சனி, 1 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 57; வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி – சமந்தா

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 56 தொடர்ச்சி)

சமந்தா எழுதுகிறார்:

பொருளியல்:

வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி…

பசித்தவர் புசிக்க உணவு தர வேண்டும்.. உணவா?… தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடத் தராமல் காயப் போடுவதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் வாடிக்கையான நடைமுறையாக உள்ளது.

அதன் படி, இந்தியச் சேம( ரிசர்வு) வங்கியின் ஆறு உறுப்பினர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, திசம்பர் 5 முதல் 7 வரையிலான தனது இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதமான மறு கொள்முதல் ஒப்பந்தம்(‘ரெபோ’) விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது.  ம.கொ.ஒ.(ரெபோ)விகிதம் 5.9%இலிருந்து 6.25%ஆக உயர்ந்துள்ளது. இதனால் கல்வி, வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும். சேம வங்கி இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ம.கொ.ஒ.(ரெபோ விகிதத்தை 2.25% உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக, நிலையான வைப்பு வசதி (SDF) விகிதம் 6.00% ஆகவும், துணை நிலை வசதி (MSF) விகிதம் , வங்கி விகிதம் 6.50% ஆகவும் உள்ளது.

பொதுத்துறை அமைப்புகள் ஒன்றையொன்று வலுப்படுத்த வேண்டும். அது நவீன தாராளமயத்திற்கு (புதுத் தாராளியத்துக்கு) பிடிக்குமா? பிடிக்காது… அப்படியென்றால் அதன் ஒட்டுவாலான பாசக-விற்கும் பிடிக்காது. தனியார் துறையை வலுப்படுத்துமாறு பொதுத்துறை நிறுவனங்களை நெருக்குகிறது பாசக அரசு. தற்போது பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிதியை தனியார் துறை பரிமாற்ற நிதிகளின் குறுகியக் காலத் திட்டங்களில் முதலீடு செய்ய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் இந்த தாராளமய முடிவு கடும் கண்டனத்திற்குரியது. இது வரை, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் (சிபிஎசுஇ) தங்கள் உபரி நிதியை இந்தியப் பங்கு, பரிவர்த்தனை வாரியம்(SEBI/செபி) ஒழுங்குமுறைக்குட்பட்ட பொதுத்துறை பரிமாற்ற நிதிகளில் வைப்பு முதலீடு செய்யவே அனுமதிக்கப்பட்டன.

இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி(ஐடிபிஐ) வங்கியில் வெளிநாட்டு நிதி, முதலீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு 51% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

பொருளாதார வல்லுநர்கள் 51 பேர் நிதியமைச்சர் நிருமலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வரவிருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களை உயர்த்துமாறும், போதுமான மகப்பேறு சலுகைகளை வழங்குமாறும் கேட்டுள்ளனர்.

தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் (NOAPS) கீழ் முதியோர் ஓய்வூதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பை மாதத்திற்குக் குறைந்தது உரூ.200 என்பதிலிருந்து (2006 முதல் மாற்றப்படாமல் உள்ளது) உரூ.500 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், ஓய்வூதியம் பெறும் 2.1 கோடி பேருக்கு இதற்கெனக் கூடுதலாக உரூ. 7,560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கைம்பெண் ஓய்வூதியத்தை 300   உரூபாயிலிருந்து குறைந்தது 500 உரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் இதற்குக் கூடுதலாக உரூ.1,560 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) விதிமுறைகளின்படி மகப்பேறு உரிமைகளை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், இதற்குக் குறைந்தது 8,000 கோடி உரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் தில்லி பொருளியல் பள்ளி( )மதிப்புநிலைப் பேராசிரியர்  சீன் திரேசு (Jean Drèze); இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனப்(IGIDR)பொருளியல் பேராசிரியர் ஆர். நாகராசு, தில்லி இதொ.நு.(ஐஐடி) பொருளியல் பேராசிரியை இரீத்திகா கேரா, கலிபோர்னியா பெருக்குலி பல்கலைக் கழகப் பொருளியல்  பேராசிரியர் பிரணாபு பருதான் ஆகியோர் அடங்குவர்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 36

வெள்ளி, 31 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 56 : சிறையச்சம் வெல்வோம்!

 


ஃஃஃ         31 March 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 55 தொடர்ச்சி)

சிறையச்சம் வெல்வோம்!

புயல் மழைச் சேதம் பற்றிய என் வினவலுக்கு விடையாகத் தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு எழுதுகிறார்:

எனது மகன் கவின்அமுதன் சென்னையில் பாதுகாப்பாக இருக்கிறார். உசாவிக் கேட்டறிந்தேன்.

இம்மடலில் தாழி என்பதை முடக்கப்பட்ட இடம் என்ற பொருளில் தாழியில் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

