புதன், 15 ஜூலை, 2009

வள்ளுவர், சர்வக்ஞர் சிலை திறப்பு
தமிழகம் - கர்நாடகம் இடையே நல்லுறவை ஏற்படுத்தும்:
கருணாநிதி



சென்னை, ஜூலை 14: திருவள்ளுவர், கர்நாடகக் கவிஞர் சர்வக்ஞர் ஆகியோரின் சிலை திறப்பு விழாக்கள், தமிழகம்- கர்நாடகம் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் செவ்வாய்க்கிழமை அவர் சமர்ப்பித்த அறிக்கை: பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பாக திருவள்ளுவர் சிலையைத் திறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 18 ஆண்டுகளாக தள்ளிப் போடப்பட்டன. அந்தப் பிரச்னைக்கு நல்ல முடிவு காணுகிற வகையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும், எனக்கும் (கருணாநிதி) இடையே கடிதப் போக்குவரத்துகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, அவர் சென்னைக்கு அண்மையில் வந்த போது, இருவரும் பேசியதன் அடிப்படையில் ஆகஸ்ட் 9-ம் தேதி பெங்களுருக்கு நான் செல்கிறேன். அங்கு, கர்நாடக முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது. இதேபோன்று, கர்நாடகக் கவிஞர் சர்வக்ஞரின் சிலை சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி திறக்கப்படுகிறது. அந்த விழாவில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், நானும் கலந்து கொள்கிறோம். நல்லுறவை ஏற்படுத்த... இரு மாநிலங்களைச் சேர்ந்த 2 பெரும் சான்றோர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த விழாக்கள் நடைபெறுகின்றன. இரு மாநிலங்களின் ஒப்புதலோடு விழாக்கள் நடைபெறுவது இரு மாநில மக்களிடையேயும், அரசுகளிடையேயும் நல்லுறவை ஏற்படுத்த வழி வகுக்கும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

இப்பொழுதே கன்னட அமைப்பினர் சிலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மறவன் குறிப்பி்ட்டது போன்று (சிலையைத் திறப்பது போல் திறந்து விட்டு) அடுத்த தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது திருவள்ளுவர் சிலையாகத்தான் இருக்கும். முதலில் கருநாடக மாநிலத்தில் எல்லா வகுப்பு நிலைகளிலும் திருக்குறள் பாடல்களையும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிய கருத்துகளையும் பாடமாக வைக்க வேண்டும். கன்னடப் படைப்பாளிகளுக்குத் திருக்குறள் தொடர்பான படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கி கன்னட மொழியில் திருவள்ளுவர் சிறப்புகளைக் கன்னடர்கள் அறியச் செய்ய வேண்டும். அதுவரை ஞாலப் பாவலர் எனப் பாராட்டப் பெறும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையைத் தமிழகம் கொணர்ந்து இந்திய ஒருமைப்பாட்டின் இன்றைய நிலையின் அடையாளமாகப் பேணப்பட்டு நாளடைவில் கன்னட வெறியர்கள் மனிதர்களாக மாறியபின்பு திருவள்ளுவர் சிலை திறக்கப்படுகையில் ஒருமைப்பாடு உண்மையில் மலர்ந்த குறிப்பை அதே இடத்தில வைக்க வேண்டும். 18 ஆண்டுகளாகத் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமை தமிழர்களுக்கு மட்டுமல்ல, கன்னடர்களுக்கும் பிற இந்தியர்களுக்கும் தலைகுனிவுதான் என்பதை உணர்த்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/15/2009 4:14:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக