சனி, 17 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் . இ –  தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

உலகத் தாய்மொழி நாள்

பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள்

பிப்பிரவரி 21இல் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்துச் செய்திகள் முகநூலிலும் புலனத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் நிறைந்துள்ளன. வேறு எதற்கெல்லாமோ வாழ்த்துப் பரிமாற்றம் செய்துகொள்வதை விடவும் தாய்மொழி நாள் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது சிறப்பு. ஒரு திருத்தம் மட்டும் சொல்கிறேன். இது உலகத் தாய் மொழி நாள் என்பதில் இரு பிழைகள் உண்டு. ஒன்று உலகம் அல்ல, பன்னாடு! இரண்டு, தாய்மொழி அல்ல, தாய்மொழிகள்!

உலகம் முழுமைக்கும் ஒற்றைத் தாய்மொழி இல்லை, பல மொழிகள், பல தேசங்கள், பல நாடுகள் என்பதே உண்மை. ஒவ்வொரு தேசமும் தன் தாய்மொழியைப் போற்றிக் காக்க வேண்டும். தன் தாய்மொழியைப் பிற தேசங்கள் மீது திணிக்கக் கூடாது. அப்படிச் செய்வது மொழி ஒடுக்குமுறை ஆகும். மொழி ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு! மொழிப் பன்மையத்துக்கு அறிந்தேற்பு! இந்த இரண்டும் உலகத் தாய்மொழி நாள் என்ற பெயரில் மறைந்து விடுகிறது.

மனிதவுரிமைகள் நாளை மனிதவுரிமை நாள் என்றாற்போல் தாய்மொழிகள் நாளை தாய்மொழி நாள் என்று சொல்லக் கூடாதா? என்ற கேள்வி எழும். மனிதவுரிமைகள் உரிச்சொல்லாகும் போது மனிதவுரிமை என்று சுருங்குவதில் கருத்துச் சிக்கல் ஏதுமில்லை. ஆனால் ஒரே நாடு ஒரே மொழி பேர்வழிகள் தாய்மொழி நாளை எப்படி வைத்துக் கொள்வார்கள்? என்று எண்ணிப் பாருங்கள். பாரதத் தாய் தேசத்துக்கு! இந்தித் தாய் மொழிக்கு! என்று கிளம்பி விடுவார்கள். உரிச் சொல்லே ஆயினும் பன்மையைப் பன்மையாகவே பயன்படுத்தினால் சரிப்படும் என்பதற்கு ஒரு பழைய எடுத்துக்காட்டு தருகிறேன்:

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கு என்ன பெயர்? (இ)ராச்சிய சபா! மேலவை உண்மையில் எப்படி இருக்க வேண்டும்! மக்களவை நாடு முழுவதற்குமானது என்றால் இ)ராச்சிய சபா மாநிலங்களுக்கானதாக இருக்க வேண்டும். இ)ராச்சிய சபா என்பதை மாநில அவை என்று சொல்லாமல் மாநிலங்களவை (மாநிலங்கள் + அவை) என்று அழைத்தது திமுகதான் என்று நினைக்கிறேன். பொருள் பொதிந்த சொல்லாக்கம்!

மாநிலங்கள் அவை! வணிகர் சங்கங்களின் பேரமைப்பு! இன்னும் இது போன்ற எடுத்துக்காட்டுகள் இருந்தால் கொடுங்கள்! சிஐடியு – Centre of Indian Trade Unions என்பதை நம் தோழர்கள் தமிழாக்கம் செய்ய முற்படுவதே இல்லை. அப்படியே செய்தாலும், இந்தியத் தொழிற்சங்க மையம் என்பார்கள். இந்தியத் தொழிற்சங்கங்கள் மையம் என்று சொல்வதில் என்ன குறை?

ஆகவே பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் கொண்டாடுவோம்! எல்லாவகை மொழித் திணிப்பையும் எதிர்த்துப் போராடுவோம்!

[தாய்மொழிகள் பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும். உடல் நலம் சற்றே குன்றி இருப்பதால் உடனே இயலவில்லை. விரைவில் எழுதுவேன்.] 

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல் 107

வெள்ளி, 16 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – இ

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் ஆ. தொடர்ச்சி)

திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் –  

மருத்துவச்சான்று வலுவற்று இருப்பதாக நீதிபதி குறைபட்டுக் கொள்வது பொருளற்றது. தாக்குண்டவர்கள் மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட போது காயங்கள் பெரும்பாலும் ஆறிப்போய் இருந்ததில் வியப்பில்லை. ஆனால் முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 323 / 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி இதே மருத்துவச் சான்றைத்தான் நம்பியுள்ளார்.

வழக்குரைஞர்களின் போற்றத்தக்க பணி

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு ஊக்கமளித்து, நிகழ்ந்த கொடுமைகளை வெளிப்படுத்திச் சட்ட நடவடிக்கையின் ஒவ்வொரு படியிலும் அவர்களுக்குத் துணை நின்ற வழக்குரைஞர்கள் இரத்தினம், அலெக்குசு, செபசுட்டியன் ஆகியோரின் பங்கு போற்றத்தக்கது. நியாயமாகவே நீதிபதியும் அவர்களை பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்குரைஞர்கள் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் முறையீடு தாக்கல் செய்வதற்கு உதவினார்கள் என்பதையே நீதிபதி ஒரு குறையாக எடுத்துக்காட்டுவது வேடிக்கைதான். அரசுத் தரப்பு வழக்குரைஞர் சு.க. மணி திறம்பட வழக்காடினார் என்பதற்காக அவரையும் குறை சொல்லாமல் விட்டாரே நீதிபதி என்று ஆறுதலடையலாம்.

இந்த வழக்குரைஞர்களில் எவர்க்கும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் பால் பகைமையோ உள்நோக்கமோ எதுவுமில்லை என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களிடம் உண்மை பேசியிருப்பார்களா என்று நீதிபதி ஐயுறுகிறார். அவர்கள் பொய்கூற வேண்டிய தேவையென்ன? அந்தப் பொய்யை அப்படியே நம்புமளவுக்கு இந்த வழக்குரைஞர்கள் ஏமாளிகளா? என்றெல்லாம் ஏரண முறையில் சிந்திக்க இயலாதவராக நீதிபதி உள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவரது உள்ளத்தில் படிந்துள்ள படிமமே அவரது ஏரணச் சிந்தனைக்குத் தடை போடுகிறதோ? என்று ஐயுற வேண்டியுள்ளது.

அதிகாரிகளின் சாட்சியம்

மாவட்ட ஆட்சியரும் புலனாய்வு அதிகாரியும் அளித்துள்ள சாட்சியத்திலேயே முரண்பாடு காண்கிறார் நீதிபதி. 31-5-2002இல் தாம் திண்ணியம்ஊருக்குச் சென்ற போது பாதிக்கப்பட்டவர்கள் ஊரிலில்லை என்று மாவட்ட ஆட்சியர் சாட்சியம் அளித்துள்ளார். அதே நாளில் அவ்வூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை விசாரித்ததாகப் புலனாய்வு அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார். இந்த இரு சாட்சியங்களும் ஒன்றுக்கொன்று முரணாய் இருப்பதாக நீதிபதி கண்டுபிடித்துச் சொல்கிறார். மாவட்ட ஆட்சியரும் புலனாய்வு அதிகாரியும் தனித்தனியாகச் சென்றுள்ளனர். அவர் சென்ற போது இல்லாதவர்கள் இவர் சென்றபோது இருந்திருக்க லாமல்லவா? மாவட்ட ஆட்சியரும் புலனாய்வு அதிகாரியும் பொய்கூற வேண்டிய தேவை என்ன? அவர்களைக் கூடச் சார்பற்ற சாட்சிகளாக நீதிபதி கருதவில்லையா?

மாவட்ட ஆட்சியரால் யாரையும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது, ஆனால் புலனாய்வு அதிகாரியால் அப்படிச் செய்ய முடியும் என்ற வேறுபாடு கூடவா நீதிபதிக்கு விளங்கவில்லை?

நிகழ்தகவு

ஒரு வழக்கில் கூறப்பட்டுள்ளவாறு நிகழ்ச்சிகள் நடந்திருக்க எந்த அளவுக்கு வாய்ப்புள்ளது என்பதைத்தான்  வழக்கின் நிகழ்தகவு என்பார்கள். இந்த வழக்கின் நிகழ்தகவு ஐயத்திற்குரியதே என்கிறார் நீதிபதி. தொகுப்பு வீட்டுக்காகப் பணம் வாங்கியது முதல் மனிதர்களை மலம் தின்ன வைத்த கொடுமை முடிய… இப்படியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வருகிறார் நீதிபதி. கருப்பையா, முருகேசன், இராமசாமி ஆகியோர் தப்படித்து சுப்பிரமணியனின் பெயருக்குக் களங்கம் விளைவித்ததால் அவர் ஆத்திரமுற்று அவர்களைத் தாக்கியிருக்க வேண்டும் என்று நம்புவதற்கு மட்டுமே இந்த வழக்கில் சான்று உள்ளதாம்!

