சனி, 26 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 191 : இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?

      26 August 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 190 : மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!- தொடர்ச்சி)

இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?

நான் இறைமறுப்பாளன். சமய மறுப்பாளன். ஆனால் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இறைமறுப்பு, சமயமறுப்பு இயக்கமன்று. அதே போல் இறைநம்பிக்கைக்கான இயக்கமும் அன்று. தமிழர்களில் பல சமயத்தவர் இருப்பது மெய். சமய மறுப்பாளர்களும் உள்ளனர். சமய விடுமை என்பது ச்மய மறுப்பு விடுமையும் அடங்கலானது. பொது அமைதிக்கும் பொது ஒழுங்குக்கும் உட்பட்டு சமயத்தைக் காட்டிக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் சமயத்தைப் பரப்பவுமான விடுமையே சமய விடுமை ஆகும். இதுவே சமய மறுப்பு விடுமைக்கும் பொருந்தும். சமய மறுப்பைக் காட்டிக் கொள்ளவும் கடைப்பிடிக்கவும் பரப்பவும் விடுமை உண்டு.

சமயம் அல்லது சமய மறுப்பை அரசிலோ அரசியலிலோ கலக்கக் கூடாது என்பதுதான் சமயச் சார்பின்மை [SECULARISM] எனப்படும் உலகியல். சமய வழிபாட்டில் அல்லது சமய நிறுவனங்களில் சொத்துச் சிக்கல் போன்ற உலகியல் செய்திகள் தொடர்புற்றிருக்கும் நேர்வுகளில் மட்டுமே அரசு தலையிட வேண்டும். தேவையான நேரத்தில் தலையிடவும் வேண்டும். காட்டாக, சமயத்தின் பெயரால் ஒரு சிறு கும்பல் மக்களின் சொத்தை வன்பறிப்பு செய்யுமானால் அரசு தலையிட வேண்டும். சமய உரிமையின் பெயரால் ஒருசில சமுதாயங்களுக்குக் கோயில் நுழைவு அல்லது தெரு நுழைவு மறுக்கப்படுமானால் அரசும் அரசியல் ஆற்றல்களும் தலையிடத்தான் வேண்டும். கருவறை நுழைவும் இப்படித்தான்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல பெரிய கோயில்கள் மன்னராட்சிக் காலத்திலிருந்தே சில மேல்சாதி நிலக்கிழார்களின் பிடியில் இருந்தன. இவை பார்ப்பனர்களின் பண்பாட்டுக் கோட்டைகளாகவும் விளங்கின. நான் பிறந்த திருவாரூரில் தியாகராசர் கோயில் வி.எசு. தியாகராச முதலியாரின் தலைமையிலான அறக்கட்டளை அல்லது அறங்காவலர் குழுவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இந்தக் கோயிலுக்கு ஓராயிரம் வேலி நன்செய் நிலம் இருந்தது. வேலி என்றால் 20 மா. ஆறு மா சற்றொப்ப ஒரு ஏக்கர் வரும் என நினைக்கிறேன்.

தியாகராச சாமிக்கு ஆயிரம் வேலியும், அதே பெயர் கொண்ட ஆசாமிக்கு 1,001 வேலியும் இருந்ததாம். ஆசாமி ஒரு வேலியைச் சாமிக்கு எழுதி வைத்து விட்டாராம். ஆனால் மொத்தம் 2.001 வேலியும் ஆசாமியின் ஆளுகையில் நீடித்ததாம். கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்தவர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் செவ்வியக்கம் பல போராட்டங்களை நடத்தியது வரலாறு. அதே செவ்வியக்கத் தலைவர்கள் சிலர் கோயில் அறங்காவலர்களாகி குத்தகை சாகுபடியாளர்களை வஞ்சித்த நேர்வுகளும் உண்டு.

சைவ வைணவக் கோயில்களின் பெயரில் பெரும் நிலச்சொத்துகள் இருப்பதையும், இவற்றைப் பரம்பரை அறங்காவலர்களோ மடாதிபதிகள் அல்லது ஆதீனகர்த்தர்களோ ஆண்டு அனுபவித்து வருவதையும் மன்னராட்சிகள் காலங்காலமாய்ப் பாதுகாத்து வந்தன. சாதிய-நிலக்கிழாரிய அமைப்பின் ஒரு முகன்மைக் கூறாக இந்தக் கோயில் சொத்துடைமை ஆட்சி அமைந்திருந்தது.

பிரித்தானியக் குடியேற்ற(காலனி)ஆதிக்கம் கிழக்கிந்தியக் கும்பினியின் வடிவில் தொடங்கிய போது இந்த கோயில் சொத்துடைமையின் மீது வெள்ளையர் ஒரு கண் வைக்கலாயினர். ஒரு புறம் அவர்களின் வரித் தண்டல் கொள்ளைக்கும், மறுபுறம் வணிக அங்காடி வளர்ச்சிக்கும் கோயில் சொத்துடைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர நினைத்தனர். 1810, 1817 ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கும்பினி இந்துக் கோயில்களின் ஆட்சியில் தலையிடுவதற்கான சட்டங்கள் இயற்றியது.

