வியாழன், 19 டிசம்பர், 2019

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

அகரமுதல



புற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முதுகுளத்தூர் இளைஞர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் அல்லா என்.எசு.ஏ. நிசாமுதீன் ஆவார்.
இவரது மகன் சுபைர் அகமது. இவர் துபாயில் பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார்.
தற்போது இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் புற்றுநோய் வருவதை முன்னரே அறிந்து கொண்டு தேவையான மருத்துவத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். பல்கலைக்கழகத்தில் கடந்த 11-அன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவரது குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
சுபைர் அகமது மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் மூலம் முதுகுளத்தூர் நகருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த ஆராய்ச்சியின் பயன் அனைவருக்கும் கிடைப்பதுடன் புற்றுநோயால் உயிரிழப்பு இல்லாமல் தடுக்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ள சுபைர் அகமதுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சுபைர் அகமது தந்தை தொடர்பு எண் : +971 55 414 2300


விருட்சம் இலக்கியச் சந்திப்பு 53 : எழுத்தாளர் தேவனின் பார்வையில் மதராசு

அகரமுதல

மார்கழி 05, 2050 சனி 21.12.2019 மாலை 6.00

சிரீராம் குழும அலுவலகம்
ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம்,                                சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே,   மயிலாப்பூர்      சென்னை 600 004

எழுத்தாளர் தேவனின் பார்வையில் மதராசு

சிறப்புரை:  நாடக ஆசிரியர், படைப்பாளர் இரகுநாதன்

அன்புடன் அழகிய சிங்கர், 9444113205

புதன், 18 டிசம்பர், 2019

“வெளி மாநிலத்தவர்களே! திரும்பிப் போங்கள்!” – மனிதச் சுவர் போராட்டம்!


வெளி மாநிலத்தவர்களே!

 திரும்பிப் போங்கள்!”

சென்னை மத்தியத் தொடரி நிலையம் முன்பு 

மனிதச் சுவர் போராட்டம்!

சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் 

பேரியக்கத் தலைவர்  பெ. மணியரசன் அறிவிப்பு!

தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும்  வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். இந்நிலையில், “தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள் திரும்பிப் போங்கள்!” என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை மார்கழி 04, 2050 / 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடரி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துகிறது.
இதையொட்டி, மார்கழி 02, 2050  (18.12.2019) காலை, சென்னை சேப்பாக்கம் செய்தியாளர்கள் சங்க அரங்கில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முதலான பேரியக்க                       நிருவாகிகள் பங்கேற்றனர். 
பெ. மணியரசன் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது :
“தமிழ்நாட்டில் தமிழர்களுக்குரிய தொழில், வணிகம், வேலை வாய்ப்பு அனைத்தையும் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். அன்னையின் மடியில் அனாதை ஆகிப்போன குழந்தையைப் போல் சொந்த மண்ணில் தமிழர்கள்      அனாதைகளாக – வேலை வாய்ப்பற்ற வறியவர்களாக அலைகிறார்கள்.
தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கையைத் தமிழ்நாட்டிலேயே இந்திய அரசு செயல்படுத்துகிறது. ஒரே ஓர் எடுத்துக்காட்டு : தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் 11.12.2019 அன்று மக்களவையில் கேட்ட வினாவுக்கு விடையளித்த தொடரித்துறை அமைச்சர் பியூசு கோயல் “அனைத்திந்தியாவிலும் கடந்த  ஐந்தாண்டுகளில் தொடர்வண்டித்துறையில் 1,31,000 பேர் வேலையில் சேர்க்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 1,433 பேர் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார். இதேபோல் தான், இங்குள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலையில் சேர்த்துள்ளார்கள்.
தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும்  வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். “தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள் திரும்பிப் போங்கள்”  என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடரி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. கீழ்க்காணும் கோரிக்கைகளை இப்போராட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.
  1. வெளி மாநிலத்தவர்கள் மிகையாக வந்து குடியேறுவதைத் தடுக்க நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் இருப்பதுபோல் தமிழ்நாட்டில் உள் அனுமதி (Inner Line Permit) வழங்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசு பெற வேண்டும். வரைமுறை இன்றித் தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவரை இச்சட்டப்படி தடுக்க வேண்டும்.

  1. இந்தியஅரசின் ஒப்பந்தப்படியும் உச்ச நீதிமன்ற ஆணைப்படியும்  அசாமில் நடந்த மண்ணின் மக்கள் கணக்கெடுப்பு போல் தமிழ்நாட்டில் 1956 நவம்பர் 1க்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்தோர் மற்றும் அவர்களின் மரபுரிமையர் மட்டுமே தமிழ்நாட்டுக் குடிமக்கள் என்று அறிவித்து, அவ்வாறில்லாத வெளி மாநிலத்தவர்களை அவரவர் தாயக மாநிலத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.

  1. தமிழ்நாட்டில்உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இவ்வேலைகளுக்கு அனைத்திந்தியத் தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும்.

  1. கருநாடகம், குசராத்மாநிலங்களில் இருப்பதுபோல் மாநில அரசு,  இந்திய அரசு, தனியார் துறை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும்”.
இவ்வாறு பெ. மணியரசன் கூறினார்.
  #தமிழகவேலைதமிழருக்கே     #TamilnaduJobsForTamils   
சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம் 
போராட்டத்தையொட்டி, மார்கழி 04, 2050 /திசம்பர் 20 அன்று காலை 8 மணி முதல் சமூக வலைத்தளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils ஆகிய Hashtag-களுடன் பரப்புரை இயக்கம் நடக்கிறது. போராட்டத்திற்கு வர இயலாத தமிழ் மக்கள், தங்கள் இல்லத்திலிருந்தபடியே அவரவர் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில், இக்குறிச்சொற்களுடன் தங்கள் கருத்தை எழுதிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம்! 
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


===================================== 

செவ்வாய், 17 டிசம்பர், 2019

அறிஞர் சாகிர் உசேன் கலைக்கல்லூரி – தைத்திருநாள் கலைப்போட்டிகள்

அகரமுதல

அறிஞர் சாகிர் உசேன் கலைக்கல்லூரி  தமிழ்த்துறை நடத்தும்

மிழக அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவுப் போட்டிகள்

கவிதை, கட்டுரை, கையெழுத்து,ஓவியம், வண்ணக்கோலம்

தங்க, வெள்ளி நாணயங்கள், பணப்பரிசு
படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள்  மார்கழி 23, 2050  – 08.01.2020
பதிவுக்கட்டணம் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி உரூபாய் 75/-தனித்தனிக் கட்டணம் செலுத்தி ஒருவர் எத்தனைப் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
படைப்புகள், பணம் அனுப்ப வேண்டிய முகவரி
முனைவர் ப.இபுராகிம்
தமிழ்த்துறைத் த்லைவர், சாகிர் உசேன் கல்லூரி
இளையான்குடி 630 702, சிவகங்கை  மாவட்டம்

தொடர்புக்கு 94424 54544, 99525 57435, 96884 24978

போட்டி விவரங்களை  அழைப்பிதழில் காண்க.



ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே!

தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே!

