சனி, 14 ஜனவரி, 2023

தமிழர் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து,

 அகரமுதல




01.01.2054  / 15.01.2023

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா

திருவள்ளுவர் புத்தாண்டு

வாழ்த்து

அகரமுதல படைப்பாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும்  தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவிக்கிறோம்.   

இந்து சமயம் உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் பொங்கல் நாளினை இந்து சமய விழா என்பது தவறு.

திராவிடம் என்னும் சொல் உருவாவதற்கு முன்னரே கொண்டாடப்பட்டு வந்த பொங்கல் நாளினைத் திராவிடத்திருநாள் என்பதும் தவறு.

தமிழ்மொழிஇனக் குடும்பத்தினர் பகுதிகளில் தமிழ்மொழிஇனக் குடும்ப விழா என்று கொண்டாடுவோம்!

பொங்கல் விழா தமிழர் திருநாளே!

உலகெங்கும் உள்ள தமிழர்களும்  தமிழ் நிலங்களில் உள்ள பிற மொழியினரும் தமிழர் திருநாளைத் தத்தம் திருநாள் எனக் கருதி மகிழ்ந்து கொண்டாடட்டும்!

தமிழர்களிடையேயும் தமிழர்களுக்கும் பிற இனத்தவருக்கும் இடையேயும் ஒற்றுமை நிலவட்டும்!

மஞ்சு விரட்டு, காளை பிடித்தல், சல்லிக்கட்டு என்றெல்லாம் சொல்லப்படுகின்ற ஏறு தழுவுதல் நிகழ்ச்சியில் காளைகளுக்கும் காளையனைய வீரர்களுக்கும் ஊறு நேராமல் பாதுகாப்பாக நடந்து களிக்க வேண்டுகிறோம்.

தமிழும் தமிழரும் முழு உரிமையுடன் திகழ்ந்து உயர்வுற வாழ்த்துகிறோம்!

போக்கி விழா, பொங்கல் விழா, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் புத்தாண்டு ஆகியவற்றைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ வாழ்த்துகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – மின்னிதழ்

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் – தொடர்ச்சி)

அனல் கீழ் பனித் திரள்

 காலநிலை மாற்றம் தொடர்பான தரப்புகளின் மாநாடு –27 (கொப்27) எகித்தில் நடந்து முடிந்துள்ளது. கொப்27 (COP27)  மாநாட்டில் ஐநா பொதுச் செயலர் அந்தோணியோ குத்தரசு ஆற்றிய உரையை — நரகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையை — சென்ற மடலில் மேற்கோளாகக் கொடுத்திருந்தேன். மாநாட்டின் உருப்படியான விளைவு என்பது காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வின் வளர்ச்சிதான்.

காலநிலை மாற்றம் என்பது கற்பிதமன்று, அறிவியல் புனைகதையன்று. அஃது அறிவியல் அடிப்படையிலானது. அறிவியலின் துணைகொண்டுதான் அதை வெல்லவும் கூடும். இந்த அறிவியல் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது இம்மாநாட்டில் வெள்ளிடை மலையாக ஒளிர்ந்தது.
இஃது அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மை: ஏடேறிய வரலாற்றில் கடந்த ஏழாண்டுக் காலம் போல் ஒரு வெப்பக் காலம் கண்டதே இல்லை.
ஐரோப்பாக் கண்டத்தின் கொடுங்குளிர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
1998ஆம் ஆண்டு ஐரோப்பியப் பயணம் முடித்து விட்டு வந்து “உறைபனிக் காட்டில் ஈழ நெருப்புடன்” என்ற தலைப்பில் எழுதினேன். அஃது உறைபனிக் காடேதான்! குருதியுறையும் குளிர்! அதே ஐரோப்பாவில் இப்போது ஆண்டுதோறும் வெப்ப அலை வீசுகிறது! பிரான்சிலும் இத்தாலியிலும் பெரிய ஓடைகளும் ஆறுகளும் வற்றிப் போய், வரலாறு காணாத கடும் வறட்சி! மறுபுறம் பருவம் தவறிப் பேய் மழை கொட்டி, வெள்ளப் பெருக்கு!
செருமனியைத் தாக்கிய மழை வெள்ளத்துக்குக் காலநிலை மாற்றம்தான் காரணம் என்று அப்போதைய அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஏஞ்சலா மெர்கெல் சுட்டிக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம் தொடர்பான பல்லரசுக் குழு கடைசியாகக் கொடுத்துள்ள அறிக்கை அறிவியல் அடிப்படையில் தந்துள்ள முகன்மையான எச்சரிக்கைகள்: நிரலளவு (சராசரி) புவி வெப்பநிலை 1.5 முதல் 3 பாகை செல்சியசு உயருமானால், நிலம்வாழ் உயிரினங்கள் அழியும் வேகம் கிட்டத்தட்ட இரு மடங்காகும். கடுமையான வெள்ளப் பெருக்கின் இடர் நான்கு மடங்காகும்.

இதை விடவும் ஆபத்தான செய்தி; புவிக் கோளத்தின் இரு துருவப் பகுதிகளிலும் பனி உருகி வருவதாகும். இது குறித்து நாசா திரட்டியுள்ள தரவுகள் இவை: 1970களின் பிற்பகுதி தொடக்கம் ஆர்க்டிக் கடலில் பத்தாண்டுக்கு 13 விழுக்காடு என்ற வேகத்தில் பனி உருகி வருகிறது. அன்டார்ட்டிகா கடலை மூடியுள்ள பனித் தகடுகள் ஆண்டுதோறும் நிரலளவாக 150 பில்லியன் டன் பனியை இழந்து வருகின்றன. இதையெல்லாம் அறிவியலின் துணைகொண்டு கணித்துச் சொல்லும் நாசா இருக்கும் அமெரிக்காவில்தான் காலநிலை மாற்றத்துக்குக் காரணமான காரியங்களும் ஆகப் பெருமளவில் நடக்கின்றன. இது முரண்பாடுதான்! இந்த முரண்பாடுதான் முதலாண்மையத்தின் அச்சாணி! உழைக்கும் மக்களைச் சுரண்டினால் போதாது! இயற்கையையும் சுரண்ட வேண்டும்!  ஒடுக்குண்ட தேசங்களைக் கொள்ளையிட்டால் போதாது! புவிக் கோளத்தையும் பேரண்டத்தையுமே கொள்ளையிட வேண்டும்! இப்படிச் செய்தால்தான் அமெரிக்கா தலைசிறந்த நாடாக முடியும். அமெரிக்காவைத் தலைசிறந்த நாடாக்குவோம் (MAKE AMERICA GREAT) என்ற முழக்கத்தோடு இதோ வந்து விட்டார் சூப்பர்மேன் டொனால்டு துரும்ப்பு! காலநிலை மாற்றம் என்பதெல்லாம் அமெரிக்காவைத் தாழ்த்தும் சூழ்ச்சி என்று சொல்லி, பாரிசு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாரே, அதே துரும்ப்பு!

துவாலுவும் மாலத் தீவுகளும் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியும், எந்த நாடும் காலநிலை மாற்றத்தின் சூறைத் தாக்கிலிருந்து தப்ப முடியாது. இது அறிவியல் தரவுகள் சொல்லும் உண்மை. உலகம் அழியப் போகிறது என்பது மதம் பரப்புவோரின்  கட்டுக் கதையன்று! அறிவியல் பேருண்மை! முடிந்தால் பிழைத்துக் கொள் என்னும் கடைசி எச்சரிக்கை!

அப்படியானால் புரட்சி? குடியாட்சிய  அல்லது குமுகியப் புரட்சி (சனநாயகப் புரட்சி  அல்லது சோசலிசப் புரட்சி)? தேசிய விடுதலைப் புரட்சி? எல்லாம் அவ்வளவுதானா? அன்பர் சத்திய நாராயணன் எழுப்பும் வினாவுக்கு என்ன விடை? பார்ப்போம்,

தரவு:தாழி மடல் (13)

தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள்

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு – தொடர்ச்சி)

ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள்

துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தின் விளைவாக அழிவின் விளிம்பில் நிற்கும் மற்ற நாடுகள் எவை? தாழி அன்பர்களின் இந்தக் கவலைதோய்ந்த வினவலுக்கு, பொதுவாக பசிபிக்கு தீவுகள், ஆனால் அவை மட்டுமல்ல என்று விடையிறுக்கலாம்.

மேலும் துல்லியமாக மாலத்தீவுகள் உள்ளிட்ட சில நாடுகளை ஐநா அமைப்பின் காலநிலை வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

1900க்குப் பின் நாளது வரை கடல்மட்டம் 15 – 25 கீழ் நூறன் கோல்(centimeter) (6 முதல் 10 அங்குலம்) உயர்ந்துள்ளது. உயரும் வேகம், குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளில், கூடிய வண்ணமுள்ளது. இதே போக்கு தொடருமானால்,  இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் 39 அங்குலம், சற்றொப்ப ஒரு கோல்(metre) உயரும். பசிபிக்கு பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் இரைந்து கிடக்கும் தீவுகளுக்கு இது பேரிடராக முடியும்.

முன்பே சொன்னேன், அப்படியே திடீரென்று ஒரு நாள் மூழ்கிப் போவதன்று துயரம். கடல் மட்டம் உயர உயரப் புயல் மழை, கடல் கொந்தளிப்பு எல்லாம் அடிக்கடி தாக்கும், கடல்நீர் உட்புகுந்து நீர் நிலைகளை உப்பாக்கும், நிலத்தடி நீரும் உப்புநீராகி விடும். நீரின்றி அமையாதுலகு. நன்னீர் இல்லாமல் மனிதர்கள் அந்தத் தீவுக் கூட்டங்களில் வாழ முடியாத நிலை ஏற்படும், கடலில் மூழ்குவது பிறகுதான்!    

காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா பல்லரசுக் குழு எடுத்துக்காட்டியுள்ள ஆய்வின்படி,  2100க்குள்ளேயே ஐந்து நாடுகள் வாழத் தகாதவை ஆகி விடக் கூடும். மாலத்தீவுகள், துவாலு, மார்சல் தீவுகள், நௌரு, கிரிபத்தி ஆகிய இந்த ஐந்து நாடுகளிலிருந்தும் ஆறு நூறாயிரம் பேர் காலநிலை ஏதிலியராக வெளியேற நேரிடும்.

இந்த உலகின் நாடற்றோர் கூட்டத்தில் — சிறைச்சாலையில் மனிதர்களை வரவு செலவு என்று கணக்கிடுவது போல் — புதிய வரவுகளாக இவர்களையும் சேர்த்து விட வேண்டியதுதான்! 

2100 வரும் போது நான் இருக்க மாட்டேன். உங்களில் பலரும் இருக்கப் போவதில்லை. ஆனால் நம் பெயரன்களும் பெயர்த்திகளும் கொள்ளு எள்ளுகளும் இருப்பார்கள் அல்லவா? அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமல்லவா?

சில காலம் முன்பு ஒரு செய்தி படித்தேன்: இளம் இணையர் சிலர் “குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று உறுதியாக அறிவித்திருந்தார்கள். ஏனாம்? காலநிலை மாற்றத்தால் கெட்டழியப் போகும் உலகில் எங்கள் குழந்தைகள் தவிப்பதை விரும்பவில்லை என்று கூறியிருந்தார்கள்.

ஈராண்டு முன்பு கனடாவிலிருந்து என்னைக் காண வந்திருந்த இளைஞர் ஒருவர் கடுஞ்சினத்துடன் பேசினார்: “இந்த மனிதர்கள் அழியட்டும் தோழர்! அப்போதும் உலகம் அழியாது, இயற்கை மிச்சப்படும். புதிதாக உயிர்களின் தோற்றம் நிகழாமற்போகாது. படிநிலை வளர்ச்சியினால் புதிய மனிதர்கள் மீண்டும் தோன்றினால் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள்.”

நிலைமை எவ்வளவு கவலைக்குரியது என்று உங்களுக்குப் புரிகிறதா?

ஐந்து நாடுகளோ அல்லது வெறும் ஐந்து ஊர்களோ அவை அழிந்த பிறகுதான் மாந்தக் குலம் விழிக்குமா? நாட்டு நலனுக்காக ஒரு மாநிலமும் மாநில நலனுக்காக ஒருசில ஊர்களும் அழிந்தால் தவறில்லை என்பது போல் உலக நலனுக்காக ஐந்து நாடுகள் அழிந்தால் தவறில்லை என்று வேதாந்தம் பேசுமா?

இதில் ஒரு சிக்கல்: அழிவின் சறுக்கல் அந்த ஐந்து நாடுகளோடு நில்லாது. அது மென்மேலும் உந்தம் பெற்று பிறகு மீண்டு வர முடியாத நிலை ஏற்படும். விழித்துக் கொள்வதென்றால், பிறகல்ல, இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும்.

போரினால் உலக நிலவரையிலிருந்து காணாமல் போன நாடுகள் உண்டு. ஆனால் ஏடறிந்த வரலாற்றில் இயற்கைச் செயல்வழியால் அடியோடு துடைத்தழிக்கப்பட்ட நாடுகள் இல்லை.

இது துவாலுவின் துயரம் மட்டுமல்ல, ஐந்து நாடுகளின் துயரம் மட்டுமல்ல, மாந்தக் குலத்தின் துயரம்! இன்றளவும் தவிர்க்க வியலாத துயரமன்று! வெல்லக் கூடிய இடர்தான்!

எகித்து நாட்டில் நடந்து வரும் 27ஆம் காலநிலை மாற்ற மாநாட்டில் ஐநா பொதுச்செயலர் அந்தோணியோ குத்தரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை உண்மயானது:

“மனித இனம் நரகத்தை நோக்கிய நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருகிறது. நாம் உடனடியாகக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்க வில்லையென்றால் ஏற்படப்போகும் கொடுந்தாக்கங்களை சரிசெய்ய முடியாது. அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் அனைத்து நாடுகளும் அழிய வேண்டியதுதான். இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்ந்தெடுக்க முடியும்.” 

“மானிட சமுத்திரம் நானென்று கூவு!” — இது பாவேந்தர் அழைப்பு. சமுத்திர மானிடம் ஆவதற்குள்ளாக உங்கள் அழைப்புக்கு வினையாற்ற வேண்டும் என நினைக்கிறோம்.

தரவு: தாழி மடல் (12)

வியாழன், 12 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு

 அகரமுதல





(தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று – தொடர்ச்சி)

பசிபிக்கு தவிப்பு

துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில் இருக்கும் மற்ற தீவுகள்பற்றித் தோழர் கதிரவன் கேட்டிருந்தார். பலருக்கும் அதே கேள்வி உண்டு. ஒரு வகையில் பார்த்தால் இந்தப் புவிக் கோளமே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில்தான் உள்ளது. முன்னால் யார், பின்னால் யார் என்பதில்தான் வேறுபாடு. மேலும் கடலுக்குள் மூழ்கிப் போவது மட்டும்தான் கேடு என்பதில்லை. வேறு பல கேடுகளும் நம்மைச் சூழ்ந்துள்ளன. கடலுக்குள் மூழ்கிப் போவது என்ற கடைக்கோடி இடர்நிலையில் துவாலுவைப் போலவே பசிபிக் தீவுகள் பலவும் அழிவின் விளிம்பில் உள்ளன.


பசிபிக்கு தீவுகள் 25 ஆயிரத்துக்கு மேல் உள்ளன. புவிப்பரப்பில் சற்றொப்ப 15 விழுக்காடு. மக்கள் தொகை ஒப்பளவில் குறைவுதான். 2.3 பேராயிரம், அஃதாவது 23 நூறாயிரம், கால் கோடிக்கும் கீழே. இதில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சார்ந்த தீவுகளில் மட்டும் 17 நூறாயிரம் மக்கள் வாழ்கிறார்கள்.


பசிபிக்கு தீவுகள் பல்வகைப்பட்ட சூழலியல் அமைப்புகள் கொண்டவை. பவழப் பாறைகளும் அந்தப் பாறைகளின் இடுக்குகளில் இழைந்து கிடக்கும் மீன்களும், பளிங்கு போல் தெளிந்த நீல நிற நீர்ப்பரப்பும்! கடலடித் தரையில் புல் மேயும் ஆமைகள்! பின்னிக் கிடக்கும் அலையாற்றி (மாங்குரோவு) வேர்களில் மறைந்து வாழும் சின்னஞ்சிறு மீன்களும் நண்டுகளும்! கடலோர வெள்ளி மணற்பரப்பில் காற்றசைப்புக்குத் தலையாட்டும் நெடியர்ந்த தென்னை வரிசைகள்! வான்பரப்பில் பறந்து திரியும் வெப்பமண்டலப் பறவைக் கூட்டம்! வெள்ளுடைத் தேவதைகளாகச் சிறகடிக்கும் கடற்பறவைகள்!


மெலனேசியா, பொலினேசியா, மைக்குரொனேசியா என்று பண்பாட்டு வகையில் மூவேறு குழுக்களாகப் பிரித்தறியப்படும் பசிபிக்கு தீவுகள் காலநிலை மாற்ற இடர்நிலையில் இப்போது ஒரே குழுவாக முன்னுக்கு நிற்கின்றன. இந்தத் தீவுகளில் வதியும் மக்கள் சற்றொப்ப 3,500 ஆண்டுகளுக்கு மேலாகக் கடல்சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து வருவது வரலாற்றில் அறியப்பட்டுள்ளது. இந்தத் தீவுகள் அனைத்தும் தமிழ் மரபுப்படி சொல்வதானால் பெரும்பாலும் நெய்தல் திணைக்குரியவை எனலாம்.
இம்மக்களின் உணவு, உடை, உறைவிடம் மட்டுமல்ல, கலைகளும் கதைகளும் கூடக் கடல்சார்ந்தவையே. கடல் சாடும் வீரக்கதைகள் இவர்களது பாரம்பரியத்தின் பதிவுகள். அவர்களது அளப்பரிய கடலறிவு இப்போது காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவில் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.


பசிபிக்கு தீவுகளில் வாழும் மக்களுக்குக் காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கும் காரணிகளில் குறிப்பிடத்தக்க எந்தப் பங்கும் இல்லை. ஆனால் அதன் தீய விளைவுகளுக்கு முகங்கொடுக்கும் முன்வரிசையில் நிற்பது அவர்கள்தாம். கடல்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 5,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது உயர்ந்து கொண்டிருக்கிறது. நிரலளவு (சராசரி) பசிபிக்கு கடல்மட்டம் இந்த நூற்றாண்டில் அரைவாசி முடிவதற்குள் 25 முதல் 58 கீழ் நூறன் பேரடி(centimetre) உயரும் என்று அஞ்சப்படுகிறது. கடல் மட்டத்திலோ அதற்குச் சற்று மேலேயோ இருக்கும் தீவுகளுக்கு இது பெருங்கேடாய் முடியும். துவாலு போன்ற சில நாடுகள் உலக நிலவரையிலிருந்தே காணாமற்போகலாம்.


புவிவெப்பம் தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த அளவுக்கு மேல் 2 பாகை செல்சியசு உயர்ந்தால் என்னாகும்? இப்போது போகிற போக்கைப் பார்த்தால் இந்த உயர்வு ஏற்படத்தான் செய்யும் எனத் தோன்றுகிறது. அப்படி நேர்ந்தால் பசிபிக்கு தீவுகளையொட்டிப் படர்ந்து கிடக்கும் பவழப்பாறைகளில் 90 விழுக்காடு கடுமையாகத் தாக்குறும். இந்த உயிர்ச்சூழலை நத்தியிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் அழியக் கூடிய நிலை ஏற்படும்.


பசிபிக்கு தீவுக் கூட்டங்களின் வாழ்வு நிலையற்றதாகும் எதிர்காலத்தைக் கணிப்பாய்வு செய்யும் முயற்சியில் அறிவியலர் ஈடுபட்டுள்ளனர். மனோவாவில் இருக்கும் அவாய்(Hawaii) பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களாக இருக்கும் ஔனானி கேன், சார்லசு பிளெட்சர் ஆகியோர் புதைபடிவத் தரவுகள், வரலாற்று ஒளிப்படங்கள், அலைகளின் ஏற்றவற்றம் பற்றிய புதுமக் கால நோக்காய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தீவுக்கூட்டங்கள் நிலைத்தன்மை இழந்து வாழத் தகுதியற்றவையாகும் தருணத்தைக் கணித்துள்ளனர்.


காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட பற்பல சூழல்களின் அடிப்படையில், ஆய்வுக்கெடுத்துக் கொண்ட தீவுக் கூட்டங்கள் 21ஆம் நூற்றாண்டிலேயே ஆபத்துக்குள்ளாகும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்கள். கடல்மட்ட உயர்வுவீதம் மும்மடங்காகும் நிலையில், அடுத்த சில பத்தாண்டுகளில் நிலத்தடி நீர்வளம் ஒரேயடியாகப் பறிபோகும். இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்தத் தீவுகள் வாழவொண்ணாத நிலையை அடைந்து விடும்.


இன்னுங்கூட எதிர்மறையான பார்வையில் காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் ஒரு பேரடி(metre) உயருமானால் அடுத்த 20-40 ஆண்டுக் காலத்தில் இந்தத் தீவுகள் நிலைத்தன்மை இழந்து விடும், அஃதாவது இயல்பான மனித வாழ்வுக்குப் பொருந்தாமற்போகும். 2060ஆம் ஆண்டுக்குள் சகிக்கவொண்ணாத நிலைகளுக்குப் போய் விடும் என்று எச்சரிக்கின்றார்கள்.


உலக அளவிலான பசுங்குடில் வாயு உமிழ்வுகளில் பசிபிக்கு பெருங்கடலில் இரைந்து கிடக்கும் இந்தச் சின்னஞ்சிறு தீவுகளின் பங்கு என்ன தெரியுமா? 0.03 விழுக்காடுதான்! பத்தாயிரத்தில் மூன்று பங்கு மட்டுமே! ஆனால் அவற்றின் தீய விளைவுகளுக்கு முகங்கொடுக்கும் முன்வரிசையில் நிற்பன அவையும், அவற்றின் மக்களுமே. பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதா? குற்றவாளிகள் பகட்டுடன் திரிய அப்பாவிகள் சிலுவை சுமப்பதா?
இவர்கள் எதையும் தெரியாமல் செய்யவில்லை, தெரிந்தேதான் செய்கிறார்கள்! மானிடத்தீர், மன்னிக்காதீர்!
[“பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (உலூக்கா 23:34)]
எல்லாமே கைமீறிப் போய் விட்டனவா? இல்லை, இப்போதும் இந்த பசிபிக்கு தீவுகளைக் காக்க முடியும் என்று அறிவியலர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றார்கள். அரசுகளும் மக்களும் கூடி முயன்றால் அழிவின் விளிம்பிலிருந்து பசிபிக்கு தீவுகள், ஏன், உலகமே மீள முடியும்!


பசிபிக்கு நாடுகளில் ஆகப் பெரியதாகிய ஆத்திரேலியாவின் தலைமையமைச்சர் அல்பேன்சு காலநிலைசார் நெருக்கடிநிலை அறிவித்துள்ளார். பசிபிக்கு தீவு நாடுகள் இதை வரவேற்றுள்ளன. ஆனால், இது மட்டும் போதாது! இன்னும் செய்ய வேண்டிய பலவும் உள்ளன. குறிப்பாக நிலக்கரி, கல்லெண்ணெய்(பெற்றோல்), எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைப் பையப் பையக் குறைக்க வேண்டும். ஆத்திரேலியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் செய்ய வேண்டும். தாமாகச் செய்ய மாட்டா என்றால் செய்ய வைக்க வேண்டும். இது தொடர்பான மாநாடுகள், உரையாடல்கள் உலகு தழுவிய அளவில் நடந்து கொண்டிருக்கும் நேரம் இது.
அரசுகள் இருக்கட்டும், விடுதலைக்காகவும், புரட்சிக்காகவும், அடிப்படைக் குமுக மாற்றத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் பாடாற்றும் இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

தரவு: தியாகுவின் தாழி மடல் 11

புதன், 11 ஜனவரி, 2023

தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு ‘ஜி’- இரா. திருமாவளவன்

  அகரமுதல





தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு  ‘ஜி’

ஆர் எசு எசு-இன் சூழ்ச்சியை உணர்ந்து தமிழ்நெறியைக் காப்பீர்!

இக்கால் அடிக்கடி ‘ஜி’ எனும் சொல்லினைப் பல இடங்களில் கேட்க முடிகிறது. வடநாட்டில் வடவர்கள் ஒருவரை ஒருவர் மதிப்போடு அழைத்துக்கொள்ளப் பயன்படுத்துகின்ற ‘ஜி’யை இன்று தமிழர் சிலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

சுவாமி’ஜி’, குரு’ஜி’, குமார்’ஜி’, இராதா’ஜி’, இராமா’ஜி’… என ‘ஜீ’…நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குட்டிப் போட்டு வருகின்றது..

இந்தியாவின் ஆர் எசு எசு( RSS) … இந்தியாவில் மட்டும் தன் கைவரிசையைக் காட்டவில்லை . தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவிலும் தன் சித்து வேலையைத் தொடங்கியிருக்கிறது..

அதற்கு இங்குள்ள இந்து அமைப்புகள் வழியமைத்துக் கொடுத்துள்ளன.

தமிழ்ப்பள்ளிகளில் சமயப் பாடம் எனும் போர்வையில் ஆர் எசு எசின் உச்சிக்கொண்டை தெளிவாகத் தெரிந்தாலும் அதைத் தெளிவாக அறியக் கூடிய நிலையில் தமிழர்கள் இல்லை. அதற்கு அவர்கள் தமிழர்கள் என்பதை விட இந்துவாக எண்ணிக் கொண்டிருப்பதே கரணியமாகும். தமிழர்கள் என எண்ணினால் தமிழ்வழி தமிழிய வழிச் சிந்தனை வாழ்வு இருக்கும். இந்துவாக எண்ணுவதால்..ஆரிய இந்துத்துவ சிந்தனை வழியே மேலோங்கி இருக்கிறது. எனவே தான் ‘ஜீ’க்களும் ‘ஶ்ரீல ஶ்ரீ’க்களும் முகத்தை மிகத் துணிச்சலாகக் காட்டுகின்றன.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவர், இந்த இந்துவப் பயிற்சியாளரிடம் ஏன் வேண்டாத, எங்களுக்குப் புரியாத சமற்கிருதத்தைத் திணிக்கிறீர்கள் என்று கேட்க, உங்களுக்குச் சங்க இலக்கியப் பாடல் புரிகிறதா , புரியாத சங்க இலக்கியத்தை ஏற்றுகொள்ளும் போது சமசுகிருதத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் என்றாராம்.. அட கெடுமதியாளர்களே! கழக இலக்கியப் பாடல்கள், எங்கள் தாய்மொழிப் பாடல்கள்; அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது என்றால் தமிழனே தமிழை விட்டு அகன்று அயல்மொழியின் தாக்கம் கொண்டதுதான் கரணியம். அதுவும் இந்தக் கேடுகெட்ட சமசுகிருதத் தாக்கத்தால்தான். சமசுகிருதம் தமிழருக்கு அயல்மொழி . அயல் மொழி நமக்குப் புரியாமல் போவதில் வியப்பொன்றும் இல்லையே. கழக இலக்கியங்கள் முழுக்க முழுக்கத் தமிழில் எழுதபட்டவை தமிழரின் தாய்மொழி. கொஞ்சம் முயன்றால் இயல்பாக விளங்கி விடுமே.

யாதும் ஊரே யாவரும் கேளிர்”  கழக இலக்கியப் பாடல்தானே .. விளங்கவில்லையா. எனவே கழக இலக்கியத்தோடு சமசுகிருதத்தை ஒப்பிடலாமா? சமசுகிருதம் நமக்கு விளங்கினால் என்ன விளங்காமல் போனால்தான் என்ன ? அந்த மொழியை ஏன் எங்களிடத்துத் திணிக்க வேண்டும்?

தமிழில் அத்தன் என்பது முதன்மையான அப்பனுக்கு உள்ள மற்றொரு சொல்லாகும். அத்தன் திரிபுற்று அச்சன் என்றாகும். இதுவே மலையாளத்தில் வழங்குகின்றது. அத்தன் அச்சனாகி அச்சன் அச்சியாகி அச்சி சீயாகிச் சிதைந்து இறுதியில் வடமொழியில் ‘ஜீ’ யாகியது என்பார்.. பன்மொழிப்புலவர் பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்கள்.

சீவன் எனும் சொல்லின் சிதை வடிவம் என்று கூறுவார் உளர்.

ji

/dʒi/

combining form INDIAN

suffix: -ji

                1              used with names and titles to show respect.”Lalitaji”



Origin

via Hindi from Sanskrit jīva, 2nd singular imperative of jīv- ‘to live’, from an Indo-European root shared by Latin vivere ‘to live’.

என இதற்கு விளக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிவணுதல் என்பது இயைதல், பொருந்துதல் எனப் பொருள் விளக்கம் தரும். உடலோடு சிவணி, சிவ்வியிருப்பதே சீவனாயிற்று. எனவே உயிரைக் குறிக்கும் சமற்கிருதச் சொல்லாகக் கருதப்படும் சீவனும் தமிழ்ச் சிவணின் மருவலே. இவ்வுண்மை அறியாமலும், உணராமலும் இச்சொல்லுக்கு மூலம் சமசுகிருதம் என்பது நுணுகி ஆராயாததே கரணியமாகும். தமிழ் வேரினை மூலமாகக் கொண்டிருப்பினும் மொழிமாறி சிதைவுற்ற ஒரு சொல்லினை அப்படியே் தமிழில் ஏற்கக் கூடாது… அவ்வாறே ஒரு சிதைவடிவத்தைத் தமிழில் பயன்படுத்துவது தமிழின் கேட்டிற்கே வழிவகுக்கும் .

தமிழ்ச்சொல்லை மூலமாகப் பெற்று சமற்கிருதச் சொல்லாகவோ அயற்சொல்லாகவோ திரிந்த திரி சிதைச்சொற்களைத் தமிழில் அப்படியே ஏற்பது தெளிந்த நீரில் நஞ்சு கலப்பது போலாகி விடும்.

எடுத்துக்காட்டாக,

பூ > புஷ்பம்

அரசன் > ராஜா

திரு > ஶ்ரீ

காயம்> ஆகாஷ்

மாந்தன்> மனுஷ்யன்

கண்ணன்> கிருஷ்ணன்

தேயம்> தேஷ்

கயம்> கம்

இப்படிப் பல சொற்கள் தமிழில் வழங்கப்பட்டன. இன்றும் வழங்கப்படுகின்றன. தனித்தமிழியக்கத்தாரின் பேருழைப்பால் பல கலைந்தெறியப்பட்டன.

