தமிழ் உணர்வாளர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது காண வேண்டிய
தமிழ்க் கோயில்…..
தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சியிலிருந்து 6 புதுக்கல் தொலைவில் உள்ள ,
நேர்மை மிகு ஆட்சிப் பணியாளர் உ.சகாயம் அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள,
ஒரே சமையல் , ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டில் பல குடும்பங்கள் ஒன்றிணைந்து பெருங்கூட்டுக் குடும்பமாக வாழுகிற,
பொது உடைமை வாழ்வு (Community Life) என்ற அடிப்படையில் இயங்குகிற,
திருமணத்தை மற்றவர் நலனுக்காகப்
புறக்கணித்து, முதிர் கன்னியாக, ஈக வாழ்வு நடத்தும் மகேசு என்ற நேர்மையின்
இலக்கணமாக வாழ்பவரால் இயக்கப்படுகிற,
இதே போல ஈக ஒப்படைப்புள்ள பெண்மணிகளை உறுப்பினர்களாகக் கொண்ட,
குறைந்தது ஒரு வார அளவாவது பொது நலனுக்காகப் போராடிச் சிறை சென்றிருக்க வேண்டும் என்ற விதியுடன் உறுப்பினர்களை ஏற்கிற,
அனைத்து உறுப்பினர்களின் வருவாயையும் இயக்கத்திற்குக் கொடுத்துவிட்டு,
தங்கள் தேவைக்குக் குறைந்த அளவு மட்டும் திரும்பப் பெறுகிற நடைமுறை கொண்ட,
காஞ்சி மக்கள் மன்றம் என்ற அமைப்பு நடத்துகிற ஊர் தான்
செங்கொடியூர்.
இவ்வாண்டு உலகத் தமிழ்த் தேசியத் தலைவர்
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வழமைபோல மிகச் சிறப்பாக, புலிக்கொடி
ஏற்றப்பட்டுத், தமிழீழ தேசியப்பண் இசைக்கப்பட்டு, மாட்டுக்கறிப்புலால்
வழங்கப்பட்டு நடத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்களின் சங்கமமாகத் திகழ்ந்தது.
நான் இந்நிகழ்வுக்குப் பண உதவி வழங்க விரும்பி, காஞ்சி மக்கள் மன்றத் தலைமை நிர்வாகி மகேசிடம் பேசியபோது,
அறிமுகம் இல்லாதவர்கள் தரும் பண உதவியை நாங்கள் ஏற்பதில்லை என உறுதியாக மறுத்தார்..
அது என்னை உலுக்கியது..
அதன் பின்பு தமிழ் உணர்வு தலைவர்களிடம்
எனது தமிழ் உணர்வு பற்றி, உசாவியறிந்து, அதன்பிறகே என் முயற்சியில்
அளிக்கப்பட்ட நிதி உதவியை ஏற்றார்..
இத்தகைய சிறப்பு உள்ள
செங்கொடியூர் தமிழ் ஈகியர் நினைவாலயத்தில்
தமிழருக்காகத் தமிழ்நாட்டில் உயிர் ஈகம் செய்த செங்கொடி, முத்துக்குமார் ஆகியோருக்கும்,
தமிழீழத்தில் உயிர் ஈகம் செய்த திலீபனுக்கும் வெண்கலச் சிலைகளும்,
மற்ற பல தமிழர் நல ஈகையருக்கு ஒளிப்படங்களும் அமைக்கப்பட்டு ,
தமிழ்த் ஈகியர் கோயிலாகப் பேணப்பட்டு வருகிறது.
பறை இசையுடன் ஆட்டம், பாடல்கள், என உணர்ச்சிமயமான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
செங்கொடியூர் தமிழ்ப் பற்றாளர்கள் கண்டிப்பாகக் காண வேண்டிய, பேண வேண்டிய, விளம்பரப்படுத்த வேண்டிய இடமாகும்..
மெக்கா, செருசலேம் போல,
தூய(புனித) இடமாகக் கருதப்பட வேண்டியது செங்கொடியூர்!
நான் பார்த்துவிட்டேன்….
நீங்கள் எப்போது அங்கே போகப் போகிறீர்கள்?
-தமிழ் இராசேந்திரன் (கரூர் இராசேந்திரன்)
கரூர் இராசேந்திரன்