யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மோதலைப் பயன்படுத்தி
இனவெறியைத் தூண்டுவதைக் கண்டனம் செய்!
இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தில் விழா ஒன்றின்பொழுது, மாணவர் குழுக்கள் இரண்டுக்கு
இடையில் ஆடி 01, 2047 / சூலை 16, 2016 அன்று நடந்த மோதலை மிகைப்படுத்தி,
தமிழர் எதிர்ப்பு இனவெறிச் சீற்றத்தைத் தூண்டி விடுவதற்கு, அரசின்
பகுதியினரும் முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சவைச் சூழ்ந்து கொண்டுள்ள
இனவெறிக் கும்பலும் மேற்கொள்ளும் முயற்சிக்குப் பொதுவுடைமை நிகருரிமைக்
கட்சியும் (சோசலிச சமத்துவக் கட்சி – சோ.ச.க.), குமுக நிகருரிமைக்கான
(சமத்துவத்துக்கான) பன்னாட்டு இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும்
தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கின்றன!
அவர்களுடைய இந்தப் பரப்புரையின்(பிரச்சாரத்தின்) குறிக்கோள்,
தனியரசாட்சிச்(ஏகாதிபத்திய) சார்பான கொழும்பு அரசின் தாக்குதல்களுக்கு
எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள, தமிழ், இசுலாமியத் தொழிலாளர்கள்,
மாணவர்கள் உட்பட மக்களை இனவெறியில் பிளவுபடுத்தி முதலாளித்தன ஆட்சியைப்
பாதுகாப்பதே ஆகும்.
“புதிய மாணவர்களை வரவேற்பதற்காக” ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தில் சிங்கள-கண்டிய நாட்டியம் ஒன்றை நடத்துவதை
எதிர்த்த தமிழ் மாணவர் குழுவுக்கும், சிங்கள மாணவர் குழுவுக்கும் இடையில்
ஏற்பட்ட முரண்பாடு கலகம் வரை சென்றுள்ளது. நிகழ்வில் காயமடைந்த சிங்கள
மாணவர்கள் ஆறு பேர், காவல்துறைப் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர். சிங்கள மாணவர்கள் சிலரின் முறைப்பாட்டின்படி(புகார்),
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்
பீட மாணவர் சங்கத்தின் தலைவர் கடும் எச்சரிக்கைகளின் அடிப்படையில் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மாணவர் குழுவினரே தாக்குதல்
நடத்தினர் எனக் குற்றம் சாட்டிச் சிங்கள இனவெறித் தட்டினரும் ஊடகங்களும்
முன்னெடுக்கும் பரப்புரைக்கு முட்டுக் கொடுத்துச் சட்டத்தை நடைமுறை மற்றும்
ஒழுக்க உசாவல்(விசாரணை) என்கிற பெயரில் அரசுப் பின்னணியுடன் மாணவர்கள்
மீதான வேட்டையாடல் முன்னெடுக்கப்படுகின்றது.
கண்டிய நாட்டியத்தை நுழைக்கும்
முயற்சியானது திட்டமிட்டு செய்யப்பட்ட சீண்டலாகும். அது மாணவர்களுக்கு
உடன்பாடாக இல்லாததோடு, சிங்களப் படை வீரர்களே அங்கு முழவு கொட்டப்
பயன்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களப் படை சிங்கள மாணவர் அமைப்புடன் நெருக்கமான
தொடர்பு வைத்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் இந்த மோதல் வெடித்தமை தற்செயலானது இல்லை. இது, சிங்கள இனவெறிக் கும்பல்களும் படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறிப் பதற்ற நிலையைத் தூண்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாகும்.
இது, யாழ்ப்பாணத்தில் படை-காவல்துறை உளவுச் சேவைகள் தமிழ் மக்களின்
சீற்றத்தைக் கிளறி விடுமளவுக்குப் பின்னணியில் இருந்து செயல்படக் கூடியதாக
இருப்பதையே காட்டுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அவர்களது
கண்காணிப்பில் உள்ள இடமாகும்.
