுடனும் மீண்டும் 2007 இல் சண்டை ஆரம்பிக்கப்பட்டது.

இதில் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டு 50,000 தமிழ் பொதுமக்கள் ஒரு சில மாதங்களில் கொல்லப்பட்டனர்


இலங்கை அரசின் முகத்திரையை உரித்துக் காட்டிய வன்னிச்சண்டை
பால், தேன், தானியம், மீன், மரக்கறி, பழம் என என்றுமே எதற்கும் குறைவில்லாமல் செல்வம் மிக்க பகுதியாக விளங்கிய வன்னியின் வானில் சீன, ரஷிய வானூர்திகள் பறந்து வீடுகள், பாடசாலைகள், வயல்கள் என்று பார்க்கும் இடம் எங்கும் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசு அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்யத் தொடங்கியது அரசு. பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இன்றி 50,000 இற்கும் மேற்பட்டோர் கொலைசெய்யப்பட்டனர், 30,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த 1000 இற்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தபோது மிலேச்சத்தனமாக கொல்லப்பட்டனர். காயப்பட்டவர்கள் மீது டாங்கிகள் ஏறி உழுதன. ஒருவருக்காக ஒருவர் அழக்கூட அங்கு யாருமே இருக்கவில்லை. உலகத்தின் இதயம் அத்தனையும் கல்லாகிவிட்டன, உலகத்தலைவர்கள் என அழைக்கப்பட்டவர்களின் முகங்கள் அசிங்கமானவைதான் என்பது மீளவும் வன்னிச்சண்டையின்போது நிரூபிக்கப்பட்டது.

டெய்லி ரெலிகிராஃப் இணையத்தில் ரிச்சாட் டிக்ஸ்சன் எழுதிய கட்டுரை. தமிழாக்கம் அதிர்வு இணையம்.

TELEGRAPH LINK

<<>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக