(தோழர் தியாகு எழுதுகிறார் 68 தொடர்ச்சி)
தமிழீழத் தோழமையில்
ஒற்றுமை குலைவதன் காரணம்
இனிய அன்பர்களே!
தமிழீழத் தோழமையைப் பொறுத்த வரை, திராவிடத்தைத் தமிழ்த் தேசியத்தால் வெல்வதோ தமிழ்த் தேசியத்தைத் திராவிடத்தால் வெல்வதோ நம் நோக்கமில்லை. தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமைக்குக் கேடில்லாமல் இந்த இரு கருத்தியல் நிலைப்பாடுகளுக்குமிடையே விவாதித்துக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அவரவர் நிலைப்பாடுகளில் நிற்க வேண்டிய நேரத்தில் நின்றபடி தேவையான போது தமிழீழ மக்களின் நலனை மையப்படுத்தி ஒருங்கிணைந்து போராட முடியும். இது கடந்த காலத்தில் முடிந்தது, நிகழ்காலத்தில் முடிகிறது, எதிர்காலத்திலும் முடியும்.
முள்ளிவாய்க்காலுக்கு முன் இந்த ஒருங்கிணைப்பு எவ்வாறு செயல்பட்டது என்பதை நேற்று எடுத்துக் காட்டினேன். இன்றும் இந்த ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்கும் சான்றாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் மூன்று ஒருங்கிணைப்பாளர்கள் யார் தெரியுமா?
1. கொளத்தூர் மணி; 2. பெ. மணியரசன்; 3. கோவை இராமகிருட்டிணன்.
இவர்களில் கொளத்தூர் மணி தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். எமதியக்கம் உள்ளிட்ட பலதிறப்பட்ட அமைப்புகள் இந்த ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுத் தமிழீழத் தோழமையில் கொள்கைவழி ஒற்றுமை காத்து வருகிறோம். இப்போதுள்ள சூழலில் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள் என்ன? இந்திய அரசிடம் கோர வேண்டியவை என்ன? தமிழக அரசிடம் கோர வேண்டியவை என்ன? ஐநா உள்ளிட்ட பன்னாட்டரங்கில் கோர வேண்டியவை என்ன? இலங்கை நெருக்கடி பற்றிய பார்வை என்ன? தாயகத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? உலகத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?
இந்த வினாக்களுக்கெல்லாம் விடை காண்பதில் எங்களுக்குள் எந்தப் பிணக்கும் இல்லை. ஒற்றுமை என்பது நேற்றைய கதை மட்டுமல்ல, இன்றைய நடப்பும் இதுதான். இந்த ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்கும் திராவிடம் – எதிர் – தமிழ்த் தேசியம் என்ற முரண்பாடு எவ்விதத்தும் தடை இல்லை.
நாங்கள் ஈழம் மட்டுமே எல்லாம் என்று அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் அல்ல. தமிழ்நாட்டு அரசியலிலும் இந்திய அரசியலிலும் எங்களுக்கென்று தனித் தனி நிலைப்பாடுகள் உண்டு. அவை ஒன்றுபட்ட நிலைப்பாடுகளாகவோ ஒத்த நிலைப்பாடுகளாகவோ கூட இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
அன்பர்கள் சிபியும் சத்தியசீலனும் இரு கருத்தியல் போக்குகளின் பேராளர்களாக இருந்து முன்வைக்கும் நிலைப்பாடுகள் குறித்து உரையாடும் முன்பு இந்தக் களத்தில் என்ன நடக்கிறது என்பது தாழி அன்பர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் இன்று வரைக்குமான தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமை வரலாற்றை எடுத்துச் சொன்னேன்.
வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழியை அறிந்து கொள்ளாமல் போகும் வழியைத் தீர்மானிக்க முடியாது. நமக்கான போகும் வழி என்ன? ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வழிகாட்டுகிறது. சென்ற 16.04.2022 சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைக்கிறேன். இந்த மாநாட்டில் நான் நோக்கவுரை ஆற்றினேன். என் உரையை முழுமையாக வரவேற்றுப் பேசியவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன். இந்தத் தீர்மானங்களைப் படியுங்கள். இவற்றின் உட்கருத்தில் திராவிட – தமிழ்த் தேசிய முரண்பாடு ஏதும் தெரிகிறதா? பெரியார் ஆதரவும் எதிர்ப்பும் தெரிகிறதா?
ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு
தீர்மானங்கள்
தமிழின அழிப்பிற்கு நீதி காண்பதற்கும் தமிழீழத் தாயகத்தில் பாதுகாப்பான வாழ்க்கை அமைவதற்கும் பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தமிழர் வேணவாவை வெளிப்படுத்தும் வகையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்படுகின்றன.
1. ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்புக் குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் செய்த கோத்தபய இராசபக்குசே, மகிந்த இராபக்குசே உள்ளிட்ட சிங்கள ஆட்சித் தலைமைகள், சரத்து பொன்சேகா, சவேந்திர சில்வா, கமல் குணரத்தினா, சகத்து செயசூரியா உள்ளிட்டபடைத் தலைமைகளை, 2002ஆம் ஆண்டு சூலை முதலாம் நாளுக்கு முன்னர்ப் புரிந்த குற்றங்களையும் உள்ளடக்கக் கூடியதான இலங்கை தொடர்பான அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று சிறப்பாக அமைக்கப்பட்டோ, அன்றேல் குறைந்தது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, கூண்டிலேற்ற வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
2. 2014ஆம் ஆண்டு வட மாகாண சபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படியும், 2021ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்த் தலைவர்களும் குடிமைச் சமூகச் சார்பாளர்களும் சேர்ந்து ஐ.நா. உறுப்பரசுகளுக்கு அனுப்பிய மடலின் படியும் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தின் படியும் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட மேற்சொன்ன பன்னாட்டுச் சட்டமீறல்கள் தொடர்பில் எவ்வித உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கும் சிறிலங்கா அரசு வழிசெய்யாத நிலையிலும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இனியும் காலந்தாழ்த்தாமல் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
3. இலங்கை அரசு ஐ. நா. பேரவையில் உறுப்பு வகிக்கத் தொடங்கிய 1955 ஆம் ஆண்டு திசம்பர் 14ஆம் நாளுக்கு முன்னதாகவே, இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான அனைத்துலக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால், இந்த ஒப்பந்தத்தின் சட்ட ஆளுகைக்கு அந்த நாடு 1951 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் தொடக்கம் உட்பட்டிருக்கிறது. அந்த நாளில் இருந்து இலங்கையின் ஆட்சி மற்றும் படைத் தலைமைகள் மட்டுமல்ல அந்த நாட்டிற்கு பொறுப்பான அரசும், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிராகப் புரிந்த இன அழிப்புக் குற்றத்தை பன்னாட்டு நீதிப் புலனாய்வுக்கு தவறாது உட்படுத்திட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
4. ஐரோப்பிய வல்லரசிய ஆளுகைக்கு முன்னிருந்த இறைமையை மீட்டுக்கொள்ளும் உரிமையின் பாற்பட்டும், பெரும்பான்மைத் தமிழீழ மக்களின் மக்களாணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பாற்பட்டும், அளப்பரிய ஈகங்களுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக மெய்ந்நிலை அரசொன்றை நடத்தியவர்கள் என்ற வகையிலான இறைமையின் பாற்பட்டும், இனவழிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதி என்ற பன்னாட்டு நடைமுறையின்பாற்பட்டும் இறைமையை மீட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும்வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தீவின் இனச்சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
5. முள்ளிவாய்க்கால் படுகொலையோடு தமிழின அழிப்புக்கான தடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழீழத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை (Structural Genocide) தடுத்து நிறுத்துவதற்குப் பன்னாட்டுப் பாதுகாப்பு பொறியமைவு (International Protective Mechanism) ஒன்றை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
6. மாந்தவுரிமைகளுக்கான ஐநா. உயராணையர் மிசேல் பசலே 2021 சனவரியில் கொடுத்த பரிந்துரைகளான – போர்க் குற்றங்களுக்கான சான்றுகளைப் பாதுகாத்தல், சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்தவர்கள் மீது ஐ.நா. உறுப்பரசுகள் எல்லைகடந்த மேலுரிமைக் கோட்பாடுகளின்படி (Universal Jurisdiction) அந்தந்த நாட்டு நீதிமன்றங்களிலும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தல், பயணத் தடை விதித்தல், சொத்துகளை முடக்குதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
7. தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு-கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் பெரும்படை உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
8. போரின் முடிவில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டோர் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட 19,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலுக்கு வழிசெய்ய பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறியமைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
9. போர்க் கைதிகள் உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப் பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
10. தொல்லியல் பணிகள், மகாவலி வளர்ச்சித் திட்டம், வனத்துறை, வன விலங்குகள் துறை, சுற்றுலாத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதும் தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதற்கான சான்றுகளை அழிப்பதும் தமிழ்ச் சிற்றூர்களின் எல்லைகளை மாற்றியமைப்பதும் மக்களின இயைபை (demographic composition) மாற்றிக் கொண்டிருப்பதும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
11. தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதை ஏற்று வடக்குகிழக்கு மாகாணங்களை இணைத்து குடியியல் ஆட்சியை அங்கு நிறுவும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
12. இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழர்களின் மரபுவழி தாயகம் என்பதை இந்திய அரசு திட்டவட்டமாக அறிந்தேற்க வேண்டும். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளுக்கு முரணான தீர்வு எதையும் இந்திய அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
13. தமிழீழ மக்களின் அரசியல் வேணவாக்களைத் துச்சமாக மதித்தும் சிங்கள-பெளத்த பேரினவாதம் தமிழின அழிப்பு என்ற கட்டத்தை அடைந்துவிட்டதை பொருட்படுத்தாமலும் இந்திய அரசு 13 ஆம் சட்டத்திருத்தத்தை ஓர் அரசியல் தீர்வென்று தமிழீழ மக்கள் மீது திணிப்பதற்கு செய்துவரும் முயற்சிகளை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இம்மாநாடு உறுதியாக மறுதலிக்கிறது.
14. இந்திய அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் ஐ.நா.உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் முயற்சிகள் எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
15. தமிழ்நாடு அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், உலக நாடுகளிடமும் ஐ.நா உறுப்பரசுகளிடமும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
16. தமிழீழத் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தமிழ் உலகத்திலும் தமிழ் மக்களும் அவர்தம் அமைப்புகளும் தலைமைகளும் மேற்சொன்ன கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றுபட்டுநின்று உறுதியோடு போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
சிறப்புத் தீர்மானம்:
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள ஈழத் தமிழர்கள், தமிழ் முசுலிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்களர்கள் “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்தை இம்மாநாடு வாழ்த்துகிறது. அதேநேரத்தில் , இப்போராட்டம் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதாக முடிந்து போய்விடக் கூடாது. பொருளியல் நெருக்கடிக்கு வித்திட்ட சிங்கள-பெளத்தப் பேரினவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு முடிவுகட்டி, தேசிய இன சிக்கலுக்குக் குடியாட்சியத் தீர்வு காண்பதில்தான் இலங்கை தீவடங்கலாக உள்ள மக்களினங்களின் இருப்பும் நல்வாழ்வும் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து தரப்பாரும் அதை நோக்கி பாடுபட வேண்டும் என இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
இனிய அன்பர்களே!
இந்தத் தீர்மானங்கள் வெறும் சம்பிரதாயம் இல்லை. நீதிக்கான போராட்டமாக இன்று வடிவெடுத்துள்ள ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு மெய்யாகவே துணை நிற்கும் வழி. இதில் யாருக்கு மாறுபாடு இருந்தாலும் விவாதிக்கலாம்.
… (தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 42