தமிழர்கள் இன்னும் உணர்வை இழக்கவில்லை |
பிரசுரித்த திகதி : 10 Jul 2009 |
தூக்கமில்லாத இரவுகளுடன் கரைகின்றன தமிழர்கள் பெரும்பாலோரினது இரவுப் பொழுதுகள். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் , இழப்புக்களை தாங்கிக்கொள்ள இயலாமல் விம்மிவெதும்பும் கனத்த இதயங்களுடன், விழியோரத்தில் கண்ணீருடன் கேள்விக் குறிகளாய் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள். இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம். முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல முடியாமல் திணறிய சிங்களம் இப்போது பல வல்லரசுகளின் பூரண ஆதரவோடு ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி முடித்துவிட்டு புலிகளை முற்றாக அழித்தொழித்துவிட்டோம் என எக்காளமிடுகிறது. வீடிழந்து, நிலமிழந்து, சேர்த்துவைத்த செல்வங்கள் அனைத்தையும் இழந்து உயிரைத்தன்னும் காப்பாற்றிக் கொள்ளலாமென எண்ணி ஏதிலிகளாய் அகதிகளாய் உணவின்றி, நீரின்றி அலைந்துதிரிந்து... கடைசியில் உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்து கைகால்களை இழந்து ஊனமாகி இன்னும் கொலைக்கூடாரங்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பேரவலத்துடன் இன்றும் தமிழினம். தமது சுய உரிமைக்காகப் போராடிய தமிழினம் திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை சிதைத்து அதை இல்லாமற் செய்வதற்கு எத்தனை நாடுகள் போட்டி போட்டு முண்டியடித்தன என்பதை கண்முன்னே கண்டோம். முப்பது வருடத்துக்கும் மேலாக எத்தனையோ சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வளர்ச்சிபெற்று வந்த தமிழர் போராட்டத்தினை எப்படியாயினும் சிதைத்து விட வேண்டுமென்பதில் சிங்களத்தினைவிட சர்வதேசமே அதீத அக்கறை காட்டியதையும் காண முடிந்தது. ஈழ விடுதலைப் போராட்டமானது தமிழர்களின் தன்மான உணர்வு, விடுதலையுணர்வு, தியாக உணர்வு, மனோபலமிக்க போராட்ட உணர்வு என அவர்களின் உன்னத உணர்வுகளினாலேயே எல்லாவிதமான சோதனைகளையும் ,சவால்களையும் சமாளித்துத் தாண்டி வந்திருந்தது. சோதனைகளையும் சாதனைகளாக மாற்றினர். சவால்களை எதிரிக்கே திருப்பிக் கொடுத்தனர். ஆனால் இன்று ஒரு இக்கட்டான நிலைமையை ஈழப் போராட்டம் எதிர்கொண்டிருக்கும் நிலைமையில் அனைத்துத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு குழப்பமான மனநிலையைக் காணக் கூடியதாகவுள்ளது. "எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் , இனிமேல் என்ன?" என்பது தமிழர்கள் எல்லோர் மன ஆழத்திலும் எழும் கேள்வி. பதில் என்ன.....? இழப்புக்களின் வலிகள் உங்கள் உணர்வுகளை அதிகமாக்கியிருக்கும். முன்பைவிட பலமடங்கு அதிகமாக உங்கள் உணர்வு தற்பொழுது உருப்பெற்றிருக்கும். நமது போராட்டத்தின் கடந்த கால வரலாறுகளில் எங்கெல்லாம் நாம் விழுந்தோமோ , அங்கெல்லாம் வீறு கொண்டெழுந்திருந்தோம். இந்நிலையில் அவர்கள் கேட்பதெல்லாம் இனிவரும் களம், அது அகிம்சை வழியோ... அரசியல் வழியோ... போராட்ட வழியோ... எதுவாக அமைந்தாலும் அதை அமைத்துக் கொடுப்பவர்கள் விலைபோகாத விடுதலையுணர்வுடன், இதயச்சுத்தியுடன் இருக்க வேண்டுமென்பதே. தற்போதைய நிலைமையில் தமிழருக்கான போராட்டக்களம் எதுவாக அமைய வேண்டும் என்பதுவும் அப்போராட்டங்கள் எப்படியான முறைமைகளில் வழிநடத்தப்பட வேண்டும் என்பதனையும் பொறுத்தவரையில் மிகப்பெரியளவில் வாதவிவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அவ்வாறான தளம்பல் நிலையிலிருந்து தெளிந்து கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஓரணியில் தமிழர்கள் அனைவரும் திரளவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம் என்பதனை ஒவ்வொரு உணர்வுமிக்க தமிழனும் புரிந்து செயற்படவேண்டும். தமிழர்களின் விடுதலையுணர்வை,எழுச்சியுணர்வை அடக்குவதிலேயே இப்போது சிங்களம் குறியாய் இருக்கின்றது. அதற்கான காய்நகர்த்தல்களில் அது இறங்கிவிட்டது. இலங்கையில் உள்ள தமிழர்களின் இன உணர்வுகளை அடக்குமுறைகளினால் அடக்கிவிடலாம் என நம்பும் சிங்களம், புலம்பெயர்தேச தமிழ்மக்களின் எழுச்சிகளை அடக்குவதற்கு பல்வேறு சதிவேலைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது. இந்த விடயத்தில் புலம்பெயர் உறவுகள் மிக அவதானமாக இருக்கவேண்டும். எதிரியின் சதிகளை முறியடிப்போம். ஒருபோதும் நாம் நமது உணர்வுகளை எதற்காகவும்,எச்சந்தர்ப்பத்திலும் இழக்கப் போவதில்லை என்பதனை செயலில் காட்டுவோம்! ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் என்பது இந்த உலகத்தின் வரலாற்றுப் பதிவுகளில் ஒன்று. எழுதப்படப்போகும் அவ்வரலாற்றுப் பதிவுகளில் ஈழத்தமிழரின் நீண்டகால போராட்டம் வீணாகிப்போனது என்று பதியப்படாமல் வெற்றிபடைத்து தனிநாடு கண்டு சரித்திரம் படைத்தது என்றே பதியப்படவேண்டும். உரிமை இழந்தோம்.. உடைமையும் இழந்தோம்...! - உணர்வை இழக்கலாமா??? விடியலுக்கில்லை தூரம்... உன் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்??? -பருத்தியன்- |
திங்கள், 13 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக