சனி, 31 அக்டோபர், 2020

எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக!

 






எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக!

இலக்குவனார் திருவள்ளுவன்


அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக் கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு தமிழக அரசை மனமாரப் பாராட்டுகிறோம்!

மருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார்.

பின்னர் அந்தத் திருத்தங்களுடன் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் முதலான மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி சட்ட முன்வடிவு தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு வரைவு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் காலங்கடத்திக் கொண்டு உள்ளார். இதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுவதிலும் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சியினரும் சட்ட வரைவில் கையொப்பமிட ஆளுநரை வலியுறுத்தினர். ஆனால், அவர் இதனை பொருட்படுத்தவில்லை. தி.மு.க. கூட்டணியினரும் ஆளுநர் மாளிகை முன்னர் கண்டனப் பேரணி நடத்தினர்.

இச்சட்டவரைவில் ஒப்பமிட ஆளுநருக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் அனுப்பியிருந்தார். அதற்கு இதுகுறித்து முடிவெடுப்பதற்காக மேலும் 4 வாரக் காலம் தேவைப்படுவதாகக் காலத்தாழ்ச்சி செய்தார்.

அரசுப்பள்ளி மாணாக்கர் நலன் பாதிப்பு கூறுவது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களாட்சியைக் காப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை என்பது புரிந்தது.

மருத்துவப் படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி, மதுரையைச் சேர்ந்த இராமகிருட்டிணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் பின்வருமாறு தெரிவித்தனர்:

“7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சட்டவரைவில், ஆளுநர் மனச்சான்றின்படி முடிவு எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்படி, நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. பொதுத் (நீட்டு) தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், விரைவாக முடிவெடுக்க வேண்டும். சூழல், இன்றியமையாமை, அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே, சட்டமன்றத்தில், இந்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கூடுதலாகப் பல கோணங்களில் ஆலோசிக்க ஆளுநருக்கு மேலும் காலவாய்ப்பு தேவையா?

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய சட்ட வரைவிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கூடுதல் காலம் கேட்பது விந்தையாக உள்ளது. இதுபோன்ற சூழல்கள் எழாது என்பதாலேயே, ஆளுநருக்கு உத்தரவிட முடியாது எனச் சட்டத்தில் உள்ளது.

ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனினும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு நடுநிலையுடன் நன்காய்ந்து நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

எனினும் ஆளுநர் மாணாக்கர் நலன் குறித்தோ மக்களாட்சி மாண்பு குறித்தோ கருதிப் பார்க்கவில்லை.

ஆனால், மாணாக்கர் நலனில் கருத்து செலுத்தித் தமிழக அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்டவரைவு ஆளுநரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும், மருத்துவ கலந்தாய்வு தொடங்கியதாலும் அவசர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நல்ல முடிவெடுத்துள்ள முதல்வருக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள்.

மரு.இராமதாசு தெரிவித்துள்ளதுபோல் இந்த ஆணைக்குச் சட்டப் பாதுகாப்பு பெறவும் ஆளுநர் முடிவிற்குக் காலவரையறை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் இராசீவுகாந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுப் பன்னெடுங்காலம் சிறையில் துன்புறும் எழுவரையும் விடுதலை செய்யவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

சட்டமன்றத் தீர்மானம், அமைச்சரவை முடிவு, முதல்வர் அறிக்கை, உரை முதலியவற்றின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.

19.02.2014-இல் கூடிய அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுதேந்திரராசா என்கிற சாந்தன், சிரீஅரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, இராபர்ட் பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்று மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தற்கு உயிர் கொடுக்க வேண்டும்.

உள்ஒதுக்கீட்டு ஆணைபோல் எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இதனால் எழுவரும் எழுவர் குடும்பத்தினரும் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களும் உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் முதல்வரையும் தமிழக அரசையும் பாராட்டுவர். நிறைந்த உள்ளத்துடன் குவியும் பாராட்டு வெற்றி மாலைகளை முதல்வர் எடப்பாடி க.பழனிசாமிக்குச் சூட்டும்.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
(திருக்குறள் – 1022)

30.10.2020 12 : 34  பி.ப.

