சனி, 2 செப்டம்பர், 2023

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23

 




தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23 என நீட்டிப்பு

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி குறித்து அறிவித்திருந்தோம்.

இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும்

முதல்பரிசு உரூ.5,000/-

இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /, & மூன்றாம் உரூ.2000/

நான்காம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-)

ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் (விலை உரூ.300/-)

ஆறாம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் எழுதிய பழந்தமிழ் நூல் (விலை உரூ.100/-)

கட்டுரைப்போட்டியின் தலைப்பு:

இந்தி, சமற்கிருத, ஆங்கிலத் திணிப்புகளை முறியடிப்போம்!

4 பக்கங்களுக்குக் குறையாமல் (மேல் வரம்பு இல்லை)

பங்கேற்பாளர்கள் வேண்டியதற்கிணங்கக் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி

ஆவணி 24, 2054 /

10.09.2023 தமிழக நேரம் மாலை 6.00 மணிக்குள்

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி:

thamizh.kazhakam@gmail.com
ஆர்வமுள்ளவர்களைப் பங்கேற்க வேண்டுகிறோம்

இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்க் காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தோழர் தியாகு எழுதுகிறார் 198 : தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகச் சமயம் சாரலாமா?

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 197 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4 – தொடர்ச்சி)

தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகச் சமயம் சாரலாமா?

இனிய அன்பர்களே!

சில ஆண்டுகளுக்கு முன்னர் குடந்தையைச் சேர்ந்த சில தோழர்கள் தமிழ்த் தேசியத்துக்கென்று ஒரு சமயச் சார்பு வேண்டும் என்று என்னிடம் வாதிட்டார்கள். அவர்கள் குறிப்பாக சைவச் சமயச் சார்பை வலியுறுத்துவதாக நான் புரிந்து கொண்டேன். என்னால் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நான் சொன்னேன்: “நான் இறைமறுப்பாளன். இயல்பாகவே சமய மறுப்பாளன். நான் சார்ந்த அரசியல் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பதற்காக இறைப் பற்றாளனாகவோ ஒரு சமயம் சார்ந்தவனாகவோ நடிக்க என்னால் முடியாது. அது நேர்மையற்றது, என் உளச்சான்றுக்குப் புறம்பானது.”

அவர்கள் வாதிட்டார்கள்: “தேசியத்துகென்று ஒரு சமயம் இருந்தாக வேண்டும். இல்லையேல் சமய நம்பிக்கையுள்ள மக்களை நம்மால் திரட்ட முடியாது.”

“தமிழ்த் தேசியத்துக்கு எந்த சமயச் சார்பும் தேவையில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சமயச் சார்பு கொண்ட இயக்கம் இந்தியத் தேசிய இயக்கமானாலும் தமிழ்த் தேசிய இயக்கமானாலும் அதில் என்னால் இணைந்திருக்க முடியாது.”

நான் அந்தத் தோழர்களிடம் சொன்னேன்: “உங்களுக்கு சமய நம்பிக்கை இருந்தால் இருக்கட்டும். ஒரு சமயத்தை நீங்கள் விரும்பினால் அதைக் கடைப்பிடிக்க உங்களுக்கு உரிமை உண்டு. தமிழ்த் தேசியத்துக்காக நீங்கள் உழைக்க அது தடையில்லை. ஆனால் உங்கள் சமய நம்பிக்கை உங்களைச் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும், அது இயக்கக் கொள்கையாக இருக்க முடியாது. உங்களுக்கு உண்மையிலேயே இறை நம்பிக்கையும் சமய நம்பிக்கையும் இருக்குமானால் அதை மறைத்துக் கொள்ள வேண்டா. அதே போல் இறை நம்பிக்கை, சமய நம்பிக்கை இல்லையென்றால், இயக்க நலனுக்காக அதை மறைத்துக் கொண்டு நடிக்காதீர்கள்.”

ஏதோ ஒரு தேர்தலுக்காக நாத்திகர்கள் ஆத்திகர்கள் போல் பாசாங்கு செய்யும் நடிப்பு அரசியல் தமிழ்த் தேசியப் புரட்சிக்கான அணிதிரட்டலுக்கு உதவாது.