அவர்கள் தப்படித்தார்கள் என்றால் ஏன், எதற்காக? அவர்களது அறிவிப்பு சுப்பிரமணியனின் பெயரைக் கெடுப்பதாய் இருந்தது எப்படி? ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் கருப்பையாவைச் செருப்பாலடித்தார், முருகேசன்-இராமசாமிக்குச் சூடுபோட்டார் என்றால், இந்த அளவுக்கு நிகழ்தகவு உண்டு என்றால், அவர்களை மலம் தின்ன வைத்தார் என்பதற்கு மட்டும் ஏன் வாய்ப்பில்லை? ஒரு மனிதனால் இப்படிச் செய்ய முடியுமா? என்பது நியாயமான கேள்விதான். ஆனால் சாதிப் பேய் பிடித்தாட்டும் உள்ளம் மனிதத் தன்மையை அறவே இழந்து மூர்க்கமான மிருகத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்பதற்கு எத்தனைச் சான்றுகள் வேண்டும்!

முடியுமாமுடியுமா?

மனிதனை மனிதன் உயிரோடு கொளுத்த முடியுமாகொளுத்தினார்களே வெண்மணியில்!

மனிதனை மனிதன் வெட்டிக் கூறு போட முடியுமாகூறு போட்டார்களே குறிஞ்சாங்குளத்தில்!

மனிதனை மனிதன் வெட்டி ஆற்றில் வீச முடியுமாவீசினார்களே சுண்டூரில்!

சாதிவெறி மனிதனை மிருகமாக்கியதற்கு இன்னும் எத்தனைச் சான்றுகள் வேண்டும்?

இதே வரிசையில்… மனிதனை மனிதன் மலம் தின்னச் செய்ய முடியுமா? செய்து விட்டானே திண்ணியத்தில்!

சாதி வெறியின் மிருகத்தனத்துக்கு இது மற்றுமொரு சான்று. இதை நீதிபதி நம்ப மறுக்கிறார் என்றால் சாதிக் கொடுமைகளின் வரலாறு தெரியாதா அவருக்கு?

திண்ணியம் தீர்ப்பு சாதித் தீர்ப்பே

திண்ணியம் வழக்குத் தீர்ப்பு நீதித் தீர்ப்பன்று, சாதித் தீர்ப்பே என்பதுதான் நம் திறனாய்வின் முடிவு. இந்தத் தீர்ப்பின் சாதியம் அது வெளிப்படையாக ஒரு சாதியை ஆதரித்து மறுசாதிக்கு எதிராக உள்ளது என்பதை விடவும், சாதிச் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து எழுந்த நிகழ்வுகள் தொடர்பான ஒரு வழக்கில் சாதிப் பாகுபாட்டையும் அதன் அக, புற விளைவுகளையும் கண்டுகொள்ள மறுப்பதில்தான் அடங்கியுள்ளது.

இரண்டாம் வகைச் சாதியம்

சாதி பார்க்கும் சாதியம் வெளிப்படையானது. சாதி இருக்கும் போதே இல்லை என்று கற்பித்துக் கொள்ளும் சாதி பாராச் சாதியம் அல்லது சாதிக் குருட்டுச் சாதியம் (caste-blind casteism) உட்கிடையானது, மறைந்து நின்று தாக்குவது. இந்த இரண்டாம் வகைச் சாதியமே திண்ணியம் தீர்ப்பின் சொற்களிலும் சொல்லிடுக்குகளிலும் திமிறி வழிகிறது.

சாதிக் கொடுமைகளுக்கும் சாதித் தீர்ப்புகளுக்கும் எதிரான போராட்டம் நீதிமன்ற எல்லைகளுக்குள் முடிந்து விடாது என்பதைச் சட்டத்தின் பிடியில் சிக்காத சாதி வெறியர்களுக்குக் காலம் உணர்த்தும்.

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல்

வியாழன், 15 ஜூன், 2023

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 52,53 & 54 : இணைய அரங்கம்: 18.06.2023



இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (திருவள்ளுவர், திருக்குறள் – 415)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 52, 53 & 54 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: ஆனி 03, 2054 / ஞாயிறு / 18.06.2023

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

தொல்காப்பிய அறிஞர் முனைவர் செல்வநாயகி சிரீதாசு

மொழிபெயர்ப்பு விருதாளர் இதழாளர் முனைவர் இராசேசுவரி

பேச்சு-செவித்திறன் வல்லுநர் எழுத்தாளர் புவனா கருணாகரன்

நிறைவுரை:  அரசறிவியலறிஞர் தோழர் தியாகு

நன்றியுரை : மாணவர் மெய்விரும்பி

தோழர் தியாகு எழுதுகிறார் 132 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – ஆ

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ தொடர்ச்சி)

திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – 

காப்பு எதற்கு?

உண்மையில் காப்புக் கட்டுவது சமத்துவத்திற்காக அல்லமரியாதைக்காகவும் அல்ல. திருவிழா முடியும் வரை யாரும் ஊரை விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருவது. அப்படியானால் இன்று மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் தீண்டாமை நிலவியதில்லை என்று சொல்லி விட முடியுமா? காப்புக் கட்டும் வழக்கம் திண்ணியத்திற்கு மட்டும் உரியதல்ல. தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கம் இருப்பதாலேயே, தீண்டாமையும் சாதிப் பாகுபாடும் தமிழ்நாட்டை விட்டே ஒழிந்து விட்டதாக முடிவுக்கு வர முடியுமா? இறை வழிபாடு தொடர்பான ஒரு சடங்கை மட்டும் ஆதாரமாகக் கொண்டு சமூக மெய்ந்நடப்புகளைக் கணிக்க முற்படுவது அறிவுக்குகந்ததோ அறிவியலின் பாற்பட்டதோ அன்று. நீதிபதி சட்டம் படித்தவராக இருக்கலாம். ஆனால் சமூக அறிவியலோடு விளையாட அவருக்கு உரிமை இல்லை.

தீண்டாமை ஒழிந்து விட்டதா?

திண்ணியத்தில் தீண்டாமை நிலவுவதாக அரசுத் தரப்பினர் நீதிமன்றத்தில் வந்து சொல்லலில்லையாம். தீண்டாமை ஒழிக்கப்படுவதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்துக் கொண்டு, எத்தனையோ ‘நலத் திட்டங்களை’ அறிவித்துக்கொண்டு தீண்டாமை நீடிப்பதாக எந்த அரசுதான் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்?

தீண்டாமையின் இருப்பும் ஒழிப்பும் நீதிமன்ற சாட்சிக் கூண்டுகளில் அல்லசமூகப் போராட்டக் களங்களில் தீர்வு செய்யப்பட வேண்டியது என்பது இராமமூர்த்தி போன்ற நீதிபதிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான திண்ணியங்களில் தீண்டாமையும்  சாதிப்பாகுபாடும் நீடித்து வருவதைத் தெரிந்து கொள்ள முடியாதவர்கள் எங்கிருந்து பிடித்துவரப்பட்டவர்களோ? யாமறியோம்.

அற்ப முரண்பாடுகள்

குற்றத்திற்கான நோக்கம் மெய்ப்பிக்கப்படவில்லை என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொள்கிறார். சாட்சிகளின் சாட்சியத்திலுள்ள அற்ப முரண்பாடுகளை அவர் பிடித்துக் கொள்கிறார். இந்த முரண்பாடுகள் வழக்கின் சாரத்தைப் பாதிக்கும்படியானவை அல்ல, இவை வழக்கிற்குத் தொடர்பில்லாதவை என்பதை அவர் காண மறுக்கிறார்.

சான்றாகக் கருப்பையாவின் தங்கை பானுமதி மணமானவரா, இல்லையா? அவருக்குத் திண்ணியத்தில் வீடு ஒதுக்க முடியுமா, முடியாதா? என்ற ஆராய்ச்சியில் நீதிபதி ஈடுபடுகிறார். இதை வைத்துக் கருப்பையாவுக்கும் சுப்பிரமணியனுக்குமான பிணக்கின் அடிப்படையையே மறுக்க முனைகிறார். நாட்டில் எல்லாமே ஒழுங்காகவும் முறையாகவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுபோல் சித்திரம் தீட்டி பானுமதியிடமிருந்து ஊராட்சித் தலைவி பணம் வாங்கியிருக்க முடியாது என்ற முடிவை வலிந்து வருவிக்கிறார்.

ஒரு குற்றச்செயல் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப்படும் போதுஅச்செயலுக்கான நோக்கம் மெய்ப்பிக்கப்படா விட்டாலும் குற்றத் தீர்ப்பு வழங்கலாம் என்ற சட்டக் கோட்பாடு நீதிபதி இராமமூர்த்திக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

கருப்பையா தப்படித்ததால் சுப்பிரமணியன் ஆத்திரப் பட்டு அவரைத் தாக்கியிருக்க வேண்டும் என்பதை நீதிபதியே ஏற்றுக் கொள்கிறார். ஆனால் தப்படித்ததற்கான காரணத்தை மட்டும் அவர் நம்ப மறுக்கிறார். காரணமேயில்லாமல் தப்படித்து வம்பில் சிக்குவதற்குக் கருப்பையாவுக்கு என்ன பைத்தியமா? கருப்பையாவின் செயல் குறித்து சுப்பிரமணியன் அவரைக் கேட்டதை எதிரித் தரப்பு சாட்சியே ஒப்புக் கொள்கிறார். இந்த ஒப்புதலை ஆதாரமாக வைத்து சுப்பிரமணியன் ஆத்திர மூட்டப்பட்டதால் தாக்கியதாக நீதிபதி தீர்மானிக்கிறார்.

இ.த.ச. 323 பிரிவில் குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு இதையே காரணமாய்க் காட்டுகிறார். சுப்பிரமணியன் ஆத்திரமூட்டப்பட்டதால் தாக்கினாராம்! ஆனால் கருப்பையா மட்டும் காரணமே இல்லாமல் தப்படித்தாரா? என்ற வினாவுக்கு நீதிபதியிடம் விடையில்லை.

சார்பும் சார்பின்மையும்

இந்த வழக்கில் சார்பற்ற சாட்சிகள் யாரும் இல்லை என்பது உண்மை. தாக்கியவர்கள் அனைவரும் சாதி இந்துக்கள், ஒருவரைத் தவிர அனைவரும் கள்ளர் வகுப்பினர் என்பதும், தாக்கப்பட்டவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதும் உண்மையாக இருக்கும் போது சார்பற்ற சாட்சிகளுக்கு எங்கே போவது? இரு தரப்பினரின் சாதிச் சார்பையும் கண்டு கொள்ளாமல், சரிநிகரான தனிமனிதர்களாக அவர்களை நீதிபதி பார்க்க முற்படுவதால்தான் சார்பற்ற சாட்சிகளைத் தேடுகிறார். அக்கம் பக்கம் கடைக்காரர்கள் இருந்திருக்க வேண்டுமே என்கிறார். பொதுவாகக் கடைக்காரர்கள் காவல் நிலையத்துக்கோ நீதிமன்றத்துக்கோ வர விரும்புவதில்லை என்பதையும், அவர்களுக்கும் சாதிச் சார்பு (அல்லது சாதி அச்சம்) உண்டு என்பதையும் அவர் காணத் தவறுகிறார்.

நடந்த ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னணியில் சாதிப் பிணக்கு இருக்கையில் எவரும் சொந்தச் சாதிக்காரர்களுக்கு எதிராக சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.

சாதியற்ற ஒருவர் வந்து சாட்சியமளித்தால்தான் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமென்றால், அப்படி ஒருவருக்கு எங்கே போவது? சார்பற்ற சாட்சிகள் இல்லை என்று குறைப்பட்டுக்கொள்ளும் நீதிபதியே சார்பற்றவர்தானா? என்ற வினாவும் எழத்தான் செய்யும்.

சாதியச்சம்

நடந்தவற்றை அறிந்த சாட்சிகள் 10 நாள் வரை வெளியில் சொல்லாமலும் காவல் துறைக்குத் தெரிவிக்காமலும் இருந்திருப்பார்கள் என்பதை நீதிபதி நம்ப மறுக்கிறார். தாக்குண்டவர்கள் வெளியில் சொல்லாமலும் காவல்துறைக்குத் தெரிவிக்காமலும் இருந்ததற்கான அதே காரணம் இந்த சாட்சிகளுக்கும் பொருந்தும். அவர்கள் அனைவரும் சேரிக்காரர்கள். ஆதிக்கச் சாதியினரிடம் அஞ்சி வாழவேண்டிய நிலையில் இருப்பவர்கள். சாதிய ஒடுக்குமுறை என்ற ஒன்றையே கண்டுகொள்ள மறுக்கும் நீதிபதியால் இந்த உண்மையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

தாக்குண்டவர்களின் மனைவிமார்கள் தாக்குதலை நேரில் கண்டிருந்தால் அலறிக் கூச்சலிட்டிருப்பார்கள் என்றும், இது குறித்து யாரிடமாவது முறையிட்டிருப்பார்கள் என்றும், தாக்குதல் முடிந்தவுடனே தாக்கப்பட்டவர்களை மருத்துவமனை கொண்டு சென்றிருப்பார்கள் என்றும் கருதும் நீதிபதி இப்படியெல்லாம் நடைபெறாததால் அவர்கள் நிகழ்விடத்தில் இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார். இங்கேயும் காலங்காலமான சாதிய ஒடுக்குமுறையும், நடைபெற்ற நிகழ்வுகளில் அது கோரமாய் வெளிப்பட்டவிதமும் இந்தப் பெண்களின் உள்ளத்தில் எத்தகைய அச்சத்தை விதைத்திருக்க வேண்டும் என்பதை நீதிபதியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஊமைச் சனங்கள் உரக்கப் பேசவில்லை என்பதாலேயே பொய்யர்களாகி விட மாட்டார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல்

புதன், 14 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தொடர்ச்சி)

திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் –  

நீதிபதியிடம் ஒரு கேள்வி

இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்போம். அதற்கு முன் நீதிபதியிடம் ஒரு கேள்வி: இந்த ஏழு குறைபாடுகளையும் மீறித் தானே முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு 323, 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பும் தண்டனையும் கொடுத்துள்ளீர்கள்? முதல் எதிரிக்கும் மற்றவர்களுக்கும் எதிரான பிற குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பதற்கு மட்டும் இந்தக் குறைபாடுகள்(?) எப்படித் தடையாகும்?

தாமதம் ஏன்?

வழக்கிற்குக் காரணமான முதல் நிகழ்ச்சி 2002 மே 20ஆம் நாள் நடைபெற்றது. மே 30ஆம் நாள்தான் முறையீடு தரப்பட்டது. இந்தப் பத்து நாள் தாமதத்திற்கு என்ன காரணம்?