பல வகையிலும் எதிர்ப்புக் கிளம்பியதால் 1841க்குப் பின் அரசு பின்னடித்தது. 1857 சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போருக்குப் பின் கிழக்கிந்தியக் கும்பினியின் ஆட்சியை மாற்றி பிரித்தானிய முடியரசே 1858 விக்குடோரியா சாற்றுரை வழியாக தன் நேரடி ஆட்சியை நிறுவிய பின் குறுநில மனனர்கள், நிலக் கிழார்களின் ஆளுகையில் தலையிடாமைக் கொள்கையை மேற்கொண்டது. அறமற்ற அறங்காவலர்களை அவிழ்த்து விட்டாற்போலாயிற்று. அவர்கள் கோயில் நிதியையும் நகைகளையும் விருப்பம் போல் கொள்ளையடித்தனர். கோயில் நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்றும் குத்தகைக்கு விட்டும் ஆதாயமடைந்தனர்.

சிவன் சொத்து குலநாசம்” போன்ற அச்சுறுத்தல்களுக்கு யார் அஞ்சினாலும் அறங்காவலர்களும் அருச்சகர்களும் அஞ்சுவதில்லை. நிதி ஆதாரமில்லமல் பல கோயில்களில் பூசைகள் நின்று போயின. இறையன்பர்களே இப்போது அரசுத் தலையீட்டைக் கோரினர். 1863இல் இசுலாமிய நிறுவனங்கள் உட்பட இந்து சமயக் கோயில்களின் ஆட்சியில் தலையிடுவதற்கான அறநிலையச் சட்டம் போடப்பட்டது. இது தயங்கித் தயங்கிச் செய்த ஒரு தொடக்கம் மட்டுமே.

இரட்டையாட்சி முறைப்படி சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியமைத்த பிறகுதான் 1925ஆம் ஆண்டு பனகல் அரசர் ஆட்சியில் இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926ஆம் ஆண்டு செட்டம்பர் 17ஆம் நாள் மதராசு இந்து சமயம் அறநிலையச் சட்டம், 1927  என்ற சட்டம் வரையப்பெற்றது. இதன்படி ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் நிருவாக அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர்.

இந்திய விடுமை (சுதந்திரம்) என்ற அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியர் பி. வெங்கட்ரமணராவு(நாயுடு) தலைமையில் அறுவர் கொண்ட குழுவின் அறிக்கையின்படி மதராசு இந்து சமயம்-அறநிலையச் சட்டம், 1959 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அறநிலைய வாரியங்கள் மாற்றப்பட்டு அறநிலையத் துறை உருவானது. இதன்படி, அறங்காவலர்களால் இயற்றப்படும் தீர்மானங்களை அரசால் நியமனம் செய்யப்பட்ட நிருவாக அதிகாரிகள் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவார்கள்.

இப்படிப் பிறந்ததே தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை. இது சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதே தவிர, இந்து சமய ஆகம விதிகளுக்கு உட்பட்டதன்று. இஃது உலகியல் நிறுவனமே தவிர சமய நிறுவனம் அன்று. கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்படுவதைத் தடுப்பதுதான் அதன் கடமையே தவிர இந்துத்துவ நிகழ் நிரலைச் செய்து முடிப்பதன்று.

இதையெல்லாம் இப்போது யாருக்கு நினைவுபடுத்துகிறோம்? தமிழக அரசுக்குத்தான்! குறிப்பாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்குத்தான்! பார்ப்பானை விஞ்சிய பார்ப்பனாக இருப்பதுதான் இந்து அறநிலையத் துறை அமைச்சருக்குரிய தகுதி என்று அவர் எண்ணிக் கொள்வார் போலும்! இந்துத்துவ நிகழ்நிரலின் படி கோசாலை அமைத்தால் போதாதென்று கோமாதா கோமியம் கழிக்கும் பின்பக்கம் நின்று தீபாராதனையும் காட்டி வழிபாடு செய்கிறார்.

அரிசனங்கள் கோயிலில் நுழையக் கூடாது என்று கோயில் வாசலில் அறிவிப்புப் பலகை தொங்கிய ஒரு காலத்தில், பி. பரமேசுவரன் என்ற ‘அரிசன்’ ஒருவரையே இந்து அறநிலையத் துறை அமைச்சராக்கிக் கோயில் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக்கியதோடு, அவருக்குப் பார்ப்பனப் பூசாரிகளே பூரண கும்ப மரியாதை தர வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியவர் அன்றைய முதலமைச்ச்சர் காமராசர்.

சேகர்பாபுவின் பொறுப்பில் இந்து அறநிலையத்துறை எப்படிச் செயல்படுகிறது என்பதில் முதலமைச்சர் சற்றே கவனம் செலுத்த வேண்டுமெனக் கோருகிறேன். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு என்ற நெறிப்படி சேகர்பாபுவின் நடவடிக்கைகள் தமிழக அரசுக்கும், அதன் திராவிடக் கொள்கைகளுக்கும் பெருங்கேடாகிக் கொண்டிருப்பதை விரைவில் உணர்ந்தால் நல்லது.

சாதி வெறி சமய வெறி அரசியலின் கோட்டை கொத்தளங்களாகத் தமிழ்நாட்டுப் பெருங்கோயில்களும் சிறு கோயில்களும் மாற்றப்பட்டு வருகின்றன. தமிழக அரசு இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல்  221

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 190 : மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!

      25 August 2023      அகரமுதல

(தோழர் தியாகு எழுதுகிறார் 189 : மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!-தொடர்ச்சி)

  மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!  

மணிப்பூர் என்றதும் எனக்கு வரக்கூடிய சில நினைவுகள்:   1)      மணிப்பூரில் இந்தியப் படை இழைத்த வன்கொடுமைகளை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டம்; படை முகாமுக்கு எதிரில் ஒரு பத்துப் பெண்கள் ஆடை களைந்து வரிசையாக நின்று “INDIAN ARMY RAPE US” (இந்தியப் படையே! எங்களை வன்புணர்வு செய்!) என்ற பதாகை தாங்கி நின்றார்களே, அந்தப் போராட்டம்!   2)      இந்தியப் படையை  மணிப்பூரிலிருந்து வெளியேறக் கோரி இரோம் சருமிளா நடத்திய அந்த நீண்ட நெடிய பட்டினிப் போராட்டம். அந்தப் போராட்டம் தன் கோரிக்கையில் வெற்றி பெறவில்லை என்றாலும் ஆய்தப் படைகள் சிறப்பதிகாரச் சட்டம் (AFSPA) போன்ற கொடுஞ்சட்டங்களையும், இந்தியப் படையின் கொடிய தன்மையையும் உலகின் பார்வையில் தோலுரித்துக் காட்ட உதவியது. இரோம் சருமிளாவின் போராட்டம் முடிந்த விதம் அந்த நீண்ட போராட்டத்துக்குப் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை என்ற குறை எனக்குண்டு.   3)     குடியேற்ற( காலனி)ஆதிக்கக் காலத்தில் மணிப்பூர் குறுநில அரசாக (சுதேச சமத்தானமாக) இருந்தது. அஃது இந்தியாவில் இணைக்கப்பட்டது எப்படி? என்பதை மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியர், மாந்தவுரிமைவுப் போராளி திரு ஓசுபெட்டு சுரேசு சொல்வார்:   அதிகாரக் கைமாற்றத்துக்காக இந்தியாவுடனும் பாகித்தானுடனும் பிரித்தானிய அரசு செய்து கொண்ட உடன்படிக்கையின் படி சமத்தானம் ஒவ்வொன்றும் தன் வருங்காலம் குறித்து மூன்றிலொரு முடிவு எடுக்கலாம்: (1) இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாம், அல்லது (2) பாகித்தானுடன் இணைந்து கொள்ளலாம், அல்லது (3) தனியரசாகத் தொடரலாம்.   மணிப்பூர் எந்த முடிவும் எடுக்காமலிருந்த போது மணிப்பூர் அரசரை இந்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம். தில்லி வந்த மன்னரிடம் இந்திய அரசு இணைப்பு ஒப்பந்தத்தை நீட்டிக் கையொப்பம் இடச் சொன்னதாம்! இட்டால் பதவி, பணம், பகட்டோடு வாழலாம்; மறுத்தால் திகார் சிறைக்குப் போகலாம் என்று அச்சுறுத்தினார்களாம். மன்னரும் மணிப்பூரை இணைத்து விட்டு ஊர் திரும்பினாராம்.   எச். சுரேசு சொல்வார்: “நாளைக்கே மணிப்பூரில் சுதந்திர வாக்கெடுப்பு நடத்தினால், மணிப்பூர் இந்தியாவில் இருக்காது.”  
++
நேற்றைய மடலில் மணிப்பூர் தொடர்பாக நானும் வழிமொழிந்துள்ள ஒரு வேண்டுகோள் அறிக்கையை (மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!) வெளியிட்டிருந்தேன்.  மணிப்பூர் வன்முறையில் பாரதிய சனதாக் கட்சிக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும், மணிப்பூர் நீதிமன்றத்துக்கும் முகன்மைப் பங்கு உண்டு என்று சொல்லியிருந்தேன்:  1)      2023 ஏப்பிரல் 27ஆம் நாள் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தலைமை நீதியர் எம்.வி. முரளிதரன் வழங்கிய தீர்ப்புதான் முதலில் கலகத்தைத் தூண்டியது. மைத்தி சமுதாயத்தை அட்டவணைப் பழங்குடியாக வகைபடுத்த இந்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை வழங்க நான்கு மாத அவகாசம் கொடுப்பதுதான் இந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதியர் முரளிதரன் தமிழ்நாட்டுக்காரர். மைத்தி சமுதாயத்தைப் பழங்குடி அட்டவணையில் சேர்ப்பது ஏற்கெனவே அந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ள குக்கி, சோ ஆகிய சமுதாயங்களின் உரிமைகளை, முகன்மையாக நிலவுரிமைகளை அச்சுறுத்துவதாக இருக்கும். இது இனமோதல் ஏற்படத் தூண்டுதலாக அமைந்து விட்டது.  2)      மைத்தி சமுதாயத்தையும் குக்கி (+சோ) சமுதாயத்தையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவது பாசகவின் முயற்சி. மறு புறம் பழங்குடிகளின் நிலவுரிமைகளைப் பறிப்பது இந்திய அரசின் புதுத்தாராளியக் கொள்கைக்குத் தேவைப்படுகிறது. பழங்குடி மக்களை “வெளியார்” என்றும் “வந்தேறிகள்” என்றும் “சட்டப்புறம்பானவர்கள்” என்றும் சொல்லி நிலவெளியேற்றம் செய்யும் முயற்சிகளை இந்த ஆண்டு சனவரி மாதமே பிரேன் சிங்கு தலைமையிலான மணிப்பூர் மாநில அரசு தொடங்கி விட்டது. இந்தப் பின்னணியில் குக்கிகளிடையே எழுந்த பதற்றத்தையும் அச்சத்தையும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு மோசமாக்கி விட்டது.   3)      மேத் திங்கள் முழுக்க மணிப்பூர் குட்டி (உ)ருவாண்டா போலவே மாறிப் போயிற்று. மைத்தி சமுதாய மக்களும் குக்கி சமுதாய மக்களும் மூர்க்கமாக மோதிக் கொண்டனர். படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தன. வழிபாட்டுக் கூடங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. காவல்துறையும் பிற ஆய்தப் படைகளும் இந்தக் குற்றங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தன என்று சொல்வது குறைக்கூற்றே ஆகும். ஏனென்றால் இரு தரப்புக்கும் காவல்துறையே ஆய்தங்கள் வழங்கிற்று.  ஆங்கில இந்து நாளேடு சூன் 5 திங்கள் கிழமை இதழில் விசைத்தா சிங்கு எழுதிய செய்திக் கட்டுரை வந்துள்ளது. மணிப்பூரில் சூறையாடப்பட்ட காவல்துறை ஆய்தங்களில் 18% திருப்பித் தரப்பட்டதாக இதில் சொல்லப்பட்டுள்ளது. மே 3ஆம் நாள் மோதல் வெடித்த நாளில் சற்றொப்ப 1,600 ஆய்தங்கள் பறித்துச் செல்லப்பட்டன.  உள்துறை அமைச்சர் அமித்துசா மணிப்பூர் செல்லவிருந்த போது மே 27-28இல் 2,557 ஆயதங்கள் சூறையாடப்பட்டன. பெரும்பாலான ஆயதங்கள் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள காவல் நிலையங்களிலிருந்தும் ஆய்தச் சாலைகளிலிருந்தும் சூறையாடப்பட்டன.  சூறையாடப்பட்ட ஆய்தவகைகளை வரிசைப்படுத்திய பின் இந்து செய்திக் கட்டுரை சொல்கிறது:  “A senior government official said on condition of anonymity that most weapons were given away to groups belonging to the same community as those deployed in the police camps. In some cases, the weapons were taken away after huge mobs gheraoed police camps.”  இந்தச் செய்தியை மீண்டும் படித்துப் பாருங்கள். பெரும்பாலான ஆய்தங்கள் சூறையாடப்படவில்லை. அவை காவல் முகாம்களிலிருந்து வாரி வழங்கப்பட்டன. முகாம்களில் மைத்திக் காவலர்கள் இருந்தால் மைத்திக்களுக்கும் குக்கி காவலர்கள் இருந்தால் குக்கிகளுக்கும் வாரி வழங்கப்பட்டன. அவர்கள் ஒருவரை ஒருவர் கொலையும், பாலியல் வன்கொடுமையும் செய்து கொள்வதற்காக வழங்கப்பட்டன. மே மாதம் முழுக்க மணிப்பூர் பெருந்திரள் கொலைக் களமாக மாறிப் போனதற்கு ஆய்தங்களை வாரி வழங்கியதே காரணம். இந்திய அரசும் மாநில அரசும் – இரண்டும் பாசக அரசுகள் – முடிவெடுக்காமல் இது நிகழ்ந்திருக்க முடியவே முடியாது.  மணிப்பூர் அரசின் பாதுகாப்பு அறிவுரைஞர் குல்தீப்பு சிங்கு சொன்னதாக இந்து மேற்கோள் காட்டுகிறது, பல பகுதிகளில் ஆய்தங்களை ஒப்படைக்கும் படி மக்களுக்கு எடுத்துச் சொல்ல அரசியல்வாதிகள் கூடுதல் அவகாசம் கேட்டார்களாம். அரசுக்குச் சொந்தமான ஆய்தங்களை வன்முறைக் கும்பல்களிடம் வழங்கச் சொன்னதோடு, திருப்பிக் கொடுக்கச் சொல்லவும் அவகாசம் கேட்கின்றார்கள் இந்த அரசியல்வாதிகள் என்றால், மணிப்பூரில் நடந்த மூர்க்க வன்முறைக்கு இந்த அரசியல்வாதிகள்தானே பொறுப்பு? ஆடுகளை மோத விட்டுக் குருதி குடிக்கும் ஓநாய்கள்!  மணிப்பூர் மைத்திகளிடம் ஆயுதங்களை களையக் கூடாது என்று இந்துத்துவ மைத்திக் குழுக்கள் தில்லியில் நடத்தியுள்ள ஆர்ப்பாட்டம் மணிப்பூர் வன்முறை தொடர வேண்டும் என்ற இந்துத்துவ அக்கறையின் இன்னொரு வெளிப்பாடே ஆகும்.  மணிப்பூர் வன்முறையால் பழங்குடி மக்கள் ஏதிலியாக்கபடுவதன் விளைவுகள் மணிப்பூருக்கு வெளியே மிசோரம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு தேசங்களிலும் எதிரடித்து வருகின்றன.        ஆர்எசுஎசு பாசக கும்பல் மக்களைப் பிரித்து மோத விட்டு அரசியல் ஆதாயம் ஈட்ட எந்த அளவுக்குச் செல்லும் என்பதையே மணிப்பூர் நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.  ஆர்எசுஎசு – பாசக பாசிசக் கும்பல் தனது அரசியல் ஆதாயத்துக்காக மாந்த உயிர்கள் பலியாவதைப் பற்றியோ குமுக அமைதி கெடுவதைப் பற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படுவதில்லை.  தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்காது என்று நம்பி உறங்கிக் கொண்டிருந்தால் விழிக்கும் போது எதுவும் மிஞ்சியிருக்காது
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 219  

