சனி, 6 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 92 : மறதிச் சேற்றில் புதைந்து போகாமல்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா? தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்

இனிய அன்பர்களே!

மறக்க முயன்றாலும் மறக்க முடியாத ஆண்டு 2009தமிழினத்தின் கூட்டு உளச்சான்றில் மாறா வடுவாய்ப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காக மட்டுமன்று, அப்படி ஒரு கொடுமை நடந்து விடாமல் தடுக்க தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழுலகும் உலகத் தமிழர்களும் நடத்திய உணர்வார்ந்த போராட்டங்களும் மறக்கவியலாதவை. மறக்கக் கூடாதவை. அந்த மறவா நிகழ்வுகளில் ஒன்று 2009 பிப்பிரவரி 19ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை நடத்திய கொடுந்தாக்குதல். அந்தத் தாக்குதலில் மண்டையுடைந்து குருதி சிந்தியவர்களில் ஒருவர் வழக்கறிஞர் முனைவர் சம்பத்துகுமார். 2009 மே 18, 19 இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி கோரி நிற்கிறோம். அதே போல் 2009 பிப்ரவரி 19க்கும் நீதி கேட்கிறோம். அங்கே உலகம் நீதி செய்யவில்லை. இங்கே இந்தியாவும் தமிழ்நாடும் நீதி செய்யவில்லை. எட்டாக்கனியாக விலகிப் போன அந்த நீதியைத்தேடி சம்பத்துகுமார் எழுதியிருக்கும் குறுநூல் – நீதியைத் தேடி! விரைவில் வெளிவரும் அந்நூலுக்காக நான் எழிதியுள்ள அணிந்துரை இதோ:   

மறதிச் சேற்றில் புதைந்து போகாமல்

கடந்த 2009ஆம் ஆண்டு பிறக்கும் போதே தமிழ்நாடு போரட்டக் களமாகிக் கிடந்தது. போரை நிறுத்து! என்ற முழக்கம் எல்லாப் பக்கமும் ஒலித்துக் கொண்டிருந்தது. தமிழீழத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசு தொடுத்திருந்த இனவழிப்புப் போருக்கு இந்திய அரசு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்தது. தமிழ்நாட்டில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகமும் போரை நிறுத்தும் கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசியது என்றாலும், தமிழக அரசின் காவல்துறை அந்தப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயன்றது. முதல்வர் கலைஞர் கருணாநிதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி இனக் கொலைப் போரை நிறுத்தத் தவறினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவோம் என்ற முடிவை அறிவித்தார். இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆய்தம் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கைகளுக்காக நாடு தழுவிய மனிதச் சங்கிலியும் அமைக்கப்பட்டது.

ஆனால் எதற்கும் இந்திய அரசு மசியவில்லை. இனக் கொலைப் போர் தொடர்ந்தது. தமிழின உயிர்ப்பலி கூடிக் கொண்டே இருந்தது. அனைத்துக் கட்சித் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் குப்பையில் வீசி விட்டன. எந்த நாடளுமன்ற உறுப்பினரும் பதவி விலகவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகளும் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிட இயக்க அமைப்புகளும் தங்களால் இயன்றவரை “போரை நிறுத்து!” என்று ஓங்கி முழங்கிப் போராடிக் கொண்டிருந்தோம்.

கட்சி அரசியலுக்கு அப்பால் மாணவர் இளைஞர் அமைப்புகள், தொழிலாளர் உழவர் அமைப்புகள், வணிகர் சங்கங்கள் போராடிக் கொண்டிருந்தன. இந்த வகையில் தமிழ்நாடெங்கும் வழக்கறிஞர் சங்கங்கள் பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்த போராட்டம் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு தழுவிய வழக்கறிஞர் போராட்டத்தின் குவிமையமாகச் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் தொடர் போராட்டம் அமைந்தது. போராடும் வழக்கறிஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் ஈழ ஆதரவு இயக்கங்கள் அவர்களது போராட்டத்தில் இணைந்து நின்றன. இதை எழுதிக் கொண்டிருக்கும் நான் பல முறை உயர்நீதிமன்ற வளாகம் சென்று வழக்கறிஞர் போராட்டத்தை வாழ்த்திப் பேசியுள்ளேன்.

வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு நடுவிலும் பொதுமக்களின் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க எடுத்துக் கொண்ட முயற்சி மதிக்கத்தக்கது. கட்சிக்காரர்களே நீதிபதிகளின் முன் நின்று தங்கள் வழக்கை எடுத்துரைக்க வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே பயிற்சி கொடுக்கக் கண்டோம்.

ஈழத்திலிருந்து ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருந்த போர்ச் செய்திகள் தமிழக மக்களை மேன்மேலும் கிளர்ந்தெழச் செய்தன. தமிழ்நாட்டில் ஈழ வெப்பம் ஏறிச் சென்று கொண்டிருந்ததன் அடையாளமாக முத்துக்குமார் தொடக்கம் வரிசையான தீக்குளிப்புகள் நிகழ்ந்தன. பெரிய அரசியல் கட்சிகளின் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் தாக்கமேதும் கொள்ளவில்லை. தலைவர்கள் மெய்யாகவே போரை நிறுத்தக் கோரித்தான் போராடுகின்றார்களா? அல்லது எல்லாமே நாடகம்தானா? என்ற ஐயம் அரசியல் விழிப்புற்றவர்களிடையே ஏற்பட்டது. இவ்வாறு விழிப்புற்றவர்களில் வழக்கறிஞர்களும் சட்ட மாணவர்களும் முன்னுக்கு நின்றார்கள். வழக்கறிஞர்களிடையே கட்சி அரசியல் இருக்கவே செய்தது என்றாலும், அவர்கள் தமிழினவழிப்புக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு நின்றார்கள்.

ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழ்நாட்டின் போராட்ட எழுச்சியும், குறிப்பாக வழக்கறிஞர்களின் கிளர்ச்சியும் தமிழீழ மக்களுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டின் போராடும் ஆற்றல்களுக்கும் ஆறுதலும் ஊக்கமும் அளித்தன. இதே காரணத்தால் இந்திய ஆட்சியாளர்களுக்கு எரிச்சலூட்டின. தமிழக ஆட்சியாளர்களின் நிலையும் இதுவாகவே இருந்தது.

ஆளுங்கட்சியான திமுக பல குரல்களில் பேசிக் கொண்டிருந்தது. போரை நிறுத்து! என்ற முழக்கத்தில் தானும் இணைந்து நின்றது. அதேபோது போரை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்திய அரசுதான் பின்வலு என்று தெரிந்தும் “இந்திய அரசின் கொள்கையும் எங்கள் கொள்கையும் ஒன்றே” என்று அறியத் தந்தது. அனைத்திலும் மோசமாக, ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களை அடக்கியொடுக்க முற்பட்டது. சட்டப்படியான குடியாட்சிய உரிமைகளைக்கூட நசுக்க முயன்றது.

இந்தப் பின்னணியில்தான் 2009இல் அந்த பிப்பிரவரி 19ஆம் நாள் கொடுமை நடந்தது. தலைநகரம் சென்னையிலேயே தமிழ்நாட்டின் தலைமை நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் கூடக் காவல் துறையின் மூர்க்கத் தாக்குதலுக்கு ஆளானார்கள். வளாகத்துக்குள் நின்ற ஊர்திகள் என்ன பாவம் செய்தனவோ அவையும் தடியடிக்கு உள்ளாயின. வளாகத்துக்கு வெளியிலும் கூட பெண்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் துரத்தித் துரத்தித் தாக்கப்பட்டார்கள். 

அந்த நேரம் நீதிமன்றத்திலிருந்த “நீதியரசர்கள்” எனப்பட்டோரின் செங்கோல்கள் காவல்துறையினரின் கம்புகளின் முன்னே வளைந்து குனிந்தன. சட்டம் அலசும் நீதிமன்றக் கூடங்கள் அரசத் திட்டங்களுக்குச் சூதிடங்கள் ஆகிப் போயின.

தாக்குண்டது நீதி! தாக்குண்டது சட்டம்! தாக்குண்டது உரிமை! குடிமக்களைக் காக்க வேண்டிய இவையெல்லாம் தம்மைத்தாமே காத்துக் கொள்ள முடியாமல் வீழ்ந்து நொறுங்கின. நடந்த வன்முறைக்குப் பொறுப்புக் கூறல் இல்லை. நீதி இல்லை. இனியொரு முறை இப்படி நிகழாது என்ற உறுதிப்பாடும் இல்லை.

வினவல் ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கையும் வந்தது. நீதிமன்ற வழக்குகள் நீண்டு சென்று காலக் கிணற்றில் வீசிய கற்களாகி விட்டன. தாக்குண்ட பலரும் நம்பிக்கை இழந்து சோர்ந்து விட்டனர். சிலர் தங்கள் அரசியல் மயக்கங்களுக்கு மாறான நிகழ்வுகளை நினைவு வைத்துக் கொள்வதே இல்லை.

ஆனால் இந்தத் தமிழ்நாட்டில் ஒருவர் 2009 பிப்பிரவரி 19ஆம் நாளை முழுமையாக ஆவணமாக்கியுள்ளார். அவரே வழக்கறிஞர். அந்த நாளில் தாக்கப்பட்டவர். அந்தத் தாக்குதலின் ஆறா வடுக்களை மனத்தில் சுமந்து நீதிக்கான சமரை அயராது தொடரும் முனைவர் அரங்க. சம்பத்குமார். அந்த நாள் நிகழ்வுகளையும், அவை ஏற்படுத்திய பல்திசை அதிர்வுகளையும், நீதியைத் தேடி எழுத்தில் செதுக்கியுள்ளார்

படியுங்கள், அறிவும் உணர்வும் கூராகட்டும். 2009 மே 18 முள்ளிவாய்க்காலுக்கு முன்னே 2009 பிப்பிரவரி 19 சென்னை உயர்நீதிமன்றம். மே 18க்கு நீதி கோரும் போராட்டம் போலவே பிப்ரவரி 19க்கு நீதி கோரும் போராட்டமும் நீண்டு செல்கிறது. ஆனால் இந்த நாட்களின் நினைவு மறதிச் சேற்றில் புதைந்து போக விடோம்! எவ்வளவு நீண்டு சென்றாலும் ஒருநாள் நீதிக்கனவு மெய்ப்படாமல் சாக விடோம்!

நீதியைத் தேடி தோழர் சம்பத்துகுமார் தொடுக்கும் எழுத்துக் கணை இலக்குத் தவறாது. ஏனென்றால் சட்டமும் நீதியும் உண்மைகளும் வரலாறும் அவருக்குத் துணை!

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 61

வெள்ளி, 5 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில் புனிதமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?) தொடர்ச்சி)

இழிதொழில் புனிதமா?

காந்தியார் துப்புரவுத் தொழிலாளர்களை இந்தச் சமூகத்தின் தாய் என்று வண்ணித்தார். குழந்தைக்கு அன்னை செய்யும் கடமைகளை அவர்கள் செய்வதாகச் சிறப்பித்துச் சொன்னார். காந்தியார் நிறுவி நடத்திய ஆசிரமங்களில் அனைவரும் தமது கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். காந்தியார் தன்னை ஒரு பங்கி என்று சொல்லிக் கொண்டார். பங்கிதான் தோட்டி என்பது போல்மலம் அள்ளும் தொழிலாளி.

ஒரு முறை அம்பேத்துகருடன் உரையாடும் போது காந்தி சொன்னார்: “அடுத்த பிறவியில் மலம் அள்ளும் தொழிலாளியாகப் பிறக்க விரும்புகிறேன்.” 

அம்பேத்துகர்சொன்னார்: “இந்த இழிவான தொழிலை இந்தப் பிறவியிலேயே ஒழித்து விட வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் அடுத்த பிறவி வரை நீடிக்க விரும்புகிறீர்கள்.”

மனித மலத்தை மனிதர் கையால் அள்ளும் இழி தொழிலைப் புனிதப்படுத்துவதைத்தான் இன்றளவும் நரேந்திர மோதி செய்து வருகிறார். இன்றளவும் மலக்குழியில் மூச்சுத்திணறிச் சாகும் மனிதனுக்கு இந்தியக் குடியரசில் விடிவு காலம் பிறக்கவில்லையே! மலக்குழியில் சாவதுதான் இந்தப் புண்ணிய பூமியில் புனிதச் சாவோ?

தரவு : தாழி மடல் 59

++

கொல்கத்தாவின் கரும்பொந்துகள் 

கொடுஞ்சிறைகள்பற்றிப் பேசும் போது கொல்கத்தாவின் கரும்பொந்துகள் போல என்று படித்திருக்கிறோம். அவை என்ன? என்று தெரிந்து கொள்வோம்.

வங்காள மாநிலத்தின் தலைநகரமாகிய கொல்கத்தாவில் கிழக்கிந்தியக் கும்பினியின் வணிகத்தைப் பாதுகாக்க வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.

பிரெஞ்சுக்காரர்களும் பிரித்தானியரும் கோட்டை கொத்தளங்கள் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று வங்காள நவாப்பு சிராசு-உத்-தவுலா ஆணையிட்டார். பிரெஞ்சுக்காரர்கள் அந்த ஆணையை ஏற்றுக் கொண்டார்கள். பிரித்தானியர் ஏற்க மறுத்து விட்டார்கள்.

பிரித்தானியரைத் தண்டிக்க வேண்டும் என்று சிராசு-உத்-தவுலா படைதிரட்டிச் சென்று வில்லியம் கோட்டையை முற்றுகையிட்டார்.

பிரிரத்தானியப் படையில் இருந்த இந்தியத் துருப்புகள் விட்டோடி விட்டதால் பிரித்தானியரால் வில்லியம் கோட்டையைப் பாதுகாக்க முடியவில்லை. 1756 சூன் 20ஆம் நாள் வங்காளப் படைகளின் முற்றுகைக்கு வில்லியம் கோட்டை வீழ்ந்தது.

கொல்கத்தாவில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளும் வணிகர்களும் சிராசு-உத்-தவுலாவுக்கு விசுவாசமான படைகளால் வளைத்துப் பிடிக்கப்பட்டு “கரும்பொந்து என்றறியப்பட்ட இருட்டறைக்குள் தள்ளப்பட்டனர்.

மொத்தம் 146 பிரித்தானியக் கைதிகளில் இருவர் பெண்கள்; காயமடைந்த ஆண்கள் பலர்; ஆல்வெல்லும் அவர்களில் ஒருவர். வாள்முனையில் அவர்கள் இரவெல்லாம் கோட்டையின் ‘கரும்பொந்து’க்குள் தள்ளப்பட்டனர். சிறு குற்றம் புரிந்தவர்களுக்காகப் பிரித்தானியர் கட்டிவைத்திருந்த காவல் கொட்டடிதான் கரும்பொந்து எனப்பட்டது. கொட்டடியின் நீளம் 18 அடி, அகலம் 14 அடி 10 அங்குலம் இரு சிறிய சாளரங்கள் இருக்கும். இதுதான் “கரும்பொந்து”.

மறுநாள் காலை 6 மணிக்குக் கொட்டடியைத் திறந்த போது பிணங்கள் குவிந்து கிடந்தன. 23 கைதிகள் மட்டும் உயிருடனிருந்தார்கள். அவசரமாகக் குழிதோண்டி சடலங்கள் புதைக்கப்பட்டன.

1950களில் பேராசிரியர் பிரிசென் குப்புதா செய்த கணக்கீட்டில் கரும்பொந்தில் அடைக்கப்பெற்ற கைதிகள் மொத்தம் 64, அவர்களில் உயிருடன் மீண்டவர்கள் 21 பேர் மட்டும். கைதிகளைக் கரும்பொந்தில் அடைக்க சிராசு-உத்-தவுலா ஆணையிடவில்லை என்பதற்கும், எல்லாம் முடிந்த பிறகுதான் அவருக்குச் செய்தி தெரிந்தது என்பதற்கும் பேராசிரியர் குப்புதா சான்றுகள் திரட்டிக் கொடுத்தார்.

பிறகென்ன நடந்தது? பிரித்தானியர் பழிவாங்காமல் விடுவார்களா? இராபர்ட்டு கிளைவு கொல்கத்தா மீது படையெடுத்து வந்து வில்லியம் கோட்டையை முற்றுகையிட்டார். அட்மிரல் சார்லசு வாட்சன் தலைமையிலான கப்பற்படையும் கோட்டை மீது குண்டு போட்டது. 1757 சனவரியில் பிரித்தானியரிடம் கோட்டை வீழ்ந்தது. பிப்ரவரியில் வெறும் 3,000 படையாட்களைக் கொண்டு இராபர்ட்டு கிளைவ் 50,000 வீரர்களும் பீரங்கிகளும் போர் யானைகளும் கொண்ட சிராசு-உத்-தவுலாவின் படையை பிளாசியில் தோற்கடித்தார்.  

சிராசு முருசிதாபாத்துக்குத் தப்பியோடினார். அங்கு அவருடைய மக்களே அவரைக் கொன்று உடலை ஆற்றில் வீசினார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல்  60

வியாழன், 4 மே, 2023

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம்: 07.05.2023

 




கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                                  தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 43,44 & 45 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்சித்திரை 24, 2054 / ஞாயிறு / 07.05.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

 தமிழும் நானும் – உரையாளர்கள்

கவிஞர் புலவர் .தேவதாசுசெயலாளர்இலக்குவனார் இலக்கியப் பேரவைஅம்பத்தூர்

இதழாளர் சொ.தண்டபாணிசெயலாளர்தமிழ்த்தாய்ச் சங்கம்,சிமோகா(கருநாடகா)

பேராசிரியர் முனைவர் மரிய தெரசா, 271 நூல்களின் ஆசிரியர்

நிறைவுரை : தோழர் தியாகு 

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி

தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 89 தொடர்ச்சி)

காந்தி(யார்?)

இனிய அன்பர்களே!

என் அக்காள் பெயர் காந்திமதி. மற்றபடி எல்லாக் குழந்தைகளுக்கும் மகாத்துமா குறித்து என்ன சொல்லப்படுமோ அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது. தனியாக காந்திபக்தி அல்லது காந்திப்பற்று என்று எதுவும் எனக்கு எப்போதும் இருந்ததாக நினைவில்லை. அப்பாவுக்கு நண்பர்களாக இருந்த சில பெருந்தனக்காரர்கள் அவர்களின் அலங்கம் போன்ற அரண்மனைகளில் (இது அம்மாவின் வருணனை) பெரிய காந்தி படங்களை மாட்டி வைத்திருந்ததும் கூட காந்தி தொடர்பான என்
அசிரத்தைக்குக் காரணமாக இருக்கலாம்.

நண்பர் அமீர்சானுடன் பழகி அவர் மதித்தவர்களில் காந்தியும் இருப்பதை அறிந்தேன். காரல் மார்க்குசையும் அவர்தான் எனக்கு அறிமுகம் செய்தார் (காட்டுக்கு ஒரு சிங்கம், உலகத்துக்கொரு காரல் மார்க்குசு). அப்போதே என்னை மார்க்குசு ஈர்த்த அளவுக்கு காந்தி ஈர்க்கவில்லை. சான் வழியாக நாத்திகத்தில் ஈடுபாடு வந்த பின் இறைப்பற்றுள்ள யாரையும் ஏற்க முடியாத மனநிலை. அப்படிக் கூடாது, காந்தியிடமும் நல்லவை உண்டு என்று சான் சொன்னதை நான் ஏற்கவில்லை. காந்தியிடம் அமீர்சானுக்குப் பிடித்தவை கதரும் தாய்மொழிக் கல்வியும். எனக்கும் இதில் மறுப்பில்லை. அப்பாவின் கடும் எதிர்ப்பை மீறிக் கதர் உடுத்தத் தொடங்கி விட்டேன். தாய்மொழிக் கல்வியில் காந்திக்கு இருந்த சொந்த உறுதிப்பாடு இன்றும் நான் எடுத்துக்காட்டுவதுதான்.

ஆனால் காந்தி ஆத்திகர், மதப்பற்றுள்ளவர், குமுகியத்தை(சோசலித்தை) ஒப்புக்கொள்ளாதவர், புரட்சிக்கு எதிரானவர் என்றெல்லாம் நான் அப்போது பழகிய பொதுவுடைமைத் தோழர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் காரல் மார்க்குசு இந்த வகைகளில் காந்திக்கு மாறானவர் மார்க்குசு மேல் பற்று வளர வளர, காந்தியைப் பிடிக்காமலே போயிற்று. பேராசிரியர் சேசாத்திரியோடு மார்க்சுக்காக நடந்த மோதல் குறித்து முன்பே எழுதியுள்ளேன்.