இறை நம்பிக்கை அல்லது இறை மறுப்பை, சமய நம்பிக்கை அல்லது சமய மறுப்பை அரசிலும் அரசியலிலும் கலக்கலாகாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த உறுதியை நம் மக்களிடையேயும் வளர்க்க வேண்டும். குடியாட்சியம் நிறைவு பெற உலகியமும், உலகியம் நிறைவு பெறக் குடியாட்சியமும் இன்றியமையாதவை. (குடியாட்சியம் = DEMOCRACY; உலகியம் = SECULARISM). நான் முன்வைக்கும் இந்தக் கருத்துகளை விளங்கிக் கொள்ள என் புதிய சொல்லாட்சியையும் தாழி அன்பர்கள் பயில வேண்டுகிறேன்.

‘தமிழ்த் தேசியமும் சமய நம்பிக்கையும்” என்ற தலைப்பில் இணையவழி அரசியல் வகுப்பு நடத்தியுள்ளேன். தாழி மடலிலும் இது பற்றி எழுதியுள்ளேன். எனது நிலைப்பாட்டில் கோவை அன்பர் பொன். சந்திரன் முழுமையான உடன்பாடு தெரிவித்து எழுதியதோடு, இது பற்றிய என் தாழி மடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மற்ற விடுதலை இயக்கங்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முன்மொழிந்தார். தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகச் சமயம் சாரலாகாது என்பதுதான் என் கொள்கை.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 22
6

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம்

 





நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28)

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஆவணி 07, 2054 ஞாயிறு 03.09.2023

தமிழ்நாட்டு நேரம் காலை 10.00

அணுக்க இணைய வழிக் கூட்டம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்ப்போராளி சி.இலக்குவனார் ஐம்பதாம் நினைவாண்டு உரையரங்கம்

தலைவர் : இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன்,

செயலர், கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம்

உரையாளர்கள்:

முனைவர் சிரீதாசு செல்வம், கனடா

– இலக்குவனாரின் சங்க இலக்கிய ஆய்வுகள்

முனைவர் வேணு புருசோத்தமன்

– இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ ஆய்வுரை

     முனைவர் எழுத்தாளர் அகணி சுரேசு, கனடா

     – இலக்குவனாரின்  தொல்காப்பிய மொழிபெயர்ப்பு

நினைவுரை : தமிழ்த்தேசியர் தோழர் தியாகு

தொகுப்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்,

செயலர், தமிழ்க்காப்புக் கழகம்

நன்றியுரை : மாணவர் ம.காவேரி



தோழர் தியாகு எழுதுகிறார் 197 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 196 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 3/4 + தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) ! 4/4

இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கலை பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்பட வில்லை.

கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19 வழங்கியுள்ள அடிப்படை உரிமை இதுவாகும். இதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் சஎதச(ஊபா) சட்டம் அமைந்துள்ளது. மேலும் சஎதச(ஊபா) சட்டத்தில் உள்ள பிரிவுகள் 35, 36 ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். உறுப்பு 19 மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முன்வைக்கும் உறுப்பு 14,வாழ்வுரிமையையும் ஆள்வகை சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் உறுப்பு 21 ஆகியவற்றிற்கும் எதிரானதாகும்.

அரசவன்முறையின்(பாசிசத்தின்) வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)
2008இல் இச்சட்டம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. எல்லைகடந்த பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்தின் பின்னணியில் எல்லா நாடுகளைப் போல நாமும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று காங்கிரசு வாதாடியது

தேசப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஓர்மைக்கும் ஊறுசெய்யக் கூடிய குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் தண்டிக்கவும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). நிறுவப்பட்டது. அஃதாவது, மாநில அரசின் ஆட்சிப்புலத்திற்குள் நடக்கும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு ஒன்றியக் ’காவல்துறை’க்கு மாற்றி விட வழிவகுக்கும் சட்டம் இது

சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. காவல்துறை என்பதும் மாநில அரசின்கீழ் வருகிறது. ஒன்றிய அரசு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) என்றொரு புலனாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டத்தில் பட்டியலிடப்பட்ட சட்டப் பிரிவுகளில் சஎதச(ஊபா) சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 2021ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி செய்யும் சத்தீசுகர் மாநிலம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல்கள் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள், வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டு வரப்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு எந்தத் தெளிவான காரணமும் சொல்லப்படவில்லை. இவற்றை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் நிறுவனங்களும் இருக்கும்போது அந்த மாநில உரிமைக்குள் மூக்கை நுழைத்து அவ்வழக்கை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) எடுத்துக் கொள்வதற்கு வழிசெய்யவே இந்தத் திருத்தம்.

தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தொடங்கப்பட்டு வெறும் 15 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் இதன் இந்துத்துவ அரசியல் சார்பு அம்பலப்பட்டு நிற்கிறது.

இந்துத்துவப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் புலனாய்வில் குற்றவாளிகளிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்குமாறு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதென அவ்வழக்கை நடத்திய அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் (உ)ரோகிணி சலைன் 2015 சூன் 25 அன்று தெரிவித்தார்.

சம்சுதா விரைவுவண்டி குண்டுவெடிப்பு வழக்கிலும் ஐதராபாத்து, மெக்கா மசுசித்து குண்டுவெடிப்பு வழக்கிலும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வின் புலனாய்வு நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது.

சஎதச(ஊபா) சட்டம் காலவரையறையின்றிச் சிறையில் வைக்க வழிவகுத்தது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.). ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் புலனாய்வைக் கொண்டு போய்விட்டது.

மாநில அதிகாரத்தைப் பறிப்பதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும் செயல்திறனும் நேர்மையும் இல்லாததும் ஆன தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நிறுவனம் கலைக்கப்பட வேண்டும், அந்த சட்டம் கிழித்தெறியப்பட வேண்டும்.

திமுக, 2008ஆம் ஆண்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டம் இயற்றப்படும் போதும் ஆதரித்தது. அதில் 2019ஆம் ஆண்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வை மேலும் அதிகாரப்படுத்தும் வகையில் மோடி அரசு கொண்டுவந்த திருத்தத்தையும் ஆதரித்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதுகூட தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை, மாறாக இச்சட்டத்தை நியாயப்படுத்தி அறிக்கை கொடுத்தது.

வல்லரசியத்தின் [ஏகாதிபத்தியத்தின்] பயங்கரவாத எதிர்ப்புக் கோட்பாடு இந்தியாவில் பெற்றெடுத்த பிள்ளைதான் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! மாநிலத் தன்னாட்சி என்று வாயளந்து கொண்டே தே.பு.மு.(என்.ஐ.ஏ.)விடம் திமுக மண்டியிட்டது. காரணம், திமுகவின் வல்லரசியச் சார்பும் புதிய தாராளவாதப் பொருளியல் கொள்கையும் மாநிலத் தன்னாட்சி முணுமுணுப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டது; அதிமுகவும் இவ்விசயத்தில் விதிவிலக்கல்ல, கடந்த 2019இல் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 270 வழக்குகளில் சஎதச(ஊபா)பிரிவுகளைப் பயன்படுத்தி 308 பேரை சிறைப்படுத்தியுள்ளது. அதில் பெரும்பாலோருக்கு அதே ஆண்டில் பிணை கிடைத்துள்ளது.

கடந்த அட்டோபரில் நடைபெற்ற கோவை எரிவாயு உருளை வெடிப்புக்காகப் போடப்பட்ட வழக்கை ’மிகவும் அம்பலப்பட்டுப்போன’ தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வுக்கு அவசர அவசரமாக மாற்றி வேட்டை நாய்க்கு வெற்றிலைப் பாக்கு வைக்கும் வேலையைத் திமுக அரசு செய்துள்ளது. இவ்வண்ணம், தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தன் விருப்பம் போல் தமிழ்நாட்டில் செயல்பட திமுக அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் புரசைவாக்கத்தில் அலுவலகம் வைத்துக் கொண்டு விசாரணை, கைது என்ற பெயரில் இசுலாமியர்களை அச்சுறுத்தும் வேலையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தொடர்ந்து வருகிறது.

செயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகத்திற்குத் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கவில்லை. தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வை மாநிலஉரிமை மீதான அத்துமீறல் என்ற காரணத்தைச் சொல்லி அவர் எதிர்த்தார்.

