சனி, 7 டிசம்பர், 2019

கீழடி – சிறப்புக் கருத்தரங்கம்

அகரமுதல


கார்த்திகை 22, 2050 ஞாயிறு 08.12.2019 மாலை 5.00
நற்கதிப்படை(இரட்சண்ய சேனை *எச்சு.ஆர்.டி.)அரங்கம்
8, பெரியண்ணன் தெரு, பெரிய மேடு,

சென்னை 600 003

கீழடியில் கிளைவிட்ட வேர் – சிறப்புக் கருத்தரங்கம்
கண்காட்சித் திறப்பாளர்: திரைக்கலைஞர் பொன்வண்ணன்
உரைவீச்சு: ஆய்வறிஞர் அமர்நாத்து இராமகிருட்டிணன்
தமிழ்த்திரு பெ.மணியரசன்

தமிழ்க்கலை இயக்கியப் பேரவை 9677229494; 98416 04017

வெள்ளி, 6 டிசம்பர், 2019

குவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்

அகரமுதல

கார்த்திகை 12, 2050 / 08.12.2019 / மாலை 5.00 மணி

குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை

 அளவளாவல் : எம்.வேடியப்பன்,
நிறுவனர்,

புத்தக அரண்மனை / Discovedry Book Palace


    வியாழன், 5 டிசம்பர், 2019

    தமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்!

    அகரமுதல

    தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்திய அரசு, தேர்வு நடத்துமாம்!

    வெளிமாநிலத்தவர் வேட்டைக்கு இன்னொரு வழி!

    தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கிவேங்கடராமன் கண்டனம்!

    இந்திய அரசின் பணியாளர் நலன்-பயிற்சித் துறை திசம்பர் 4 – 2019 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுப் பணிகளுக்கும் அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தவிருப்பதாக முன்மொழிவை வைத்துள்ளது.
    இந்திய அரசு அமர்த்தும் ஒரு நிறுவனத்தின் வழியாக இப்போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மாநில அரசுகள் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தி, தனது மாநிலத்திற்கான பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டுமென அந்த அறிவிக்கை கூறுகிறது.
    தமிழ்நாட்டு மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலேயே வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாட்டு இளைஞர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
    இந்நிலையில், அத்தேர்வையே இந்திய அரசின் நிறுவனம் நடத்தும் என்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாநில அரசுப் பணிகளை வெளி மாநிலத்தவர் மயம் ஆக்குவதற்கான சதித் திட்டமாகும்! மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொதுத்தேர்வு(‘நீட்’) நடத்தியிருக்கும் தமிழர் பகைத் திட்டத்தைப் பார்த்து வருகிறோம்.
    மேலும், நிறுவனங்களின் பணியமர்த்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உரியவாறு செயல்படுத்தப்படுவதில்லை என்ற குறைபாடும் அண்மைக்காலமாக எழுந்து வருகிறது. இச்சூழலில், இந்திய அரசு நிறுவனமே அத்தேர்வை நடத்தும் என்றால், மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகளும் மறுக்கப்படும்.
    எனவே, தமிழ்நாட்டுப் பணிகளை வெளியார் மயமாக்கும் தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்புகளை மறுக்கும் இந்த அறிவிப்பை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு வலுவாக மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 
    =====================================
    தலைமைச் செயலகம்,
    தமிழ்த்தேசியப் பேரியக்கம்
    =====================================
    பேச: 7667077075, 9443918095
    முகநூல் : www.fb.com/tamizhdesiyam
    ஊடகம் : 
    www.kannottam.com
    இணையம் : 
    www.tamizhdesiyam.com
    சுட்டுரை : 
    www.twitter.com/Tamizhdesiyam
    காணொலிகள் : 
    youtube.com/Tamizhdesiyam

    =====================================
       

    புதன், 4 டிசம்பர், 2019

    ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்!- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

    அகரமுதல

    ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே 

    பெண்களின் ஒழுக்கம்!

    மதுரையில் பேருந்து நிலையம்-தெப்பக்குளம் வழித்தடப் பேருந்தில், பயணி ஒருவர், எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது 1970 இற்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த வழக்கில்  அவரது முன்வரலாறு நன்றாகத்தான் தெரிவிக்கப்பட்டது. உடலுறுப்புகள் தெரிய பெண் அணிந்திருந்த உடை அவருக்கு ஒரு வகை வெறியை ஏற்படுத்திவிட்டதாகவும் இனி அவ்வாறு செய்ய வில்லை என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி,  பொதுவிடங்களில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் ஆடை அணியவும் அறிவுரை வழங்கினார். இப்பொழுது அவ்வாறு கூறியிருந்தால் போலிப் பெண்ணியவாதிகள் பெண்கள் எப்படி ஆடை அணிந்தால் என்ன என்று கிளர்ந்தெழுந்திருப்பர்.
    பாலுறவு ஒழுக்கம் தொடர்பான சில செய்திகள்: சில நேர்வுகளில் பெண்கள் முறை தவறிய உறவுகளில் ஈடுபட்டுக் கணவரைக் கொல்கின்றனர், மாமியார், மாமனார், கொழுந்தனார், நாத்தனார், பிற உறவினர்களை வன்முறையாகவே கொல்கின்றனர். இந்தப் போக்கு தவறானதுதான். எனினும் பெரும்பான்மைக் குற்றங்கள் ஆண்களால்தான் நேர்கின்றன. சிறு குழந்தையின் எந்த உடை அல்லது தோற்றம் ஆணைத் தூண்டியது என்று சொல்ல முடியும்? ஆந்திராவில் கால் நடை மருத்துவர் பிரியங்கா மீது என்ன தவறு சொல்ல முடியும்? திட்டமிட்டு ஊர்திச்சக்கரங்ளைப் பாழ்படுத்தி வண்டியை நிறுத்தச் செய்து வன்முறை உறவும் கொலையும் செய்த ஆண்கள்தானே குற்றவாளிகள். இப்படிப் பல நிகழ்வுகள் ஆண்களின் குற்ற மனப்பான்மையால்தான் நிகழ்கின்றன.
    புள்ளிவிவரப்படி பெரும்பான்மையான வன் புணர்வு தெரிந்தவர்களாலேயே நிகழ்கின்றன. பெண்கள் பழகும் முறையும் அணியும் உடையும் பிற தோற்றமும் காரணமாகக் கூறப்படுகின்றன. பெண்கள் களங்கமின்றிப் பழகும் பொழுது தவறான பார்வையும் எண்ணமும் கொண்ட ஆண்கள்தானே குற்றவாளிகள். அவ்வாறிருக்கப் பெண்களைக் குற்றம் சொல்லலாமா?
    பொள்ளாச்சியில் காதலனும் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து 16 அகவைப் பெண்ணைச் சீரழித்துள்ளனரே!
    குர்கானில் மிதி யூர்தியில்(ஆட்டோவில்) வந்த தாயைக் கற்பழிதது உடனிருந்த குழந்தையை வெளியே வீசிக் கொன்றுள்ளனரே!
    ஆத்தூரில் 9ஆம்வகுப்பு மாணவியைத் தாயின் முன்னிலையில் கற்பழித்துள்ளானே ஒரு காமுகன்! தேனியில் 57 அகவைப் பாட்டியைச் சிலர் கூட்டாக வல்லுறவிற்கு ஆளாக்கியுள்ளனரே!
    குசராத்து மாநிலம் இராசகோட்டில் விளையாடிக்கொண்டிருந்த 4 அகவைச் சிறுமியைப் பேத்தியாக எண்ணாமல் ஒருவன் கற்பழித்துள்ளானே!
    திருப்பூரில் 4 அகவைச் சிறமிக்குத் தொடர்ந்து பாலியல துன்புறுத்தல் கொடுத்து வந்தானே ஒருவன்!
    சேலம் வாழப்பாடியில் கள்ளக்காதலுடன் இருந்த பெண்ணை அறுவர் கூட்டாகச் சிதைத்துள்ளனரே!
    தேராடூனில் 11 அகவைச் சிறுவன் 3 அகவைச்சிறுமியைக் கற்பழித்துள்ளான்!
    வேலியே பயிரை மேயும் நிகழ்வுகளும் பல உண்டு. வல்லுறவு வழக்குகளில் காவலரும் தங்கள் பங்கிற்குக் கைவரிசையைக் காட்டியுள்ளனர். காவலர் மட்டுமல்லர்.  நாட்டைக்காப்பதால் போற்றப்படும்   படைவீரர்களின் கற்பழிப்புச் செய்திகள் அவ்வப்பொழுது வந்துகொண்டுதான் உள்ளன. போரினால் பாதிப்புறும் நாடுகளில் படைவீரர்களால்தானே பெருமபான்மை வல்லுறவுகள் நிகழ்கின்றன.
    தம்மிடம் பயிலும் மாணவிகளிடமும் தங்களின் கீழ்ப் பணியாற்றும் பெண்களிடமும் மிரட்டியும் ஆசை காட்டியும் ஏமாற்றும் ஆண்களும் மிகுதியாக உள்ளனர். தன் தாயிடம் பயிலும் மாணவிகளை ஏமாற்றிச் சிதைத்துச் சிறை வாழ்க்கை வாழ்ந்த நடிகரை முந்தைய தலைமுறையினர் அறிவர். இறையன்பை வஞ்சகமாகப் பயன்படுத்திப் பெண்களைச்சிதைக்கும் சாமியார்கள், பூசாரிகள் செயல்களும் அவ்வப்பொழுது வந்துகொண்டுதான் உள்ளன. இப்போதைய அறிவியலையும் தங்கள் குற்றங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு முறை வல்லுறவு மேற்கொண்டு, அதனைக் கைப்பேசியில் படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் வல்லுறவில் ஈடுபடுகின்றனர்.
    இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். ஏனெனில், 2017இல் மட்டும் இந்தியாவில் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் 3,50,000 ஆகும். இந்த விவரம் தேசியக் குற்றப் பதிவு பணியகம் தெரிவித்தது. பதிவாகாத வழக்குகள் மேலும் பல நூறாயிரம் இருக்கும்.
    இவற்றிற்கெல்லாம் காரணம் பெண்களின் கட்டுப்பாடின்மையா? ஆண்களின் கட்டுப்பாடின்மையா? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
    சங்ககாலப் புலவர் ஒளவையார் பாடிய பாடல்கள் 59. இவை, எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில்  உள்ளன. இவற்றுள் புறநானூற்றில் இடம் பெறும் 187 ஆவது எளிய பாடலே நாம் பார்க்கப் போவது. இப்பாடல் பொதுவியல் திணையைச் சேர்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது. துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுவது. நாட்டினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொறுத்தது; ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை  என இதன்மூலம் ஒளவையார் வலியுறுத்தி யுள்ளார்.
    நாடா கொன்றோ, காடா கொன்றோ,
    அவலா கொன்றோ; மிசையா கொன்றோ,
    எவ்வழி நல்லவர் ஆடவர்,
    அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (புறநானூறு 187)
    கொன்றோ – ஆக ஒன்றோ ; அவல் = பள்ளம்; மிசை = மேடு.
    நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப்பகுதிகளைக் குறிக்கும்.
    நாடானால் என்ன, காடானால் என்ன? மேடானால் என்ன, பள்ளமானால் என்ன? எங்கெல்லாம் ஆண்கள் நல்லவர்களாக விளங்குகின்றனரோ, அங்கெல்லாம் நிலமே, நீயும் நன்றாக விளங்குவாய்”  என்கிறார் ஒளவையார்.
    உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி, “எவ்விடத்து நல்லர் ஆண்மக்கள் அவ்விடத்து நீயும் நல்லை யல்லது நினக்கென ஒரு நலமும் உடையை யல்லை வாழி” என விளக்குகிறார்.
    ஆண்கள் தங்கள் உழைப்பால், நிலத்தைச் செப்பனிட்டு, வேளாண்மையைச் சிறக்கச் செய்து வளமான வாழ்விற்கு வழிகாட்டுவர். எனவே, ஒளவையார் ஆடவர் என ஆண்களைத்தான் குறிப்பதாகப் பலர் கூறுவர். இல்லை! பொதுவான மக்கள் உழைப்பால்தான் வளம் சிறக்கிறது. எனவே, ஆடவர் என்பது மக்களைக் குறிப்பதே; மக்களைப் பொறுத்ததே அப்பகுதியின் வாழ்வும் தாழ்வும்  என்றும் சிலர் கூறுவர்.