காங்கிரசில் இருந்த போதே மேடைகளில் மார்க்குசையும் இலெனினையும் உயர்த்தியும் காந்தியைக் குறைத்தும் பேசுவேன். சென்னையில் காங்கிரசு மாணவர்கள் (தஞ்சையார், வாழப்பாடியார் போன்றவர்கள்) (பசுபதி தனராசு இருந்தாரா நினைவில்லை) மார்க்குசு பிறந்த நாள் கொண்டாடினார்கள். — பெரியவர் (காமராசர்) அனுமதியோடுதான். செயகாந்தன் அந்நிகழ்வில் பேசினார். செய்தி தெரிந்ததும் குடந்தையில் அதே போல் ஏற்பாடு செய்தோம். மாவட்டத் தலைவர் திரு கருப்பையா மூப்பனாரைப் பார்த்துத் தகவல் சொன்னேன். “என்னது மார்க்குசு பிறந்தநாளா?” என்று கேட்டார். “காந்தி செயந்திதானே கொண்டாடிப் பழக்கம்?” சென்னையில் பெரியவர் அனுமதியோடு நடந்ததைச் சொன்னதும், “சரி, செய்யுங்கள், என்னை அழைக்காமலிருந்தால் சரி” என்றார். திருவரங்கம் குமுகிய(சோசலிச)ப் பயிற்சி முகாமில் ஒரு பட்டிமன்றத்தில் “காந்திதான் அகிம்சை வழியில் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தார்” என்ற கருத்தை நான் மறுத்து வாதிட்ட போது பெரியவர் காமராசர் முன்னிலையிலேயே கடும் சர்ச்சை எழுந்து, கடைசியில் அவர் என்னை நியாயப்படுத்தி விட்டுப் போனார். இப்படி இன்னும் சில நிகழ்வுகளிலும் நடந்ததுண்டு.

பேராசிரியர் மருதமுத்து (அப்போது இராதகிருட்டிணன்) அவர்களின் தாக்கத்தால் நக்குசல் (மா-இலெ) இயக்கத்தைத் தேர்ந்தெடுத்த பின் காந்தியைப் பகைநிலையில் வைத்து வெறுக்கும் போக்கு வளர்ந்து இறுகியது. மூன்று வயதுக் குழந்தைக்குப் படங்கள் காட்டி மார்க்குசு தாத்தா, இலெனின் தாத்தா, மாவோ தாத்தா என்று சொல்லிக் கொடுத்து விட்டு காந்திப் பயல், நேருப் பயல், (போலீசுகாரப் பயல்) என்று சொல்லித் தரும் அளவுக்குச் சென்றோம்.

காந்தி ஏகாதிபத்தியத்தின் கைத்தடி என்ற புரிந்துணர்வுதான் இயக்கத்துக்கு அப்போது இருந்தது. நான் இயக்கப் பணியாற்றிய காலத்தில் வருக்கப் பகைவர்கள் அழித்தொழிப்புப் போல் காந்தி சிலை உடைப்பும் ஒரு வேலைத்திட்டமாக இருந்தது நள்ளிரவில் வெளியே போகும் போதெல்லாம் ஒரு சிறு கடப்பாரையை மறைத்து எடுத்துப் போய் காந்தி சிலையை உடைத்து விட்டு வந்து விடுவோம். காரைக்குடி கல்லூரி விடுதிக்கு அருகிலிருந்த ஒரு சிலையை உடைக்க சில மாணவர்களையும் அழைத்துப் போய், அதை முழுமையாகச் செய்ய முடியாமல் மூக்கை மட்டும் உடைத்து விட்டு வந்தோம்.

சிறைப்பட்ட பிறகு, தூக்குக் கொட்டடியில்தான் இரசினி பாமி தத்தின் ‘இன்றைய இந்தியா. (INDIA TODAY) தமிழில் படித்தேன். இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும் இந்திய வரலாற்றில் காந்தியாரின் பங்கு குறித்தும் என் பார்வை மாறுவதற்கு இந்நூலே முதன்மைக் காரணம். இந்த நூலின் துணையோடுதான் ‘IS INDIA A SEMI-COLONY?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்து இன்னொரு கட்டுரையும் எழுதினேன். தலைப்பு நினைவில்லை. இரு கட்டுரைகளையும் தோழர் ஏ.சி.கே. படித்துச் சீர் செய்து கொடுத்தார். இந்தக் கட்டுரைகளின் அடிப்படையில்தான் சிறைக்குள் மா.இலெ(எம்-எல்) கட்சித் திட்டத்தை மறுத்து ஒரு கருத்துப் போராட்டதை நடத்தினேன். இது பற்றிப் பிறகு எப்போதாவது விரிவாகப் பேசுவேன். காந்தியார் பற்றிய பார்வையில் ஓர் அடிப்படையான மாற்றம் இப்படித்தான் வந்துற்றது என்பது மட்டும் இப்போது போதும். INDIA TODAY ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தீர்த்து வைத்தவர் நண்பர் சந்துரு. கிருட்டிணையர், சின்னப்ப ரெட்டி தீர்ப்பு ஒன்றை நான் மொழிபெயர்த்துக் கொடுத்த போது “உங்களுக்கு எதாவது செய்ய வேண்டுமே?” என்றார். நான் INDIA TODAY கேட்டேன், வாங்கி வந்து கொடுத்தார்.

சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின் நெல்சன் மண்டேலா குறித்தும் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம் குறித்தும் எழுதுவதற்காக காந்தியாரின் SATYAGRAHA IN SOUTH AFRICA படித்தேன். காந்தியார் மீது மதிப்புயர இது முக்கியக் காரணமாயிற்று.

காந்தி சிலையை உடைக்கத் திரிந்த காலத்தையும் நேற்று கௌரி இலங்கேசு கொலையைக் கண்டித்து அதே காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றதையும் ஒப்புநோக்கினால் எவ்வளவு பெரிய தலைகீழ் மாற்றம்! காந்தி சிலை உடைப்பு என்பது காந்தியத்துக்கு எதிராகக் கருத்து தளத்தில் போராட முடியாத இயலாமையின் விளைவு என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. அது கோழைத்தனம்.

இப்போதும் காந்தியம் என்னும் கலவைக் கருத்தியலை என்னால் ஏற்க முடியாது. மார்க்குசியத்தை நம்புகிற எவராலும் ஏற்க முடியாது. ஆனால் காந்தியாரின் வரலாற்றுப் பங்களிப்பு காந்தியத்தையும் கடந்து நிற்பது. காந்தியாரே காந்தியராக நடந்து கொள்ளாத தருணங்களுக்கு இப்படித்தான் விளக்கந்தர முடியும் எனத் தோன்றுகிறது. காந்தியை வெறுக்கலாம், அல்லது நேசிக்கலாம், அல்லது வெறுத்து நேசிக்கலாம், ஆனால் கண்டுகொள்ளாமல் கடக்க மட்டும் முடியாது. குறிப்பாக இப்போது…

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 58

புதன், 3 மே, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 89 : கெட்ட போரிடும் உலகு!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 88 தொடர்ச்சி)

கெட்ட போரிடும் உலகு!

இனிய அன்பர்களே!

வீட்டிலிருந்த வரை புத்தாண்டு நாளில் ஒரே ஒரு சிறப்புதான்! அது அப்பா சொல்லும் சிரிப்புத் துணுக்கு. வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு எங்களை எழுப்பி விடும் போது அப்பா சொல்வார்கள்: “ஏய்! எழுந்திரு! போன ஆண்டு படுத்தது. அடுத்த ஆண்டே வந்தாச்சு. ஒரு வருசம் தூங்கியாச்சு. போதும் எழுந்திருங்கடா!”

இதோ தாழியில் ஆண்டுக் கடைசி நாள், முதல் நாள் என்ற வேறுபாடு எதுவுமில்லை. கருத்துப் போர்க்களத்தில் இது என் இறுதிப் பதுங்கு குழி. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்காதிருக்க வேண்டிய இடம். வேடிக்கைகள், கேளிக்கைகளுக்கு இங்கே இடமில்லை.

திசம்பர் 31 இரவு 11 மணிக்கு உறங்கப் போனேன். சரியாக 12 மணிக்கெல்லாம் வெடியோசை கேட்டு எழுந்துவிட்டேன். பட்டாசு வெடிதான்! புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறார்களாம் புத்தாண்டு!

பழைய ஆண்டு, புத்தாண்டு என்று எந்த வேறுபாடும் இல்லாமல் உலகின் சில பகுதிகளில் குண்டுகள் வெடித்து உயிர்களைக் குடித்து அமைதியை அழித்துக் கொண்டிருக்கும் போர்கள் நடந்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால் பட்டாசு வெடிக்க மனம் வருமா?

உக்குரைன் மீது உருசியா போர் தொடுத்து 300 நாட்களுக்கு மேலாயிற்று. பொதுமக்கள் சற்றொப்ப 7,000 பேர் மடிந்துள்ளனர். 10,000 த்துக்கு மேல் காயமடைந்துள்ளனர். இது ஐநா மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகம் தந்துள்ள கணக்கு. ஆகப் பெருந்துயரம்: ஒருகோடியே அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட உக்ரைனியர்கள் வீடுவாசல் இழந்து ஏதிலியராக வெளியேறி அகதி வாழ்வின் துயரங்களுக்கு இன்னுமொரு சான்றாகியுள்ளனர்.


இப்போதும் அணுவாய்தப் போர் ஆபத்து நீடிக்கிறது. போரினாலும் பொருளியல் தடைகளாலும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் இலங்கை, இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் நெருக்கடியின் பிடியில் சிக்குண்டுள்ளன. அமெரிக்கப் படைக்கலன் வணிகர்கள் மட்டுமே இந்தப்போரினால் ஆதாயமடைந்துள்ளனர்.
இந்தப் போருக்கு இருகாரணங்களாக உருசிய புதினின் விரிவாதிக்க வெறியையும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் விரிவாக்கப் பேராசையையும் குறிப்பிடலாம். இரண்டுமே எதிர்க்கப் படவேண்டும். உருசியப்படைகள் போரை நிறுத்திவிட்டுப் பின்வாங்கும் படியும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் நேட்டோவைக் கலைத்து விடும்படியும் உலகின் அமைதி விருப்ப ஆற்றல்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.


பழைய இராணுவக் கூட்டணிகள் போதாவென்று குவாட்டு போன்ற அடைகாப்பிலுள்ள புதிய இராணுவக் கூட்டணிகளும் கலைக்கப் படவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் போர் கூடாது என்பது மன்பதையின் போர் முழக்கமாக வேண்டும்.
ஐநா வில் இடம் பெற்றுள்ள அரசுகள் மட்டுமல்லாமல் அரசில்லாத் தேசங்களும் மக்களியக்கங்களும் சேர்ந்து அமைதிக்கான அணிவகுப்பைத் தோற்றுவிக்க வேண்டும்.


விளாதிமிர் புதின் போரை நிறுத்திப் படை விலக்கம் செய்வது தான் அமைதியின் முதல் கோரிக்கையாக இருக்க முடியும். ஆனால் அவரோ உருசியத் தொலைக்காட்சியில் விடுத்த புத்தாண்டுக் காணொலிச் செய்தியில் உருசியா உக்குரைனில் தனது “தாயகத்தை”ப் பாதுகாப்பதற்காகவும் அதன் மக்களுக்கு உண்மையான விடுமை பெற்றுக் கொடுப்பதற்காகவும் போர் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். புதினின் போர் வெறி தொடருமானால் அவரது அதிகாரத்தை நீக்குவது தான் அமைதிக்கு வழி என்பதை உருசிய மக்கள் உணர வேண்டும்.


இந்தியாவில் அனைத்துத் தேசிய இன மக்களுடனும் சேர்ந்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உக்குரைன் போரில் புத்தினைக் கண்டிக்கச் செய்ய வேண்டும். இந்தியாவின் ஆதரவு உருசியாவுக்கா, அமெரிக்காவுக்கா என்றால் அமைதி மீட்புக்கே என்று விடையிறுக்க வேண்டும். மொத்தத்தில் நரேந்திர மோதி தன் விலாங்கு மீன் அணுகுமுறையைக் கைவிட வேண்டும். அயலுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் தேசநலன் கருதி இந்த ‘நடுநிலை’ அணுகுமுறை என்று தரும் விளக்கம் “கிட்டப்பார்வை” வகைப்பட்டது. போரில் ஏற்படும் அழிவுகளில் தான் தேச நலன் என்றால் அசோகச் சக்கரம் ஏன்?

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 57