வெள்ளி, 22 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : எங்கள் பெயரால் செய்யாதே!- தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இசுரேல் எதிர்ப்பும் இசுலாமியக் குறுநெறியும்

இசுரேல் – பாலத்தீனப் போர் குறித்துப் பல கோணங்களிலும் ஆய்ந்து பார்க்க வேண்டிய தேவையுள்ளது. எனது அறிவன் கிழமை (தமிழ்நாடு இனி) அரசியல் வகுப்புகளில் இந்தச் சிக்கலின் வரலாறு முழுவதையும் சுருக்கமாகச் சொல்லி வருகிறேன். செமித்திய எதிர்ப்புக் கொள்கை-நடைமுறை, சீயோனியத்தின் தொடக்கமும் வரலாறும், இசுரேல் வந்த வழி ஆகியவற்றை அலசியுள்ளேன். அடுத்து பாலத்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துக் கொள்வோம்.

இதற்கிடையில், சமூக-அரசியல் கண்ணோட்டமும் வரலாற்றுப் பார்வையும் இல்லாமல் இந்தச் சிக்கலைத் தங்கள் காழ்ப்புகளுக்கு ஏற்பக் கையாளும் முயற்சிகளையும் பார்க்க முடிகிறது.

சில உண்மைகளை எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். இசுரவேலர்கள் எல்லாரும் யூதர்கள் அல்லர். யூதர்கள் எல்லாரும் இசுரவேலர்களும் அல்லர். பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் எபிரேய மொழி பேசும் இசுரவேலர்களில் யூதரல்லாதாரும் இருந்தனர். அப்போது கிறித்துவம் தோன்றவில்லை, இசுலாமும் தோன்றவில்லை. இசுரேல் நாட்டில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர் பிற்காலத்தில் கிறித்துவரானார்கள், மற்றொரு பகுதியினர் இசுலாத்துக்கு மாறினார்கள். ஆகவே இவ்வளவு காலம் கழித்து “இசுரேல் யூதர்களுக்கே!” என்ற சீயோனிய முழக்கம் பிழையானது. சீயோனிய வெறியில் வீழ்ந்திடாத இசுரேலிய யூதர்கள் இசுரேலை அனைத்து சமயத்தவருக்கும் சமயச் சார்பில்லாதவர்களுக்குமான உலகிய (சமயச் சார்பற்ற) நாடாக்குவதற்காகப் போராட வேண்டும். அதுதான் குடியாட்சியமாக இருக்கும்.

மறு புறம், சீயோனியத்துக்கும் இசுரேலின் போர் வெறிக்கும் எதிரான உணர்ச்சியை யூத வெறுப்பாக மாற்றும் முயற்சியை இசுலாமியப் பரப்பாளர்கள் சிலர் செய்து வருவதை ஏற்பதற்கில்லை. இது பழைய செமித்திய-எதிர்ப்புக்குப் புத்துயிரளிக்கும் மோசமான முயற்சி! யூதர்கள் இறைவனால் கண்டித்து ஒதுக்கப்பட்டவர்கள் என்பதற்குத் திருக்குரானில் சான்றுகள் இருப்பதாக முசுலிம் இளைஞர் ஒருவர் வலையொளி சமூக ஊடகத்தில் பேசக் கேட்டு அதிர்ச்சியுற்றேன். இதுதான் இசுலாமியக் குறுநெறி (அடிப்படைவாதம்)! இது தமிழ்ச் சமூகத்துக்கும் மாந்தக் குல முன்னேற்றத்துக்கும் பகையான சிந்தனை!

யூதர்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள், இந்துக்கள் யாரானாலும் இறைவனிடம் நற்சான்று பெற்றவர்கள் யாருமில்லை, இறைவனால் சபிக்கப்பட்டவர்களும் யாருமில்லை. அப்படியெல்லாம் நம்பிக்கைகள் இருக்குமானால் அவை மூட நம்பிக்கைகளே! மூட நம்பிகைகளை உங்கள் மனத்தளவில் வைத்துக் கொள்ளுங்கள்! பொதுச் சமூகத்தில் விதைத்து வெறுப்பை விதைக்காதீர்கள்! தினை விதைத்தால் தினை! வினை விதைத்தால் வினை! வெறுப்பை விதைத்தால் பகை! மாந்தப் பகை!
பாலத்தீனர்களை ஆதரிப்பதன் பெயரால் யூதர்களை இனவழிப்புச் செய்வதற்கான வெறுப்பை விதைக்கும் இசுலாமியக் குறுநெறியை வெளிப்படையாக எதிர்க்கத்தான் வேண்டும். இசுலாமிய அரசு (ISLAMIC STATE – IS) அல் கொய்தா போன்ற இசுலாமியக் குறுநெறி அமைப்புகளால் இசுலாமியருக்கோ மற்றவர்களுக்கோ எவ்வ்வித நன்மையும் இல்லை. இவர்கள் எந்தத் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடவில்லை. உலகு முழுவதையும் இசுலாமிய ஆட்சிக்கு உட்படுத்தும் அனைத்திசுலாமியம் (PAN-ISLAMISM) … என்பதே இந்தக் குறுநெறியாளரின் வெறிக் கொள்கை. ஒரே தேசம் ஒரே மதம் என்று மோதி முன் வைப்பதும், ஒரே உலகம் ஒரே மதம் என்று இசுலாமியக் குறுநெறியாளர் முன்வைப்பதும் விளைவளவில் ஒன்றுதான்! யூதர்கள் என்றால் பிறவியிலேயே மோசமானவர்கள், சூனியக்காரர்கள், வெறியர்கள் என்று இசுலாமியத் தமிழ் இளைஞர் ஒருவர் பொறிந்து தள்ளுவதைப் பார்த்தால் நாம் எச்சரிககையோடிருக்க வேண்டிய தேவை உள்ளது என நினைக்கிறேன்.
இசுரேலிடம் திரும்பிச் செல்வோம். காசா முனையில் போரின் அழிவுக்கு ஆளான பாலத்தீனர்களுக்காக மட்டுமல்ல, இசுரேலில் அழிவுக்கு ஆளான யூதர்களுக்காகவும் நாம் வருந்துவதே அறம். உலகியம், குடியாட்சியம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் பாலத்தீனம், இசுரேல் ஆகிய இரு நாடுகள் அமைவதுதான் தீர்வாக இருக்க முடியும், உடனடித் தீர்வு போரை அறவே நிறுத்துவதுதான்! இது பற்றார்ந்த விருப்பம் மட்டுமன்று! இது ஒன்றுதான் செயலுக்குகந்த தீர்வாக இருக்கும்!