இனவெறிப் பரப்புரைக்கு முட்டுக் கொடுத்து, கொழும்பு தெலிகிராப்பு இணையத் தளம் சில நாட்களுக்கு முன்னர், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்களச் சங்கம், துயரங்களையும் அவர்களுக்கு எதிரான சிங்கள எதிர்த் தாக்குதல்களையும் அம்பலப்படுத்துகிறது”
(Jaffna University Sinhala Society expose series grievances and
anti-Sinhala attacks on them) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை
வெளியிட்டுள்ளது. அதில் சிங்களச் சங்கத்தின் செயற்பாடுகள்பற்றிய செய்திகள்
அடங்கியுள்ளன. அவ்வப்பொழுது மேற்கொள்ளப்பட்ட பௌத்த வேலைத் திட்டங்களுடன்
இந்தச் சங்கம் மேற்கொண்ட வெளிப்படையான ஒரு நடவடிக்கை, மே மாதம் இனவெறிப்
போரைக் கொண்டாடியதாகும். “எமது நாட்டின் உண்மையான வீரர்கள் – போர்
வெற்றிக்கு இன்று 7 ஆண்டுகள்” என்று அதற்குத் தலைப்பிடப்பட்டிருந்தது.
இது, தடைகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பேதைத்தனமான செயலாகவே அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இனவெறிப் பதற்ற நிலைகளைத் தீவிரமாக்குவதற்காக அரசின் ஒத்துழைப்புடனும் சிங்களப் படையினரின் திட்டமிட்ட செயற்பாடுகளின் இடையில் அவர்களின் ஒத்துழைப்புடனும் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.
அரசின் கூட்டுக் கட்சியான சிங்களப் பேரினச்சார்புக் கட்சியான சாதிக எல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாடலி சம்பிக இரணவக, இந்த நிகழ்வு தொடர்பாக ஆகவும் நச்சுத்தனமான கருத்தை வெளியிட்டார்.
தாக்குதலில் தொடர்புடைய தமிழ் மாணவர்கள் ‘குற்றவாளிகள்’ என்றும் “இந்த
நிகழ்வு புதிதாக ஒரு பிரபாகரனை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் தொடக்கமாக
இருக்கலாம்” என்றும் கூறிய இரணவக, “இத்தகைய கூறுகளை(சக்திகளை) உடனடியாக
அழிக்க வேண்டும்” என்றும் கூச்சலிட்டார். தமிழ் மாணவர்களை ஒடுக்குவதற்கு
அழைப்பு விடுத்த அவர், “பகடி வதை நிகழ்வு தொடர்பாகக் களனிப் பல்கலைக்கழக மாணவிகள் கூடக் கைது செய்யப்பட்டுள்ளார்களெனில், சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை?” என்று கேட்டார்.
அதிபர் மைத்திரிபால சிறிசேன,
தலைமையமைச்சர் இரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு வடக்கில் சிங்களப்
படையின் பிடியைத் தளர்த்தி, வன்கொடுமை தலை தூக்குவதற்கு வாய்ப்பு
ஏற்படுத்தியுள்ளதாக இராசபக்சவைச் சூழ்ந்துள்ள சிங்கள இனவெறிக் கும்பல்
குற்றம் சாட்டியுள்ளது. அதில் ஒருவரான தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்
விமல் வீரவன்ச ஊடக மாநாடு ஒன்றில், “இது மிகவும் அச்சுறுத்தலான நிலைமை!
இத்தகைய நிலைமைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதை அரசு உடனடியாக நிறுத்த
வேண்டும்” என்றார். அரசு வடக்கில் படையின் பிடியைத் தளர்த்தியுள்ளது என அவர் கூறும் கதை முற்றிலும் பொய்யானதாகும்.
இசுலாம் மக்களுக்கு எதிரான
சீண்டல்களினால் கெட்ட பெயர் பெற்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட
அத்தே ஞானசார, “மூட நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கின்ற நாட்டில், இந்தளவு
பொறுமை காக்கும் இனமும் சமயத் தலைவர்களும் உலகத்தில் வேறு எங்கும்
கிடையாது. அந்தப் பொறுமையை மீண்டும் பதம் பார்க்க வேண்டா” என்று இன்னுமொரு சீண்டலுக்கு ஆயத்தமாவதாக அச்சுறுத்தியவாறே கூறியிருக்கின்றார்.
இராசபக்ச தன் கையாட்களைக் கொண்டு முன்னெடுக்கும் இனவெறிப் பரப்புரையின் மூலம் அரசுக்கு எதிராக அறைகூவல் விடுப்பதுடன் தொழிலாளர்களுக்கு எதிராக வலச்சாரி (வலதுசாரி) இயக்கமொன்றை உருவாக்குவதற்கே முயல்கின்றார்.
மக்கள் விடுதலை முன்னணி (சே.வி.பீ.),
ஏனைய இனவெறியர்களுடன் தோளோடு தோள் நிற்பதாகக் காட்டிக் கொள்வதற்கு உடனடியாக
முன்வந்துள்ளது. அதன் தலைவர் அணுர குமார திசாநாயக்க, “தமிழ் மாணவர்கள்
சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது வடக்கில் வன்கொடுமையாளர்கள்
(தீவிரவாதிகள்) இடையில் இனவெறி உணர்வு உயர்ந்த மட்டத்தில் இருப்பதை
வெளிப்படுத்துகிறது” என்று அறிவன் (புதன்) கிழமை நாடாளுமன்றத்தில்
தெரிவித்தார்.
முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் தமிழ் மாணவர்களே என இனவெறி மோதலுக்குத் தூண்டி விடுபவர்கள் கூச்சலிடுகின்றனர்.
இது முற்றிலும் வஞ்சத்தனமான கதையாகும். இவர்கள் அனைவருமே இலங்கையில் தமிழ்
மக்களை நசுக்கிக் கொழும்பு அரசாங்கம் முன்னெடுத்த 26 ஆண்டுக் காலப் போரின்
பங்காளிகளாவர்.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட
கறுப்பு சூலைக்கும் அதனுடன் தொடங்கிய போருக்கும் காரணம், 1983 சூலையில்
பிரிவினை கோரிய தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்களப் படை வீரர்கள் 13 பேரைக்
கண்ணி வெடி வைத்துக் கொலை செய்ததே என்று முதலாளியக் கட்சிகளும் இனவெறிக்
கும்பல்களும் கூறினர். இது பொய்யாகும். 1948இல் தொடங்கித் தொழிலாளர்
இனத்தைப் பிளவுபடுத்துவதற்காக முன்னெடுத்த இனவெறிப் பாகுபாடுகள்,
சீண்டல்கள், ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் ஊடாகவே முதலாளியர் இனம் போரைக்
கிளறி விட்டது. குறிப்பாகத், தமிழ்ப் பொதுமக்கள் மீது அளவிட முடியா அழிவைத்
திணித்ததன் மூலமே இனவெறிப் போர் முடிவுக்கு வந்தது. 2009 மே மாதம்
புலிகளைத் தோற்கடித்த பின்னர், வடக்கு-கிழக்கில் சிங்களப் படையின்
வல்லாளுகை (ஆக்கிரமிப்பு) தொடர்ந்தும் விரிவாக்கப்பட்டு வருகின்றது. படை
மற்றும் காவல்துறை உளவுச் சேவைகள் பொது மக்களை, குறிப்பாக இளைஞர்களைக்
கண்காணித்து வருகின்றன. முதன்மையான சந்திகள் முதற்கொண்டு பல இடங்களிலும்
படையினர் பௌத்த சிலைகளை நிறுவுதல், அரச மரங்களை நாட்டுதல், பன்சலைகளை
நிறுவுதல் போன்றவை இனவெறிப் பதற்ற நிலைகளைத் தீவிரமாக்கும் நடவடிக்கைகளின்
பாகமாகும்.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசு, அமெரிக்கத்
தனியரசாட்சியின்(ஏகாதிபத்தியத்தின்) ஒத்துழைப்புடன் இனப்படுகொலைக்
குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. போரில்
பாதிக்கப்பட்ட பத்தாயிரக்கணக்கான மக்களை ஆகவும் வறுமைக்குள் தள்ளியுள்ள
நிலைமையின் கீழேயே இவை அனைத்தும் நடைபெறுகின்றன. சிறிசேன “நாடளாவிய
நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்” என்கிற போலிப் பரப்புரையின் மூலம் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் கொடூரமான நிலைமைகளை மூடி மறைக்கின்றார்.
குறித்த நிகழ்வு தொடர்பாக, தமிழ் தேசியக்
கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை, “மக்கள் இடையே ‘உண்மையான
நல்லிணக்கத்துக்கு’த் தடங்கலை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும்
நடக்க இடமளிக்க வேண்டா” என்று மாணவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த
அறிக்கை முற்றிலும் வஞ்சத்தனமானதாகும். தமிழ்க் கூட்டமைப்பின் முட்டுக்
கொடுத்தலுடனேயே அரசு தமிழ் மக்களின் மக்களாட்சி உரிமைகளை நசுக்கும்
நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அமெரிக்காவின் சீன எதிர்ப்பு “ஆசியாவில்
முன்னிலை”க் கொள்கைக்கு இலங்கையைப் பிணைத்து விட்டுள்ள கொழும்பு அரசுக்கு
ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் தமிழ் முதலாளியக் கும்பலுக்கு
வேண்டியவற்றையெல்லாம் பெற்றுக் கொள்வதே தமிழ்க் கூட்டமைப்பின் சீழ்ப்
பிடித்த கொள்கையாகும்.
வடக்கு-கிழக்குப் பகுதிகளில்
தன்னாட்சியின் கீழ்த் தமிழர்களுக்குத் தனி அரசுக்காகப் பரப்புரை செய்யும்
தமிழ் இனக் கட்சிகள் செயற்படுகின்றன. அவை மாணவர்கள், இளைஞர்கள் இடையில் ஓர்
அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ள முயல்கின்றன. தமிழ் முதலாளிக் குழுவின்
சிறப்புரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தனியரசாட்சியின் கடைக்கண்
பார்வையை நாடும் வேலைத் திட்டத்தையே அவை முன்வைக்கின்றன. இந்த முதலாளிய
வேலைத் திட்டத்தின் நொடிப்பும்(வங்குரோத்தும்) பிற்போக்குத்தனமும்,
புலிகளின் அரசியலிலும் அதன் தோல்வியிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. சிங்கள,
தமிழ்த் தொழிலாளர்களின் ஒருங்கிணைவுக்கு அவர்கள் கடும் எதிரிகளாவர்.
தென் பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களின்
தலைமையில் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் (அ.ப.மா.ஒ.)
அதை இயக்கும் போலி இடது முன்னிலைப் பொதுவுடைமைக் கட்சியும் (முன்னிலை
சோசலிசக் கட்சி – மு.சோ.க.) இனவெறிப் பரப்புரையுடன் ஒட்டிக்கொண்டு தமிழர்களைச் சீண்டுவதற்கான பொறுப்பைத் தமிழ் மாணவர்கள் மீதே சுமத்தியுள்ளன.
யாழ்ப்பாண மோதல் பற்றிச் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய மு.சோ.க.,
தலைவர்களில் ஒருவரான துமிந்த நாகமுவ, மாணவர்களின் மோதலுக்குள் இனவெறி
இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறினார். இனவெறியின் விளைவுகள் பற்றியும்
போரின் பின்னர் வடக்கில் சிக்கல்கள் தீர்க்கப்படாததைப் பற்றியும் வஞ்சகமான
விளக்கமளித்த அவர், “இத்தகைய இனவெறி மோதல்களைத் தவிர்க்கும் பெரும்
பொறுப்பு, பெரும்பான்மைத் தமிழ் மாணவர்களுக்கு இருக்கின்றது” என்று
முடித்தார்.
