வெள்ளி, 9 டிசம்பர், 2022

என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு

 அகரமுதல






என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு

என் அம்மா பூபதி அம்மாள்(92), குழந்தைப் பருவத்தில் இருந்தே கடுமையான அறைகூவல்களை  எதிர்கொண்டார்.  தன் பாதையிலிருந்து புறங்காட்டவே இல்லை.  மக்களுக்குத் தொண்டாற்றவே செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்து,  செவிலியர்  கல்வியில் சிறந்து விளங்கினார்.

பிரித்தானியர் காலத்தில் ஆயுதப்படையில் சேர்ந்தார்; நாயகன்(catain) நிலைக்கு உயர்ந்தார். கிளாசுகோ, மெடிசின் ஆட்டு(கனடா, Medicine Hat, Canada),  இலங்கை போன்ற பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் அவரது பணி இருந்தது.

தாயகம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி மீதான அவரது பற்றும் ஈடுபாடும் மிகவும் உயர்ந்தது. என் தாய் கத்தோலிக்கரான மைக்கேல் என்பவரை மணந்தார். அவரும் படைவீரரே. இருவரின் ஒரே மகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதனால் எனக்குக் கட்டுப்பாடும் தமிழ் உணர்வும் காலூன்றின. அந்த நாட்களில், படைப்பெண்ணிற்குத் திருமணம் நடந்தால், அவள் ஆயுதப்படைத்துறையிலிருந்து விலக வேண்டும். அதன்படி என் தாயாரும் படைத்துறையிலிருந்து விலகினார். இருப்பினும் செவிலியராக மக்கள் பணியாற்றினார்.

என் இளம் பருவத்தில் தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த வலிமையான ஒட்டுறவைக் கண்டேன். இதுவே, பின்னர் என் உள்ளத்தில் தமிழ்ப்பற்றை விதைக்கக் காரணமாக இருந்தது. வைகறை 4.00 மணிக்கெல்லாம் இறைப்பாடல்களில் சில பகுதிகளை மனனம் செய்யச் செய்தார்.

அவர் ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பெருமளவு உதவினார். அவர் எப்பொழுதும் பெண்களையும் நலிந்தவர்களையும் மதிக்கக் கற்றுக் கொடுத்தார்.

என்னிடம்  நல்ல குணங்கள் இருந்தால் அவை என் தாயிடமிருந்து எனக்கு வந்தவையே. அவர் 1988 இல் மறைந்தாலும், அவரது நினைவுகள் என்றும் நீடித்தவையாகவும் அன்றலர்ந்தன போலவும்  நிலைத்து நிற்கின்றன.

 மைக்கேல் (இ)யூபருட்டு





புதன், 7 டிசம்பர், 2022

களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி: இணைய வழிக் கூட்டம் 10/12/22

 அகரமுதல

     07 December 2022      No Comment



“தொன்மை! தொடக்கம் ! தொடர்ச்சி!” குழுவின்

இணையவழிக் கூட்டம்

தமிழ் மொழி மற்றும் தமிழரின் சிறப்பு தொன்மையில் இருப்பதோடு அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது. உலகின் தொன்மையான பல நாகரிகங்கள் தன் தொடர்ச்சியை இழந்து அழிந்து போனதைப் பார்க்கிறோம். சங்கக் காலம் தொடங்கி, தற்காலம் வரை உள்ள தமிழர் வரலாற்றில் களப்பிரர் காலத்தை மட்டும் ஏன் இருண்டகாலம் என்று சிலர் கூறுகிறார்கள்?

தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இன்று வரை கிடைக்க பெற்றுள்ள தொல்லியல் ஆதாரங்கள் கொண்டு களப்பிரர் காலத்தின் இருளைப் போக்க ஒளி பாய்ச்ச உள்ளார்.

களப்பிரர் என்போர் யார்?
அவர்கள் காலத்தில் மக்கள் நிலை என்ன?
அவர்கள் காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்ன?
களப்பிரர் ஆட்சியின் தோற்றமும் மறைவும் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?

போன்ற பல கேள்விகளுக்கு விடையைத் தெரிந்து கொள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் “தொன்மை! தொடக்கம்! தொடர்ச்சி!” குழுவின் இணையவழிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அவரது “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற புத்தகம் தமிழ் ஆய்வாளர்களிடையே ஆர்வத்தையும் , விவாதத்தையும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு: களப்பிரர் காலம் இருண்ட காலமா?

கூட்ட இணைப்பு / Zoom Link: http://www.tinyurl.com/tttfetna

அணுக்கி எண் /Zoom Meeting ID: 859 8002 6724

கார்த்திகை 24, 2053 / திசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 10:30 காலை (அமெரிக்கக் கிழக்கு நேரம்)

கார்த்திகை 24, 2053 / திசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 9:00 இரவு (இந்திய நேரம்)

அன்புடை நெஞ்சம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை