சனி, 3 மே, 2025
காற்றின் வகைமை தெரியும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! –தொடர்ச்சி)
அன்றே சொன்னார்கள் –
காற்றின் வகைமை தெரியும்!
காற்று உலகெங்கும் பரவி இருந்தாலும் ஒரே தன்மையில் இல்லை. சில நேரங்களில் அல்லது சில இடங்களில் வலிமை குறைந்தும் வேறு சில நேரங்களில் அல்லது இடங்களில் வலிமை மிகுந்தும் காணப்படுகின்றது.
கப்பல் தளபதி பிரான்சிசு பியூஃபோருட்டு (Sir Francis Beaufort : 1774 –1857) என்னும் ஐரீசு நாட்டு நீர்ஆராய்வாளர் 1806ஆம் ஆண்டில் காற்று வீசும் வலிமைக்கேற்ப அதனை வகைப்படுத்தினார். அவ்வாறு காற்று வீசும் விரைவிற்கேறப்ப வீச்சு எண்களையும் பின்வருமாறு வரையறுத்தார்.
| வீச்சு எண் | காற்று வகை | காற்று வீசு விரைவு (ஒரு மணிக்கு…. புதுக்கல்/ கிலோ மீட்டர்) |
| 0 | அலைவற்ற காற்று (calm) | 0 -1 |
| 1 | மென் காற்று (Light air) | 1-5 |
| 2 | மென் இளங்காற்று (Light breeze) | 6-11 |
| 3 | நல் இளங்காற்று (Gentle breeze) | 12-19 |
| 4 | மித இளங்காற்று (Moderate breeze) | 20-29 |
| 5 | கிளர் இளங்காற்று (Fresh breeze) | 30-39 |
| 6 | வல் இளங்காற்று (Strong breeze) | 40-50 |
| 7 | தொடக்கப் பெருங்காற்று (Near Gale) | 51-61 |
| 8 | பெருங்காற்று (Gale) | 62-74 |
| 9 | வன் பெருங்காற்று (Strong Gale) | 75-87 |
| 10 | புயல் (Storm) | 88-101 |
| 11 | வன் புயல் (Violent storm) | 102-117 |
| 12 | சூறைப் புயல் (Hurricane) | 118 + |
ஆனால், இவ்வாறு காற்று வெவ்வேறு நிலைகளில் உலவுவதைப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். காற்று வீசக்கூடிய விரைவின் (வேகத்தின்) அளவைப் பற்றிய கணக்கு நமக்குத் தெரியாவிட்டாலும் அதன் தன்மைகளைப் புரிந்து தெளிவாக வரையறை செய்துள்ளனர் என்பது இலக்கியங்கள் மூலம் நன்கு தெரிய வருகின்றது.
காற்றின் வகைகளாகப் பிங்கல நிகண்டு (23 & 24) , வங்கூழ், மருத்து, சலனன், வாடை, வளி, கோதை, வாதம், கூதை, வேற்றலம், கால், ஒலி, உயிர், காலிலி, விண்டு, நீளை, உலவை, கொண்டல், கோடை, நிழலி, உயிர்ப்பு எனப் பலச் சொற்களைக் குறிப்பிடுகின்றது.
உயிரினங்களுக்கு உயிர்ப்பு அளிப்பதால் உயிர் அல்லது உயிர்ப்பு என்றும் ஓரிடத்தில் நிற்காமல் உலவிக் கொண்டு இருப்பதால் உலவி என்றும் கால் இல்லாமல் அலைவதால் காலிலி என்றும் பொருத்தமாகக் கூறியுள்ளனர். தமிழ் விண்டு என்பதுதான் ஆங்கிலத்தில் wind என மாறியதோ? மேலும், தெற்கில் இருந்து வீசுவதைத் தென்றல் வடக்கில் இருந்து வீசும் வாடைக்காற்றை வாடை, மேற்கில் இருந்து வீசும் வெப்பக் காற்றைக் கோடை, கிழக்கில் இருந்து வீசுவதைக் கொண்டல் என்றும் வரையறுத்துள்ளனர்.
குடக்காற்று என்பதும் மேற்கில் இருந்து வீசும் காற்றாகும். பனிக்காற்றானது கூதிர், ஊதை, குளிர் என மூவகைப்படும்.
குளிர்ந்த காற்றானது சாளரங்கள் வாயிலாக வீட்டிற்குள் நுழைவதைச்
சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில் என மதுரைக் காஞ்சி (358) குறிப்பிடுகிறது.
கடுங்காற்றால் கப்பல் சிதைந்ததைக்
கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ, என மதுரைக் காஞ்சி (378) கூறுகிறது.
பெருமலையைப் புரட்டுவது போன்ற பெருங்காற்று வீசியதைப்
பெருமலை மிளிர்ப்பன்ன காற்று எனக் கலித்தொகை: (45: 4) கூறுகிறது.
கப்பலைக் கவிழ்க்கும் சுழல் காற்றினைக்
கால்ஏ முற்ற பைதரு காலை,
கடல்மரம் கவிழ்ந்தென
என்று நற்றிணை (30: 7-8) கூறுகிறது.
அகன்ற கடற் பரப்பைக் கலங்கடிக்கும் காற்று குறித்துத்
துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர என்று பதிற்றுப்பத்து (51) கூறுகிறது.
பெருமலையில் கடுங்காற்றுச் சுழன்றடிப்பதைக்
கடுங்காற்று எடுக்கும் நெடும்பெருங் குன்றத்து என அகநானூறு (258 : 6) கூறுகிறது.
நிலப்பரப்பில் சுழன்றடிக்கும் கடுங்காற்று குறித்துக்
கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின் எனப் பதிற்றுப்பத்து ( 17 : 12) கூறுகிறது.
கடற்கரை மணலை அள்ளித் தூவும் குளிர்ந்த காற்றை
நெடுநீர் கூஉம் மணல்தண்கான் எனப் புறநானூறு (396 : 5) கூறுகிறது.
மேலும் பலவகைக் காற்று குறித்து நாம் சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
19 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்த காற்றின் வகைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் உணர்ந்து வகைப்படுத்தியுள்ளனர் என்பது காற்றறிவியலில் சிறந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றது அன்றோ?
– இலக்குவனார் திருவள்ளுவன்
புது அறிவியல், நட்பு இதழ்
வெள்ளி, 2 மே, 2025
அன்றே சொன்னார்கள் 11 : முகிலறிவியலின் முன்னோடி நாமே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – தொடர்ச்சி)
அன்றே சொன்னார்கள்
முகிலறிவியலின் முன்னோடி நாமே!
வான் மழை பெய்யும் முகில் கூட்டம் பல வகையாய் உள்ளது என 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். ஆவர்டு (Luke Howard: 1772-1864) என்னும் பிரித்தானிய அறிஞர் வெவ்வேறு வகை முகில் கூட்டம் உள்ளன என உணர்ந்து அவற்றிற்குப் பெயர்கள் இட்டார். என்ற போதிலும் முதல் முறையாக முகில்களின் வேறுபாடுகளை உணர்ந்து வகைப்பாடுகளை விளக்கியவர் இலமார்க்கு (Jean-Baptiste Lamarck:1744-1829) என்னும் அறிவியலாளரே. ஆனாலும் இவ்வேறுபாடுகள் தோற்றத்தின் தன்மையில் கூறப்பட்டனவே தவிர தன்மையின் அடிப்படையில் விளக்கப்படவில்லை.
யோவான் மேசன் (Sir (Basil) John Mason), என்னும் அறிஞர்தான் முகில்களின் இயற்பியல் (The Physics of Clouds) என 1957 இல் நூலை வெளியிட்டு முகில்களின் வகைகளைச் சரியாக விளக்கினார். (1994 இல்தான் இதனை அட்டவணைப்படுத்தி விளக்கியுள்ளனர்.)
மழையியல் பற்றி நன்கு அறிந்திருந்த பழந்தமிழர்கள் முகில் அறிவியல் குறித்தும் சிறப்பான அறிவுடையவராக விளங்கியுள்ளனர். முகில்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அவர்கள் சூட்டிய பெயர்களை எல்லாம் அவற்றின் அறிவியல் சிறப்பை உணராமல் முகிலைக் குறிக்கும் வெவ்வேறு பெயர்கள் என நாம் எண்ணி விட்டோம். எனினும் அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
கடல்மட்டத்தில் இருந்து
| இன்றைய பெயர்கள் | உயரம் பேரடி (மீட்டர்) | ||
| 1. | உயர்முகில் | Cirrus | 9000 |
| 2. | குவியடுக்கு | Cirrostratus | 8000 |
| 3. | சுருள் குவிவு | Cirrocumulus | 7000 |
| 4. | இடை அடுக்கு | Altostratus | 6000 |
| 5. | இடைக் குவிப்பு | Altrocumulus | 5000 |
| 6. | அடுக்குக் குவிப்பு | Stratocumulus | 4000 |
| 7. | குவி முகில் | Cumulonimbus | 3000 |
| 8. | திரள் முகில் | Cumulus | 2000 |
| 9. | பாவடி முகில் | Stratus | 1000 |
| 10. | தாழ் முகில் | Nimbostratus | 0 |
என இன்றைய அறிவியல் அறிஞர்கள் வகைப்படுத்தி உள்ளனர். ஆனால், உயர அளவீடுகள் தெரியாவிடிலும் உயரத்திற்கும் முகிலின் தன்மைக்கும் ஏற்ப நம் முன்னோர் வகைப்படுத்தி உள்ளமை வியப்பாக உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து எழும் நிலையில் உள்ள முகிலை எழிலி என்றனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலான பல சங்க இலக்கியங்களில் இச்சொல்லைக் காணலாம். தெய்வப்புலவர் திருவள்ளுவர்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின் (குறள் 17)
என்கிறார்.கடலில் இருந்து எழும் நிலையில் உருவாகும் முகிலை எழிலி எனச் சுருக்கமாகவும் அறிவியல் தன்மைக்கேற்பவும் அன்றே கூறியுள்ள சிறப்பு வேறு எங்கும் இல்லையே!