திமுக அரசோ சஎதச(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அடக்குமுறைச் சட்டங்களையும் அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களையும் ஆதரித்தது; தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகம் தமிழ்நாட்டில் இயங்க அனுமதித்தது; தாமே முன்வந்து வழக்குகளை தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வுக்கு மாற்றியது; மக்கள் முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) தடையைக் கண்டிக்கவில்லை; மாறாக அத்தடையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தியது; தடைக்கு முன்னும் பின்னும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) செய்து வரும் கைது நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளவில்லை; கடந்த மே 9 அன்று வழக்கறிஞர்கள் மீதே பொய் வழக்குப் போட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) கைது செய்திருக்கும் நிலையில், அதைக் கண்டிக்கக் கூட மறுக்கிறது. இதன் மூலம், இசுலாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு நிகழ்த்தி வரும் அரசவன்முறை(பாசிச) ஒடுக்குமுறைகளுக்குத் திமுக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

அரசவன்முறையின்(பாசிசத்தின்) பயங்கர நிறுவனமாக தே.பு.மு.(என்.ஐ.ஏ.) பயன்படுகிறது. சஎதச(ஊபா) சட்டப் பிரிவுகளின் கீழ்ப் பொய் வழக்கு போடப்படுகிறது. எனவே, அரசவன்முறை(பாசிச) எதிர்ப்பில் அக்கறை கொண்டோர் சஎதச(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வை எதிர்த்துப் போராடாமல் இருக்க முடியாது. நாம் எழுப்ப வேண்டிய உடனடி மற்றும் நீண்ட காலக் கோரிக்கைகள்:

அரசவன்முறைய(பாசிச) பாசக அரசே!

  • மக்கள் முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) வழக்கு, பீமா கோரேகான் வழக்கு. தில்லி கலவர வழக்கு , முதலான சஎதச(ஊபா) வழக்குகளிலும் உடனடியாகப் பிணை வழங்கு!
  • சஎதச(ஊபா) பிரிவுகளின் கீழ்ப் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறு!
  • சஎதச(ஊபா) சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.(என்.ஐ.ஏ.). வைக் கலைத்திடு!

திமுக அரசே!

  • சஎதச(ஊபா), தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கொள்கை முடிவெடுத்திடு! அம்முடிவைச் செயல்படுத்த உழைத்திடு!
  • தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வைத் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்று! தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அலுவலகத்தை இழுத்து மூடு!
  • அரசவன்முறைய(பாசிச) எதிர்ப்பு மக்கள் முன்னணி

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 196 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4

      31 August 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.).! 2/4 – தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4


புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?
இவை காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாசக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் ஆண்டொன்றுக்கு 13 சஎதச(ஊபா) வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு 34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது.

பெரும்பாலான சஎதச(ஊபா) வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற சந்தேகக் காரணத்திற்கே பிரிவு 18 பயன்படுத்தப்படுகின்றது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வால் புலனாய்வு செய்யப்படும் 357 சஎதச(ஊபா) வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றில் எல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை; சதிதிட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரைத் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது.

சஎதச(ஊபா) வழக்குகளின் விசாரணை முடிவதற்குக் குறைந்தது 3 இல் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே சஎதச(ஊபா)வின் குறி.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி சஎதச(ஊபா) வழக்குகளில் சிறைபட்டோரில் 2018 இல் 16.32%, 2019 இல் 32.08%, 2020 இல் 16.88% மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர்.

சஎதச(ஊபா) வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டுத் தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57( 2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் சஎதச(ஊபா)வில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே.

(மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் குடிமை உரிமைக் கழகம்(PUCL) கடந்த 2022 அட்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும்.)

‘குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறுவிதமாக மெப்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது சஎதச(ஊபா).

சஎதச(ஊபா) சொல்லும் அதிருப்தி என்றால் என்ன?
“இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் அரசுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகிறது.அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஆட்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது.

இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ இசுலாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால், அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்படலாம்!

யாரைத்தான் விட்டுவைத்தது சஎதச(ஊபா)?
மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கு!

கனிம வளங்களை பெருநிறுமங்கள்(கார்ப்பரேட்கள்) கொள்ளையடிப்பதற்கு எதிராக பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்குத் துணைநின்றவர்கள், தணிந்த(தலித்து) மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். நாடறிந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், கலைஞர்கள், பேராசிரியர்கள், அருட்தந்தை இசுடான் சுவாமி முதலான 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை இசுடான் சுவாமி பார்க்கின்சன் நோய்க்கு ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது.

பீமா கோரேகான் வழக்கில் மூன்றுமுறை குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுப் புதியபுதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்ல சதிசெய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாகச் சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டுச் சிறையில் வாடிவருகின்றனர்.

மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்கு துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித்து, சருசீவு இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா சார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நர்வால், அசிப் இக்குபால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா முதலான மாணவர்கள் சஎதச(ஊபா) வின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராசுதீபு சருதேசாயும் வினோத்து கே சோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைக் குற்றாய்வு செய்ததற்காக அரசஇரண்டகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத்து சாக்குரா, பீர்சாடா ஆசிக்கு ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீது சஎதச(ஊபா)வின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக்கு கப்பான் மீது உத்தரபிரதேச அரசு சஎதச(ஊபா) பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது.

பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் எதிர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின் போது அவர்கள் மீது சஎதச(ஊபா)வின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு.
அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்கள், தனியார் சுரங்க நிறுவனங்களிடம் உள்ள சட்டஎதிர் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள், பிற பழங்குடிகளை இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். சார்க்கண்டின் மசுதூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபா( UAPA)வின் கீழ்க் கைது செய்யப்பட்டுச் சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப் பட்டது.

இசுலாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்து கொண்டிருக்கிறது. எந்தக் குற்றமானாலும் இசுலாமியர் என்றால் சஎதச(ஊபா) பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இசுலாமிய இளைஞர் சஎதச(ஊபா) வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு ’குற்றமற்றவர்’ என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


இவர்களுக்கு வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் சஎதச(ஊபா) பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கு, தெலங்கானாவைச் சேர்ந்த 9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் எனசஎதச(ஊபா) வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களை சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இசுலாமியர்கள் ஒருபக்கம்! இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாப்பு, நாகலாந்து, மணிப்பூர்முதலான மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொருபக்கம்! இந்துத்துவத்தின் பெருநிறுமக்(கார்ப்பரேட்டு) கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்குசல்பாரி அமைப்பினர், உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொருபக்கம்! இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223

புதன், 30 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 194 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 1/4 – தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4

இதைக் கண்டித்து மதுரை வழக்கர் சங்கம்(பார் அசோசியேசன்), தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கர் சங்கக் கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனே கொண்டுவர வேண்டும்; வழக்கறிஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.)அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டித்துத் தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று இவர்களுக்குப் போராடவில்லை எனில் நாளை எந்தவொரு சாமானியனும் வழக்கறிஞரை வைத்து சட்டமுறையில் கூடச் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.

இசுலாமியர்களைக் குதறும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.):
திறந்த வீட்டில் ஏதேதோ நுழைவது போல் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன.

நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.)–பாசகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரை குத்தி அச்சுறுத்த நினைக்கிறது அரசவன்ம பாசக அரசு.

கடந்த செட்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிகையைப் பதிவு செய்யாமல் மார்ச்சு 27 வரை இழுத்தடித்தது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).! அதையும்கூட நீதிமன்றத்தில் முன் வைக்காமல் காலந்தாழ்த்தியது; குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான், ”குற்றப் பத்திரிகையைத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). வெளியிட்டாக வேண்டும்” என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்துச் சிறைப்படுத்தியுள்ளது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).

கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைகட்டத் துடிக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.). கேட்பார் யாரும் இல்லை என்பது போல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கிறது.
அரசவன்முறையின்(பாசிசத்தின்) அடக்கு முறை கருவியாய் சஎதச(ஊபா)!


சஎதச(ஊபா) வந்த பாதை:
1962 சூன் மாதத்தில் தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவையை நேரு தலைமையிலான காங்கிரசு அரசு அமைத்தது. அப்பேரவை தேசிய ஒருமைப்பாடு, வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 ஐ திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு இணங்க 1963ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக் கூடிய திருத்தத்தைப் புகுத்தியது. 16 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை செயல்படுத்தும் நோக்கில் சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு அரசால் இயற்றப்பட்டது. அதுவரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தன. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடைசெய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாக காரணம் சொல்லப்பட்டது.

மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறைச் சட்டங்கள் சனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தை கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதை ஆளும்இனம் வாடிக்கையாகக் கொண்டிருந்தது.
2001 ஆம் ஆண்டு செட்டம்பரில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு ’பன்னாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்றது அமெரிக்கா. புதிய தாராளவாதப் பொருளியல் கொள்கையை எதிர்க்கும் மேற்காசியாவில் உள்ள அரபு நாடுகளை ஒடுக்குவதற்கு அவர்களின் எதிர்ப்பைப் ‘பன்னாட்டுப் பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் புதிய தாராளவாதம் என்னும் அரசியல்பொருளியல் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான இராணுவக் கோட்பாடாக வடிவமைத்தது அமெரிக்கா. இரட்டைக் கோபுரத் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் 2001 செட்டம்பர் 21 அன்று பன்னாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்மானம் 1373 ஐ இயற்றியது. இத்தீர்மானம் ஐ.நா. வின் அனைத்து உறுப்பரசுகளும் பன்னாட்டுப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றது.

உலகில் உள்ள எல்லா அரசுகளும் தன்னாட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அமெரிக்க வல்லரசியம் (ஏகாதிபத்தியம்) உருட்டிவிட்ட ’பயங்கரவாத தடுப்பு’ என்ற பகடைக் காயைப் பயன்படுத்திக் கொண்டன.

2002ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைச் சாக்காகக் கொண்டு பொடா சட்டத்தைப் பாசக அரசு அறிமுகப்படுத்தியது. அந்தக் கறுப்புச் சட்டத்தின் பேயாட்டம் கிளப்பிவிட்ட போராட்டப் புழுதியால் சட்டத்தைத் திரும்பப் பெறும் கட்டாயம் ஏற்பட்டது.

வழமைப் போலவே, 2004 ஆம் ஆண்டு பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்றவுடன் காங்கிரசு அரசு சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டத்தில்( ஊபா) பயங்கரவாத தடுப்புக் கூறுகளை சேர்த்தது. சட்டஎதிர் தடுப்புச் செயல்களின் வரைவிலக்கணத்தில் ’பயங்கரவாத செயல்’ , ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகியவை சேர்க்கப்பட்டன. பிணை கிடைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் சிறைப்பட்டவரின் முதல் நோக்கிலான குற்றமின்மையை நீதிமன்றம் ஒப்புகொண்டால்தான் பிணை தரப்படும் என்ற திருத்தம் செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு சஎதச(ஊபா) சட்டம் திருத்தப்பட்டது. இப்போது மிக வெளிப்படையாகவே மேற்சொன்ன ஐ.நா. தீர்மானம் 1373 ஐச் சுட்டிக்காட்டி அதன் அடிப்படையிலேயே இத்திருத்தத்தைக் கொண்டுவருவதாக சொன்னது இந்திய அரசு. இச்சட்டத்தில் உள்ள பிரிவு 43(ஈ) இல் செய்யப்பட்ட திருத்தங்கள் பிணை கொடுப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. ஆறு மாதத்திற்கு மேல் தடுத்து வைப்பதற்கும் புலனாய்வு செய்வோர் 90 நாட்களுக்குள் புலனாய்வை முடிக்க இயலாவிடில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுத்து வைப்பதற்கான காலத்தை 180 நாட்கள் வரை நீட்டிக்கவும் திருத்தங்கள் வழிவகுத்தன. இந்தத் திருத்தத்தின் மூலம் சஎதச(ஊபா) என்பது பண்பளவில் ஆபத்தான சட்டமாக மாற்றப்பட்டது. இதே ஆண்டில், தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டமும் இயற்றப்பட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) என்றொரு புதிய புலனாய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

2012இல் மீண்டும் ஒருமுறை இச்சட்டம் திருத்தப்பட்டது. நிதியியல் நடவடிக்கைக்கான செயலணி (Financial action task force) என்ற பன்னாட்டு அமைப்பில் ஒப்புக்கொண்டதற்கு இணங்கப் பண மோசடியையும் பயங்கரவாதத்திற்கு பணம் கொடுப்பதையும் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் திருத்தங்கள் செய்யப்பட்டன. எந்த ஓர் இயக்கத்தையும் காரணம் சொல்லாமல் ’சட்ட எதிர்’ என அறிவித்துக் கைதுகளைச் செய்யலாம், ஆறு மாதங்கள் வரை இப்படிச் சட்டஎதிராக அறிவித்ததற்கான காரணங்கள் என எதையும் சொல்ல வேண்டியதில்லை ஆகிய திருத்தங்களும் செய்யப்பட்டன.

2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவோர் ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருப்பவற்றில் மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223