சனி, 21 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும்

      21 October 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, ஒரு கேள்விக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது: குடியுரிமைச் சட்டத்தில் குறையில்லை, திருத்தம்தான் மோசமா?

மோதியரசு கொண்டுவந்த திருத்தம் மட்டுமல்ல, அதன் நோக்கமும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளும் மோசமானவை எனபதில் ஐயமில்லை. எனவே நாமும் அந்தத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டோம்.

அதே போது இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உட்பட எந்தச் சட்டமும் குடியுரிமைச் சிக்கலில் சரியானதோ முழுமையானதோ அன்று என்பது நம் பார்வை. சட்டத் திருத்தம் கூடாது என்ற எதிர்மறை நிலைப்பாடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கான தமிழ்க் குடியுரிமை வேண்டும் என்ற நேர்நிறை நிலைப்பாடும் எடுத்தோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போதே நம் நிலைப்பாட்டை பரப்புரையும் செய்தோம். இந்தியாவில் குடியுரிமை என்ற சிக்கல் குறித்த தெளிவில்லாமல் ‘இலங்கைத் தமிழ் அகதிகள்’ எனப்படும் ஈழத் தமிழர் ஏதிலியரின் உரிமைகள் குறித்துக் கொள்கைவழிப்பட்ட நிலையெடுக்க முடியாது. அது மட்டுமன்று, இந்தியாவில் தமிழர்களுக்கென்று தனிக் குடியுரிமை இல்லாமலிருப்பதன் துயரத்தைக் களையவும் வழிகாட்ட முடியாது.

தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற மும்முனை முழக்கம் தமிழீழத்துக்கானது மட்டுமன்று. அது தமிழ்நாட்டுக்குமானது. தமிழ்நாட்டுக் குடியுரிமைக்காகப் போராடாமல் தாயகத்துக்கான போராட்டம் முழுமை பெறாது. இந்த அடிப்படைப் புரிதலோடு தமிழ்நாட்டுக் குடியுரிமையை இலக்காகக் கொண்டு உத்திசார் கோரிக்கைகள் எழுப்ப வேண்டியிருக்கும். அப்படியொரு கோரிக்கைதான் இந்தியக் குடியுரிமை இருக்கும் போதே தமிழ்க் குடியுரிமையும் வேண்டும் என்ற நமது முழக்கம்.

இதற்கு இப்போதைய குடியுரிமைச் சட்டத்தில் இடமில்லை என்பதால் அந்தச் சட்டத்தை உரியவாறு திருத்தக் கோருவோம். அரசமைப்புச் சட்டத்திலேயே இடமில்லை என்றால் அரசமைப்புச் சட்டத்தையே திருத்தக் கோருவோம்.

தமிழ்க் குடியுரிமைக் கோரிக்கை பற்றிய புரிதலை தாழி அன்பர்கள் ஆழபப்டுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல மடல்கள் எழுத எண்ணியுள்ளேன். முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தையொட்டி நான் எழுதித் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் வெளியிட்டுப் பரப்பிய ஓர் அறிக்கையைப் பகிர்கிறேன் –


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

வேண்டும் தமிழ்க் குடியுரிமை!

இந்திய அரசமைப்பின் முகப்புரை “இந்திய மக்கள் ஆகிய நாம்” (We, the people of India) என்று தொடங்குகிறது. இந்திய மக்களா? இந்தியாவின் மக்களினங்களா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இறையாண்மை அல்லது அரசுரிமை மக்களைச் சாரும் என்பதில் ஐயமில்லை.

இந்திய மக்களாகிய நாம் இந்தியாவைக் குடியரசாக அமைத்துக் கொள்கிறோம். எத்தகைய குடியரசு? இறைமையுள்ள, குமுகிய, உலகிய [சமயச் சார்பற்ற], குடியாட்சியக் குடியரசு! (SOVEREIGN SOCILIST SECULAR DEMOCRATIC REPUBLIC!) அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் இறைமையுள்ள குடியாட்சியக் குடியரசு என்று மட்டும் இருந்தது. நெருக்கடிநிலைக் காலத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக குமுகியமும் (சோசலிசம்) உலகியமும் [சமயச் சார்பின்மையும்] சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பு சொல்வதாவது:

  1. 1) பாரதம் என்கிற இந்தியா அரச மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும். (India, that is Bharath, shall be a Union of States).

States என்பதை மாநிலங்கள் என்று தமிழில் சொல்லலாம், அரசுகள் என்றும் சொல்லலாம். இரு தன்மைகளும் உண்டு என்பதை உணர்த்தவே அரச மாநிலங்கள் என்கிறோம். ஆட்சிப்புலம், குடிகள், ஆட்சி மூன்றும் இருந்தால்தான் அரசு. குமுக அறிவியலில் நாடுகள் என்று இவற்றைக் குறிக்கக் காணலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America) யாவருமறிந்த எடுத்துக்காட்டு.

மாநிலம் என்ற சொல்லும் கூட குறுநிலம் என்பதற்கு மாறாக ஆளப்படும் போது இறைமையைக் குறிக்கும். குறுநிலம் என்பது பேரரசுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு. அது இறைமையற்றது. மாநிலம் என்பது தற்சார்பானது, தன்னாட்சி கொண்டது. அது இறைமையுடையது. கூட்டாட்சி அமைப்பில் அந்த இறைமையில் ஒரு பகுதியை அது கூட்டரசுக்கு விட்டுக் கொடுக்கலாம்.

Separate State என்பதைத் தனியரசு அல்லது தனிநாடு என்று சொல்வதே இயல்பு. Stateless என்பதை நாடற்ற என்றுதான் மொழிபெயர்க்கிறோம். Stateless people என்றால் நாடற்ற மக்கள்.

State என்பது வெறும் province அன்று. மாகாணம் என்பது ஒரு ஆட்சியலகுதானே தவிர வேறன்று. அது விரிவடைந்த மாவட்டம் என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. 1935ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் மாகாணங்களையே தோற்றுவித்தது. 1950ஆம் ஆண்டின் இந்திய அரசமைப்புதான் அரசமாநிலங்களைத் தோற்றுவித்தது.

State என்பது மாநிலத்தைக் குறிக்க மட்டுமல்லாமல் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து இந்திய அரசைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. The state of Tamilnadu என்பது தமிழ்நாடு மாநிலம், ஆனால் Indian State என்பது இந்திய அரசு. நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் மாநில அரசானாலும் நடுவணரசானாலும் இரண்டுமே State எனப்படும்.

