உடை வகைகள் : மீகை-over coat, கஞ்சுகம்-safari - இலக்குவனார் திருவள்ளுவன்
காதி அல்லது கதர்
- khadi என்பதற்குக் கைந்நூலாலை, கதர் ஆடை (ஆட்.), மெருகேறிய கதர்(தொ.நுட்., மனையியல்)
எனக் கூறுகின்றனர். ‘மதிப்பு மிகுந்த’ என்னும் பொருளில் சொல்லப்பட்ட காதி - khadi/கதர்
கையால் நூற்கப்படுவதையே குறிப்பிடுகிறது. கையில் கட்டும் காப்பு நூலைக் கைந்நூல் எனக்
குறுந்தொகை(218.2) குறிப்பிடுகிறது. விசையால் இயங்கும் தறியை விசைத்தறி (ஆட்.,மனை.)
என்றும் கையால் இயங்கும் தறியைக் கைத்தறி (வேளா.,மனை.) என்றும் சொல்வதுபோல் கையால்
நூற்கப்படுவது என்ற பொருளில் கைந்நூல் என்பதே சரியானது.
கஞ்சுகம் என்னும்
உடை வகை குறித்து,
கஞ்சுக முதல்வர்
என இளங்கோ அடிகள்(சிலப்பதிகாரம்.26:138)கூறுகிறார்.
திருத்தக்கத்தேவர், உடைக்கு மேல் அணியும் குப்பாய உடை குறித்து,
"வெங்கணோக்கிற்
குப்பாய மிலேச்சனை" (சீவகசிந்தாமணி.431);.
என்கிறார்.
காவிரிப் பெருக்கின் பொழுது நீச்சல் ஆடையான ஈரணி அணிந்து
நீராடச் சென்றதை,
வதுவை ஈரணிப் பொலிந்த நம்மொடு
புதுவது வந்தகாவிரி (அகநானூறு : 166 : 13-14)
என்கிறார் புலவர் இடையன் நெடுங்கீரனார்.
வையை ஆற்றில் நீராட மகளிரும் மைந்தரும் நீச்சல் உடையை அணிந்து
சென்றதாக ஆசிரியன் நல்லந்துவனார் பரிபாடலில்
ஏர்அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிகநவின்று (பரிபாடல் : 6: 27-28)
ஈரணிக்கு ஏற்ற
நறவுஅணி பூந் துகில் நன்பல ஏந்தி (பரிபாடல் : 22: 18-19)
எனப் புலவர் ஒருவர் தெரிவிக்கிறார்.
பரணரும் ஈரணி குறித்து
இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ,
நீர்பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக்கண்
(அகநானூறு: 266:4-6) எனக் கூறுகிறார்.
ஏர்அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிகநவின்று (பரிபாடல் : 6: 27-28)
என ஆசிரியன் நல்லந்துவனார் பரிபாடலில் பாடியுள்ளார்.
ஈரணி என்றும் நீரணி என்றும் புலவர்கள் வெவ்வேறு வகை நீச்சல்
ஆடைகளைக் கூறியுள்ளனர். மேலும் கீழுமாக உடுத்தும் ஈராடை வகையையும் வேறு வகை நீச்சல்
உடைகளையும் பழந்தமிழகத்தில் உடுத்தியுள்ளனர்.தோள்மேல் அணியும் மேல் சட்டையை மீகை என்றனர்.
தோள்மேல் அணியும் தோள்மேல் அணியும் மேல் சட்டையை மீகை என்றனர்.
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும் (பதிற்றுப்பத்து:
81.11).
சட்டையின் கை, தோளை மூடி அதன் மேல் உயர்ந்து தோன்றலின், மீகை
எனப்பட்டது என உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி விளக்குகிறார்.
காழகம் (௭) பொதுவாக ஆடையைக் குறிப்பிட்டாலும், வினைமாண் காழகம் வீங்கக் கட்டி(கலித்தொகை:
7.9) என்னும் பொழுது கைகளில் அணியும் தோலுறையைக் குறிப்பிடுகிறது. இப்பொழுது கைகளில்அணியும்
உறை கையுறை (வேளா.), காப்புறை(மரு.) என்றும் சொல்லப்படுகின்றது. மாறாக இதனைக், காழகம்
– Glove எனலாம்.
கழுத்தில் அணியும் துணியினைப் பலர் கழுத்துப்பட்டை என்று
குறிப்பிடுகின்றனர். collar என்பதையும் கழுத்துப்பட்டை என்பதால் பொருந்தவில்லை. சிலர்
கழுத்துக் கச்சை என்கின்றனர். கச்சு என்றால் பெண்கள் மார்புஆடை என உள்ளத்தில் பதிந்து
விட்டதால், இச் சொல் பழக்கத்தில் வரவில்லை. கழுத்தின் மற்றொரு பெயர் கண்டம். கண்டத்தில்
அணியும் நகையைக் கண்டிகை என்றனர். (கழுத்தில் அணியும் துணியும் கண்டிகை எனப்பட்டுள்ளது.)
எனவே, கழுத்தில் அணியும் துணியைக் கண்டிகை எனலாம்.
இவற்றின் அடிப்படையில் பின்வரும் ஆடையியல் சொல் லாட்சிகளைப்
பயன்படுத்தலாம்.
ஈரணி - two piece dress
கஞ்சுகம் - safari
குப்பாயம் - coat
கைந்நூல் - khadi
நீரணி - swimming dress
மீகை - over coat
குறுவட்டை - mini skirt
காழகம் - Glove
கண்டிகை - neck tie