வியாழன், 26 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 252 : பெரியகுளத்தில் நடப்பது என்ன?







(தோழர் தியாகு எழுதுகிறார் 251 : மீண்டும் வெண்மணி! – தொடர்ச்சி)

பெரியகுளத்தில் நடப்பது என்ன?

இனிய அன்பர்களே!

சென்ற 2023 ஆகத்து 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் மாரிமுத்து – மகாலட்சுமி இருவரும் தூக்கில் தொங்கும் சடலங்களாகக் கண்டெடுக்கபட்டதும், இது கொலையா? தற்கொலையா? என்ற கேள்வியுடன் நீதிக்கான போராட்டம் தொடர்வதும் தாழி அன்பர்கள் அறிந்த செய்திகளே.

மாரிமுத்து வாழ்ந்து வந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் காவல்துறையின் நீதிமறுப்பைக் கண்டித்து அவரவர் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளனர். இதையொட்டி, அந்தப் பகுதிக்குச் சென்று வந்த தோழர் மதியவன் இரும்பொறை உள்ளிட்ட தோழர்களைப் பெரியகுளம் காவல்துறை தளைப்படுத்தியுள்ளனர். இதைக் கண்டித்துக் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நான் வெளியுட்டுள்ள அறிக்கை இதோ –
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

  • பெரியகுளத்தில் சாதி ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர் மதியவன் இரும்பொறை உள்ளிட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்!
  • சாதி ஆணவக் குற்றவாளிகளுக்கு எதிராக எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்குப் போடு!

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை!

சென்ற 2023 ஆகத்து 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் மாரிமுத்து – மகாலட்சுமி இருவரும் தூக்கில் தொங்கும் சடலங்களாகக் கண்டெடுக்கபட்டனர்.

இது ஒரு சாதி ஆணவக் கொலை என்று மாரிமுத்துவின் பெற்றோரும் ஊராரும் சந்தேகப்படுகிறார்கள். மகாலட்சுமியின் உடல் அவசரமாக எரிக்கப்பட்டு விட்டது. ஆனால் மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து அவரது தாய்தந்தையரும், குடும்பத்தினரும், தோழர் மதியவன் தலைமையிலான போராட்டக் குழுவினரும் போராடி வருகின்றனர். மாரிமுத்துவின் சடலமும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.

மாரிமுத்து பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு எதிராகக் குற்றம் புரிந்தவர்கள் பட்டியல் சாதியைச் சேராதவர்கள் என்பதாலும் சட்டப்படி இந்த வழக்கைப் பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் கொடுத்த முறைப்பாட்டை இவ்விடம் எசுஎசுடி வன்கொடுமைச் சட்டத்தில் பதிய மறுத்து தேனி மாவட்டம் பெரியகுளம் காவல்துறையினர் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர்.

ஒரு வாரத்துக்கு மேலாகியும் நீதி கிடைக்காத நிலையில் ஊர்மக்கள் தங்கள் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றியதைக் காட்டி இன்று காலை தோழர் மதியவன் இரும்பொறையும் போராட்டக் குழுவில் உள்ள 13 தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைக் காக்கவும் பொதுமக்களை அச்சுறுத்தவும் காவல்துறை இந்த அடக்குமுறையைக் கைக்கொண்டிருப்பதாக நம்புகிறோம்.

கைது செய்யப்பட்ட மதியவன் இரும்பொறை உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்யுமாறும் –

மாரிமுத்து – மகாலாட்சி ஆணவக்கொலை தொடர்பாகப் பட்டியலின வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்து கூண்டிலேற்றுமாறும் –

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 தியாகு, தமிழக ஒருங்கிணைப்பாளர்,

 காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (தமிழ்நாடு-புதுவை)

 சென்னை, 13. 08.2023.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 282


புதன், 25 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 251 : மீண்டும் வெண்மணி!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 250 : இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மீண்டும் வெண்மணி!


கீழ்வெண்மணி வன்கொடுமை (1968) நிகழ்ந்து 55ஆண்டு முடிந்து விட்டன. என்ன நடந்தது? எப்படி நடந்தது? அதற்கு யார் பொறுப்பு? எந்த அளவுக்குப் பொறுப்பு? கீழ்வெண்மணிக்கான எதிர்வினைகள் என்ன? கீழ்வெண்மணியின் வரலாற்றுப் படிப்பினைகள் என்ன? இந்த வினாக்களுக்கு விடையளிக்கப் பலரும் முயன்றுள்ளனர்.

நான் எழுதியும் பேசியும் உள்ளேன். தோழர் ஏ.சி..கே. (அ.கோ. கத்தூரிரெங்கன்) எழுதியுள்ளார், செவ்வி கொடுத்துள்ளார். தோழர் கோ. வீரையன் எழுதியுள்ளார். இன்னும் பலரும் எழுதியிருக்கக் கூடும்.

கீழ்வெண்மணி நிகழ்வு பற்றிய பார்வைகள் ஒரு புறமிருக்க, அது தொடர்பான வழக்குகளும் விவாதத்துக்குரியவையாகவே இருந்து வருகின்றன. வழக்குகள் என்பவை:

1) சேரிக் குடிசையில் 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்டது பற்றிய வழக்கு.
2) வெண்மணிக் கொடுமை நிகழ்வதற்குச் சற்று முன்பு இருக்கூர் பக்கிரிசாமி கொல்லபட்ட வழக்கு. இந்த வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற தேவூர் கோபாலும், ஐந்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்ற மேலவெண்மணி இராமையாவும் என்னுடன் சிறையில் இருந்தவர்கள்.
3) இரிஞ்சூர் கோபாலகிருட்டிண நாயுடு அழித்தொழிக்கப்பட்ட வழக்கு.

இவற்றில் முதல் வழக்கு உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றது. நெருக்கடிநிலைக் காலத்தில் 1975 – 76இல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி நீக்கப்படும் வரை கோபாலகிருட்டிண நாயுடுவும் பாலு நாயுடுவும் சிறைப்படுத்தப்பட்டிருந்தது பற்றி ‘விலங்கிற்குள் மனிதர்கள்’ நந்தன் தொடரில் எழுதியுள்ளேன்.

ஆனால் இந்த இரு குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டு, மீண்டும் சிறை செய்யப்பட்டு, மீண்டும் விடுவிக்கப்பட்டது எப்படி? என்பதில் நமக்குத் தெளிவில்லை. அண்மையில் தோழர் கொளத்தூர் மணி இது பற்றி என்னிடம் கேட்டார். எனக்குத் தெரிந்ததை நான் சொல்லி விட்டு, முழுமையான தகவல் திரட்ட முயல்வதாக உறுதியளித்தேன்.

சில ஆண்டுகள் முன்பு மேனாள் உயர் நீதிமன்ற நீதியர் அன்பர் கே. சந்துரு வெண்மணி பற்றி எழுதிய கட்டுரை இந்து தமிழ், தீக்கதிர் ஏடுகளில் வெளிவந்தது. அதன் முழு வடிவத்தையும் அவரிடமிருந்தே வரவழைத்து உரிமைத் தமிழ்த் தேசம் ஏட்டில் வெளியிட்டேன்.

இப்போது வெண்மணி வழக்கு பற்றி முழுத் தரவுகள் வேண்டி அவரை நாடினேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை ( Kilvenmani judgment requires a review -What happened in Kilvenmani 52 years before?)   எனக்கு அனுப்பி வைத்துள்ளார். … நலங்கிள்ளி, சுதா காந்தி, இரவிச்சந்திரன்… யாராவது ஒரு தோழர் தமிழாக்கம் செய்து கொடுத்தால் தாழி அன்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 281

செவ்வாய், 24 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 250 : இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 249 : தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி – தொடர்ச்சி)

இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை

இனிய அன்பர்களே!

ஆதிநாதன் குழு நோக்கம் என்ன? பயன் என்ன?

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுச் சிறைகளில் நீண்ட பல ஆண்டுகளாக அடைபட்டுள்ள இசுலாமியச் சிறைப்பட்டோரை விடுதலை செய்வோம்! இது சென்ற சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் மு.க. தாலின் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கொடுத்த வாக்குறுதி.

“அப்பாவி முசுலிம் கைதிகள்” என்றே அவர் சொன்னார். இருபதாண்டுக்கு மேல் சிறையில் கிடந்த பின் அப்பாவியா இல்லையா என்ற ஆராய்ச்சியே தேவையில்லை என்பது நம் நிலைப்பாடு. கோவை குண்டுவெடிப்பு வழக்கிலும், சமயச் சார்பான பிற குற்ற வழக்குகளிலும் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் அடைபட்டிருப்பவர்களின் தொகை 36 ஆக இருந்து வந்தது. இவர்களில் ஒருவரான அபு தாகிர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் உயரிழந்த பின் 35 பேரின் விடுதலைக் கோரிக்கைதான் முஸ்லிம் கைதிகள் (அல்லது இசுலாமியக் கைதிகள்) விடுதலைக் கோரிக்கை எனப்பட்டு வந்தது. குண்டு வெடிப்போ சமய முரண்பாடோ காரணமாக அமையாத தனிப்பட்ட வழக்குகளில் சிறைப்பட்ட முஸ்லிம்கள் இந்த வகையில் அடங்க மாட்டார்கள். இவர்களின் விடுதலைச் சிக்கல் என்பது மற்றெல்லா வாழ்நாள் சிறைப்பட்டோருக்கும் பொதுவான ஒன்றே. இவ்வகைச் சிறைப்பட்டோரின் விடுதலையிலும் கூட சிக்கல் இருப்பினும் அது முசுலிம் கைதிகளின் விடுதலைச் சிக்கல் என்ற தன்மையில் வராது.

எனவே தமிழ்நாட்டில் வழக்குகளைப் பொறுத்துப் பிரித்துக் காணப்படும் முசுலிம் கைதிகள் என்று 36 பேர் இருந்தனர், இப்போது 35 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவரைக் கூட மு.க. தாலின் தலைமையிலான திமுக அரசு விடுதலை செய்யவில்லை. அதாவது இவர்களைப் பொறுத்த வரை அவர் தன் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. எப்போது காப்பாற்றப் போகிறார் என்ற அறிகுறியும் இல்லை.

முதலமைச்சர் திறப்பு (சாவி) எடுத்துப் போய் சிறைக் கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. வாழ்நாள் சிறைப்பட்டோரின் விடுதலைக்கு இறுதியில் மாநில ஆளுநரின் ஒப்பம் தேவைப்படும் என்பதே உண்மை. ஆனால் நீண்ட பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் முசுலிம் கைதிகள் விடுதலைதான் முகதாலின் ஆட்சியின் கொள்கை முடிவு என்றால், தமிழக அமைச்சரவை கூடித் தீர்மானம் இயற்றி அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட 15 பேருக்கும் குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின் படி முன்விடுதலை வழங்கத் தீர்மானம் இயற்றி இந்திய அரசின் ஒப்புதலுக்காக மேலே அனுப்ப வேண்டும். (உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது, கலந்தாய்வு என்றாலும் ஒப்புதலொக்கும்! Consultation amounts to Concurrence!) குண்டுவெடிப்பு வழக்கு இந்திய நடுவணரசின் அதிகாரப் பொருள் தொடர்பானது என்பதால் இது தவிர்க்க முடியாதது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302 போன்ற எளிய பிரிவுகளில் தண்டிக்கப்பட்ட மற்ற 20 பேருக்கும் இந்தச் சிக்கல் இல்லை. அவர்களது முன்விடுதலைக்கு அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 பயன்படும். உறுப்பு 161இன் படி சிறைப்பட்டோர் விடுதலைக் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றினால் ஆளுநர் அதை ஏற்றுக் கொள்வது தவிர வேறு வழியில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலை இப்படித்தான் மெய்ப்பட்டது.  ஆளுநர் செய்த அழிச்சாட்டியத்தால் அவர்களின் விடுதலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதிலிருந்து ஆர்எசுஎசு ஆர்.என். இரவி பாடங்கற்கவில்லை, தமிழகத் திமுக அரசும் பாடங்கற்கவில்லையா? தமிழக அமைச்சரவையைக் கூட்டி முசுலிம் சிறைப்பட்டோரை விடுதலை செய்வதற்கு அரசமைப்புச் சட்ட 161ஆம் உறுப்பின் படித் தீர்மானம் இயற்றி ஆளுநரை ஏற்கச் செய்வதில் மாண்புமிகு மு.க. தாலினுக்கு என்ன தயக்கம்?

இதுதான் முசுலிம் கைதிகளின் விடுதலைக்கான சட்ட வழி. இந்த வழியில் தமிழக அரசு ஓரடி கூட எடுத்து வைக்கவில்லை. அல்லது சிறையிலிருக்கும் 35 முசுலிம் கைதிகளின் விடுதலைக்கான பரிந்துரைகளை மொத்தமாகவோ தனித் தனியாகவோ தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியிருந்தால் வெளிப்படையாக அறிவிக்கட்டும். அல்லது அனுப்பாமலே காலங்கடத்திக் கொண்டிருந்தால் அதற்கான நியாயத்தைச் சொல்லட்டும்.     

ஆளுநருக்குக் கோப்பே அனுப்பாமல் அவர் மீது பழிபோட்டுத் தப்ப முடியாது.

திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் முசுலிம் கைதிகள் விடுதலை என்ற பேச்சை எடுக்கும் போதெல்லாம் முதல்வர் “குழு போட்டிருக்கிறோம்” என்று விடையளிக்கிறாராம். வாழ்நாள் சிறை உட்பட நீண்ட சிறைத் தண்டனை பெற்ற சிறைப்பட்டோரின் முன்விடுதலைக்காகச் சிறைச் சட்டங்கள், விதிமுறைகள், அரசாணைகள் எல்லாம் இருக்கும் போது, அறிவுரைக் கழகம் போன்ற முறைமைக் குழுக்களும் இருக்கும் போது, புதிதாக ஒரு குழு அமைக்க வேண்டிய தேவை என்ன? இந்தக் குழுவின் ஆய்பொருள் என்ன? அதிகாரம் என்ன?

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியர் என். ஆதிநாதன் தலைமையில் அறுவர் குழு ஒன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நாள் 2021 திசம்பர் 24. நன்னடத்தை அடிப்படையிலும் மனிதநேயக் காரணங்களை முன்னிட்டும் வாழ்நாள் சிறைப்பட்டோரை முன்விடுதலை செய்வது பற்றி அரசுக்குப் பரிந்துரை வழங்குவது இந்தக் குழுவிற்கு இடப்பட்ட பணி.

இத்தனை மாதக் காலத்தில் ஆதிநாதன் குழு எத்தனைப் பேரின் முன்விடுதலை பற்றிக் கருதிப் பார்த்தது? எத்தனைப் பேரின் முன்விடுதலைக்குப் பரிந்துரை செய்தது? அவர்களில் எத்தனைப் பேரை அரசு விடுதலை செய்தது? யாருக்கேனும் ஆதிநாதன் குழு பரிந்துரை செய்ய மறுத்திருந்தால் அவர் அந்த மறுப்பை எதிர்த்து எங்கு போய் மேல்முறையீடு செய்வது? அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. குடியாட்சியத்தில் வெளிப்படைத் தன்மை தேவையல்லவா?

திரு ஆதிநாதனுக்கு உடல்நலம் குன்றியிருப்பதாகவும், அதனால் குழுவின் பணிகள் தேக்கமடைந்திருப்பதாகவும் சிறிது காலம் செய்திகள் வந்தன. இந்தச் செய்திகளை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. எல்லாமே கமுக்கம் பூசிக் கிடப்பது போல் இருந்தது.

சென்ற சூலை 6ஆம் நாள்  தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் (JAACT) சார்பில் நான் சிறைத் துறை அமைச்சர் மாண்புமிகு இரகுபதியைச் சந்தித்துக் காவல் நிலையங்களில் கண்காணிப்புப் படக் கருவி பொருத்துவது பற்றிப் பேசினேன். என்னுடன் ஆசீர், சீலு ஆகியோரும் சட்டப் பேரவை உறுப்பினர் (ம.ம.க.) அபுதுல் சமது, கரீம் (எசுடிபிஐ) ஆகியோரும் வந்திருந்தனர். அபுதுல் சமது முசுலிம் கைதிகள் விடுதலை தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் இரகுபதி அவ்வப்போது ஆளுநரின் ஒப்புதல் பெற்றுக் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார். இந்தப் பேச்சோடு ஆதிநாதன் குழு அறிக்கை பற்றியும் அமைச்சர் இரகுபதி குறிப்பிட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆதிநாதன் குழு அறிக்கை கொடுத்திருந்தால் அது வெளிப்படையாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதன் மீது வெளிப்படையான விவாதம் நடந்திருக்க வேண்டும். இப்படி எதுவும் நிகழவில்லை. மாறாக ஆதிநாதன் குழு பரிந்துரைகளைத் தமிழக அரசு பாதிப்புற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் ஆளுநர் இரவியிடம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

திமுகவின் தோழமை ஆற்றல்கள் – இசுலாமிய அமைப்புகள் உட்பட – “ஆதிநாதன் குழு அறிக்கை”யை உடனே வெளியிடுமாறு கேட்க வேண்டும்.   

முசுலிம் கைதிகளின் முன்விடுதலைப் பொருட்பாட்டில் ஆர்எசுஎசு ஆளுநர் இரவியின் முடிவுகளை அட்டியின்றி ஏற்று நடப்பதுதான் தமிழக அரசின் பணி என்றால், இந்த அரசு நல்லது செய்யும் என்று நம்பிக் கிடப்பதில் பொருளில்லை.

கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் யாரையும் விடுதலை செய்ய ஆதிநாதன் குழு பரிந்துரை வழங்காததால் ஆளுநர் அவர்களை விடுதலை செய்ய ஒப்பமிட மாட்டார் என்றும் அமைச்சர் இரகுபதி சொல்லி விட்டார். ஒரு வழக்கில் யாரையுமே விடுதலை செய்ய மாட்டார்கள் என்றால் சிறைப்பட்டோரைத் தனித்தனியாகக் கருதிப் பார்க்காமல் ஒரு வழக்கின் தன்மையை மொத்தமாகப் பார்த்து முடிவு செய்வதாகப் பொருள். இது நீண்ட தண்டனைச் சிறைப்பட்டோரின் விடுதலைத் தகுதியைக் கணிக்கும் வழிமுறையே அல்ல.

ஆதிநாதன் குழுவின் அணுகுமுறை இதுதான் என்றால் தமிழக அரசு இதனை மறுதலிக்க வேண்டும். ஆதிநாதன் குழுவிற்குத் தன் அணுகுமுறைக்கான மெய்யியல் அடிபப்டை என்னவென்ற தெளிவு இருக்க வேண்டும். அரசுக்காவது இந்தத் தெளிவு இருக்க வேண்டும். ஆதிநாதன் குழு பற்றிப் பேசும் பலருக்கும் அந்தக் குழு பற்றிய தெளிவே இருப்பதாகத் தெரியவில்லை.

சென்ற ஆகத்து 5ஆம் நாள் கடலூரில் மனிதநேய சனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்ற சிறை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டேன். அந்தப் போராட்டத்தில் பலரும் ஏந்திய முழக்க அட்டைகளில் ‘ஆதிநாதன் ஆணையம்’ என்றே குறிப்பிட்டிருந்தார்கள். முழக்கங்களிலும் தலைவர்தம் உரைகளிலும் ‘ஆதிநாதன் ஆணையம்’ என்றே ஒலித்தது. எனக்குத் தெரிந்த வரை அஃது ஆணையம் அல்ல. ஆணையம் என்றால் விசாரணை ஆணையச் சட்டப்படி அமைத்திருக்க வேண்டும். அதன் அறிக்கையைச் சட்டப் பேரவையில் முன்வைக்க வேண்டும். ஆதிநாதன் குழு வெறும் குழுதானே தவிர ஆணையம் அல்ல என்று நினைக்கிறேன்.

ஆதிநாதன் குழுவை முதல்வர் மு.க.தாலின் அமைத்தது இசுலாமியச் சிறைப்பட்டோரின் விடுதலையை எளிதாக்கவா? அல்லது மேலும் சிக்கலாக்கவா? என்ற கேள்விக்கும் விடை தேட வேண்டியுள்ளது.    

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 280

திங்கள், 23 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 249 : தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி

  


(தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தாழி (277) மடலில் வெளியிட்ட UPR IN TAMILNADU  THE REFUGEE CRISIS IN TAMILNADU அறிக்கையின் தமிழாக்கம் இதோ –

தமிழ்நாட்டில் உலகளாவிய காலவட்ட மீளாய்வு –

தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி 

1.    தமிழ்நாடு ஓர் இந்திய மாநிலம். தமிழ்நாட்டின் ஏதிலியர் நெருக்கடி என்பது இந்தியாவின் எதிலியர் நெருக்கடியில் ஒரு பகுதியாகும். ஆனால் இந்தியாவின் ஏதிலி நிலவரையில் தமிழ்நாட்டுக்குரிய தனியிடத்தை மறுப்பதற்கில்லை.

2.    தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழ் அகதிகள் பற்றி 01. 06. 2021இல்  வெளியிட்ட  கணக்கெடுப்பில் உள்ளபடி, 106 முகாம்களும் இரண்டு சிறப்பு முகாம்களும் (இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி) உள்ளன. முகாம்களுக்குள் 58,822 ஏதிலியர் கொண்ட 18,944 குடும்பங்களும், முகாம்களுக்கு வெளியே 34,122 ஏதிலியர் கொண்ட 13, 533 குடும்பங்களும் உள்ளன. இரண்டு சிறப்பு முகாம்களிலும் 70 தமிழ் ஏதிலியரும், சென்னை அருகே கேளம்பாக்கத்தில் மியான்மரிலிருந்து வந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 (உ)ரோகிங்க்யா ஏதிலியரும் உள்ளனர்.       

3.    இந்தியா 1948ஆம் ஆண்டிற்குரிய உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் ஒப்பமிட்டுள்ளது. ஆனால் 1951ஆம் ஆண்டிற்குரிய ஏதிலியர் தகுநிலை பற்றிய ஐநா உடன்படிக்கையிலும், 1967ஆம் ஆண்டிற்குரிய வகைமுறை உடன்பாட்டிலும் அது ஒப்பமிடவில்லை. அவற்றில் ஒப்பமிட உறுதியாகத் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஏதிலியரும் நாடற்றோரும் தொடர்பான உடன்படிக்கைகளை ஏற்புறுதி செய்யுமாறு ஐநா ஏதிலியர் உயராணையம் (UNHCR) அளித்த பரிந்துரையை இரண்டாம் உலகளாவிய காலவட்ட மீளாய்வில் (UPR II) இந்தியா ஏற்கவில்லை. இந்தியாவில் ஏதிலியர் (அகதிகள்) உண்டு. ஆனால் ஏதிலியரை அறிந்தேற்றல், பதிவேற்றுதல், நடத்துதல் பற்றிய சட்டம் எதுவுமில்லை. ஆகவே இந்தியா இலங்கை ஏதிலியரை உறைவிடம் தேடுவோர், சட்டப் புறம்பாகக் குடிபெயர்ந்தோர் அல்லது (அயலார் சட்டத்தின் படி) அயலாராக நடத்துகிறதே தவிர, ஏதிலியருக்கான ஐநா உயராணையம் வழிகாட்டியவாறு ஏதிலியராக நடத்தவில்லை.

4.    தஞ்சம் நாடுவோரையும் ஏதிலியரையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒப்பமிடவும்,  இப்பொருள் குறித்து உள்நாட்டுச் சட்டத்தின் ஊடாக ஒரு சட்டமுறைப்படியான செயல்வழியை இயற்றவும் இந்தியா தவறி விட்டமைதான், மதத்துக்கு மதம் பாகுபாடு காட்டக் கூடியதும், எனவே அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதுமாகிய பேர்போன குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இந்திய அரசால் இயற்ற முடிந்தமைக்குக் காரணமாயிற்று.

5.    தமிழ்நாட்டினால் தன் பேணுகையில் உள்ள ஏதிலியரின் நலம் பற்றி மட்டுமே பேச முடியும் – ஏதோ அவர்களின் உரிமைகளை உறுதி செய்யாமலே கூட அவர்களின் நலத்தைக் காக்கவும் மேம்படுத்தவும் முடியும் என்பது போல! இந்தியக் குடியுரிமைக்கான அவர்களின் தேடலைத் தமிழக அரசு ஆதரிக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு அவர்களின் கோரிக்கையைக் கருதிக் கூடப் பார்க்காது.

பரிந்துரைகள்:

1)    ஐநா ஏதிலியர் உயராணையம் பரிந்துரைத்துள்ளவாறு ஏதிலியரும் நாடற்றோரும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கைகளில் இந்தியா ஒப்பமிடவும் அவற்றை ஏற்புறுதி செய்யவும் வேண்டும்ஏதிலியரை நடத்தும் முறை பற்றி உள்நாட்டுச் சட்டமும் இயற்ற வேண்டும்.

2)    ஐக்கிய நாடுகள் ஏதிலியர் உயராணையம் அனைத்து ஏதிலியர் முகாம்களிலும் முழு வலிமையுடன் இயங்க இந்தியா இடமளிக்க வேண்டும். ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் குறுக்கிடாமல் ஐநா ஏதிலியர் உயராணையம் தற்சார்பாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

3)    இந்தியா தன் குறையைச் சரிசெய்யுமுகத்தான் தெற்காசிய வட்டார ஒத்துழைப்புச் சங்கத்தின் (சார்க்) சார்பைப் பயன்படுத்தி, ஏதிலியர் பற்றிய 2004 தெற்காசியச் சாற்றுரையையும், பன்னாட்டு உடன்படிக்கைகளையும், ஏதிலியர் பற்றிய 1984 கார்ட்டசெனா சாற்றுரையையும் கருதிப் பார்க்கலாம்.

4)    பல்வேறு வட்டாரங்களிலிருந்தும் வகைபிரித்த காலங்களிலிருந்தும் வரக் கூடிய ஏதிலியர்களுக்கிடையே இந்தியா பாகுபாடு காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஐந்தாண்டுக்கு மேல் இந்தியாவில் தங்கியுள்ள அகதிகள் அனைவர்க்கும், இந்தியாவில் பிறந்த அவர்களின் குழந்தைகளுக்கும் இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும். இந்தியாவும் சிறிலங்காவும் இலங்கை திரும்ப விரும்புவோரின் அடிப்படைத் தேவைகள் அனைத்துக்கும் கூட வழிவகை செய்ய வேண்டும்.

5)    இந்திய வம்சாவளித் தமிழ் ‘அகதிகள்’ எனப்படுவோர் உள்ளடியே தாயகம் திரும்பியோர்தாம் என்பதால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சிக்கலைத் தீர்க்கும் வகையில் இந்திய அரசு இந்திய வம்சாவளியினரான ஏதிலியரைக் கண்டறிவதற்காக தமிழ்நாட்டிலும் வெளியிலும் உள்ள ஏதிலியர் முகாம்களில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றி திருவாளர் சாஸ்திரி, திருவாட்டி சிறிமா பண்டாரநாயக்கா ஆகிய இரு தலைமையமைச்சர்களும் ஒப்பமிட்ட உடன்பாட்டின் படி அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இவ்வாறான தாயகம் திரும்பியோருக்குக் குடியுரிமை வழங்குவது இந்திய அரசுக்கு ஒரு பன்னாட்டுக் கடப்பாடு ஆகும். இனியும் காலத்தாழ்வின்றி இதனைச் செய்து முடிக்க வேண்டும்.

6)    உண்மையில் சட்ட ஆணை இல்லாத சிறைச்சாலைகளே ஆன (ஐநா கூடுதல் வகைமுறைகள் I, II, 1977) இலங்கைத் தமிழ் ஏதிலியருக்கான சிறப்பு முகாம்களை இந்திய மூடிவிட வேண்டும்.

(தொடரும்)
தோழர் தியாகு 18/02/2022.  

தாழி மடல் 279

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ, கட்டுரைத் தலைப்புகள்

 



     22 October 2023      அகரமுதல



சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்
ஆசியவியல் நிறுவனம், சென்னை
உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா

இணைந்து நடத்தும்
5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ

பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு

ஏப்பிரல் 5-7, 2024

கட்டுரைச் சுருக்கம் வந்து சேர வேண்டிய இறுதி நாள்

கார்த்திகை 14, 2054 / 30.11.2023

முழுக் கட்டுரை வந்து சேர வேண்டிய இறுதிநாள்

தை 17, 2055 / 31.01.2024

மின்வரி, தளம், கட்டுரைத் தலைப்புகளை அறிக்கையிதழில் காண்க.







தோழர் தியாகு எழுதுகிறார் 248 : உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 247 : குறைபாடுள்ள குடியுரிமைச் சட்டமும் பிறவும் – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

உயிரற்ற உடலும் உண்மைக்குப் போராடும் – பெரியகுளம்!

2023 ஆகத்து 5 காரிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் உயிரற்ற உடல்களாகத் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிமீறிய காதலர்கள் மகாலட்சுமி – மாரிமுத்து… இருவரில் ஒருவரின் உடல் சடலக் கூறாய்வு முடித்து அவசரமாக எரியூட்டப்பட்டு விட்டது. அந்த எரிமேடையில் மகாலட்சிமியின் காதலோடும் உடலோடும் சேர்ந்து எத்தனை உண்மைகள் எரிந்து சாம்பலாயினவோ, யாருக்கும் தெரியாது.

மாரிமுத்துவின் உடலை அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவருடைய பெற்றோர், அண்ணன், ஊர் மக்கள் மருத்துவ மனையில் திரண்டு விட்டனர். நம் தோழர் மதியவன் இரும்பொறையும், அம்பேத்துகர் பிறந்த நாள் போராட்டக் குழுவைச் சேர்ந்த மற்றத் தோழர்களும், அரசியல் சார்புகளுக்கப்பாலும் சாதி கருதாமலும் நியாயத்துக்காக நிற்கக் கூடிய நண்பர்களும் கூடி விட்டனர். அவர்கள் மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிலையெடுத்து நின்றனர்.