ஆக, State என்பதை மாநிலம் என்றாலும் சரி, அரசு என்றாலும் சரி, நாடு என்றாலும் சரி, அது இறைமையுடையது. இந்திய அரசமைப்பில் ஒன்றியம், மாநிலம் என்று இரு அரசுகள் உள்ளன. இரண்டும் இறைமை கொண்டவை. ஒவ்வொன்றும் சிலவகையில் தனிமுழு இறைமை (exclusive sovereignty) கொண்டவை, வேறு சிலவகையில் இறைமையைப் பகிர்ந்து கொள்ளக் கூடியவை (Sovereignty shared between the Union and the states). அண்ணல் அம்பேத்துகர் இதனைத் தெளிவாக்கியுள்ளார். மாநில அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் மாநிலங்கள் இறைமை கொண்டவை என்று அவர் விளக்கமளித்தார்.

ஒன்றிய அதிகாரப் பட்டியலில் 17ஆவது இனம் இப்படிச் சொல்கிறது:
17) குடியுரிமை, குடிமையளிப்பு, அயலார் (Citizenship, naturalization and aliens).

ஆகக், குடியுரிமை என்பது நடுவணரசு எனப்படும் ஒன்றிய அரசின் தனிமுழு அதிகாரமாகி விடுகிறது. இது மாநிலத்தின் இறைமையை மீறுவதாகும். ஒன்றியத்துக்கும் மாநிலத்துக்குமான இறைமைப் பகிர்வு என்ற கொள்கைக்கு முரணாகும்.

அரசு என்றிருந்தால் குடிமக்கள் இருந்தாக வேண்டும். குடிமக்கள் என்றிருந்தால் அரசு இருந்தாக வேண்டும். ஆகவே குடியுரிமை இல்லாத அரசு அரசே ஆகாது. ஒன்றியம் போலவே மாநிலமும் அரசுதான் என்றால் அதற்கும் குடியுரிமை இருக்க வேண்டும். மாநிலம் என்றாலும் அரசு என்றாலும் நாடு என்றாலும் குடியுரிமை இன்றியமையாத ஒன்று.

இந்திய அரசின் கூட்டாட்சித் தன்மை இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒரு கூறு என்று இந்திய உச்ச நீதிமன்றம் கேசவானந்த பாரதி (1973) வழக்கில் கூறியதாக சட்டவாளர்கள் எடுத்துக்காட்டுவதுண்டு. இது உண்மையானால் குடியுரிமையில் ஒரு பகுதியாவது மாநில அதிகாரமாக இருக்க வேண்டும். ஒற்றையாட்சி அமைப்பில்தான் அது நடுவணரசின் தனிமுழு அதிகாரமாக இருக்க முடியும். ஆனால் இந்தியாவை ஒற்றையாட்சி இலங்கையோடு ஒப்புநோக்கினால் இந்த வகையில் இரண்டும் ஒன்றாகவே இருக்கக் காணலாம். ஒருவர் நாடற்றவர் என்றால் எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாதவர் என்று பொருள். குடியுரிமை இல்லாதவர் என்றால் நாடற்றவர் என்று பொருள். இது தமிழ்நாடு என்றால் தமிழ்நாட்டுக் குடிமக்கள் இருந்தாக வேண்டும். தமிழ்நாட்டுக் குடிமக்களாக இருக்கும் போதே அவர்கள் இந்தியக் குடிமக்களாகவும் இருக்கலாம். இறைமையைப் பகிர்ந்து கொள்ளும் கொள்கைப்படிக் குடியுரிமையையும் பகிர்ந்து கொள்ளலாம்.

அரசமைப்புச் சட்டத்தின் பதினோராம் உறுப்பைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் இயற்றிய சட்டம்தான் இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 என்பது. இந்தச் சட்டமும் சட்டப் புறம்பான குடியேறிகள் (illegal immigrants) பற்றிப் பேசுகிறதே தவிர ஏதிலியர் (அல்லது அகதிகள்) குறித்து எதுவும் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த வரை இந்தியாவில் ஏதிலியர் பற்றிப் பேசும் சட்டமே இல்லை. (இருந்தால் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம்.)

1959ஆம் ஆண்டு முதல் திபெத்திலிருந்து ஏதிலியர் அடுக்கடுக்காக வந்து குவிந்துள்ளனர், 1962ஆம் ஆண்டு பருமாவிலிருந்து இராணுவ ஆட்சியாளர்களால் வெளியேற்றப்பட்ட தமிழ் ஏதிலியருக்காகத்தான் சென்னையில் பருமா கடைத்தெரு அமைக்கப்பட்டது. 1971இல் வங்கதேச இனவழிப்பின் போது சற்றொப்ப ஒரு கோடிப் பேர் இந்தியாவுக்கு ஏதிலியராக வந்து, விடுதலைக்குப் பின் நாடு திரும்பினார்கள். வங்கதேசத்திலிருந்து வெளியேறிய பீகாரி முசுலிம்கள் போன்ற ஏதிலியர் நாடுதிரும்ப வழியில்லாமல் பாகித்தானுக்கே போய் விட்டார்கள். இன்னும் உகாண்டாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் உள்ளனர். நேபாள ஏதிலியரும் பூட்டான் ஏதிலியரும் கூட உண்டு.

1991ஆம் ஆண்டு கருநாடகத்தில் காவிரிச் சிக்கலை ஒட்டி நடைபெற்ற வன்தாக்குதலால் ஏராளமான தமிழர்கள் ஏதிலியராகத் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். சத்திசுகரிலிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடிகள், அசாமில் இனமோதலால் புலம் பெயர்ந்தவர்கள் என்று இந்தியாவின் உள்நாட்டு அகதிகள் ஏராளம்.

[அண்மையில் மணிப்பூருக்குள்ளேயும் மணிப்பூரிலிருந்து வெளியேயும் ஏதிலியராக வெளியேற்றப்பட்டுள்ள, இன்றளவும் வெளியேற்றப்பட்டு வரும் மக்களையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.]

இந்தியாவில் ஏதிலியர் தொகை இலட்சக்கணக்கில் இருப்பினும், இவர்களில் சிலரை இந்திய அரசு முறையான ஏதிலியராக ஏற்றுக் கொண்டிருப்பினும், ஏதிலியருக்கென்று தனிச் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை.

1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் முன்பே பல முறை –1986, 1992, 2003, 2005 2015 ஆண்டுகளில் – திருத்தப்பட்டுள்ளது என்றாலும், இம்முறைதான் இவ்வளவு எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது. திசம்பர் 12ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இறுதியாக இயற்றப்பட்ட திருத்தச் சட்டம் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தாலும். மத அடிப்படையில் பாகுபாடு காட்டும் விதிமுறைதான் பூசலுக்குக் காரணமாகியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாக்கித்தான், வங்கதேசம், ஆஃப்கானித்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியுரிமைக்குத் தகுதிபெறக் குறைந்தது 11 ஆண்டுக் காலம் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்ற பழைய கட்டுத்திட்டம் தளர்த்தப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டம் செயலுக்கு வந்த பின் 6 ஆண்டுக் காலம் வசித்திருந்தாலே போதும். ஆனால் இந்தச் சலுகை இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும், பௌத்தர்களுக்கும், சைனர்களுக்கும், பார்சிகளுக்கும், கிறித்தவர்களுக்கும் மட்டும்தானே தவிர முசுலீம்களுக்குப் பொருந்தாது.

மதத்தை வைத்துப் பாகுபாடு காட்டும் இத்தகைய சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் சமயச் சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது என்பதும், மக்களை மத அடிப்படையில் கூறுபோடும் இந்துத்துவ அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் எதிர்ப்புக்கு முதற்காரணம். நேபாளமும் பூட்டானும் சிறிலங்காவும் அண்டை நாடுகளாய் இருப்பினும் அவை இந்தச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது இரண்டாம் காரணம்.

குறிப்பாக இலங்கைத் தீவிலிருந்து உயிர்தப்பி இந்தியா வந்துள்ள தமிழ் ஏதிலியர் சற்றொப்ப நாற்பது ஆண்டுகளாக நாடற்றவர்களாக அல்லலுற்றுக் கிடக்கின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களுக்கு இடைக்காலக் குடியுரிமை கூட வழங்கப்படவில்லை, இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த ஏதிலியர் குழந்தைகளும் அதே அவலநிலையில்தான் உள்ளனர். குடியுரிமை இருக்கட்டும், அவர்கள் ஏதிலியராகக் கூட அறிந்தேற்கப்படவில்லை. உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்தேறிய அயலார் என்பதே அவர்களின் சட்டநிலை.

ஏதிலியர் தொடர்பான 1951 செனிவா ஒப்பந்தம், 1967 வகைமுறை உடன்படிக்கை ஆகியவற்றில் இந்தியா ஒப்பமிடவில்லை என்பதால் பன்னாட்டுச் சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று இந்திய அரசு -– முன்பு காங்கிரசு, இப்போது பாசக – அழிச்சாட்டியம் செய்கிறது. ஆனால் 1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் இந்தியா ஒப்பமிட்டிருப்பது மறந்து போவதே இவர்களுக்கு வசதியாக உள்ளது. இந்திய உயர்நிலை நீதிமன்றங்கள் இந்தச் சாற்றுரைக்குச் சட்ட மதிப்புக் கொடுக்கின்றன. இந்தச் சாற்றுரையின் உறுப்பு 14 தஞ்சம் கோரவும் பெறவும் ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதை வலியுறுத்துகிறது. இந்தச் சாற்றுரையின் அடிப்படையில் ஏதிலியர் நிலை குறித்துச் சட்டம் இயற்றும்படி உச்ச நீதிமன்றமும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய அரசு ஏதிலியர் உரிமை தொடர்பான பன்னாட்டுச் சட்டங்களையும் மதிப்பதில்லை, உள்நாட்டிலும் சட்டம் இயற்றுவதில்லை என்று ‘உறுதி’யாகவுள்ளது. ஏதிலியர் சிக்கலைப் புவிசார் அரசியல் நலன், உள்நாட்டு அரசியல் நலன் என்ற கோணத்திலிருந்தே அணுகுவதுதான் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் நடைமுறையாக உள்ளது. மோதி-அமித்சா கையில் இந்த நடைமுறை படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடும் குடியாட்சிய ஆற்றல்கள் தற்காப்பு நிலை எடுத்து, புதிய சட்டத்தைத் திரும்பப் பெற்றால் போதும் என்ற நிலைக்கு வந்து விடக் கூடாது. எதிர்மறைக் கோரிக்கையோடு நின்று கொள்ளாமல், நேர்நிறையாக மாநிலங்களுக்குக் குடியுரிமை அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டும்.

அரசு, மாநிலம் அல்லது நாடு என்பது உண்மையானால், இந்தியக் குடியுரிமையோடு மாநிலக் குடியுரிமையும் கோருவோம் காட்டாக, இந்தியாவும் தமிழ்நாடும் இரு நாடுகளாக இயங்கி இரட்டைக் குடியுரிமை வழங்கட்டும். இந்தியக் குடியுரிமை, தமிழகக் குடியுரிமை இரண்டும் இருக்கட்டும். இந்தியா இதற்கு இணங்காது என்றால் இரட்டைக் குடியுரிமைக்கு இடமே இல்லை, ஒற்றைக் குடியுரிமைக்குத்தான் வாய்ப்புண்டு என்றால் அது ஏன் அந்தந்தத் தேசிய இனக் குடியுரிமையாகவே இருக்கக் கூடாது? என்ற எண்ணம் எழத்தான் செய்யும். இந்தியக் கட்டமைப்பு உள்ள வரை தமிழ்க் குடியுரிமையோடு இந்தியக் குடியுரிமையும் இருக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டுக் குடியுரிமை இல்லாத இந்தியக் குடியுரிமை அடிமைத்தனமே! அதனால் குடியாட்சிய நோக்கங்களை அடைய முடியாது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது என்ற எதிர்மறைக் கோரிக்கையிலிருந்து நாம் வந்தடையும் நேர்நிறைக் கோரிக்கை:
வேண்டும் தமிழ்க் குடியுரிமை!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 275

வெள்ளி, 20 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி >>>

சென்ற சூலை 26ஆம் நாள் இளைஞர் அரண் சார்பில் குடந்தையில் நடைபெற்ற கல்வியுரிமைப் பேரணி கல்வியுரிமை மாநாட்டில் நாம் எழுப்பிய முழக்கங்களையும் இயற்றிய தீர்மானங்களையும் நினைவிற்கொள்ளுங்கள். நம் கோரிக்கைகள் தெளிவானவை:
1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக நீதி வழங்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. ஒவ்வோராண்டும் சூலை 16ஆம் நாளைத் தமிழக அளவில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கும் படி தமிழக மக்களையும் தமிழக அரசையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

2) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2020 என்பது குடிமக்களின் கல்வியுரிமைக்குப் புறம்பானதாகவும், வணிக மயத்துக்கும் இந்து மயம் இந்திய நடுவணாதிக்க மயத்துக்கும் வழிவகுப்பதாகவும் இருப்பதால் அக்கொள்கையைத் தமிழக மக்கள் அடியோடு மறுதலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வகுக்கும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வரவேற்கிறது.