‘தாழி’ வீட்டுச்சிறை என்ற பொருளையும் தருகிறது.
நல்லது அன்பரே! தாழி, சிறை என்றும் பொருள் தருமானால் மகிழ்ச்சி. அது என் தாய்வீடு. அங்குதான் நான் நானாகப் பிறந்தேன். சிறை என்பது மதில்சூழ் நாடு என்றும், நாடு என்பது திறந்தவெளிச் சிறை என்றும் தோழர் ஏசிகே சொல்வார். சிறைப்பட்டோரும் ஒடுக்கப்பட்டோரில் ஒரு பகுதியே என்பதால் அவர்களை அணிதிரட்டிப் போராடுவது நம் கடமை என்பார். வெளியே ஓர் அரங்கத்தில் பணியாற்றுவது போல் உள்ளே சிறையரங்கத்தில் பணியாற்ற வேண்டும் என்பார். அவரும் நானும் தோழர்களும் எங்கள் சிறை வாழ்க்கையை அவ்வாறே அமைத்துக் கொண்டோம். ஏசிகே சொல்வார்: தனி வாழ்க்கை, பொது வாழ்க்கை, மண வாழ்க்கை, சிறை வாழ்க்கை யாவும் சேர்ந்ததே நிறை வாழ்க்கை. சிறை செல்லாதார் வாழ்க்கை குறை வாழ்க்கையே!
நாடு இப்போதிருக்கும் சூழலில் பாசிச ஆட்சியாளர்களை எதிர்த்து மக்களை அணிதிரட்ட வேண்டுமானால் முன்னணித் தோழர்கள் எந்நேரமும் சிறைப்பட அணியமாய் இருக்க வேண்டும். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறைப்பட்டிருக்கவும் அணியமாய் இருக்க வேண்டும். நான் இப்படித்தான் இருக்கிறேன்.
முன்னணித் தோழர்கள் இவ்வாறு சிறைப்படுவது உடனோக்கில் இழப்பாகத் தெரியும் என்றாலும் நெடுநோக்கில் மக்களியக்கத்துக்கு உரமூட்டும். போராடும் மக்களனைவரையும் சிறையிலடைக்க ஆட்சியாளர்களால் முடியாது. அப்படி அவர்கள் முயன்றால் மக்களின் உறுதியான நீடித்த எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். வல்லரசியத்தையும் வல்லாட்சியையும் பாசிசக் கொடுங்கோன்மையையும் எதிர்க்க முதலில் இயக்கத் தோழர்களிடமும், இறுதியாகப் பெருந்திரளான மக்களிடமும் சிறையச்சத்தைப் போக்க வேண்டும்.
இந்திய வரலாற்றில் காந்தியாரின் தனிச் சிறப்பான வகிபாகத்துக்கு அடிப்படை என்ன? அவர் இந்திய மக்களின் சிறையச்சம் போக்கியவர் என்கிறான் கொலைகாரன் கோபால் கோட்சே.
ஆனந்து தெல்தும்புதே சிறைப்படுவதற்கு முன் சென்னையில் மக்களதிகாரம் ஒழுங்கு செய்த கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் பேசும் போது சொன்னேன்: மோதி ஆட்சியில் சிறைப்படுவது பெருமை!
ஃச்டான் சுவாமி, வரவரராவு போன்றவர்களுக்குக் கிடைத்த பெருமை நமக்கும் கிடைக்கட்டுமே! 
சுவாமிக்கு ஏற்பட்ட முடிவையும் நாம் மறக்கவில்லை. அவர் சாவச்சமே வென்று சாகாப் புகழ் பெற்று விட்டார். சிறையச்சத்தை வெல்வது என்பது கூட்டத்தில் முழங்குவது பற்றிய செய்தியல்ல. கையை முன்னே நீட்டி உறுதியேற்பது பற்றிய செய்தியும் அல்ல. ஒவ்வொரு தோழரும் இவ்வாறு உறுதி கொள்ள வேண்டும்.
விடுதலைக்கும் புரட்சிக்குமான போராட்டக் களங்களில் சிறையும் ஒன்று.
பீமா கொரேகான் சிறைப்பட்டோர் (பீகொ-16) விடுதலை கோரி….
குரல் எழுப்பும் பன்னாட்டுப் பொதுமன்னிப்புக் கழகம்
2022 மனிதவுரிமைகள் நாளில் பன்னாட்டுப் பொதுமன்னிப்புக் கழகம் ‘பீகொ-16’ விடுலைக்காக ஒரு பன்னாட்டு விண்ணப்ப முயற்சியைத் தொடுத்துள்ளது.
பீமா கொரேகான் – எல்கார் பரிசத்து வழக்குத் தொடர்பாக 2018 முதற்கொண்டு கொடுஞ்சட்டமாகிய ‘ஊபா’ எனும் சட்டப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 16 சான்றோர்கள் தளைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பதினொருவர் (11 பேர்) இன்றளவும் உசாவலே இல்லாமல் சிறையில் வாடுகின்றனர். இந்த அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க — பீகொ பதினறுவரை — உடனே முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்ற இயக்கத்தை திசம்பர்-10 பன்னாட்டு மனிதவுரிமைகள் நாளில் பன்னாட்டு பொதுமன்னிப்புக் கழகம் தொடுத்துள்ளது.
பீகொ-16 சான்றோரில் பாவலர்கள், இதழாளர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள் (வழக்கறிஞர்கள்), கலைஞர்கள், ஓர் இயேசு சபைப் பாதிரியார் உட்பட பல்வேறுபட்டோர் உண்டு. இவர்கள் செய்த குற்றமெல்லாம் அடிப்படைக் குடியாட்சிய விடுமைகளான கருத்துரிமை, கூட்டங்கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை ஆகியவற்றை அமைதியான முறையில் பயன்படுத்தி மக்களை விழிப்புறச் செய்தார்கள் என்பதே. இந்திய நாட்டின் தொல்குடி மக்களான வறிய தலித்துகள், பழங்குடிகளின் உரிமைகள் காக்க நீண்ட நெடுங்காலமாகப் பாடாற்றினார்கள் என்பதே.
பீகொ-16 சான்றோரில் அருள்தந்தை ஃச்டான் சுவாமி சிறைக்காவலில் இருந்தபோதே உயிரிழந்து விட்டார். அது ஒரு நிறுவனப் படுகொலை. ஆனந்து தெல்தும்புதே, சுதா பரத்துவாசு, வரவர ராவு ஆகிய மூவர்க்கும் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் கடுமையான கட்டுத்திட்டங்களோடு பிணை விடுதலை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சிறையில் சிதைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கருத்துடன்படாமை என்பது குடியாட்சியத்தின் காப்பு-அதரி ஆகும். காப்பதரிக்கு இடமளிக்கா விட்டால் அழுத்தக் கலன் வெடித்து விடும் என்று 2018ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் கூறியதைப் பொதுமன்னிப்புக் கழகம் எடுத்துக் காட்டியுள்ளது.
[Dissent is the safety valve of democracy. If you don’t allow the safety valve, pressure cooker will burst. — Supreme Court of India, 2018]

பீகொ-16 – இந்தப் பதினறுவரும் நம் வீர நாயகர்கள். அவர்களின் கதை உலகிற்குச் சொல்லப்பட வேண்டும். நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களில் சிலரோடு அறிமுகம் இருந்ததையே நான் பெருமையாகக் கருதுகின்றேன்.

பீகொ-16 ஒவ்வொரு வீரரைப் பற்றியும் தாழி பேசும்.
(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 36

வியாழன், 30 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 55: இரோசிமா-நாகசாகி

 






(தோழர் தியாகு எழுதுகிறார் 54 தொடர்ச்சி)

இரோசிமா- நாகசாகி:
மாந்தக் குலம் மறக்கலாகாத பேரழிவுப் பெருஞ்சான்றுகள்


ஒரு கற்பனை! கற்பனைதான்! உக்குரைன் போரில் வல்லரசியக் கனவுகள் கலைந்து போன நிலையில் உருசிய அதிபர் புதின் தன் அச்சுறுத்தலைச் செயலாக்கினால்… எண்ணிப் பார்க்க முடியாத பேரழிவு நேரிடும் என்பதில் ஐயமில்லை. உருசிய உக்குரைன் போரை நாம் எதிர்க்க ஒரு முகன்மையான காரணம் அது அணுவாய்தப் போராக முற்றும் ஆபத்து உள்ளது என்பதாகும். உருசியா உக்குரைன் மீது அணுவாய்தப் போர் தொடுத்தால், எவ்வளவு சிறிய அளவில் தொடுத்தாலும், எந்தச் சூழலில் தொடுத்தாலும் அது கொடிய குற்றம், பெரும் படுகொலைக் குற்றம் என்று கண்டிக்கத் தயங்க மாட்டோம்.


இந்தக் கற்பனையை அப்படியே திருப்பிப் போடுங்கள்: உக்குரைன் அல்லது உக்குரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா அல்லது வ.அ.ஒ.அ.(நேட்டோ) … உருசியாவுக்கு எதிராக அணுகுண்டுப் போர் தொடுத்தால் என்ன செய்வோம்? உருசியாவின் வன்பறிப்புக்கு எதிரான அணுவாய்தப் போர் என்று சொல்லி நியாயப்படுத்துவோமா? இல்லை, உருசியா தொடுத்தாலும் சரி, உக்குரைன் தொடுத்தாலும் சரி, அணுவாய்தப் போர் என்றாலே பேரழிவுதான்! அணுகுண்டு அணுகுண்டுதான்! இதில் இசுலாமியக் குண்டு, இந்துக் குண்டு – தருமக் குண்டு, அதருமக் குண்டு – பாசிசக் குண்டு, குடியாட்சியக் குண்டு – முதலியக் குண்டு, குமுகியக் குண்டு — வல்லரசியக் குண்டு, தேசியக் குண்டு — தாக்குதல் குண்டு, தற்காப்புக் குண்டு … என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஏனென்றால் அணுகுண்டு ஒரு போர்க் கருவியே அன்று. போர்க் கருவி என்றால் போரியல் இலக்குகளை மட்டும் குறி வைத்துத் தாக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். அணுகுண்டுக்கு இலக்கே மக்கள் கூட்டம்தான்! மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்றுகுவிக்க மட்டுமே பயன்படும் படியான பேரழிவுக் கருவியே அது. அணுகுண்டு சாதி பார்க்காது, மதம் பார்க்காது, இனம் பார்க்காது, தேசம் பார்க்காது, உயிரின் வகை பார்க்காது. பொருளின் தன்மை பார்க்காது, நியாயம் அநியாயம் பார்க்காது. அனைவரையும் அனைத்தையும் அடையாளமில்லாமல் அழித்து விடும்.
இது கற்பனை அன்று என்பதற்கு வரலாறு வழங்கியுள்ள மெய்ச்சான்றுதான் இரோசிமா – நாகசாகி! இந்த இரண்டும் இரண்டு சப்பானிய நகரங்களின் பெயர்கள் அல்ல. ஒரு பேரழிவுக்கான எச்சரிக்கையின் இரு நிலையான சின்னங்கள்! இரோசிமா நாகசாகிக் கொடுங்குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதோ, குண்டு வீசிய நாட்டுக்கும் வீசப்பெற்ற நாட்டுக்கும் இடையே பழிபகிர்வதோ, ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்துவதோ, இந்த அரசியல் என்னைக் கவலை கொள்ளச் செய்கிறது.

நாடுகளது இறைமையின் பெயரால் அணுவாய்தங்களையும் அணுக்கரு ஆய்வுகளையும் நியாயப்படுத்தும் மற்றொரு போக்கும் உள்ளது. இந்தப் போக்கின் சொந்தக்காரர்கள் இதைப் பெரிய கொள்கை என்று நம்பிக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை!

இறைமை, உரிமை, பெருமை என்று எந்தப் பெயரிலும் அணுவாய்த ஆக்கத்தையும் குவிப்பையும் நியாயப்படுத்த முடியாது. நாட்டுப்பற்று, வல்லரசுக் கனவு என்ற பெயர்களில் அணு வழிபாடு செய்து கொண்டிருந்த அபுதுல் கலாம் போன்றவர்களின் பொய்மையை இளைஞர்கள் புறந்துள்ள வேண்டும்! அதற்காகவேனும் இரோசிமா, நாகசாகியை மாந்தக் குலத்தின் கூட்டுள்ளத்தில் பதியச் செய்ய வேண்டும்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 35

புதன், 29 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 54 : சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை!

