சனி, 15 செப்டம்பர், 2018
வெள்ளி, 14 செப்டம்பர், 2018
எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி
அகரமுதல
எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை
திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !
எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல் கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம் நாளுக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். முதன்மையான தீர்ப்பு என்றதால் இராசீவு கொலைவழக்கில் சிக்கியவர்கள் வழக்கு என்று ஊகித்து அவ்வாறே ஊடகங்கள் வெளியிட்டன. நல்ல தீர்ப்பு வெளிவரும் என்று சொன்னதாகவும் செய்திகள் வந்தன; வந்த தொடர்கள் மாறுபாட்டுடன் இருந்தன. ஆனால், அவற்றின் மையக்கருத்து எழுவர் விடுதலை குறிதத தீர்ப்பு வரும்; அனைவரும் மகிழும் வண்ணம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதுதான்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுவர் விடுதலை குறித்துப் பரிவும் மனித நேயக் கண்ணோட்டமும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சினைப் பாராட்டியிருப்பார்; எழுவரும் விடுதலை ஆகப்போவதை மகிழ்ந்து வரவேற்றிருப்பார். அன்னை சோனியாவின் அடிமையாக உள்ளவர் எங்ஙனம் வரவேற்க இயலும்? எனவே எதிர்ப்பு தெரிவித்தார்.
இவ்விடுதலையால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாறி அமையும் என்ற அச்சம் வந்து விட்டது. எழுவர் மீது அன்பு இருந்ததென்றால் என்ன சொல்லி இருப்பார்? “தலைமை நீதிபதி அவர்களே! நீங்கள் 25.04.2014 அன்றுதான் பணிநிறைவு அடைகிறீர்கள். அதற்கு முதல் நாள் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, 25.04.2014 அன்று தீர்ப்பு வழங்குங்கள்” என்று சொல்லி யிருப்பார். மாறாகக் கடும் கண்டனமாக அவரது எதிர்ப்புக் குரல் வந்தது. இந்த அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகியது. எனவே முடிவை மாற்றிச் சில ஐயங்களை எழுப்பி அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்பி விட்டனர். அன்றைக்கே வந்திருக்க வேண்டிய விடுதலைச் செய்தி தள்ளிப்போனதற்குக் காரணமான கட்சி வஞ்சகத்தை மறைத்து ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல நடிக்கலாமா?
அவர் அத்துடன் நிற்கவில்லை. தமிழரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் தவறாக எண்ணத் தோன்றும் என்பதால் தமிழரல்லாத நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு பாகுபாடு காட்டுவது தவறு. எல்லா மாநில வழக்குகளிலும் அவ்வாறுதான் பார்க்கின்றார்களா? உண்மையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் மட்டும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் வழக்கல்ல. அவருடன் நீதிபதி இரஞ்சன் கோகோயி(Ranjan Gogoi), நீதிபதி ஏ.விரமணா ஆகியோர் இணைந்த அமர்வே விசாரைணக்கானது. இருந்தும் நடுநிலையில் நின்று சொல்பவர்போல் தவறான காரணம் கற்பித்துள்ளார்.
இவ்வாறெல்லாம் விடுதலைக்கு வாய்ப்புள்ள போது எதிராகத் திருவாய் மலர்ந்த கட்சி, இப்பொழுது பரிவுள்ளம் உள்ளதுபோல் நாடகம் ஆடுவது தவறுதானே! எனவே, கருத்து கூற அருகதை இல்லை என்பதை உணர்ந்து திமுக அமைதி காக்க வேண்டும்.
பெருந்தன்மைப் போர்வை போர்த்திக் கொண்டு வஞ்சக உள்ளத்துடன் உள்ள காங்கிரசும் எதுவும் சொல்ல அருகதை யற்ற கட்சியே!
11.10.1984 இல் தலைமையமைச்சர் இந்திரா காந்தி சீக்கியச் சமயத்தைச் சேர்ந்த இரு மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் 4 நாள் சீக்கியர்களை அடையாளம் கண்டறிந்து காங்கிரசார் கொன்றனர். தில்லியில் மட்டுமே 3000 சீக்கியர்களைக் கொன்றனர்.