அ.ப.மா.ஒ., மு.சோ.க இரண்டும் பல்கலைக்
கழகங்களுக்குள் பௌத்த சமயம் உட்படப் பிற்போக்குச் சிந்தனைகளுடனும் அவற்றை
வளர்த்தெடுக்கும் கும்பல்களுடனும் கூட்டாகச் செயற்படுகின்றன. மு.சோ.க.,
செயற்பாட்டாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் விடுதலை முன்னணித்
(சே.வி.பீ) தலைவர்களாக இருந்து இனவெறிப் போருக்கு முழு உறுதுணை அளித்தனர்.
இனப்படுகொலையின் முடிவில் கட்சி சலிப்புக்கு உள்ளாகி நெருக்கடிக்குள் போன
நிலைமையில், இடது என்கிற முகமூடியைப் போட்டுக் கொண்டு இளைஞர்களைச் சுற்றி
வளைக்கும் இன்னொரு பொறியை அமைப்பதற்கே அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியில்
இருந்து பிரிந்தனர். அ.ப.மா.ஒ., சே.வி.பீ. (மக்கள் விடுதலை முன்னணி),
இரண்டும் பல்கலைக் கழகங்களுக்குள் இந்த இனவெறிப் பரப்புரைகளை
முன்னெடுத்தபொழுது மு.சோ.க., தலைவர்கள் அதில் முன்னிலை வகித்தனர்.
நெருக்கடியில் மூழ்கியுள்ள
அரசும் இராசபக்ச தலைமையிலான கட்சிக் கும்பலும் முன்னெடுக்கும் இந்த
இனவெறிப் பரப்புரைக்கு எதிராக அணி திரளுமாறு தொழிலாளர்கள்,
மாணவர்கள் முதலான இளைஞர்களிடம் பொதுவுடைமை நிகருரிமைக் கட்சியும்
(சோ.ச.க.), குமுக நிகருரிமைக்கான (சமத்துவத்துக்கான) பன்னாட்டு இளைஞர்
மற்றும் மாணவர் அமைப்பும் அழைப்பு விடுக்கின்றன. பன்னாட்டுத் தொழிலாளர்
இனப் போராட்டங்களில் புதிய காலக்கட்டம் விரிவடைந்துள்ள நிலையில்
இலங்கையிலும் தொழிலாளர், மாணவர் போராட்டங்கள் முன்னணிக்கு வந்து
கொண்டிருக்கின்றன. நெருக்கடியின் விளைவுகளால் மாணவர்களும் இளைஞர்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி வெட்டு, வேலையின்மை, ஆதாய-உழைப்புச் சூறையாடல்
ஆகியவையும் இந்தத் தாக்குதல்களின் பாகமாகும். முதலாளிய அமைப்பு முறைக்கு
எதிராகப் போராடும் பொதுவுடைமை வேலைத் திட்டத்தில் மாணவர்களையும்
இளைஞர்களையும் அணி திரட்டுவது இந்த நிலைமையின் கீழ் இன்றியமையாததாகும்.
தொழிலாளர்களையும் இளைஞர்களையும்
பன்னாட்டியல்(சர்வதேசியவாத) ஒருங்கிணைவில் அணி திரட்டி, பொதுவுடைமை வேலைத்
திட்டத்திற்காகவும் தொழிலாளர்-உழவர் அரசுக்காகவும், அதாவது இலங்கை-ஈழப்
பொதுவுடைமைக் குடியரசுக்காகப் போராடுவதன் மூலமே முதலாளிய அரசின்
தாக்குதல்கள், இனவெறிப் பிளவுபடுத்தல்கள் போன்றவற்றைத் தோற்கடிக்க
முடியும். இது பன்னாட்டுப் பொதுவுடைமைக்கான போராட்டத்தின் பாகமாகும்.
பொதுவுடைமை நிகருரிமைக் கட்சியும் (சோ.ச.க.), குமுக நிகருரிமைக்கான
பன்னாட்டு இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு இந்த
வேலைத் திட்டத்துக்காகப் போராடுங்கள்!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வெளியீடு