தோழர் தியாகு
தாழி மடல் 344

(தொடரும்)

வியாழன், 21 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : எங்கள் பெயரால் செய்யாதே!

 




(தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே

!எங்கள் பெயரால் செய்யாதே! எங்கள் பெயரால் செய்யாதே!

(NOT IN OUR NAME! NOT IN OUR NAME!)

ஐயா நக்கீரன் எழுதியதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:

இசுரேல் என்ற நாட்டை ஐக்கிய நாடுகள் சபை 1948 இல் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை இழந்து நாடோடிகளாகவும் அடிமைகளாகவும் நாசிகளது இனப்படுகொலைக்கு உள்ளாகி உலகம் முழுதும் சிதறிக் கிடந்த யூதர்கள்தான் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள்.”

1948ஆம் ஆண்டு மே 14ஆம் நாள் யூத முகமையின் தலைவர் தேவிட்டு பென்-குரியன் இசுரேல் அரசு நிறுவப்படுவதாக அறிவித்தார். அதே நாள் அமெரிக்க அதிபர் ஆரி எசு. துருமன் புதிய அரசை அறிந்தேற்றார்.

இசுரேல் அமைக்கப்படுவதற்கான அடிப்படை ஆவணம் முதல் உலகப்போர்க் காலத்தில் 1917ஆண்டு வெளியிடப்பெற்ற பால்ஃபோர் சாற்றுரை (பால்ஃபோர் பிரகடனம்) ஆகும். உலகப் போர் தொடங்கும் போது உதுமானியப் பேரரசு (0TTOMAN EMPIRE) எனப்பட்ட துருக்கியப் பேரரசின் கீழ் இருந்த பாலத்தீனத்தில் சியோனிய இயக்கம் கோரியபடி யூதர்களின் தேசியத் தாயகமாக இசுரேல் நாட்டை அமைத்துக் கொடுக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டு 1917 நவம்பர் 2ஆம் நாள் பிரித்தானிய அயலுறவு அமைச்சர் ஆர்தர் பால்ஃபோர் பிரித்தானிய யூத சமுதாயத்தின் தலைவர் உரோத்துசைல்டு பிரபுவுக்கு எழுதிய வெளிப்படையான கடிதம்தான் பால்ஃபோர் சாற்றுரை எனப்படுகிறது. அந்த நேரத்தில் பாலத்தீனத்தில் அரபு மொழி பேசும் பாலத்தீனர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள், யூதர்கள் சிறுபான்மையாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பால்ஃபோர் சாற்றுரையை அமெரிக்காவும் ஆதரித்தது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் என்ன நடந்தது என்பது தெரிந்ததே. இட்டுலரின் நாசிகளால் யூதர்கள் இனவழிப்புச் செய்யப்பட்டார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த சற்றொப்ப 90 இலட்சம் யூதர்களில் 60 இலட்சம் பேர் கொலையுண்டார்கள். செருமனி, போலந்து, ஆத்திரியா போன்ற நாடுகள் யூத மக்களின் பெருங்கொலைக் களங்களாயின. சோவியத்து ஒன்றியம்தான் யூத மக்களைப் பாதுகாத்தது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்திய கொடுமைகள் யூதர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பெரிதும் வலுச் சேர்த்தன. கொடுமைகள் நிகழ்ந்த ஐரோப்பாவில் அல்ல, வெகுதொலைவில் மத்தியதரைக் கடல் வட்டாரத்தில் பாலத்தீனத்தில் அந்த நாட்டை ஒரு புராணக் கதையின் அடிப்படையில் அமைத்ததுதான் இன்று வரை சிக்கலுக்குக் காரணமாகியுள்ளது.

நாடில்லாத மக்களுக்கு மக்களில்லாத நாடு” [A LAND WITHOUT PEOPLE FOR A PEOPLE WITHOUT LAND] என்பது சீயோனியத்தின் முழக்கம். ஆனால் பாலத்தீனம் மக்கள் நிறைந்த நாடாக இருந்தது. முதல் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் பிரித்தானிய வல்லரசின் கட்டளையதிகாரத்துக்கு உட்பட்டிருந்த பாலத்தீனம் 1948இல் இரு பாதியாகப் பிரிக்கப்பட்டு ஒரு பாதியில் இசுரேல் அமைக்கப்பட்டது. மறுபாதியையும் இசுரேல் படையெடுத்துச் சென்று கைப்பற்றிக் கொண்டது. அதைத் தடுக்க முயன்ற அரபு நாடுகள் தோற்றுப் போயின. பாலத்தீனத்தில் மிச்சமிருந்த பகுதிகள் யோர்தான் மேற்குக் கரையும் காசா முனையும்தான். ஆனால் மேற்குக் கரை யோர்தான் நாட்டிற்கும், காசா முனை எகிப்துக்கும் போய் விட்டன. பாலத்தீனர்கள் நாடற்றுச் சிதறிப் போனார்கள்.
இப்படித்தான் இசுரேல் பிறந்தது.


“2000 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை இழந்து நாடோடிகளாகவும் அடிமைகளாகவும் நாசிகளது இனப்படுகொலைக்கு உள்ளாகி உலகம் முழுதும் சிதறிக் கிடந்த யூதர்கள்தான் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள்” என்று நக்கீரன் ஐயா சொல்கிறார்.


யூதர்களுக்கென்று ஒரு நாடு என்றைக்கும் இருந்ததில்லை. பழைய பாலத்தீனத்தையே இசுரேல் என்று வைத்துக் கொண்டாலும் அது யூதர்களுக்கான தனித்துரிய நாடன்று. அந்தப் பகுதியில் தோன்றிய கிறித்துவத்துக்கும், சில நூறாண்டுகள் கழித்துப் பிறந்த இசுலாத்திற்கும் கூட அந்த நிலத்தில் உரிமை உண்டு. ஏனைய பிற சமயங்களுக்கும் அவற்றை நம்பிக் கடைப்பிடித்த மக்களுக்கும் கூட உரிமை உண்டு.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக செமித்திய எதிர்ப்புக் கொள்கை எனும் யூத வெறுப்புக் கொள்கையின் கொடுந்தாக்கிற்கு ஆளான யூத மக்கள் சீயோனிய இயக்கத்தின் ஊடாகத் தங்களுக்கென்று நாடமைத்துக் கொண்டார்கள். அவர்கள் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள் என்று ஐயா நக்கீரன் சொல்வது உண்மைதான். ஆனால் அந்தக் குருதி யாருடைய குருதி? நாசிகளால் கொலையுண்ட யூதர்களின் குருதி மட்டும்தானா? யூதர் இனவழிப்புக்கு எவ்விதத்தும் பொறுப்பில்லாத அரபுகளின் குருதி, பாலத்தீனர்களின் குருதியும் சிந்தப் பட்டதே, இன்றளவும் சிந்தப்படுகிறதே! ஐயா, இதற்கு யார் பொறுப்புக்கூறுவது?

மதத்துக்கு ஒரு நாடு என்ற பிற்போக்குக் கொள்கையை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும். யூதம், இசுலாம், இந்து, பௌத்தம், கிறித்துவம்… எந்த மதத்துக்கென்றும் நாடமைக்க முற்படுவது பிற்போக்கானது. ஆனால் சிலபல வரலாற்றுக் காரணங்களால் யூத இசுரேல் உருவாக்கி இவ்வளவு காலம் நிலைத்து விட்டது. இசுரேலின் சியோனிசத்தை அந்நாட்டு மக்களே மறுதலிக்கும் காலம் வரும். அறிவார்ந்த யூத மக்கள் இப்போதே இசுரேலின் அரசத் திகிலியத்தைக் கண்டித்து முழங்கி வருவது நம்பிக்கையூட்டும் செய்தி. புது யார்க்கில் யூத மக்கள் காசா மீதான தாக்குதலைக் கண்டித்து நடத்திய ஆர்ப்ப்பாட்டத்தில் எழுப்பிய முழக்கம்: NOT IN OUR NAME! இந்தக் கொடுமையை எங்கள் பெயரால் செய்யாதே!

தோழர் தியாகு
தாழி மடல் 343
(தொடரும்)

புதன், 20 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு

 




(தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தாய்மண்ணை விட்டகலோம்!
பாலத்தீனத் தலைவர் மகமுது அப்பாசின் உறுதி!

காசா முனையில் வாழும் பாலத்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்துள்ள போர் ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில்தான் கெய்ரோவில் பன்னாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்துள்ளது. இது கெய்ரோ அமைதி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பன்னாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் பிரான்சு, செருமனி முதலான வல்லரசுகளின் தலைவர்களை மட்டும் காணவில்லை.

இசுரேலின் படையெடுப்புக்கு உதவப் போர்க் கப்பல் அனுப்பத் தெரிந்த அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் கெய்ரோ மாநாட்டுக்கு வரவில்லை. அமெரிக்க வல்லரசு சார்பில் மாநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதகத்தின் பொறுப்பதிகாரி, அவரும் மாநாட்டில் வாய்திறக்கவே இல்லை.

ஃகாமாசு தாக்குதலைச் சாக்கிட்டு காசாவிலிருந்து மட்டுமல்ல மேற்குக் கரையிலிருந்தும் பாலத்தீன மக்களைத் துரத்தியடித்து விட்டு, அந்த இரு பகுதிகளையும் மீண்டும் வன்பறிப்புச் செய்து அமெரிக்க வல்லரசின் ஆதரவோடு அகண்ட இசுரேல் அமைப்பதுதான் இசுரேலிய நெட்டன்யாகு அரசின் திட்டம் என்பது வெளிப்படையான செய்தி. இசுரேலிய அமைச்சர்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தியும் வருகின்றார்கள். மோதியின் நிலைப்பாடு ஒரு வகையில் அகண்ட இசுரேலுக்கு அகண்ட பாரதம் அளிக்கும் ஆதரவுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முற்றுகைக்கு ஆளான காசா மக்களுக்கு எகிப்து வழியாக அனுப்பப்படும் துயர்தணிப்பு உதவி என்பது ஆனைப் பசிக்கு சோளப் பொறி என்று சொல்லக்கூட போதுமானதன்று.

இந்தப் பகைப்புலத்தில் கூடிய கெய்ரோ மாநாடு போர்நிறுத்தத்தை வலியுறுத்தும் ஒரு கூட்டறிக்கை கூட வெளியிடாமலே கலைந்து விட்டது.

இந்த மாநாட்டில் உலகமும் நாமும் கவனிக்க வேண்டிய ஓர் உரை என்றால் பாலத்தீன அதிகார அமைப்பின் தலைவர் மகமுது அப்பாசு அவர்களின் சுருக்கமான உரையைத்தான் சொல்ல வேண்டும். அவர் பேசும் அரபு மொழி விளங்கா விட்டாலும் இராய்ட்டர் நிறுவனம் அதனை எழுத்து வடிவிலான ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டுள்ளது

தமிழில் –
பாலத்தீனத் தலைவர் மகமுது அப்பாசு சொல்கிறார்:
“நாங்கள் வெளியேற மாட்டோம்.”


“எங்கள் மக்களை காசாவை விட்டு வெளியேற்றும் படியான முயற்சிகள் குறித்து எச்சரிக்கிறோம். பாலத்தீனர்களை அவர்தம் இல்லங்களிலிருந்தும், எரூசலம் அல்லது மேற்குக் கரையிலிருந்து வெளியேற்றும் படியான முயற்சிகள் குறித்து எச்சரிக்கிறோம். நாங்கள் வெளியேற்றப்படுவதை ஏற்க மாட்டோம். என்ன வரினும் நாங்கள் எங்கள் நிலத்தில் அசைந்து கொடுக்காமல் நிற்போம். பெரியோர்களே! தாய்மார்களே! நாங்கள் வெளியேற மாட்டோம்! வெளியேற மாட்டோம்! வெளியேற மாட்டோம்! எங்கள் நிலத்திலேயே நிலைத்திருப்போம்.”

தலைவர் அப்பாசு ஆற்றிய இந்த உரை பாலத்தீன மக்களின் போராட்ட வரலாற்றில் முத்திரை பதிக்கும் படியான ஒன்று என்பது என் நம்பிக்கை.

கெய்ரோ மாநாட்டில் மகமுது அப்பாசு உரை கேட்கவும் காணவும் இந்த இராய்டார் செய்தி இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். –

https://www.reuters.com/world/middle-east/cairo-peace-summit-grapples-with-gaza-war-risks-region-rise-2023-10-21/


தாழி மடல், தோழர் தியாகு

(தொடரும்)

செவ்வாய், 19 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்

 


(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். தலைநகர் சென்னையைப் புரட்டிப் போட்ட புயல் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் எழுதுகிறேன். ததேவிஇ அமைப்புச் செயலாளர், நம் அனைவருக்கும் அன்புத் தோழர் மகிழன் விடுத்துள்ள வேண்டுகோளை உங்களோடு பகிர்கிறேன். நம் தோழமையின் இடுக்கண் களைக ! – தோழர் தியாகு

விரிபுயல்(மிக்குசாம்) பாதிப்பின் துயர்துடைக்கக்

கைகொடுங்கள்!

அன்பிற்கினியோரே, வணக்கம் !

நான் மகிழன். தென்சென்னையிலிருந்து எழுதுகிறேன். சரியாகச் சொன்னால் வேளச்சேரி தொடரி நிலையத்தை அடுத்த இராம்நகர் – புழுதிவாக்கதின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது என் வீடு. மிக்குசாம் புயல் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் முக்கியமானது. மடிப்பாக்கத்தில் இரண்டு ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகள் நிரம்பினாலோ உடைந்தாலோ அந்தத் தண்ணீர் போகும் வழி, தேங்கும் பகுதியாக இராம்நகர் இருக்கிறது. கொட்டித்தீர்த்த மழையில் இரண்டு ஏரிகளும் உடைந்துதான் போயின. திசம்பர் 4 திங்கள் காலை 5.30 மணியளவில்தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததை நாங்கள் அறிந்தோம்.

ஓரடி ஈரடி என்று இரண்டாம் நாள் முடிவில் சற்றொப்ப 3 1/2 அடி மழைநீர் உள்ளே புகுந்தது. எங்கள் தெரு முட்டுச்சந்து என்பதால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு குறைவாகிப் போனது. மற்றத் தெருக்களைக் காட்டிலும் எங்கள் வீட்டைச் சுற்றி 4 1/2 அடி தண்ணீர் தேங்கியது. எங்களுக்கு அடுத்தடுத்தப் பகுதிகள் இன்னும் தாழ்வான பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் வீடு கீழே ஒரு படுக்கையறை, மேலே இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீடு (duplex). மடமடவென இன்றியமையா உணவுப் பொருட்களை முதலில் மேலே ஏற்றினோம். பிறகு முக்கியப் பொருட்களாக கருதப்படும் ஒவ்வொன்றையும் மேலே எடுத்து வந்தோம். கட்டில், இருக்கைகள் உட்பட 2, 3 அடி உயரமிருந்த இருந்த அனைத்துப் பொருட்களும் நீரில் மூழ்கினபாத்திரங்கள், அரிசி உள்ளிட்ட பலவும் அதில் அடங்கும். குறிப்பாக, வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருந்த 3 இரு சக்கர வாகனங்களும் முழுமையாக நீரில் மூழ்கி விட்டன.

எங்கள் வீட்டில் நான், அப்பா, இரண்டு தம்பிகள், ஒரு தங்கை, நிறைமாதக் கர்ப்பிணியான என் தம்பியின் துணைவி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அம்மா, புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த என் இணையர் ஆகியோர் வசிக்கிறோம். என் தம்பியும் துணைவியும் இரண்டு நாட்களுக்கு முன்பு பல்லாவரத்தில் உள்ள அவன் மாமியார் வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். என் இணையரும் உடலமின்றி தன் தாய் ஊருக்குச் சென்றிருந்தார். இந்த இரண்டும்தான் பேரழிவிலிருந்து தப்பினோம் என்று நிம்மதியாக சிறுமூச்சு விடக் காரணமாய் அமைந்தன.

ஆனால் அம்மாவின் நிலை பெரும் அறைகூவலாய் இருந்தது. அம்மாவிற்கு மலப்பை மற்றும் மலக் குடலில் புற்றுநோய்(rectal cancer) உண்டாகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மலப்பையும் மலக்குடலும் அறவே வெட்டி எடுக்கப்பட்டு மாற்றுப் பை (external – stomach bag )வெளியே பொருத்தப்பட்டுள்ளது.

முதல் நாள் முழுவதும் மழை, புயல் காரணமாக வெளியில் வரமுடியவில்லை. இருப்பதைச் சமைத்துச் சாப்பிட்டோம். இரவு கடும் குளிர், நச்சுப் பாம்புகள், பூச்சிகள் தண்ணீரின் தொடர் வரத்து பகுதி மக்களை நிலைகுலையச் செய்தது. அது என் அம்மாவைக் கடுமையாகப் பாதித்து. ஒருபுறம் உடல்நிலை மறுபுறம் மனநிலை. இரவு அம்மா சிறிதும் உறங்கவில்லை. அடுத்த நாள் பகலில் மழை இல்லாததால் மொட்டை மாடியில் பொழுதைக் கழிக்க முடிந்தது. மார்பளவுத் தண்ணீரில் நானும் தம்பியும் வெளியே வந்து கிடைக்கிற உணவுப் பொருட்களை வாங்கி வந்தோம். இரவு தண்ணீரின் தன்மை மிகவும் மோசமடைந்தது. கடுமையான துர்நாற்றம்!

திசம்பர் 6 மூன்றாம் நாள் குடிக்க, சமைக்கத் தண்ணீர் தீர்ந்து போனது. இனி என்ன செய்வதென அறியாமல் நின்றோம். அம்மாவை எப்படிக் காப்பற்றப் போகிறோம் என்று தவித்தோம். தூக்கிக் கொண்டு போகலாம் என்று எண்ணினால், அம்மா ஒத்துழைக்கவில்லை. போனாலும் சற்றொப்ப ஒரு கல் தூரம் தண்ணீரைக் கடக்க வேண்டும். அது சாத்தியமில்லை. பிறகு காலை 8 மணியளவில் ஒரு படகு வந்தது, ஆனால் அதில் ஏற்கெனவே ஆட்கள் நிரம்பி விட்டதால் அவர்கள் நிறுத்தவில்லை. பிறகு அரை மணி நேரத்தில் ஒரு சேசிபி வாகனம் வந்தது. அதுவும் எங்கள் தெருவுக்கு வரவில்லை. அம்மாவைத் தூக்கிக் கொண்டுபோய் அந்த வண்டியில் ஏற்றி அனுப்பினோம். மற்றவற்றைப் பிறகு பொறுமையாக எழுதுகிறேன்.

பலரும் நலம் விசாரித்தார்கள். சிலர் அக்கறையோடு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் என்றனர். ஆனாலும் எங்கள் பகுதி பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர் வசிக்கும் பகுதிதான். எங்களை விடவும் விளிம்புநிலை மக்கள் வாழும் பல பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதனை ஒப்பிட்டால் எங்களின் இழப்பு குறைவுதானே என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆயினும் இதனைச் சரி செய்யும் வரை யாரும் பணிக்குத் திரும்பாத நிலைதான் உள்ளது. ஏறக்குறைய 10 நாட்கள் வேலைக்குத் திரும்ப முடியாததால் வருவாய் இழப்பு, பொருட் சேதத்தினால் ஏற்பட்டுள்ள இழப்பு, உடனடியாக மீண்டும் இந்த வீட்டுக்குள் குடியேறச் செய்ய வேண்டியவை எனப் பலவகையான செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன. காலந்தாழத் தாழ இழப்பு கூடுதலாகவே செய்யும் என்பதை உணர முடிகிறது.

எனது குடும்பம் மாதச் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் அன்றாடங் காய்ச்சிக்கு நிகரானதுதான். இந்த நிலைமையில்தான் இங்கே பல குடும்பங்கள் இருக்கின்றன. எனவே 1% முதல் 100% வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் உதவ வேண்டியது கட்டாயம் என உணர்கிறேன்.

எனவே தமிழ்ச் சொந்தங்களே! இந்தப் புயல் பாதிப்பில்லாதவர்கள், சென்னை உள்ளிட்ட புயல் பாதிப்பு வராத மற்ற மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உதவிட முன்வர வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஏதோ ஓர் உறவு உங்கள் ஒவ்வொருவர்க்கும் இருக்கத்தான் செய்யும். அவர்களை நினைவுகூர்ந்து உங்கள் உதவிகளைச் செய்ய முன்வாருங்கள்.

அப்படிப் பாதிக்கப்பட்ட பலருள் நானும் ஒருவன் என்ற வகையில் எனது அன்பிற்குரியவர்கள் இந்த இழப்பிலிருந்து மீண்டெழ எனக்குக் கைகொடுங்கள்! அரசு உரூ.6000 அறிவித்திருப்பது அறிந்தேன். யாருக்கு, எப்போது வழங்க முடியும் என்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. என்னென்ன சேதம் ஏற்பட்டது என்று கணக்கு போட்டுச் சொல்லும் நிலைமையிலும் இப்போது நாங்கள் இல்லை. இயல்பான நிலைக்கு வீடு திரும்பவும் வேலைக்குத் திரும்பவும் குறைந்தஅளவாக உரூ.50,000 தேவைப்படும். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையானவர்களுக்கோ நம்பிக்கையானவர்கள் மூலமாகவோ உடனடியாக உதவ முன்வாருங்கள்.

ஒவ்வொருவரும் அனைவருக்காகவும்!
அனைவரும் ஒவ்வொருவருக்காகவும்!
ஒன்றுபட்டு நின்று விரிபுயல்(மிக்குசாம்) பாதிப்பை முறியடிப்போம் !

மகிழன்

டி 3, சாய் ஆயுசு இரமேசா அடுக்கம், சிவசுப்பிரமணியன் தெரு,
இராம் நகர், புழுதிவாக்கம், சென்னை 600 091

G Pay & (contact) : 9025870613
வங்கிக் கணக்கு விவரம்:
கணக்கர் பெயர் : மைக்கேல் இராசு, (Michael Raj)
கணக்கு எண்: 0933101041559
IFSC code: CNRB0000933
கனரா வங்கி, சைதாப்பேட்டை

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 397

குறிப்பு : மிக்குசாம் – சிலர் நிக்குசாம் எனக் குறிக்கின்றனர் – என்பதன் மூலப் பெயர் மிச்செளஙகு(MICHAUNG) என்னும் பருமிய / மியான்மியச் சொல்.

வலிமை, மீள்தன்மை, விரியும் திறன் எனப் பொருள்கள். வங்க விரிகுடலில் மையம் கொண்டதன்அடிப்படையிலும் விரிதிறன் புயல் , சுருக்கமாக விரி புயல் எனலாம்.

திங்கள், 18 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2

 




(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2 – தொடர்ச்சி)

ஏன் இந்தப் புத்தகம்? 2/2

1950இல் ஆரம்பித்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடர்ச்சியாக, 1990இல் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் வி.பி. சிங்கின் அரசு மண்டல் ஆணைய அறிக்கையின் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% பி.பி.வ.(OBC) இடஒதுக்கீடு வழங்கிய போது, அதனை எதிர்த்த உயர் சாதியினரின் போராட்டம் நாட்டை உலுக்கியது. நூற்றுக்கணக்கானோர் தம்மை நெருப்புக்குப் பலிகொடுத்து, பி.பி.வ.(OBC) மக்களின் இடஒதுக்கீட்டிற்குத் தடை போட முயன்றனர். அதைத் தமது மேலாதிக்கத்திற்கு எதிரானது எனக் கருதினர்.

இத்தகைய இடஒதுக்கீட்டு ஆதரவு – எதிர்ப்புப் போராட்டங்களுடன், பொருளாதார அடிப்படையிலான 10% பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டங்களை ஒப்பிட்டால், நடந்த போராட்டங்கள் மிகச் சொற்பமே.

போதிய புரிதல் இன்மையா? நாட்டின் பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்பைக், கல்வி உரிமையைப் பாதிக்கும் சட்டத் திருத்தத்தைப் பெரும்பான்மையான மக்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டதேன்? இடஒதுக்கீடு பற்றிப் போதிய விழிப்புணர்வு சமூகத்தில் இல்லையா? ஏன் இந்த அமைதி?