இருப்பினும்.. வடவாரிய சிந்தனைகளையும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் புகுத்தித் தமிழரை, தமிழைச் சமசுகிருத மயப்படுத்தும் நோக்கில்  இம்முயற்சி மேலும் வலுப்படுத்தப்பட்டு தமிழில் புகுத்தப்பட்டு வருகின்றது.

இராட்டிரிய சேவா சங்கத்தில் (RSS) பயிற்சி பெற்றார் மலேசியாவிலும் இயங்குகின்றனர். ஆர் எசு எசு எனத் தெரியக்கூடாது என்பதற்காக… பல்வேறு இரவல்  முகங்களில் அவர்கள் இயங்குகின்றனர் . அவர்களால் செயற்படுத்தப்படும் செயல்களில் ஒன்றுதான் ‘ஜி’… இதை ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ‘ஜி’ யை இணைத்துக்கொள்வர்.

தமிழியத்தைச் சாகடித்து தமிழ் அடையாளத்தை இழந்து வேறு வேறு அடையாளங்களுடன் தமிழினத்தின் பெரும்பகுதி சிதைந்து கொண்டிருக்கிறது.. தமிழன் எந்தெந்த அயல் தாக்கத்தைப் பெறுகிறானோ அந்தந்த அயல் வடிவமாக மாறிக்கொண்டிருக்கிறான். தமிழனின் முதல் தாக்கம் ஆரியம் என்பதால் ஆரியத்தின் வாயிலாகவே கடுஞ்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை வரலாற்றால் தெளிவாக அறிமுடிகிறது. ஆரியத் தாக்கத்தின் விளைவே திரவிட மொழிகளின் பிறப்புகள்.. தமிழினம் இதன் வாயிலாக தனக்குள் தானே அயலினமாக மாறியது.. இன்று வேறுபட்டு கிடக்கின்றது.

இத்தகு கேடுகளைத் தமிழுக்கும் தமிழர்க்கும் விளைத்த சமசுகிருதவாக்கத்தையும் ஆரிய சனாதன வெறியையும் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகத் தூக்கிய எறிய கிஞ்சிற்றும் தயங்கிடல் கூடாது. தமிழர்க்கு வாழ்வியல் தமிழ்நெறியே அன்றி ஆரிய நெறியன்று.

இரா. திருமாவளவன்

தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று

 அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும் தொடர்ச்சி)

காலநிலை மாற்றம் கற்பிதமன்று

மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு” என்பார் மா இலெனின். தரவுகளிலிருந்து முடிவுக்கு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம். தரவுகள் இல்லாமல் சில முன்-முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவதால் பயனில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள்  இல்லாமல் இந்தச் சிக்கலான போராட்டத்தை முன்னெடுக்க இயலாது.

எகித்து நாட்டில் இப்போது காலநிலை மாற்றம் தொடர்பான உயர்நிலை மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை ஒட்டி முதன்மையான சில காலநிலைத் தரவுகள் வெளிவந்துள்ளன. நேற்றைய இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் தரவு அணி இவற்றை வெளியிட்டுள்ளது:

முதன்மையான பசுங்குடில் வாயுவாகிய கரியீருயிரகை(Carbon dioxide) உமிழ்வு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. அது தணிவதாகவோ கட்டுப்படுவதாகவோ அறிகுறியே இல்லை. இந்த வகையில் அமெரிக்காவும் சீனமும்தான் முதற்பெரும் குற்றவாளிகள். மாசுமன்னர்கள்! இந்தியாவின் பங்கும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு குறைந்து வருவது ஆறுதலான செய்தி.

காற்று மண்டலத்தில் கரியீருயிரகை(Carbon dioxide) அடர்த்தி தொழிற்புரட்சியிலிருந்து தொடங்கி, உமிழ்வுகளின் பெருக்கத்தால் கிட்டத்தட்ட செங்குத்தாகவே உயர்ந்து வருகிறது. இது இப்போது பத்து நூறாயிரம் பங்கில் 419 பங்கு என்ற உயரத்தைத் தொட்டுள்ளது.

கரியீருயிரகை(Carbon dioxide) அடர்த்தியின் உயர்வு புவி மேற்பரப்பின் வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாகிறது. 1851க்கும் 2000த்துக்கும் இடைப்பட்ட நீண்ட காலத்தில் புவி மேற்பரப்பின் நிரலளவு (சராசரி) வெப்பநிலை பெரும்பாலும் சீராகவே இருந்து வந்தது. 1998 மட்டும் விதிவிலக்கான ஆண்டாக இருந்தது. 2000 தொடக்கம் புவிமேற்பரப்பின் வெப்பநிலையில் செங்குத்தான உயர்வு தொடங்கி விடுகிறது. அதன் பிறகுதான் புவி வரலாற்றிலேயே ஆகப் பெரும் வெப்ப ஆண்டுகள் வந்தன. அவற்றில் 19 அனல் தகிக்கும் ஆண்டுகள் இந்தக் காலத்துக்குரியவை. புவி மேற்பரப்பின் வெப்பத்தைக் கணக்கிட்டுப் பதிவு செய்யும் நடைமுறை 1880ஆம் ஆண்டு தொடங்கிற்று. இத்தனை நீண்ட காலத்தில் உச்சம் தொட்ட ஆண்டுகள் 2016, 2020.

