சனி, 31 ஆகஸ்ட், 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 33 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

  • (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

33

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்விகுறள் எண்:399)
கல்வியின் பயனால் தாமும் உலகும் இன்புறுவது கண்டு  கல்வியாளர்கள் கற்பதை விரும்புவர் என்கிறார் திருவள்ளுவர்.
ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் இன்பம் தரக்கூடியவற்றைச் செய்ய வேண்டும் என அரசிலறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
கற்பதால் தமக்கும் பிறருக்கும் வரும்  இன்பம் கண்டு மேலும் மேலும் அந்த இன்பத்தை விரும்பிக் கற்பர் என்று விளக்குவோர் உள்ளனர்.
இன்பத்திற்குக் காரணமான கல்வியை விரும்பி மேலும் மேலும் கற்பர் என்று விளக்குவோரும் உள்ளனர். எவ்வாறு கூறினாலும் இறுதி விருப்பம் தொடர் கல்வியின் மீதுதான்.
தனக்குத் துன்பம் தரக்கூடிய கல்வியால் பயனில்லை. தனக்கு இன்பம் தரும் நற் கல்வியையே நாட வேண்டும். கல்வியின் பயனால் தான் மட்டும் இன்புற்றால் போதுமா? அப்பயன் பிறருக்கும் கிடைத்து அவர்களும் இன்பம் அடைதல் வேண்டும். எனவே, கல்வி தன்னலமற்றதாக இருக்க வேண்டும்.  தனக்கு மட்டும் நன்மை விளைவித்துப் பிறருக்குக் கேடு தருவது கல்வியே அல்ல. அதனைக் கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்க விரும்புவர்கள் விரும்ப மாட்டார்கள்.
அறிவியல், முதலான பல துறை அறிஞர்களின் கல்வியின் பயன்தானே பிற மக்கள் அடையும் இன்பங்கள்.
நாம் பிறரால் பயனுற்று இன்புறாமல் நம்மால் பிறர் பயனுற்று இன்பம் அடையும் வகையில் பழுதறக் கற்க வேண்டும்.
கற்பதன் பொது இன்பப்பயன் உணர்ந்து இன்புறுபவர்கள் மேலும் மேலும் கற்கவே விரும்புவர்.
இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி, 31.08.2019

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை

அகரமுதல


ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019

மாலை  5.45மணி

  பெரியார்  திடல், சென்னை 600007

தலைமை:   வழக்கறிஞர்   திருமதி. வீரமர்த்தினி
               தலைவர், புதுமை இலக்கியத்தென்றல்
தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்
              தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர்
நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன்
நன்றியுரை: சைதை தென்றல்
     செந்தமிழ்   அரிமா    புகழ் போற்ற        வருக!

புதுமை இலக்கியத் தென்றல்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 32 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர்உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 32

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்விகுறள் எண்:398)
ஒருமை உணர்வுடன் கற்கும் கல்வி எப்பொழுதும் பாதுகாப்பு தரும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.
கல்வியின் பயன் ஒருமுறையின்றித் தொடர்ந்து பயன் தரும்; ஆதலின் ஆட்சியாளர்கள் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்பது அரசறிவியல் கருத்து.
குறள்நெறிச் செம்மல் பேரா.சி இலக்குவனார், எழுமை=மிகுதி எனப் பொருளைக் கையாண்டு சிறப்பாகவும் சரியாகவும் உரை எழுதியுள்ளார்.
உரையாசிரியர்கள் சிலர் ஒருமை என்பதற்கு ஒரு பிறப்பு என்றும் எழுமை என்பதற்கு எழு பிறப்பு என்றும் பொருள்கூறித் திருக்குறளின் உண்மைப் பொருளை  எளிதில் அறிய முடியாமல் செய்து விட்டனர். இன்றைய ஆசிரியர்கள்  சிலரும் அதே வழியில் எழு பிறப்பு அடிப்படையில் உரை கூறுகின்றர்.
மறுபிறவி நம்பிக்கை இல்லாதவர் இதனை ஏற்க மாட்டார். மறு பிறவி இருந்தாலும் அதுவும் மனிதப்பிறவியாகத்தான் இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?  இறப்புடன் ஒருவர் தொடர்பான எல்லாம் அழியும் பொழுது கல்வியின் பயன் எங்ஙனம் அடுத்த பிறவியில் சேரும்?
புதிய உரையாசிரியர்கள் சிலர், எழுபிறப்பு என்பதற்கு எழுகின்ற பிறப்பு,  ஏழேழ் தலைமுறை, எழுகின்ற துன்பங்கள், பல இடங்கள், ஏழு பருவம், எழு தலைமுறை, ஏழு வகைப்பட்ட உறவினர், ஏழுமடங்கு, பல காலம் என வெவ்வேறு பொருள்களில் கையாண்டு விளக்கியுள்ளனர்.
ஏமாப்பு=பாதுகாப்பு, உதவுதல், ஆதரவு எனப் பொருள்கள் உள்ளன.
‘ஒருமை மகளிரேபோல்’ எனச் சொல்லுமிடத்தில் திருவள்ளுவர் ஒரு பிறப்பு என்னும் பொருளில் கையாளவில்லை. ஆகவே, இக்குறளுக்கும் பிறப்புக்கும் எத்தொடர்பும் இல்லை.
எழுஞாயிறு, எழுமலை, எழுமுகனை, எழுமுரசு முதலான சொற்கள் ஏழு என்னும் பொருளில் வரவில்லை. அதுபோல் இக்குறளில் எழுமை என்பதிலும் ஏழு என்னும் பொருள் இல்லை.  திவாகர நிகண்டு எழுமை என்பதற்கு உயர்ச்சி என்னும் பொருள் தருகிறது. உயர்ச்சி உயரத்தையும் குறிக்கும் உயர்வையும் குறிக்கும்
ஒருமை உணர்வுடன் உள்ளம் ஒன்றிக் கற்கும் கல்வி எல்லாப் பொழுதும் உதவியாகவும் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் எனலாம்.
ஆள்வோரும் ஆளப்படுவோரும் கல்வியில் சிறந்திருந்தால்தான் நல்லாட்சி நிகழும்.
இலக்குவனார் திருவள்ளுவன்தினச்செய்தி,30.08.2019

சிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்

அகரமுதல

சிங்கப்பூரில்  பெரியார் விழா 2019,  தமிழ்மொழிப் போட்டிகள்

சிங்கப்பூர், ஆக.29  சிங்கப்பூர் பள்ளி மாணவர்களி டையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பெரியார் விழா 2019 தமிழ்மொழிப் போட்டிகள் ஆவணி 07, 2050 /ஆகத்து மாதம் 24ஆம் நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
இதில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. தொடக்கநிலை (2,3) மாணவர்களுக்குப் பாடல் போட்டியும், தொடக்கநிலை (4,5) மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும், உயர்நிலை (1, 2) மாணவர்களுக்குப் பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டியும் நடத்தப்பட்டன. போட்டிகளில் மாணவர்கள் துடிப்புடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை ஊக்கப்படுத்திப்  போட்டிகளில் கலந்துகொள்ள வைத்தமை பாராட் டுக்குரியது.
  • பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் புரட்டாசி 05, 2050 / செட்டம்பர் மாதம் 22 -ஆம் நாள் நடைபெறவுள்ள பெரியார் விழாவில் வழங்கப்படும்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? – மறைமலை இலக்குவனார்

அகரமுதல


விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா?

அண்மையில் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. திரையுலகில் இது பெரிய கவலையை ஏற்படுத்தியது.
 “தேசிய விருதுகளை விடப் படங்களைப் பார்த்தவரெல்லாம் பாராட்டிப் பேசிய சொற்களே விருதுகள்” எனக் கவிஞர் வைரமுத்து ஆறுதல் வழங்கியுள்ளார். விருது என்பது கலைஞர்களுக்குப் பெரிய ஊக்கத்தையும் மனவெழுச்சியையும் வழங்கும் மாமருந்து எனலாம். அந்த விருதுவுடன் வழங்கும் பதக்கமோ, பணமோ, சான்றிதழோ முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. அந்த விருது வழங்கும்  பாராட்டும் அங்கீகாரமுமே கலைஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பெரிதும் ஊக்கப்படுத்தும் உந்து சக்தியாகும்.
ஒரு துறையில் சமமான திறமை கொண்டவர் பலர் இருக்கலாம். ஆனால் விருது ஒருவருக்குத்தான் கொடுக்கமுடியும். இந்தச் சூழலில் ஒருவர் விருது பெறும்போது விருது பெறாதவர்களின் குமுறலும், கோபமும் அதிகமாக இருக்கும். அவர் எப்படியோ வாங்கிவிட்டார் என்ற குமுறல் வெளிப்படும். எனக்கு ஏன் வழங்கவில்லை என்னும் கோபம் கொந்தளிக்கும். இரவீந்திரநாத்து தாகூர்நோபல் பரிசு வாங்கியபோது பாரதியார் அப்படித்தான் கோபப்பட்டாராம். ‘உடனே கொல்கத்தாவுக்குச் சீட்டு(டிக்கெட்டு) எடு. தாகூர் வாங்கிய விருதைச் சபையில் வைக்கட்டும். எங்கள் இருவர் கவிதையும் கேட்டபின் யாருக்கு அந்த விருது பொருந்தும் எனச் சபை முடிவு செய்யட்டும்’ என்றாராம். எனினும் பாரதியாரின் இந்தக் கோபம் நெடுநேரம் நீடிக்கவில்லை.“ நம்முடைய தாகூர் தானே வாங்கியுள்ளார்”. என அமைதி கொண்டு விட்டாராம். ஆனால் நம்மால் அமைதி கொள்ள முடியவில்லையே! உலகப் பெருங்கவிஞர் எனப் போற்றப்பட வேண்டிய பாரதியாருக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை?
பாரதியாருக்குப் பின்னர் அவர் வழியில் ஏறு நடையிட்ட எழுச்சிப் பாவலர் பாரதிதாசனுக்கு அவர் வாழும் காலத்தில் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படவில்லை. அவர் மறைவுக்குப் பின் 1969-ம் ஆண்டு தான் வழங்கப்பட்டது. கவிதையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப் புரட்சிக் கவிஞர் இறந்த பின்னரும் கவிதைக்கான விருது அவருக்கு வழங்கப் படவில்லை. ‘பிசிராந்தையார்’ என்னும் நாடகத்திற்காகவே பாரதிதாசனுக்கு விருது வழங்கப்பட்டது. நல்ல வேளையாகக் கண்ணதாசன் தாம் இறப்பதற்கு ஓராண்டு முன்னரே (1980) விருது பெற்றார். ஆனால் அவரும் கவிதைக்கான சாகித்திய அகாடமி விருது பெறவில்லை. ‘சேரமான் காதலி’ என்னும் புதினத்திற்காகவே அவர் விருது பெற்றார். இரு பெரும் கவிஞர்களுக்கும் கவிதைக்காக விருதுவழங்கப்படாதது எவ்வளவு பெரிய தவறு? கண்ணதாசன் கவியரசராகக் கோலோச்சிய காலத்தில் 1968-ஆம் ஆண்டு தமிழ்க்கவிதைக்காக அகாடமி விருது பெற்றவர் அ.சீனிவாசன் என்னும் ஆங்கிலப் பேராசிரியர் என்னும்போது அழுவதா? சிரிப்பதா?
முதன் முதலாகத் தமிழ் எழுத்தாளர் அகிலனுக்கு ஞானபீடம் விருது வழங்கிய போது பத்திரிகைகளில் அவருக்கு பாராட்டு குவிந்ததை விட அவருக்கு வழங்கப்பட்டது தவறு என்னும் கண்டனக் கணைகளே மிகுதியாக வெளி வந்தன. சாண்டில்யன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் வெளிப்படுத்திய கோபத்தைப் பார்த்து ஞானபீட அமைப்பே பயந்துபோனது. அதன்பின் பல ஆண்டுகளுக்குத் தமிழ் இலக்கியம் ஞானபீடம் பெறாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். தனக்குக் கிடைக்காத விருது வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்னும்நல்லெண்ணம் நிலவுவதால் பல ஆண்டுகளாகப் பல விருதுகள்வழங்கப்படாமலே போவதும் உண்டு.
விருது வாங்குவதற்குத் தகுதி வாய்ந்தவர் யார் தெரியுமா? “எனக்கு இந்த விருது வேண்டாம்; என்னை விடத் தகுதி வாய்ந்தவர் இருக்கிறார்கள்; அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று யார் சொல்கிறார்களோ அவர்கள் தான் விருதுபெறத் தகுதி வாய்ந்தவர்கள். இதனை விளக்குவதை போல ஒரு கதை, நம் ஒளவையாரைமையமாகக் கொண்டு வடமொழியில் வழங்குகிறது.
நாரத முனிவர் ஒளவையாரை நாடி வருகிறாராம் “ஒளவையே! சிறந்த அறிஞர் என்னும் விருது உங்களுக்கு வழங்க எண்ணுகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்” என்றாராம். ஒளவையார் தயங்காமல் உடனே சொல்கிறார். “நானா சிறந்த அறிவாளி! எங்களைப் போன்ற புலவர்களுக்கெல்லாம் தலைவர் அகத்தியர் இருக்கிறார். அவருக்குத் தான் இந்த விருது பொருந்தும்”. “நாரதர் அகத்தியரைப் போய்ப் பார்த்து ஒளவை கூறியதைச் சொல்கிறார். அகத்தியர் சிரித்துவிட்டு ஒளவையாரை விடவா நான் அறிவாளி?” என்று கூறியவர், “சரி! அவர்கள் ஏற்கவில்லை யென்றால் இந்திரனுக்கு அந்த விருதைக் கொடுத்து விடுங்கள். இப்போதுதான் அவர் ஐந்திரம் என்றொரு நூல் எழுதியுள்ளார். அவருக்கு இந்த விருது மிகவும் பொருந்தும்” என்றாராம். நாரதர் இந்திரனிடம் போய் விருது வாங்கிக்கொள்ளுமாறு வேண்டுகிறார். இந்திரன் விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிடுகிறார். “கலைமகளின் அருள் இல்லாவிட்டால் இந்த நூலை என்னால் எழுதியிருக்கமுடியுமா? என்று கேட்டு விருதைக் கலைமகளிடம் கொடுக்கச் சொல்கிறார்.” ஆனால் கலைமகளும் விருது பெற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். ‘என்னைப் படைத்து என்னையாளும் தலைவன் பிரம்மன் தான் இந்த விருதுக்குத் தகுதியானவர்’ என்கிறார். பிரம்மன் திருமாலையும், திருமால் இலட்சுமியையும், இலட்சுமி ஈசுவரியையும் பொருத்தமானவர்கள் எனக் கைகாட்டிவிடுகின்றனர். ஈசுவரி எல்லாம் வல்ல பரமசிவனைக் கைகாட்டக் கடைசியில் பரமசிவன் சொல்கிறாராம். “எனக்குப் பிரணவ மந்திரம் கற்றுக்கொடுத்த முருகனுக்கே இந்த விருது பொருந்தும்“ என்கிறார். கடைசியில் முருகனும் விருது வாங்கிக்கொள்ள மறுத்துவிடுகிறார். முருகன் என்ன சொன்னார் தெரியுமா? “எனக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் ஒளவையாரே இந்த விருதுக்குத் தகுதியானவர்” எங்கெல்லாமோ சுற்றிய விருது தொடக்கத்தில் அடக்கத்துடன் விருது பெற மறுத்த ஒளவையாருக்கே பொருத்தமாக அமைந்தது. தன்னை விட அறிவாளி இவ்வுலகில் இருக்கிறார் என்று தன்னடக்கம் கொள்பவர்களே தலைசிறந்த அறிவாளிகள் என்னும் கருத்தை இந்தக் கதை அருமையாக உணர்த்துகிறது. எல்லோரும் இதனை உணர்ந்துகொண்டால் விருதுகளுக்காக வீண் சண்டைகள் வராமல் போய்விடும் அல்லவா?.
– மறைமலை இலக்குவனார்முன்னாள் சிறப்பு வருகை பேராசிரியர்,கலிபோர்னியா பல்கலைக்கழகம்.
தினத்தந்தி, 23.08.2019

இலக்கியச் சிந்தனை 589 & குவிகம் இலக்கிய வாசல் 53

அகரமுதல


ஆவணி 14, 2050 / சனிக்கிழமை / 31.08.2019 மாலை 6.00      

சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டைசென்னை 600018

இலக்கியச் சிந்தனை – 589

தழியலில் பாரதியும் கண்ணதாசனும்

சிறப்புரை: புதுவை திரு இராமசாமி

 குவிகம் இலக்கிய வாசல் 53

எனது எழுத்துலகப் பட்டறிவுகள்

உரையாடல்: எழுத்தாளர் கே.சி.சவகர்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 31 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர்உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார்அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 31

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:397)
கற்றவனுக்கு எல்லா நாடும் ஊரும் தன் நாடாகவும் ஊராகவும் திகழும். பிறகு ஏன் சாகும்வரை கற்காமல் இருக்கிறான் எனத் திருவள்ளுவர் கேட்கிறார்.
“கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்கிறார் ஒளவையார்(மூதுரை)
கற்றவரை அவர் நாட்டு ஆள்வோரும் சிறப்பிப்பர். அவர் செல்லும் நாடுகளிலும் மதித்துப் போற்றுவர். ஆனால் ஆட்சித் தலைவர்க்கு உள்நாட்டில் இருக்கும் மதிப்பு அயல்நாடுகளில் இருப்பது இல்லை.
கற்றவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் மகிழ்ச்சி யுற்றுத் தம் நாட்டில் இருப்பதுபோல் உணர இயலும். பொருட் செல்வம் உடையவர்க்கும் இந்த மகிழ்ச்சியும் சிறப்பும் கிடைக்காது.
அவ்வாறிருக்க கல்விச் செல்வத்தை நிலையாகப் பெறாமல், இருப்பது ஏன்?
கல்விச்செல்வத்தின் சிறப்பை அடைய இடையீடு இன்றிக் கற்க வேண்டும் அல்லவா?
இவ்வுலகில் இருக்கும் வரையும் கற்க வேண்டுமல்லவா? கற்பதைத் தொடர் பணியாகக் கொள்ள வேண்டுமல்லவா?
திருவள்ளுவர் கற்பதற்கு ஓய்வு கொடுக்காமல் இறக்கும் வரையிலும் கற்க வேண்டும் என்கிறார். நூற்றுக்கணக்கில் அறிவியல் துறைகள் உள்ளன. அவரவர் பணிக்கேற்க துறைசார் கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
“சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்” என்றார் ஈழத்துக் கவிஞர் க.சச்சிதானந்தன்.
ஒவ்வொருவரும் சாகும்வரையும் தமக்குத் தொடர்பான கல்வி கற்று என்றும் எங்கும் சிறந்திட வேண்டும்.

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி, 29.08.2019