சனி, 10 மே, 2025

தமிழ்நாட்டில்தான் சனாதனம் உருவாகியது என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருப்பது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

      10 May 2025      கரமுதல



(எல்லாரும் சமம் என்பது சாத்தியமில்லை – சரியா?- தொடர்ச்சி)

5. இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் . . . . இந்த நிலத்தில்தான் சனாதன தருமம் உருவாகியது. இந்தத் தருமம் பாரதம் முழுவதும் பரவியது. பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள்” என ஆளுநர் இர.நா.இரவி கூறியிருக்கிறாரே!


 இது பொதுவாக ஆரியர்களின் வழக்கம். ஒன்றைப்பற்றிய தீய சக்தியை மக்கள் புரிந்து கொண்டால், அதனைச் சமாளிப்பதற்காக அதைப்பற்றிய இல்லாத நல்ல செய்திகளை இருப்பதாகப் பரப்புவர். அதுபோல்தான் இப்போதும். சனாதனத்திற்குரிய எதிர்ப்பு தீவிரமாகியதும் அதற்குப் புது விளக்கங்கள் கொடுத்து மக்களின் வரவேற்பைப் பெறப் பார்க்கிறார்கள். இறக்குமதியான ஆரியச் சனாதனத்தைத் தமிழ்நாட்டில் தோன்றியதாகப் பொய்யுரை கூறுவதும் பாரதம் என்றால் சனாதன தரும இலக்கியங்கள் என்று பொருள் என விளக்குவதும் அறிவிற்கு ஏற்றதாக இல்லை என்பதைச் சொல்பவர்களே அறிவார்கள். சனாதன தருமம் என்றால் பிராமணர்களே மேலோங்கியவர்கள் என்றும் பிற வருணத்தார் அவர்களுக்கு மிகவும் கீழ்ப்பட்டவர்கள் என்று பொருள் என்றும் மனு முதலான ஆரிய நூல்கள் கூறுவதை அவர்கள் அறியாதவர்கள் அல்லர்.

  1. சனாதனத்தைத் தமிழர்கள் ஏற்றுள்ளனரா?
     மும்பையைச் சேர்ந்த தொன்மக்கதை (புராண) எழுத்தாளர் தேவுதத்து பட்டநாயக்கு (Devdutt Pattanaik) (இந்தியன் எக்குசுபிரசு, 06.09.2023) சனாதனம் என்பதற்கான 4 வரையறைகளில் ஒன்றாகச் ‘சாதி அமைப்பில் நம்பிக்கை’ எனக் குறித்துள்ளார்.
    “சாதி இரண்டொழிய வேறில்லை” (ஒளவையார், நல்வழி)
    என்னும் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள் சாதி நம்பிக்கை கொண்ட சனாதனத்தை எப்படி ஏற்க முடியும்?
  2. “சனாதனம் என்பது வாழ்வியல் முறை அதை அழிப்பேன் என்பது வடிகட்டிய முட்டாள்தனமான பேச்சு அதை யாராலும் அழிக்க முடியாது” என்று கோமட சுவாமிகள் கூறியிருக்கிறாரே!
     சனாதனம் என்பது யாருக்கான வாழ்வியல் முறை? மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தி, மக்களுள் தம் குலத்தவரே உயர்ந்தவர், பிறர் இழிந்தவர் எனக் கூறிப் பரப்புவோருக்கான வாழ்வியல் முறைதான். உயர்வு தாழ்வற்று வாழும் நன் மக்களுக்கான வாழ்வியல் முறையல்ல. தீமை ஒன்றை ஒழிப்பதாகக் கூறுவது மக்கள் நலம் சார்ந்த பேச்சே தவிர முட்டாள்தனமான பேச்சே அல்ல. அதை யாராலும் அழிக்க முடியாது என்பதுதான் அறிவு சார்ந்த பேச்சு அல்ல.
  3. சனாதனம் என்கிற பெயரே சமற்கிருதத்திலிருந்து வந்ததா?
     ஆமாம். அது சமற்கிருதச் சொல் என்திலிருந்தே அது தமிழருக்கு உரியது அல்ல என்பது தெளிவாகிறது.
     காண்க வினா விடை 52
  4. சனாதனத்தில் சாதி வேறுபாடு இல்லை என்கிறார்களே!
     அப்படியா? பின்வரும் மனுவின் கட்டளைகளைப் பாருங்கள்.
    பிராமணக் குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாத வனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது. (மனு, அத்தியாயம் 8. சுலோகம் 20.)
    ஒழுக்கமற்ற பிராமணன் நீதி வழங்கலாம். ஒழுக்கமானவாயினும் சூத்திரனுக்கு அந்த உரிமை இல்லை என்கிறதே மனு. இதற்கு என்ன பொருளாம்?

(தொடரும்)

வெள்ளி, 9 மே, 2025

எல்லாரும் சமம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனச் சனாதனவாதிகள் கூறுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் என்பது நிலையானதுதானா? (தொடர்ச்சி)

3. எல்லாரும் சமம் என்பது, எழுதவும் பேசவும் இனிப்பாக இருக்கும்; நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒரே வண்டியில் பயணிப்பதால், உரிமையாளரும் ஓட்டுநரும் ஒன்றில்லை. – தினமலரின் சிந்தனைக் களத்தில் சானதனக் காவலாளி இரங்கராசு கூறிய செய்தியாகும்.- சரிதானா?


 இஃது அனைத்துச் சாதியினரையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் மறுப்பு விளக்கமாகும்.


பதவி முறையில் உள்ள வேறுபாடு நிலையானதல்ல. அப்பதவி மாறும் பொழுது அதுவும் மாறும். இன்றைய வண்டி ஓட்டுநர் நாளைய உரியமையாளராகலாம். உரிமையாளரும் ஓட்டுநராகும் நிலைக்கு வரலாம். ஆனால், சனாதனத்தில் பணியில் எந்த மாறுபாடு வந்தாலும் பிராமணன் பிராமணன்தான். அதுபோல் உயர்ந்த தொழில் பார்த்தாலும் வைசிகனோ சத்திரியனோ சூத்திரனோ பிராமணனாக முடியாது.
ஆனால், நடைமுறையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் தமிழ்நெறியே சிறந்ததாகப் பின்பற்றப்படவேண்டும்.


பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண சாதியாகமாட்டான். ஏனென்றால் அவனுக்குப் பிராமண சாதித் தொழிலில் அதிகாரமில்லை யல்லவா? சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? இப்படியே இந்த விசயங்களைப் பிரம்மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார். (மனு 10.73)


இவ்வாறு தொழில் அடிப்படையில் இல்லாமல் பிறப்பு அடிப்படையில் பிராமணனைச் சனாதனம் உயர்த்துவதைப் பாருங்கள்.
இல்லையில்லை எல்லாம் ஒன்றுதான் என்பவர்கள் பிற வருணத்தாரரைப் பிராமணர் செய்யும் சடங்குகளையும் பூசைகளையும் செய்ய அனுமதிக்கலாமே!

  1. சனாதனம் தொன்மையானதுதானா?
     மக்களை ஏமாற்றி ஈர்க்க வேண்டும் என்பதற்காகச் சனாதனத்தைத் தொன்மையானது என்கிறார்கள்.
     “சனாதனம் என்பது அனாதிக் காலத்தது (உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது ; உலகம் தோன்றும்போதே தோன்றியது, காலம் இன்னது என வரையறுக்க முடியாதது) கடவுளால் படைக்கப் பட்டது. இவை, சனாதனவாதிகள் எல்லாவற்றுக்கும் சொல்லும் ஏற்புக்குச் சிறிதும் ஒவ்வாத அதீதக் கற்பனைகள் – நம்பிக்கைகள்” என்கிறார் செம்மொழி விருதாளர் முனைவர் கு.மோகன்ராசு.
     சனாதனம் என்னும் சொல் முதலில் மகாபாரதத்தில் – பகவத்து கீதையில்தான் வருகிறது எனச் சமற்கிருத அறிஞர்களும் வேத வல்லுநர்களுமே கூறுகின்றனர். அவ்வாறிருக்க அதனைத் தொன்மை எனக் கூறுவது தவறு என்கின்றனர்.
    மகாபாரதத்தில் 6 ஆவது பிரிவான பீசும பருவத்தில் 23 முதல் 40 இயல்களாகக் கீதை புகுத்தப்பட்டது. இவ்வாறு இடைச்செருகல் நேர்ந்தது கி.பி. 7 ஆம் நூற்றாண்டு என அறிஞர்கள் கூறுகின்றனர். கீதையில் தான் முதன் முதலில் சனாதனம் இடம் பெறுகிறது. அப்படி இருக்க எவ்வாறு இது தொன்மையாக இருக்க முடியும்?
    ஆனால் வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் சனாதனம் எனச் சில இடங்களில் வருகிறது. இந்த இடங்களில் பணி என்னும் பொருளில்தான் சனாதனம் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை இடைச்செருகலாக இருக்கலாம். சில இடங்களில் தரும(ம்) என வரக்கூடிய இடங்களை எல்லாம் சனாதன தருமம் என விளக்கம் தந்து அவ்வாறே சனாதன தரும(ம்) (‘தருமா’) இடம் பெற்றுள்ளதுபோல் தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். சனாதனம் என்பதற்குத் தொன்மையானது, நிலையானது என்பதும் பின்னர் இட்டுக்கட்டிக் கூறிய பொருளே யன்றி அச்சொல்லுக்குரிய பொருளல்ல. தொன்மையான தமிழ்நெறிக்குப் போட்டியாகக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறுகிறார்கள் என்பதன்றி வேறில்லை.
    சமற்கிருதச் சொற்களுக்கு, இல்லாத பொருள்களைக் கூறுவதே வடவர் வழக்கம். அதுபோல் சனாதன என்றால் நிலையான எனப்பொருளைப் புகுத்துகிறார்கள். சனா + தன என இரு சொற்களாகக் கூறினாலும் சனாதன என்பதை ஒற்றைச் சொல்லாகக் குறிப்பிட்டுத்தான் பொருள் கூறுகிறார்கள். தமிழின் சிறப்புகளை எல்லாம் தங்களுக்கு ஏற்றிக் கொள்வது சமற்கிருதர்களின் பழக்கம். அதுபோல் முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்த் தமிழ் இருப்பதைக் குறிப்பிடுவதை அறிந்து சமற்கிருதத்தையும் அவ்வாறு குறிப்பிட்டுச் சனாதனத்திற்கும் பழமைக்கும் பழமையானது, புதுமைக்கும் புதுமையானது என்று விளக்கம் தருகின்றனர். என்று பிறந்தனள் என்று அறிய முடியாத தொன்மை மிக்கது தமிழ் என்பதால் சனாதனத்தையும் பிறப்பு அறிய மடியாத தொன்மை வாய்ந்தது என்று பொய்யாகக் குறிப்பிடுகின்றனர்

(தொடரும்)

வியாழன், 8 மே, 2025

வழித்துணைப் பெயர்ப்பலகைகள் , அன்றே சொன்னார்கள் - இலக்குவனார் திருவள்ளுவன்

 
                                                                   

            
                                                                                  

வழித்துணைப் பெயர்ப்பலகைகள்

                       அன்றே சொன்னார்கள் 15


  சாலைகளில் பயணம் செய்வோருக்கு உதவுவதற்காக அமைக்கப்படுவனவே சாலைப் பெயர்ப்பலகைகள். 1870களில் இத்தகைய பெயர்ப்பலகைகள் முதலில் அமைக்கப்பட்டன; பின்னர் இவை காலமாற்றத்திற்கேற்ப செல்ல வேண்டிய வேகம், திரும்ப வேண்டிய இடம் முதலானவற்றைக் குறிப்பிடும் வகையில்  வெவ்வேறு வழிகாட்டிக் குறிப்புகளையும் குறிக்கும் வகையில் அமைந்தன.

பண்டைய உரோமன் ஆட்சியில் உரோமிற்கு வரும் வழியைக் குறிக்கும் பெயர்ப்பலகைகள் இருந்திருக்கின்றன; ஆனால், அவை பெரும்பாலும் மன்னராட்சியைக் குறிப்பிடும் கல் தூண்களாக இருந்தன. 

நகர அமைப்பிலும் சாலை அமைப்பிலும் சிறந்திருந்த பழந்தமிழ்நாட்டில் பயணிகளுக்கு உதவுவதற்கென்றே ஊர்ப்பெயர்களையும் தொலைவுகளையும் காட்டும் பெயர்ப்பலகைகள் இருந்தன.

இரணிய முட்டத்துப் பெருங்கன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன்சேய் நன்னனைப் பாடிய இலக்கியத்தின் பெயர் மலைபடுகடாம். இம்மன்னன் ஆட்சியில் இருந்த நகரத்தின் பெயர் செங்கண்மா. இந்நகரம் பண்டைக்கால முறையில் அகழி, கோட்டை, பெரிய வீதி, கடைத்தெரு, குறுக்குத்தெரு முதலியவை நிறைந்தது. மன்னனைக் காண இந்நகருக்குச் செல்லுமாறு கூத்துக் கலைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறார் புலவர்.


அவ்வாறு செல்லும் வழியில், சாலை அமையாத பகுதிகளில் முதலில் செல்வோர் பின்வருவோர்க்கு வழிகாட்டுவதற்கு அடையாளமாக ஊகம்புல்லை முடித்து வைத்து வழிகாட்டும் பழக்கம் இருந்துள்ளதை மலைபடுகடாம் கூறுகிறது.


பண்டுநற்கு அறியாப் புலம்பெயர் புதுவிர்

சந்து நீவிப் புல்முடிந்து இடுமின்                        

                   (மலைபடுகடாம் : 392-393)


(பண்டு)பண்டைக் காலத்தில் (நற்கு)நல்ல பாதையை (அறியா) அறியாமல் (புலம்பெயர் புதுவிர்) இடம் மாறி வரும் புதியவர்கள் தீய பாதையில் சென்று இடர்ப்பட்டுத் திரும்பி வந்தால் பிறர் அவ்வாறு துன்பம் அடையக் கூடாது என்பதற்காகத் (சந்து)தெருக்கள் சந்திக்கும் இடங்களில் போகக்கூடாத பாதையில் (நீவி) கையால் துடைத்து, (புல் முடிந்து) ஊகம்புல்லை முடித்து வைக்கும் பழக்கத்தை உடையவர்களாக இருந்துள்ளனர். தாம் அடைந்த துன்பத்தைப் பிறர் அடையக் கூடாது என்று கருதும் பெரும் பண்பினராக இருந்துள்ளனர் நம் முன்னோர்.

நன்கு அமைந்த சாலைப் பகுதிகளில் பெயர்ப்பலகைகள் இருந்துள்ளமையையும் பின்வருமாறு புலவர் தெரிவிக்கிறார்.


செல்லும் தேஎத்துப்  பெயர்மருங்கு அறிமார்

கல்லெறிந்து எழுதிய நல்வரை மராஅத்த                  

          (மலைபடுகடாம் 394-395)

என்னும் வரிகளில் கல்லை அகழ்ந்து எழுதிய ஊர்ப் பெயர்ப்பலகைகள் இருந்தமையைக் குறிப்பிடுகிறார்.


தேஎம் என்பது இடத்தையும் குறிக்கும்; திசையையும் குறிக்கும்.  செல்ல வேண்டிய இடத்தையும் திசையையும் குறிக்கும் சாலைப் பெயர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தமையை அறியலாம். இப்பொழுது சில ஊர்ப்பலகைகளில் இன்னார் பிறந்த ஊர் என்ற குறிப்பினை எழுதி வருவதைப் பார்க்கிறோம். அதுபோல் அப்பொழுது ஊர்ப்பலகைகளின் அருகேயே அவ்வூரில் வீரமரணம் உற்றவர்களின் (நடுகல்) குறிப்புகள் இருந்துள்ளன.


மலைபடுகடாம் என்னும் நூல் தொல்காப்பியத்திற்கும் முற்பட்டது என முனைவர் சி.இலக்குவனார் ஆராய்ந்து தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயணிகளுக்கு வழித்துணையாகச் சாலைகளில் பெயர்ப்பலகை வைக்கும் அளவிற்கு முன்னேறிய நிலையில்  தமிழ் மக்கள் இருந்துள்ளனர் என்பதை உணரலாம். இன்றைக்கோ தமிழகச் சாலைப் பெயர்களில் பிற மொழிப் பெயர்கள் திணிக்கப்படுகின்றன. தமிழ் ஈழ நாட்டின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ் அழிக்கப்பட்டுச் சிங்களப் பெயர்கள்  எழுதப்பட்டு வருகின்றன. அறிவும் உணர்வும் வளராமல் மங்குவது ஏனோ?


- இலக்குவனார் திருவள்ளுவன்


சனாதனம் என்பது நிலையானதுதானா? - இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் – பதிப்புரை – தொடர்ச்சி)

    சனாதனம் என்பது நிலையானதுதானா?

    • உலகில் நிலையானது என்று ஒன்றுமே இல்லை. எனவேதான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கின்றனர் அறிஞர்கள்.

    நில்லாத வற்றை நிலையின என்று உணரும்

    புல்லறிவு ஆண்மைகடை.

    என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 331)

    இதன் மூலம், “நிலைத்திருத்தல் அல்லாதனவாகிய பொருள்களை, நிலைத்து இருப்பன என்று நினைக்கின்ற அற்ப அறிவைக் கொண்டு இருத்தல் இழிநிலை” என்கிறார் திருவள்ளுவர்.

    இத் திருக்குறளுக்கு விளக்கமாக,  மாதவச் சிவஞான யோகிகள் பாடிய, “சோமேசர் முதுமொழி வெண்பா” என்னும் நூலில்  இத்திருக்குறளை விளக்கிப் பின்வரும் பாடல் வருகிறது.

    ஆக்கையும் ஆயிரத்துஎட்டு அண்டங்களும் நிலையாத்

    தூக்கி அழிந்தான்சூரன், சோமேசா! – நோக்கியிடில்

    நில்லாதவற்றை நிலையின என்றுஉணரும்

    புல்லறி வாண்மை கடை.

    இதன் பொருள்:        

    சூரபன்மன்(சூரபத்துமன்),  தன் உடம்பும்,  தன் அரசாட்சிக்குரித்ததாக ஆணை செலுத்திய ஆயிரத்தெட்டு அண்டங்களும், நிலையாத் தூக்கி – நிலையுடையவெனக் கருதி அழிந்தொழிந்தான் ஆகலான்.  ஆராய்ந்து பார்த்தால், நிலைத்த தன்மை இலவாகிய பொருள்களை நிலையாகக் கருதுகின்ற புல்லிய அறினை  உடையது இழிந்த தன்மையாகும் என அறியலாம்.

    நின்றும்சென்றும்வாழ்வன

     யாவும் நிலையாவால்பொன்றும்

    என்கிறார் கம்பர்(கம்பராமாயணம், மாரீசன் வதைப் படலம்.) அசையாப் பொருள், அசையும் பொருள்(தாவர சங்கமம்) என்று சொல்லப்படும் நிலையியல் இயங்கியல் பொருள்கள் எவையும்  நிலைத்து நிற்கமாட்டா  அழிந்தே தீரும் என்கிறார். 