அந்தோ, வள்ளுவராக வாழ்ந்த தமிழர் பெருமகனார் சிகாகோ இராம்மோகன் அவர்கள் மறைந்தாரே!
சிகாகோவில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தமிழார்வலரும், புரவலருமான நண்பர் இராம்மோகன் அவர்கள் 12.12.2019 அன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தோம்.
வள்ளுவர் தம் குறளை உலகெங்கும் பரப்பிட வேண் டும் என்ற பெரு நோக்கோடு, அதற்கெனத் தனது வாழ்நாளில் பிற்பகுதியைப் பெரிதும் செலவிட்ட தொண்டறச் செம்மல் அவர்!
செட்டி நாடு கானாடுகாத்தான் பகுதியைச் சார்ந்த அவர் ஒரு தலைசிறந்தபண்பாளர்; மனிதநேயர். எவரிடத்திலும் பான்மையோடு பழகுபவர்.
திருக்குறளை மற்றவர்கள் வாசிப்பார்கள்; இராம்மோகன் அவர்களோ சுவாசிப்பார்கள் – தான் மட்டுமல்ல; உலகமே வள்ளுவரின் வாய்மை மொழிப் படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பி, தனது உழைப்பு, பொருள் அத்துணையையும் செலவழித்த செந்தமிழ்ச் செல்வர் அப்பெருந்தகை!
6.11.2019 சிகாகோவில் நடந்த பெரியார் – அண்ணா விழாவினை முடித்து, உடல் நலம் குன்றி, வீட்டில் இருந்த இராம்மோகன் (அழகப்பன்) அவர்களை மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்களுடன் சென்று, நானும், எனது வாழ்விணையர் மோகனா,  அருள், அசோக்கு ஆகியவர்களுடன் நலம் விசாரித்தபோது, ஏறத்தாழ 30 மணித் துளிகளுக்கு மேல் எங்களிடத்தில் உரையாடினார். பிறகு அவரிடமும், அவரது வாழ்விணையர் திருமதி மீனா இராம்மோகன் அவர்களிடமும் விடை பெற்றுத் திரும்பினோம்.
எப்படியும் மீண்டும் தொண்டறத்தைத் தொடர்வார் என்று நம்பித் திரும்பினோம்.
பெருத்த ஏமாற்றம்தான். எனினும் இயற்கையை எண்ணி ஆறுதல் பெறுவதைத் தவிர வேறு வழி என்ன?
தனக்குப் பிறகும் தனது செல்வத்தில் ஒரு பகுதி தமிழ்த் தொண்டுக்குப் பயன்பட வேண்டும் என்ற திட்டத்தைப் பெரிதும் எங்களிடம் விளக்கினார்.
நான் முதன் முதலில் சிகாகோ சென்றபோது (1986இல்) அவரது இல்லத்தில் தங்கியதை நினைவு கூர்ந்து நன்றி சொன்னபோது, மிகவும் வியந்தார்!
அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் திருமதி மீனா, அவரது பிள்ளைகள், குடும்பத்தவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்  ஆறுதல் கூறுகிறோம்.
அந்த தமிழ்த் தொண்டறச் செம்மலுக்கு நமது இயக்கச் சார்பில் வீர வணக்கம்.
– கி.வீரமணி, ஆசிரியர், விடுதலை
தமிழ் ஆர்வலர்  முனைவர் பொறியாளர்  அழகப்பா இராம்மோகன் 2000 ஆண்டு திருக்குறள் பொதுமறை என்ற பெயரில் திருக்குறள் நூலை 1,824 பக்கங்களுடன் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் நான்கு பக்கங்களில் படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கம் போன்றவற்றுடன் உயர்ந்த தரத்தில் விவிலியத் தாளில் அச்சிட்டுச் சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின் கருத்துகளை 108 மந்திரங்களாக்கி அதையும் பத்து நிமிடம் ஓடக்கூடிய குறுந்தகடு, ஒலியிழையாக வெளியிட்டிருக்கிறார். திருக்குறள் – தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு(2000), தொழில் முனைப்பாற்றலும் தமிழர்களும்(2005), நினைக்கப்பட வேண்டியவர்கள்(2002) முதலிய நூல்களின் ஆசிரியரும்கூட.
அழகப்பா இராம்மோகன் (பிறப்பு 1939) பூர்வீகம் தமிழகத்தில் உள்ள கானாடுகாத்தான்.ஆனால், பிறந்தது மலேசியாவின் பினாங்கு. எனினும் ஐக்கிய அமெரிக்காவின், இல்லினாய்சு மாநிலத்தில்  சிகாகோ நகரில் வாழ்ந்து தொண்டாற்றியவர். இவர்   தமிழைப் பரப்புவதற்காகவும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு உதவுவதற்காகவும் உலகத் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை அமைப்பை உருவாக்கி அதன் இயக்குநராகச் செயல்பட்டவர்.
 அத்தகைய பெருந்தகை அவர்கள் இன்று(கார்த்திகை 29, 2050/15.12.2019)  அமெரிக்காவில் காலமானார். அன்னாருக்கு எனது இறுதி அஞ்சலிகள்!
கரூரில் உள்ள வள்ளுவர் மேலாண்மைக் கல்லூரியில் அழகப்பா இராம்மோகன் அவர்களை நேரில் சந்தித்து அவரிடத்தில் ஆயிரம் உரூபாய் கொடுத்து அவர் வெளியிட்ட திருக்குறள் நூலை பெற்றுக் கொண்ட நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது. இனிய இயல்பு கொண்ட அன்னாரது புகழ் வாழ்க!
– தமிழ்நல வழக்குரைஞர் இராசேந்திரன், 9787933344

குவிகம் இல்லம் – அளவளாவல்

அகரமுதல

கார்த்திகை 29, 2050 / 15.12.2019

மாலை  5.00 

குவிகம் இல்லம்,
6, மூன்றாம் தளம்வெண்பூங்கா அடுக்ககம்,
24, தணிகாசலம் சாலைதியாகராயர்நகர்சென்னை    

அளவளாவல்

திரு மாதவ பூராக மூர்த்தி

திரு கெளரி சங்கர்