சென்னை, ஜூலை 17: தமிழக காவல்துறை ஜாதி சங்கமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் குற்றம்சாட்டினார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது: தமிழக காவல் துறையில் ஜாதி உணர்வு அதிகமாகிவிட்டது. காவல் துறையா? ஜாதி சங்கமா? என்று கேட்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் போலீஸôருக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் இப்போது போலீஸôருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு அரசியல்வாதிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளுமே காரணம். தியாகராய நகர், பாண்டி பஜார், பூக்கடை, கோடம்பாக்கம் போன்ற காவல் நிலையங்களில் பணியாற்ற போலீஸôரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கு "கலெக்ஷனே' காரணம். முன்பெல்லாம் குடும்ப பின்னணியை ஆராய்ந்த பிறகுதான் போலீஸ் வேலையில் சேர்ப்பார்கள். அந்த வழக்கம் இன்று இல்லாததால் குற்றவாளிகள் போலீஸ் அதிகாரியாக வந்துவிடுகிறார்கள். குற்றங்கள் பெருகி வருவதற்கு இது முக்கியமான காரணமாகும். 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்கின்றன. இரு திராவிட கட்சிகளும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார் போளூர் வரதன். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்:நாங்கள் என்ன செய்தோம் என்பதை திங்கள்கிழமை (ஜூலை 20) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் சொல்வோம். ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக): மக்களுக்காக நாங்கள் (அதிமுக) என்ன செய்தோம் என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். திங்கள்கிழமை நான்பேசும் போது அதிக விவரங்களை தர இருக்கிறேன் என்றார்.
நினைவலைகளில் இலக்குவனார் திருவள்ளுவன்
7/18/2009 5:00:00a.m.