மாரிமுத்துவின் உடலை எடுத்துச் சென்று எரித்து விடுமாறு காவல்துறை அதிகாரிகள் கொடுத்த நெருக்குதல் கொஞ்ச நஞ்சமில்லை. வழக்கம் போல் காவல்துறைக்கு முட்டுக் கொடுக்கிற ஆட்களும் அயரவே இல்லை.

கொலை என்றாலும், தற்கொலைக்குத் தூண்டுதல் என்றாலும், சட்டப்படி சடலக் கூறாய்வுக்கு முன் நடக்கக் வேண்டிய மரண விசாரணை நடக்கவே இல்லை. இதனைப் பல முறைக் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டிய பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

பட்டியல் சாதிகள் பட்டியல் பழங்குடிகள் வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் வழிவகைகளின் படி இந்த வழக்கைப் பதிவு செய்யக் கூட காவல் துறை மறுத்து அழிச்சாட்டியம் செய்து வருவது வலுத்த ஐயங்களைத் தோற்றுவிக்கிறது.

ஆனால் பெரியகுளம் காவல்துறை எவ்வித விசாரணையும் இல்லாமல் தற்கொலைதான் என்று முடிவுகட்டி மக்களையும் அவ்வாறே ஏற்கச்செய்ய முயன்று வருகிறது. சாதிவெறியுடன் தணிந்த(தலித்) மக்களை இழிவாகப் பேசுவதில் பேர்போன பெரியகுளம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் மீனாட்சி இவ்வழக்கிலும் சாதிய வன்மத்துடன் செயல்பட்டுள்ளார்.

நடந்தது கொலையாக இருக்கலாம் என்று மக்கள் ஐயுறுவதில் நியாயம் உண்டு. ஒருவேளை அது தற்கொலையாகவே இருந்தாலும் அந்தத் தற்கொலைக்கு என்ன காரணம்? யார் தூண்டுதல்? என்பதைப் புலனாய்வு வழியாகத்தான் முடிவு செய்ய முடியும். உயிரிழந்த இருவரில் ஒருவர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையும், கொடுநிகழ்வுக்கு முன் நடந்த பூசல்கள், வழக்குகள் போன்றவற்றையும் கணக்கில் கொண்டாலே போதும், மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் கொடுத்த முறைப்பாட்டை ப.சா.(எசு.சி) ப.இ.( எசு.டி) வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்வதுதான் முதல் கட்ட நீதியாகும்.

இந்த முதல் கட்ட நீதிக்கான போராட்டத்தை வஞ்சகமாய் முறியடிக்க, காவல் துறையும் வருவாய்த் துறையும் மட்டுமல்ல, வெளிப்படையாகத் தெரியாத சில ஆற்றல்களும் வேலை செய்வதாக ஐயுறக் காரணம் உள்ளது. ஆனால் எல்லாத் தடைகளையும் மீறி பெரியகுளத்தில் தோழர் மதியவன் இரும்பொறையும், போராட்டக் குழுத் தோழர்களும் உறுதியாகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். மாரிமுத்துவின் தாய்தந்தையும் தமையனும் ஊர்மக்களும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் இவர்களுக்குப் பின்னால் மருத்துவமனையின் பிணவறையில் கிடந்த படி போராடிக் கொண்டிருக்கிறார் மாரிமுத்து. இந்தப் போராட்டத்தின் ஆகப்பெரிய வலுவே மாரிமுத்துவின் உயிரற்ற உடல்தான். இந்த உடலை மாரிமுத்துவின் குடும்பத்தார் அகற்றிக் கொண்டு போய் எரித்து விட்டால் உண்மையை அழித்து விட முடியும் என்று கொடியவர்கள் மனப்பால் குடிக்கின்றார்கள்.

உயிரற்ற உடலும் உண்மைக்கு உயிர்கொடுக்கப் போராடும் களம்தான் பெரியகுளம்! செத்தாலும், உடல் சிதைந்தாலும், மண்ணோடு மண்ணாகி மறைந்தாலும் நம் நினைவுகளில் என்றும் வாழ்வார் மாரிமுத்து!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 277