எப்படியாகினும், அந்த அமைதி குலைக்கப்பட வேண்டிய அமைதி
இந்தியாவின் பெரும்பான்மை மக்களான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நிலவும் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற போராட்ட உணர்வின் வெளிப்பாடே இந்தப் புத்தகம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த சில நாட்களில், இந்நூலின் பதிப்பாளர் தோழர் பிரபாகரன் அழகர்சாமி, பொருளாதார இடஒதுக்கீட்டின் மோசடிகளைத் தொகுத்து, ஒரு வெளியீடு கொண்டுவருவோம் என்றார். அதுவே ஆரம்பம். அவரின் எண்ணமே இந்நூலிற்கு மூலவித்து. அவரே முழு முதற்காரணம். அழகாகவும் செறிவாகவும் நூலைப் பதிப்பித்துள்ளார்.

நூலின்உள்ளடக்கம்

ஆங்கிலத்தில் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்திருந்த அறிஞர்களின் கட்டுரைகள், சட்டத் திருத்தத்தை எதிர்த்த நாடாளுமன்ற உரைகள், பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டைச் செல்லாது என அறிவித்த நீதிபதி இரவீந்தர் பட்டின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கை எதிர்த்து வழக்காடிய வழக்கறிஞர்களின் நீதிமன்ற வாதம், தமிழக முதலமைச்சர் மு.க. தாலின் உள்ளிட்ட பல தலைவர்களின் அறிக்கைகள், கருத்தரங்க உரைகள் பலவற்றின் தொகுப்பாக இந்த வெளியீடு அமைந்துள்ளது.

உயர்சாதி ஏழைகள் எனும் பெயரில் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10% பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டில் எவ்வித நியாயமும் இல்லை என்பதைத் தரவுகளின் மூலமும், தருக்கத்தின் மூலமும், வரலாற்று உண்மைகள் மூலமும் வாசகர்களுக்கு உணர்த்தவே இந்நூல். மேலும், இந்த இடஒதுக்கீடு உயர்சாதி ஏழைகளுக்குப் பயனளிக்கும் என இந்த இடஒதுக்கீட்டின் ஆதரவாளர்கள் சொன்னாலும், அவர்களுக்கும் இது எதிரானது என்பதையும் தரவுகள் மூலம் சுட்டிக்காட்டும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பெரியாரிய-அம்பேத்துகரியப் பார்வையில் பொருளாதார இடஒதுக்கீட்டின் கேட்டைக் காத்திரமாக விமர்சிக்கும் கட்டுரைகள், பொருளாதார இடஒதுக்கீட்டைத் தீவிரமாகக் கொள்கைரீதியாகச் சாடும் திமுக, இராசத(RJD), அமஇமுக(AIMIM), இஒமுகூ(IUML) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், பொருளாதார இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்ட, ஆனால் அதிலிருந்து ப.சா, ப.ம.,பி.பி.வ.(SC, ST, OBC) மக்களை விலக்கி வைத்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாத சிறுபான்மைத் தீர்ப்பை விதந்தோதும் கட்டுரை, தாராளமய-உலகமய-தனியார்மயத்திற்குப் பின்னர் உருவாகி வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வின் பின்னணியில் இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
பொருளாதார இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டாலும், அதன் நோக்கத்தை, நாடாளுமன்றங்களில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட முறையைக் கண்டித்த மார்க்குசியப் பொதுவுடைமை, பிசு ஜனதா தளம், தெலங்கானா இராட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், ஊடகங்களிலும் பொருளாதார இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான அல்லது நடுநிலையான கருத்துகளை வெளியிட்ட போதிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீட்டைத் தீவிரமாக எதிர்த்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகள், ஏழைப் பார்ப்பனர் எனும் கட்டுக்கதையை வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் தகர்த்தெறிந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் சமத்துவ உணர்வை மையமாகக் கொண்டு பொருளாதார இடஒதுக்கீட்டை விமர்சிக்கும் கட்டுரைகள், நீதிமன்றங்களில் நிலவும் பிரதிநிதித்துவத்தைச் சுட்டிக்காட்டி, அதன் பின்னணியில் பொருளாதார இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரைகள், நேரடி அரசு வேலைகள் குறைக்கப்பட்டுக் கூடுதலான ஒப்பந்த ஊழியர்களைப் பணியமர்த்தும் சூழலில் இடஒதுக்கீட்டை அலசும் கட்டுரை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், மேனாள் நீதிபதிகளின் கட்டுரைகள், இந்தியாவின் முன்னணி சமூகவியல், பொருளாதார அறிஞர்களின் கட்டுரைகள் உள்ளிட்ட பல்வகைக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

சில கட்டுரைகள் வெளிப்படுத்தும் கருத்துகளில் எங்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும், பொருளாதார இடஒதுக்கீட்டைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்த பார்வைகளை வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற அடிப்படையில் சேர்த்துள்ளோம்.

செண்பகம் துரைராசன் வழக்கு (1951) தொடங்கி, எம். ஆர். பாலாசி வழக்கு (1962), இந்திரா சஃகானி வழக்கு (1992), எம். நாகராசு வழக்கு (2006), சருனெயில் சிங்கு வழக்கு (2018) முதல் தற்போதைய பொ.ந.பி. (EWS) வழக்கு (2022) வரை இடஒதுக்கீட்டின் போக்கைத் தீர்மானிப்பதில் உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு வரரையறை அவை, அதன் பின்னர் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பங்களிப்பு பல கட்டுரைகளில் பேசப்பட்டுள்ளன.

காகா கலேல்கர் குழு அறிக்கை, மண்டல் குழு அறிக்கை, அவானூர் குழு அறிக்கை, சட்டநாதன் அறிக்கை, மாநாயகர் சின்ஃகோ குழு அறிக்கை, அசய் பூசன் பாண்டே குழு அறிக்கை எனப் பல குழுக்களின் அறிக்கைகளின் ஊடாக இடஒதுக்கீட்டின் வரலாறு பேசப்பட்டுள்ளது. பி.வி.வ.,ப.சா.,ப.ம.,(OBC, SC, ST) இடஒதுக்கீட்டைச் சீரழிக்கச் செய்யப்பட்ட முயற்சிகளும், பொருளாதார இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யப்பட்ட சூழ்ச்சிகளும் கட்டுரைகளில் இடம்பெற்றுள்ளன. பழங்குடியினரான உத்திராகண்டு பார்ப்பனர்களின் கதையும் இடம்பெற்றுள்ளது.


நூலமைப்பு
இடஒதுக்கீடு வரலாறு பற்றிய நான்கு அறிமுகக் கட்டுரைகளுடன் தொடங்கும் இந்நூலின் அடுத்த பகுதியில், ஐந்தாவது கட்டுரை முதல் 95ஆவது கட்டுரை வரை, பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டையும், இடஒதுக்கீட்டை ஆதரித்த நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 103ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2019 சனவரி 8ஆம் நாள் அன்று எழுதப்பட்ட கட்டுரையில் தொடங்கி, நாள் வாரியாகப் பயணித்து, வழக்கறிஞர்களின் உச்சநீதிமன்ற வாதங்கள், நீதிபதி இரவீந்தர் பட்டு வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு, அதன் பின் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான விமர்சனக் கட்டுரைகள் எனப் பரிணமித்து, 2023 மார்ச்சு மாதத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் வரை ஏறுவரிசையில் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதிப் பகுதியில், 96ஆவது கட்டுரை முதல் 105ஆவது கட்டுரை வரை, 10% கொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்த அமைப்புகள், தலைவர்களின் அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.தாலினின் வீரியமான உரைகளோடு நூல் முடிகிறது.


பங்களித்தோர்:
பெரும்பான்மை மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், பலரின் பங்களிப்போடு வெளிவந்துள்ளது. ஏழைகளுக்கான இடஒதுக்கீடு என்றால் அனைவருக்கும் உண்டுதானே என்ற கேள்வி கேட்டவரின் பங்களிப்பும் உள்ளது. நூல் உருவாக்கத்திற்கு உழைத்தவர்களின் பட்டியல் நூலின் இறுதிப் பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது. நூல் உருவாக்கத்தில் பங்குபெற்ற, பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்கள் உள்ளிட்ட, இந்நூலுக்காக உழைத்த அனைவருக்கும், மொழிபெயர்ப்பு தொடர்பான ஆலோசனைகளைத் தேவைப்பட்ட நேரத்தில் எல்லாம் வழங்கிய தோழர் நலங்கிள்ளிக்கும் நன்றி.

பொருளாதார இடஒதுக்கீடு எனும் சமூக அநீதிக்கு எதிராகப் பெரும்பான்மை மக்களை ஒன்றுதிரட்டும் ஒரு கருத்தாயுதமாக இப்புத்தகம் விளங்கும் என்ற நம்பிக்கையில்.
தோழமையுடன்,
சு. விசயபாசுகர்

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 374

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது! – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பொ.ந.பி. (EWS) இட ஒதுக்கீட்டுச் சிக்கல் குறித்து முன்பே எழுதியும் பேசியும் உள்ளேன். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதியர் இரவீந்திர பட்டு வழங்கிய தீர்ப்பு -சிறுபான்மைத் தீர்ப்புதான் என்றாலும் மிகச் சிறப்பான ஒன்று. இந்தத் தீர்ப்பைத் தமிழாக்கம் செய்து அதன் சில முகன்மைப் பகுதிகளை தாழி மடலில் (தாழி 37, 38) வெளியிடவும் செய்தேன்.

இரவீந்திர பட்டு தீர்ப்பின் தமிழாக்கமும் இச்சிக்கல் குறித்துப் பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளும் தொகுக்கப்பெற்று
“உயர்சாதியினருக்கு 10%
பொ.ந.பி.(EWS) இட ஒதுக்கீடு சரியா? தவறா?”
என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியர்:
சு. விசயபாசுகர்.

ஏன் இந்தப் புத்தகம்? என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை ஈண்டு பகிர்கிறேன்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அன்பர் விசயபாசுகர் எழுதுகிறார்…

ஏன் இந்தப் புத்தகம்?

2022 நவம்பர் 7ஆம் நாள் நண்பருடன் அமர்ந்திருந்தேன். பெரியாரிய, அம்பேத்துகரிய, மார்க்குசிய அறிமுகம் கொண்டவர் அவர். தேர்ந்த வாசகரும் கூட. உயர் சாதி ஏழைகளுக்குப் பொருளாதார வகையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒன்றியப் பாசக 2019 சனவரி மாதம் நிறைவேற்றிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நவம்பர் 7 ஆம் நாள் அறிவிக்கப்படும் என்ற செய்திகள் முன்னரே வந்து விட்டன.

விடுதலை இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான சிக்கான இடஒதுக்கீடு குறித்த மிக முக்கியமான வழக்கு இது, பாசக அரசின் சட்டத் திருத்தத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவிக்குமா என இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். 10% பொ.ந.பி. (Economically Weaker Sections) இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவிக்குமாயின், இந்தியாவின் பெரும்பான்மை மக்களாகிய ஒடுக்கப்பட்ட (SC, ST, OBC) மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாக இருக்கும் என உரையாடினோம்.

அனைத்து ஏழைகளுக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு உண்டுதானே? அதில் என்ன பிரச்சினை? இதனால் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன தீங்கு வந்து விடும்? இனி ப.சா., ப.ம., பி.பி.வ.( SC, ST, OBC) வகுப்பு மக்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இது நல்லதுதானே? என்று பதில் கேள்வி கேட்டார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, அன்று மதியம் 12 மணிவாக்கில் 10% பொருளாதார இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. தீர்ப்பை எதிர்த்துச் சில அரசியல் கட்சிகள், அமைப்புகள், அரசியல், சமூகநீதிச் செயற்பாட்டாளர்கள் தவிர்த்து, பொதுமக்கள் தரப்பில் எவ்வித எதிர்ப்புணர்வும் இல்லை. எதுவுமே நடக்காதது போல், நாடெங்கும் பரிபூரண அமைதி நிலவியது. வழக்கமான முறையில் மக்கள் இயங்கினர். அமைப்பு முறையிலான எதிர்ப்பு தவிர, வெகுமக்களை உள்ளடக்கிய தன்னெழுச்சியான சிறு சிறு எதிர்ப்புகள் கூட இல்லை.

100 ஆண்டு காலம் போராடிப் பெற்ற உரிமை இடஒதுக்கீடு. இந்தியாவின் பெரும்பான்மை மக்களைப் பாதிக்கக் கூடிய வழக்கு. ஆனால் பொதுமக்கள் மத்தியில் எவ்வித சலசலப்பும் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கக் கூடியது. 2019 சனவரியில் மூன்றே நாட்களில், 10% பொ.ந.பி(EWS) இடஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரிய எதிர்ப்பின்றி, ஒன்றிய பாசக அரசால் நிறைவேற்றப்பட்டது. அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாசக பெருவெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் சார்பாண்மை கொண்ட திமுக, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இலல்லு பிரசாத்து யாதவின் இராட்டிரிய சனதா தளம், ஒவைசியின் ஏஐஎம்எம்(AIMIM), இந்திய ஒன்றிய முசுலீம் லீக்கு உள்ளிட்ட மிகச் சில கட்சிகளே நாடாளுமன்றத்திற்கு உள்ளே இச்சமூக அநீதியை காத்திரமாக எதிர்த்தன.

நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் அப்போது சார்பாண்மை இல்லாத மதிமுக, விசிக முதலான தமிழ்நாட்டின் பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை எதிர்த்தன. பாமகவின் அன்புமணி இராமதாசு மக்களவை உறுப்பினராக இருந்த போதும், சட்டத் திருத்தம் இயற்றப்பட்ட நாளில் அவையில் இல்லை. அவர் சார்ந்த பாமக பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்தது. அதிமுக கலவையான நிலைப்பாட்டை எடுத்தது.

தேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகள் பலவும் பொருளாதார இடஒதுக்கீட்டையும், அதைச் செல்லும் என அறிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்த்தன. திமுக, விசிக முதலான கட்சிகள் சட்ட முறையாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. பொருளாதார இடஒதுக்கீட்டின் மோசடியான தன்மையை அம்பலப்படுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க. தாலின் அவர்களின் அறிக்கை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது. மேலும் 10% பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் என திமுக அரசு தெரிவித்து விட்டது. ஆனால் இந்த எதிர்ப்பு வெகுமக்கள் இயக்கமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றதா?

பொருளாதார இடஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சிகள் எதிர்த்தாலும், அது போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். வெகுமக்களிடம் இந்த எதிர்ப்புணர்வு சென்று சேரவில்லை என்பதே உண்மை. மேற்குறிப்பிட்ட நண்பர் கேட்ட கேள்வி போல், ஏழைகள் இருக்கும் நாட்டில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் என்ன தவறு உள்ளது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இடஒதுக்கீட்டு மண்ணான தமிழ்நாட்டிலேயே பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீடு போதுமான அளவு எதிர்க்கப்படவில்லை என்ற நிலையில், ஏனைய இந்திய மாநிலங்களின் நிலவரம் இன்னும் மோசம். பல மாநிலங்களில் எதிர்ப்பே இல்லை.

மாறாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னே பல மாநிலங்கள் உயர்சாதியினருக்கான பொருளாதார இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

வரலாற்றின் முந்தைய ஆண்டுகளுக்குப் பின்சென்றால், இடஒதுக்கீட்டிற்குச் சிக்கல் வரும் போதெல்லாம் கட்சிகள் மட்டுமல்ல, அக்கட்சிகளின் பின்னால் பெருவாரியான மக்களும் நின்று இடஒதுக்கீட்டைக் காத்த மண் தமிழ்நாடு. இந்தியாவிற்கே வழிகாட்டியாய்த் திகழ்ந்த மண் இது.

நீதிக்கட்சி அரசு இயற்றிச் செயல்படுத்திய Communal GO என்றழைக்கப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், வகுப்புவாரி இடஒதுக்கீடு செல்லாது என 1950 சூலை 27ஆம் நாள் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனே பெரியார் கொதித்தெழுந்தார். பெரியாரிடம் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்திருந்த அண்ணாவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் தீர்ப்பைக் கடுமையாக எதிர்த்தனர். அன்றைய ஆளும்கட்சியாக இருந்த காங்கிரசும் இடஒதுக்கீட்டைச் செல்லாது என அறிவித்ததை எதிர்த்தது.
தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, இடஒதுக்கீட்டு உரிமை காக்க முழங்கினார் பெரியார். வெகுமக்களை நோக்கிப் பிரசாரம் செய்தார். பெரியார் திடலில் வகுப்புரிமை மாநாடு ஒன்றை நடத்தி, “மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் அவர்களைப் புறக்கணிக்கும் விதமாக கறுப்புக் கொடி காட்டுவோம்” என அறிவித்தார்.

இடஒதுக்கீடு செல்லாதென அறிவித்த உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து, சென்னை மாநிலத்தின் பல பகுதிகளில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்தினர். இந்தியாவின் மற்றப் பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

குமாரசாமிராசா தலைமையிலான அன்றைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, 1951 ஏப்பிரல் 9ஆம் நாள், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியது.

விளைவு, 1951 சூன் 1 ஆம் நாள் நேரு தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, 15(4) எனும் புதிய பிரிவைச் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செல்லாக் காசாக்கியது. அன்றிருந்த எதிர்ப்பின் தீவிரம் காரணமாக 50 நாட்களில் மாற்றம் சாத்தியமானது. சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்துகரும் சட்டத் திருத்தத்தை ஆதரித்தார். நீதிமன்றத் தீர்ப்பை மிகக் கடுமையாக நாடாளுமன்றத்திலேயே விமர்சித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சென்னைமாகாணத்தில்நடந்த போராட்டங்களே திருத்தம் வரக் காரணம் எனத் தலைமையமைச்சர் நேரு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகஅறிவித்தார்.

1979 சூலை 2ஆம் நாள், அன்றைய முதலமைச்சர் எம்ஞ்சி இராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டார். அதன்படி ஆண்டுக்கு 9,000 உரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது. கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. திமுகவும், திராவிடர் கழகமும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களையும், கண்டனக் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தின. எம்ஞ்சியார் வெளியிட்ட அரசாணையை எரித்து அதன் சாம்பலைத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பினார்கள். இருப்பினும் எம்ஞ்சியார் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. கட்சிகளின் போராட்டத்திற்கு அசைந்து கொடுக்காத எம்ஞ்சியாருக்கு மக்கள் பாடம் புகட்டினர். தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது மொத்தமுள்ள 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

தன் தவற்றை உணர்ந்த எம்ஞ்சியார் பொருளாதார அளவுகோலை நீக்கியதுடன் 31 விழுக்காடாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினார். ஆறே மாதத்தில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு எனும் மோசடி வீழ்த்தப்பட்டது.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 374