பரிதி இளம்வழுதி (ஐப்பசி 26, 1990 – 11.11.1959 / புரட்டாசி 27, 2049-13.11.2014)
மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!
மேனாள் அமைச்சரும் அமமுக அமைப்புச் செயலாளருமான பரிதி இளம்வழுதி இன்று நலக்குறைவால் காலமானார்.
தி.மு.க.வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலாகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த இளம் வழுதியின் மகன்தான் பரிதி(இளம்வழுதி).
அறிவுக்கொடி என்னும் இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் சிறிது காலம் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டார்.
இவரது சொல் வன்மையும் நாநயமும் இவரைத் தி.மு.க.வின் சிறப்புப் பேச்சாளர்களுள் ஒருவராக மாற்றியது. மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க மட்டுமல்லாமல் உருக்கத்தில் மூழ்கும் வண்ணமும் பேசும் திறன் மிக்கவர்.
தன் 25 ஆம் அகவையில் பெரம்பூர்சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக(1989-2011) இருந்தார். இதைத் தொடர்ந்து 1991,1996, 2001, 2006-ம் ஆண்டுகளில் திமுகவில் மேலும் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் 11ஆவது சட்டமன்றக்காலத்தில் (1996-2001 ) பேரவைத் துணைத் தலைவராகத் திகழ்ந்து மாற்றுக் கட்கியினரும் விரும்பும் வண்ணம் செயல்பட்டார்.
2006-2011 இல் செய்தி – விளம்பரத்துறை அமைச்சராக இருந்தார்.
1991-1996 தேர்தலில் கலைஞர் கருணாநிதி மட்டுமே திமுகவின் சட்டமன்றஉறுப்பினராக இருந்து அவரும் பேரவை வராமல் இருந்தார். இடைத்தேர்தலில் வென்று வாகை சூடிய பரிதி இளம்வழுதி சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து எதிர்நிலையில் இருந்த ஆளும் அதிமுகவைச் சமாளித்தார்.. இதனால் திமுகவின் தலைவர் கருணாநிதி இவரைச் செல்லப்பிள்ளை என்றும் திமுகவின் அபிமன்யு, இந்திரசித்து என்றும் பாராட்டினார். இருப்பினும் தனக்குரிய முதன்மை அளிக்கவில்லை என வருந்தி அதிமுகவில் 28.06.2019 இல் இணைந்தார். மறுநாள் அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதிமுகவின் தலைவி செயலலிதா மறைவிற்குப்பின்னர் பன்னீர் ஆணியில் இருந்தார். பின் தினகரன் ஆதரதவு நிலைப்பாட்டில் இருக்கிறார் என அதிமுகவில் இருந்து நீக்கபபட்டு அமமுக வில் இணைந்தார்.
நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்படடவர் திடீரென்று உயிரிழந்தார்.
அவரை இழந்து வாடும குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(நன்றி : படம்-தினமலர் காணொளி)
தமிழ்க்கையொப்ப நீள் பதாகை
அவரைப்பற்றிய நினைவுக் குறிப்பு ஒன்று.
பரிதி இளம் வழுதி செய்தித்துறை அமைச்சராக இருந்த பொழுது நான், கலைபண்பாட்டுத்துறை, தென்னகப் பண்பாட்டுமையம் சார்பில் நடத்திய பொங்கல் கலைவிழாவிற்கு அழைத்திருந்தேன். தமிழில் கையொப்பமும்சுருக்கொப்பமும் இடுவதை வலியுறுத்தி அனைவரிடமும் கையொப்பம்பெறும் வகையில் நீள்பதாகையை வைத்திருந்தேன். அதில் முதல் கையொப்பம் இட்டுத் தொடக்கி வைக்க வேண்டும் என வேண்டியிருந்தேன். கண்டிப்பாக வருவதாகக் கூறினார். அழைப்பிதழையும் நேரில் அளிக்க நேரம் கிடடவில்லை. விழாவன்று தொலைபேசிவழி நினைவூட்டினேன். நண்பர்களுடன் வருவதாகக் கூறினார.
சரியான நேரத்திற்கு வந்தார். அவர் உடன் நடிகர் குமரிமுத்துவும் கட்சியினர் சிலரும் வந்திருந்தனர். இதில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக நண்பர்களையும் அழைத்து வந்திருப்பதாகவும் தொடர்ந்து மேலும் நண்பர்களை அனுப்பி வைப்பதாகவும் கூறி இம்முயற்சியைப் பாராட்டினார். 5 நாள் விழாவின்பொழுது சென்னைக் கடற்கரையில் கண்ணகி சிலையிலிருந்து திருவள்ளுவர் சிலை வரை உள்ள தொலைவில் பதாகை வைத்திருந்தோம். அவர் சொன்னதுபோல் பிற நாள் சிலர் அவர் மூலம் அறிந்து வந்ததாகக் கூறினர். பெயருக்கு நிகழ்ச்சிக்கு வந்துபோகாமல், ஈடுபாட்டுடன் பங்கேற்றுப் பிறரையும் பங்கேற்கச் செய்த அவரது தமிழ் உணர்வு பாராட்டத்தக்கது.
ஆனால், அப்பொழுது புதியதாகத் துறைச் செயலர் பொறுப்பேற்ற இ.ஆ.ப. அதிகாரி, நேர்மையில்லாத துணைச்செயலர் கருத்தினை நம்பி, “இது தமிழ்வளர்ச்சித்துறை வேலை, கலைபண்பாட்டுத்துறை மூலம் ஏன் செய்ய வேண்டும்” என்றார். “தமிழ் அனைவருக்கும் பொதுவானது. கலையில் இயற்கலையும் அடங்கும்/ கலை வழியாகவும் தமிழ் வளர்த்தலே துறையின் கடமை” என்றேன்.
“நான் இவ்வாறு செய்வதை வரவேற்கின்றேன். ஆனால் தமிழ் வளர்ச்சித்துறைதான் செய்ய வேண்டும். நம் துறையின் வேலை இதுவல்ல” என்றார். ஆனால், காலையில் நடைப்பயிற்சி செல்பவர்களும் கையொப்பமிட்டு ஒருவருக்கொருவர் தகவல் தெரிவித்துப் பலரும் கையொப்பமிட்டனர். ஊக்கப்படுத்த வேண்டிய மேலதிகாரி புறக்கணிக்கும் பொழுது (அப்போதைய) அமைச்சர் பரிதி இளம் வழுதி இளம் வழுதி ஆர்வம் காட்டியதால் மறக்கமுடியாகத நினைவுகளில் ஒன்றாக இஃது அமைந்து விட்டது.
நினைவுப் பகிர்வில் இலக்குவனார் திருவள்ளுவன்