வஞ்சிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கருப்பையா தப்படித்து அறிவிப்புச் செய்துள்ளார். ஆனால் அதற்காக, சுப்பிரமணியனும் மற்றவர்களும் எடுத்த நடவடிக்கை அவரை மிரளச் செய்து விட்டது. மறுநாள் அவர் இலால்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால் காவல்துறைக்குத் தெரியப்படுத்தவில்லை. ஊர் திரும்ப அஞ்சி கிளியனூரில் உள்ள மாமனார் வீட்டுக்குப் போய்விட்டார். ஒரு வாரம் கழித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த செல்வராசு, செல்வம், கொடியரசு, சக்திவேல் ஆகியோர் அவரை அணுகிக் காவல்துறையில் முறையீடு செய்யும்படி அறிவுரை கூறிய போதும் அவர் மறுத்து விட்டார். இரத்தினம், அலெக்குசு, செபசுட்டியன் ஆகிய மூன்று வழக்குரைஞர்கள் அங்கு வந்து அவரைப் பார்த்து, முறையீடு செய்வதற்கு இணங்கச் செய்துள்ளனர். அவரது முறையீட்டை செபசுட் டியன் எழுதி உள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் அம்முறையீடு தரப்பட்டது.

தைரியமூட்டிய விடுதலைச் சிறுத்தைகள்

தாமதத்திற்கான இந்தக் காரணம் இரண்டாம் வழக்கிற்கும் பொருந்தும். சூடு போடப்பட்டு மலம் தின்ன வைக்கப்பட்டதில் முருகேசனும் இராமசாமியும் அச்சத்தாலும் அவமானத்தாலும் ஒடுங்கிப் போய் அவரவர் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கும் செல்லவில்லை. காவல் நிலையத்துக்கும் செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே தாய்மார்கள் அவர்களுக்கு மருத்துவம் செய்தனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களைச் சந்தித்துத் தைரியமூட்டினர். இரத்தினம், அலெக்குசு, செபசுட்டியன் ஆகிய வழக்குரைஞர்கள் அவர்களை வந்து பார்த்து நடந்தவற்றைக் கேட்டனர். அவர்களை செபஸ்டியன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று முறையீடு ஒன்றை அணியப்படுத்தினர். கருப்பையாவோடு கூட அவர்களும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையீடு தந்தனர்.

கருப்பையா, முருகேசன், இராமசாமி ஆகிய மூவரின் முறையீடு குறித்தும் மாவட்ட ஆட்சியர் காவல்துறைக்குத் தெரிவிக்க, காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் இந்த வழக்கில் புலனாய்வு மேற்கொண்டார்.

சரிநிகரான தனிமனிதர்களா?

முறையீடு செய்வதில் ஏற்பட்ட 10 நாள் தாமதத்திற்கான இந்த விளக்கத்தை நீதிபதி இராமமூர்த்தி ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகத்தில் சரிநிகரான தனிமனிதர்களிடையே ஒரு தாக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றிருக்குமானால், அது குறித்து முறையீடு செய்வதில் தாமதம் ஏற்படத் தேவையில்லை. அப்படித் தாமதம் ஏற்படுமானால் அது வேறுவிதமான ஐயங்களுக்கு இட்டுச் சென்று வழக்கையே பாதித்து விடக் கூடும்.

ஆனால் இங்கு தாக்கியவர்கள் ஆதிக்கச் சாதியினர், தாக்கப்பட்டவர்கள் அடிமைச் சாதியினர். அவர்கள் தீண்டாதவர்கள், இவர்கள் தீண்டப்படாதவர்கள். அவர்கள் நிலமுடையவர்கள், இவர்கள் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள், அவர்களைச் சார்ந்து பிழைத்துக் கிடப்பவர்கள். இந்தப் பின்னணியில், தாக்கப்பட்டவர்கள் உடனுக்குடன் முறையீடு செய்திருந்தால்தான் வியப்படைய வேண்டும். தங்களுக்காகப் போராடுகிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் வழக்குரைஞர்களும் தேடிவந்து பார்த்துத் தெளிவும் துணிவும் ஊட்டிய பிறகே அவர்களால் நடந்ததை வெளியில் சொல்லவும் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்யவும் முடிந்தது என்பது முற்றிலும் நம்பத்தக்கதாகவே உள்ளது.

ஆனால் நீதிபதி இராமமூர்த்திக்கோ இது நம்பும்படியானதாக இல்லை. ஏன்? அவர் தன் தீர்ப்பில் எழுதுகிறார்:

“The careful perusal of the evidence of witnesses would show that there was no discrimination prevails in the village. It is also not the case of the prosecution that the village people have been practising untouchability against the SC and ST people in that village.” (தீர்ப்பின் பக்கம் 73).

சாதியை ஒழித்த எழுதுகோல்

இதிலுள்ள ஆங்கில இலக்கணப் பிழையை மன்னித்து விட்டு (தமிழ் தெரிந்த நீதிபதி ஆங்கிலத்தில் தீர்ப்பெழுத வேண்டுமா? என்பது தனிக்கேள்வி) கருத்துப் பிழையை மட்டும் கவனத்தில் கொள்வோம். திண்ணியம் ஊரில் சாதிப் பாகுபாடு ஏதும் இல்லவே இல்லையாம்! இந்த வழக்கில் சாட்சிகள் அளித்துள்ள சாட்சியத்தைக் கவனமாகப் படித்து நீதிபதி இதனைக் கண்டுபிடித்தாராம்! அந்தச் சிற்றூரில் அட்டவணைச் சாதியினர்/அட்டவணைப் பழங் குடியினருக்கு எதிராகத் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக அரசு தரப்பும் சொல்லவில்லையாம்!

திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றச் சமுதாயத்தினரோடு சமமாக நடத்தப்படுகிறார்களாம்! கூட்டாக வாழ்கிறார்களாம் (equal treatment and joint living). தீண்டாமை இம்மியளவும் இல்லவே இல்லையாம்!

நீதிபதி இராமமூர்த்தியின் எழுதுகோல் ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் திண்ணியத்தில் சாதியை ஒழித்து விட்டது! அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். சாதியொழிப்பு வீரர் விருது என்று யாராவது தருவதாய் இருந்தால் அவருக்குத்தான் தர வேண்டும்.

திண்ணியத்தில் தீண்டாமை கிடையாது, சாதிப் பாகுபாடு கிடையாது என்பதற்கு நீதிபதி இராமமூர்த்தி காட்டும் காரணங்கள் என்னவாம்? ஊர்க்கோவிலில் திருவிழா நடைபெறும் போது சாதி இந்துக்களில் ஒருவரும் தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவரும் காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தாக்கப்பட்டவரான கருப்பையா “என்னிடம் வாங்கிய இரண்டாயிரத்தை மீட்டுக் கொடுக்கவில்லை என்றால் காப்புக் கட்டிக் கொள்ள மாட்டேன்” என்று கூறியதாக சாட்சியம் உள்ளது. இதை வைத்து கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் சமத்துவம், சம மரியாதை நிலவுவதாக முடிவு செய்கிறார் நீதிபதி.

(தொடரும்)
தோழர் தியாகுதாழி மடல் 106

செவ்வாய், 13 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 தொடர்ச்சி)

வடவர் வருகையும் தமிழ்நாடும்  5

 தமிழ்நாட்டில் நிருவாகத் தலைவர், அவர்தான் ஆளுநர், ஆளுநர் இரவி! தமிழரல்ல என்பதே முதல் தகுதி! உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக இப்போது ஒரு தமிழர் இருக்கிறார். ஆனால் நிரந்தரமாக ஒரு நீதிபதி வந்தால் தமிழராக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. முகமது இசுமாயில் காலத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எல்லாருமே தமிழர் அல்லாதவர்கள்தான் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும். நீங்கள் கண்ணிற்குத் தெரிகிற ஏழை எளியவர்களை மட்டும் வைத்துக் கொண்டு நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத மேட்டுக்குடி வடநாட்டார் இவர்கள் எல்லாரும் வெளியில் வருவதே இல்லை மகிழுந்தில் கூடக் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு போகிறார்கள் மேலங்கி முழு ஆடையோடு(கோட்டு சூட்டோடு) இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் மக்களிடத்தில் வந்து பேச வேண்டிய தேவையே இல்லை. தமிழ் தெரிந்து கொள்ள வேண்டியதே இல்லை.  

நாங்கள் சிறையில் இருந்த போது சிறைத்துறை தலைவராக ஃகோண்டா(Honda) என்று ஒருவர் இருந்தார். இப்போதும் என்ன சட்டம் என்றால் சிறைத் துறையின் தலைமை அதிகாரி இ.கா.ப. ஆக இருக்க வேண்டும். இந்த இ.கா.ப.  என்பவர் பெரும்பாலும் வடநாட்டுக்காரராக இருப்பார். சிறையில் குறை கேட்க வருவார்கள். அரிசியில் கல் கலக்கிறார்கள்; மோரில் தண்ணீர் கலக்கிறார்கள்; விடுதலை செய்யவில்லை என்றெல்லாம் குறை சொன்னால் என்ன சொல்கிறார்கள் என்று உடன் வருகிற கண்காணிப்பாளரைக் கேட்பார்கள். அவர் மொழிபெயர்த்துத் தலைமை அதிகாரிக்குச் சொல்வார். எல்லாம் சொல்லியதற்குப் பிறகு இந்த ஃகோண்டா சொல்வார் “அச்சா அச்சா” என்று. அவ்வளவுதான், சென்று விடுவார் இந்த அச்சாவிற்கு என்ன மிச்சம், அந்தப் பச்சா இவர் போன பிறகு அடி வாங்குவார்.