 



(தோழர் தியாகு எழுதுகிறார் 53 தொடர்ச்சி)

சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை!


தாழி அன்பர் சிபி எழுதியதை சென்ற மடலில் கண்டோம்.
“நீங்கள் அவ்வாறு கூறவில்லை, சத்தியசீலன் அவ்வாறு கூறியுள்ளார்” என்கிறார் சிபி. அவ்வாறு என்றால் எவ்வாறு?
“ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.” (தாழி மடல் 33.)
ஏற்புடையதல்லாத இந்தக் கூற்று என்னுடையதன்று என்பதை சிபி ஏற்றுக் கொள்கிறார். நல்லது, நான் விடுவிக்கப்பட்ட வரை மகிழ்ச்சி. நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் வருந்துகிறேன்.
அப்படியானால் சத்தியசீலன் அப்படிச் சொன்னாரா? என்று பார்க்க வேண்டும். முதன்முதலாக தாழி மடல் – 29இல் அவர் இப்பொருள் குறித்து எழுதினார். அடுத்த மடலில் (30) “பெரியாரா? பிராபகரனா?” என்ற தலைப்பில் அவருக்கு மறுமொழி எழுதினேன். தாழி மடல் – 32இல் அவரது விளக்கமும் மீண்டும் என் மறுமொழியும் (சீமான் அரசியலுக்கு பிரபாகரன் பொறுப்பா?) இடம்பெற்றன. இதன் பிறகு இந்தப் பொருள் குறித்து அவர் ஒன்றும் எழுதவில்லை. 29, 32 ஆகிய இரு மடல்களில் அவர் எழுதினார். இந்த இரண்டிலும் நீங்கள் சாற்றுவது போல் அல்லது அந்தப் பொருள்படும் படி சத்தியசீலன் ஏதாவது எழுதினாரா? என்பதுதான் கேள்வி.
அன்பர் சத்தியசீலன் இப்பொருள் குறித்து எழுதியிருப்பதெல்லாம்:
1) அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் எனும் பெயரால் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் இழிவுபடுத்தி வருகின்றனர்.
2) திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள்- கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அவர்தம் சாதிகளிள் அடிப்படையில்’ தமிழர் அல்லாதோர்’ என்றும் ‘திராவிடர்கள்’ என்போரை இனப் பகைவர் என்றும் சாதிய அடிப்படையிலான இனவாத அரசியலைக் கட்டமைக்கின்றனர்.
3) விடுதலைப் புலிகளின் அரசியலை தமிழகத்தில் என்னைப் போன்ற பலர் பரவலாக அறிய வந்தது திராவிட இயக்கமும் திமுகவும் ஈழ விடுதலை ஆதரவுப் பிரச்சாரத்தின் மூலம்தான்.
4) இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகள் திமுக – திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள் பரப்பிக் கொண்டுள்ளனர்.
5) இவர்களுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம்; இவர்களுக்குப் பின்னிற்பது யார் அல்லது எந்த ஆற்றல்! திராவிட இயக்கம் வீழ்ந்துபட்டால் அதனால் ஆதாயம் பெறுவது வலதுசாரி – இந்துத்துவா பாசிஸ்டுகளாகத்தான் இருக்க இயலும்.
6) இந்த இனவாதப் பிழைப்புவாதிகளுக்குப் பொருளாதார அடித்தளமாக இருப்பது மேலைநாடுகளில் வசிக்கும் ஈழ ஏதிலியரே!
7) பெரியாருக்கு எதிராக பிரபாகரனை எதிர்நிறுத்துகின்றனர்; நான் தெரியாமல்தான் கேட்கிறேன் – தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பெரியாராலா பிரபாகரனாலா? பிரபாகரனா தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடினார்?
8) பெரும்பாலான இடதுசாரிகள் (மகஇகவினர் உள்ளிட்ட) – அறிவுசீவிகள் பலரும் புலிகளை விமர்சித்து வருகின்றனர்! ஆனால் தங்களைப் போன்ற ஒரு சில இடதுசாரி அரசியலர்களும் பெரியாரியலாளர்களும் (பெரியாருக்கு நிகராகவே) ஆதரிக்கின்றனர்!
9) எனது நோக்கம் விடுதலைப் புலிகளை – பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல! அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை.

10) பெரியாரியலாளர்கள் பிரபாகரன்- புலிகளைப் போற்றுகிறார்கள்; மறுபுறம் இனவாதிகள் (தங்களைப் போன்ற மெய்யான தமிழ்த் தேசியவாதிகளை ஈண்டு நான் குறிப்பிடவில்லை) பிரபாகரன் பதாகையைத் தாங்கிக் கொண்டு பெரியாரை- திராவிட இயக்கத்தைக் கடுமையாகச் சாடுகின்றனர்.

11) அவர்கள் யாவர் என்பதை அனைவரும் அறிவோம் – இருப்பினும் வெளிப்படையாகவே கூறுகின்றேன்: நாம் தமிழர் கட்சியினரும் பெ.மணியரசன் போன்றோரும்தாம்!
12) புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ்பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்!
13) சீமானை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்து, (முன்பு கூவினார்களே- இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதுபோல்) ஈழத்தைப் பெற்றுவிடலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கிறார்களோ என்றுதானே கருதவேண்டியிருக்கிறது!
14) இத்தகைய சிந்தனை உடைய மக்களின் தலைவரான பிரபாகரன் அவர்களையும் நாம் ஐயுறவேண்டியிருக்கிறது – அவர் மக்கள் தலைவராக விளங்கியிருக்கும் பட்சத்தில்!
இவ்வளவுதாங்க சிபி! இவற்றுள் சிலவற்றுக்கு நான் மறுமொழி எழுதியுள்ளேன். நீங்கள் விரும்பினாலும் எழுதலாம். நலங்கிள்ளி கொஞ்சம் எழுதியுள்ளார். நீங்கள் தந்தை பெரியார் குறித்து என் பார்வைக்கு மறுப்பு எழுதியுள்ளீர்கள். நான் இனிமேல்தான் உங்களுக்கு எழுத வேண்டும். எழுதுவேன். இந்த விவாதம் இன்னும் முடியவில்லை. உரையாடல் தொடர்கிறது.
ஆனால் —
“ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது” என்ற கருத்தை நான் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அன்பர் சத்தியசீலனும் சொல்லவில்லை. அவரது எந்தக் கூற்றிலும் அப்படி ஒரு கருத்து தொனிக்கவே இல்லை. இந்த உரையாடலில் பங்கேற்ற யாரும் சொல்லவில்லை, சொல்லவே இல்லை. நீங்கள் எப்படிச் சொல்கின்றீர்கள் என்று விளங்கவில்லை.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 35
(குறிப்பு தாழி மடல் (34) சில அறிவிப்புகளை உடையது. இப்பொழுது தேவையில்லை என்பதால் அம்மடல் குறிக்கப் பெறவில்லை.)

செவ்வாய், 28 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 53: 2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு

      28 March 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 52 தொடர்ச்சி)

தோழர் சமந்தா எழுதுகிறார்:
2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு


• ஒவ்வோராண்டும், மிகச் சிறந்த, புதுமையான மார்க்குசிய நூலுக்குத் துய்ச்சர் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான துய்ச்சர் நினைவுப் பரிசு கேபிரியல் வினண்டு எழுதிய “அடுத்த மாற்றம்: துருவேறிய அமெரிக்கப் புறநகரில் தொழிற்சாலையின் வீழ்ச்சியும், சுகாதாரப் பராமரிப்பின் எழுச்சியும்” (The Fall of Industry and the Rise of Health Care in Rust Belt America) என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்ரியல் வினன்ட் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நவீன அமெரிக்காவில் வேலை, சமத்துவமின்மை, முதலாளித்துவம்பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் ‘தி நேசன்’, ‘தி நியூ ரிபபிளிக்கு’, ‘டிசண்டு’ ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.

• அமெரிக்காவின் பிட்சுபர்க்கு நகரம் ஒரு காலத்தில் உருக்குத் தொழிலின் மறு பெயராக அறியப்பட்டது. ஆனால் இன்று அதன் பெரும்பாலான ஆலைகள் இல்லாமல் போய் விட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் உள்ள பல இடங்களைப் போலவே, நீல அங்கித் தொழிலாளர்களுடன் உற்பத்தி மையமாக இருந்த ஒரு நகரம் இப்போது சேவைப் பொருளாதாரத்தின் — குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்புத் துறையின் — ஆதிக்கத்தில் உள்ளது. இது மற்ற எந்தத் தொழிலையும் விட அதிகமான அமெரிக்கர்களைப் பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் நகரங்கள் புதிய பொருளாதார யதார்த்தங்களை எவ்வாறு எதிர்கொண்டன என்பதைக் காட்ட கேபிரியல் வினண்டு நம்மைத் துருவேறிய புறநகரின் உள்ளே அழைத்துச் செல்கிறார். பிட்சுபர்க்கின் சுற்றுப்புறங்களில், தொழில்மய நீக்கத்தைத் தொடர்ந்து ஒரு புதிய தொழிலாள வருக்கம் தோன்றியிருப்பதை அவர் விவரிக்கிறார்.

• உருக்குத் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் வயதாகும் போது, அவர்களுக்கு அதிக சுகாதாரப் பாதுகாப்பு தேவைப்பட்டது. தொழில்துறைப் பொருளாதாரம் கடுமையாகச் சுருங்கினாலும், அங்கு பராமரிப்புப் பொருளாதாரம் செழித்தது. மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும் பல தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் பராமரிப்புப் பணிகள் பலவும் அந்நகரம் இழந்த உற்பத்தி வேலைகளுடன் சிறிதும் ஒத்திருக்கவில்லை. நீல அங்கித் தொழிலாளர்களைப் போலல்லாமல், வீட்டு, சுகாதார உதவியாளர்களும், மருத்துவமனை ஊழியர்களும் குறைந்த ஊதியத்திற்குக் கணிக்க முடியாத மணி நேரம் வேலை செய்கிறார்கள். மேலும் புதிய தொழிலாள வர்க்கத்தின் விகிதாசாரத்தில் பெண்களும், ‘கருப்பின’ மக்களும் கூடுதலாக உள்ளனர்.

• இன்று நாம் சந்திக்கும் கடுமையான நெருக்கடிகளில் சுகாதாரப் பணியாளர்கள் முன் வரிசையில் பணியாற்றுகிறார்கள். இருப்பினும் அவர்கள் தாம் இருபத்தோராம் நூற்றாண்டுத் தொழிலாளர்களின் முகம் என்பதை நாம் தாமதமாகவே அங்கீகரிக்கிறோம். அடுத்த மாற்றம் என்ற இந்த நூல், வரலாறு குறித்தும், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்தும் தனிப்பட்ட நுண்ணறிவுகளை வழங்குகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முதன்மைத் தொழிலாளர்களுடன் இணைந்து, அவர்களது பொருளாதார மதிப்பின் உயர்ந்து வரும் அங்கீகாரத்தை அரசியல் திறனாக மாற்றினால், அவர்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் ஒரு பெரிய ஆற்றலாவார்கள் என்கிறது இந்நூல்.

• கேபிரியல் வினண்டு அவர்களுக்கு நம் வணக்கங்களையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 35
(குறிப்பு : தாழி மடல் (34) சில அறிவிப்புகளை உடையது. இப்பொழுது தேவையில்லை என்பதால் அம்மடல் குறிக்கப் பெறவில்லை.)

திங்கள், 27 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 52 : சொல்லடிப்போம் வாங்க! (7)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 51 தொடர்ச்சி)

சொல்லடிப்போம் வாங்க! (7)

அன்பர் சிபி எழுதுகின்றார்:
ஆழ-கடல் என்பதில் உயிரொலி மெய்யொலியோடு புணர அகரம் கெடும். இவ்விதி தாரள-இயம் என நிலைமொழியிலும் வருமொழியிலும் உயிரொலி நிற்கும் நிலைக்குப் பொருந்தா என எண்ணுகிறேன்.

சிபி சுட்டும் இலக்கணம் சரி என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லி விட்டார். இந்தப் புதிய மடல் குறித்தும் அவர் கருத்தறிவோம்! சொல்லாய்வறிஞர் அருளியாரிடமும் பேசுகிறேன். அது வரை முடிவெடுப்பதைத் தள்ளி வைத்து விட்டு மற்ற சொல்லாக்கங்களில் கவனம் செலுத்துவோம்.
Imperiaslism = ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? அல்லது வேறு சொல் உண்டா? இது குறித்து அன்பர்கள் எழுதுங்கள்.
Capitalism = முதலாளித்துவமா? முதலாளியமா? முதலியமா? – இது குறித்த உரையாடலையும் தொடங்குவோம், தொடங்குங்கள்.

பெரியாரா? பிராபகரனா? (தாழி மடல் 30) கட்டுரைக்கு எதிர்வினையாக அன்பர் சிபி எழுதுகின்றார்:
ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக்கூடாது என்பது ஏற்புடையதல்ல.
சரியாகச் சொன்னீர்கள். நானும் திருப்பிச் சொல்கிறேன்: ஈழத்தில் பிரபாகரன் (பெரியார்) ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.
யார் அப்படிச் சொன்னது? எங்கே? எப்போது? நான் எங்கும் அப்படியோ அந்தப் பொருள்படும்படியோ சொன்னதாக எனக்கு நினைவில்லை. உண்மையில் நான் அப்படிச் சொல்லியிருந்தால் எடுத்துக் காட்டுங்கள், சிபி!
சிபிதான் என்றில்லை! அன்பர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக் காட்டுங்கள்! திருத்திக் கொள்கிறேன். சத்தியசீலனின் கடிதம் தொடங்கி இந்த மடல் வரை 29 முதல் 33 வரைக்குமான தாழி மடல்களில் இது குறித்து வந்துள்ள அனைத்தையும் படித்து விட்டுச் சொல்லுங்கள்.
பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவரே தவிர எமதியக்கத்தின் தலைவரல்லர் என்று நான் தெளிவாக எழுதிய பின் சிபி சாற்றுவது போல் நான் எப்படிச் சொல்வேன்?
உரையாடலைத் தொடர்வோம்.
(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 33

ஞாயிறு, 26 மார்ச், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 51:நகர்ப்புறக் குடியிருப்பு-நிலவுரிமைக் கூட்டமைப்பின் அறைகூவல்

      26 March 2023      அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 50 தொடர்ச்சி)

நிலவுரிமைக்காக போராடுவோம்!

சென்னை பூர்வகுடி-உழைக்கும் மக்களின் நிலத்தின் மீதான உரிமை மெல்லமெல்லப் பறிக்கப்பட்டு அவர்கள் ஏதுமற்றவர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். நகரமயமாதல், ஊர்ப்புறங்களில் வேலையின்மை போன்ற காரணங்களால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் இடம்பெயரத் தள்ளப்படுகின்றனர். பல்வேறு தரப்பட்ட மக்களின் வருகை தமிழ் மக்களின் ஓர்மை உணர்வையும் மண்ணின் மைந்தர்கள் என்ற ஒற்றுமை உணர்வையும் இழக்கச் செய்கிறது. தனியார்மயம் நிலத்தை வணிகப் பொருளாக்கி அதனைப் பெருமுதலாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வகை செய்கிறது. புதுத்தாராளியக் கொள்கை நகரங்களை முழுவதுமாக முதலாளர்களிடம் ஒப்படைத்து விடுகிறது. இது நகர்ந்து நகர்ந்து கிராமப்புறங்களைக் கைப்பற்றி நாட்டையே ஒரு வணிக வளாகமாக மாற்றி விடும் பேராபத்து சூழ்ந்துள்ளது. நகரங்களில் ஏற்கெனவே அந்த நிலைமை வந்து விட்டது.
சென்னையைப் பொறுத்தவரையில் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் தவிர அரசு அலுவலகங்கள், ஆளும் வருக்கக் கும்பலின் வீடுகள்தான் தற்போது பெரும்பகுதி நிலத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆளும்வருக்கக் கும்பலே வீட்டுரிமையாளர்களாவும் இருப்பது கூடுதல் வசதி.
நகரங்களில் பரந்து விரிந்து வாழ்ந்து வந்த மக்களை தொழிற்சாலைக்கும் முதலாளர்களுக்கும் அடிமை வேலை செய்ய வைப்பதற்குத் தோதாக மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் அடைத்து விட்டனர். அவர்களின் நிலங்களைப் பறித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நசுக்கி விட்டனர். கடலோடும் மீனவர்களைக் கரையிலிருந்து அகற்றியதோடு கடல்சார் வணிகதையும் இன்று தனியாருக்குத் தாரை வார்க்கிறது அரசு.
அடித்தட்டு ஏழை எளிய மக்கள் அடிமை வேலை செய்யத் தொழிற்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு அருகில் அவர்களைக் குடியமர்த்துவதற்கான திட்டமாகக் குடிசைமாற்று வாரியத்தைப் பயன்படுத்திக் கொண்டது அரசு. அதன் விளைவுதான் நவீன அடிமைகளாக மாறியிருக்கிற கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதி மக்களின் இப்போதைய வாழ்நிலை. இன்று குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பையும் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் என்று மாற்றி வீட்டுரிமையையும் பறிக்கத் திட்டமிடுகிறது அரசு.

