பள்ளிக்கூடச் சிறுவனுக்கு முனைவர் பட்டம்
பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் பாராட்டு
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் த. சந்தோசு கண்ணா.
இந்த மாணவருக்கு அண்மையில் மதுரையில் நடந்த விழாவில் பன்னாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இளம் அகவையில் மகிழுந்துபற்றிய பல செய்திகளை மிகவும் துல்லியமாகக் கூறி வருவதால் முனைவர் வழங்கப்பட்டது. இவர் ஏற்கெனவே ஆசிய ஆவண ஏடு(Asia Book of Record), இந்திய ஆவண ஏடு(India Book of Record), உலக ஆவண உதவி(Assist World of Records),சென் கழகத்தின்(The SEN Academy) தி பாராட்டுச் சான்றிதழ் முதலான பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றவர்.
மாணவர் சந்தோசு கண்ணாவுக்கு ஆயிரவைசிய சபை-கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் பெருந்தலைவருமான இராசி என். போசு அறிவுறுத்தலின்படி தாளாளர் பி. இராசேசு கண்ணா, பொருளாளர் பி. பிரசன்னா முதலானோர் மேலும் பல பட்டங்களைப் பெற வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
அப்போது பள்ளிக்கூட முதல்வர் செயபிரமிளா, துணை முதல்வர் பவானி, மேலாளர் சதீசு முதலானோர் உடன் இருந்தனர்.
மாணவரின் தந்தை தண்டாயுதபாணி காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.
இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இளம் அகவையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் என்ற பெருமையை த. சந்தோசு கண்ணா பெறுகிறார்.
முனைவர் பட்டம் பெற்ற சந்தோசு கண்ணாவிற்குப் பள்ளி ஆசிரியர்கள், உடன் பயிலும் மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துகளைத் தெரிவிக்க :
+91 94423 20020
தரவு: முதுவை இதாயத்து, துபாய்
00971 50 51 96 433
muduvaihidayath@admin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக