வெள்ளி, 17 ஜனவரி, 2020

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி


தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்!

பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது.
தாய் அருகா நின்று தவ தைந்  நீராடுதல் – பரிபாடல் 11/91
நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115
இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134
தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59)
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ?
எனக் கேட்கிறார்.
ஆண்டின் இறுதி நாளான மார்கழித் திங்கள் இறுதி நாளன்று – பொங்கலுக்கு முதல் நாள் – கொண்டாடுவது போகி. புதியனவற்றை வரவேற்பதற்காகப் பழையனவற்றைப் போக்கும் நாள் ‘போக்கி.  ‘போக்கி’ என்பதே சுருங்கிப் போகியாயிற்று. பழைய பொருள்களை மட்டுமல், பழைய கசப்பான எண்ணங்களையும் பகை உணர்வுகளையும் எறிவதற்கான நாள் இது.
தை முதல் நாள் கொண்டாடுவதே தைப்பொங்கல். இதனை மணப்பொங்கல் என்பர். மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவதைக் காண்கிறோம். இவ்வாறான பல்வேறு நாள் பொங்கலுடன் வேறுபடுத்திச் சிறப்பிக்க இவ்வாறு கூறுகின்றனர். நாட்டின் சில பகுதிகளில் முப்போகமும் சில பகுதிகளில் இருபோகமும் இருக்கும். ஆனால், எல்லாப்பகுதிகளிலும் ஒரு போகம் இருக்கும். அதன் அறுவடைதான் தையில் நடைபெறுகிறது. எனவேதான் தைத்திங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இடையில் ஏற்பட்ட பொருள் பற்றாக்குறை தொடர்பான இன்னல்கள் நீங்கி மகிழ்வு தொடங்கும் காலம் என்பதால் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். எனவேதான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கின்றனர். இதற்குச் சமயப் பரப்புரையாளர்கள் – அறுவடைக்குப்பின்னர் வயலில் நடக்க வழி பிறக்கும் எனத் – தரும் விளக்கம் சரியில்லை.
 மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காண்பொங்கல் அல்லது காணும் பொங்கல். ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் உசாவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வர். பணியாளர்கள் தங்கள் முதலாளிகளைச் சந்தித்துப் பரிசுகள் பெறுவர். சிலர் இதனைத் தவறாகக் கன்றுப்  பொங்கல் என்கின்றனர். மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவதால் தனியாகக் கன்றுப் பொங்கல் எனக் கொண்டாடும் தேவை இல்லை அல்லவா?
 மாட்டுப்பொங்கல் மறுநாளன்று – காணும் பொங்கல் நாளில் – கன்னிப்பொங்கல் / கன்னிமார்பொங்கல் / கனுப் பொங்கல் / பூப்பொங்கல் என என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுவர். இதனைத் தை முதல் நாளன்று பொங்கலின் பொழுதும் சில பகுதிகளில் கொண்டாடுவர் அல்லது மறுநாளோ தைத்திங்களில் பிறிதொருநாள் விளையாடியோ கொண்டாடுவர். சிறுமியர் குப்பி எரு எனப்படும் எருவைக்கொண்டு பொங்கல் சமைத்து விளையாடுவதால் இதனைக் குப்பிப் பொங்கல் / கொப்பிப்பொங்கல் / குப்பிராட்டிப்பொங்கல் என்றும் கூறுவர். மணல் வீடுகட்டி அல்லது பொம்மை வீட்டில் சிறுமியர் பொங்கல் வைப்பதால் சிறுவீட்டுப்பொங்கல்  எனவும் சொல்வர்.
 சலவையாளர்கள் துணி துவைக்கும் துறைகளில் நடத்தும் பொங்கலைத் துறைப்பொங்கல் என்கின்றனர். திருமணமான நான்காம் நாள் தாய்மாமன் செலவில் மணமகளுக்கு மட்டும் ஊர்வலம் நடத்திப் பொங்கல் இடுவதைத் தோழிப் பொங்கல் என்கின்றனர்.
மாட்டுச்சந்தையில் இடும் பொங்கலைப் பட்டிப்பொங்கல் என்கின்றனர். பொங்கலன்று மிகுதியாகப் பொங்கினால் மங்கல அறிகுறியாக எண்ணி நிறைப்பொங்கல் என்பர். சிற்றூர்த் தேவதைக்கு ஊரார் இடும் பொங்கல் பெரும்பொங்கல் எனப்படும்.
பொங்கலன்று பெற்றோர் பெண்ணுக்குத் தரும் பரிசும் பெரியோர்க்குச் செலுத்தும் காணிக்கையும் பொங்கல் வரிசை எனப்படுகிறது.
 சிறப்பாகக் கொண்டாடப்படும் பொங்கல் ஏதும் மதச் சார்புடையதா?
 இசுலாம் மதம் தோன்றும் முன்னரே, அதற்கு முன்பிருந்த கிறித்துவ மதம் தோன்றும் முன்னரே கொண்டாடப்படுவது பொங்கல் விழா. எனவே, இந்த மதங்களைச் சார்ந்தது அல்ல அது.
அப்படியானால் இந்து மதவிழா என்று சொல்லலாமா?
இறை நெறியும் மத நெறியும் ஒன்றல்ல. எனவேதான், இறையன்பர் அருட்திரு இராமலிங்க வள்ளலார்,
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
என்றார்.
தமிழர்களின் இறைநெறி என்பது இயற்கை சார்ந்தது.
 இந்து மதம் என்ற ஒன்று உருவாகும் முன்னர் இருந்தே சிறந்திருக்கும் இயற்கை சார்ந்த பொங்கல் விழாவை எங்ஙனம் இந்துமதப்பண்டிகை எனக் கூற இயலும்?
பரந்து இருக்கும் கடலோரம் வாழும் மக்கள் பரதவர் எனப்பட்டனர். பெரும்பகுதி கடலால் சூழ்ந்த நம் நாடு பரதக் கண்டம் எனப்பட்டது.  ஆங்கிலேயர் வந்த பின் வந்த பெயரே இந்தியா என்பது. அதுபோல் நம் நாட்டில் இருந்த சமயங்களைச் சேர்த்து இந்து மதம் என்றனர். அவ்வாறு சொல்லும் பொழுது பெரும்பகுதி ஆரியக் கருத்துகளும் ஆரியக் கதைகளும் திணிக்கப்பட்டன. அவ்வாறு திணிக்கப்பட்ட ஆரியம் மக்களை நான்கு வகையாகப் பிரித்தது. அதில் உழுபவன் சூத்திரன் எனப்பட்டுக் கடை நிலையில் வைக்கப்பட்டான். அவன் உயர்வுகளும் சிறப்புகளும் மறுக்கப்பட்டன. இவற்றுக்குக் காரணமான ஆரிய வேதங்கள் பயிர்த்தொழிலையும் பயிர்த்தொழிலாளர்களையும் இழிவு படுத்துவன. ஆனால், தமிழர்களின் பொங்கல் விழா என்பது உழுதொழிலையும் உழவர்களையும் போற்றும் பெருநெறி விழா. அவ்வாறிருக்க இதனை இந்து மத விழா என்பது எப்படிச் சரியாகும்?
 “பிராமணர், சத்திரியர் உழவுத் தொழில் செய்யலாகாது… … பூமியையும் பூமியில் வாழும் சிற்றுயிர்களையும் கலப்பை, மண்வெட்டியால் கொல்ல நேர்கிறது” என்கிறது மநு (11.52) இதையேதான் வேளாண்மை முதலிய கடமைகளில் இம்சை முதலான குறைகள் காணப்படுகின்றன எனக் கீதையும் கூறுகிறது. வேள்வியில் உயிர்களைக் கொல்பவர்கள்தாம் இங்ஙனம் கூறுகிறார்கள்.
இவ்வாறு உழுதொழிலை இழிவாகவும் அத்  தொழிலைச் செய்பவனைச் சூத்திரன் எனக் கூறி இழிவானவனாகவும் ஆரிய நூல்கள் கூறுகின்றன. அத்தகைய இழிவானவன் பெயரில் அவர்கள் விழா எடுப்பார்களா? ஆனால், தமிழர்கள் உழவையும் உழவர்களையும் உயர்வாக மதித்தார்கள். எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர், “உழந்தும் உழவே தலை”, “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என உழவே தலைமையான தொழில் என்றார். உழவர்களைத் தொழுதே மற்றவர்கள் செல்கின்றனர் என்றார்.
 இவ்வாறு உழவர்களை மதிக்கும் தமிழ் மக்கள் உழவர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர். உழவை மதிக்கும் தமிழின விழாவை உழவை மதிக்காத இந்து மத விழாவாக எங்ஙனம்  கூற முடியும்? மதத்தோற்றங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் இன விழாவே பொங்கல் விழா என்பதை உணர வேண்டும்.
கடந்த நூற்றாண்டில், தேசியக் கட்சிகளில் இருந்த தமிழ் உணர்வாளர்களாலும் திராவிட உணர்வாளர்கள், தமிழ் உணர்வாளர்களாலும்  பொங்கல் விழா கொண்டாடுவது ஓர் எழுச்சியாக மாறியது. சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாரும் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். தனித்தனிக் குடும்ப விழாவாக இலலாமல், மன்பதை விழாவாகத் தமிழ் அமைப்பினரும் பிற அமைப்பினரும் கொண்டாடத் தொடங்கினர். அதற்கு முன்பு சிற்றூர்களில் சல்லிக்கட்டு, காணும் பொங்கல் போன்றவற்றால் ஊர் விழாவாக இருந்த பொங்கல் விழா நகர விழாவாகவும் மாறியது.   எல்லாச் சமயத்தவராலும் தமிழின விழாவாகக் கொண்டாடப்பட்டுச் சிறப்பெய்திய பொங்கல் விழா மெல்ல மெல்ல இந்துக்கள் தவிர  பிற சமயத்தவரால் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் புறக்கணிக்கப்படலாயிற்று. இந்துக் கடவுளுக்குப் படைத்த பொங்கலைத் தாங்கள் உண்பதா என்றும் ஒரே இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட நாம் பிற சமயக் கடவுளுக்குப் படைத்த பொங்கலை ஏற்பதா என்றும் எண்ணத் தொடங்கி விட்டனர்.
இலக்கிய அமைப்புகள் மூலம் தமிழ்த்தொண்டாற்றிவரும் பிற சமயத்தவர், சிறப்பாகப் பொங்கல் விழாவை உணர்வுடன்தான் கொண்டாடுகின்றனர். கட்சி அமைப்பினர் கொண்டாடும் பொதுவிழாவாகிய தமிழர் திருநாளிலும் சமய வேறுபாடின்றிக் கலந்து கொள்கின்றனர். ஆனால், குடும்பம் என்று வரும் பொழுது வேறு நிலை எடுக்கின்றனர். இந்துக் கோயில்களில் பொங்கலை முன்னிட்டு வழிபாடுகளும் சிறப்புப் பூசைகளும் நடை பெற்று வருகின்றன. இதனால் இந்து விழாவாக இப்பொழுது கருதப்படும் நிலை வந்து விட்டது.
 மணிமேகலையில் 10 மதவாதிகள் பற்றிய குறிப்பு வருகிறது. அதில் இந்து மதம் இல்லை. இந்து மதம் என்பதே பிற்காலத்திய  கூட்டாக்கம்தான். இந்து மதம் இல்லாக் காலத்திலிருந்தே தமிழர் விழாவாக இருந்து வரும் பொங்கல் விழாவை மத விழாவாகக் கருதுவது தவறு என்பதை அனைவரும் உணர வேண்டும். தாங்கள் தமிழர்கள் என்பதை மறவாது தமிழ் நாட்டவரும் உலகத் தமிழர்களும் தமிழர் திருநாளைக் கொண்டாட வேண்டும்.
எனவே, இந்து என்ற பெயர் சூட்டலுக்கு உள்ளானவர்களும் பிற சமயம் சார்ந்த தமிழ் நாட்டினரும் பொங்கல்  விழாவை இனவிழாவாகவும் பொது விழாவாகவும் பண்பாட்டு ஒற்றுமைக்கும் சமய நல்லிணத்திற்கும் ஏற்ற விழாவாகவும் கருதிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி 17.01.2020

புதன், 15 ஜனவரி, 2020

1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு

அகரமுதல

அன்புள்ள நண்பர்களே,
தமிழர் திருநாள், பொங்கல் திருநாள், காணும் பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டுக்
கிண்டில் செயலி மூலம் அமேசான் பதிப்பான

‘ வெருளி அறிவியல் ‘ நூலை

இந்திய நேரப்படி: தை 01, 2051 / சனவரி 15, 2020 அன்று நண்பகல் 1:30 மணி முதல் தை 03, 2051 / சனவரி 17, 2020 அன்று நண்பகல் 1.29 வரை இலவயமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அறிவியல் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும்
சொல்லாக்கங்களில் ஈடுபாடு கொண்டவர்களும்
பொதுஅறிவுச் செய்திகளில் நாட்டம் கொண்டவர்களும்
இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
உலகில் எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு 2300 நோய் வகைகளைத் தொகுத்துத் தந்துள்ள
இந்நூலுக்கு 5 உடுக்குறியிட்டு ஊக்கப்படுத்துமாறும் வேண்டுகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!

அகரமுதல

தமிழர் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடுவோம்!

தமிழரல்லாத திராவிடர்கள் திராவிடர் திருநாளைக் கொண்டாடட்டும்!


அனைவருக்கும்
தமிழர்திருநாளாம் பொங்கல் திருநாள்
திருவள்ளுவர் புத்தாண்டு
வாழ்த்துகள்!
 
தமிழர்கள் வாழுமிடமெங்கும் தன்னுரிமையுடன் வாழவும்
தமிழ் அங்கெல்லாம் தலைமையாய்த் திகழவும் 
அனைவரும் முயன்று வெல்வோம்!

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.   (திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௪ – 1034)

அகரமுதல மின்னிதழ்
தமிழ்க்காப்புக்கழகம்
இலக்குவனார் இலக்கிய இணையம்
சார்பில்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 14 ஜனவரி, 2020

திருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்

அகரமுதல

தை 02, 2051 / வியாழக்கிழமை 16.01.2020
காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்

திருக்குறள் உலக நூல் மாநாட்டு ஆய்வரங்கம் -2
திருக்குறள் நூலைப் படி அரசு வேலையைப் பிடி
நூல் முதலான 6 நூல்கள் வெளியீட்டு விழா
முனைவர் கு.மோகன்ராசு அவர்களின் நூல்கள்பற்றிய
திறனாய்வு அரங்கத் தொடக்க விழா
விருதுகள் வழங்கும் விழா

இளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை

அகரமுதல


தை 01, 2051 புதன் கிழமை பிற்பகல் 3.00 மணி
15.01.2020
ஒய்.எம்.சி.ஏ.கண்காட்சி அரங்கம்

புதன், 8 ஜனவரி, 2020

திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

 திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும்
பழமொழிகள் சில மூலப் பொருள்களிலிருந்து விலகி இன்றைக்குத் தனியான தவறான பொருள்களில் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒரு பழமொழியே “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்பது. இதனைப் பேச்சு வழக்கில் “ஆத்துல போட்டாலும் அளந்து போடு” என்றும் பெருவாரியாகக் கூறுகின்றனர். உண்மையில் இது பழ மொழி அல்ல. திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றின் சிதைந்த வடிவமே ஆகும். அதனைப் பார்ப்போம்.
முதலில் நாம் பழமொழிக்கான விளக்கங்களைக் காண்போம்.
“இந்தப் பழமொழி நாம் வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய நல்ல கருத்தொன்றை வலியுறுத்துகிறது. நாம் எதைச் செய்தாலும் அளவறிந்து செய்ய வேண்டும். சிக்கனமாக இருக்க வேண்டும். வீண் செலவு செய்யக்கூடாது என்ற பொருளினை இப் பழமொழி கூறுகிறது என்பர்.” இவ்வாறு அவினாசி குழந்தைகள் உலகம் வலைப்பூவில் < https://avinashikidsworld.blogspot.com/ > தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, “மேலும்  இதில், மற்றொன்று வேறு வகையானது. ஆற்றில் கொண்டுபோய் விட்ட பிறகும் கூட நம் மனம் சும்மா இராது. இவ்வளவு பொருட்கள் தேவையில்லாமல் இவ்வளவு காலம் நம்மிடம் ஏன் இருந்தன? என்ற எண்ணம் ஏற்படும். இவற்றின் விளைவு தான் என்ன? நாம் எதைச் செய்தாலும் நிதானித்து, ஆர அமரச் சிந்தித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இப் பழமொழி நமக்குக் கற்பிக்கிறது. தேவையற்ற பொருள்களைக் கழிக்கும் போது கூட, சிந்தித்துத்தான் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவாக, இதில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
“இப் பழமொழிக்குத் தற்காலத்தில் புதியதோர் கருத்தும் கூறப்படுகிறது. ஆற்றில் போடுவது என்பதே தவறு. இதில் அளந்து போட்டால் என்ன? அளக்காமல் போட்டால் என்ன? எதுவும் நேர்ந்து விடாது. எனவே நம்முன்னோர் இப் பழமொழியை முற்கூறிய கருத்தில் கூறவில்லை. அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதே இதன் உண்மையான வடிவமாதல் வேண்டும். அகத்தில் (வயிற்றுக்கு) போட்டாலும் (சாப்பிட்டாலும்) அளந்து போட வேண்டும் (சரியான அளவு சாப்பிட வேண்டும்). அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அளவுக்கு அதிகமாக (அளந்து உண்ணாமல்) உண்பதே பல வித நோய்கள் தோன்றுவதற்குக் காரணமாயமைகின்றதெனக் கூறப்படுகிறது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழியும் அளந்துண்ண வேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துகின்றது எனலாம். சுருங்கக் கூறின் எச்செயலைச் செய்யும் போதும் நிதானித்து, கணக்கிட்டுச் செய்யும் பழக்கம் நமக்கு ஏற்பட வேண்டும் என்பதையே இப் பழமொழி வலியுறுத்துகிறது எனலாம்.”
மனதோடு மனதாய் < http://manthodumanathai.blogspot.com/2008/08/blog-post.html  > என்னும் வலைப்பூவில்
“. . . .  அவாள்கள் பாசையில் ஆத்துல – வீட்டுல இதன் படி வீட்டுக்கே — குடும்பத்துக்கே – செலவு செய்தாலும் கணக்கிட்டுச் செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வருமாறு, நாகராச சோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ என்கிற அமாவாசை என்னும் முகநூல் பக்கத்தில் < https://www.facebook.com/NakarajacolanMamlaEnkiraAmavacai/posts/461153967321913/ >  17.08.2013 இல் பதியப்பட்ட ஒன்று, பெண்மை வலைப்பூவில் , https://www.penmai.com/ > 12.08.2015 இல் பகிரப்பட்டது.(மூலப்பதிவு வேறாக இருக்கும்.)
“. . . .  இந்தப் பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? பழமொழியின் உண்மையான பொருள். “அகத்தில் போட்டாலும் அளந்து போடு…” இது, காலப்போக்கில் “ஆத்தில் போட்டாலும் அளந்து போடு” என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” என்று எழுதினார்கள்.
‘அகம்’ என்பது நம் உடலைத் தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவைக் கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
“அகத்தில் போட்டாலும் அளந்து போடு…!”  இவ்வாறு பழமொழியின் உண்மை வடிவமாக வேறொன்றைக் கூறுகிறது.
“ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.”  இப்படியும் ஒரு விளக்கம் உள்ளது.
வலைத்தமிழ் பக்கத்திலும் தமிழ்இலக்கியம் வலைப்பூவிலும் இடம் பெற்ற மற்றொரு கருத்து; மேற்கூறியவாறான இரண்டையும் மறுத்துப் பின்வருமாறு விளக்குகின்றன.
“இப்பழமொழியில் வரும் ‘ஆத்துல’ என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் ‘அகத்தில்’ என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப்பழமொழியில் வரும் பொருள் ‘மனம் அல்லது நினைவு’ என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். ‘அளந்து’ என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது ‘அறிந்து’ என்று வரவேண்டும். இவையே இப்பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும். தொடர்ந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டுப் பின்வருமாறு முடிகிறது.
“இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல
சரியான பழமொழி: அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்.”
தமிழ்ச்சுரபி வலைப்பூ,  மருவிய பழமொழிகள் < http://lifeoftamil.com/transformed-proverbs-1/   முதலான சிலவற்றில் இதன் இறுதி விளக்கம் மட்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.
பொதுவாகத் தொன்மைக் கதைப்பொழிவு ஆற்றுவோர் நல்ல தமிழ்ப் பழமொழிகளையும் கருத்துகளையும் அறிவார்ந்து சொல்வதாகக் கருதித் தப்பும் தவறுமாக விளக்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். புரியாத கருத்துகளாயின் மேலும் சிறப்பாகத் தவறாக விளக்குவார்கள். இப்பொழுது இணையத்தளம் கையில் சிக்கிவிட்டதால் தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆளாளுக்குத் தம் விருப்பம்போல் எழுதுவோர் பெருகி விட்டனர். எனவேதான், இப்பழமொழி குறித்தும் வெவ்வேறான தவறான விளக்கங்கள்.
இவை தவறு என்றால் எது சரி என்கிறீர்களா? இப்பழமொழி அமையக்காரணமாக இருந்த திருக்குறள்தான்!
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
(திருவள்ளுவர், திருக்குறள், 477)
இக்குறள்தான் மக்கள் வழக்கில் தவறாக இடம் பெற்றுப் பழமொழியாக மாறிவிட்டது.
 மணக்குடவர், “பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால்.” என்கிறார். பரிமேலழகர். “ஆற்றின் அளவு அறிந்து ஈக – ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி – அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்” என விளக்குகிறார்.
காலிங்கர், “பொருள் வரலாற்றினது சிறுமை பெருமை அளவு அறிந்து அதற்குத் தக்காங்கு அரசர் யாவர்க்கும் ஈந்து ஒழுக;” என்கிறார். பரிதி. “ஏற்பவர் தமக்கு உதவுவாரா மாட்டாரா என் அறிந்து கொடுக்க” என உரைத்தார். பரிப்பெருமாளும் காலிங்கரும் ‘வருவாய் அளவறிந்து ஈந்து ஒழுகுக’ என்று பொருள் கூறினர். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், “தனக்குப் பொருள் வரும் வழியினை அறிந்து அதற்கு ஏற்பக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம்  கொடுத்தலே பொருளைக் காத்துக் கொண்டு கொடுத்து வாழும் நெறியாகும்” என்கிறார்.
தமிழ் மக்கள் கொடை மடம் மிக்கவர்கள். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் போல், மயிலுக்குப் போர்வை அணிவித்த பேகன் மன்னன்போல் கொடுக்க எண்ணும் பொழுது அறச்சிந்தனையில் மட்டும் கருத்து செலுத்திப், பொருள் இருப்பு குறித்துக் கவலைப்படுவதில்லை. யாருக்கு, எதற்குக் கொடுக்கிறோம் என்றும் பொருட்படுத்துவதில்லை. ஆள்வோர் இவ்வாறு இருந்தால் அஃது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் ஆளும் நாட்டிற்கும் தீதாகும். எனவேதான் இக்குறளைத் திருவள்ளுவர் எழுதினார்.
திருவள்ளுவர் பொருள் வரும் வழி அறிந்து அதற்கேற்பக் கொடுப்பதை வரையறுத்துக் கொள்ளுமாறு தெரிவிப்பதாக அனைவரும் தெரிவித்துள்ளனர்.  யாருக்கு, எதற்குக்கொடுக்க வேண்டும் என ஆய்ந்தறிந்து அதற்கேற்பவும் கொடுக்குமாறு வலியுறுத்துகிறார். பொருத்தமில்லாதவர்க்கு, உண்மைத் தேவையில்லாதவர்க்கு, வேண்டப்படும் அளவிற்கு மிகையாக, வாரி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது வழங்கப்படுபவர்க்கும் நன்றன்று. ஆதலின் கொடுக்க வேண்டிய அளவை உணர்ந்து வழங்க வேண்டும் என்கிறார்.
சரி. இதற்கும் பழமொழிக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? பொறுங்கள். பார்ப்போம்.
ஆறு என்பதற்கு, வழி, வழிவகை, அறம், பயன், இயல்பு எனப் பல பொருள்கள் உள்ளன. எல்லாப் பொருள்களும் இக்குறளில் பொருந்துகின்றன. கொடுக்கும் வழியை, வழிவகையை, அறத்தின் தன்மையை, பயனை, இயல்பை அறிந்து தக்கவர்க்குத் தக்க அளவில் வழங்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
எனவே, பொருள் வரும் வழியையும் இருக்கும் அளவையும் உணர்ந்து கொடுக்க வேண்டிய வழிவகையையும் உணர்ந்து கொடுக்க வேண்டும் என்னும் நிதி மேலாண்மையை விளக்கும் குறளில் ‘ஆறு’ என்பதை நீரோடும் ஆறாகப் பிற்காலத்தில் தவறாகப் புரிந்து கொண்டனர். எனவே, ஆற்றில் அளவோடு போடவேண்டும் எனப் பொருத்தமில்லாக் கருத்தை உருவாக்கிக் கொண்டனர். எனவே, ‘போட்டாலும்’ என்பதைச் சேர்த்து ஆற்றில் போட்டாலும் என்று தொடங்கி ‘அளவறிந்து ஈக’ என்பதன் பொருளாக ‘அளந்து கொடு’ என்று சொல்லாமல், முன்சொல்லிற்கு ஏற்ப ‘அளந்து போடு’ என்று சொல்லி விட்டனர்.
“ஆற்றின் அளவறிந்து கொடு!” என்னும் பொருளே திரிந்து வழங்குவதை உணர்வோம்! திருக்குறளைப் போற்றுவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
செருமனியில் திருவள்ளுவர் விழா & ஐரோப்பிய தமிழர்கள் நாள்
சிறப்பு மலர், திசம்பர் 04, 2019. பக்கங்கள் 62-64