    சிலர் ஆடவர் என்பது ஆட்சியாளரைக் குறிப்பது. ஆட்சியாளர் நல்லாட்சி தந்தால் மக்களும் நலமாகவும் வளமாகவும் வாழ்வர் என்கின்றனர். இவையும் பொருந்தி வரக்கூடியனவே. எனினும் பெண்களில் ஒழுக்கம் என்பது ஆண்களின் ஒழுக்கத்தைப் பொறுத்தது என்பதே மிகச் சரியாகும்.
    பாலி மொழியிலான தம்மபதத்திலுள்ள பாடல் ஒன்றினுடனும் வடஇந்திய-ஆரியமொழிகளின் தாயாகக் கருதப்படும் அபபிரம்சா மொழிப்பாடல் ஒன்றிடனும் ஒப்பிட்டு அறிஞர் தெ.பொ.மீ., அறிஞர் செ.வை.சண்முகனார் கூறுகின்றனர். சரியான கால ஆராய்ச்சி நடை பெற்றது என்றால் ஒளவையார் பாடலே மூத்தது என மெய்ப்பிக்கப்படலாம். ஒவையார் நமக்கு உணர்த்துவதுதான் ஆடவர் நல்லவராக இருந்தால் உலகமும் நல்லதாக இருக்கும் என்பது!
    இதற்குத் தொன்மைக் கதைகள் அடிப்படையில் விளக்கம் காணலாம். பதவி வெறி பிடித்த இந்திரன், தன்பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் விசுவாமித்திரர் தவத்தைக் கலைக்க மேனகையை அனுப்பினான். பொதுவாக வானுலக அரம்பரையர் அங்குள்ள கந்தர்வர்களின் மனைவியர். அப்படி என்றால் இவள் திருமணமானவள். இவள் தவத்தைக் கலைத்த பின்னர் விசுவாமித்திரர் இவளையே திருமணம் செய்து கொண்டார். (இருவருக்கும் பிறந்தவள்தான் சகுந்தலை.) எனினும் அவளுக்குச் சாவம் – சாபம் இட்டார்.
    விசுவாமித்திரர் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அல்லது இந்திரன் பதவி வெறிக்காகத் தரங்கெட்ட நிலைக்கு இறங்கி மேனகையை அனுப்பாமலிருந்தாலும் இந்த நிலை வந்திருக்காது. எனவே, ஆடவர் நல்லவராக இருந்தால் பெண்டிரும் நல்லவராக இருப்பர்.
    கெளதம் முனிவரின் மனைவி அகலிகையிடம் கெளதம் முனிவர் வேடத்தில் உறவு கொண்டவன் இந்திரன். அவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்த பின்னரும் உறவைத் தொடர்ந்தவள் அகலிகை. கெளதம முனிவருக்கு இது தெரிந்த பின்னர் அவள் கல்லாக மாற்றப்பட்டாள். ஆடவனான இந்திரன் ஒழுக்கமாகவும் கட்டுப்பாடாகவும் இருந்திருந்தால் அகலிகை தவறுக்கு ஆளாக நேர்ந்திருக்காது; கல்லாகவும் மாறியிருக்க மாட்டாள். எனவே, உண்மை நிகழ்வுகளும் தொன்மக் கதைகளும் ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்தே பெண்களின் ஒழுக்கம் உள்ளதை மெய்ப்பிக்கின்றன எனலாம். இருப்பினும், பெண்களுக்குத் தற்காத்துக் கொள்ளும் கடமை உணர்வும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய பொறுப்புணர்வும் உள்ளன.
    ஆண்மை என்பது பெண்மையைத் தவறாகவோ வன்முறையிலோ துய்ப்பது அன்று. பெண்மையைக் காப்பதே ஆண்மை! பெண்மையைப் பேணலே ஆண்மை! பெண்மையைப் போற்றலே ஆண்மை! இக்கருத்து ஆண்கள் உள்ளங்களில் விதைக்கப்பட வேண்டும்.
    பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
    பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை! என்பான்  பாரதி.
    • இலக்குவனார் திருவள்ளுவன், தொடர்புக்கு:thiru2050@gmail.com
    தினச்செய்தி 04.12.2019

    செவ்வாய், 3 டிசம்பர், 2019

    தமிழீழ விடுதலைக் கவிஞனே..!, பி.இரியாசு அகமது, தினச்செய்தி

    அகரமுதல

    தமிழீழ விடுதலைக் கவிஞனே..!

    விடுதலைப்புலிகளின் தாயகம் தமீழீழத் தாயகம் என்கிற பெருலட்சியத்தின் பிதாமகன் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் பிறந்தநாள் அண்மையில் கடந்தது. தொடர்ந்து சில நாள்களில் தமிழீழ விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாகத் தீபம் திலீபனின் பிறந்த நாள். அதனைத் தொடர்ந்து இன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிக் கவியான புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள். இந்த ஒரே அலைவரிசை நேர்கோடு ஆச்சர்யமூட்டுகிறது.
    தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்த முதன்மைப் பெயர்களில் புதுவை இரத்தினதுரையின் பெயரும் ஒன்றாகும். இவர் 1948-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 3-ஆம் நாள் பிறந்தார். பொருள் பொதிந்த கவிதைகளின் வாயிலாக அறியப்பட்ட கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முதன்மைப் பங்காற்றியவர் எனப் பாராட்டுக்குரிய பன்முகம் கொண்ட புதுவை இரத்தினதுரை, விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்து இன எழுச்சிப் போராட்டத்தின் பக்கம் ஈர்த்தவர்.
    தனது 14ஆவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கிய இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய “இந்த மண் எங்களின் சொந்த மண்” பலரது வரவேற்பைப் பெற்றதோடு, தமிழீழ வேட்கையின் உணர்வுப்பூர்வமானப் பாடலாக தமிழர்தம் நெஞ்சங்களில் வித்தூன்றியது.
    “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
    எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
    துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக…’’
    – இது இரத்தினதுரையின் மகத்தான கவிதை வரிகளில் ஒன்றாகும். மேலும்,
    ‘‘அட மானுடனே!
    தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
    பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
    நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
    அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
    அடுத்த அடியை நீ வைத்தது
    தாயகத்தின் நெஞ்சில்தானே!
    இறுதியில் புதைந்தோ
    அல்லது எரிந்தோ எருவாவதும்
    தாய்நிலத்தின் மடியில்தானே!
    நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
    பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
    ஆதலால் மானுடனே!
    தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்!”-
    என்று வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, 1935-ஆம் ஆண்டு தனது முப்பத்தேழாவது வயதில் விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினார்.
    “எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலை பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்று கூறியிருக்கிறார்.
    கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளைப் படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருந்தார் என்பது மறத்தற்கரிய வரலாறாகும்.
    ‘‘இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
    எல்லைகள் மீறி யார் வந்தவன்.
    நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
    நின்றது போதும் தமிழா – உந்தன்
    கலைகள் அழிந்து கவலை மிகுந்து
    கண்டது போதும் தமிழா இன்னும்
    உயிரை நினைத்து உடலைச் சுமந்து
    ஓடவா போகிறாய்த் தமிழா….”-
    என்கிற கவிஞரின் கனல் கக்கும் கவிதை வரிகள், தமிழீழ மக்களின் மனத்தில் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும்  கேட்போரை நின்ற இடத்தை விட்டு அகலாதவாறு கட்டிப்போட்டு நிறுத்தி வைக்கும். அப்பாடலில், புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துகளும் நெகிழ்ச்சியான அனுபவங்களும் நிறைந்திருப்பதால் கேட்பவரை உறையவைத்திடும் என்பதே உண்மை.
    விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் நடந்த இறுதிப்போருக்குப் பிறகு, இலங்கை இராணுவத்தின் வற்புறுத்தல்களுக்கு இணங்கி உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஏராளம். அவர்களின் குறிப்பிடத்தக்கவர்களில் பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகரட்ணம் யோகி ஆகியோரும் ஆவார்கள்.
    ஆனால், இதில் இன்றுவரை நீளும் துயரம் என்பது இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட புதுவை இரத்தினதுரை முதலான எவரது நிலைமையும் இன்றுவரை இருக்கிறார்களா… இல்லையா… என்கிற எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக தமீழழ மண்ணில் எரிதனலாக கொதித்துக் கொண்டு இருக்கிறது. அவர்களை இலங்கை அரசு உயிரோடு வைத்திருக்கிறதா அல்லது படுகொலை செய்து பாதகம் புரிந்து விட்டதா என்று அவர்களின் உறவினர்களின் நெஞ்சில் நீங்காத் துயரம் கனன்று கொண்டு இருக்கிறது.
    கருணை கொன்ற காலம் இப்போது மீண்டும் போர்குற்றமிழைத்தவர்களின் கரங்களிலேயே அரசதிகாரத்தை அளித்திருக்கிறது. இது மீண்டும் ஈழத்தமிழர்களின் துயர் மேலோங்குமோ என்ற அச்சத்தை விதைத்திருக்கிறது. இந்நிலையில், புதுவை இரத்தினதுரை முதலானவர்களின் நிலைமைகளை என்னவென்று எதிர்பார்த்திருந்த காத்திருப்பு எண்ணம் கலக்கத்தில் இருக்கிறது.
    தமிழீழ விடுதலைக் கவிஞனே… கால அறம் உன்னை உலகுக்கு மீண்டும் வெளிக்காட்டுமா..?
    – பி. இரியாசு அகமது
    தினச்செய்தி, 03.12.2019