(தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1. தொடர்ச்சி)
ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2
ஆனால் அப்போது என் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஊர்ப்புறத்தில் தங்கி மக்களோடு வாழ்ந்து மக்களோடு உழைக்க வேண்டும் என்ற தலைமையின் கட்டளையை ஏற்று அப்போதுதான் சில நாளாய்க் கூலிக்குக் கரும்பு வெட்டப் போய்க் கொண்டிருந்தேன். வெட்டத் தெரியாமல் வெட்டிக் கரும்புத் தோகைகள் உடலெங்கும் கோடு கிழித்திருந்தன. கடின உழைப்புக்குப் புதியவன் என்பதால் உடம்பு கொதித்து வயிற்றுப் போக்கு வேறு வாட்டிக் கொண்டிருந்தது. இதை அறிந்ததும் புலவர் “சரி, நீங்கள் போய் உடம்பைச் சரிசெய்து கொண்டு சிலநாள் கழித்து வாருங்கள்!” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
புலவருக்குக் கடிதம் கொடுத்து என்னை அனுப்பிய தோழர் ஏ.எம்.கே. “நீங்கள் நேராக அங்கே செல்ல வேண்டா, அண்ணாமலையில் கணேசனைப் பார்த்துக் கொடுத்துவிட்டுக் காத்திருங்கள். அவர் ஒரு மாணவரை அனுப்பி பதில் வாங்கித் தருவார்” என்று கூறியிருந்தார். ஆனால் கடிதம் கொண்டு போன மாணவரிடம் வலியுறுத்திச் சொல்லி என்னை ஊருக்கே வரவழைத்து விட்டார் புலவர். ஏன் அப்படிச் செய்தார்? ஏன் என்னைத் தங்கச் சொன்னார்? ஏன் உடம்பை சரிசெய்து கொண்டு சில நாள் கழித்து வரச் சொன்னார்? இந்த வினாக்களுக்கு அப்போது எனக்கு விடை தெரியவில்லை. அவ்வளவு ஏன், இந்த வினாக்கள் அப்போது மனத்தில் எழவேயில்லை என்பதுதான் உண்மை.
தென்னந்தோப்பில் வெடிகுண்டு செய்யும் போது நிகழ்ந்த விபத்தில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் மூவரும் உயிரிழந்து புலவரும் காயமடைந்த செய்தி நீண்டநாள் கழித்து வெளிப்பட்ட போது, தோழர் ஏ.எம்.கே.யிடமிருந்து நான் பெற்ற விளக்கம் மேற்சொன்ன வினாக்களுக்கு விடை தந்தது.
பெண்ணாடம் பகுதியில் புலவர் திட்டமிட்டிருந்த ‘அறுவடை இயக்க’த்திலும் பிறவற்றிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு பங்கு இருந்தது. என்னையும் பங்கு பெறச் செய்யும் புலவரின் எண்ணம் ஈடேறாமலே போயிற்று. (ஈடேறியிருந்தால் இந்தக் கதையைச் சொல்ல நான் இருந்திருக்க மாட்டேன்.)
புலவரிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்று சௌந்தரசோழபுரத்திலிருந்து புறப்பட்டு, அப்போது நான் தங்கி இயக்கப் பணி செய்து கொண்டிருந்த பெரும்பண்ணையூருக்குச் சென்று விட்டு சிலநாளில் சோழநம்பியாரைப் பார்க்க அதிராம்பட்டினம் சென்றேன்.
அப்போது அவர் அங்கு விடுதியில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். வள்ளுவன் சேர்ப்பிக்கச் சொன்ன கடிகாரத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். அவர் எங்கள் அரசியல் குறித்து நிறையக் கேள்விகள் கேட்டார். எங்கள் நிலைப்பாடு அவருக்குச் சரியாகப் படவில்லை என்று புரிந்து கொண்டேன்.
… அதே வள்ளுவன். அதே நம்பி என்னோடும் புலவரோடும் சிறைத் தோழர்களாக இருந்து போராடிய நினைவுகளின் சுமையோடு நிகழ்காலத்துக்கு வருகிறேன். ஓய்வறியாத புலவர் இறுதியாக ஓய்வு கொண்டு விட்டதைக் காணவும், அவரது இறுதிப் பயணத்தில் நடக்கவும் நூற்றுக்கணக்கான தோழர்கள் பழையவர்களும் புதியவர்களுமாய், முதியோரும் இளையோருமாய் வந்து குவிந்து கொண்டிருகிறார்கள். அவர்களுக்கிடையே வள்ளுவனும் நம்பியும் ஓடியாடி இறுதிப் பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். யாரும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கவில்லை. அவர்களும் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.
அவர்களுக்கு அப்பா, மற்றவர்களுக்குத் தோழர், தலைவர் என்ற வேறுபாடே இல்லை. எல்லோருக்குமே புலவர், அவ்வளவுதான். வள்ளுவனும் நம்பியும் மட்டுமல்ல, இதோ தமிழரசி, இதோ கண்ணகி, அதோ அஞ்சுகம்! அடுத்தடுத்த தலைமுறைகளும் வந்து விட்டதன் அடையாளமாக இளைஞர்கள், சிறுவர், சிறுமியர், சின்னக் குழந்தைகள்! ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யார் யார் என்று எனக்கே தெரியவில்லை.
வசந்தத்தின் இடிமுழக்கம் என்று சாரு மசூம்தாரால் வருணிக்கப்பட்ட நக்குசல்பாரிப் புரட்சி தமிழகத்தில் எதிரொலித்த போது அதைப் போருக்கான அழைப்பாக ஏற்று களமிறங்கிய முன்னோடிகளில் ‘புலவர்’ கலியபெருமாளும் ஒருவர். தமிழில் புலவர் படிப்பு படித்தவர் என்பதால் இயக்கத் தோழர்கள் அவரைப் புலவர் என்றார்கள். சில காலம் ஆசிரியப் பணி செய்ததால் மக்கள் அவரை ‘வாத்தியார்’ என்றார்கள்.
மாணவப் பருவத்திலிருந்தே புலவரின் போராட்ட வாழ்க்கை தொடங்கி விட்டது. மயிலம் கல்லூரி விடுதியில் வீரசைவ மாணவர்களுக்கும் மற்றப் பிரிவு மாணவர்களுக்கும் இடையில் சாதிப் பாகுபாடு காட்டியதை எதிர்த்துக் கலியபெருமாள் போராடினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்துகள்பால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டதுதான் அவரது அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. ஐம்பதுகளின் தொடக்கத்தில் பொதுமை இயக்கம் கடும் அடக்குமுறைக்கு உள்ளாகிக் கீழத் தஞ்சையில் களப்பால் குப்பு, இரணியன், சிவராமன் போன்றோர் இன்னுயிர் ஈந்தனர். பொதுமை இயக்கத்தின் ஈகமும் வீரமும் இளம் கலியபெருமாளைச் சிவப்பின் பக்கம் ஈர்த்தன.
1952 – 54 காலத்தில் பெண்ணாடம் பகுதியில் இரட்டைக் குவளை முறை, முடிதிருத்தகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிதிருத்த மறுப்பது போன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தைப் புலவர் முன்னின்று நடத்திய போது பொதுவுடைமைக் கட்சி அவருக்குத் துணை நின்றது. அந்தப் போராட்டங்கள் வெற்றி பெற்றதோடு புலவரும் பொதுமைக் கட்சியில் சேர்ந்து விட்டார்.
நக்குசல்பாரி இயக்கத்தைத் தமிழ்நாட்டில் கட்டுவதற்காக ஈகம் செய்தவர்கள் பலர். ஆனால் ஒரு குடும்பம் முழுவதுமே அதற்காக ஈகம் செய்ததென்றால் அது புலவரின் குடும்பமே!
குடும்பம் என்றால் அவருடைய மனைவி மக்கள் மட்டுமல்ல, புலவர் எடுத்த முயற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அதற்காக எல்லா வகையிலும் இன்னலுற்றவர் அவரது மனைவியின் அக்காள் அனந்தநாயகி.
“மாணவர்கள் படிப்பையும் குடும்பத்தையும் துறந்து ஊர்ப்புறத்துக்குச் சென்று ஆயுதப் புரட்சிக்கு உழவர்களைத் திரட்ட வேண்டும்” என்ற சாரு மசூம்தாரின் அழைப்பைத் தமிழ்நாட்டில் ஏற்று வெளியே வந்த முதல் மாணவன் நான். வெளியே வந்த சில நாளில் (1969 அட்டோபரில்) நான் முதன்முதலாகப் புலவரைச் சந்தித்தது அனந்தநாயகி அவர்களின் கொடுக்கூர் இல்லத்தில்தான். தஞ்சை மாவட்டம் ஆடுதுறைக்கருகில் குமணந்துறையில் இயக்கத்தின் முதல் மாநாடு இரகசியமாய்க் கூடிய போது எல்லா ஏற்பாடுகளையும் செய்து விருந்தோம்பியவர் ‘பெரியம்மா’ அனந்த நாயகிதான்.
தொடரும்
தோழர் தியாகு
தாழி மடல் 152