 குறை  தீர்ப்பது இருக்கட்டும், குறை கேட்பதற்காகவாவது ஒரு மொழி வேண்டாமா? தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர் ஏதோ ஊழியராக மட்டும்  அல்ல, உயர் அதிகாரியாகக் கூட இருக்கக் கூடாது. எந்தப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. நீதிபதியாக இருக்கக் கூடாது. இதைக் கேட்பதில் என்ன குறை?

உச்ச நீதிமன்றத்தில் ஓய்வு பெற்று விட்டு இன்று மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார் இரஞ்சன் கோகாய். அவர் அன்றைக்கு நீதிபதியாக உட்கார்ந்திருக்கிறார். உபியில் இருந்து ஒரு மாவட்ட நீதிபதி அவர் முன்பு வாதிட்டார். அவருக்கு ஆங்கிலம் சரியாக வராது. “இது உச்ச நீதிமன்றம்  என்று தெரியுமா தெரியாதா? எதற்காக நீங்கள் இந்தியில் பேசுகிறீர்கள்?”  “எனக்குச் சரளமாக ஆங்கிலம் வராது” என்று சொல்லிப் பார்த்தார்.  

அதெல்லாம் கிடையாது உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று சொன்னார் கோகோய்.

ஏன்? என்ன அவசியம் இருக்கிறது?

இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேசுவதற்குச் சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறார்கள். ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எழுதுகிறார். ஒன்றும் நடைபெறவில்லை. மோதி மட்டும் ஊரூராகச் சென்று திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறார். நிதி அமைச்சர் ஔவையார் பாட்டெல்லாம் படிக்கிறார்கள். எங்களுக்கு உள்ளூரில் ஒன்றும் நடைபெறவில்லை. இப்படி நிறைய பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம் தமிழ்நாட்டின் இறைமை என்பதற்கு ஏதாவது பொருள் இருக்குமானால் அது தெளிவாகத் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பை,  தமிழ்நாட்டின் செல்வங்களைத் தமிழ்நாட்டின் இயற்கைச் சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சட்டங்கள் இல்லாமல் செய்ய முடியாது.  

இதே அதானி எங்கே பார்த்தாலும் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். தரவு மையம் (Data Center) என்று சொல்லி இங்கே வந்து தமிழ்நாட்டு அரசோடு பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் ஒப்பந்தம் போடுகிறார். துறைமுக ஒப்பந்தம், விமான நிலைய ஒப்பந்தம், இன்னும் பற்பல ஒப்பந்தங்கள்! நாங்கள் கேட்கிறோம்: தமிழ்நாடு அரசு இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நீக்கம் செய்ய வேண்டும், கிழித்தெறிய வேண்டும். தோழமைக் கட்சிகள் இந்தக் கோரிக்கையை வைக்க வேண்டும். அதானிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? நாடாளுமன்றத்தில் அதானியை எதிர்த்து அருமையாகப்  பேசுகிறீர்கள்! கடுமையாகப் பேசுகிறீர்கள்! உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானியுடன் இருக்கும் ஒப்பந்தங்களைக் கிழித்தெறிய வேண்டும். தமிழ்நாடு அரசிற்கு இந்த உரிமை இருக்கிறது.

உபி மாநில அரசினர் நீக்கி விட்டார்கள், தெரியுமா? மின்சாரத்தை அளக்கத் திறன்மானி(Smart meter)  ஒப்பந்தம் போட்டு இருந்தார்கள். யோகி ஆதித்தியநாத்து அதை நீக்கி விட்டார். உன்னோடு ஒப்பந்தம் கிடையாது என்று சொல்லி விட்டார்கள். 

 இப்போது நாம் தமிழ்நாட்டு மக்களுடைய தன்மானம், தமிழ்நாட்டு மக்களுடைய தன்னாட்சி, தமிழ்நாட்டு மக்களுடைய தன்னுரிமை  என்ற அடிப்படையில் அடிப்படைச் சட்டங்களுக்கான கோரிக்கைகள் முன்வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் போராட வேண்டும். அது இல்லாமல் நாமாக இந்தச் சிக்கலை மேலெழுந்த வாரியாக, வடவர் வருகை என்று மட்டும் பார்த்துத் தீர்த்து விட முடியாது. வடவர் வருகை என்பது அவர்களை அடித்தளமாக கொண்டு ஓர் ஆதிக்கம், ஒரு விரிவாதிக்கம் செயல்படுவதைக் குறிக்கும். அது ஓர் ஆட்சியின் வன்பரவல். அதனை எதிர்த்துப் போராடுவதில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உங்கள் அனைவரோடும் இணைந்து நிற்கும்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்