வெள்ளி, 17 ஜூலை, 2009

வேண்டாமே இந்த விபரீதம்!



கும்மிடிப்பூண்டி, ஜூலை 16: கும்மிடிப்பூண்டியை அடுத்த கொசவன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி கட்டடத்தில் உள்ள குப்பைகளை ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்களே அகற்றுகின்றனர்.கொசவன்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை 250 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளி கட்டடத்தின் அருகே மரங்கள் உள்ளன. இதன் சருகுகள் காய்ந்து பள்ளி கட்டடத்தின் மீது கொட்டி விடுகிறது.பள்ளி கட்டடத்தின் மேற்பகுதியில் சேர்ந்த இந்த குப்பை கூளங்களில் மழைநீர் சேர்ந்தால் தண்ணீர் தேங்கி விடும் என்பதாலும், குப்பைகளுடன் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசும் என்பதாலும் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி கட்டடத்தின் மேலுள்ள இந்த குப்பைகளை தினந்தோறும் அகற்ற கொசவன்பேட்டை ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளனர்.ஆனால் ஊராட்சி நிர்வாகத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்யாததால் பள்ளி நிர்வாகத்தினர் இந்த குப்பைகளை அப்புறப்படுத்த பள்ளி மாணவர்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் சிலரை இந்த பள்ளி கட்டடத்தின் மேல் ஏற்றி ஒருவர் குப்பைகளை கூடையில் வாரிக் கொடுக்க அதை இன்னொருவர் பெற்று பள்ளியின் சுற்று சுவர் மேல் நின்றபடி இருக்கும் வேறொரு மாணவரிடம் தர அவர் அதை வெளியே கொட்டுகிறார்.இப்படி ஆபத்தான முறையில் பள்ளிக் கட்டடம் மீது மாணவர்கள் ஏறி குப்பைகளை சுத்தம் செய்வது விபரீதத்தில் கொண்டு போய் விடலாம். இந்த பள்ளியின் சுற்றுச் சுவரிலிருந்து தரை 20 அடியில் உள்ளது. சுற்றுச் சுவரின் மீதிருந்து குப்பையை கொட்டும் மாணவன் தவறி விழுந்தால் நிச்சயம் அவருக்கு காயம் ஏற்படும். அதே சமயம் இந்த பள்ளியின் சுற்றுச் சுவரை ஒட்டி உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது.இப்படி விபரீதத்தின் அருகிலிருந்து மாணவர்கள் பள்ளியின் மேல் கட்டடத்திலிருந்து குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க ஊராட்சி நிர்வாகம் பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று துப்புரவுப் பணியாளரை தினமும் பள்ளிக் கட்டடத்தின் மேல் பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளி நிர்வாகமும் இது போன்ற ஆபத்தான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தாது தவிர்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்கள்

உடனடியாக இதனை நிறுத்தவும் உரிய ஏற்பாடு செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்தபின்தான் அறிவுரை வழங்குதல் என்னும் போக்கைப் பின்பற்றாமல் தினமணி கவனத்திற்குக் கொண்டுள்ள செய்தியின் இடரையும் இன்றியமையாமையையும் உணர்ந்து உடனே களைய வேண்டும். சட்ட மன்றத்திலேயே இது குறித்து அறிவிப்புவரலாம் என்றும் எதிர்நோக்குகிறேன். அவ்வாறு எடுக்கப்படும நடவடிக்கைக்குத் தினமணிக்கு முன்னதான பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/17/2009 3:55:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக