(தோழர் தியாகு எழுதுகிறார் 232 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 7 தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)
காதை 8
என் பெயர் (உ)ரோசி கிப்புகென். குக்கி இனம். அகவை 70. என் மகள் மேரி மெய்த்தி இனத்தவரான சேக்கப்பு சிங்கு என்பவரை மணந்து கொண்டாள். மெய்த்திகளுக்கும் குக்கிகளுக்குமான இன மோதலின் மையப் புள்ளியாக விளங்கிய சூரசந்த்துபூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் குடிசை வீட்டில் தனியாக இருக்கிறேன்.
குடும்பத்தில் மற்றவர்கள் உயிருக்கஞ்சி வெளியேறிப் போய் முகாம்களில் இருக்கின்றனர். யார் எங்கே எப்படி இருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ள எனக்குள்ள ஒரே வழி நான் வைத்திருக்கும் குடும்ப நடைபேசி(‘வாக்கிடாக்கி’) ஒன்றுதான். தொலைப்பேசி சரிவர இயங்கவில்லை. மே 3ஆம் நாள் கலகத்துக்குப் பின் இணையம் தடை செய்யப்பட்டு விட்டது.
பல நாள் மௌனத்துக்குப் பின் மே 30ஆம் நாள்தான் நடைபேசி(‘வாக்கிடாக்கி’) ஒலியெழுப்பியது. மருமகன் நடுக்கத்துடன் பேசினார். கிழக்கு இம்பாலுக்கு வெளியே ஒரு சிற்றூரிலிருந்து ஓடிப்போய் கும்பியில் மெய்த்தி துயர்தணிப்பு முகாம் ஒன்றில் அவர்கள் தஞ்சமடைந்திருந்தனர். மேரி யார் என்ற ஐயம் மெய்த்திகளுக்கு வளர்ந்து வருவதாக அவர் சொன்னார்.
என் பேரன் “பாபா! பாபா!” என்று கதறுவதை என்னால் கேட்க முடிந்தது. மணிப்பூர் காவல்துறையின் அதிரடியினர்(காமாண்டோ) வந்திருப்பதாகச் சேக்கப்பு சொன்னார். “அவர்கள் உங்களைத்தான் தேடுகிறார்கள்” என்றார். பேசிக் கொண்டிருக்கும் போதே தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மீண்டும் தொடர்பு கிடைத்த போது மகள் மேரியின் அலறல் கேட்டது. “அப்படிச் செய்யாதீர்கள், என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சிக் கதறிக் கொண்டிருந்தாள்.
இரவு என்ன நடந்தது என்பதை மறுநாள் காலை குடும்பத்தினர் அனைவருக்கும் சேக்கப் அறியத் தந்தார். இரவு 9.30 அளவில் கமாண்டோ சேக்கப்பிடம் “உன் மனைவி எங்கே?” என்று கேட்டாராம். அரண்டு போய் இதோ என்று காட்டினாராம்.
அதிரடி(கமாண்டோ)ப் படையினர் அவள் மறுக்க மறுக்க அவளைப் பிடித்துப் போய் விட்டார்கள். அவளைத் தனிமையான ஓரிடத்துக்கு இழுத்துப் போனார்கள். இதன் பிறகு அவள் பிணம்தான் கிடைத்தது. சான்டேல் மாவட்டத்தில் சுக்குனுவுக்கும் (இ)லாங்கிங்குசின்னுக்கும் இடையே ஆடையில்லாத உடல் கிடந்தது. மணிப்பூரில் சவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தின் பிணவறையில் மேரியின் உடல் இருப்பதாகச் சேக்கப்பு சொன்னார்.
மேரி கொலை செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் பதிந்த முதல் தகவல் அறிக்கையில் உள்ளது. ஆனால் (காமாண்டோ) அதிரடிப் படையினர் அவளை வல்லுறவு செய்து கொன்றதாகச் சேக்கப்பு சொல்கிறார். ஆனால் இந்தச் செய்திக்குப் பின் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
என் மகள் செத்திருக்க முடியாது என்றுதான் நம்புகிறேன். ஒரு பெண்ணிடம் இந்த மனிதர்களால் எப்படி இவ்வளவு மிருகத்தனமாக நடந்து கொள்ள முடியும்?
காதை 9
என் பெயர் நான்சி சோங்குலாய். என் மகள் (உ)ரோசி சோங்குலாய். மே 5ஆம் நாள் இம்பாலில் வண்டி(கார்) கழுவுமிடத்தில் ஆண்களும் பெண்களுமடங்கிய ஒரு வன்முறைக் கும்பலால் தாக்கபப்ட்ட குக்கி-சோமி இனப்பெண்கள் இருவரில் என் மகளும் ஒருத்தி.
(உ)ரோசியுடன் பணி செய்யும் தோழி ஒருத்திதான் எங்கள் குடும்பத்துக்குத் தகவல் கொடுத்தாள். இந்த இரு பெண்களையும் மெய்த்தி இனப் பெண்கள்தாம் பிடித்து மெய்த்தி ஆண்களிடம் ஒப்படைத்தார்கள் என்று அவள் தெரிவித்தாள். அன்று மாலையே அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டார்கள்.
இந்தப் பெண்களின் மிருகத்தனத்தை நினைத்தால்தான் எனக்குப் பேரதிர்ச்சியாகவும் பெருங்கவலையாகவும் உள்ளது. இந்தப் பெண்களால் இரண்டு இளம்பெண்களை வெறிகொண்ட ஆண்கள் கூட்டத்திடம் ஒப்படைக்க முடிந்தது எப்படி? குக்கி-சோமி, மெய்த்தி யாராய் இருந்தால் என்ன. பெண்களே பெண்களுக்கு இதை எப்படிச் செய்யலாம்?
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 264