ஆனால், இதற்கு இராகுல் காந்தி ஒரு பெரிய மரம் விழும்பொழுது கீழ்நிலம் அதிரத்தான் செய்யும் (“When a giant tree falls, the earth below shakes.”) என்றார். இதனை ஒட்டிக் காங்கிரசு அமைச்சர் ஒருவர் “ஆலமரம் விழும் பொழுது அதனடியில் உள்ள புழு பூச்சி உயிரினங்களும் அழியத்தான் செய்யும்” என்றார். ஆளாளுக்கு ஆலமரம் விழுந்தால் அடியில் உள்ள சிறு செடிகளும் அழிவது இயற்கை என்பதுபோல் பேசினர்.
இவர்கள் தீவிரவாதம் குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?
அது மட்டுமல்ல. தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, பாலியல் வல்லுறவுகள், கலவரம், தீவைப்பு குறித்து 740 வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்றில்கூட யாருக்கும் தண்டனை கிடைக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் முதிர்ச்சியுடன் பேசிய இராகுல்கந்தி, சிறுபையனைப்போல் சீக்கியருக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துப்படவில்லை என்கிறார். கொலை முதலான வன்கொடுமைகளுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காத காங்கிரசு இன்று எழுவரை விடுதலை செய்தால் தீவிரவாதம் என்னாகும் என்கிறது.
காங்கிரசுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இரந்தீப் சிங்கு சுர்சீவாலாசெய்தியாளர்கள் சந்திப்பில் “ இந்த அரசு செய்வது என்ன?. அரசின் வேலை தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா?. இது தான் இந்த அரசின் கொள்கையா?. தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டவர்களைத் தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தன் இனம் காங்கிரசின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதும் கற்பழிக்கப்பட்டதும் உடைமைகள் அழிக்கப்பட்டதும் நினைவில் இருந்தால் இவ்வாறு பேசியிருப்பாரா?
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழ்நலக் கட்சிகள் பாசகவை ஆதரித்தன. பாசக தலைவர்களும் தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல் பேசினர். காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே பாசகவின் கொள்கையாக உள்ளது. அவ்வாறிருக்க காங்கிரசு போல் தமிழர்களுக்கு எதிரான முடிவுகளைப் பாசக எடுக்கலாமா?
இந்த நேரத்தில் அதிமுகவைப் பாராட்டவேண்டும். பாசகவின் பொம்மை அரசு, அடிமை அரசு என்றெல்லாம் அதிமுக ஆட்சியைக் கேலி செய்கின்றனர். மேனாள் முதல்வர் செயலலிதா, எழுவர் விடுதலையில் உறுதியான நடவடிக்கை எடுத்ததுபோல் எடப்பாடி பழனிச்சாமி அரசும் உறுதியாக இருந்து எழுவர் விடுதலையைப் பரிந்துரைத்துள்ளது.
“பாசகவும், பாசகவின் கூட்டாளியான அதிமுகவும், பாசகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும், இந்தக் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கில் செயல்பட்டுவருவது உண்மைதானே?” எனக் காங்கிரசு செய்தியாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எதிரான நிலைப்பாட்டிற்கு அக் கட்சி தூண்டுகிறது. ஆனால் தமிழின் பெருமையைப் பேசும் பாசக, தமிழில் வாழ்த்து, சுட்டுரை போன்றவற்றைத் தெரிவிக்கும் பாசக, எழுவர் விடுதலைக்குத் தடையில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் ஆளுநர் உடனடியாக விடுதலைக்கான பரிந்துரையை ஏற்க வேண்டும். கருத்து கூற அருகதையற்றவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டும்.
– குவியாடி
வியாழன், 13 செப்டம்பர், 2018
விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்
அகரமுதல
அன்புடன்
புரட்டாசி 30, சனி 15.09.2018 மாலை 6.00
விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்
சிறப்புரை : சத்தியானந்தன்
[புனைகதையாளர், கவிஞர், புதின எழுத்தாளர், கட்டுரையாளர்]
திரைப்படம், தொலைக்காட்சி ஊடகம் தரும்
துய்ப்பறிவும் வாசிப்பின் மேன்மையும்
சிரீராம் குழும அலுவலகம்
மூகாம்பிகை வளாகம், ஆறாவது தளம்
மயிலாப்பூர் சென்னை 600 004
(சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)
(சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்! -மறைமலை இலக்குவனார்
அகரமுதல
பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே
பிள்ளைகளுக்குத் துணிவை ஏற்படுத்தும்!
நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா?
ஆண், பெண் வேறுபாடுபற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?
வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா? அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.
பல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே…! ஏன்?
வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
“பாதகம் செய்வாரைக் கண்டால்
பயங் கொள்ளலாகாதுபாப்பா
மோதி மித்துவிடு பாப்பா-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”
எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.
தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.
பிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.
முதலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.
“நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா?” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.
“ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்”
என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.
“இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.
மராட்டியச் சிங்கம் சிவாசி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் சீசாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாசியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.
இவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டா. கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின்அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
-மறைமலை இலக்குவனார்
தினத்தந்தி, சூலை 24, 2018
தமிழீழக் கொள்கை எங்கும் தடை செய்யப்படவில்லை : வி.உருத்திரகுமாரன் !
அகரமுதல
விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கை
எங்கும் தடை செய்யப்படவில்லை :
தலைமையர் வி.உருத்திரகுமாரன் !
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் (United Nations) ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை.
ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பெருவிருப்பாக அமைகின்ற தமிழீழத்தைக் கொள்கையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், அக்கொள்கைக்காக எங்கும் தடை செய்யப்படவில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் அனைத்துலகப் பரப்பில் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது எனச் சுட்டிக்காட்டியுள்ள தலைமையர் வி.உருத்திரகுமாரன் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குறிக்கோளைக் காரணம் காட்டி அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் ‘பயங்கரவாத’ இயக்கமாக என்றுமே பறையறிவிக்கப்படவில்லை. அமெரிக்க உச்சநீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கைகளைப் பரப்புரை செய்யவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினை ஏற்றவும் தனியருக்கு உரிமை உள்ளதெனத் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்கக் குடிமகன் எவராயினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ‘பொருண்மிய’ உதவி செய்வது மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை 693 தனியாள்களையும் 400 இயக்கங்களையும் தடை செய்துள்ள பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகளோ அன்றி ஒரு தமிழரோ உள்ளடங்கவில்லை.
இதுபோலவே சுவிசு கூட்டரசுக் குற்றத் தீர்ப்பாயம் கடந்த யூனில் வழங்கிய தீர்ப்பும் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்ற அமைப்பு இல்லை’ என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் தலைமையர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம்:
என்ன குற்றம் செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இலங்கை அரசு மார்தட்டித் திரிவதையும், போர் முடிவுற்றுக் கிட்டத்தட்டப் பத்தாண்டு ஆவதையும், தமிழீழ விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பே தங்கள் ஆயுதங்களை மவுனித்து விட்டோமென்று அறிவித்து விட்டதையும், இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான கட்டமைப்பியல் இனவழிப்பு தொடர்வதையும் கருத்தில் கொள்வோமானால், மலேசியாவில் பினாங்கு துணை முதலமைச்சராக இருக்கும் பேராசிரியர் இராமசாமி குறித்தும் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளோடு அவரது உறவு குறித்தும் எழுந்துள்ள வாதம் நகைப்புக்கிடமானது மட்டுமன்று, அறநோக்கில் சீற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.
பல பத்தாண்டுகளாகவே, தமிழர்களும், பல்வகைத் தமிழ் அமைப்புகளும் தமிழர்களை ஒரு மக்களினமாகவும் தேசமாகவும் அடையாளப்படுத்திக் கொள்ள எடுத்த ஒவ்வொரு முயற்சியும் ‘பயங்கரவாதம்’ என்றே முத்திரையிடப் பெற்றுள்ளது. ஒரு மக்களினத்தையே மொத்தமாகக் கொடியவர்களாய்க் காட்டும் இந்த அடாவடிப் போக்கு இன்று வரை தொடர்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு போர் முடிந்ததோடு, இந்தப் பழிசுமத்தும் பரப்புரைகளின் உண்மைத் தன்மை இன்னுங்கூட வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
2009 மே 18க்குப் பின் இலங்கைத்தீவில் வன்முறைச் செயல் புரிந்து வருவது அந்நாட்டு அரசு மட்டுமே. இருப்பினும் தமிழர்கள் மீதுதான் இந்த வன்முறை முத்திரை தொடர்ந்து குத்தப்பட்டு அவர்கள் இவ்வன்முறைப் பழிக்கு இரையாகி வருகிறார்கள். புகழ்பெற்ற மலேசியத் தமிழ் அறிஞரும் அரசியல் தலைவருமான பேராசிரியர் பி. இராமசாமி இவ்வகையில் மிக அண்மையில் இப்பழிக்கு ஆளாகியுள்ளவராகிறார். இலங்கையில் 2002-2006 போர்நிறுத்தக் காலத்தில் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சியில் பங்காற்றியவர் என்பதற்காக அவர் மீது இவ்வாறு பழி சுமத்தப்பட்டுள்ளது. போர் முடிந்து விட்ட நிலையில் இந்தப் பழிதூற்றலின் அரசியல் நோக்கம் இப்போது தெட்டத் தெளிவாகி விட்டது.
இலங்கைத்தீவில் 1983-2009 காலத்தில் நிகழ்ந்த தேசவிடுதலைப் போரின் போது, போர்த் தரப்புகளில் ஒன்றாகிய இலங்கை அரசு தனது அரசென்னும் தகுதியின் மூலம் மற்றைய நாடுகளின் மேல்தட்டுப் பிரிவையும் பன்னாட்டு ஊடகங்களையும் கைவசப் படுத்தி, அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ அறிவிப்பைத் தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்தித் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நெறிபிறழ்ந்த பயரங்கவாதச் செயலாகப் படம்பிடித்துக் காட்ட முயன்றது.
இலங்கையில் ஐநா நடவடிக்கைபற்றிய ஐநா பொதுச் செயலரின் உள்ளக ஆய்வறிக்கை (பெற்றி அறிக்கை) தமிழ்த் தேசியத்தின் முன்னணி இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் கும்பலாக பன்னாட்டு அரங்கினர் கருதச் செய்வதற்கு அரசு எடுத்த முயற்சிகள்பற்றிக் குறிப்பிட்டது. தமிழர்களின் இராணுவப் படையினரைப் பயங்கரவாதிகளாக சித்திரிப்பதில் அரசு வெற்றி பெற்றுப் பன்னாட்டு ஒழுங்கமைப்பு முடங்கிப் போனதன் விளைவாகத்தான் போரின் கடைசிச் சில மாதங்களில் 70,000 பேர், பெரும்பாலும் தமிழ்ப் பொதுமக்கள், உயிரிழந்ததாக நம்பத்தக்க மதிப்பீடுகள் கூறுவதை பெற்றி அறிக்கை எடுத்துக் காட்டிற்று. அரசு தந்துள்ள விவரங்களின் படி அந்த மாதங்களில் சிறிலங்காப் படை நடவடிக்கையைத் தொடர்ந்து 1,47,000 பேரினது உயிர்கள் பற்றிக் கணக்கெதுவும் தரப்படவில்லை என மன்னார் கத்தோலிக்கப் பேராயர் மறைதிரு இராயப்பு சோசப்பு குறிப்பிட்டிருந்தார்.
இன்றுங்கூட நெறிசார் அரசியல் உரையாடலை ஒடுக்கவும், தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் பொது ஊழியர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இதழாளர்கள் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களின்; மீது மாசு கற்பிக்கவும் இப்பயங்கரவாத முத்திரை பயன்படுத்தப்படுகிறது. இவ்வகையாக புதிய வடிவங்கள் கொண்ட இரண்டகப்பொய்ச்சாட்டு(மெக்கார்த்திசம்-McCarthyism)நடத்தைகள் உடனேயே முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டியவை.
ஈழத் தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தம் அரசியல் வேணவாக்களின் உருவகக் குறியீடாகப் பார்க்கிறார்கள். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளின் தலைநகரங்களில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது தமிழீழ மக்கள் தொடர்ந்து விடுதலைப் புலிகளை மதிப்பதற்கும் சார்ந்திருப்பதற்கும் அவர்கள் மீது பற்றுறுதி வைத்திருப்பதற்கும் தெளிவான சான்று. ஈழத் தமிழர்தம் இதயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய நினைவை மழுங்கடிக்கச் செய்யும் முயற்சியில் இலங்கை அரசு படுதோல்வி அடைந்து விட்டதற்கும் இதுவே சான்று.
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள தமிழர்கள் அநீதி எங்கிருந்து வரினும் அதை எதிர்ப்பதற்கான மானவுணர்ச்சியையும் அறத் துணிவையும் விடுதலைப் புலிகள் தந்த கொடையென்றே மதிக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்தியல், அதாவது சுயநிர்ணய உரிமையைக் கொண்டு சுதந்திர அரசமைத்தல் என்பது ஐநா அரசியல் குடியியல் உரிமைகள் உடன்படிக்கையிலும் சாசனத்திலும், பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கையிலும் சாசனத்திலும், பன்னாட்டு; மரபுவழிச் சட்டமாக மதிக்கப்படும் ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவை 2625 தீர்மானத்திலும் வலுவாய் வேர் கொண்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் குறிக்கோளைக் காரணம் காட்டி அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகள் ‘பயங்கரவாத’ இயக்கமாக என்றுமே அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க உச்சநீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கைகளைப் பரப்புரை செய்யவும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியினை ஏற்றவும் தனியருக்கு உரிமை உள்ளதெனத் தெட்டத்தெளிவாகக் கூறியுள்ளது. அமெரிக்கக் குடிமகன் எவராயினும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ‘பொருண்மிய’ உதவி செய்வது மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமையும் ஒன்று கூடும் உரிமையும் அமெரிக்காவில் மிகக் கவனமாகவே பேணப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஐக்கிய நாடுகளினால் ஒருபோதும் பயங்கரவாத இயக்கமாக குறிப்பிடப்படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபை 693 தனியாள்கைளயும் 400 இயக்கங்களையும் தடை செய்துள்ள பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகளோ ஒரு தமிழரோ உள்ளடங்கவில்லை.
சுவிசு கூட்டரசுக் குற்றத் தீர்ப்பாயம் பரபரப்பானதும் முதன்மையானதுமாகிய ஒரு வழக்கில் நீண்ட விசாரணையின் முடிவில் 2018 சூன் 14ஆம் நாள் வழங்கிய தீர்ப்பை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். ‘தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு குற்ற அமைப்பு இல்லை’ என்று தீர்ப்பாயம் உறுதி செய்தது. 2002-2006 போர்நிறுத்தக் காலத்தில் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு நெறிசார் இயக்கமாகவே கருதிச் செயல்பட்டது. அயலுலகின் ஏனைய உறுப்பு நாடுகளும், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, சப்பான் ஆகிய நாடுகளும் அப்படித்தான் செய்தன.
மனித உரிமைகளைப் போற்றிக் காக்கும் உலகை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பாடாற்ற வேண்டிய நேரம் இதுவே.
குற்றங்கள் செய்தபோது கேள்வி முறையில்லாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! ஆட்கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்! அறிவு வெல்க! அறத்தின் கட்டளைகள் வெல்க! சட்டத்தின் ஆட்சி வெல்க! இவ்வாறு தலைமையர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்பிற்கு: pmo@tgte.org
நாதம் ஊடகச்சேவை
செவ்வாய், 11 செப்டம்பர், 2018
தமிழமல்லனின் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி
அகரமுதல
இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-9, புதுச்சேரி
புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தைஇயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
அதன் ஒன்பதாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் தசரதன் சூழ்ச்சிப் படலம், கான்புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.
புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். பொ.கு.உறுப்பினர் விலாசினி, விடுதலைவாசகர் வட்டத் தலைவர் சடகோபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இறுதியில் பகுத்தறிவாளர் கழகச்செய்தியாளர் சிவராசன் நன்றிகூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)