வெப்பநிலை உயர்வால் அண்டாருட்டிகா பனித் திரள் உருகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வை அமெரிக்காவின் நாசா நிறுவனம் செயற்கைக் கோள் துணை கொண்டு துல்லியமாகக் கணக்கிட்டுள்ளது. அண்டாருட்டிகாவின் பனித்திரள் ஆண்டுக்கு 151  கோடிப்பதின்மக் கல்லெடை (billion metric ton) என்ற கணக்கில் மாறியுள்ளது.

வெப்பநிலை உயர்வால் பெருங்கடல்களும் சூடாகி வருகின்றன. பெருங்கடல் வெப்பநிலை 1955க்குப் பின் 337 மாச் செவ்வயிரை(zetta) திறனி(இயூல்/Joule) உயர்ந்துள்ளது.

பனித்தகடுகள் உருகியதால் பெருங்கடல்களில் நீர் இருப்பு உயர்ந்துள்ளது. புவியின் கடல் மட்டம் 1993 சனவரிக்குப் பின் 102.5 கீழயிரைப் பேரடி (Millimetre) உயர்ந்துள்ளது.

காலநிலை மாற்றம் கற்பிதமன்று என்பதையும், அஃது எவ்வளவு நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது என்பதையும் இந்தத் தரவுகளிலிருந்து அறியலாம். துவாலுவுக்கு வந்துள்ள துயரத்திற்கு எப்படி ஒரு வகையில் உலகமே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் உணரலாம்.

கடலில் மூழ்கிப் போகும் இடர்நிலை துவாலுவுக்கு மட்டுமன்று. பசிபிக்கு பெருங்கடல் தீவுகள் பலவும் முன்பின் அதே நிலையில்தான் உள்ளன. பசிபிக்கு பெருங்கடலுக்கும் ஏனைய பெருங்கடல்களுக்கும் இடையே யாரும் அணைகட்டி வைக்கவில்லை. எல்லாம் சேர்ந்து ஒரே பெருமாக்கடல்தான்! பசிபிக்கு துயரம் புவித் துயரமாக மாறக் காலம் பிடிக்காது. அடுத்தடுத்துப் பார்ப்போம்.

தரவு: தியாகுவின் தாழி மடல் 10

செவ்வாய், 10 ஜனவரி, 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும்

 அகரமுதல







(தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்! தொடர்ச்சி)

மா இலெனின் என்பதில் மா என்பது முன்னெழுத்தா?

இல்லை. வி.இ. என்பதுதான் இலெனினின் முன்னெழுத்துகள். விளாதிமிர் இலியிச்சு உல்யானவு இலெனின் என்பது முழுப்பெயர். உல்யானவு குடும்பப் பெயர். இலெனின் என்பது இலேனா ஆற்றின் பெயரால் அவர் சூடிய எழுத்துப் பெயர். மா என்பது மாபெரும் என்பதன் சுருக்கம். மகா அலெக்குசாந்தர், மகா அசோகன் என்பது போல் மகா இலெனின்! மகா என்பதே மா ஆகிறது. தோழர் இலெனின்! புரட்சித் தலைவர் இலெனின்! மாமேதை இலெனின்! மா இலெனின்! எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல்

இன்று கனடா நாட்டுத் தமிழ் அமைப்புகளின் நீதிக்கான கூட்டமைப்பு நடத்திய இணையவழி நினைவேந்தலில் பேராசிரியர் நெடுஞ்செழியன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தேன். அவரைப் பற்றியும் அவரது பணிகள்-படைப்புகள் பற்றியும் சொல்ல வேண்டியவை ஏராளம். அவரைக் கருநாடகச் சிறையில் ஓராண்டுக்கு மேல் அடைத்து வைத்திருந்தார்கள் அல்லவா? அது பற்றி அவர் எழுதிய ஒரு கவிதை இதோ:

பொய் வழக்கு போட்டு

என் புகழையெல்லாம் தீய்த்து

கைவிலங்கு மாட்டியெனை

கடுஞ்சிறையில் பூட்டி

வெங்கொடுமை செய்தாலும்

நான் வீழ்ந்து விட மாட்டேன்

வஞ்சகத்தின் முன்னே

நான் மண்டியிட மாட்டேன்” 

ஒரு குறிப்பு: பேராசிரியர் நெடுஞ்செழியன் அந்த வழக்கில் சிறைப்படாமல் இருந்திருப்பின் பல்கலைக்கழகத் துணைவேந்தராகியிருப்பார், மேலும் பெருமை பெற்றிருப்பார் என்று ஒரு கருத்துண்டு. சிறைப்பட்டமையை அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பள்ளமாகக் கருதுவர். நான் அப்படிக் கருதவில்லை. அது அவர் சூடிய மகுடம் என மதிக்கிறேன். அவரைச் சிறையிலடைத்த நாட்டுக்கு அது சிறுமை, வீழ்ச்சி! இந்த ஒரு காரணத்துக்காகவே அவரை நண்பராக, தோழராகப் பெற்றது எனக்கு, நமக்குப் பெருமை!

தரவு: தியாகுவின் தாழி மடல் 9