அறிவியல் தன்மைக்கேற்ப முகில் வகைகளுக்குப் பழந்தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்களை மேலே உள்ள வரிசைக்கேற்பப் பொருத்திக் காண்க:
கொண்மூ, கணம், செல், மை, கார், விண்டு, முதிரம், மஞ்சு, விசும்பு, எழிலி.
அறிவியல் மழையில் நனைந்தனர் நம் முன்னோர்!
அறியாமை இருளில் மூழ்கியுள்ளோம் நாம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய அறிவியல், நட்பு
அன்றே சொன்னார்கள் : சேம அச்சு – stepney – இலக்குவனார் திருவள்ளுவன்
(புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் – தொடர்ச்சி)
சேம அச்சு
ஆங்கிலத்தில் இஃச்டெப்னி (stepney) என்றால் வழக்கத்தில் கூடுதலாகச் சேர்த்துக் கொண்ட துணையைக் குறிப்பதாக மாறிவிட்டது. என்றாலும் ஊர்திகளில் மாற்றுச் சக்கரத்தைக் குறிப்பதே உண்மை.
வால்டர் தேவீசு (Walter Davies) என்பவர் தாம் (Tom) என்பவருடன் சேர்ந்து இங்கிலாந்திலுள்ள வேல்சு நகரின் இலாநெல்லி (Llanelli) பகுதியில் இஃச்டெப்னி (stepney) தெருவில் 1895இல் இரும்புப் பொருள்கள் கடை தொடங்கி 1902இல் வாடகை ஊர்திப் பிரிவையும் தொடங்கினர். 1904இல் நீதிபதி ஒருவர் வாடகைக்கு எடுத்த ஊர்தியின் (சக்கரத்தின்) புறவட்டில் (tyre) துளை ஏற்பட்டுக் காற்றுப் போனதால் மாற்றுச் சக்கரம் பொருத்த அல்லல்பட்டார். அப்பொழுது அவர்களுக்கு நாம் ஏன் உதிரியாக ஒரு மாற்றுச் சக்கரத்தை முன்னரே ஊர்தியில் இணைத்து வைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவே மாற்றுச்சக்கர முறை கண்டுபிடிப்பு. என்றாலும் மாற்றுச் சக்கரத்தின் பெயராக இந்நிறுவனம் இருந்த தெருவின் பெயர் நிலைத்து விட்டது. எனவே, இஃச்டெப்னி (stepney) என்பது தெருவின் பெயராக இருந்தாலும் மாற்றுச் சக்கரத்தைக் குறிப்பதாக அமைந்தது.
ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மக்கள் மாற்றுச் சக்கரத்தின் தேவையை உணர்ந்து கண்டுபிடித்துப் பயன்படுத்தி உள்ளனர். அதன் பெயர் சேம அச்சு அல்லது சேமச் சக்கரம் என்பதாகும்.
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன (புறநானூறு 102)
என்கிறார் ஒளவைப் பிராட்டியார்
வணிகர்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு வண்டியை ஓட்டிச் செல்லும்பொழுது மேட்டிலும் பள்ளத்திலும் ஏறி இறங்கி வண்டிச் சக்கரம் உடைந்து விட்டால் மாற்றுப் பயன்பாட்டிற்காகப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும் சேம அச்சு போன்றவரே என மன்னரைப் புகழும்பொழுது நமக்கு இந்த அறிவியல் சொல் கிடைத்து விட்டது.
