நாள்: 20.04.2011. இடம்: வாணிமகால், சென்னை.
தியாகபிரம்ம கான சபா,கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னை கம்பன் கழகம் இணைந்து செய்த ஏற்பாடு.
சொற்பொழிவு ஆற்றியவர் முனைவர் மறைமலை இலக்குவனார்.
வெகுநாட்களாக எனக்குள் ஓர் ஆதங்கம் இருந்துகொண்டே இருந்தது. சின்னவயதில் அவ்வையின் ஆத்திசூடியைப் படித்திருந்தாலும் வயது ஆக ஆக அது “அவ்வை பாடியது குழந்தைகளுக்கு அல்ல. அது முற்றிலும் பெரியோர்களுக்கே , அதாவது வயது வந்தவர்களுக்கே” என்பதுதான். அண்மையில் சென்னையில் வாணிமகாலில் “எண்ணெழுத்திகழேல்” என்ற ஒற்றைத்தொடரைப்பற்றி முனைவர் மறைமலை இலக்குவனார் பேசியபோது தொடக்கத்திலேயே குறிப்பிட்டார் “ஆத்திசூடி” குழந்தைகளுக்குப் பாடப்பட்டதல்ல என்றார்.
அண்மையில் நடைபெற்றிருக்கிற; நடைபெற்றுவருகிற நிகழ்வுகளைப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் ஒன்றைப் பொருத்திப்பார்க்கலாம் என்றார்.
இராஜபக்சே யைப்பார்த்து ‘ஈவது விலக்கேல்’, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பார்த்து ‘அறம்செய விரும்பு’, இந்தியாவைப் பார்த்து ‘இயல்வது கரவேல்’ , ஒபாமாவைப் பார்த்து ’ஆறுவது சினம்’ என்று சொன்னது போலவே இருக்கும் என்று தொடங்கினார்.
அவ்வையின் கருத்துகள் இப்பொழுதுதான் நாட்டுக்குத் தேவை என்றார். எனக்குள் இருந்த அந்த நீண்டநாள் ஆதங்கம் அப்பொழுதே அகன்றது. அவ்வையின் ஒரு சொற்றொடருக்கு ஒருமணி நேரத்துக்கும் மேலாகப் பேச முடியும் என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
டாக்டர் மறைமலை தம் பரந்த அறிவால்,பட்டறிவால், ஆழ்ந்த வாசிப்பால் பெற்ற சிந்தனைகளை மென்மையாக; தன்மையாக; உண்மை கலந்து ஊட்டினார்.
அவ்வையார் எத்தனைபேர் என்பதில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் ஆத்திசூடி பாடிய அவ்வை கி.பி.15-16 தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆனால், அதியமான் காலத்து அவ்வைதான் முதன்முதலில் போரைத் தடுத்த தூதர். அதுவும் பெண் தூதர் என்றார்.
செம்மொழிச் சிறப்புடைய எந்தச் செம்மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்குண்டு.அதாவது சங்ககாலத்திலேயே 43 பெண்பாற்புலவர்கள் பாடல் புனைந்திருக்கிறார்கள். இப்படி எடுத்துக்காட்டு எந்தமொழியிலும் இல்லை.தமிழுக்குத்தான் உண்டு என்று சுட்டினார்.
முனைவர் மறைமலை இலக்குவனார், மீள்வாசிப்பு, மறுவாசிப்பு என்ற பெயரில் தமிழுக்கு இழுக்கு ஏற்படுத்த பலர் பல முயற்சிகளைச் செய்கிறார்கள்.கணினிக்குப் பொருந்தாத தமிழ் என்று சீர்திருத்தம் செய்ய வந்ததையும், தமிழ் எழுத்துகளை மாற்ற வந்ததையும் வருத்தத்தோடு குறிப்பிட்டார். அப்படி நடந்த மாற்றத்தைச் சாடி தன்னுடைய இளவல் திருவள்ளுவர் கண்டித்து எழுதியதையும், அவ்வையார் கூற்றுப்படி எண்ணெழுத்திகழேல் என்று கண்டித்ததையும் எடுத்துசொல்லி, ஒரு மொழியின் எழுத்தை இகழக்கூடாது .அது சட்டப்படி குற்றம் என்பதையும் குறிப்பிட்டார்.
சங்ககால அவ்வை அதியமான் இறந்தபோது பாடிய கையறுநிலைப்பாடல் மிகச்சிறப்புடைய பாடல். அந்தப் பாடலில் ‘கள்’ என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது.கள் என்பது அந்தக் காலத்தில் காபி போன்றது என்றார். அதில் நகைச்சுவை மறைந்திருந்தது. அதியமான் மீது பாய்ந்த வேல் விருந்தோம்பல் மீது பாய்ந்த வேல். கொடைமீது பாய்ந்தவேல் என்று அவ்வைக் குறிப்பிட்டதைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு அரசு அதிகாரி ( போக்குவரவு துறை அதிகாரி) எட்டு என்று கூட்டு எண் வராமல் வாகனங்களுக்கு எண் வழங்க ஆணை பிறப்பித்தார். ஏனென்றால், அது சனியின் எண். மூடநம்பிக்கை இப்படி வளர்ந்த அவலத்தைப் பார்த்தும் ‘எண்ணெழுத்திகழேல்’ என்றும் பாடியிருக்கலாம் என்றார் முனைவர்.
சைவ வைணவ மோதலைத் தடுக்கவும் அவ்வை எண்ணெழுத்திகழேல் என்று பாடியிருக்கலாம். எண் என்பது அறிவியல்தாய்.
எழுத்தென்பது மானுடவியல் .இலக்கணம் இல்லாமல் B.A. படிக்கும் நிலை அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க இந்தியாவிலிருந்து அதிகம் செல்கிறார்கள் என்ற செய்தியும் முனைவர் மறைமலையின் பேச்சின் ஊடே கிடைத்தது.
இந்தியாவில் ஆங்கிலம், அரபு ஆதிக்கம் செலுத்தியபோது ஆங்கிலத்தை கோனெழுத்து என்றும், அரபைக் கோழி எழுத்து என்றும் கேலி பேசினார்கள். அவர்களைப் பார்த்தும் எண்ணெழுத்திகழேல் என்று பாடியிருக்கலாம்.
அவ்வையின் சிறப்பைப் பற்றி ஒரு கதை சொல்லப்பட்டது.
வடக்கேயும் அவ்வைக்கதை உண்டு. அங்கேயும் அவ்வையின் சிறப்பு பரவியிருக்கிறது என்று குறிப்பிடவந்த பேராசிரியர் ஒரு கதையின்வழி எடுத்துரைத்தார். அதாவது நாரதர் ஐந்திரம் என்ற இலக்கணநூல் எழுதியதற்கு இந்திரனுக்குப் பரிசுதர முன்வருகிறார். அதற்கு இந்திரன் அதெப்படிச் சரியாகும். கலைமகளுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்கிறான். கலைமகளோ நான்முகனுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்கிறாள். நான்முகனோ திருமாலுக்கே செல்லவேண்டும் என்கிறான். திருமாலோ சக்தி இல்லாமல் எதுவும் இல்லை என்கிறார். பராசக்தியோ சிவம் இல்லாமல் சக்தியில்லை என்கிறாள். சிவனோ, அது குமரன் முருகனுக்கே உரியது என்கிறான்.முருகனோ விநாயகனுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்கிறார். விநாயகனோ என்னைப்பாடி பாட்டெழுதும் அவ்வைக்கே பரிசு என முடிவு செய்யப்படும் கதையை விளக்கி அவ்வையின் சிறப்பை எடுத்துக்கூறினார்.
எதுவும் ஒன்றோடொன்று சார்ந்திருக்கிறது என்பதைக் குறிக்கத்தான் இந்தக்கதையும்கூட. இதைத்தான் பாரதி அறிவொன்றே தெய்வம் என்றான்.அறிவு என்பது அறியாமையைச் சார்ந்தது. இது பற்றி இன்னும் விவாதிக்கவேண்டும். எந்தக் கூற்றையும் பேசுபவன், கேட்பவன், சூழ்நிலை வைத்தே முடிவு செய்யவேண்டும். அவ்வையின் ‘எண்ணெழுத்திகழேல்’ என்ற கூற்றையும் இவை வைத்தே முடிவு செய்யவேண்டும். ஏனெனில் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஏற்பது இகழ்ச்சி என்று பாடியதற்கும் அப்படிக் காரணங்கள் உண்டு. நாட்டுப்பற்று உணர்வு குன்றியிருந்தகாலம். சமயப்பொறை தேவைப்பட்டது. அதனால்தான், போர்த்தொழில் புரியேல் என்று பாடியிருக்கவேண்டும்.
இப்படி மறைமலை இலக்குவனார் ஆழ்ந்த கருத்துகளை அமைதியாக நெஞ்சில் பதியவைத்தார்.
வாழும் கவிஞர்களை வாழும்போதே போற்றிவரும் பேராசிரியர் மறைமலை, மறைந்தும் மறையாது வாழும் அவ்வைப்பற்றி சிறப்புரை ஆற்றி அனைவரையும் சிந்திக்க வைத்தார். ஒரு சொற்றொடரை வைத்துக்கொண்டு ஒருமணி நேரமா? வியப்பாக இருந்தது.
கிருஷ்ணா சுவீட்ஸ் ஆதரவில் நடைபெற்றாலும் சுவையாகவும் பயனுடையதாகவும் அமைந்தது மறைமலை இலக்குவனாரின் பேச்சு.
விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம் .வீரப்பன் , இலக்கியவீதி இனியவன். புதுகைத்தென்றல் ஆசிரியர் தர்மராஜன், கவிஞர் மலர்மன்னன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது; மனமும் நிறைவடைந்தது.