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான உலகளாவிய போட்டிகள்

 




இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள்

இலக்குவனார் நடுநிலைப்பள்ளி, வாய்மைமேடு

உலகத்தமிழாராய்ச்சி மன்றம், அமெரிக்கக் கிளை

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ்க் காப்புக் கழகம்

உலகளாவிய போட்டிகள்

இனிய தமிழ் பேசும், எழுதும் குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட ஓர் அரிய வாய்ப்பு!

மொத்தம் 24 ஆயிரம் உரூபாய்ப் பரிசுத் தொகை. – 4 பிரிவுப் போட்டிகள்

பரிசு விவரம்: ஒவ்வொரு பிரிவிற்கும்

முதல் பரிசு உரூ.3000/-

இரண்டாம் பரிசு உரூ.2000/-

மூன்றாம் பரிசு உரூ.1000/-

என நான்கு பிரிவுகளுக்கும் வழங்கப் பெறும்.

அனைத்துப்போட்டிகளுக்குமான பொதுத் தலைப்புகள்

தமிழைப் படிப்போம்! தமிழில் படிப்போம்!

அல்லது

தமிழ்ப்போராளி இலக்குவனார்

1.)ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பேசும் நேரம் 4 நிமையம்

2.) ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பேசும் நேரம் 5 நிமையம்

3.) ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பேசும் நேரம் 6 நிமையம்

4.) 9-12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மட்டும் கட்டுரைப்போட்டி.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள பள்ளி மாணாக்கர்கள் பங்கேற்கலாம்.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் 4 பக்க அளவில் தம் கைப்பட எழுதி, ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர் மேலொப்பத்துடன் பெயர், வகுப்பு, பள்ளி விவரங்களுடன் பின்வரும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும்.

ilakkuvanarvoimedu@gmail.com.

 பேச்சுப்போட்டியில் பங்கேற்போர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரி , தலைப்பு விவரங்களைத் தெரிவித்து விட்டுப் பேச வேண்டும். பேச்சுப்பதிவிற்கான காணொளியை

ஆசிரியர் மணிமொழி(போட்டி ஒருங்கிணைப்பாளர்) பகிரி எண்(WhatsApp) 88 830 80 830 இற்கு அனுப்ப வேண்டும்.

தங்களின் பதிவு 24.08.23  முதல் 10.09.23 வரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

நடுவர்களின் முடிவே இறுதியானது.

 வெற்றி பெற்றவர்களுடைய விவரம் பேராசிரியர் இலக்குவனார் அவர்களுடைய நினைவு நாளான செட்டம்பர் 3 அன்று (WhatsApp) மூலம் வெளியிடப்படும்.

வெற்றியாளர்களுக்கு 15.09.23 அன்று பரிசுத்தொகை  அனுப்பப்படும். பரிசு அனுப்புவதற்குரிய கூகுள் எண் அல்லது அதுபோன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் பின்னர்  வழங்கப்படும்.  

பேரா.சி.இலக்குவனார் குறித்த வரலாற்றுக் கட்டுரைகளை, நூல்களை இலக்குவனார் இணையத் தளத்திலும்(http://ilakkuvanar.com/) அகரமுதல இதழ்த்தளத்திலும்(http://www.akaramuthala.in/) காணலாம்.

பங்கேற்பாளர்களுக்குப் பாராட்டுகள்! வாகை சூட வாழ்த்துகள்!

இலக்குவனார் திருவள்ளுவன்              அரசர் அருளாளர்                      சூ. சார்லசு

          ஒருங்கிணைப்பாளர்                                     தலைவர்                          தலைமை ஆசிரியர்

இலக்குவனார் இலக்கிய இணையம்     உலகத் தமிழாராய்ச்சி  மன்றம்       இலக்குவனார்   நடுநிலைப்பள்ளி




ஆளுமையர் உரை 61,62 & 63 : இணைய அரங்கம்: 27.08.2023

 

 

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்- 416)

தமிழே விழி!                                                           தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 61,62 & 63  : இணைய அரங்கம்:

நிகழ்ச்சி நாள்: ஆவணி 10, 2054 /27.08.2023  ஞாயிறு

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

 “தமிழும் நானும்” – உரையாளர்கள்

முனைவர் மே.து.இராசுகுமார்

முனைவர் தி.க.ச.கலைவாணன்

ஆவண இயக்குநர் குங்குமம் சுந்தரராசன்

தொகுப்புரை :   தமிழ்த்தேசியர் தோழர் தியாகு 

  நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா



தோழர் தியாகு எழுதுகிறார் 189 : மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!

      24 August 2023      அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 188 : செவ்வணக்கம் தோழர் (இ)லிங்கன்! -தொடர்ச்சி)

மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!


இனிய அன்பர்களே!

மணிப்பூர் வன்முறை இன்னும் ஓயவில்லை. ஓயவிடப்பட வில்லை. இந்த வன்முறை தொடங்கியதிலும் தொடர்வதிலும் பாரதிய சனதாக் கட்சிக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும், மணிப்பூர் நீதிமன்றத்துக்கும் முகன்மைப் பங்கு உண்டு. இதற்கான சில சான்றுகளை நாளை வெளியிடுகிறேன்.

இந்த வன்முறையை நிறுத்தக் கோரும் வேண்டுகோளை அறிஞர் இராம் புனியானி எனக்கு அனுப்பி வைத்து என்னையும் வழிமொழியச் சொல்லிக் கேட்டிருந்தார். இது பொறுப்புடன் எழுதப்பட்ட வேண்டுகோள். மணிப்பூரில் நடப்பது என்ன? வன்முறையை நிறுத்த நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாகளுக்குத் தெளிவான விடைகள் தரப்பட்டுள்ளன. இந்த வேண்டுகோளை வழிமொழிந்திருக்கும் சிலரின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. நானும் வழிமொழிந்திருக்கிறேன். இதோ அந்த வேண்டுகோள் அறிக்கை –

வேண்டுகோள்

மைத்தி சமுதாயத்துக்கும் குக்கி, சோ ஆகிய பழங்குடிச் சமுதாயங்களுக்கும் இடையில் தொடர்ந்து வரும் இன வன்முறை குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பெருமளவில் உயிரிழப்புக்கும் வாழ்வுக் குலைவுக்கும் சொத்துடைமைகள் அழிப்புக்கும் காரணமாகி, மக்களிடையே இன்னும்கூட திகில் பரவச் செய்து வரும் இந்த வன்முறைக்கு உடனே முடிவுகட்ட வேண்டும் எனக் கோருகின்றோம்.

மைத்தி சமுதாயத்துக்கு அட்டவணைப் பழங்குடித் தகுநிலை வழங்கும்படி மாநில அரசுக்குப் பரிந்துரை செய்து 2023 ஏப்பிரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைதான் இந்த வன்முறைக்கு உடனடித் தூண்டுதலாக அமைந்தது. (மைத்தி சமுதாய உறுப்பினர்களுக்கு இப்போது ஏனைய பிற்பட்டோர், அல்லது சில நேர்வுகளில் அட்டவணைச் சாதி, எனும் தகுநிலை உள்ளது.) அட்டவணைப் பழங்குடித் தகுநிலை கிடைத்தால் மைத்தி சமுதாயம் பெறக்கூடிய நன்மை… இப்போது பழங்குடிச் சமுதாயங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலத்துக்கு உரிமை கோர முடியும். மேத் திங்கள் முழுக்க தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் நடந்து, இரு தரப்பும் ஆய்தந்தரித்திருந்த நிலையில் உள்நாட்டுப் போரையொத்த நிலைமை தோன்றியது, சட்டம் ஒழுங்கு அடியோடு குலைந்தது. அதுமுதல் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் ஆய்தக் குழுக்களும் எளிய மக்களுக்கு எதிராகப் பரந்துபட்ட அளவில் முன்னெப்போதும் காணாத மூர்க்கமான கொடுமைகள் செய்வதைப் பார்த்து வருகிறோம்.

இன்று மணிப்பூர் எரிந்து கொண்டிருப்பதற்குப் பெரும்படியான காரணம் பாசகவும் நடுவண் அரசும் மாநில அரசும் மக்களைப் பிரிக்கும் அரசியல் ஆட்டம் ஆடி வருவதே ஆகும். மேலும் உயிரிழப்பு ஏற்படாமல் இந்த உள்நாட்டுப் போரை நிறுத்தும் பொறுப்பு அவற்றையே சாரும். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக அனைவரும் வன்முறையால் துயருற்றுள்ளனர், 300க்கு மேற்பட்ட ஏதிலி முகாம்களில் 50,000க்கு மேற்பட்ட மக்கள் தங்கியிருக்க, இலட்சக் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

உண்மையில் பாசக மாநில அரசு சேமவனப் பகுதிகளிலிருந்து ‘சட்டப்புறம்பான’ குடியேறிகளை’ அகற்றும் முயற்சிகளை இந்த ஆண்டு சனவரியில் தொடங்கிய போதுதான் நிலைமை மோசமாயிற்று. இவர்கள் 1970களிலிருந்து இப்பகுதிகளில் குடியமர்ந்துள்ளனர் என்று அரசு கூறிக் கொண்டது. பழங்குடியினரான வனவாழ்வோரை ‘வன்பறிப்பாளர்கள்’ என்று அறிவித்து சுராசந்த்பூர், காங்க்குபோக்பி, தெங்குனூபால் மாவட்டங்களில் மாநில அரசு நிலவெளியேற்ற நடவடிக்கை தொடங்கிற்று.

நாடெங்கும் பாசக கையாளக் கூடிய அதே வழிமுறைதான், காலங்காலமாய் இருந்து வரும் இனக்குழுப் பதற்றங்களை அது தன் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக முற்றச் செய்து வருகிறது. மாநிலத்தில் இன்னுங்கூட வலுவாகக் காலூன்ற வேண்டும் என்பதற்காக வன்முறையும் வலுவந்தமுமாகிய வழிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் பாசகவின் வகிபாகம் உள்ளது. பாசக இரு சமுதாயங்களுக்கும் கூட்டாளி போல் நடித்துக் கொண்டே அவற்றுக்கிடையிலான வரலாற்றுவழிப் பதற்றங்களின் இடைவெளியை அகலப்படுத்தி வருகிறதே தவிர, தீர்வு நோக்கிய உரையாடலுக்கு வழிசெய்ய எம்முயற்சியும் செய்யவில்லை.

நடுவணரசும் சரி, மாநில அரசும் சரி, குடியாட்சிய உரையாடல், கூட்டாட்சிக் கொள்கை, மாந்தவுரிமைக் காப்பு ஆகிய கருத்துகளை அழிக்கவே அரசமைப்புச் சட்ட வழிவகைகளைக் கருவிகளாக கையாண்டு வருகின்றன. இப்போதைய நிலவரத்தில், அரம்பை தெங்கோல், மைத்தி இலீபுன் ஆகிய மைத்தி பேரினவாத ஆய்தக் குழுக்களே குக்கி இன மக்களுக்கு எதிராகப் படுமோசமான வன்முறைக் கொடுமைகள் செய்துள்ளன. இனவழிப்புக்குரிய வெறுப்புமிழும் பேச்சுகளும், என்ன செய்தாலும் தட்டிக் கேட்கவும் தண்டிக்கவும் யாருமில்லை என்று பேரினத் திமிர்த்தன வெளிப்பாடுகளும் இத்துடன் சேர்ந்து கொண்டன. இவற்றுள் முதற்குழு மைத்திகள் சனாமகி மரபுகளுக்கு மீள வேண்டுமென அழைப்பு விடுக்கும் பழமைமீட்புக் குழுவாகும். இரண்டாம் குழு தெள்ளத் தெளிவாகவே இந்துப் பேரினவாதச் சார்புடையதாகும். முதலமைச்சர் பிரேன் சிங்கு இந்தக் குழுக்களுடன் நெருங்கிய ஈடுபாடு உடையவர். இரு குழுக்களுமே குக்கி சமுதாயத்தைச் “சட்டப்புறம்பான வெளியார்” என்றும் “போதைப் பொருள் திகிலியர்கள்” (நார்கோ பயங்கரவாதிகள்) என்றும் இழிவாகப் பேசுகின்றன. மைத்தி இலீபுன் தலைவர் ஊடகச் செவ்வி ஒன்றில், மைத்திகள் பூசலுக்குரியவையாகக் கருதும் பகுதிகளில் குக்கிகள் “துடைத்தெறியப்படுவார்கள்” என்று வெளிப்படையாகவே அறிவிக்கத் தயங்கவில்லை. குக்கி சமுதாய மக்கள் “சட்டப்புறம்பானவர்கள்”, “வெளியார்கள்”, “குடும்பத்தில் இடம்பெறாதவர்கள்” “மணிப்பூருக்குச் சொந்தமல்லாதவர்கள்”, மணிப்பூரில் “குடக்கூலிகள்” என்றெல்லாம் அவர் வண்ணித்தார். இதற்கு முன் முதலமைச்சரே குக்கி மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் ஒருவரை “மியான்மரியர்” என்று குறிப்பிட்டிருந்தார். மியான்மரில் காணப்படும் அமைதியின்மையால் தப்பி வரும் ஏதிலியரால் மைத்தி சமுதாயம் மக்கள்தொகை சார்ந்து ஓர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்ற பரப்புரைக்கு முதலமைச்சரும் ஆமாம் போடுகிறார் என்பதே இதன் பொருள். இந்த ஏதிலிகள் மணிப்பூரிலும் வாழ்ந்து வரும் பழங்குடிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், பழங்குடி மக்களின் தொகை பெருகி, அவர்கள் மைத்திப் பெரும்பான்மையையும் விஞ்சி விடுவார்கள் என்று மைத்திப் பேரினவாதக் குழுக்கள் பேய்க்காட்டுகின்றன.

சிறுபான்மைச் சமுதாயம் ஒன்றைச் “சட்டப் புறம்பானவர்கள்” என்று மாந்த நீக்கம் செய்கிற இந்த மொழியைத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சரும் அசாம் முதலமைச்சரும் அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு செய்யும் முயற்சியின் போது பேசினார்கள். இப்போது அதே மொழி வடகிழக்கில் மற்றுமொரு மாநிலத்துக்குப் பரவியுள்ளது. வெறுப்பும் வன்முறையும் அயலார் வன்மவெறியுமான தீயை மூட்டி வருகிறது.

குக்கி ஆய்தக் குழுக்கள் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பாசகவுக்கு வாக்கு சேகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 10 குக்கி உறுப்பினர்களில் 7 பேர் பாசகவைச் சேர்ந்தவர்கள். குக்கி குழுக்கள் செய்து வரும் பரப்புரையும் ஒருவகையில் பாசக வழியைக் கடைப்பிடித்து, குக்கி தலைவர்கள் இந்திய அரசு நலன்களுடன் கூடிச் செயல்பட்ட முன்னுதாரணங்களைக் காட்டி, மைத்திகளை இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று முத்திரையிடுவதாக உள்ளது. இப்போது தொடரும் வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலார் குக்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகள் காட்டுகின்றன. பள்ளிகள், தானியக் களஞ்சியங்கள், வீடுகள் இவற்றோடு, 200க்கு மேற்பட்ட குக்கி தேவாலயங்கள் கொளுத்தபப்ட்டுள்ளன.

இன்று பொய்ச்செய்தி எனப்படும் வதந்திகள் பரப்பி, சமுதாயங்களுக்கிடையே மோதல்களைத் தூண்டி விடுவது – காலங்காலமாய்க் கையாளப்படும் இந்த உத்தி – பெண்களை எளிதில் இலக்காக்கும் நடைமுறை தொடர்கிறது. மைத்திப் பெண்களைக் குக்கிகள் வன்புணர்வு செய்து விட்டார்கள் என்று பேரின மைத்திக் குழுக்கள் பரப்பிய பொய்ச் செய்தியைச் சாக்கிட்டு குக்கி இனத்தவரை அடித்துக் கொல்வதும் குக்கி-சோ பெண்களை வன்புணர்வு செய்வதுமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெறிக் கும்பல்கள் “அவளைக் கெடு, அவளை வதை செய்” என்று கத்திக் கொண்டே பெண்களைத் தாக்கியதாகச் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்திகளை அவசரமாகச் சரிபார்க்க வேண்டும்.

தொடர்ந்து வரும் இந்த வன்முறை வெறியாட்டத்தை உடனே நிறுத்தக் கோருகிறோம். வன்முறைச் செயல்கள் ஓய்ந்தவுடனே தற்சார்பானவர்களும் கட்சிசார்பற்றவர்களுமான குடியியல் சமூக உறுப்பினர்கள் வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்களையும் அன்புக்குரியோரை இழந்தவர்களையும் போய்ப் பார்க்க வேண்டும்; கொலைகள், வன்புணர்வுகள் பற்றிய செய்திகளைச் சரிபார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்; அன்புக்குரியவர்களையும், வீடுகளையும், தேவாலயங்களையும் பறிகொடுத்துத் துயரப்பட்டவர்களுக்குத் தோழமையும் ஒல்லும் வகையெல்லாம் ஆதரவும் வழங்க வேண்டும்.

நாடெங்கும் கவலையுற்ற குடிமக்கள் என்ற முறையில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

  • தலைமையமைச்சர் வாய்திறந்து பேசவும் மணிப்பூரின் நடப்பு நிலைமைக்குப் பொறுப்பேற்கவும் வேண்டும்;
  • உண்மைகளை நிறுவவும், நீதிக்கான அடித்தளத்தை அணியமாக்கவும், மணிப்பூரில் இரு சமுதாயங்களையும் வேறுபடுத்தும் கொடும் புண்ணை ஆற்றவும், தூண்டி வளர்க்கப்படும் பிரிவையும் வெறுப்பைத் தணிக்கவும்… நீதிமன்றக் கண்காணிப்பில் ஒரு சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.
  • “மோதல் பகுதிகளில் பாலியல் குற்றம் புரிந்த படையினர் எளிய குற்றவியல் சட்டத்தில் உசாவப்பட வேண்டும்” என்ற வருமா ஆணையத்தின் பரிந்துரைக்கு இணங்க, அரசுத் தரப்பாரும் அரசல்லாத் தரப்பாரும் புரிந்த பாலியல் வன்முறை வழக்குகள் அனைத்துக்கும் ஒரு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
  • வெளியேறி ஓடுமாறு வலிந்து விரட்டப்பட்டவர்களுக்குத் துயர்தணிப்பு உதவி வழங்கப்பட வேண்டும்; பாதுகாப்பாக அவரவர் ஊர்திரும்புவதற்கு உறுதிகாப்பளிக்க வேண்டும். அவர்தம் இல்லங்களும் வாழ்வும் மீட்டமைக்கப்பட வேண்டும். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் வீடு, தானியங்கள், கால்நடைகளை இழந்தவர்களுக்கும் கருணை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும். மீட்டனுப்புவதும், மறுவாழ்வளிப்பதும், இழப்பீடு வழங்குவதுமான இந்தச் செயல்வழி இந்த வட்டாரத்தை நெருக்கமாக அறிந்த ஓய்வுபெற்ற நீதியர் குழு ஒன்றின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இந்த நீதியர் குழுவை உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ அமர்த்தலாம்.

இந்த வேண்டுகோளை வழிமொழிந்து ஒப்பமிட்டவர்கள்: .

அன்னி இராசா, இந்திய மாதர் தேசியப் பெருமன்றம்,
கவிதா சிரீவசுதவா, குடியியல் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்,
அனுராதா பானர்சி & வாணி சுப்பிரமணியம், சகேலி மாதர் வள மையம்,
கவிதா கிருட்டிணன், பெண்ணியர், தில்லி,
இரஞ்சனா பதி, நூலாசிரியர், பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒரிசா,
நந்தினிராவு, பெண்ணியச் செயற்பாட்டாளர், தில்லி

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 218

புதன், 23 ஆகஸ்ட், 2023

தமிழ்இணையம் 2023’ – ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

 




மதுரை காமராசர் பல்கலைக்கழக  மொழியியல் துறை,
தமிழ் இணையக் கழகம், இந்தியா,

தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை)

தமிழ் இதழ், கனடா
இணைந்து  நடத்தும் 

‘தமிழ் இணையம் 2023’


ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அட்டோபர் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com

கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23

5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும்.

பிற விவரங்களை இப்பக்கத்தில் உள்ள விவர இதழில் காண்க.

பேரா.முனைவர் கா.உமாராசு
துறைத்தலைவர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
94872 23316

முனைவர் துரை.மணிகண்டன்
இணையத் தமிழ் ஆய்வாளர்
தலைவர்
தமிழ் இணையக் கழகம்
திருச்சிராப்பள்ளி