    அநித்தியத்தை நித்தியம் என்று ஆதரிக்கும் பொல்லா மனிதர் என்கிறது சிவபோகசாரம். அஃதாவது நிலையில்லாதவற்றை நிலையானவை என்று ஆதரிப்போரைப் பொல்லா மனிதர் என்கிறது. எனவே சனாதனம் நிலையானது என்போர் பொல்லா மனிதராவார்.

    நில்லாப் பொருளை நினையாதே நின்னை உள்ளோர்

    சொல்லாப் பொருள் திரளைச் சொல்லாதே”

     என்கிறார் தாயுமானார்.

    நிலையற்ற மாயப் பொருள்களைச் சிறிதும் நினைக்காதே.  உன்னைத் தமக்கு உட்படுத்திக் கொண்டு உன்னோடு உள்ளவர்கள் சொல்லத் தகாத பொருள் கூட்டங்களைப் பேசாதே என்கிறார். எனவே, நிலையில்லாத சனாதனத்தை நிலை என எண்ணவும் கூடாது. சனாதனத்தை நம்மோடு உட்படுத்தி இது குறித்து இல்லாச் சிறப்புகளைக் கூறுவோர் பற்றிப் பேசக் கூடாது.

    பிறந்தன இறக்கும்இறந்தன பிறக்கும்,

    தோன்றின மறையும்மறைந்தன தோன்றும்,

    பெருத்தன சிறுக்கும்சிறுத்தன பெருக்கும்,

    உணர்ந்தன மறக்கும்மறந்தன உணரும்,

    புணர்ந்தன பிரியும்பிரிந்தன புணரும்

    என்று பட்டினத்தடிகள் கூறுகிறார். எனவே தோன்றிய யாவுமே மறையும். எதற்கும் நிலைத்த தன்மை கிடையாது. சனாதனம் என்னும் தீய நெறியும் அழியும்.

    பின்னும் [சு]மிருதிகள் செய்தார் – அவை

    பேணும் மனிதர் உலகினில் இல்லை;

    மன்னும் இயல்பின் வல்ல – இவை

    மாறிப் பயிலும் இயல்பின ஆகும்

    எனப் பாரதியாரும்  சனாதனம் மாறாத் தன்மையுடையன அல்ல; மாறும் இயல்பின என்கிறார்.

    2.    நிலையானதாகவும்மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அருத்தமே சனாதனம் என்கிறார்களே!

    • நிலையானதாகச் சொல்வது தவறு என முதலில் பார்த்தோம். அதுபோல் மாற்றமில்லாதது என்பதும் தவறு.

    சனாதனம் மக்களிடையே பாகுபடுத்தியும் ஒரு சாராரை உயர்த்தியும் மறுசாராரை இழித்தும் கூறுகிறது. இதில் யாரும் மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காக மாற்றமில்லாதது என்கிறார்கள். அஃதாவது அவர்களைப் பொறுத்தவரை பிராமணர்களை உயர்த்திக் கூறுவதும் பிறரை இழித்துக் கூறுவதும் நிலையானதாகவும் மாற்றமில்லாததாகவும் இருக்க வேண்டும். எனவே, இஃது ஒன்றும் உயர்ந்த மெய்யியலன்று.

    “இரிக்கு வேதக் காலம் முதல் வெளிவந்துள்ள கடவுள் சிந்தனைகளைப் பார்த்தால், அவை, காலம் தோறும் மாறி மாறி வந்துள்ளன; திரிந்து வந்துள்ளன; இணைந்து வந்துள்ளன; பிரிந்து வந்துள்ளன; சிறுகி வந்துள்ளன; பெருகி வந்துள்ளன; பலவாய் வந்துள்ளன; ஒன்றாய் வந்துள்ளது. இந்நிலையில் கடவுள் பற்றிய சிந்தனை நிலையானதும் அன்றுமாறாததும் அன்று என்றாகிறது” என உலகத் திருக்குறள் மையத் தலைவர் முனைவர் குமோகனராசு விளக்கம் தந்துள்ளதை அறிக.

    – இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.23-25