இலக்குவனார் திருவள்ளுவன்

தாய் மின்னிதழ்

வெள்ளி, 30 அக்டோபர், 2020

குவிகம் அளவளாவல்: மின்புத்தகம்

 அகரமுதல

  ஐப்பசி 16, 2051 ஞாயிறு

  1.11.2020 மாலை 6.30

குவிகம் அளவளாவல்: மின்புத்தகம்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
 நிகழ்வில் இணைய
அணுக்கிக் கூட்ட எண்  / Zoom  Meeting ID: 812 1972 7612
கடவுக்குறி  / Passcode: 899646
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/81219727612?pwd=bVY2aTdHUmlQV2N5QjhhOUJvNDcrQT09
இணைப்பைச் சொடுக்கலாம்  

 

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை: கொடு மணல்: பேரா. கா.இராசன்

 அகரமுதல




வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்
கொடு மணல் அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்”
-பதிற்றுப் பத்து
ஈராயிரம் ஆண்டிற்கும் மேல் புவிப்பந்தின் மடிக்குள்ளே சுருண்டு கிடந்த நெல்மணிக் குவியல்களும், முன்னீர் கடந்து நானிலம் ஓடி வணிகம் செய்து கொணர்ந்த ஒளிரும் மணியும் கற்களும், செப்பிலே சிங்கச் சிலையும், இரும்பு உருக்கு உலையும், தாய் மொழியாம் தமிழி எழுத்துக் கொண்ட பானைகளும், நொய்யல் ஆற்றின் மடியிலே புரண்ட கொடுமணம் (கொடு மணல்) என்றோர் பேரூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழனின் எச்சங்கள்! அவன் பெரு வாழ்வு வாழ்ந்து முடித்து, விட்டு விட்டுப் போன பேரினத்தின் மிச்சங்கள்! தமிழினம் வாழ்ந்த நனி சிறந்த நல் வாழ்வின் சான்றுகள்!
 
உருண்டு கொண்டிருக்கும்
புவிக்குள்ளே
உலாவிக் கொண்டிருந்ததோர் இனம்- அது
உறங்கிப்போய்க் காலம் பல
போன பின்
உறக்கம் தெளிவித்து
உண்மையை உலகிற்குணர்த்தியோர்
ஓராயிரம் பேர்! ஓராயிரத்தில்
உங்களோடு ஒருவர் இங்கே
உரையாட வந்துள்ளார்!
பொருந்தல், கொடுமணல்,
பாலாறு, வைகைக் கரை,
பொருநைக் கரை என
நீரோடும் வழியெல்லாம் முன்னோரின்
ஊரைத் தேடிய உலகளந்தவர்!
ஆழியிலே அமிழ்ந்து கிடக்கும்
அன்னைத் தமிழரின்
சுவடுகளைத் தேடித் திரியும்
அகல் விளக்கு!
ஊர் போற்ற வாழ்ந்த
தமிழ் மறக்குடி தாங்கிய
கொடுமணல் குறித்து
உலகிற்குணர்த்த உரம் கொண்டவர்
உத்தமர் தம் உரையைக்
கேட்போம் வாரீர்!
 
தொன்மை நிறைந்த தமிழனின்
மேன்மையை நமக்கெல்லாம் கூற வரும் பேராசிரியர் கா.இராசன் அவர்களின் கொடுமணல் குறித்த உரையைக் கேட்க வாருங்கள்.
நாள்: ஐப்பசி 15, 2051 / அட்டோபர் 31, சனிக்கிழமை
நேரம்: இரவு 9 மணி (கிழக்கு)
 
எங்களோடு இணைந்து கொள்ள: tinyurl.com/FeTNA2020ik
கூட்ட எண் / Meeting id: 954 1812 2755
இப்படிக்கு,
பேரவை இலக்கியக் கூட்டக் குழு