3) அதே நேரத்தில் தமிழக அரசு அமைத்த குழு செயல்படாமல் முடங்கியிருப்பது குறித்தும், இதற்கிடையில் இந்திய அரசின் பிற்போக்கான கல்விக் கொள்கையின் சில கூறுகள் தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல செயலாக்கப்பட்டு வருவது குறித்தும் இம்மாநாடு கவலை தெரிவித்துக் கொள்கிறது. இந்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை அடியோடு மறுதலித்து அதனை எவ்வகையிலும் செயல்படுத்த மறுக்கும் படி தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் பொதுப் பாடத்திட்டம் என்று தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் அறிவித்து இருப்பதைத் திரும்பப் பெறும்படி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5) இந்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்தும், தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கை வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், கல்விச் செயற்பாட்டளர்கள், மக்கள் கல்வி இயக்கங்கள் நடத்தி வரும் போராட்டங்களோடு இளைஞர் அரண் தோழமை கொள்கிறது. .

6) நீட், கியூட், நெக்சுட் உள்ளிட்ட அனைத்திந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளைக் கைவிடும் படி இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழகச் சட்டப் பேரவை இயற்றிய நீட் விலக்குச் சட்டத்துக்கு இந்திய அரசு உடனே ஒப்புதல் அளிக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது. இவ்வகையில் தமிழக மக்களைத் திரட்டி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரும் படி தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7) தமிழ்நாட்டுக்குத் தனித்தன்மை வாய்ந்த கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் தன்னளிப்புடன் உழைத்து வரும் கல்வியாளர் பேராசிரயர் சவகர் நேசன் அவர்களின் சலியா முயற்சிகளை இம்மாநாடு பாராட்டுகிறது. கல்விக் கொள்கையின் பரிமாணங்கள் என்ற அவரது ஆய்வறிக்கையைத் தமிழ்ச்சமூகம் ஆழ்ந்த கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கருதி, அவர்தம் முயற்சிகளில் அறிவார்ந்தும் உணர்வார்ந்தும் துணைநிற்க இளைஞர் அரண் உறுதி கொள்கிறது.

8) மாணவர்கள் மீதான ஒடுக்கு முறைகளும், ஆசிரியர்கள் மீதான சுரண்டல்களும், அடக்குமுறைகளும், தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்களும், பகற் கொள்ளைகளும், கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்கு முறைகளும் இன்றைய சூழலில் மேலோங்கி வருவதாக இம்மாநாடு அஞ்சுகிறது. இந்த நிலையைச் சரிசெய்யத் தமிழக மக்களும் தமிழக அரசும் உடனே உரியவாறு செயல்பட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது,

9) தமிழகத்தின் கல்விச் சூழல் கெட்டுக் கிடப்பதில் தமிழக அரசின் ஆசிரியர் அமர்த்தக் கொள்கைக்கு ஒரு பங்கிருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமை, ஊதிய ஏற்றத்தாழ்வு, ஒப்பந்த ஆசிரியர் முறை, கௌரவ விரிவுரையாளர்களை முறைப்படுத்தாமல் நிரந்தரமாகவே தற்காலிக ஆசிரியர்களாக வைத்துக் கொள்வது, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பின்மை, ஆசிரியர்களை அமர்த்துவதில் இலஞ்ச ஊழல் ஆகிய இவை அனைத்தும் கல்விச் சூழலைச் சீரழித்திருப்பதாக இம்மாநாடு நம்புகிறது. இந்நிலைமைகளை உடனே சீர் செய்யத்தவறினால் தமிழ் நாட்டில் கல்வி செத்துப்போகும் ஆபத்து இருப்பதாக இம்மாநாடு எச்சரிக்க விரும்புகிறது.

10) மாணவர்களை வதைத்து பெற்றோரைச் சுரண்டி அறமும் அறிவும் சார்ந்த கல்வியை நாசமாக்கும் சுயநிதிக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் கல்விக் கூடங்களை அரசுடைமையக்க வேண்டும்; இதற்கிடையில் அவற்றின் மீது அரசு தீவிரமான கட்டுப்பாடுகள் செலுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11) தமிழ்நாட்டில் ஒரு மாற்றுக் கல்வி இயக்கமாக உருப்பெற்றுள்ள தாய்த்தமிழ் பள்ளிகளை அரசு-உதவி பெறும் பள்ளிகளாக மாற்றி அவற்றைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் படி இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இந்தப் 11 கோரிக்கைகளும் பற்றார்வ விருப்பங்கள் மட்டுமல்ல, ஒப்புக்குச் செய்யப்படும் பதிவுகளுமல்ல. இவை நாம் வினைத்திட்பத்துடன் பின்தொடர்ந்து அடைய வேண்டிய குறிக்கோள்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் வெல்ல வேண்டுமானால் தமிழ் மக்களின் செயலார்ந்த துணை வேண்டும். நாம் அதற்கான ஆற்றலைத் திரட்ட வேண்டும். அதற்காகவே குடந்தை மாநாட்டில் ஒரு செயல்தீர்மானத்தையும் இயற்றினோம்:

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 274

தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?

பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திடுக!

2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள்.

அந்த இளைஞர் மாரிமுத்து, இளம்பெண் மகாலட்சுமி. அவர்களைப் பற்றி விசாரித்ததில் வெளிப்பட்டுள்ள உண்மைகள்: பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்த பறையர் சாதி மாரிமுத்துவும், கள்ளர் சாதி மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளார்கள்.

மகாலட்சுமிக்கு 18 வயது நிறைவடையாத நிலையில் அவர்கள் உடனடியாக மணம் புரிந்து கொள்ளச் சட்டம் தடையாக இருந்துள்ளது. மகாலட்சுமி ‘மைனர்’ என்பதைச் சாக்கிட்டு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மாரிமுத்து-மகாலட்சுமி காதல் நிறைவேற விடாமல் தடுத்து வந்துள்ளனர். ஆனால் உண்மையான காரணம் அவர்களின் சாதிவெறிதானே தவிர அவரது வயதல்ல என்பதற்கு அதே மகாலட்சுமியை இப்போதே தங்கள் சாதிக்குள் கட்டிக்கொடுக்க அவர்கள் செய்துள்ள முயற்சியே சான்றாக உள்ளது.

கடந்த காலத்தில் மகாலட்சுமியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாடுகளின் பேரில் மாரிமுத்து இரண்டு முறை சிறைப்படுத்தப்பட்டுள்ளார். மகாலட்சுமியின் குறைவயதினால் ஏற்படும் சட்டச் சிக்கலைப் புரிந்து கொண்ட மாரிமுத்துவும் மகாலட்சுமியும் திருமணத்தைத் தள்ளிப் போட தங்களுக்குள் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. 18 வயது நிறைவடைந்தவுடன் மாரிமுத்துவைத்தான் மணம்புரிவேன் என்று மகாலட்சுமி உறுதியாக இருந்துள்ளார். இந்த முடிவை மகாலட்சுமி தன் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் காவல் துறையிடமும் நீதித் துறையிடமும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகலட்சுமியின் பெற்றோர் அவரை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், இதற்குப் பெரியகுளம் காவல்துறையும் உடந்தை எனத் தெரிகிறது. அண்மையில் அண்ணல் அம்பேத்துகர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் தணிந்த(தலித்து) மக்களைத் தாக்கியும், முருகன் மார்பில் பச்சை குத்தபட்டிருந்த அம்பேத்துகரை உதைத்தும் தம் சாதிவெறியைக் காட்டிக் கொண்ட பெரியகுளம் காவல் துறையினர் அதே சாதி வெறியுடன் மகாலட்சுமியின் மனத்தைக் கரைக்கவும் மாரிமுத்துவை மிரட்டிப் பணிய வைக்கவுமே முயன்றுள்ளார்கள்.

மகாலட்சுமி மாரிமுத்து இருவரையுமே கழுத்தறுத்துப் போட்டு விடுவோம் என்று மகாலட்சுமியின் தந்தை சம்பத்தும், அக்காள் கணவர் பாண்டியும் வெளிப்படையாக மிரட்டியுள்ளார்கள்.

நேற்று முன்தினம் கூட மகாலட்சுமி தன்னைப் பெற்றோர் அடித்துத் துன்புறுத்துவதாகவும், தனக்கு இன்னும் சில மாதங்களில் 18 வயது நிறைவடைந்து விடும் என்றும், அதுவரை தன்னைக் காப்பகத்தில் சேர்த்துவிடுமாறும் பெரியகுளம் காவல் நிலையக் காவலர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாரிமுத்துவும் மகாலட்சுமியும் சடலமாகத் தொங்கியதன் பின்னணி இதுதான். ஏறி நிற்க எவ்வித ஏந்தும் இல்லாத காட்டுப் பகுதியில் உயரமான மாமரக் கிளையிலிருந்து இருவரின் சடலங்களும் தரைதட்டியபடி தொங்கிக்கொண்டு இருந்தன. செய்தியறிந்து ஓடிவந்து பார்த்த ஊர்மக்கள் எவரும் இதைத் தற்கொலை என்று நம்பவிலை. ஆனால் பெரியகுளம் காவல்துறை எவ்வித விசாரணையும் இல்லாமல் தற்கொலைதான் என்று முடிவுகட்டி மக்களையும் அவ்வாறே ஏற்கச்செய்ய முயன்று வருகிறது. சாதிவெறியுடன் தணிந்த(தலித்து) மக்களை இழிவாகப் பேசுவதில் பேர்போன பெரியகுளம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் மீனாட்சி இவ்வழக்கிலும் சாதிய வன்மத்துடன் செயல்பட்டுள்ளார். மாரிமுத்துவும் மகாலட்சுமியும் பிணமாகத் தொங்கிய காட்சியை மக்கள் கைப்பேசியில் படம் பிடித்து விடாமல் தடுத்து, மக்களை இழிசொற்களால் வசைபாடியும் மிரட்டியும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.

மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் காவல்துறையிடம் அளித்துள்ள முறைப்பாட்டில், பறையர் சாதியைச் சேர்ந்த தன் மகன் மாரிமுத்து கள்ளர் சாதியைச் சேர்ந்த மகாலட்சுமியைக் காதலித்ததால், மகாலட்சுமியின் குடும்பத்தார் பல முறை சண்டையிட்டு சச்சரவுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிபிட்டுள்ளார். மகாலட்சுமியின் தந்தை சம்பத்தையும் மகாலட்சுமியின் அக்காள் கணவர் பாண்டியையும் குறிப்பிட்டுப் புகார் அளித்துள்ளார். இருந்த போதிலும் பெரியகுளம் காவல்துறையினர் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் குற்ற நடைமுறைச் சட்டத்தின் கீழ் ‘சந்தேக மரணம்’ என்றுதான் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

சடலங்கள் காணப்பட்ட இடத்தில் சட்டப்படியான மரண விசாரணை (INQUEST) கூட செய்யாமல் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் எடுத்துச் சென்று க.விலக்கு மருத்துவமனையில் சடலக் கூறாய்வு செய்வித்துள்ளனர். அதற்குப் பின்னரும் கூட மகாலட்சுமியின் உடலைப் பெற அவர் குடும்பத்தினர் வரவில்லை எனத் தெரிகிறது. அந்நிலையிலும் காவல் துறையினர் மகாலட்சுமியின் சடலத்தை அவசர அவசரமாக அனுப்பி எரிக்கச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

மாரிமுத்துவின் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் மகாலட்சுமியின் பெற்றோர்தாம் மாரிமுத்துவையும் மகாலட்சுமியையும் கொலைசெய்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ப.சா.(எசுசி) ப.கு.(எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை, மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து, மாரிமுத்துவின் பெற்றோரும் முற்போக்கு இயக்கங்களும் போராடி வருகின்றன.

மாரிமுத்து-மகாலட்சுமி இருவரையும் மகாலட்சுமியின் தந்தை, தாய்மாமன் உள்ளிட்டவர்கள் சதி செய்து கூலிக் கொலையாட்களைக் கொண்டு கொலை செய்து விட்டதாகவும், கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றவே பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சியும் தேனி மாவட்டக் காவல் துறையினரும் முயல்வதாகவும் மக்கள் நம்புவதில் நியாயம் இருப்பதாகக் கருதுகிறேன்.

