ஊடகவியலாளர்களுடன் சந்திப்பும் தமிழ்மொழி பாடத்தில் முதல் மூன்று மாணாக்கர்களுக்கு பரிசுகள் அறிவிப்பும்:
நாள்:  ஆகஸ்டு 9, 2013
இடம்:  சென்னை
ஊடக இயலாளர் சந்திப்பில் துவக்க அறிக்கை:
வணக்கம்
எங்கள் அழைப்பை ஏற்று இந்த சந்திப்பில் பங்கேற்க வந்திருக்கும் ஊடகத்துறை அன்பர்களையும், தமிழ்மொழிக் கல்வி ஆர்வலர்களையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதும், தமிழகத்தில் பள்ளி இறுதித் தேர்விலும், பள்ளி மேல்நிலை இறுதித் தேர்விலும் தமிழ் மொழி பாடத்தில் முதல் மூன்று இடங்கள் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிப்பதுவும்; இச்சந்திப்பின் முக்கிய நோக்கங்கள்.
1999ம் ஆண்டு அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம் துவக்கப்பட்டது. அமெரிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் வார விடுமுறை நாட்களில் தன்னார்வலர்களால் நடத்தப்படும் தமிழ்ப் பள்ளிகளுக்கான பொதுபாடத் திட்டம், பாட / பயிற்சி புத்தகங்கள், மின் கல்வி / நிர்வாகம், மதிப்பீடுபெறும் முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கவே இவ்வமைப்பு துவங்கப்பட்டது. துவங்கியபோது 6 பள்ளிகள் இவ்வமைப்பில் இணைந்தன. தற்போது 47 தமிழ்ப்பள்ளிகள், 20க்கும்மேற்பட்ட மாநிலங்களில் இருந்து இணைந்திருக்கின்றன.
சுமார் 3000 மாணவர்கள் தற்போது தமிழ்மொழி பயிலுகிறார்கள். மழலை நிலை துவங்கி, நிலைகள் 1, 2, 3, 4, 5, 6 என மொத்தம் 7 நிலைகள் தற்போது உள்ளன. இம்மாணாக்கர்கள் தமிழைபச் சரளமாகப் படிக்க, எழுத, பேசவும்; அவர்கள் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியில் பயிலும்போது தமிழை இரண்டாம் பாடமாகக் கொண்டு புள்ளிகள் பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டுமென்பதும் எங்கள் குறிக்கோள். எங்கள் அமைப்பில் பதிவு செய்து கொள்ளும் தமிழ்ப் பள்ளிகள் உயர் தரத்தில் நடக்க; அட்வான்ஸ் எட் என்ற உலகத்தரம் வாய்ந்த மதிப்பீடுபெறும் நிறுவனம் மூலம் முயன்றுவருகிறோம்.
தாய்த் தமிழகத்தில் தமிழ் மொழிக்கல்வியும், தமிழ் வழிக்கல்வியும் ஓங்கி வளர்வது, அமெரிக்கா உள்ளிட்ட புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் மொழியும், தமிழ்க் கல்வியும் தழைப்பதற்கும், நிலைப்பதற்கும் இன்றியமையாதது. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகைசெய்தல் வேண்டும்” என்ற பாரதியாரின் கனவையும், “கடல்போலச் செந்தமிழைப்பெருக்கவேண்டும்” என்ற பாரதிதாசனின் கனவையும் நனவாக்க, புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் கல்விக்காக பாடுபடுவோருக்கு தாய்த் தமிழகத்தின் உதவி அவசியம்.
எங்களது இந்த பரிசு வழங்கும் முயற்சி, தாய்த் தமிழகத்தில் தமிழ் மொழிக் கல்வி மாணவர்களை உற்சாகப்படுத்துவதிலும், ஊக்கப்படுத்துவதிலும் ஒரு சிறுபங்காவது வகிக்கும் என நம்புகிறோம். அதேசமயம், ஆங்கில மொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்ற மாணவர்களாக தமிழக மாணவர்கள் விளங்க விழைகிறோம். அதற்கு எங்களால் இயன்றதனைச் செய்யக் காத்திருக்கிறோம்.
அயல்நாடுகளில் வாழும் தமிழ் மாணவர்கள் தமிழகத்திலிருந்து ஒளிபரப்பப்படும் தமிழ் தொலைக் காட்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். அந்நிகழ்ச்சிகளில் முடிந்த அளவு ஆங்கிலக் கலப்பின்றி தமிழிலேயே இருந்தால் எங்களது தமிழ்க் கல்வி முயற்சிக்கு பேருதவியாக இருக்கும். அதேபோன்று இவ்வூடக சந்திப்பின் வாயிலாக தமிழ் மக்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை முன்வைக்கிறோம். முடிந்த அளவு ஆங்கிலக் கலப்பின்றி தமிழில் பேசுங்கள். சுருங்கிவரும் இவ்வுலகக் கிராமத்தில் நம் தாய்த் தமிழ் நசிந்து வருவதை நாம் அன்றாடம் கண்ணுறுகிறோம். அந்நிலை மாற உலகளாவிய அளவில் மீண்டும் ஒரு ”தனித் தமிழ் இயக்கம்” மலரவேண்டும்.
வெகுவேகமாய் சென்று கொண்டிருக்கும் தற்போதைய மாநுடவாழ்வில் சீரிய தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அவசர, அவசிய தேவையாகிறது. அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல தமிழ்மொழிக் கல்வியும், தாய்த் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியும் அவசியம். தமிழ் மொழியினை பாடமாக ஆர்வத்துடன் படிக்கும் மாணவர்களுக்கும், படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க தமிழ்மொழி, வளர்க தமிழ்க்கல்வி, வணக்கம்
முனைவர் அரசு செல்லையா
தலைவர்
அமெரிக்க தமிழ் கல்விக் கழகம்
IMG_4987 IMG_4990 IMG_4993 IMG_5015 IMG_5021 IMG_5031 IMG_5072