உழைக்கும் வகுப்பு உழவைத் தொழிலாகக் கொண்டிருந்த போது உழவர்கள் புரட்சியின் முதன்மை ஆற்றலாக விளங்கினார்கள். உழுபவனுக்கே நிலம் சொந்தம், குறைந்த பட்சக் கூலி முழக்கங்களைக் கொண்டு மக்களைத் திரட்டினோம். தொழிற்சாலைகளில் பணியாட்களாக இருந்த போது ஆலைத் தொழிலாளர்கள் முன்னணிப் படை. பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் போன்ற முழக்கங்களைக் கொண்டு மக்களைத் திரட்டினோம். இன்றைய சூழலில் அனைத்தும் ஒப்பந்தப் பணிகளாக மாறி வருகிறது. நிலமும் சொந்தமில்லை பணியும் நிரந்தரமில்லாத நிலை. வணிக நோக்கத்திற்காக விவசாய நிலங்கள், மக்களின் குடியிருப்பு நிலங்கள், கடல், மலை என அனைத்தையும் பெருமுதலாளர் வகுப்பு கைப்பற்றி வருகிறது. எனவே இனி நமது முழக்கம் நிலவுரிமைக்கானதுதான். நிலவுரிமைக்காகப் போராடும் நிலமற்றவர்களே நமது முன்னணிப் படை. அவர்களே பாட்டாளிகள்.

1) கோப்பைத் தண்ணீர் கோட்பாடு: உலகம் முழுக்கப் பல பண்பாடுகள் இருந்து வரும் நிலையில், அந்தந்த நாட்டில் உள்ள பண்பாட்டில் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய அம்மக்களே முயன்று அச்சமூகச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வது சரியா? பிற நாட்டுப் பண்பாட்டை அப்படியே இங்கு நகலெடுப்பது சரியா?

விடை: எந்த நாட்டுப் பண்பாட்டையும் அப்படியே படியெடுத்தல் அல்லது பார்த்தொழுகுதல் சரியில்லை. தேசிய இனப் பண்பாடு, நாட்டுப் பண்பாடு போலவே வேறு சில பண்பாடுகளும் உள்ளன: வட்டாரப் பண்பாடு, வகுப்புப் பண்பாடு [வருக்கப் பண்பாடு] அகவைசார் பண்பாடு என்று பலவும் உள. இவை தவிர உலகு தழுவிய மாந்தக் குலப் பண்பாடும் உள்ளது. எந்தப் பண்பாடும் மாற்றமில்லாதது அன்று. ஒவ்வொரு பண்பாட்டிலும் முற்போக்கும் பிற்போக்கும் போராடிய வண்ணமுள்ளன. தமிழ்ப் பண்பாட்டுக்கும் இது பொருந்தும். பண்பாடு என்பது விழுமியங்களின் இயங்கியல் தொகுப்பு. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே! இது பண்பாட்டுக்கும் பொருந்தும்.

சரி! கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு தொடர்பாக இந்தக் கேள்வி உங்களுக்கு எழுவது ஏன்? கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு என்னும் பாலியல் விடுமைக் கொள்கையை இலெனின் எதிர்க்கிறார். காதல் விடுமையும் பாலியல் விடுமையும் ஒன்றல்ல என விளக்குகின்றார். புரட்சியாளர்களின் பாலியல் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றார். இப்பொருள் குறித்து 1 முதல் 5 வரைக்குமான தாழி மடல்களில் வந்துள்ள தொடர் கட்டுரைகளைப் படியுங்கள். ஏதேனும் புரியவில்லை என்றால் கேளுங்கள். எனக்குத் தெரிந்த வரை விளக்குகிறேன்.

2) தாழி என்பது விவாதம் என்பதற்கான மாற்றுச் சொல்லா? இது எனது ஊகமே. தாழி என்றால் குடம், சாடி, தளம், பதலை, அகளம், பரணி எனப் பொருளுரைக்கிறது
திவாகர, பிங்கல,சூடாமணி நிகண்டுகள்.

தற்கால அகராதிகள் முதுமக்கள் தாழி, வாயகன்ற பானை என்பதாகக் கூறுகின்றன.
தாழி என்ன பொருளில் நீங்கள் கையாளுகிறீர்கள்? உங்கள் தாழி மடல் எதிலாவது இதற்கு விளக்கம் வந்துள்ளதா?

தாழி மடல் 2இல் முதுமைத் தாழி, வெண்ணைத் தாழி எனக் குறிப்பிடுள்ளதைப் படித்தேன். தாழி என்பது சேமிக்கப்பட்ட ஒன்றிலிருந்து எடுத்து வழங்குவது எனக் கொள்ளலாமா?

விடை: தாழி பல பொருளுடைத்து என்றாலும், நான் தாழி மடலில் இரு பொருள் மட்டும் கொள்கிறேன்: ஒன்று வெண்ணெய்த் தாழி – மோர் கடந்து வெண்ணெய் எடுப்பது போல் நாம் உரையாடல் வழியாகப் புதிய சிந்தனைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இரண்டு முதுமைத் தாழி, சரியாகச் சொன்னால் முதுமக்கள் தாழி. நிலையாமையையும் முதுமையையும் தவிர்க்கவியலாது, இருக்கிற காலத்திற்குள் விரைவாகவும் செறிவாகவும் உழைக்க வேண்டும் என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்கிறேன். ‘காலமில்லை, நேரமில்லை, ஓடு ராசா!’

மீண்டு வர முடியாத தாழியில் இருக்கிற உணர்வோடு பாடாற்ற வேண்டிய தேவை எனக்குள்ளது, நமக்குள்ளது. சொல்வல்லனாய் இருந்தால் போதாது. சோர்விலனாகவும் இருத்தல் வேண்டும்.

நீங்கள் தந்துள்ள விளக்கத்தை நம் தாழிக்கு மூன்றாம் பொருளாகவும் கொள்ளலாம். நாம் சேமித்து வைத்துள்ள அறிவுச் செல்வத்தைப் பரிமாறிக் கொள்ளத் தொடர்பாடல் துறையில் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் அளித்துள்ள நல்வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தாழி பயன்படும்.
(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 33

தோழர் தியாகு எழுதுகிறார் 50

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 49 தொடர்ச்சி)

அன்பர்கள் எழுதுவதை வரவேற்கிறோம்

அன்பர் சத்தியசீலனின் முதல் மடல் குறித்து நலங்கிள்ளி எழுதுகிறார்:
“திமுகவின் ஈழ நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்பட்டது என்பது இந்திய முன்னாள் தலைமையமைச்சர் இராசீவு காந்தி படுகொலைக்குப் பின்னரே” என்று சத்தியசீலனே ஏற்றுக் கொள்கிறார். அப்படியானால் இராசீவு மரணத்துக்கும் திமுகவின் தமிழீழ நிலைப்பாடு மாறுவதற்கும் என்ன ஏரணப் பொருத்தம் இருக்க முடியும்? தமிழீழ நிலைப்பாட்டில் திமுகவின் கருத்து மாறி விட்டது என்ற பிறகு அந்த அமைப்பு மீது விமரிசனம் வரத்தான் செய்யும். அந்த விமரிசனங்களை அவதூறு என்று சத்தியசீலன் எப்படிப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை.”
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அன்பர் சிபி எழுதுகிறார்:
தமிழினத்தின் மொழிப்போரில் முதலில் ஒரு நிலை, பின்பு ஒரு நிலை, எல்லைப் போராட்டத்தில் ஈவெராவின் பங்களிப்பே இல்லை, நீடாமங்கலம் தவிர வேறெந்த சாதிசார் சிக்கலிலும் போராடவில்லை. வெறும் பிராமண எதிர்ப்பு மட்டும் தமிழின தன்மான அடித்தளமாகவோ சமூகநீதிப் புத்தமைப்பின் உலைக்களமாகவோ விடுதலைச் சிந்தையின் விளைநிலமாகவோ ஆகிவிடுமா? ஈவெராவின் வரலாற்றுப் பங்களிப்பு எவ்விதத்திலும் தமிழர் இனத்தின் வரலாற்றுக்கு உதவவில்லை. தங்களின் மறுமொழிக்குப் பின் மேலும் பேசலாம் தோழர்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பேசுவோம் அன்பர்களே!
இது வரையிலான தாழி மடல்களில் எதுவாவது யாருக்காவது கிடைக்காமல் இருந்தால் தெரிவியுங்கள். அனுப்பி வைக்கிறோம். கடந்த 31 நாளில் ஒரு நாள் கூட விடாமல் எழுதியுள்ளேன். தொடர்ந்தும் அவ்வாறே. மடல் செய்திகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. எதைப் படிப்பது, எதைப் படிக்காமல் விடுவது என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. தாழி அன்பர்களில் பலதரப்பட்டவர்களும் இருப்பதால் எல்லாருக்கும் ஒரேவிதமாகப் பரிமாறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இரண்டாவதாக எனக்குள்ள அவசரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இது எனக்கு விடியலோ நடுப்பகலோ அல்ல. இயற்கை இடமளித்தால் மாலை என்றுதான் கருதிக் கொள்கிறேன். அந்தி சாய்வதற்குள்… எண்ணவும் எழுதவுமான நலத்துடன் இருக்கும் போதே பகிரத் தேவையானவற்றை எல்லாம் இயன்ற வரைக்கும் பகிர்ந்து விட வேண்டும். நீங்கள் வேண்டுமானால் சிலவற்றைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று சேமித்துக் கொள்ளுங்கள். பயன்படக் கூடும். இயன்ற வரை சுருக்கமாகவே எழுதுகிறேன். நீண்டு எழுதுவது எனக்கும் சுமைதானே?
காலநிலை மாற்றம், அணுவாய்தப் பேரிடர், மாந்தவுரிமைகள், புதுத் தாராளியம், பார்ப்பனர்களுக்கான பாசக அரசின் இட ஒதுக்கீடு… இன்னும் பலவற்றைப் பற்றியும் தொடர்ந்து உரையாட வேண்டும். நான் மட்டும்தான் எழுத வேண்டும் என்பதில்லை. அன்பர்கள் இந்தத் தலைப்புகளிலோ பொருத்தமான வேறு தலைப்புகளிலோ எழுதுவதை தாழி விரும்பி வரவேற்கிறது. எழுதுங்க…
தியாகு, 08.12.2022, திருவள்ளுவராண்டு 2053, கார்த்திகை 22, வியாழன்
(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 32