இந்த வழக்கில் உண்மையைக் கண்டறியவும் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றவும் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யவும் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கும் படியும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். பெரியகுளத்தில் நீதிக்கான போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடனும் முற்போக்கு இயக்கங்களுடனும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தோழமை கொள்கிறது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 273

வியாழன், 19 அக்டோபர், 2023

ஆளுமையர் உரை 70,71 & 72 : இணைய அரங்கம்: 22.10.2023

 

ஆளுமையர் உரை 70,71 & 72  :

 இணைய அரங்கம்: 22.10.2023

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை (திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                                                      தமிழா விழி!                                           

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 70,71 & 72  : இணைய அரங்கம்: 22.10.2023

ஐப்பசி 05, 2054 ஞாயிறு 22.10.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தமிழும் நானும் – உரையாளர்கள்

முனைவர் குமரிச்செழியன்

முனைவர் அ.காளியப்பன்

கவிஞர். அ. இருளப்பன்

தொகுப்புரைஞர்:   குமுகாயப் போராளி தோழர் தியாகு

நன்றியுரை : மயிலை இளவரசன்




தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

போகாத ஊருக்கு வழிகாட்டும் பொல்லாத பதின்மூன்று

13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு36ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டது என்று பொருள்.

36 ஆண்டுகளுக்கு முன் இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையின் தொடர்ச்சியாக 13ஆம் திருத்தச் சட்டம் முன்மொழியப்பட்ட நேரத்தில் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்திக்கு ஈழத் தேசிய அரசியல் கட்சிகள் எழுதிய கடிதத்தில் 13ஆம் திருத்தச் சட்டத்தை கேலிக் கூத்து என்று சாடின.

13ஆம் திருத்தச் சட்டம் குறித்து ஏமாற்றம் தெரிவிக்கும் வகையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம், செயலாளர் அமிர்தலிங்கம், துணைத் தலைவர் சம்பந்தன் ஆகிய மூவரும் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்திக்கு 1987 அட்டோபர் 28ஆம் நாள் எழுதிய கடிதம் ஒரு வரலாற்று ஆவணம். இந்தக் கடிதத்தில் அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்:

“இந்த முன்மொழிவுகள் தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யவில்லை. தமிழ் மக்கள் சந்தித்துள்ள உயிரிழப்பு, இன்னல்கள், துயரங்களுக்கு எவ்விதத்தும் ஈடாகவும் இல்லை.”

சுருங்கச் சொல்லின் 13ஆம் திருத்தச் சட்டம் ஒரு கேலிக்கூத்து! ஒரு மோசடி! இந்தக் கேலிக் கூத்தைத்தான், இந்த மோசடியைத்தான் இப்போது முழுமையாகச் செயலாக்கச் சொல்லித் தமிழ் அரசியல் தலைவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு சிங்கள அரசிடம் பேரம் பேசுகின்றது இந்திய வல்லரசு.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கூட இந்திய அரசிடமிருந்து வரவில்லையே, ஏன்? ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்தின் படி வலியுறுத்த வேண்டிய கோரிக்கையை வாய்மொழியாகக் கூட பேசாமல் மோசடியான 13ஆம் திருத்தச் சட்டத்தை ஈழத் தமிழர்கள் தலையில் கட்ட முயலும் இந்திய அரசின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 13ஆம் திருத்தச் சட்டம் எவ்வகையிலும் தமிழர்களின் தேசிய இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் கட்டமைப்பியல் இனவழிப்புக்குத் துணை செய்வதாகவும் அமையும் என்பது ஆய்ந்து தெளிந்த முடிவாகும்.

ஈழத் தமிழர் தொடர்பான இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு 13ஆவது திருத்தச் சட்டம்தான் என்பதால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ்த் தலைவர்களும் உள்ளனர், ஆய்வு அறிஞர்களும் உள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்ட ஈழத் தமிழர் இனவழிப்பு குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரும் தமிழர் போராட்டம் குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் நிகழ்ந்துள்ளன என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை எடுத்துரைக்கும் மூன்று ஐநா அறிக்கைகள் (தாருஸ்மன், சார்லஸ் பெற்றி,மனிதவுரிமை ஆணையர் அலுவலகத்தின் அறிக்கை)குறித்து இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? இந்தக் குற்றச்சாட்டுகள் மீது புலனாய்வு செய்ய உள்நாட்டுப் பொறிமுறையா? பன்னாட்டுப் பொறிமுறையா? கலப்புப் பொறிமுறையா? என்ற வினாவில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன?

ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் இந்தியாவும் உள்ளிட்ட கூட்டு முன்மொழிவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் குறித்தும், அதிலிருந்து சிறிலங்கா ஓடிப்போனது குறித்தும் இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு என்ன? ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் இந்தியா தொடர்ச்சியாகவும் முன்பின்முரணின்றியும் கடைப்பிடித்துள்ள கொள்கை நிலைப்பாடு என்ன?
ஈழத் தமிழினம் கோருவது இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி, குற்றவியல் நீதியும் அரசியல் நீதியும்! இந்தியா ஏனோதானோ என்று முன்வைப்பது தமிழர்களால் மறுதலிக்கப்பட்ட 13ஆம் திருத்தம்! இது மோசடியான கேலிக்கூத்து என்று கருநிலையிலேயே தலைவர்கள் சிவசிதம்பரமும் அமிர்தலிங்கமும் சம்பந்தர் ஐயாவும் தோலுரித்துக் காட்டிய பின், அதையே வரலாற்றின் குப்பைத் தொட்டியிலிருந்து தூக்கி வந்து சீவி சிங்காரித்து அம்பலத்தில் ஆடவைக்க இந்தியா செய்யும் சூழ்ச்சிக்குப் பலியாகலாமா தமிழர்கள்?
பரமபத விளையாட்டு போல் இஃது இந்தியாவின் 13பத விளையாட்டு!
தமிழினம் போரிலே தோற்றபின் வெற்றியாளனின் நீதிக்குத்தான் பணிந்து போக வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அரசுக்கு அடங்கிப் போகச் சொல்லும் இரண்டகக் கும்பல் ஒரு பக்கம்! இந்தியாவின் விரிவாதிக்க அரசியலுக்குத் துணைநின்று அது ஈவதை இரந்து பெற்றுக்கொள்ள ஓடேந்தி நிற்கும் இரவலர் கும்பல் மறுபக்கம்! இந்த இரண்டகர்களையும் இரவலர்களையும் எதிர்த்துப் போராடி வெல்வதுதான் விடுமை வாழ்வுக்கு வழி!
இந்தியாவுக்கு என்ன வந்தது? அது ஏன் 13ஆம் திருத்தத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்? இந்திய வல்லரசின் புவிசார் அரசியல் அப்படி! சீனக் கொள்ளையருக்கும் இந்தியக் கொள்ளையருக்கும் இலங்கை என்னும் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வதில் போட்டி! இலங்கை என்னும் சதுரங்கப் பலகையில் தமிழர்களைப் பகடைகளாக உருட்டுவது இந்தியாவின் உத்தி! அதற்காகத் தமிழீழ விடுதலையையும் ஏற்றுக் கொண்டு விடக் கூடாது! தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு! பன்னாட்டு நீதிப் பொறிமுறை! குற்றவாளிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றுவது! பொதுவாக்கெடுப்பு வழியிலான அரசியல் தீர்வு! இவற்றில் எதுவும் சிங்கள அரசை மிரட்டிக் கைக்கடக்கமாக வைத்துக் கொண்டே சீனச் செல்வாக்கைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாகத் தமிழர்களின் விடுமைப் பயிருக்கு இவையெல்லாம் நீர் பாய்ச்சுவதாகி விடும்.
3ஆம் திருத்தம் வெறும் புழு! யாரையும் கடிக்காது. 13ஆம் திருத்தம் தமிழ் மக்களின் எந்த உரிமையையும் மீட்டுக் கொடுக்காது. தமிழர் தாயகத்தின் மீதான வன்பறிப்பை (ஆக்கிரமிப்பை) முடிவுக்குக் கொண்டுவராது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்காது. சிறையில் அடைபட்டுள்ள போர்க் கைதிகளை விடுவிக்காது. தமிழ் நிலத்தின் சிங்கள பௌத்த மயமாக்கத்தைத் தடுக்காது. சிங்கள வன் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தாது.
13ஆம் திருத்தத்துக்காக இந்தியக் குடுமி ஆடுவதேன்? இந்தக் கேள்விக்குத் தெளிவான விடை: முள்ளிவாய்க்காலுக்கு முன் நேர் இனவழிப்புக்குத் துணைபோன இந்திய வல்லரசு இப்போது தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் துணைபோய்க் கொண்டிருக்கிறது என்பதே!
எச்சரிக்கை தமிழா!


(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 272

தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2 – தொடர்ச்சி)

தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவி ஈழத்துக்கு ஏதாவது(?) செய்ய முடியும் என்ற கருத்தைப் பரப்பி வரும் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என்றே தமிழீழ ஆதரவு முற்போக்காளர்கள் கேலி செய்து வருகின்றனர். அவரும் அது பற்றிக் கவலை இல்லை, நான் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கூறி விட்டார். இந்துத்துவ ஆளும் கும்பலை நயந்து கொள்ளும் பொருட்டு அவரும், அவரைப் போலவே காந்தளகம் சச்சிதானந்தன் போன்றவர்களும் இசுலாமிய வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளையும் சேர்த்து அகண்ட பாரதம் அமைப்பது ஆர்எசுஎசு-பாசக திட்டம். இந்தியாவில் போலவே இலங்கை, மியான்மர் போன்ற அண்டை நாடுகளிலும் அது இசுலாமியரை நசுக்கத் திட்டமிடுகிறது. அதற்குக் காசி ஆனந்தன் போன்றவர்களுக்கு ஈழ’ஆசை காட்டி இந்துத் தமிழர்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறது. பாசக ஆதரவோடு தமிழீழம் அமையும் எனக் கொண்டாலும் அது காவித் தமிழீழமாகவே இருக்கும். இந்தப் பின்னணியில்தான் நான் சொன்னேன்: தமிழீழம் மலரும். அது காவித் தமிழீழமாக இருக்காது, சிவப்புத் தமிழீழமாகவே இருக்கும்.

முள்ளிவாய்க்கால் சுடரேந்தும் அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை என்ன பேசினார் தெரியுமா? 2009இல் நரேந்திர மோதி பிரதமராக இருந்திருந்தால் இது (முள்ளிவாய்க்கால் கொடுமை) நிகழ்ந்திருக்காது.

மோதி அப்போது இந்தியத் தலைமையமைச்சராக இல்லை. ஆனால் குசாராத் முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சராக அவர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டாரா?

அவர் சார்ந்த பாரதிய சனதா கட்சி முள்ளிவாய்க்கால் இனக்கொலையைக் கண்டித்ததா? அப்போதைய காங்கிரசு அரசு சிறிலங்காவின் சிங்கள அரசுக்கு ஆய்தங்களும் ஆதரவும் வழங்கியதை எதிர்க்கட்சியான பாசக கண்டித்ததா?

2009 தொடங்கி இன்று வரை ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் ஏமாற்று அணுகுமுறையில் தமிழ் மக்களின் ஈடுசெய் நீதிக் கோரிக்கையை மறுக்கும் அணுகுமுறையில் மன்மோகன் சிங்குக்கும் நரேந்திர மோதிக்கும் என்ன வேறுபாடு?

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, பொதுவாக்கெடுப்பு ஆகிய பொதுவான தமிழர் கோரிக்கைகளை மறுப்பதில் காங்கிரசுக்கும் பாசக-வுக்கும் என்ன வேறுபாடு? 13ஆம் திருத்தச் சட்டம் என்னும் கவைக்குதவாத திட்டத்தைத் தமிழர்கள் மீது திணிக்க முற்படுவதில் முந்தைய அரசுக்கும் இன்றைய அரசுக்கும் என்ன வேறுபாடு?

2013ஆம் ஆண்டு அட்டோபரில் கொழும்பில் நடைபெறவிருந்த பொதுநலவாய (காமன்வெல்த்) உச்சி மாநாட்டுக்கு இந்தியத் தலைமையமைச்சர் செல்லக்கூடாது எனக் கோரி காலவரையற்ற பட்டினிப் போர் தொடுத்தேன். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எமது போராட்டத்தை ஆதரித்த போது கொழும்பு மாநாட்டை மன்மோகன் சிங்கு புறக்கணிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டவர் பாசக அனைத்திந்தியத் தலைவர் இராசுநாத்துசிங்கு.

ஒரு கேள்விக்கு அண்ணாமலை விடை சொல்லட்டும்: 2009 முள்ளிவாய்க்காலில் நடந்ததை மோதியால் தடுத்திருக்க முடியுமா? என்ற இறந்த காலம் தொடர்பான வினா கிடக்கட்டும். அன்று நடந்தது இனக்கொலைதான் என்பதை இப்போதாவது மோதியும் அண்ணாமலையும் அறிந்தேற்பார்களா? இன்றைய பன்னாட்டரங்கில் ஓர் அரசு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை ஆதரிப்பதாக இருந்தால் அதற்கான முதல் படியே தமிழினவழிப்பை அறிந்தேற்பதுதான், அங்கீகரிப்பதுதான்.

ஆனால் அண்ணாமலை அந்தக் கூட்டத்திலேயே சொல்கிறார்: என்னால் சில சொற்களை உச்சரிக்க முடியாது என்று. இனவழிப்பு என்று தன் வாயால் சொல்ல முடியாதவரை ஏன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைக்க வேண்டும்? அவர் ஏன் அங்கு வந்து சுடர் ஏற்ற வேண்டும்? தமிழ்த் தலைவர்கள் அவரையும் அவரின் தலைவரையும் ஏன் பாராட்ட வேண்டும்?

தமிழீழ மக்கள் இனவழிப்புக்கு ஆளானவர்கள், இன்றளவும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பவர்கள். அவர்களின் இன்றைய போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டம். இனவழிப்புக் குற்றம் புரிந்த சிங்கள அரசியல் தலைவர்களும், படைத் தலைவர்களும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்றப்பட வேண்டும். ஆனால் இது மட்டும் போதாது. இறுதி நோக்கில் இனவழிப்பு என்பது சிறிலங்கா எனப்படும் சிங்களப் பேரினவாத அரசின் குற்றம். சிறிலங்கா கலைக்கப்படுவதே முறையான அரசியல் நீதியாக நிறைவுபெறும்.

தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற வகையில் இயல்பிலேயே இறைமைக்கு உரிமை படைத்தவர்கள். இனவழிப்புக்கு ஆளான மக்கள் என்ற வகையில் இறைமைக்கான சிறப்புரிமையும் அவர்களைச் சாரும். (இ)யூதர்கள் ஒரு தேசமாக மாட்டார்கள் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் போர்க் காலத்திலும் பாரிய இனவழிப்பு ஆளானவர்கள் என்பதால் அவர்கள் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை ஏற்று இசுரேல் அமைத்துத் தரப்பட்டது. இசுரேல் அந்த இறைமையைப் பாலத்தீனர்களுக்கும் பிற அராபியர்களுக்கும் எதிராகப் பயன்படுத்தி வருகிறது.

தமிழீழத்தை இசுரேலுடன் ஒப்பிட்டு, அமெரிக்க வல்லரசுக்கு இசுரேல் போல் இந்திய வல்லரசுக்கு ஈழம் பயன்படும் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போதும் இருக்கின்றார்கள். அப்படித்தான் ஈழம் பயன்படும் என்றால் இந்தியாவில் ஓர் ஒடுக்குண்ட தேசம் என்ற வகையில் தமிழர்களாகிய நாம் அதை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

விடுதலை பெறும் தமிழீழம் ஒருபோதும் இந்தியாவுக்கோ வேறு வல்லரசுக்கோ அடியாளாக இருக்காது, அது முற்போக்கான கொள்கைகளைக் கடைப்பிடித்துக் குறிப்பாகத் தெற்காசியாவில் பிற தேசங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமையும் என்பதற்கு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானமும், சோசலிசத் தமிழீழம் நோக்கி’’ என்ற விடுதலைப் புலிகளின் வேலைத் திட்டமும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க முன்முயற்சியில் பறைசாற்றப்பட்டுள்ள விடுமைப் பட்டயமும் சான்று பகர்கின்றன. இப்படியொரு தேசம் மலர்வதை அமெரிக்க, இந்திய, சீன வல்லரசுகள் விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் வல்லரசுகளின் விருப்பமே வரலாற்றைத் தீர்மானித்து விடுவதில்லை.

ஈழம் இந்தியாவின் எந்த நியாயமான நலனுக்கும் எதிரானதல்ல. இந்தியா ஈழத்தை எதிர்க்கவும், நீதிக்கான ஈழத் தமிழர் போராட்டத்தை மறுக்கவும் நியாயமான காரணம் ஏதுமில்லை. நீதிக்கான போராட்டத்தில் இந்தியா தமிழ்மக்களுக்கு உதவ விரும்பினால் அவர்களின் மூன்று முதன்மைக் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும்.

1) ஈழத் தமிழருக்கு எதிராக இனவழிப்புப் போர் நடந்துள்ளது என்பதை அறிந்தேற்று, இனவழிப்பு, போர்க்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் ஆகிய பன்னாட்டுக் குற்றம் இழைத்தவர்களை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்ற ஆதரவளிக்க வேண்டும்.

2) இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான பொறுப்புக்கூறல் என்ற வகையில் வந்துள்ள ஐநா அறிக்கைகளின் தொடர்ச்சியாகத் தற்சார்பான பன்னாட்டுக் குற்றப்புலனாய்வு செய்ய ஆதரவளிக்க வேண்டும்.

3) தமிழீழத்தின் வருங்காலம் குறித்துத் தீர்மானிக்கத் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் ஈழத் தமிழர்களிடையே ஐநா மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த ஆதரவளிக்க வேண்டும்.

இந்தப் பொதுவான கோரிக்கைகளை ஆதரிக்காமல் 13ஆம் திருத்தச் சட்டம் என்ற பாட்டையே இந்தியா திரும்பத் திரும்பப் பாடி வருகிறது. இது தவிர வேறு எதுவும் தமிழர்களின் கோரிக்கைகளாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகிறது.

இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலம் அல்லது இந்தியப் படையெடுப்புக் காலம் என்ற வரலாற்றையே மறந்து விடும்படிச் சிலர் அறிவுரை கூறக் கிளம்பி வருவது பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களும் கூட அக்காலத்தின் எச்சமான ஒன்றை மட்டும் இன்றளவும் பற்றிக் கொண்டு தொங்குகிறார்கள். அதுதான் 13ஆம் திருத்தச் சட்டம். ஏன்? என்று அடுத்த மடலில் பார்ப்போம்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 271