இடர்ப்பாடு இல்லாத பயணத்தைப் பற்றிய சிந்தனை ஏற்பட்டு அவசரத் தேவையின் பாதுகாப்பை முன்னிட்டு மாற்றுச் சக்கரம் கண்டறிந்த தமிழர்கள்தாம் இன்றைக்கு வாழ்க்கைப் பயணத்தைத் தொலைத்து இனத்தைப் பாதுகாக்க வழியின்றி இருக்கின்றார்கள்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு இதழ்
வியாழன், 1 மே, 2025
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 130 & 131; நூலாய்வு
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 30 April 2025 அகரமுதல
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்: ஆளுமையர் உரை130 & 131; நூலாய்வு
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
சித்திரை 21 , 2056 ஞாயிறு 04.05.2025 காலை 10.00 மணி
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
திருவள்ளுவர் விருதாளர் மு.படிக்கராமு
ஊடகச் செம்மல் பவா சமுத்துவன்
நூலாய்வு
முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுத்துள்ள
திருத்துறைக் கிழார் கட்டுரைகள் (1)
ஆய்வர் : முனைவர் மா போ ஆனந்தி
நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி: முனைவர் ஆனந்தி வாசுதேவன்
புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(சேமக்குடுவையின் முன்னோடி – தொடர்ச்சி)
அன்றே சொன்னார்கள் 7
புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்த தமிழர்கள்
பழந்தமிழ் மக்கள் அறிவியல் நோக்கிலேயே எதனையும் சிந்தித்தனர். ஆனால், பிற நாடுகளில் அறிவியல் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டபொழுது அறிவியலாளர்கள் சமயவாதிகளால் தண்டிக்கப்பட்டனர்; உயிர்பறிக்கப்பட்டனர்.
1548 இல் பிறந்த இத்தாலிய அறிவியலாளர் கியார்டனோ புருனோ (Giordano Bruno) எனப்பெறும் பிலிப்போ புருனோ (Filippo Bruno) அண்டங்களைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியவர். 1584இல், முடிவற்ற அண்டமும் உலகங்களும் (Infinite Universe and Worlds) முதலான இரு நூல்களை வெளியிட்டார். சமய நம்பிக்கைக்கு எதிரான செய்திகள் என 1592இல் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டு 17.2.1600இல் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
.
போலந்து அறிவியலாளர் நிக்கோலசு கோபர்னிகசு (Copernicus, Nicolaus;1473-1543) செருமானிய அறிவியலாளர் யோன்னசு கெப்ளர் (Kepler, Johannes; 1571-1630) உடன் இணைந்து பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். எனினும், சமயவாதிகளின் தொல்லைகளால் உண்மைகளை வெளியிட முடியாமல் நண்பர்களின் துணையால் அவர் மறைவிற்குப் பின்பே 6 நூல்கள் வந்தன. இவர்களின் வழியில் இத்தாலிய அறிவியலாளர் கலிலியோ (1564-1642), கோபர்னிகசு கருத்தான பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பதை மேலும் ஆராய்ச்சி செய்து நிலைநாட்டிப் பரப்பி வந்தார். 1632இல் இவற்றை விளக்கி இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய சொற்போர் (Dialogue of The Two Chief World Systems) என்னும் நூலை வெளியிட்டார். இதனால் வீட்டுச் சிறை வைக்கப்பெற்றார்; 1637இல் கண்பார்வையை இழந்தார்; 1642இல் வீட்டுச் சிறையிலேயே உயிரிழந்தார்.
ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி சுற்றுவதை அறிந்து அதன் கால அளவை நாள் என்றும் பூமியைத் திங்கள் (நிலா) சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவைத் திங்கள் (மாதம்) என்றும் பூமி சூரியனைச் சுற்ற ஆகும் கால அளவை ஆண்டு என்றும் குறிப்பிட்டுப் பயன்படுத்தினர் நம் முன்னோர்.
சுற்றிக் கொண்டிருக்கும் உலகத்தில் உள்ள மக்கள் வாழ்வு, உழவர்களைச் சுற்றி உள்ளதாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (திருக்குறள் 1031)
என்கிறார். உலவும் பூமியை உலகம் என்று எவ்வளவு பொருத்தமாக அறிவியல் நோக்கில் பெயரிடுள்ளனர்!
அறிவியல் வளத்தில் சிறந்திருந்த முன்னோர் வழியில் (தாய் மொழியாம் தமிழில் கற்று) அறிவியல் வளங்களைக் கண்டறிய இப் பொங்கல் நாளில் உறுதி கொள்வோம்! பொங்கல் சிறக்கட்டும்! அறிவியல் பெருகட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு இதழ்